திங்கள், 25 ஜனவரி, 2016

திங்கக்கிழமை 160125 :: கீரை மசியல்



எப்போதும் பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கீரை மசியல் செய்வது வழக்கம்.  




பல வருடங்களுக்கு முன்...!  என் இளமைக் காலத்தில்... !   ஒரு நாள்...






வீட்டில் பருப்பில்லாத மாதக் கடைசி.  கீரை வாங்கி வந்து விட்டார் அப்பா.  அப்போது அம்மா பருப்பில்லாமல் செய்த அந்தக் கீரை மசியலை அப்புறம் பல முறை பருப்பிருந்த நாட்களிலும் செய்திருக்கிறோம்.





முளைக்கீரையை மண்ணில்லாமல் அலசி, அழகாக  நறுக்கிக் கொண்டு அப்படியே ஒரு பாத்திரத்திலிட்டு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,






தேங்காய், பச்சை மிளகாய், இரண்டு சீரகம் வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொண்டு,





வெந்த கீரையில் இட்டுக் கலக்கி, பெருங்காயம் தூவி,  தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு  தாளித்து,




சாப்பிட வேண்டியதுதான்.


தீர்ப்பு : ஆனாலும் பருப்பில்லாத மசியல் எப்போதாவது சாப்பிடலாமே தவிர, எப்போதும் சாப்பிட பருப்போடு செய்யும் மசியலே......!

57 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம் இங்கே தலைகீழ், எப்போதும் சாப்பிடப் பருப்பே இல்லாமல் அரைத்தும் விடாத கீரை மசியல். பருப்புப் போட்டு அரைத்துவிட்டால் அதை நாங்க மொளகூட்டல் என்போம். ம்ஹூம், இல்லை, இல்லை, மொளகூட்டல்னா மிளகெல்லாம் போட மாட்டாங்க, போடவும் கூடாது. பருப்பே இல்லைன்னா அதைக் காய்கள் சேர்த்த கூட்டெனில் பொரிச்ச கூட்டு என்போம். பருப்புச் சேர்த்து மிவத்தல், தேங்காய், சீரகம் அரைத்துவிட்டால் அது எதுவாக இருந்தாலும் மொளகூட்டலே! ஹிஹிஹி, பச்சை மிளகாய், தேங்காய் அரைத்துவிட்டுத் தயிர் கலந்தால் மோர்க்கீரை! புளி சேர்த்துப் பச்சைமிளகாயைக் கீரையில் முழுசாகவே போட்டுவிட்டுக் கொஞ்சம் சாம்பார்ப் பொடி போட்டுச் செய்தால் புளிக்கீரை. இந்தப் புளிக்கீரையையே பருப்புச் சேர்த்துச் செய்தால் சாம்பார் இல்லாமல் சாதத்தோடு பிசைந்து சாப்பிட புளி விட்ட கீரை ரெடி! இதுக்கு கடுகோடு வெந்தயம், மிவத்தல் தாளிக்கணும். முதல்லே சொன்னதுக்குக் கடுகோடு உபருப்பு தாளிக்கணும், இரண்டுக்கும் குழம்பு வடாம் தாளிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. பொரிச்ச குழம்புக்கும் புளிவிட்ட கீரைக்கும் நல்ல துணை. பொரிச்ச குழம்பு சாதத்தோடு பிசைந்து சாப்பிடப் பண்ணிட்டுத் தொட்டுக்கப் புளிக்கீரை முதலில் சொன்னாப்போல் பருப்புச் சேர்க்காமல் பண்ணித் தொட்டுக்கலாம். இரண்டும் சேர்ந்த கலவை நன்றாக இருக்கும்.(எனக்கு!!!!!!!!!!!!)

    பதிலளிநீக்கு
  3. நேற்றுதான் கீரை மசியல் துவரம்பருப்போடு செய்தேன். தேங்காய் அரைத்துப்போட்டதே இல்லை, செய்து பார்க்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  4. பருப்புடன் இப்படி அரைத்து செய்வோம்:).

