சனி, 31 அக்டோபர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) 2005ல், மாற்றுத்திறன் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதை, அப்துல் கலாம் வழங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே, அவர் கையால் பத்மஸ்ரீ விருது வாங்கினேன். இருளை மட்டுமே அறிந்திருந்த என் மீது விழுந்தது தேசிய வெளிச்சம்.  காயத்ரி சங்கரன்
 



2) 'புட் பேங்க் ' எனும் குழு.
 



3) யதார்த்தமாய் ஒரு சேவை.  78 வயது பிச்சைமணி
 


4)  திறமையுடன் சேர்ந்து விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.  பானுமதி.
 



5)  ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அழிந்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முயற்சி பாராட்டுக்குரிய தாகும்.
 


 


7)  அஜித் பாபுவைப் படியுங்கள்.  தன்னம்பிக்கை மனிதர்.
 


8)  எந்தத் தொழிலாய் இருந்தால் என்ன?  மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும்.  சிரத்தையாய்ச் செய்ய வேண்டும்.  வெற்றி நிச்சயம்.  நிரூபிக்கும் பொறியியல் பட்டதாரி சிவப்ப்ரகாஷ்.
 


9)  'சின்ன விஷயம்... எனக்கென்ன?' என்றிருக்காமல் இதற்காக ரயிலை நிறுத்தினாரே...  தாராளமாக இந்தச் செய்தியை பாஸிட்டிவ் மனிதர்களில் சேர்க்கலாம் இல்லையா?



வெள்ளி, 30 அக்டோபர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151030 :: பேச்சு பொளந்து கட்டு!

                         
இந்தச் சிறுமியின் கருத்துகள் அவசியம் கேட்கப்படவேண்டியது. சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

    
Problems at grass root level. 


புதன், 28 அக்டோபர், 2015

நாய் கற்பித்த பாடம் - பிலோ இருதயநாத்.



முன் குறிப்பு : சிறு வயதில் பிலோ இருதயநாத் எழுதிய மிகச் சுவாரஸ்யமான ஆக்கங்களைப் படித்திருக்கிறேன்.  காடுகளில் சுற்றுப் பயணம் செய்து மிக அருமையான படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.  பின்னர் அவர் எழுதிய புத்தகங்கள் விற்பனையில் கிடைக்கிறதா என்றும் தேடிப் பார்த்திருக்கிறேன்.  எங்குமே கிடைக்கவில்லை.  தோல்விதான்.
பிலோ இருதயநாத் யார் என்பதைச் சொல்ல எழுத்தாளர் எஸ்ரா எழுதி இருக்கும் வரிகளைத் துணைக்கழைக்கிறேன்.  'துணையெழுத்து'க் காரராச்சே...

"பிலோ இருதயநாத், தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் பற்றி சுவாரஸ்யமான சில தகவல்களை எழுதியிருக்கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து எழுதியவர் பிலோ இருதயநாத்.



ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கருப்புக் கண் ணாடி, பாக்ஸ் டைப் கேமரா அணிந்த பிலோ இருதய நாத்தின் தோற்றம் தனித்துவமானது. தொடக்கப்பள்ளி ஆசிரியரான இருதயநாத், தனது விருப்பத்தின் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு."
 

இந்த வகையில் பிலோ இருதயநாத் எழுதி, மஞ்சரியில் 1965 இல் வெளியாகி இருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.




ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?



அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன்.  மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன்.  தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன்.  அவர் சிறந்த வேட்டைக்கார்.  அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு.  வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.


"இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.


ரூப் சிங் சொல்லலானார்.


"அது ஒரு பெரிய கதை.  இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன.  அவர் ஒரு செல்வர்.  இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார்.  அவர் நல்ல வேட்டைக் காரர்.  அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை.  நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.  இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும்.   இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார்.  பிறகே உறங்கச் செல்வார்.  செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.


"மறுநாள் காலையில் செல்வரோ, அவருடைய மனைவியோ விழித்து எழுந்து வந்து மறுபடியும் நாயைத் தடவிக் கொடுத்த பின்பே வேலைக்காரர்கள் உள்ளே வருவார்கள்.  வரவும் முடியும்.  இரவில் எந்தத் திருடனும், எந்தக் கொடிய மிருகமும் உள்ளே வர முடியாது.  அப்படி வந்தால், முன்னூறு நாய்களும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்க்குமாம்.  மனிதனையோ, கொடிய மிருகத்தையோ அவற்றுள் பெரும்பாலான நாய்கள் துரத்திக் கொண்டு போகுமாம்.  மற்ற நாய்களோ வீட்டில் காவல் காக்குமாம்.  அப்படிக் காக்க நிரந்தரமாக உள்ள நாய்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும்  அந்த இடத்தை விட்டு அகல்வதில்லையாம்.  இப்படிப்பட்ட முன்னூறு நாய்களை நீங்கள் எங்கும் கண்டிருக்க மாட்டீர்கள்..


