Monday, March 16, 2015

'திங்க' க்கிழமை : கல்கண்டு சாதம்.


சுகுமார் 22 வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குச் செய்து கொடுத்தார் இந்தக் கல்கண்டு சாதத்தை.  நடுவில் ஒருமுறை முயற்சிக்கப் போய் சரிவரவில்லை.  இந்த வாரம் செய்து விடுவது என்று முடிவெடுத்து அவரிடம் கேட்டுக் குறித்துக் கொண்டேன்.

செய்துடுவோம்!

"ஹலோ.... சுகுமார்?  சுகுமார் இருக்காரா?"

"ஹலோ....  ரொம்ப நடிக்காத...  நான்தான் பேசறேன்..  என்ன வேணும் சொல்லு..  காரியமில்லாம ஃபோன் பண்ண மாட்டியே..."

"ஹிஹிஹி...  நல்லா இருக்கீங்களா?  முன்னால ஒரு தரம் கல்கண்டு சாதம் செய்து தந்தீங்களே..."

"எப்ப? அடப்பாவி..  எத்தனை வருஷமாச்சு..  இப்ப என்ன அதுக்கு?"

"எத்தனை வருஷம் ஆனா என்ன?  உங்க கைப்பக்குவம் மறக்குமா? அதைச் செய்ய ஆசை.  எப்படிச் செய்யறதுன்னு சொல்லுங்களேன்.."

"ரொம்ப ஐஸ் வைக்காத... நான் வெளியாளுக்கெல்லாம் சொல்றதில்லையே..."

"நான்தான் வெளி ஆள் இல்லையே..  சும்மா அலட்டாமச் சொல்லுங்க.."

"தோ பார்..  வெளில கிளம்பிகிட்டிருக்கேன்...  வேகமாச் சொல்றேன் குறிச்சுக்க... 'நைநை' ன்னு சந்தேகமா கேட்டுகிட்டிருக்கக் கூடாது..."

"சரி சொல்லுங்க.."

"ஒரு பங்கு அரிசிக்கு நாலு பங்கு பால்.  கால் படி அரிசின்னு வச்சுக்கோ,  கழுவிக் களைந்த அரிசியை முக்கால் படி பால்ல போட்டு குக்கர்ல வை.  முன்னால எல்லாம் வெங்கலப் பானைல செய்வோம்.  அடி பிடிக்காமக் கிண்டறத்துக்கு ரொம்பப் பொறுமை வேணும்..  பால் இல்லையா...  அடி பிடிச்சுடும்...!"

"நான் குக்கர்ல வச்சுடறேனே..."

"தெரியுமே! அதான செய்வே...  குக்கர்ல வச்சு நல்லாக் குழைய வேக விடு.  அப்புறம் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி இன்னொரு முக்கால் லிட்டர் பாலை ஊற்றிக் கிண்டு..."

"இன்னும் பாலா?"

"எவ்வளவு பாலாயிருந்தாலும் ஓகே.. டேஸ்ட்தான் கூடும்.  நல்லாக் கிண்டினா பாயசம் மாதிரி செமி சாலிடா ஆயிடும். இப்போ அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் வைத்து கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கணும்.  அரிசிக்கு மூன்று பங்கு சர்க்கரை. அதை இந்தக் கலவையில் இட்டு கவனமா, அடி பிடிக்காமக் கிண்டணும்.  சர்க்கரை, பால் எல்லாம் சேர்ந்து இருக்கறதால தளும்பும்.  தளும்பாமக் கிண்டணும்"
 
 "சர்க்கரையா?  கல்கண்டு வேண்டாமா?"

"கல்கண்டும் வேணாம்.. குமுதமும் வேணாம்...  சர்க்கரையைப் போடு"

"சரி..  மேல சொல்லுங்க.."
 
 

                                                       Image result for milk kova images
 
 
பாலுக்கு பதிலா சர்க்கரை சேர்க்காத கோவா கூடச் சேர்க்கலாம். தளும்பாது பாரு!  அடி பிடிக்கக் கூடாதுன்னு நெய் சேர்த்துடக் கூடாது.  சாதம் முறுக்கிக் கொண்டு அரவனப் பாயசம் மாதிரி ஆகி விடும்.  சாதம் விரை விரையாப் போயிடும். 