    பதிலளிநீக்கு
  5. தேங்காய் அரைத்து விட்டு பருப்பில்லாமல் கீரை மசியல். செய்து பார்த்து விடலாம்!

    பதிலளிநீக்கு
  6. 'தேங்காய், பச்சை மிளகாய், இரண்டு சீரகம் ' வைத்து அரைத்தால் இந்த நிறம் வராதே?!! அது வத்தல்(காய்ந்த) மிளகாயோ? இருக்கும் சாமானில் அட்ஜஸ்ட் செய்து செய்யும் போது அதன் ருசி நினைவில் நிற்கும்!!

    பதிலளிநீக்கு
  7. கீரைகள் அதிகம் சாப்பிட்டு இருக்கென் அதிலும் தண்டு கீரை அதிகம் சாப்பிட்டு இருக்கேன்...

    பதிலளிநீக்கு
  8. தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் என்று போட்டுவிட்டு, காய்ந்த மிளகாயை வைத்து அரைத்துள்ளீர்களே...

    பதிலளிநீக்கு
  9. கீரை மசியல்னு சொல்றீங்க, ஆனா கீரையை அரைக்கவே இல்லியே? வெறுமே கரண்டியால் மசித்தாலே மசியலா?

    நாங்க அரைச்சு/கடைஞ்சு செய்வோம்.

    //தேங்காய், பச்சை மிளகாய், இரண்டு சீரகம் ' வைத்து அரைத்தால் இந்த நிறம் வராதே?// - யெஸ், யெஸ்.... எனக்கும் இதே டவுட்!! :-))

    பதிலளிநீக்கு
  10. ருசியான முளைக்கீரையில் தேங்காய் துருவிப்போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். சீரகம் போட வேண்டியது மிகவும் முக்கியம். திருமதி.

    கீதா சாம்பசிவம் அவர்கள் வக்கணையாக ஒவ்வொன்றையும் வகைபடுத்திச் சொல்லியுள்ளது அனைத்தையும் படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன், மகிழ்ந்தேன்.

    கீரையில் இயற்கையிலேயே ஒரு ருசி இருக்க வேண்டும். சில கீரைகளில் ருசி இருக்காது. அவற்றை நான் ’சாணிக்கீரை’ என்று சொல்லி ஒதிக்கிவிடுவது வழக்கம்.

    ருசியான முளைக்கீரையாக இருந்தால், சுடச்சுட சாதத்தை கீரையிலேயே பிசைந்துகொண்டு, வெங்காயம் + வெந்தயம் போட்ட வற்றல் குழம்பைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்குமே ! :)

    பதிலளிநீக்கு
  11. அரைக்கீரையை உப்பு, பெருங்காயம் போட்டு மசித்துவிட்டுத் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மி.வத்தல் தாளித்துத் தேங்காயைத் துருவிச் சேர்த்துச் சுண்டைக்காய் வற்றல் குழம்போடு சாப்பிட்டால் அந்த ருசியே தனி! :) சும்மா எதுவும் போடாம மசிச்ச கீரைன்னா வத்தக் குழம்பு தான்.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா !! நல்லா இருக்கு நானும் இப்படிதான் செய்வேன் ..btw இவ்ளோ பொடியா நறுக்கினது யார் ..??
    அந்த மிளகாய் ரெட் மிளகாயா ..? தேங்கா மிக்சிங் கலரா இருக்கே !!