மேலும், அந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியுடன் காட்டுக்கு வேட்டையாடத் தங்கள் இரண்டு வயதுக் குழந்தையையும் எடுத்துச் செல்வார்கள்.  காட்டில் எங்கேயாவது ஒரு மரக்கிளையில் ஏணை கட்டிக் குழந்தையை அதில் தூங்க விடுவார்கள்.  பிறகு திசைக்கு இரண்டு நாய்கள் வீதம் நான்கு திசைகளிலும் எட்டு நாய்களைக் குழந்தைக்குக் காவல் வைத்து விட்டு மற்ற நாய்களுடன் அவர்கள் இருவரும் வேட்டைக்குப் போவார்கள்.  குழந்தையின் பெற்றோர்க்கள் வருவதற்கு முன் குழந்தை எழுந்து அழுதால், உடனே ஏணையின் தனிக் கயிற்றைப் பிடித்து இப்படியும் அப்படியும் இழுத்து ஆட்டி விடுமாம் அவற்றில் ஒரு நாய்.


"வேட்டையாடிக் கொண்டு வந்த பிராணியின் மாமிசத்தில் பாதிக்கு மேல் தங்கள் நாய்களுக்கு அவர்கள் போடுவார்கள்.  அந்தச் செல்வரிடமிருந்து கிடைத்த நாய்தான் இது.  ஆனால் இந்த நாயை நான் வேட்டைக்கு மற்றொரு விதமாகப் பழக்கி வைத்திருக்கிறேன்."


நான் அவரது இல்லத்தில் இருந்தபோது ரூப் சிங்குக்கு மிக நெருங்கிய நண்பரான ஜயசீலன் என்பவர்,  தாம் புலி வேட்டைக்குப் போவதாகவும், ஆகவே புலி வேட்டையில் மிகவும் தந்திரமான ரூப்சிங்கின் நாயை ஒரு நாளைக்கு இரவல் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.


புலி வேட்டைக்கு ஜயசீலன் போவதைக் கேள்விப்பட்டவுடன், "நானும் உங்களுடன் வருகிறேன்" என்று ஜயசீலனிடம் கூறினேன்.


ஆனால் ரூப் சிங், "இப்போது வேண்டாம்.  நான் போகும்போது வாருங்கள்.  புலியை வேட்டையாடுவோருள், புலியின் குணத்தை முழுவதும் தெரிந்து கொண்டவர்கள் எவரும் இல்லை.  எது எப்படி இருக்குமோ, யாருக்குத் தெரியும்?  நீலகிரிப் பகுதியில் ஆட்கொல்லிப் புலி இல்லை என்று ஷிகாரிகள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் மைசூரிலிருந்து அத்தகைய புலி ஒன்று ஒரே இரவில் நூறு மைல் பிரயாணம் செய்து நீலகிரிக்கும் வருவதுண்டு" என்று கூறினார்.


நான் "அப்படியானால் சரி ; நான் இப்போது ஜயசீலனுடன் போகவில்லை" என்று ஒப்புக் கொண்டேன்.


