திங்கள், 7 செப்டம்பர், 2015

"திங்க"க்கிழமை 150907 :: கொழுக்கட்டை + 1/7



                          
வரலக்ஷ்மி விரதம், விநாயகர் சதுர்த்தி போன்ற கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறுவது கொழுக்கட்டை.

சற்றே கவனமாகச் செய்யா விட்டால் கொழகொழக்கட்டை!
எனக்கு மிகவும் பிடித்த பண்டம்.  அதனாலேயே அதிகமாகக் கிடைக்காதது!  அல்லது அதிகமாகக் கிடைக்காததால் பிடித்துப் போகிறது!

இது செய்வது பழகிய கைகளுக்கு மிகச் சுலபம்.  பழகாத கைகளுக்கு பெரும் சவால்.

இதன் கஷ்டமான பகுதி பதம் பார்த்து கிளறிய மாவை இறக்கி வைப்பது.  மிகக் கஷ்டமான பகுதி கப் செய்வது!

படிப்படியாக வருகிறேன்.

கொழக்கட்டை இரண்டு வகைப்படும்.  காரக் கொழுக்கட்டை, தித்திப்புக் கொழுக்கட்டை.  மூன்றாவதும் ஒன்று உண்டு அது அம்மிணிக் கொழுக்கட்டை.  அதற்குத் தனி ரசிகர் மன்றமே உண்டு.

காரக் கொழுக்கட்டைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றாலும் தித்திப்புக் கொழுக்கட்டை அதைவிட அதிகமாகப் பிடிக்கும்!  திருப்பித் திருப்பி இதையே சொல்லிக் கொண்டிராமல் செய்முறைக்குப் போகலாம்.

வழக்கமான டிஸ்கி :  இது யாருக்கும் தெரியாததல்ல...  ஒன்றிரண்டு தெரியாத பேர்களுக்காவது இது உதவுமானால்....  ஹிஹிஹி... அதேதாங்க!

பச்சரிசியை புடைத்து தூசி, கல் பொறுக்கி சுத்தம் செய்து எடுத்து, நீரில் அலசிக் கழுவி உலர வைத்துக் கொண்டு மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

இப்போதெல்லாம் கொ.க மாவு ரெடிமேடாகவே கிடைக்கிறது என்றாலும் அதை வாங்கி உபயோகித்ததில்லை!




ஒரு டம்ளர் அரிசி மாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர்.  தண்ணீரை பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்ற வைத்து சிம்மில் வைத்துக் கொண்டு, தண்ணீர் கொதிக்கும்போது அரிசி மாவைச் சிறிது சிறிதாகத் தூவி, கட்டி கட்டாமல் கிளறவும்.  ரொம்ப நேரம் அடுப்பில் வைத்திருக்கக் கூடாது.  கையில் ஒட்டாமல், அதே சமயம் நீருடன் மாவு கலந்து பதமாக வந்த உடனேயே இறக்கி வைத்து விடவும். 


மாவை நன்றாக உருட்டி, இரண்டு பாகமாக வைத்துக் கொள்ளவும்.  ஒன்று காரக் கொழுக்கட்டைக்கு, ஒன்று தித்திப்புக் கொழுக்கட்டைக்கு!  
(ஒன்றாகவேயும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை!  நாங்கள் கொழுக்கட்டைச் செய்ய ஆளுக்கு ஒன்று செய்வோம்.  ஒரு மாவு உருண்டையில் காய்ந்த மிளகாய் சொருகி வைப்போம்.  காரக் கொழுக்கட்டைக்கான பகுதி என்று அடையாளம் காண!)


அதைத் தட்டு கொண்டு மூடக் கூடாது.  நீராவி பட்டு மாவின் பதம் மாறலாம்.  எனவே ஒரு ஈரத்துணியால் சுற்றி வைக்கலாம்.