 
கொஞ்சம் ஓரளவு கெட்டியானதும் நெய் விட்டுக் கீழே இறக்கிடு.  முந்திரி பாதாம், குங்குமப்பூ அப்புறம் வாசனைக்கு ஏலக்காய் சேர்க்கலாம்.  பாலோடு குங்கமப்பூ சேரும் வாசனைதான் முக்கியம்.  பச்சை கற்பூரமோ,  ஜாதிக்காயோ சேர்த்துட வேண்டாம்.  இதோட தனி டேஸ்ட்ட அது கெடுத்துடும்.  இறக்கி வச்சதும் கெட்டி ஆயிடும்.
 
 

                                                                    Image result for kalkandu sadam images
 
பேஸ்ட் போல இருக்கும் சாதம் விறைத்துக் கொண்டு வருமுன் இறக்கி விட வேண்டும்.  சர்க்கரை ஜாஸ்தி சேர்க்கறோம் இல்லையா,  அது சாதத்தை விறைக்கச் செய்து அரவனப் பாயசம் மாதிரிச் செய்யுமுன் இறக்கி விட வேண்டும்.  முக்கியமான விஷயம் எதையும் வறுத்துப் போடக் கூடாது.  அந்த வாசனை இதற்குச் சரியாய் வராது.."

"அவ்வளவுதானா?  இதற்குத் தொட்டுக் கொள்ள..."

"ஆரம்பிச்சுட்டியா?  ஃபோனை வை..  நான் கிளம்பணும்.."
படங்கள்  :  இணையம்.
 

34 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆனந்த விகடன்...? ஹா... ஹா...

எதை சேர்க்க நினைத்தாலும் கெட்டுடும் போலிருக்கே...!

Bagawanjee KA said...

போற போக்கைப் பார்த்தால், கல்கண்டு சாதம் சாப்பிடவே ஆளிருக்காது போலிருக்கே :)

ராமலக்ஷ்மி said...

சூப்பர் :)!

ரூபன் said...

வணக்கம்
ஐயா
உரையாடல் வடிவில் சொல்லிச் சென்ற விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கல்கண்டு சாதம் ஆஹா நினைக்கும்போதே இனிக்கிறதே

Chokkan Subramanian said...

எனக்கும் இந்த கல்கண்டு சாதம் மிகவும் பிடிக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

,இனிக்கிறது நண்பரே

Geetha Sambasivam said...

நேத்தே போட்டிருக்கீங்க! நேத்திக்கு இங்கே சர்க்கரைப் பொங்கல், மிளகு வடை, நம்ம ஆஞ்சிக்காகப் பண்ணிட்டு இருந்ததிலே ரொம்பவே பிசி. அதான் எந்த வலைப்பக்கமும் வர முடியலை. அங்கே போனால் பட்டாசாரியாருக்கும் ரங்க்ஸுக்கும் வாக்குவாதம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு எல்லாம் முடிச்சுண்டு வீட்டுக்கு வந்து சமைச்சுச் சாப்பிட்டுப் படுத்துட்டேன். சாயந்திரமா ஒரு அரைமணி நேரம் தான் இணையத்தில் உட்கார்ந்தேன். உங்க பதிவைப் பத்தின நினைவே இல்லை. :)))))

Geetha Sambasivam said...

//"கல்கண்டும் வேணாம்.. குமுதமும் வேணாம்... சர்க்கரையைப் போடு"//

இந்தக் கருத்தோடு மாறுபடறேன். கல்கண்டு அதுவும் கட்டிக் கல்கண்டு தான் போடணும். டைமன்ட் கல்கண்டு கூடப் போடக் கூடாது. சர்க்கரை கிட்டேயே வரக் கூடாது! ஆச்சா! இதைப் பத்தி ஏற்கெனவே சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் எழுதின நினைவு. அல்லது எங்க தமிழ் மரபு விக்கிப் பக்கம் இருக்கும். நான் முந்திரி, பாதாம், திராக்ஷை எல்லாம் தாராளமா நெய்யில் வறுத்துக் கொட்டுவேன். இந்த வருஷம் ரதசப்தமி அன்று சூரியனாருக்கு இதான் நிவேதனம். :)))) ஆழாக்கு அரிசிக்கு (200 கிராம்) ஒரு லிட்டர் பால் என்னோட கணக்கு) ஹூம், சமயத்தில் அதுவே போதாதுனு தோணும். :)

R.Umayal Gayathri said...

