திங்கள், 29 ஜூன், 2015

'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு




தலைப்பில் கொத்துமல்லி மட்டும் இருந்தாலும் இதில் புதினாவுக்கும் இடமுண்டு.


வீட்டில் என்றென்றும் இருப்பில் இருக்க வேண்டிய விஷயங்கள் பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், போன்றவற்றோடு கறிவேப்பிலை மற்றும் இந்தக் கொத்துமல்லிக்கு நிறைய இடம் உண்டு.


கொத்துமல்லி இல்லையேல் சாம்பார் இல்லை.  கொத்துமல்லி இல்லையேல் ரசம் இல்லை!  இட்லி, தோசைக்கு அரைக்கும் தேங்காய் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் தனிச் சுவை.  

கொத்துமல்லித் தழைகளை என் அப்பா சும்மாவே வாயில் போட்டு மெல்லுவார்!  சாம்பார், ரசத்தில் போடும்போது சற்றுப் பொடியாக நறுக்கிக் கூடப் போடுவோம்!

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


இரண்டு கட்டு கொத்துமல்லி வாங்கிக் கொள்ளவும்.  (சென்னையிலும், மதுரையிலும் கட்டு 10 ரூபாய்!)  அப்புறம் ஒரு கட்டு புதினா வாங்கிக் கொள்ளவும்.  (இதுவும் கட்டு 10 ரூபாய்தான்).  சிலர் இரண்டு கட்டு கொத்துமல்லிக்கு இரண்டு கட்டு புதினா போடலாம் என்பார்கள்.  ஆனால் அப்படிப் போட்டால் தொக்கின் பெயரில் புதினாவுக்கும் இடம் கொடுக்க வேண்டி வரும்.  எனவே கொத்துமல்லி வாசனை தூக்கலாகத் தெரிய இந்த அளவிலேயே நாம் செய்வோம்!


அப்புறம் ஒரு சள்ளை பிடித்த வேலை.  இந்த கொத்துமல்லி, புதினாவை இலை, இலையாக ஆயவும்.  ஆயப்பட்ட ஈர்க்குகளில் இலை வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும்.  பின்னே?  கட்டு 10 ரூபாயாக்கும்!  இலைகள் போக மிச்ச மீதியைத் தூக்கித் தூர வைத்து விடவும்.




ஆய்ந்த இலைகளை சுத்தமான நீரினில் நன்கு அலசி, 


ஒரு செய்தித் தாளில் பரவலாக இட்டு, காய வைக்கவும்.  காய வைக்கவும் என்கிற வார்த்தையை விட 'உலர வைக்கவும்' என்கிற வார்த்தைப் பொருத்தமாக இருக்கும்.  எனவே சென்ற வரியை அழித்து விடவும்!


அப்புறம் கொஞ்சமாக உளுத்தம் பருப்பு, (உளுத்தம் பருப்பு நிறையச் சேர்த்தால் தொக்கின் சுவை கெட்டு விடும்.  அதனால் கொஞ்சமாக சேர்க்கவும்) காரத் தேவைக்கு ஏற்றாற்போல வரமிளகாய், கொஞ்சம் பெருங்காயம் எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து ஓரமாக வைக்கவும்.  அடுப்பை அணைத்து விட்டு அந்தச் சூடான வாணலியில் இந்த இலைகளைப் போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.


உளுத்தம்பருப்பு, இன்ன பிற சமாச்சாரங்களைத் தனியாக மிக்ஸியில் இட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும்.  கரகரவென்று நான் சத்தத்தைச் சொல்லவில்லை.  ரொம்ப நைஸாக அரைக்க வேண்டாம் என்பதைச் சொன்னேன். 



பிறகு இலைகளைத் தனியாக மிக்ஸியிலிட்டு நான்கு ( 4 தான்) சுற்று சுற்றிக் கொள்ளவும்.


அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் இந்த இலைகளைக் கலந்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.








இப்போது தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.  இல்லை, இட்லிதான் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.   அட, வேண்டாமப்பா, 'இன்று நான் மோர்சாதம்தான் சாப்பிடப் போகிறேன்' என்கிறீர்களா?  அதற்கெல்லாம் இது நல்லபடி துணை நின்று உள்ளே அனுப்பி வைக்கும்!