தித்திப்புப் பூரணத்துக்கு :  தேங்காய்த் துருவலை வாணலியில் இட்டுப் புரட்டி, கொஞ்சமாக வெல்லச் சீவலை அதில் போட்டுக் கிளறவும்.  (நிறைய வெல்லம் சேர்த்தால் நீர் விட்டுக் கொண்டு படுத்தும்.  கொ.க சரியாக வராது!) ஓரளவு இரண்டும் கலந்து வந்த உடன் வெல்லம் உருகி பாகாகும் முன்பு.இறக்கி விடலாம்.  அதில் ஏலக்காய் (தோல் நீக்கி விடவும்.  அது இருந்தால் கப்பை( !! )ச் சிதைக்கும்!) , ப.கற்பூரம் போட்டுக் கலந்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கார பூரணம் :  இதில் இரண்டு வகை உண்டு.  முதலில் எங்கள் வீடுகளில் செய்வதைச் சொல்கிறேன்.  ஒரு டம்ளர் உளுத்தம்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து எடுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டு,  அதை குக்கரில் இட்லி போல் இட்டு அவித்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் அதை உதிர்த்து வாணலியில் இட்டு, காய்ந்த மிளகாய், (பச்சை மிளகாய்ப் போட்டால் உடனே, அன்றே செலவு செய்ய வேண்டி வரும்.  காய்ந்த மிளகாய்ப் போட்டால் இரண்டு நாட்கள் கழித்தும் உபயோகிக்கலாம்) பெருங்காயம், உப்பு (உப்பு முதலிலேயே அரைக்கும் போது போட்டால் நீர் விட்டுக் கொள்ளும்.  எனவே இங்கு சேர்க்கலாம்) போட்டுக் கொண்டு கடுகுடன் தாளித்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது வகை :  உசிலிக்குச் செய்வது போல கடலைப் பருப்பையும் துவரம்பருப்பையும் சம அளவு எடுத்துக் கொண்டு, மிகச் சிறிதளவு உளுத்தம்பருப்புச் சேர்த்து ஊறவைத்து, அரைத்து, குக்கரில் இட்டு அவித்து எடுத்து, உதிர்த்து அதே போல காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.  தேங்காய்த் துருவல் சேர்த்தால் உடனே செலவு செய்யவேண்டிய நிலை வரும்.  அவ்வளவுதான்.

 
அடுத்து வரும் வேலைதான் கஷ்டமான வேலை.

கிளறி வைத்திருக்கும் பச்சரிசி மாவை நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொள்ளவும்.  முன்னதாகக் கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொள்வது உத்தமம்.  மாவு கைகளில் ஒட்டாது.  மாவை நன்றாக விரல்களுக்கிடையில் வைத்துப் பிசைந்து உருட்டி, இரண்டு உள்ளங்கைகளுக்குமிடையே வைத்துத் தட்டையாக்கிக் கொள்ளவும்.
மறுபடி விரல்களில் இலேசாக நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு அந்த (சிலர் லேசாகத் தண்ணீர் தொட்டுக் கொள்வார்கள்) தட்டையின் விளிம்புகளை சன்னமாக்கிக் கொண்டே வரவும்.  அப்படிச் செய்து வருகையிலேயே மாவுப் பகுதி வளைந்து கோப்பை போல உருப்பெற ஆரம்பிக்கும் - வர வைக்க வேண்டும்.  கோப்பைக் கிழியாமல் செய்ய வேண்டும். 

                              Image result for கொழுக்கட்டை images  Image result for கொழுக்கட்டை images

அழகிய கப் உருவானவுடன், அதில் பூரணத்தைக் கொஞ்சமாக (கை போடாமல் ஒரு ஸ்பூன் உபயோகிக்கவும்) நிரப்பி, தித்திப்புக் கொழுக்கட்டையாயின் முனைகளை ஒன்று சேர்த்து மடக்கிச் சேர்த்து உருண்டை வடிவத்திலேயே முனை கூம்பிய வடிவத்தில் வைக்கவும்.

காரக் கொழுக்கட்டையாயின் கப்பைக் கப்பல் அல்லது படகு போல ( ! ) மடக்கி, விளிம்புகளை எதிரெதிர்த் திசையில் சின்னச் சின்னதாய் மடக்கி வைக்கவும் - பதர்ப்பேணிகள் போல, அல்லது சூர்யகலா-சந்திரகலா ஸ்வீட் இருக்குமே அது போல!

                            Image result for கொழுக்கட்டை images  Image result for கொழுக்கட்டை images

இவைகளை தண்ணீர் அளவாக வைத்த குக்கரில், விசில் போடாமல், இட்லித் தட்டுகளில் வைத்து நான்கு நிமிடங்கள் வைத்து இறக்கவும்.



சாப்பிடலாம்.

