புதன், 29 ஜூலை, 2015

ஏமாந்த அனுபவம்



பிரபாகரனுக்கு அன்று சம்பளம்.  முதலாளி ரப்பர் பேன்டால் சுற்றப்பட்ட ஐம்பது ரூபாய் நோட்டாக ஒரு கட்டு அப்படியே கையில் கொடுத்திருந்தார். உண்மையில் சென்ற மாதம் வரவேண்டிய பணமும் சேர்ந்த சம்பளம் அது.
 

இப்படிப் புது நோட்டுகளாக பிரபா பார்த்ததில்லை.  அவ்வப்போது அதை எடுத்து, எடுத்துப் பார்த்துக் கொண்டான்.
 

பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டான்.  டிக்கெட் எடுத்துக் கொண்டு சீட்டில் அமர்ந்தவன் கனவுக்குப் போன நேரம்..

 

கோடம்பாக்கம் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது பஸ்.
 

கூட்டத்தில் அந்தப் பொன்னான நேரத்துக்காகக் காத்திருந்த இரண்டு விரல்கள் பிரபாவின் பைக்குள் லாவகமாக நுழைந்தன. இரண்டு விரல்களில் மாட்டிய பணக்கட்டு,  பையை விட்டு வெளியேறும் நேரம் பிரபாவின் கைகள் தன்னிச்சையாக மறுபடியும் தொட்டுப் பார்க்க வந்தது, அதைச் சட்டெனப் பற்றிக் கொள்ள,  கட்டில் பாதி அந்தத் திருடன் கைகளுக்குச் சென்றது.
 

சட்டெனக் கூட்டத்திலிருந்து நழுவிய அந்த மனிதன், ஓடும் பஸ்ஸிலிருந்து லாவகமாகக் குதித்தான்.  இவனும் பின்னாலேயே துரத்திக் கொண்டு கீழே குதித்தான்.

 
முன்னால் ஓடியவன் பாலத்தின் நடுவிலிருந்த படிக்கட்டுகளில் விரைந்து இறங்கியவன், எதிர்த் திசையில் ஓடினான்.
 
"ஓடறான்...பிடிங்க... பிடிங்க..."  என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான் பிரபா.


கொஞ்ச நேரம் இங்கும் அங்கும், திரும்பித் திரும்பி, வளைந்து நெளிந்து ஓட்டம்... 

 
துரத்திக் கொண்டு ஓடியவன் அவனை ஓரிடத்தில் அவனை
எட்டிப் பிடித்து விட்டான்.
 
தோளை எட்டிப் பிடித்தவன், சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டான்.
 
பின்னாலேயே வேகமாக வந்த ஒருவன் "யே...என்னப்பா... ஓடி ஓடி அடிச்சுக்கறீங்க.." என்றான்.
 
அவன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதை பிரபா சொல்லத் தொடங்குமுன் அவன் முந்திக் கொண்டான்.
 
"ஐயா... நல்ல நேரத்துல வந்தீங்க... சம்பளம் வாங்கிகிட்டு பஸ்ல வந்து இறங்கினேனுங்க..  இவனும் இன்னொருத்தனும் பின்னாடியே வந்து மடக்கினாங்க..  அந்த இன்னொருத்தன் கத்தியைக் காட்டி 'பாக்கெட்ல வச்சிருக்கற பணத்த எடு' ன்னு மிரட்டினான்.  நான் பயந்துபோய் பணத்தை எடுத்துக் கொடுக்கற மாதிரிக் காமிச்சுத் தப்பிச்சு ஓடி வந்தேன்.  அப்படியும் கட்டுல பாதி அவன் கைல மாட்டிடுச்சு ஐயா..  அவன் சட்டைப் பைல பாருங்க..  அதை உள்ளே வச்சுகிட்டிருக்கான்.   மிச்சத்தைப் பிடுங்க 
இவன் என்  பின்னாலேயே துரத்திகிட்டு வர்றான்..   கேக்க ஆளே இல்லையா...  காப்பாத்துங்கையா...." என்றவன், பிரபாவைப் பார்த்து

 
 "டேய்! ஏழைங்க பாவம் உன்னைச் சும்மா விடாதுடா..  இரு! போலீசைக் கூப்பிடறேன்?" என்றான்.
 
