Wednesday, August 5, 2015

அலுவலக அமானுஷ்யம் :: "யாரோ என்னைத் தட்டினாங்க"அன்று இரவுப் பணிக்கு நானும் அவனும் சென்று கொண்டிருந்தோம்.  மணி இரவு 11. 12 மணி ஷிப்டில் இருக்க வேண்டும்.  அது ஒரு தொழிற்சாலை.
 
நான் - அந்த அலுவலகத்துக்குப் பழையவன்.  அவன் கொஞ்சம் புதியவன்.
 
அலுவலகம் என்பது ஒரு பெரிய காட்டுக்கு நடுவே அமைந்திருப்பது போல இருக்கும்.  வாசல் கேட்டைத் தாண்டி உள்ளே நடந்தோமானால் ஏகப்பட்ட மரங்கள்.
 
அந்தக் காலத்தில் வழிகளில் பெரிய வெளிச்சமுமிருக்காது.  அங்காங்கே அழுது வடியும் சில பல்புகள் இருக்கும்.
 
இரவு நேரப் பணி என்பதால் நிறைய பேர் வரமாட்டார்கள்.  செல்லும் வழியில் இப்போது நானும் அவனும் மட்டுமே.
 
                                                               
                                                                        Image result for two men walking in the forest in the night clip art images

சாதாரணமாகவே இது மாதிரிச் சூழ்நிலைகள் சற்றே பயத்தை உருவாக்கும்.  தனியாகப் போகும்போது சிலபேர் ஓட்டமும் நடையுமாக அந்த மாதிரி இடங்களைக் கடப்பார்கள் - யாரும் பார்க்காத போதுதான்!
 
போதாக் குறைக்கு திடீர் திடீர் என ஒரு குழந்தை அல்லது ஒரு பெண் அழுவது போல ஒரு சத்தம் கேட்கும். 
 
அவன் வளவளவென்று பேசிக் கொண்டே வந்தான்.  தாழ்ந்த குரலில்தான் பேசிக் கொண்டு வந்தான்.  ஏனோ உரக்கப் பேசத் தயக்கம்.
 
நான் அதிகம் பேசாத ஆள்.  மௌனம் எனது தாய்மொழி, தந்தை மொழி! சொந்த மொழி!  மேலும் நான் ஸீனியர்!  எனவே கேட்டுக் கொண்டு மட்டும் வந்தேன்.  வெறும் தலையசைப்புகளுடனும், அவ்வப்போது சில 'உம்'களுடனும்.
 
அப்போது அந்த அழுகுரல் கேட்டது.
 
பேச்சை நிறுத்தி விட்ட அவன், தலையை அதிகம் நிமிர்த்தாமலேயே சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன், என்னைப் பார்த்தான்.
                                                                     Image result for two men walking in the forest in the night images 
"என்ன சத்தம் அது?"
 
"எது?"
 
"இப்போ யாரோ அழற மாதிரி கேட்டதே..?"

 
அவன் மிரட்சியைப் பார்த்து, சட்டெனத் தோன்றிய ஒரு குறும்பு எண்ணத்தில்,


"அப்படியா?  இல்லையே...  எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே?" என்றேன்.
 
என்னைச் சந்தேகமாகப் பார்த்தவன் அவனும் மெளனமாக நடந்தான். எனக்குத் தெரியும், அது என்ன சத்தம் என்று.  steam trap.  நீராவிக் குழாய்களில் நீராவி குளிர்ந்து வென்னீரானதும் அதை வெளியேற்றும்போது உண்டாகும் சப்தம் அது.

இன்னும் சற்று தூரம் போனதும் மறுபடியும் அதே சத்தம்.  சட்டென என்னைத் திரும்பிப் பார்த்தான்.  நான் அதை எதிர்பார்த்திருந்ததால், எந்த வித மாறுதலும் காட்டாமலேயே நடந்தேன்.
 