"நீங்கள் என் நாயைக் கொண்டு போவதில் எனக்கொன்றும் தடையில்லை.  ஆனால் நான் சொல்வதைப்போல் மட்டும் தயை செய்து மறக்காமல் செய்ய வேண்டும்.  இல்லா விட்டால் வீணாக நாய் இறந்து விடும்.  காட்டினுள் நாயைக் கட்டி அழைத்துச் செல்லும்போது,  நாய் முன்னால் போய்க்கொண்டே இருக்கும்.  இடையில் புலியையோ, கரடியையோ மற்ற மிருகங்களையோ மோப்பம் பிடித்ததும், நாய் உங்களைச் சுற்றி வரும்.  அப்படி இது செய்தால், உடனே இந்த நாயை அவிழ்த்து விட்டு விடுங்கள்.  அவிழ்த்து விட்டதும் நாய் உங்களுக்கு முன்னால் சுமார் இருபது அல்லது முப்பது அடி தூரத்தில் போய்க்கொண்டே இருக்கும்.  மோப்பம் பிடித்த பிராணியைக் கண்டதும் நாய் கீழே உட்கார்ந்து மெதுவாக நகர்ந்து போக ஆரம்பிக்கும்.  நீங்களும் அதன் பின்னால் நடந்து போக வேண்டும்.  எதிரியின் அருகில் ஓரளவுக்கு நாய் போனதும், மேலே போகாமல் நின்று விடும்.  அப்போது நீங்கள் உடனே உங்கள் துப்பாக்கியால் ஆகாயத்தைப் பார்த்துச் சுட வேண்டும். அந்த வெடிச் சத்தம் கேட்டுப் புலி ஒரு வினாடி திரும்பும்.  அந்த கணத்திலே நாய் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து புலியின் தொண்டையைப் பிடித்துக் கொள்ளும்.  நாயை என்னதான் புலி உதறினாலும் நாய் தன் பிடியை விடாது.  கடைசியில் புலிக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கும்.  அப்போது புலியை நீங்கள் சுட வேண்டும்.  அந்த நிலையில் புலி உடனே சுருண்டு கீழே விழுந்து விடும்.  நீங்கள் சுட்ட பிறகுதான் நாய் தன் பிடியை விடும்.  அதுவரையில் புலியின் கழுத்தை நாய் விடாது.  தயை செய்து இவற்றை எல்லாம் ஒழ்ங்காகச் செய்ய வேண்டும்" என்று ஜயசீலனிடம் ரூப் சிங் கூறினார்.


ஜயசீலனும் "சரி" என்று கூறி ரூப் சிங்கின் நாயைத் தம்முடன் அழைத்துக் கொண்டு போனார்.  அன்று மாலையில் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும். 


"காலையில் போனவர் இன்னும் வரவில்லையே" என்ற கவலையுடன் நானும் ரூப் சிங்கும் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.  சிறிது தூரத்தில் ஜயசீலன் மூச்சு வாங்க ஓடி வருவது தெரிந்தது.  ஆனால் நாயைக் காணவில்லை.


"மிஸ்டர் ரூப் சிங்!  நீங்கள் சொன்னதைப் போலெல்லாம் நாய் செய்தது.  ஆனால் பெரிய புலியின் எதிரில் நாயின் தோற்றத்தையும், பார்வையையும், புலியின் பார்வையையும் கண்ட எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு விட்டது.  ஒரு நிமிஷங்கூட நான் அங்கு இல்லை.  உடனே ஒரே ஓட்டமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டேன்" என்று சொல்லி முடிப்பதற்கு முன், ரூப் சிங்கின் கண்கள் சிவந்தன.


அவர் மனம் பதறியவராய், ஜயசீலன் சுட்டிக் காட்டிய திசையிலே தம் துப்பாக்கியுடன் பறந்தார்.


ரூப் சிங்கின் வேகத்தையும், கோபத்தையும் கண்ட நான், வீட்டிலேயே தங்கி விட்டேன். 


சில மணி நேரத்துக்குப்பின் ஜயசீலன் தம் துடையில் ஏதோ காயக் கட்டுடன் வருவதைக் கண்டேன்.  நாயின் உடல் முழுவதும் காயங்கள்; குருதி!  திகைத்து நின்றேன்.


ரூப் சிங் சொன்னார் :


"நான் ஓடி இரா விட்டால் நாயை இழந்திருப்பேன்.  நாய் நான் வருவதை மோப்பத்தின் மூலம் தெரிந்து கொண்டு, தன் வாலை மட்டும் லேசாக ஆட்டியது.  ஆனால் தன் தலையை ஒரே பார்வையில் வைத்திருந்தது.  அது வாலை ஆட்டும் காட்சியைக் கண்டதும் எனக்குக் கண்கள் கலங்கின.  சட்டென்று துப்பாக்கியால் ஆகாயத்தில் சுட்டேன்.  புலி அதைக் கேட்டு ஒரு வினாடி திரும்பியது.  அடுத்த வினாடி புலியின் கழுத்தை என் நாய் பிடித்திருப்பதைக் கண்டேன்.  புலி என்ன என்னவோ செய்தது.  நாயின் உடலில் தன் நகங்களால் பீறிப் பல காயங்களை உண்டாக்கியது.  சுமார் பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் புலியின் வேகம் குறைந்தது.  சமயம் கிடைத்ததும் புலியின் நெற்றியைப் பார்த்துச் சுட்டேன்.  புலி தரையில் சாய்ந்தது.


"அடுத்த நிமிஷம் நண்பர் ஜயசீலனின் அலறல் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.  என் நாய் என்ன செய்தது தெரியுமா?  ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஜயசீலனின் துடையைக் கவ்விக் கடித்து விட்டது.  நான் மட்டும் நாய்க்குக் குரல் கொடுக்கா விட்டால், அவரைத் தீர்த்தே இருக்கும்.