குக்கரில் அதிக நேரம் வைத்தால் இறக்கியவுடன் கொழுக்கட்டைகள் வாயைப் பிளந்து விடும்.  அது சரியாக வரவேண்டும்.

பூரணம் அதிகமாக வைத்தாலும் இதே கதி வரும்.  பூரணம் கம்மியாக வைத்தால் வெறும் மாவு மட்டும் வாயில் கிடைத்து வெறுப்பேற்றும்.  அளவு சரியாய் வைக்கப் பழக வேண்டும்.  தித்திப்புப் பூரணத்தின் தேங்காய்த் துருவலில் நார் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  கப்பை உடைக்கும் அல்லது கிழிக்கும்!

கப் கெட்டியாக நாலு செங்கல் வைத்துக் கட்டிய சுவர் போல இருக்கக் கூடாது.  ஸன்னமாக வேண்டும், அதே சமயம் உறுதியாகவும் இருக்க வேண்டும். 

பூரணங்கள் தீர்ந்து மாவு மட்டும் பாக்கியிருக்கும் பாருங்க... அங்கே ஆரம்பிக்கும் அம்மிணிக் கொழுக்கட்டைகளின் ராஜ்ஜியம்!

                                 Image result for கொழுக்கட்டை images       Image result for கொழுக்கட்டை images

மொத்த மாவிலும் உப்பு, கொத்து மல்லி, பெருங்காயம், பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்து இஷ்டப்பட்ட வடிவில் உருட்டி குக்கரில் வைத்து எடுத்து....





சாப்பிடலாம்!     








படங்கள் :  நன்றியுடன் இணையத்திலிருந்து....
 




===================================================================

"கேட்டது கேட்டபடி" . ஏழுநாள் தொடர். 01.
   

"தங்கையிடமா? நான் சொல்கிறேன்.  ஆமாம்  அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.   ...................  நோ நோ நான் இந்த ஊருல உன் பிரெண்டுன்னு இருக்கும்போது,  நீ வேற எங்கேயும் தங்க வேண்டாம்.   நீ திரும்பி ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள நான் வந்துவிடுவேன்.   சின்ன ட்ரிப்தான். ..............  ஆமாம்.   இங்கேயா?   ஜானகி, வீட்டு வேலைக்காரங்க, வாட்ச்மான் எல்லோரும் இருக்காங்க  . .................   சேச்சே அப்படி எல்லாம் எதுவும் இல்லை; இருக்காது.   ஜானகி அந்த டைப் இல்லை." . 

போனை வைத்த மாதவன், "ஜானகீ !" என்று உரத்த குரலில் கூப்பிட்டான். 

"என்ன அண்ணா? நான் இங்கேதான் இருக்கேன்! " 



(தொடரும்) 
               

27 கருத்துகள்:

  1. விளக்கம் அருமை...

    கிழியாமல் மாவு ஒட்டி விட்டாலே போதும்...!

    பதிலளிநீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப்புத் தப்பாச் சொல்லிக் கொடுத்திருக்கீங்க? உங்களை என்ன செய்யலாம்? முதல் தப்பு மாவை மிஷினில் திரிப்பது/அரைப்பது. இரண்டாம் தப்பு மாவு கிளறும்போது! மூன்றாம் தப்பு மாவை அதிக நேரம் கிளறக் கூடாதுனு சொன்னது! நான்காம் தப்பு மாவை ரெண்டாப் பிரிச்சுக்கணும்னு சொன்னது. ஐந்தாம் தப்பு உபருப்பு அரைக்கையிலேயே மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும்னு சொல்லாதது. ஆறாம் தப்பு தேங்காய்த் துருவல் சேர்த்தால் கெட்டுப் போகும்னு சொன்னது. ஏழாம் தப்பு சொப்புப் பண்ணுவதைக் கஷ்டமான வேலைனு சொன்னது. சொப்புப் பண்ணும்போது மாவை நன்கு பிசையாமல் ஆரம்பித்தது எட்டாம் தப்பு. ஒன்பதாம் தப்பு பூரணம் நிறைய வைக்கக் கூடாதுனு சொன்னது. பத்தாம் தப்பு கொழுக்கட்டையைக் குக்கரில் வேக வைக்கச் சொன்னது.