    பதிலளிநீக்கு
  13. கீரை எப்பொழுதுமே எனக்கு பிடித்தமான உணவு

    பதிலளிநீக்கு
  14. தோட்டத்திலிருந்து முளைக்கீரையைப் பிடுங்கி எடுத்துவந்து அடிப்பாக வேரை நறுக்கி எடுத்துவிட்டு, நன்றாக அலசி நறுக்கி கச்சட்டியில் போட்டு வேகவைத்து,உப்பு சேர்த்து, இரண்டு சீராமும்,துளி தேங்காயும் அரைத்து விட்டு,நெய்யில் வற்றல் மிளகாயும்,உளுத்தம் பருப்பும் பொரித்துக்கொட்டி நன்றாக மசித்தால் அதுதான் ஒரிஜனல் கீரை மசியல். சாதத்தில் போட்டுச் சாப்பிட வற்றல் குழம்புடன் A க்ளாஸ். கீரைமசியல்,வற்றல் குழம்பு,சுட்ட அப்பளாம். பருப்பில்லாத வாரத்தில் ஒரு நாளுக்கான ஆரோக்ய சமையல்.அப்புறம், எதெதுவோ சேர்த்து எத்தனையோவிதம். பச்சென்ற கீரைமசியலும்,ஆத்திலிட்ட பெரிய அப்பளாமும்,மணக்க வற்றல் குழம்பும் எனக்கு இப்படிதான் முதலில் சமைக்க வந்தது. இப்போதா பாலக்கும்,பன்னீருமாக இருக்கிறது. இது சும்மா சொன்னேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. வழக்கம் போல ஏகப்பட்ட டிப்ஸ்... நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி கிரேஸ். செய்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  19. நன்றி வெங்கட். செய்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி மிடில்க்ளாஸ்மாதவி. ஆம், அன்று பச்சை மிளகாய் கிடைக்காததால் பட்டை மிளகாய்தான் போட்டேன். அதுவும் பட்டை மிளகாய்ப் போட்டால் நன்றாயிருக்கும் என்று நினைத்தும் போட்டேன். குறிப்பிட மறந்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  21. ஆம், நெல்லைத் தமிழன். காய்ந்த மிளகாய்தான். குறிப்பிட மறந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  22. அத்தி பூத்ததோ! நன்றி ஹுசைனம்மா. கீரையை அரைக்க மாட்டோம். மசியல்தான்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி வைகோ ஸார். நாக்கில் நீரூற வைக்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
  24. இன்னொரு டிப்ஸ்! நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஏஞ்சலீன். நீங்கள் தேங்காய்ப் போடாமல்தான் செய்வீர்களா! கீரை நறுக்கியது நான்தான். எங்கள் அம்மா என்னை ரொம்பப் பாராட்டுவார்கள். படத்தைப் பார்த்தே அதைக் கண்டு கொண்ட உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்! ஆம், சிவப்பு மிளகாய்த்தான் சேர்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. நல்ல குறிப்புகள் காமாட்சி அம்மா. நம்ம தோட்டத்திலிருந்து கீரை பறித்தால் தனிச் சுவைதான். நம்பிச் சாப்பிடலாம். வைகோ ஸார் சொல்லி இருப்பது போல கீரையில் இப்போ எல்லாம் டேஸ்ட் குறைகிறது! கச்சட்டி சமையல் சாப்பிட மனம் ஏங்குகிறது. எங்கள் வீட்டுக் கற்சட்டி உடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன!

    பதிலளிநீக்கு
  27. நான் எப்போதுமே பருப்பு போடாமல் தான் கீரை செய்வேன்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி சகோதரி அருணா செல்வம். நாங்கள் பெரும்பாளும்பருப்புப் போட்டுதான் செய்வது வழக்கம்! எப்போதாவதுதான் இப்படிச் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  29. தேங்காய் எல்லாத்திலையும் சேர்ப்பேன் ..எங்க வீட்ல தேங்காயில்லா சமையலே இல்லை :)
    பருப்புதான் சிலநேரம் கீரையுடன் சேர்க்காமல் விடுவேன் ..எனக்கு கீரையின் ருசி பருப்பு சேரும்போது
    அவ்வளவு இஷ்டமில்லை :)சமீபத்தில் சதுரபயிர்//சிறகு அவரை // வாங்கி சமைச்சேன் கொஞ்சமா வேகவைச்ச பாசிபருப்பு மட்டும் ..மற்றபடி இந்த கீரை மெத்தட் தான் .மெட்ராசில் கிடைக்கும் வாங்கி சமைங்க ..
    எங்க வீட்லயும் இதே மாதிரி நுணுக்கி பொடியா வெட்டி தருவார் :) கீரை மட்டுமில்லை சாலட் எல்லா காய்கறியும் பொடியா வெட்ட அவர்தான் :) அதான் கண்டுபிடிச்சேன் ..