" 'ஆபத்தில் உதவாத நண்பன் பகைவனே' என்று நாய் பாடம் கற்பித்திருக்க வேண்டும்."

செவ்வாய், 27 அக்டோபர், 2015

"கற்பழிச்சா எனக்குப் பிடிக்காதே ராகவன்....."


தான் எழுதிக் கொண்டிருந்த தொடர் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்காக உட்கார்ந்திருந்தான் ராகவன்.  எதிரில் ஒரு ஷீட் பேப்பர் கொஞ்சம் எழுதப்பட்ட எழுத்துகளுடன் படபடத்துக் கொண்டிருந்தது.
 
வர்ணனை சரியாக வரவில்லை.  இவன் எழுத்துகள் எப்போதும் வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் கிளப்பும்.  விபரீத எழுத்தாளன்.  சர்ச்சைகளுக்குப் பேர் போனவன்!  
 
 
இப்போது அவன் கதையின் நாயகி கற்பழிக்கப்படப் போகிறாள்.  அதை எழுத வேண்டும்.
 
எதிரில் இருந்த ஆப்பிளை எடுத்துக் கத்தியால் தோல் சீவினான்.  கூர்மையான கத்தி விரலைப் பதம் பார்க்க 'ஸ்ஸ்..' என்று கையை உதறி எழுந்து வாஷ் பேசினுக்குச் சென்றான்.
 
விரலை வாய்க்குள் வைத்துச் சப்பிக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது டேபிளின் அருகே யாரோ இருந்தது போலிருந்தது. 
 
'ச்சே' என்று தலையை உதறிக் கொண்டவன்,  ஃப்ரிட்ஜிலிருந்து பாட்டிலை எடுத்து உதட்டுக்குள் சொருகிக் கொண்டான்.  திரும்பும்போது மறுபடியும் டேபிளின் அருகே நிழலாடியது.
 
அருகில் வந்தான்.  பேப்பர் படபடத்து அடங்கியது.
 
பேப்பரில் பேனாவை வைத்தான்.
 
"... கஸ்தூரி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினாள்."  என்று எழுதியவன் கொஞ்சம் யோசித்து "இலேசான ஒப்பனை செய்து கொண்ட பின்"  என்று முன்னால் சேர்த்தான். 
 
அவள் புடைவை அணிந்திருக்கும் விதத்தை எழுதி எழுதி அடித்தான்.  பின்னர் சில சினிமாப் பத்திரிகைகளை எடுத்து நடிகைகளின் படத்தை ஆராய்ந்தான்.
 
மீண்டும் சில வரிகள் சேர்த்தான்.  பேப்பரின் எழுத்துகளில் கஸ்தூரியின் கவர்ச்சி கூடிக் கொண்டிருந்தது.
 
"வெளியே செல்ல கதவைத் திறந்தபோது கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் ராமச்சந்திரன். அவர் பார்வையில் சதி தெரிந்தது"
 
கற்பனை மீண்டும் தடைப்பட, ராகவன் எதிர்ச் சுவரையும், சூனியத்தையும் வெறித்தான். 
 
 
 
அருகிலிருந்த ரிமோட்டை எடுத்தவன் டிவியை நோக்கி அதை நீட்டி, பொத்தானை அமுக்கினான்.  ஒன்றும் நிகழாததால், எழுந்து பார்த்தவன், அலுப்புடன் டிவியை நோக்கி நடந்து மேலே அணைத்து வைக்கப் பட்டிருந்த அதன் ஸ்விட்சை ஆன் செய்து திரும்பினான்.
 
சேனல்களில் தாவித் தாவி எங்காவது ஏதாவது கற்பழிப்புக் காட்சி வருகிறதா என்று ஆராய்ந்தான்.  இங்கிலீஷ் சேனல்களில் கற்பழிக்கவே தேவை இல்லாமல் கதாநாயகி இயல்பாய் தானே ஆடை துறந்தாள்.  மீண்டும் ஒரு அலுப்புடன் மலையாளச் சேனல்கள் பக்கம் போனான்.  இசை நிகழ்ச்சிகளாய் தூள் பறந்து கொண்டிருந்தனவே தவிர,  யாரும் கற்பழிக்கப்படக் காணோம்.
 
கதையை ஒரமாக ஒதுக்கி, இன்னொரு பத்திரிகையில் இவன் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எடுத்து மேய்ந்தான். பெரும்பாலான கேள்விகளில் இவனை வம்பிழுத்துக் கேள்வி கேட்டிருந்தார்கள்.  "உங்களை சைக்கோ என்கிறார்களே சிலர்?" என்று கேட்டிருந்தார் அயன்புரம் ச. தத்துவராமன்.
 
