செவ்வாய், 5 ஜனவரி, 2016

கேட்டு வாங்கிப் போட்ட கதை - வசந்தா - ராமலக்ஷ்மி



பொதுவாக சகோதரி ராமலக்ஷ்மியின் படைப்புகளில் ஒருசமூகப் பார்வை இருக்கும்.  இதிலும் இருக்கிறது.  திரு ஜீவியின் கதைக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பையும், வாதப் பிரதிவாதங்களையும் கருத்துகளாக இந்தக் கதைக்கும் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கதை 27 - 11 - 2011 இல் தினமணிக் கதிரில் வெளியானது.

திருமதி ராமலக்ஷ்மியின் தளம் முத்துச்சரம்.  


நன்றி ராமலக்ஷ்மி.

எங்கள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக உங்கள் படைப்பில் ஒன்றை அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி. 

இந்தக் கதை பற்றி ராமலக்ஷ்மி சொல்வது :

"குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சனை என்பது தலைமுறைகள் கடந்து தொடர்ந்தபடியேதான் உள்ளது. இக்கதையில் வருகிற சிறுவர், சிறுமியரைப் போன்ற பலரையும் நாம் ஆங்காங்கே சந்தித்தபடியேதான் இருக்கிறோம். குடும்பச் சூழலைக் காரணம் காட்டும் பெற்றோர். படிப்பில் அக்குழந்தைகளின் கவனம் குறைவதும், கல்வியையே துறப்பதும்  நிகழ்கிறது. (ஆனால் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்தபடி தானும் படித்து முன்னேறிய ஒரு சிலரையும் அறிந்திருக்கிறேன்  .) 

சமூக அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது போனாலும் நம் கவனத்துக்கு வருகிற போது பெற்றோரிடம் பேசி புரிய வைக்கலாம். அப்படி முயன்றதில் எல்லா முறைகளும் வெற்றி கிடைக்காது போனாலும் மூன்று பேர்களின் வாழ்வில் என்னால் திருப்பத்தைக் கொண்டு வர முடிந்திருக்கிறது. பால்ய விவாகம் என்பதும் ஏதோ அந்தக் காலங்களில் மட்டுமே நடந்த ஒன்றென எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதும் அவை தொடர்கின்றன என்பதும் வேதனையான உண்மை.  மிகச் சிறிய வயதில் இல்லாவிட்டாலும் 14, 15 வயது சிறுமியருக்கு திருமணம் செய்விப்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது :( "



இனி அவர் கதைக்குச் செல்வோம்.

=========================================================================


வசந்தா 
-  ராமலக்ஷ்மி  -




சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி.

திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில்.

“ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன்.

அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள் உபயோகிக்கப்படுவது அறிந்ததுதான். அதற்காக இப்படியா? நாலடி எட்டாத உயரம். பனிரெண்டு வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லாத பால் வடியும் முகம்

“அலாரம் வச்சு மூணரைக்கெல்லாம் எந்திச்சுக்கறேன். சரியா நாலு மணிக்கு ஏஜண்ட் வாசலில் சைக்கிள் பெல் அடிச்சுக் கூட்டிட்டுப் போயிடுவார். ஒருநாள் லீவு போட்டதில்லையே? என்ன தப்பு சார் செஞ்சேன்?” கலக்கத்துடன் பையன் கேட்கவும் அதிர்ச்சியின் அளவு எகிறியது.

“ஆமா உன்ன மாதிரிச் சின்னப் பசங்க பேப்பரு போட்டா போலிசுல புடிச்சுடுவாங்க தெரியுமா? படிக்கற வயசுல எதுக்கு இந்த வேல? என்ன கஷ்டம் வீட்டுல? சரி நீ போ. நான் பேசிக்கறேன் ஒன் மொதலாளிகிட்டயே” என்றார் கடுமையாகவே.

“படிப்புச் செலவுக்கு ஆகுமின்னுதான் இந்த வேலயச் செய்றேன் சார். ஒம்பதாவதுல இருக்கேன். ஒழுங்கா ஸ்கூல் போறேன்j எங்க மொதலாளி ரொம்ப ரொம்ப நல்லவரு. அவர எதுவுஞ் சொல்லிடாதீங்க. பரிச்சைக்கு லீவுல்லாம் கொடுக்கேன்னுருக்கார். யூனிஃபார்ம் கூட எடுத்துக் கொடுத்தார்.”