அயர்ந்துபோய் நின்றிருந்த பிரபாவின் பாக்கெட்டில் 'சட்'டெனக்
கைவிட்ட புதியவன்,  பாக்கி இருந்த ரூபாய்க் கட்டை எடுத்துப் பார்த்தவன், எதிர்பாராமல் ஒரு காரியம் செய்தான்.

 
திரும்பி ஒரே ஓட்டமாய்....  ஓடியே போனான்!!!
 
திடுக்கிட்டு அவனைப் பார்த்துக் கத்திய பிரபாவின் கையிலிருந்து திமிறி விடுபட்ட இந்தத் திருடன் இந்தப் பக்கமாய் ஓடி மறைந்தான்.
 

காலியாய் இருந்த அந்தத் தெருவின் நடுவே பிரமை பிடித்தது போல
நின்றிருந்தான் பிரபாகர்.

இதற்கு என்ன நியாயம் சொல்வீர்கள்?




22 கருத்துகள்:

  1. எப்படியெல்லாமோ ...... கூட்டாளிகளை வைத்து ஏமாற்றுகிறார்கள்...தான்.
    தம 3
    என்பக்கம் இசைக் குறிகளின் தோரணங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் கூட்டாளியா, புது ஆளா என்று கூட அறிய வழியில்லை! உங்கள் அழகான மழைக் கவிதையை ரசித்தேன் சகோதரி உமையாள் காயத்ரி.

      நீக்கு
  2. கூட்டுக் கொள்ளை...! ஆமாம், இதில் எங்கே இருக்கிறது நியாயம்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை DD. திருடனாய்ப் பார்த்துத் தி்ருந்தாவிட்டால்....!

      நீக்கு
  3. சென்னை! :(இப்படித் தான் நடக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஆனால் ஏமாற்றுபவர்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள் கீதா மேடம்.

      நீக்கு
  4. சென்னையில் பஸ்ஸில் பணம் பறி கொடுத்த அனுபவம் எனக்கு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை மற்றும் கருத்துக்கு நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  5. அந்த ஸ்கூட்டர் கதையிலாவது பறந்து போன பணம் திரும்பி வந்துச்சு....கொஞ்சம் ஈரம் இருந்துச்சு பணத்தப் பொறுக்கினவனிடம்....இந்தக் கதைல போயே போச்சு....ம்ம் என்னத்த சொல்ல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான் துளசிஜி! (கீதா?)

      நீக்கு
  6. இப்படி பணத்தை பறிகொடுத்தவன் பிரமை பிடிக்க வேண்டியதுதான் பாக்கி. திட்டமிட்ட வழிப்பறி. இப்படியுமா அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இப்படி எல்லாம் நடக்கிறதுதான் காமாட்சி அம்மா...

      நீக்கு
  7. மூத்த பதிவர் நடனசபாபதி அவர்கள் சொல்வது போல ஏமாற்றுவது ஒரு கலைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எங்கே சொல்லியிருக்கிறார் முரளிதரன்? நான் பார்க்கவில்லை, ஆனால் அது என்னவோ உண்மைதான்!

      நீக்கு
  8. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!

    பதிலளிநீக்கு
  9. பிளேடினால் முகத்தில் கீறல் எதுவும் போடாமல் போனார்களே ,உயிர் பிழைத்தோம்என்று ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான் !

    பதிலளிநீக்கு
  10. காசு போனா போவுது விடுங்க. சண்ட பிடிசீங்கனா அந்த கூட்டுக் களவாணிப் பசங்க மூஞ்சில பிளேடு வச்சு கீறிடுவானுங்க.

    பதிலளிநீக்கு
  11. நல்லா ஏமாத்துற்றுகிறார்கள் ,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!