மென்று கொண்டிருந்த ஆப்பிளை எச்சிலுடன் சேர்த்து அப்படியே மேசைக்குக் கீழே துப்பியவன், அந்தக் கேள்வியை எடுத்து வைத்துக் கொண்டு காட்டமாக ஒரு பதில் எழுதினான்.
 
பிறகு மீண்டும் தொடர்கதையைத் தொட்டவன், சுவரைப் பார்த்துப் பார்த்து கொஞ்ச வரிகள் எழுதினான். மறுபடியும் சூனியத்தை வெறித்து மறுபடி சில வரிகள் எழுதினான்.

 
எழுந்து மணியைப் பார்த்தவன் சட்டையை மாட்டிக் கொண்டு சாப்பிடக் கிளம்பினான்.
 
வழி முழுவதும் காட்சிகளை யோசித்தபடியே நடந்து, காத்திருந்து, சாப்பிட்டான்.

 
யோசித்தபடியே சாப்பிட்டு  விட்டு யோசித்தபடியே திரும்பியபோது மணி பத்தாகி விட்டிருந்தது.  கதவு வெறுமனே சாத்தி இருந்தது. 

 
'பூட்டாமலே போய்விட்டேனா?'

 
 
உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டவன் டேபிளின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த நங்கையைக் கண்டு திகைத்துப் போனான்.  திரும்பி, இது தன் ரூம்தானா என்று மறுபடி ஒருமுறை பார்த்துக் கொண்டவன், அவளைக் குழப்பத்துடன் பார்த்தான்.  எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
 
"வாங்க ராகவன்..  சாப்ட்சாச்சா?"
 
"நீங்க...?"
 
"நான் கஸ்தூரி.  உங்கள் கதாநாயகி.."
 
"நான்சென்ஸ்...  யார் நீங்க?"
 
"நம்பலையா?  இந்த...
 
 

எழுதி முடித்த சிறிது நேரத்திலேயே
காணாமல் போனார்கள்
கதையின் பாத்திரங்கள்..
வெற்றுத் தாளில்
எழுதப் படாமலேயே
நிற்கிறது
என் படைப்பு

 
இதை எழுதியதும் நீங்கதானே?   உங்க கற்பனை நிஜமாகக் கூடாதா?  இதோ பாருங்க.."  என்றவள் எழுந்து மேஜை மேல் எழுதி வைக்கப் பட்டிருந்த பேப்பருக்குள் மறைந்தாள்.  இவன் திகைத்து நின்றிருக்க,  சில நொடிகளில் பேப்பரிலிருந்து மீண்டும் பிரசன்னமானாள்.

 
"நான்தான்.  ஏற்கெனவே ரெண்டு வாட்டி வெளில வந்து பேச ட்ரை பண்ணினேன்.  நேரம் சரியில்லை.  போயிட்டேன்.  இப்போ கதைல என்னைக் கற்பழிக்கப் போறாங்களா ராகவன்?  கற்பழிச்சா எனக்குப் பிடிக்காதே ராகவன்..   அதுவும் அந்த வயசான ஆளு!  அதோ பாருங்க"  டிவியைக் காட்டினாள்.
 
டிவியில் ஒரு பெண் தன்னைக் கற்பழிக்க வந்தவர்களைப் பந்தாடிக் கொண்டிருந்தாள். 
 
 
"இப்படி எழுதுங்க ராகவன்..  இதுதான் நல்லாருக்கு"  என்றாள்.
 
"ஷட்டப்.. உன்னை என்ன செய்யணும்னு தீர்மானிக்க வேண்டியவன் நான்.  நான் உன்னைப் படைத்தவன்"
 
"ஆணவமா ராகவன்?  இது வரை என்னை எவ்வளோ கௌரவமா காட்டிகிட்டு வந்தீங்க?  நானே என்னை ரசிச்சேன்.  இப்போ திடீர்னு ஏன் இப்படி?  அதுவும் ரொம்ப வல்கரா இருக்கு வரிகள்.."
 
"உளறாதே.. கதைக்கு அது தேவை.  உன்னை முன்னால அப்படி உத்தமமா காமிச்சதே இதுக்குத்தான்..  பின்னால நீ அப்படியே உல்டாவா மாறுவே.."
 

நீங்க முதல்ல எழுதின வரிகள்ள மோல்ட் ஆயிட்டேன் ராகவன்..  அதுலேருந்து என்னை நான் சேன்ஜ் பண்ணிக்க முடியும்னு தோணலை"
 
"உனக்கு சுய எண்ணம் கிடையாது.  உளறாதே"
 
"வேணாம் ராகவன்..  நான் இப்படியே காணாமல் போயிடுவேன்.." என்று வாசலைக் காட்டினாள்.
 