‘சோழியன் குடுமி சும்மவா ஆடும். கையில காசு பொழங்க ஆரம்பிச்சதும் எந்தப் படிப்புக்காக வேலையில சேந்தியோ அதயே தொலச்சுட்டு நிக்கப் போறடா பாவி’ மனதில் ஓடியதைச் சொல்ல முடியாமல் நிற்கையில், “உங்களுக்கு என்ன ஆகணும்னு எங்கிட்டயே சொல்லுங்க. நடுவால மொதலாளி எதுக்கு? இன்னும் அர மணி முன்ன தரணுமா?” குரல் கரகரக்கக் கண்ணீர் விட்டு அழவே ஆரம்பித்து விட்டான்.

தர்ம சங்கடமாய்ப் போயிற்று. இப்போதைக்குச் சமாதானமாகப் பேசி அனுப்பி விட்டால் போதுமென முடிவெடுத்தவராய் “டைமுக்கு வைக்கற சரிப்பா. கதவுக் கம்பியில சொருகி வைக்கணும். தூக்கி எறியப்புடாது. ஆனாலும் நீ புதுசா இருக்கதால பணத்தை அவர்ட்டதான் கொடுப்பேன்னு சொல்லிடு.” என்றார் தீர்மானமாய், சின்ன மீனை அனுப்பிப் பெரிய மீனை பிடித்துத் தாளித்து விடும் எண்ணத்தில்.

“அதான் ரசீது பொஸ்தம் கொண்டாந்திருக்கனே” வாதாடிப் பார்த்தான். ‘இந்த மனுசனிடம் பருப்பு வேகாது’ எனப் புரிந்த கொண்டானோ என்னவோ, சில நொடிகளில் கண்களைத் துடைத்துக் கொண்டு சந்தேகமாகப் பார்த்தபடியே வெளியேறினான்.

“காசைக் கொடுத்து அனுப்பிருக்கலாமே? இப்ப அந்தாளு வந்து தாம்தூம்னு குதிக்கவா? நானே காவேரி வரலியேங்கற டென்ஷன்ல இருக்கேன். இது வேறப் புதுத் தலவலி.” சிடுசிடுத்தாள் சொர்ணம்.

வள் கவலை அவளுக்கு. நேற்று எதிர்பாராத விருந்தினர்கள் இரவு உணவுக்கு வந்து விட, சேர்ந்து போனப் பாத்திரங்கள் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. முன்னெல்லாம் இவரது கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து, பொதுநல விஷயங்களில் இவர் காட்டும் அக்கறையைப் பெருமையாகக் கருதி வந்த சொர்ணம் இப்போது தலைகீழாக மாறி விட்டிருந்தாள்.

வயதின் இயலாமை ஆட்டுவிப்பதைத் தவறாகவும் சொல்ல முடியவில்லை. மூட்டெலும்புத் தேய்மானம். இரத்த அழுத்தம். போதாக்குறைக்கு சர்க்கரை நோயும். சிலவருடம் முன்னர் வரை எந்த வேலைக்கும் ஆள் எதிர்பார்த்து வாழ்ந்தவள் இல்லை. அப்போதெல்லாம் முடிந்த அளவு கூட இவரால் இப்போது உதவ முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வியாதிகள் ஓய்வு கால போனஸாக வந்து சேர சின்னச் சின்ன வேலைகளையே செய்து கொடுக்க முடிகிறது. அடுத்தவரை அண்டியே வாழ வேண்டிய சூழலில் இருவருமே.

மகனும் மகளும் திருமணமாகி வெளிநாட்டில் இருந்தார்கள். வருந்தி வருந்தி அழைக்கவே செய்தார்கள். ஆறுமாதங்களுக்குத் திட்டமிட்டுச் சென்றால் ’நம்மூரைப் போலாகுமா’ என மூன்றே மாதங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விடுவதே நடந்தது. நிரந்தரமாய் போய்த் தங்குவது நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது. வயது காலத்தில் தனியாக வாழுகையில் பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளக் கூடாதென்பதில் சொர்ணம் தெளிவாக இருந்தாள். இந்த வயதில் தன்னலமே நல்லதென்றாள். போனமாதம் நடந்த சம்பவம் இந்தத் தீர்மானத்தை மேலும் தீவிரமாக்கியிருக்க வேண்டும்.

