திங்கள், 2 நவம்பர், 2015

திங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை



நான் இதை முதலில் சாப்பிட்டது மதுரை கோபு ஐயங்கார் கடையில்தான்.  சாதா, மற்றும் ஸ்பெஷல் தோசையை விட காசு அதிகம்!

ஏனென்றால் இதற்கு மாவு கொஞ்சம் வீண் ஆகும்.

தோசையை மிக மிக மிக மெலிதாக அவர் சுருட்டிக் கொண்டுவந்து தட்டில் போடும் அழகே தனி.  அவர் அந்தப் பொன்னிற சுருட்டலை - தோசையைத் தட்டில் போடு முன்பே கை பரபரக்கும்!


கடை சின்ன கடைதான்.  கை கழுவும் இடத்திலிருந்து பார்த்தால் சமையலறை தெரியும். 

ஒரு குட்டி டபராவில் தோசை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றி, டபராவின் அடி பாகத்தால் பரத்தி விடுவார்.  கைத் திறமை.   பரபரவென வட்டமாக மெலிதாக உருவாகும் அந்தத் தோசை.  

எவ்வளவுக்கெவ்வளவு மெலிதாக தோசையை வார்க்கிறோமோ,  அந்த அளவு மாவு வீணாவது குறையும்!

தோசை வேகத் தொடங்கு முன்பே ஒரு ஸ்பூன், அல்லது கரண்டி, அல்லது தோசை திருப்பியை நெட்டுக் குத்தாக வைத்தோ, தோசை மேலே உள்ள மாவை மேலாக சுரண்டி எடுக்க வேண்டும்.  நடுவில் ஓட்டை எதுவும் விழாமல் மாவை எடுப்பார்கள்.

மாவை ஊற்றியவுடன் கல்லில் ஒட்டிக் கொண்டது பாருங்கள், அந்த லேயர் மட்டும்தான் கல்லில் இருக்கும்.  பொன்னிறம் வந்தவுடன் தோசையின் நாலு ஓரமும் மெல்ல எடுத்து விட்டு, அதை அப்படியே சுருட்டி எடுத்துத் தட்டில் போட வேண்டியதுதான்.

 

                                                                           Image result for சீவல் தோசை images


மெலிதான  தோசை என்பதால் நிறைய சாப்பிடுவது வயிறு ரொம்பாது.  ஆனால் பர்ஸ் காலியாகும்.



இதற்கு சட்னி, சாம்பார் எல்லாம் வைப்பார்கள்தான்.  ஆனால் அதை எல்லாம் தொட்டுக் கொண்டால் சீவல் தோசையின் ஸ்பெஷாலிட்டி போய்விடும் என்று எனக்குத் தோன்றும்.

வேறு எந்த ஹோட்டலிலும் இந்தச் சீவல் தோசை போடுவது போலத் தெரியவில்லை.



                                                                             Image result for paper roast images


சில ஹோட்டல்களில் "பேப்பர் ரோஸ்ட் சொல்றீங்களா...?  இதோ கொண்டு வரேன்"  என்று சென்று, நான் சொல்லும் தோசையை விட கனமாக ஒரு ரோஸ்ட் கொண்டு வருவார்.  சமயங்களில் நடுவில் கருப்பாய் தீய்ந்து கூட இருக்கும்!  

"இது இல்லீங்க... அது வேற..." என்று சோகத்துடன் கிளம்புவேன்..  அப்புறம் கேட்பதே இல்லை.  ஓரிரு முறை வீட்டில் செய்திருக்கிறேன். பாஸ் திட்டுவார்.  

"பாதி மாவ வழிச்சு கீழ போட்டா, நான் எதுக்கு மாவரைக்கணும்?"


 வழித்து எடுத்த மாவை ஏதாவது உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.  வேண்டுமானால் பச்சை மிளகாய், கரி, கொத்துமல்லி போட்டு 'குணுக்கு' போலப் போடலாம்.

23 கருத்துகள்:

  1. தேவகோட்டையில் நாராயணவிலாஸ் ஹோட்டலில் சாப்பிட்ட பழைய நினைவு வந்து விட்டது நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. தோசை ஊற்றும் விதத்தை தாங்கள் வர்னிப்பதே அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. கரூர் மாரியம்மன் கோவில் மார்க்கெட் அருகே ஒரு ராயர் கடையில் ரவா தோசை இப்படித்தான் சீவல் மாதிரி என்னமோ கஞ்சியில் வார்த்தமாதிரி ! கடலைமாவில் செய்த கொத்சு அல்லது கொஜ்ஜு என்றபெயரில் சைட் டிஷ் சாம்பார் மாதிரி! 1980களின் நினைவு

    பதிலளிநீக்கு
  4. என் பசங்களுக்கு பிடித்தது சீவல் தோசை மட்டும் தான் !வார்த்து தருவதற்குள் தாவு (மாவு இல்லே )தீர்ந்து விடும் :)