உரத்துச் சிரித்தான் ராகவன்.  


 
 
"நீ போயிட்டா?  எங்க போயிட முடியும்? இங்க இருக்க நீ"   பேனாவைக் காட்டினான்.  "இங்க கொண்டு வந்துடுவேன்.."  பேப்பரைக் காட்டினான்.
 
"ஆணவம்தான் உன்னை அழிக்கப் போவுது ராகவன்.."
 
"ஏய்.. என்ன மரியாதைக் குறையுது.."
 
"என்னை மாதிரி கேரக்டருக்கு மரியாதை தெரியாதே ராகவன்..  உனக்குத் .தெரியாததா..  நீதானே படைக்கறவன்.....?  இறைவன்!"   கடைசி வார்த்தை சொல்லும் போது இடது பக்கம் இதழ்கள் ஒதுங்கி,  நக்கலாக ஒரு புன்முறுவல் தெரிந்தது அவள் உதட்டில்.
 
"கெக்கேகேகே...' என்று சிரித்தான் ராகவன்.
 
"அசிங்கமா சிரிக்காதே..   நான் பத்தினியாவே இருக்க ஆசைப் படறேன்."  கத்தியை எடுத்தாள் கஸ்தூரி.


 
 
மறுநாள் திறந்து கிடந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே பெருக்க வந்த வேலைக்காரி போட்ட கூச்சலில் கூட்டம் சேர்ந்தது.
 
ஆப்பிள் வெட்டும் கத்தி சொருகப்பட்டு நாற்காலியில் சரிந்து கிடந்தான் ராகவன்.  நாற்காலியைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டியிருந்தது.  
 
 

 
 
"அரை லூஸு மாதிரி இருந்தான்.  அப்பப்போ பேச்சுக் குரல் கேக்கும்.  அறுத்துகிட்டு செத்துட்டானே குரு.."  கூட்டத்தில் ஒருவன் சத்தமாகப் புலம்பினான்.







 
 
 
 
படங்கள் : நன்றி இணையம்.





திங்கள், 26 அக்டோபர், 2015

"திங்க"க்கிழமை 151026 ::தக்காளி சிம்பிள் சூப்!



இப்போதெல்லாம் கடைகளிலிருந்து மேகி, நார் சூப் ரெடிமேட் பாக்கெட் வாங்கிச் செய்கிறார்கள்.  உடனடி சூப்!   நாங்களும் செய்திருக்கிறோம். 

ஆங்காங்கே தெருமுனையில் ஐஸ்க்ரீம் கடை போலக் குடை அமைத்து, அதில் இரண்டு மூன்று பாத்திரங்களை (அடுப்பின்மேல்?) வைத்து காளான் சூப், வாழைத்தண்டு சூப், வெஜிடபிள் சூப் என்றெல்லாம் விற்குமிடத்தில் வாங்கியும் குடித்திருக்கிறேன்.



கார்ன்ஃப்ளேக்ஸ் மேலே மிதக்கவிட்டுத் தருவார்கள்.


ஆனால் சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போல எளிமையான தக்காளி சூப் வீட்டிலேயே அவ்வப்போது செய்து சாப்பிடுவதுண்டு.. மன்னிக்கவும், குடிப்பதுண்டு! 

Image result for bangalore tomato images    Image result for small onion  images  Image result for garlic  images 


வயிறு 'டம்'மென்றிருக்கும் நேரங்களில் இதை அவ்வப்போது தயார் செய்து குடிப்போம்.






மூன்று அல்லது நான்கு பேர்கள் குடிக்க வேண்டிய அளவு.


இரண்டு சாதாரண அளவுள்ள தக்காளி.  நாங்கள் பெங்களுரு தக்காளிதான் உபயோகிக்கிறோம்.  இருமுறை சிறுநீரகக் கல்லால் அவதிப்பட்டபோது, எங்கள் மருத்துவர் நாட்டுத் தக்காளி உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.



நான்கு பேர் குடிக்கக் கூடிய அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்திலிட்டு, அதில் தக்காளியை நான்காக, எட்டாக நறுக்கி லேசாகப் பிசைந்து விட்டு, ஏழெட்டு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிச் சேர்த்து, இரண்டு பல் நாட்டுப் பூண்டு நசுக்கிப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.   மிளகு சீரகப் பொடி சேர்க்கவும். வடிகட்டிக் குடிப்பார் என் பாஸ்.  நான் ஸ்பூனும் கையுமாக அப்படியே குடிப்பேன்!