வீட்டெதிர் விளக்குக் கம்பத்தின் கீழ் மாலையில் கீரைக்கடை பரப்பும் கங்கம்மா, ஒரு நாள் முன்னிரவில் “நாளக்கி பரிச்ச இருக்கு. போகாதம்மா” எனப் பரிதாபமாக மகன் கூவக் கூவ காதில் வாங்காமல் வியாபாரத்துக்கு அவனை நிற்க வைத்து விட்டு சீரியல் பார்க்கச் செல்ல,, மறுநாள் அவளை ஒருபிடி பிடித்து விட்டார் சபாபதி. அவமானம் தாங்காதவளாய் ”எம்புள்ள மேல எனக்கில்லாத அக்கறதான் ஒமக்குப் பொத்துக்கிட்டு வருதோ?” சீறியதோடு அன்றிலிருந்து இவரைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளலானாள். சொர்ணத்தையும் தன் கடைப்பக்கம் வரவேண்டாமெனச் சொல்லி விட்டாள். இப்போது மார்க்கெட் வரை போய் கீரைவாங்க வேண்டிவந்தது கூட வருத்தமாய் இல்லை. “தேவையா இது நமக்கு”எனத் தினம் தினம் சொர்ணம் சொல்லிக் காட்டுவதைத்தான் தாங்க முடியவில்லை. இதே சொர்ணம் எப்படியெல்லாம் பக்கபலமாக முரட்டு ஆசாமிகளிடம் கூட மல்லுக்கு நின்றிருக்கிறாள் ஒருகாலத்தில்.

சிலர் அடாவடியாகப் பேசுவார்கள். சில ஏழைப் பெற்றோர் “என்ன சார் செய்வது? படிப்பு ஏறல. எங்களுக்கும் சொல்லித் தரத் தெரியல. அப்படியே விட்டாலும் பசங்க வீணாகிடுவாங்களேன்னு வேலைக்கு விட்டுட்டோம்”எனக் காரணம் சொல்வார்கள். அப்போது ஆயிரங்களைக் கொட்டி ட்யூஷனுக்குப் பிள்ளைகளை அனுப்புகிற சாராருக்கும், ஏழைகளுக்குச் சரியான கல்வி மறுக்கப்படுகிற அவலத்துக்குமான இடைவெளி மனதைப் பிறாண்டும்.

பெரிய அங்காடி முதல் சிறிய கீரைக்கடை வரை குடும்ப வியாபாரத்துக்குக் கல்லாவில் அமர்ந்து உதவும், பழகும் குழந்தைகளைப் பார்க்கிறார்தான். அது படிப்பைப் பாதிக்காமல் நடந்தால் பரவாயில்லை. அதிலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்த பேப்பர் ஏஜண்ட் போல மற்றவர் பிள்ளைகளைத் தம் சுயநலத்துக்குப் பலி கொடுப்பவரை மன்னிக்கவே முடிந்ததில்லை அவரால், தன் பெற்றோர் உட்பட.

த்தாம் வகுப்பில் இவர் நுழைந்த முதல் நாளன்று மாலை. டிரைவர் ஆறுமுகம் தன் தங்கை காமாட்சியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் வீட்டு வேலைக்கென. காமாட்சியின் கணவர் ஒருமாதம் முன்னர் தவறி விட்டதாகவும், பெண்ணின் படிப்புக்காக இங்கே அழைத்து வந்து, தன் பக்கத்து வீட்டிலேயே குடி வைத்திருப்பதாகவும் சொன்னார். காமாட்சியின் பின்னால் நின்றிருந்தது அன்று புது அட்மிஷனாக இவரது வகுப்பிலே சேர்ந்திருந்த வசந்தாதான். முதல் நாளே தன் பேச்சாலும் அறிவாலும் ஆசிரியர்களைக் கவர்ந்து விட்டிருந்தவள். அன்றைக்கு அவர் வீட்டுக்கு வந்தவளே. பிறகு ஒருபோதும் வந்ததில்லை, அம்மா கூப்பிட்டு அனுப்பும் வரை.

ஆனால் ஆறுமுகத்தின் மகன் ரங்கன் அடிக்கடி வருவான். வசந்தா இவர் வகுப்பில் என்றால் ரங்கன் சின்னக்கா வகுப்பில் இருந்தான். ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாத நல்ல கல்வி முறை இருந்தது அந்தக் காலத்தில். இவரை விட இரண்டு வயது பெரியவனாயினும் நெருங்கிய விளையாட்டுத் தோழன். வசந்தாவைத் திட்டிக் கொண்டேயிருப்பான். “இவ நல்லாப் படிக்கறதப் பார்த்து எப்பவும் எனக்கு வீட்டுல திட்டு விழுது. நான் பாஸாகிறது பத்தாதாம். அவளப் போல க்ளாசுல மொதலா வரணுமாம். எங்கழுத்த அறுக்கதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கா” என அங்கலாய்ப்பான். போதாதற்கு அவள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கிக் குவித்தது இன்னும் வெறுப்பை ஏற்றியது.