    பதிலளிநீக்கு
  5. ஆஹா !! நாவூறுது படிக்கும்போதே !!
    ஒரு மங்களூர் வெள்ளரி தோசை ரெசிப்பியில் பார்த்தது ..கரண்டியால் மாவை கல்லின் ஒரு மூலையில் ஊற்றினதும் உடனே பழைய க்ரெடிட் கார்ட் :) ஷாக்காக வேண்டாம் சமையல் செய்றவர் அதை வைத்து தேய்த்தார் ..தட்டையா வந்தது ..எனக்கு அப்படி செய்ய இஷ்டமில்ல நான் ஒரு சின்ன சைஸ் scraper அடிப்புறம் வச்சி தேச்சி செஞ்சி பார்த்தேன் .மாவு வேஸ்டாகாது .வாழை இலை கிடைச்சா அதை மடிச்சும் தேய்க்கலாம்

    https://www.youtube.com/watch?v=4W3ajaLnt9I&feature=player_embedded

    பதிலளிநீக்கு
  6. நம்ம வீட்ல சும்மா மொறுமொறுன்னு பேப்பர் கணக்கா செஞ்சு கொடுப்பதில் கில்லடி...
    இந்த முறை ஊருக்கு வந்து மதுரை வரும்போது சாப்பிடணும் (எங்க அதான் மாமா கடைசியில இருந்து பிரியாணி வீட்டுக்கே வந்திருதே...) இருந்தாலும் சீவல் தோசையை ஒரு கை பார்க்கணும்...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    நல்ல உணவு.. சொல்லிய விதம் சிறப்பு... ஐயா. த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே.

    தோசை வார்ப்பதே ஒரு கலை. அதையும் தாங்கள் விவரித்திருக்கும் முறை மிக அழகு. இந்த முறையில் தோசை தயார் பண்ணி சாப்பிடும் ஆவலை அதிகரிக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் செய்து பார்க்கிறேன். அவ்வாறு சீராக்கியப்பின் எடுத்த மாவையெல்லாம் நீங்கள் சொல்லியபடி குணுக்கு போட்டு சாப்பிடவாம் இல்லை, புளி உப்புமா மாதிரி உதிர்த்து சாப்பிடலாம். இல்லையெனில், அந்த மாவை மறுபடி தோசை பதத்திற்கே கரைத்து கடுகு தாளித்து மோர் மிளகாய் வறுத்துடைத்து சேர்த்து கறிவேப்பில்லைபும் கிள்ளிப்போட்டு களி கிண்டி தோசை மாதிரி வார்த்து சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. சீவல் தோசை கிட்டத்தட்ட ரோஸ்ட் போலதான்மொறு மொறுவென்று....நல்லா இழுத்து மெலிசா தேய்த்தால் வேஸ்ட் ஆகாது...இங்கு கண்ணாடி போல் சீ த்ரூ போல செய்வதுண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஐ.. தோசை.. உலகில் எனக்கு பிடித்த மூன்று ஐட்டங்களில் மூன்றாமவது இது..!

    பதிலளிநீக்கு
  11. சீவல் தோசை இது வரை செய்ததில்லை. நாளை செய்து பார்த்து விடவேண்டும் என்றிருக்கிறேன். செய்முறை விளக்கம் உங்கள் பதிவில் அறிந்து கொண்டேன்.
    பின்னுட்டங்களில் கிடைத்த செய்முறை விளக்கங்கள் இன்னும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. சீவல் தோசை கேள்விப்பட்டது இல்லை! உங்கள் வர்ணிப்பை படிக்கையில் திங்க ஆசை எழுகிறது!

    பதிலளிநீக்கு
  13. சீவல் தோசை படமும் பதிவும் செய்து பார்த்திடவேண்டுமென
    ஆவலைத் தூண்டுகிறதே! முயன்று பார்க்கின்றேன்!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  14. சீவல் தோசை பற்றி மிகவும் சுவாரஸ்யமாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. சீவல் தோசை...... ஆஹா கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே.....

    பதிலளிநீக்கு
  16. ஆரப்ப காலத்தில் எங்கள் வீட்டில் செட்டிநாட்டு சமையல் காரர் இருந்தார் அவர் இம் முறையில்தான் தோசை சுடுவார்

    பதிலளிநீக்கு
  17. என்ன பெரிய சீவல் தோசை! நாங்க எப்போவும் தோசை வார்க்கிறதே அப்படித் தான் இருக்கும். மெலிதாக ஒரே சுருட்டில் வாய்க்குள்ளே போறாப்போல! இப்போத் தான் கொஞ்சம் மாத்தி இருக்கோமாக்கும்! :)

    பதிலளிநீக்கு
  18. சீவல் தோசை அருமை, செய்முறை சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!