இந்தமுறை ஒரு மாறுதலுக்கு வெங்காயம், பூண்டு, தக்காளியை மிக்ஸியில் அரைத்து விட்டேன்.  ஒரு பெரிய வெங்காயத்தை பூவாய் நறுக்கித் தூவி விட்டேன்.  ஆனால், இதை விட முதல் மாடல்தான் நன்றாயிருந்தது!


 
இதில் அவரவர்கள் விருப்பப்படி, கேரட், பீன்ஸ் போன்றவை துருவிப் போட்டு சூப்பில் சேர்க்கலாம்.  கொத்துமல்லி, புதினா சேர்ப்பதும் அவரவர் விருப்பம்.  நான் சேர்ப்பதில்லை.  இவ்வளவுதான்.  இது குடித்த அரை மணியில் கபகபவென்று பசிக்கும் (என்று நினைத்துக் கொள்வேன்)

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஞாயிறு 329 :: எஸ் எம் ஐ


மங்களூருக்கு வடமேற்கே அமைந்துள்ளது செயின்ட் மாரீஸ் தீவு. (St Mary's Islands) .
கடல் கரையில் கற்பாறைகள் நிறைய உள்ளன.

மால் பே பீச்சிலிருந்து இருபது நிமிட மோட்டார் படகு பயணம். போக, வர படகுக் கட்டணம் 100 X 2 = 200.

வளை விட்டு வெளியே வந்து உலாப்போகும்
நண்டுகளை, காகங்கள் பறந்துவந்து கொத்திச் செல்கின்றன.
பார்வையாளர்கள் இடுகின்ற உணவுத் துண்டுகளையும்,
பயமில்லாமல் வந்து காட்ச் பிடித்துச் சாப்பிடுகின்றன!
   
                   
                           

சனி, 24 அக்டோபர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.



1)  வசதி படைத்தவர்களிடம் மட்டும், 10 ரூபாய் கட்டணமாக வாங்குகிறேன். சிரமப்படுவோர் எனத் தெரிந்தால், அதுவும் வாங்க மாட்டேன்.  சிலர், 'எனக்கு சம்பளத் தேதி வரவில்லை. கரன்ட் பில் கட்டுற தேதி முடியப் போகுது; நீங்களே பணம் கட்டி பிறகு வந்து வாங்கிக்குங்க...' எனக் கூறுவர். அவர்களுக்கு என் பணத்தைக் கட்டி, பொறுமையாக வாங்கிக் கொள்வேன்.   வீடு தேடி வந்து கரன்ட் பில் கட்டி உதவி வரும் துரைராஜ்.
 


 
2)  நோயாளிகளை கசக்கிப் பிழிந்து கண்ணீரை வரவழைத்து கட்டணம் வாங்குவதை விட, ஆத்ம திருப்தியுடன் அவர்கள் கொடுக்கும் இந்த ஐந்து ரூபாயே, மனநிறைவைத் தருகிறது.  அதன்படி, 1958 முதல், இன்று வரை, நோயாளிகளிடம் நான் கட்டணம் கேட்பதில்லை. ஆரம்பத்தில் கட்டணமாக, ஒரு ரூபாய் கொடுத்தனர். அதனால் அனைவரும் என்னை, 'ஒரு ரூபாய் டாக்டர்' என்றே அழைத்தனர்.  மருத்துவர் ராமமூர்த்தி
 


 
3)  லட்சங்கள் வேண்டாம்.  லட்சியமே போதும்.  என்ஜீனியர் மாதவன்.
 


 
4)  கால்கள் இல்லாவிட்டால் என்ன?  நம்பிக் 'கை' இருக்கிறதே!  ஜிவாத்ஸ்கோ.
 



 
5)  சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், உயர்கல்வி கற்க வழியின்றித் தவிப்பவர்களுக்கும், கல்வி கற்க ஆசையிருந்தும் வசதியில்லாமல் கலக்கமடைபவர்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து சத்தமின்றி உதவிகளைச் செய்து வருகிறார் கிராமத்து இளைஞர் ரா.நாராயணன்.
 


 
 
7)  தனிராம் ஜிக்குக் கிடைத்த பிரிவுபச்சாரம்.
 



 
8) அரசுப் பள்ளிகள் குறித்தும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்தும் வெகுஜனங்கள் மத்தி யில் நிலவும் தவறான எண் ணத்தை உடைத்தெறியும் ஆசிரியர்களில் செங்குட்டுவனும் ஒருவர்.
 