    பதிலளிநீக்கு
  3. இத்தனை தப்புப் பண்ணிட்டுக் கொழுக்கட்டை செய்யறதைக் கஷ்டமான வேலைனு சொன்னது எல்லாவற்றையும் விட மாபெரும் தப்பு! இருங்க, வைச்சுக்கிறேன் உங்களை! மத்தியானமாப் பார்த்துக்கிறேன். ஏற்கெனவே கொழுக்கட்டை செய்யறதைப் பத்திச் சொல்லி (அதுவும் ரெண்டு ரெண்டு தரம்) எழுதியும் இருக்கேன்! இத்தனை தப்பா பண்ணறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  4. படிப்படியான குறிப்புகள். அருமை.

    புதிய தொடர். தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. படிப்படியான குறிப்புகள் அருமை! நேற்று தான் பக்கத்து வீட்டிலிருந்து இனிப்பு கொழுக்கட்டைகள் கொடுத்தனுப்பினார்கள்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,
    இது செய்வது பழகிய கைகளுக்கு மிகச் சுலபம். பழகாத கைகளுக்கு பெரும் சவால்.
    உண்மைதான் நமக்கு இது ரொம்ப தூரம்,,,,,,,,
    ஆனா ரொம்ப பிடிக்கும்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. விநாயகர் சதுர்த்தி வரும் பின்னே.கொழுக்கட்டை வரும் முன்னே. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா!.. அத்தனை சுவைக் கொளுக்கட்டைகள்!

    நானும் இதே மெதேட்டில் தான் செய்வதுண்டு சகோதரரே!

    தொடரரைத் தொடர்கிறேன்!

    நன்றியோடு வாழ்த்துக்களும்!

    த ம+!

    பதிலளிநீக்கு
  9. இன்று காலை ப்ரேக்ஃபாஸ்ட் வெறும் அரிசிக் கொழுக்கட்டைதான் கீதா மேடத்திடம் இருந்து இம்மாதிரிப் பின்னூட்டம் எதிர்பார்த்தேன் அதென்ன பிள்ளையார் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை.?

    பதிலளிநீக்கு
  10. கொழுக்கட்டை பதிவு அவசியம்தான். என்னிது கூட இருக்கு அதிலே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. கொழுக்கட்டையை கண்டதும் பசிக்குது

    பதிலளிநீக்கு
  12. மூன்றாவது கொழுக்கட்டையை எப்படி பிடிப்பது ..தப்பு தப்பு .செய்வது ?

    பதிலளிநீக்கு
  13. கொழுக்கட்டை நல்லாவே பிடிச்சுருக்கீங்க!!!

    ஓ மீண்டும் ஏழு நாள் தொடரா?!!!!!! சரி இந்த வாட்டி நல்ல முடிவை எதிர்ப்பாத்துத் தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  14. போனா போகுது சகோ கீதா சாம்பசிவம்.....ஏதோ ஆம்பிள்ளைகள் இவ்வளவு அழகா சொல்லிப் போட்டுருக்காங்கனு (ஸ்ரீராம் தான்னு நினைக்கிறோம்...) விட்டுட்டுப் போவீங்களா ...இப்படி நக்கீரர் மாதிரி 10 தப்பு எல்லாம் கண்டு பிடிச்சுட்டு...சேச்சே எங்களுக்கு 6 தப்புதான் தெரிஞ்சுச்சு....ஹஹஹ் அவங்க ஒண்ணும் கடைல வாங்கல..வீட்டுல செஞ்சதுதான் சொல்லிருக்கார்..வேணும்னா போய் சாப்டுப் பார்த்துட்டு அப்புறம் நக்கீரர் வாதம் ஆரம்பிக்கலாம்...

    என்ன நான் சொல்றது சரிதானே ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கொழுக்கட்டை வாசம் மூக்கை துளைக்குது))) தொடர் திக்திக்.....

    பதிலளிநீக்கு
  16. கொழுக்கட்டை படம் சூப்பர். இதைச் செய்து வைக்கவும். நான் வந்து சாப்பிடுகிறேன்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. எல்லாம் நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. ஏன் பிளந்துகொள்கிறது என்று தெரியாமல் இருந்தேன். நீங்க, உங்களுடைய கொழுக்கட்டை படம் போடாமல் நெட்டில் சுட்டுப் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்த மாதிரி வரவில்லையா?

    கொழுக்கட்டையில் எங்கே வாசம்லாம் வரும்? 'தனிமரம்'னு சொல்லும்போதே சந்தேகம்.