அதோடு கூட, வேறொரு எண்ணமும் தோன்ற, நடந்தபடியே வலது பக்கம் வந்து கொண்டிருந்த அவனின் வலது தோளை இரண்டு விரல்களால் தொட்டு, சட்டெனக் கையை அவனறியாமல் எடுத்துக் கொண்டதோடு, அவன் வலது பக்கம் திரும்பிய நேரம் அவனிடமிருந்து சற்றே விலகி நடந்தேன்.  அவன் திரும்பி என்னைப் பார்த்தாலும் நான் தொட்டிருப்பேன் என்ற எண்ணம் வராதிருக்க.
 
திரும்பி என்னை பீதியுடன் பார்த்தவன், "யாரோ என்னைத் தட்டினாங்க" என்றான்.
 
நான் ஒன்றும் புரியாமல் விழிப்பவன் போல அவனையும், அவனின் அந்தப் பக்கமும்பார்த்து விட்டு, "யாரு?  யாரும் இல்லையே" ன்றேன்.
 
மறுபடியும் அவன் "யாரோ என்னைத் தட்டினாங்க" என்றான்.  கொஞ்ச தூரம் நடந்ததும் திரும்பி முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு "யாரோ என்னைத் தட்டினாங்க" என்றான் மறுபடியும்.
 
அதற்குள் அலுவலகக் கட்டிடம் சமீபித்திருக்க, அலுவலகச் சீருடை அணிய அந்த அறைக்குள் அவன் நுழைந்தான்.
 
எனக்குச் சீருடை கிடையாது.  எனவே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு வந்து அவனிடம் உண்மையைச் சொல்லலாம் என்று உள்ளே சென்றேன்.  கையெழுத்திடும்போது, அங்கு வந்த ஒரு ஃபோன் காலை அட்டெண்ட் செய்து விட்டுத் திரும்ப சற்று நேரமாகி விட, வந்து பார்த்தால் அவனைக் காணோம்.  அப்போதெல்லாம் லேண்ட்லைன் மட்டும்தான்.  அதுவும் சில குறிப்பிட்ட அறைகளில் மட்டும்தான் இருக்கும்.
 
அப்புறம் என்னுடைய வேலைப் பளுவில் அவனை மறந்து போனேன்.

 
மறுநாள் அவனைப் பற்றி நான் அறிந்தபோது மணி காலை 9.


அவன் மீண்டும் மீண்டும் "யாரோ என்னைத் தட்டினாங்க" என்று புலம்பிக் கொண்டே இருந்திருக்கிறான்.  மலங்க மலங்க விழித்துக் கொண்டும், வெறித்துக் கொண்டுமிருந்துவிட்டு, அப்படியே மயங்கி விழுந்த அவனை அலுவலக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
 
விழிப்பு வந்த நிலையில் மருத்துவரைப் பார்த்து வான் "என்னை ஏன் இங்கு அட்மிட் செய்திருக்கிறீர்கள்?  எனக்கு என்ன?"  என்று கேட்டவண்ணம் இருந்திருக்கிறான்.
 
'ஒன்றும் இல்லை.  எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.  ஆனால் உன் உடல் தொடர்ந்து சில்லிட்டுக் கொண்டே வருகிறது.  பல்ஸ் விழுந்து கொண்டே இருக்கிறது.  காரணம்தான் தெரியவில்லை'  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார் மருத்துவர்.   அவனிடம் சொல்லவில்லை.
 
காலை 7 மணிக்கு அவன் செத்துப் போனான்.  ஏனென்று வேறு யாருக்குமே காரணம் தெரியவில்லை.
படங்கள் :  நன்றி இணையம்.

27 comments:

KILLERGEE Devakottai said...

மரணத்தின் காரணம்தான் என்ன ?

வெட்டிப்பேச்சு said...

அடப்பாவமே.!

ஏதோ வழக்கம்போல் விளையாட்டாய் சொல்லப்போகிறீர்கள் என நினைத்து படித்துக் கொண்டே வந்தவன் சட்டென மனம் கலங்கி விட்டேன்.

ஒரு வேளை விளையாட்டு விபரீதமாகிவிட்டதோ..?

மனம் பிசைகிறது.

ஸ்ரீராம். said...

பயமும், அதிர்ச்சியும் காரணமாக இருந்திருக்கலாம் கில்லர்ஜி. நன்றி.