    பதிலளிநீக்கு
  30. எங்க வீட்டிலும் இன்றைக்கு பசளிக்கீரை மசியல் தான்.
    கீரை மசியல் நானும் தேங்காய் பூண்டு அரைத்து வைப்பேன்,கீரை என்றாலே எங்கள் வீட்டில் மிகவும் பிடித்தமான உணவு.
    நல்ல சுவையாக இருக்கும்,கீரையுடன் மைசூர்ப்பருப்பும் சேர்ப்பதுண்டு,

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்
    ஐயா
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  32. கீரை மசியல் இத்தனைவிதமாகச் செய்யலாமா? செய்துவிடுகிறேன். நாங்கள் முளைக்கீரையை ஆய்ந்து நறுக்காமல் பூண்டுப்பற்கள், சீரகம் உப்பு, ப.மி சேர்த்து லேசாக வேகவைத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சாதத்தில் ந.எண்ணெய் சேர்த்து சாப்பிடுவோம். அம்மா மத்தால் கடைந்து செய்வார்கள். அரைக்கீரை எனில் புளி சேர்த்து செய்வோம். இரண்டுக்குமே தேங்காய் சேர்ப்பதில்லை. தேங்காயும் பருப்பும் சேர்த்தால் அதைக் கீரைக்கூட்டு என்று சொல்லிவிடுவோம். :))

    பதிலளிநீக்கு
  33. வெங்காயம், தக்காளி, பட்டாணி போட்டுக் கீரையைச் சப்பாத்திக்குப் பண்ணுவது பத்தி யாரானும் சொல்லுவாங்களானு பார்த்தேன். நான் பெரும்பாலும் காலையில் மசிச்ச கீரை மிச்சம் இருக்கையில் மாலைக்குச் சப்பாத்திக்கு அதிலேயே தக்காளி, வெங்காயம் வதக்கிப் போட்டுக் காலை தேங்காய், சீரகம் அரைச்சு விடலைனா சாயந்திரமா அரைச்சு விடுவேன். அல்லது சாம்பார்ப்பொடி/ரசப்பொடி மட்டும் போட்டுச் சேர்த்து (ஞாபகமாக உப்புப் போடக் கூடாது. கீரைக்கு ஏற்கெனவே உப்புப்போட்டுச் சமைச்சிருக்கோம்)க் கொதிக்கவைத்துத் தொட்டுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  34. சப்பாத்திக்குனு தனியாக் கீரை செய்கையில் அநேகமாய்ப் பாலக்கில் தான் பெரும்பாலானவர்கள் செய்வார்கள். எனினும் இந்த அரைக்கீரை , முளைக்கீரையையும் பொடியாக நறுக்கிப் பச்சை மிளகாய், இஞ்சியோடு சேர்த்து வதக்கிக் கொண்டு மிக்சியில் போட்டு அடித்துக் கொண்டு, தக்காளி ப்யூரி அல்லது தக்காளியை blanching முறையில் தோல் நீக்கிக் கொண்டு சாறை எடுத்துச் சேர்த்துக் கொண்டு வெங்காயத்தையும் வதக்கிப் போட்டுப் பட்டாணி, மி.பொடி, தனியாப் பொடி, கரம் மசாலா சேர்த்துக் கொண்டு கடைசியில் தேவையானால் பனீரும் நெய்யில் அல்லது எண்ணெயில் வறுத்துச் சேர்க்கலாம். பூண்டு பிடிப்பவர்கள் வெங்காயத்தோடு அல்லது பச்சை மிளகாய், இஞ்சியோடு பூண்டையும் வைத்து அரைத்துச் சேர்ப்பார்கள். பாலக்கும், பட்டாணியும் மட்டும் இருந்தால் பாலக் மடர், பனீர் போட்டால் பாலக் பனீர்!