சூப்பரான சாதம் நான் விருந்தாளிகளுக்கு அடிக்கடி செய்வது இது.

வல்லிசிம்ஹன் said...

Irandu version kalkandu saatham .Great. amudhunu ithaithaan sollaNum. thanks EB

rajalakshmi paramasivam said...

கல்கண்டு சாதம் செய்துப் பார்த்து விட வேண்டும். படிக்கும் போதே நாவெல்லாம் இனிக்கிறது. நீங்கள் சொல்லிய படி சர்க்கரை சேர்த்து ஒரு நாளும், கீதா மேடம் சொல்வது போல் கட்டி கல்கண்டு சேர்த்தும் ஒரு நாள் செய்து சாப்பிடுகிறேன். ஆனால் கலக்ண்டு என்றால எவ்வளவு போட வேண்டும் என்று கீதா மேடம் சொல்லவேயில்லையே

ADHI VENKAT said...

கல்கண்டு சாதம் எனக்கும் பிடித்தது..

அவ்வப்போது செய்வேன். எங்கம்மா பொங்கலுக்கு மறுநாள் கனுவுக்கு கலவை சாதங்களுடன் கல்கண்டு சாதமும் செய்வார். தில்லியில் எங்க ஏரியா பிள்ளையார் கோவிலுக்கு பிரசாதமா கொடுப்பதுண்டு. கல்கண்டு தான் சேர்த்திருக்கேன். சர்க்கரை சேர்த்ததில்லையே...

ஆமா! கல்கண்டு சாதத்துக்கு கூடவா தொட்டுக்க.....

Geetha Sambasivam said...

@ராஜலக்ஷ்மி, ஆழாக்கு அரிசி போட்டால் முக்கால் கிலோ கல்கண்டு போடலாம். கல்கண்டில் வர பாகு சர்க்கரையில் வராது. அதோடு அஸ்கா சர்க்கரையில் ரசாயனக் கலப்புகள் இருப்பதால் ருசி மாறுபடும்(நிச்சயமாக) கல்கண்டு அஸ்கா சர்க்கரையைப் போல் பல முறை சுத்திகரிக்கப்பட்டது அல்ல. எண்ணெய் கூட நான் ரிஃபைன்ட் எண்ணெய் பயன்படுத்துவது இல்லை. முழுக்கமுழுக்க நல்லெண்ணெய், எப்போவானும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய். குறிப்பிட்ட சில சமையலுக்கு. சுட்ட எண்ணெயும் பயன்படுத்துவது இல்லை.

Geetha Sambasivam said...

@ஆதிவெங்கட், என்னோட பெரியப்பா ஒருத்தர் சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு பாத் ஆகியவற்றிற்கு உப்பு நாரத்தங்காய் தொட்டுக் கொள்வார் அவ்வப்போது. இல்லைனா வெறும் உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்த எலுமிச்சை ஊறுகாய். :))))

Geetha Sambasivam said...

என்னோட ருசிக்கு முக்கால் கிலோ கல்கண்டு எல்லாம் கம்மி. :)))) கல்கண்டிலேயே தித்திப்புப் போறலையோனு சந்தேகப்படும் ரகம் நான். :)))

ADHI VENKAT said...

கீதா மாமி - சர்க்கரை பொங்கலுக்கு உப்பு நார்த்தங்காய் வித்தியாசமா இருக்கு. திகட்டாமல் இருக்கவா!

Geetha Sambasivam said...

@ஆதி வெங்கட், யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு, என் மாமனார் பொங்கலன்று செய்யும் எரிச்ச குழம்பைத் தொட்டுக் கொண்டு பொங்கல் சாப்பிடுவார். :)))

Geetha Sambasivam said...