ஸ்ரீராம். said...

ஆம். விளையாட்டு வினையான கதைதான் வலிப்போக்கன். நன்றி.

ஸ்ரீராம். said...

ஆம். விளையாட்டு வினையான கதைதான் வலிப்போக்கன். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

விளையாட்டு வினையாகி விட்டதே.....

காரிகன் said...

உங்களை கொலைகாரன் என்று சொன்னால் தவறாக எண்ணுவீர்களா? இதெல்லாம் தேவையில்லாத வீண் விபரீத விளையாட்டு.

பாரதி said...

மனோத்த்துவக் கொலையோ.....???

கரந்தை ஜெயக்குமார் said...

அதீத பயம்
ஆபத்தில்தான் முடியும் என்பார்கள்
இது கதைதானே...
தம +1

கோமதி அரசு said...

மனதில் தைரியம் இல்லையென்றால் இப்படி நிகழவது உண்டு.இதை தான் பாரதி அஞ்சி அஞ்சி சாவார் என்று பாடினார்.

சின்னவயதில் பயந்த குழந்தைகளை கோவிலுக்கு கூட்டிப்போய் மந்திரித்து ஒன்றும் இல்லை பயப்படாதே என்று சொல்லி நம்பிக்கை அளிப்பார்கள். இப்போது பெரியவர்களுக்கும் பயந்த கோளாறு என்று மந்திரித்து கயிறு கட்டி பயத்தை போக்குகிறார்கள்.

ராமலக்ஷ்மி said...

பரிதாபம்.

Bagawanjee KA said...

அநியாயமாய் ஒரு கொலை பண்ணிட்டீங்களே ,சரி சரி ,அதையே நினைச்சு நீங்க எதுவும் பண்ணீக்காதீங்க :)

மாடிப்படி மாது said...

இது வெறும் ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்று நீங்கள் சொல்லணும்னு என் மனசு தவியாக தவிக்குது

சாந்தி மாரியப்பன் said...

கதை பிரமாதம்..

mageswari balachandran said...

வணக்கம்,
என்ன ஸ்ரீராம் இது உண்மையா?
மனம் கனத்தது, பகிர்வுக்கு நன்றி.

G.M Balasubramaniam said...

கதையில் வரும் நானுக்குக் குற்ற உண்ர்ச்சி ஏதும் இருக்கவில்லையா.?

சென்னை பித்தன் said...

விளையாட்டு வினையான கதை!அருமை

ரூபன் said...

வணக்கம்
ஐயா

அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பழனி. கந்தசாமி said...

என்னமோ, நல்ல மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்............................

Thulasidharan V Thillaiakathu said...

விளையாட்டு வினையாகும் என்பதைப் பற்றிய அழகான கதை. இப்படி அமானுஷ்யத்தை நம்பி பயந்து இறப்பவர்கள் இன்றும் கூட இருக்கின்றார்கள்...அவர்களாகவே கற்பனை செய்து கொண்டும்...

rmn said...

விளையாட்டு வினையாகலாம் என்பதை பறைசாட்டுகிறது தங்களின் பதிவு,
நன்றி.

Kamatchi said...

கற்பனை எப்படி ரெக்கை கட்டிக்கொண்டு பரக்கிறது. நல்லவேளை பயித்தியம் பிடித்துப் பாயைப் பிரண்டாமல் முக்தி அளித்து விட்டீர்கள். நிஜமாக இருந்தால் மன உளைச்சல் ஏற்பட்டுவிடும். மனப்பிராந்தி இதுதான். அழகான புனைவு. இடம் நிஜம். நிகழ்வில் கற்பனை அருமை. அன்புடன்

Ranjani Narayanan said...

பாவம், அவரை சாகடித்திருக்க வேண்டாம், ஸ்ரீராம். இது உங்கள் கற்பனை தானே?

புலவர் இராமாநுசம் said...

உண்மையாகவா!!!! கதைதானே!!

‘தளிர்’ சுரேஷ் said...

இது உண்மை சம்பவமா?

Geetha Sambasivam said...

:(

Geetha Sambasivam said...

ரொம்ப வருத்தமா இருக்கு! :(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!