    பதிலளிநீக்கு
  35. இதற்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்க்காமல் அரைத்தும் விட்டுச் சேர்க்கலாம். தக்காளி, வெங்காயம் இரண்டையும் அரைத்துச் சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  36. நன்றி கீதமஞ்சரி. உங்களுக்கு இது புதுசாக இருப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  37. மீள் மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். கீரையின் பின் உபயோகம் எனக்கும் புதுசு. ஆனால் நாங்கள் கீரை செய்யும் அளவுக்கு சாயங்காலம் வரை எல்லாம் மிச்சம் இருக்காது! உடனே காலியாகி விடும். மேலும் சப்பாத்திக்கு தால்,குருமா தவிர மற்ற துணைப் பொருட்களை சமீப காலமாகத்தான் முயற்சிக்கிறேன். கீரை இதுவரை சப்பாத்திக்குத் தொட்டுக் கொண்டதே இல்லை! முயற்சித்துப் பார்க்கிறேன்! காலை முதல் முறை செய்யும்போதே கூட இவற்றைச் சேர்த்துச் செய்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  38. மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சலின். சென்னையில் கிடைக்கிறதா என்று கேட்டுப் பார்க்கிறேன். இவ்வளவு பொடியாகக் கீரையை நறுக்கினாலும், இப்படி நப பொடியாக நறுக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு!

    பதிலளிநீக்கு
  39. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  40. சிறந்த கருத்துப் பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!


    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
    http://www.ypvnpubs.com/2016/01/blog- post_26.html

    பதிலளிநீக்கு
  41. இதை நாங்கள் கீரை அவியல் என்போம். பச்சை மிளகாய் ஜீரகம், தேங்காய் எண்ணெய்..சரி நீங்கள் பச்சைமிளகாய் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் அரைத்தது சிவப்பாக உள்ளதே.

    பருப்பு போட்டுக் கடைவது மசியல். பொரிச்ச கீரை என்று அரைத்துவிட்டுச் செய்வது (சிவப்பு மிளகாய் போட்டு..) அப்புறம் மொளகூட்டல் என்று ..செய்வதுண்டு.

    இன்று கூட எங்கள் வீட்டில் இதுதான்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  42. நன்றி கீதா. இன்னும் நீங்கள் பின்னூட்டங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது!! சிவப்புக்குக் காரணம் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்!

    அவியல் என்றால் நாங்கள் மோர் / தயிர் சேர்ப்போம்!

    தாளிப்பது தேங்காய் எண்ணெயில்.

    பதிலளிநீக்கு
  43. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  44. வெங்காயம் தக்காளி, பூண்டு வதக்கி அரைத்துவிட்டு இதே கீரை அல்லது அரைக்கீரை செய்தால் சப்பாத்திக்கு, சாதத்திலும் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பட்டாணி போட்டும் செய்வதுண்டு,(பாலக் மட்டர் என்பது போல்) பனீர் சேர்த்தும் செய்வதுண்டு (பாலக் அல்ல. இந்தக் கீரை வகைகளிலேயே..) உருளைக்கிழங்கு சேர்த்தும் (ஆலு பாலக் போல) இப்படி மனசு தோன்றும் வகையில்....

    நாம் மசிப்பதால் எல்லா வகையையும் மசியல் என்று சொல்லுகின்றோம்...நானும் அரைக்க மாட்டேன். நார்த் இண்டியன் வகை செய்யும் போது மட்டுமே. நீங்கள் பொடிப் பொடியாக நறுக்கியது போல்தான் நானும் பொடிப்பொடியாக நறுக்குவேன். அப்போதுதான் மசிப்பது எளிதாக இருக்கும். கீரையின் பச்சைக் கலர் அப்படியே இருக்க சிறிது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும். அதிக நேரம் வேகவைக்கவும் கூடாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  45. I tried this recipe..liked it! Thanks for sharing! Photos uploaded in FB! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!