9) மகனின் நினைவில் பிரதீப் - தமயந்தி தம்பதியரின் சேவை,






 

10) கணவனை இழந்த பெண்கள், குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்து பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கு கணினி பயிற்சி மற்றும் அவர்கள் விரும்பும் துறையில் இலவச பயிற்சியை, 'சீட்' வழங்கி வருகிறது.  ஒருமுறை அப்துல் கலாமிடம், 'சிறந்த பெண் தொழிலதிபர்' விருதும் பெற்ற விஜயலட்சுமி.



செவ்வாய், 20 அக்டோபர், 2015

டாக்டர் நோயாளியைக் காப்பாற்றினால் ஃபீஸா? கொன்றால் ஃபீஸா?


சுலப கேஸ்!  அப்பீல் எல்லாம் கிடையாது போலும்!

 
பேராசைக்கார டாக்டர் ஒருவர் இருந்தார்.  வசதி படைத்தவர்களுக்கே வைத்தியம் பார்த்து வந்த அவரிடம் ஹோட்டலில் பணி புரியும் ஒருவன் தன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்தான்.  

மருத்துவர் சிகிச்சை அளிக்க முதலில் ஒப்புக் கொள்ளவே இல்லை.  மீண்டும், மீண்டும் கெஞ்சிய அந்தத் தொழிலாளி, "அவளை நீங்கள் பிழைக்க வைத்தாலும் சரி, கொன்றாலும் சரி, உங்களுக்குரிய கட்டணத்தைக் கொடுத்து விடுகிறேன்"  என்று எழுதியே கொடுத்தான்.

                                                                            Image result for smiley images
அதற்குச் சம்மதித்த மருத்துவர் அவளுக்கு வைத்தியம் பார்த்தார்.  பலனில்லை.  அவள் இறந்து விடுகிறாள்.  

மருத்துவர் அந்தத் தொழிலாளிக்கு மீண்டும் மீண்டும் பில் அனுப்பியும் பணம் வந்து சேரவில்லை.


                                                                    Image result for smiley images

வழக்குக் கோர்ட்டுக்குப் போனது.

மருத்துவர் : "எழுதிக் கொடுத்தபடி இவர் எனக்குப் பணம் தரவில்லை"

கோர்ட் :  "அவளை நீங்கள் பிழைக்க வைத்தீர்களா?"

மருத்துவர் : "இல்லை"

கோர்ட் : "அவளை நீங்கள் கொன்றீர்களா?"

மருத்துவர் : (பதைபதைப்புடன்) "இல்லை..இல்லை"

கோர்ட் : "நீங்கள் அவரைக் கொல்லவும் இல்லை, பிழைக்க வைக்கவும் இல்லை.  அவர் எழுதிக் கொடுத்திருக்கும் இரண்டையுமே செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ளும் நீங்கள் எப்படி அதற்குப் பணம் எதிர்பார்க்கிறீர்கள்?  கேஸைத் தள்ளுபடி செய்கிறோம்"

   
                                                                     Image result for smiley images


பேராசை பெரு நஷ்டம்.  தன் வினை தன்னைச் சுடும்.  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..  இதில் எது இந்தச் சம்பவத்துக்குப் பொருத்தம்? 


                                                                           Image result for smiley images


அந்தக் கணவர் செய்தது சரியா?  கோர்ட் சொன்னது சரியா?

 **************************************************************

இதே போல இன்னொரு கதை சமீபத்தில் படித்தேன்.  ஒரு மருத்துவர் காரில் செல்லும் வழியில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரைப் பார்க்கிறார்.


அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தேவையான மிகக் காஸ்ட்லி ஊசி ஒன்று மருத்துவரிடம் அப்போது கைவசம் இருக்கிறது. வேறொரு நோயாளிக்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.  

அதை அந்த விபத்தில் சிக்கிய மனிதருக்கு போட்டு விடுகிறார்.  தானாகத்தான் முன்வந்து இதைச் செய்கிறார்.  ஆனால் அந்த மனிதர் இறந்து விடுகிறார்.

இப்போது மருத்துவர் அந்த ஊசிக்கான பணத்தை எதிர்பார்ப்பது நியாயமா?  பாதிக்கப்பட்ட அந்த நோயாளி அல்லது அவர் உறவினர்கள் அந்தப் பணத்தை மருத்துவருக்குத் தர மறுத்தால் அது நியாயமா?  யார் பக்கம் நியாயம்? 

 =======================================================






முதல் சம்பவம் 60 களில் ஆஸ்திரேலியாவில் நிஜமாக நடந்த வழக்காம்.  மஞ்சரியில் படித்தது!







படங்கள் :  நன்றி இணையம்.