சிதம்பரம் நடராஜா கோவிலில் கொடுக்கும் கல்கண்டு சாதம் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான செய்முறை விளக்கம்.. சக்கரைக்கு பதிலா கல்கண்டும் போடலாம் நன்றாக இருக்கும்.
தொட்டுக்கொள்ள பொரிச்ச அப்பளம் சூப்பர்..

‘தளிர்’ சுரேஷ் said...

கற்கண்டு சாதம் தயாரிப்பு இனித்தது! சுவையான பகிர்வு! செய்தால் ஒரு பார்சல் அனுப்புங்களேன்! நன்றி!

KILLERGEE Devakottai said...


ஸூப்பர் கல்கண்டு சாதம் கண்டேன்.

பழனி. கந்தசாமி said...

நல்ல சாதம். சர்க்கரைப் பொங்கல் மாதிரி இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு

அப்பாதுரை said...

diabetesக்கு ரொம்ப நல்லதோ?

அரவன பாயசமா? அதையும் கொஞ்சம் விளக்கிப் போடுறது? படிக்கவாவது செய்யலாம்.

மனோ சாமிநாதன் said...

அருமையான, சுவை மிகுந்த சாதம்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.!

கற்கண்டு சாதம் தயாரிப்பு முறை உரையாடலாக நன்றாக இருந்தது..கருத்துரைகளையும் படித்தேன்..அம்மா வீட்டுக்கு விஷேடங்களுக்கு போகும் போது அங்கு சாப்பிட்டிருக்கிறேன். தங்கள் பதிவை படித்தவுடன் அந்த சுவை நாக்கில் நர்த்தனமாடியது.. செய்து சாப்பிட வேண்டும்.. விபரமாக, இனிப்பாக பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

கீத மஞ்சரி said...

கல்கண்டு சாதம் என்றால் கல்கண்டு இல்லாமலா? கீதா மேடம் சொல்வது போல் கல்கண்டு போட்டு செய்தால் அது தனித்த ருசியைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். சப்புக்கொட்டிக் கொண்டு வாசித்தேன். சாப்பிடமுடியாது. :(( சர்க்கரைப் பொங்கலுக்கு எங்கள் வீடுகளில் தொட்டுக்கொள்ள காரமாய் இஞ்சித்துவையல் அரைப்போம்.

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, அரவணைப் பாயசம் செய்முறை இங்கே பார்க்கவும்.

http://geetha-sambasivam.blogspot.in/2012/07/blog-post.html

Geetha Sambasivam said...

அதிலே உங்க கருத்துக் கூட இருக்கும். :))))

Geetha Sambasivam said...

நான் இன்றும் சர்க்கரைப் பொங்கல், அக்கார அடிசில், கல்கண்டு சாதம், போன்றவை எல்லாம் வெண்கல உருளி அல்லது வெண்கலப்பானையிலேயே தான் செய்கிறேன். அடிப்பிடிப்பது இல்லை.

Geetha Sambasivam said...

http://tinyurl.com/o8cpt9v//

அக்கார அடிசில் செய்முறை இங்கே பார்க்கலாம். இதையே வெல்லம் போடாமல் கல்கண்டு போட்டும் செய்யலாம்.

கோமதி அரசு said...

கல்கண்டு சாதம் செய்முறை அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

கல்கண்டு சாதத்திற்கு கல்கண்டுதானே சேர்ப்பது! பின்னர் எல்லாம் நெய்யில் வறுத்துப் போடுவதுண்டு...

குக்கரில் பாலுடன் அரிசியும் சேர்த்து சிம்மில் வேக வைத்தால், திறக்கும் போதெ மில்க் மெயிட் சேர்த்தார் போல் சற்று ரோஸ் கலரில் இருக்கும் சாதம். பின்னர் அதே முறைதான் ஆனால் கல்கண்டு.....

நீங்கள் விவரித்ததைப் பார்த்ததும் உடனே செய்ய ஆசை பற்றிக் கொண்டது...

கீதா.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!