    எனக்கு ஒரு சந்தேகம்... மார்கழில பொங்கல் செய்யணும், நவராத்திரிக்கு சுண்டல் செய்யணும், சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்யணும், ஜன்மாஷ்டமிக்கு சீடை போன்றவை செய்யணும்னு (இதேபோல் நிறைய) யார் ஆரம்பித்தது? இதன் தாத்பர்யம் என்ன? இந்தக் காலத்துல எல்லாம் எப்போயும் சாப்பிடுறோம்.

    பதிலளிநீக்கு
  18. கொழுக்கட்டைப் படங்களுடன் செய்முறை மற்றும் கொழுக்கட்டைப் பிரியர்களுக்கான சிறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  19. கொழுக்கட்டை பற்றிய என்னுடைய விமரிசனம் ஶ்ரீராமின் ஒப்புதலோடு எழுதப்பட்டது! :)

    பதிலளிநீக்கு
  20. //குக்கரில் அதிக நேரம் வைத்தால் இறக்கியவுடன் கொழுக்கட்டைகள் வாயைப் பிளந்து விடும். அது சரியாக வரவேண்டும்.//

    குக்கரிலேயே வைக்கக் கூடாது. அலுமினியம் சட்டி எல்லோர் வீட்டிலும் இருக்கும். அதிலே ஒரு ஒற்றைத் தட்டைப் போட்டு இலையில் எண்ணெய் தடவிப் போட்டுக் கொழுக்கட்டைகளை வேக வைக்கலாம். ஏனெனில் உடனே வெந்துவிடும். அதோடு சொப்பில் பூரணத்தைப் பூரணமாக வைத்து மூட வேண்டும். உள்ளே காற்றுப் புகுந்து வெற்றிடம் இருக்கக் கூடாது. பூரணத்தை வைத்து இறுக்கமாக மூடினால் ராத்திரி வரை கொழுக்கட்டை வாயைப் பிளக்காது. அதோடு மாவை மிஷினிலோ அல்லது மிக்சியிலோ திரிப்பதற்குப் பதிலாக நீர் விட்டு நன்றாகப் பெயின்ட் மாதிரி அரைத்துக் கொண்டு கிளறும்போது ஒரு கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சின்ன முட்டை நல்லெண்ணெய் விட்டு மாவை விட்டுக் கிளறினால் கட்டியே தட்டாமல் வரும். மாவைக் கொஞ்சம், கொஞ்சமாகத் தூவிக் கொள்ள இன்னொருத்தரை அழைக்க வேண்டாம். நாமே ஒரு கையால் மாவை மொத்தமும் விட்டுக் கொண்டு அதன் பின்னர் கூடக் கிளறலாம். மாவு நிறம் மாற வேண்டும். அதாவது வேக வேண்டும். வேகாமல் எடுத்தால் சொப்புப் பண்ணி வேக வைக்கையில் கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. அரைத்த மாவு நீர்க்கக் கரைத்தாற்போல் இருக்கலாம். பயப்படாமல் மேலும் ஒரு கிண்ணம் நீரை விட்டுக் கிளறலாம். மாவு கெட்டிப்பட்டு விடும்.

    பதிலளிநீக்கு
  22. கொழுக்கட்டை செய்முறை அருமை. இடை இடையே குறிப்புகள் அற்புதம்.
    கடைசியில் மீதி மாவுக்கு சொன்ன குறிப்பில் நாங்கள் தேங்காய் காய்ந்தமிளகாய் உப்பு, பெருங்காயம் வைத்து கொஞ்சம் பிறு பிறு என்று அரைத்துக் கொண்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சாப்பிடுவோம், அருமையாக இருக்கும்.. (முக்கிய குறிப்பு வழு வழு என்று உருட்டகூடாது கொழுக்கட்டையை சிறு சிறு உருண்டைகளாய் கிள்ளி கிள்ளி போட்டது போல் செய்தால் மெதுவாய் இருக்கும். )

    பதிலளிநீக்கு
  23. கதையை தொடர்கிறேன், உரையாடல் அருமை.

    பதிலளிநீக்கு
  24. அப்படியே கொ.க தயார் செய்து ரெண்டு டஜன் அனுப்பினீங்கன்னா பிள்ளையாரை பார்க்குறப்ப உங்களுக்கு டபுள் ஸ்ட்ராங்க் அருள் பாலிக்கச் சொல்றேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!