32 கருத்துகள்:

  1. நாங்கள் விரும்பிச் செய்து
    உண்ணும் தொக்கு
    மனைவியின் தயவின்றி இனி நானும்
    தங்கள் பதிவின் வழிகாட்டலில் செய்து விடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹூம், வெறும் இலையை மட்டும் ஆய்ந்து காம்புகளைத் தூக்கிப் போட்டால் கொத்துமல்லியின் மணமும், சுவையும், அதன் சத்தும் எங்கே கிடைக்கும். நான் வேரை மட்டும் நீக்கிவிட்டு (ஒரு அங்குலத்துக்கு) கொத்துமல்லியைக் காம்போடு பொடிப் பொடியாக நறுக்கிவிட்டுப் பின் அலசி வடிகட்டி மேலே சொன்னபடி (புதினா சேர்க்காமல்) மி.வத்தல் வறுத்துக் கொண்டு, உப்பு, புளியோடு பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டுக் கடைசியில் எண்ணெயில் தாளித்து வைத்திருக்கும் கடுகு உ.பருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக் கொண்டால் மோர்சாதம், புழுங்கலரிசிக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி(மோர் விட்டது), தோசை, சப்பாத்தி , தேப்லா போன்ற எந்த உணவானாலும் உள்ளே கூடவே இறங்கும். இலைகளைத் தனியாக, காரம் தனியாக அரைப்பதில்லை. காரத்தைப் போட்டு அரைத்துக் கொண்டு(கடுகு, உபருப்பு சேர்க்காமல்) பின்னர் இலைகளையும் போட்டு அரைத்துவிடுவோம். அதன் பின்னரே கடுகு, உபருப்பு சேர்த்து அரைப்போம். முன்னெல்லாம் இதைக் கல்லுரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் முடியாது. :)

    பதிலளிநீக்கு
  3. டெம்ப்ளேட் மாத்தி இருக்கீங்க? அல்லது பின்னூட்டப் பெட்டியின் டெம்ப்ளேட் மட்டும் மாறி இருக்கா? என்னோட கமென்ட் போகவே இல்லையே! ஹாஹா, வந்துடுச்சு, வந்துடுச்சு!

    பதிலளிநீக்கு
  4. திங்கக்கிழமையை இரசித்தோம்

    பதிலளிநீக்கு
  5. சுவையூட்டும் பதிவு
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. சாம்பாரில் கொத்துமல்லி சேர்ப்பாங்களா?

    பதிலளிநீக்கு
  7. அங்கங்கே உங்களின் 'கிண்டலும்' நல்ல சுவை...!

    கீதா அம்மா சொல்வது போல் தான் வீட்டில் செய்வார்கள்...

    பதிலளிநீக்கு
  8. ///நான் வேரை மட்டும் நீக்கிவிட்டு (ஒரு அங்குலத்துக்கு) கொத்துமல்லியைக் காம்போடு பொடிப் பொடியாக நறுக்கிவிட்டுப் பின்........////

    இது தான் கரெக்ட் ப்ரொசீஜர்..

    எனி திங் எல்ஸ் நோ கொத்துமல்லி ஸ்மெல்.
    ஸோ ஸ்டார்ட் அகைன் பிரம் ஏ , பி, சி. டி.......

    //தக்காளித் தொக்கே தொக்கு.//

    சாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்கு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. வெறும் இலைமாத்திரமென்றால் எவ்வளவு போட்டாலும் காணாது. வேரை நீக்கிவிட்டு அலசி ஒருஃபேனடியில்துணியில் பரவலாகப் பொதிந்து துணியாலே மூடிவிட்டால் ஈரம் உலர்ந்து விடும். பருப்பு ,மிளகாய்பெருங்காயம், இவைகளை பொடித்து எடுத்துவிட்டு,உப்பு,கொத்தமல்லி,துளி புளி இவைகளை இரண்டு சுற்று சுற்றிஎடுத்துவைத்த பொடியையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் பருப்புகள் ஈரத்தை உறிஞ்சுவிடும். இது என் செய்முறை. அப்புறம் எண்ணெய் விடுவதில்லை. அப்புறமாக கொட்சம் உதிர் உதிராக ஆகிவிடும்.. உங்கள் முறையும் நல்ல வாஸனைதான்.
    நிறைய காரம் போட்டால் துளி வெல்லம் கூட சேர்ப்பவர்களும் உண்டு. கடலைப்பருப்பும் ஓரளவு போடுவதும் உண்டு.பச்ச
    கொத்தமல்லிப் பொடி என்று நாங்கள் சொல்லுவோம்.. அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. பருப்பு மிளகாயெல்லாம்வறுத்துதான் நானும் போடுவேன்.

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சமையல் குறிப்பு சொல்லித்தருவதே ஓர் அழகுதான்! சின்ன குழந்தைக் கூட எளிதாக புரிந்து சமைத்துவிடுவார்! நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்,
    மணம் வீவீவீவீவீவீவீவீசுகிறது கொத்தமல்லி,,,,,,
    அருமை, வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. புதினா எவ்வளவு குறைவாக உபயோகித்தாலும் அதன் வாசம் போகாது. எங்கள் வீட்டில் புதினா சேர்ப்பது இல்லை. என் அப்பா வழிப்பாட்டி அடிக்கடி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ரமணி ஸார். உற்சாகமான கருத்துக்கும், த.ம வாக்குக்கும்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கீதா மேடம்...

    என் பாஸ் கிட்ட நானும் கொ.ம இலை மட்டுமில்லை, தண்டோட போட்டாத்தான் வாசனையா இருக்கும்னு சொன்னேன். கேக்கலையே... அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவங்க அப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்கன்னாங்க. மற்றபடி சாம்பார், ரசத்தில் எல்லாம் அப்படித்தான் கில்லியோ, நறுக்கியோ போடுவது!

    அப்புறம் புளி சேர்க்கணும் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன். ஆனால் (மிக்சிக்கு முன்னால் உள்ள) படத்தில் உ.ப வகையறாக்களுடன் புளியும் இருப்பதைக் காண்க. :))))

    க.ப போட மாட்டோம்.


    பதிலளிநீக்கு
  16. நன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி அப்பாதுரை. தக்காளித் தொக்கு எப்பவும் செய்வது. அதைவிட மாங்காய்த் தொக்கு... ஸ்....ஸ்....

    பதிலளிநீக்கு
  18. //ஸாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்கு//

    ஹா...ஹா....ஹா... சிரிச்சுட்டேனே தவிர சரியாப் புரியலை. :)))))))

    நன்றி சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  19. அதே மாதிரிதான் நாங்களும் செய்கிறோம் காமாட்சி அம்மா. வெல்லம் போட மாட்டோம். எண்ணெய் நிறையப் போட மாட்டோம். சும்மா அதை சேர்த்துப் பிடித்து வைக்க வேண்டி ஒரு ஸ்பூன்!

    நன்றி காமாட்சி அம்மா.

    பதிலளிநீக்கு
  20. நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஜி எம் பி ஸார். வெறும் கொத்துமல்லி மட்டும் போட்டும் நாங்களும் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  22. எனக்குப் பிடித்த துவையல்!

    பதிலளிநீக்கு
  23. நீங்க தொக்குன்னும்,அய்யா துவையல் என்றும் சொல்லியுள்ளீர்கள் ,எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் எது சரியென்று :)

    பதிலளிநீக்கு
  24. கொத்தமல்லித் தொகையல் (துவையல்) மோர் சாதத்துக்கு ரொம்ப நன்றாக இருக்கும். தோசைக்கு ஓகே. புளியக் காணோமே படத்தில் மாத்திரம் இருக்கு என்று நினைத்தேன். பின்னூட்டத்தில் சொல்லியுள்ளீர்கள். தொக்கு என்பது, இலுப்புச்சட்டியில் போட்டு கூட எண்ணையை விட்டு வதக்குவது என்று நினைக்கிறேன்.

    நான், தோசையுடன் சாப்பிடுவதற்கு முன்பு, தொகையலில், நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்வேன். நன்றாக இருக்கும். ('நம் பாரம்பர்யத்தில், மிளகாய் சேர்த்தால் (அல்லது பருப்பு), வாயுத் தொந்தரவு ஏற்படக்கூடாது என்று பெருங்காயம் சேர்ப்பார்கள். சிலர் பூண்டு சேர்ப்பார்கள். நல்ல எண்ணெயும் உடம்புக்குக் குளிர்ச்சி. வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும்.

    ஒவ்வொரு திங்கக் கிழமையும் என்ன எழுதப் போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. நன்கு கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டாள் மாதக் கணக்கில்---சோற்றில் சேர்த்தோ.மோர்சோற்ருக்கு தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.அமிர்தம்

    பதிலளிநீக்கு
  26. கொத்துமலி இலை மட்டும் இல்ல ஜஸ்ட் வேரை மட்டும் எடுத்துவிட்டு காம்புடன்தான் (கொத்துமல்லிக் கட்டு 10 ரூபாயாக்கும்!!) அரைப்பது வழக்கம்....நீங்கள் சொல்லியிருக்கும் மற்றவை அதே....தனித்தனியாகச் செய்தது முன்பு ஊரில் கிராமத்தில் இருந்த போது உரலில் போட்டு இடித்துச் செய்வதுண்டு....இப்போது மிக்சியில் என்பதால் வறுத்ததை ஒரு சுற்று சுற்றி விட்டு தழை போட்டு நீங்க சொன்னா மாதிரி 4 சுற்று......4 மட்டும்தான்...அஹ்ஹஹ் அப்பதான் அது சுவை...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே நாக்குல தண்ணீ.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!