கோடை விடுமுறைக்கு பெரியக்கா வயிற்றில் மூன்று மாத மசக்கையும் கையில் இரண்டு வயது மகளுமாக வந்திருந்தாள். கூடவே ஆஸ்த்மா தொந்திரவு வேறு. அம்மா சாதுர்யமாகக் கேட்டாள், “ஏன் காமாட்சி. ரங்கன் வர்ற மாதிரி வசந்தாவும் நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கட்டுமே. இப்பப் பெரிய லீவுதான? சின்னவ கூட விளையாடட்டும். குட்டிப்பாப்பாவும் வசந்தாவைப் பாத்தா ஒட்டிக்குவா.”

காமாட்சி தலையைத் தலையை ஆட்டினாலும் அழைத்து வரவில்லை. அப்புறம் அம்மா நேராக விஷயத்துக்கு வந்து விட்டாள். ஒரு வாரத்தில் ஊருக்குக் கிளம்பவிருந்த அக்காவுடன் வசந்தா போய் ஒரு மாதம் உதவியாக இருந்து வரட்டுமென. காமாட்சியால் மறுக்க முடியவில்லை. மறுநாள் வசந்தா குழந்தையோடு பழக வீட்டுக்கு வந்தாள். அம்மா சின்னக்காவின் துணிமணிகளைக் கொடுத்ததோடு புதிதாகவும் ரெண்டு மூணு செட் எடுத்திருந்தாள். கூடவே பளபளவென ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் வாங்கிக் கொடுத்தாள்.

“படிக்கிற பொண்ணாச்சே. அதுவும் சின்னப் பொண்ணு” என ஆட்சேபித்த அப்பாவை“நம்ம பொண்ணுங்க இந்த வயசுல வீட்டு வேல செஞ்சதில்லையா? சின்னவ பாப்பாவப் பாத்துக்கறதில்லையா? அது போலதான? ஸ்கூல் திறக்குமுன்னே நானே போய் அழைச்சுட்டு வந்துடறேன்” என்று மடக்கினாள். நாத்தனாருக்குத் திருமணமென அக்கா போயே ஆக வேண்டியிருந்த சூழலில் அப்பாவால் தடுக்க முடியவில்லை.

வசந்தா ரொம்ப சமர்த்தாகப் பாப்பாவைப் கவனித்துக் கொள்வதாகவும் அதைவிட அருமையாகப் பாட்டு, பாடமெல்லாம் சொல்லித் தருவதாகவும் அக்கா எழுதிய கடிதத்தைக் காமாட்சியிடம் காட்டிப் புகழ்ந்தாள் அம்மா. பதினோராம் வகுப்பு ஆரம்பமாக சிலநாட்களே இருக்க வசந்தாவை அழைத்து வர அம்மா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரித் தெரியாது போக காமாட்சி வாய் விட்டேக் கேட்டு விட்டாள். அந்நேரம் ரங்கன் வசந்தாவிடம் தோற்றுவிடக் கூடாதென முயன்று படித்து பியுசி பாஸ் ஆகியிருந்தான், அம்மா அழகாகக் காய் நகர்த்த வசதியாக.

ங்கனைப் பட்டதாரியாக்கி, வேலை வாங்கித் தந்து, ஐந்து பவுன் நகையோடு வசந்தாவை அவனுக்குக் கட்டி வைப்பதாகவும் அதுவரை வசந்தா அக்காவுடனே இருக்கட்டுமென்றும் அம்மா சொல்ல “அவ அப்பாக்கு அப்படியொரு ஆசம்மா பொண்ணப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுமின்னு. புண்ணியவான் போய்ச் சேந்துட்டாரு. புகுந்த வூட்டு சனம் பொட்டைப்புள்ளக்கி எதுக்குப் படிப்புன்னு சொல்லப் போய்தான் அண்ணன அண்டிப் பொழைக்க இங்க வந்தேன். இந்த வருச கவர்மெண்டு பரிச்சயாச்சும் முடிச்சிரட்டுமேம்மா” தயங்கித் தயங்கிக் காமாட்சி சொன்னாள். அப்போதெல்லாம் பதினோராம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி!

“என்னைக்கானாலும் ரங்கனைக் கட்டிக்கிட்டுச் சோறாக்கத்தானே போறா? ரங்கனுக்கு நல்ல வேலை அமைஞ்சா இவ எதிர்காலந்தானே செழிப்பா இருக்கப் போது? நல்லா யோசிச்சு ஆறுமுகத்துட்டேயும் பேசிட்டுச் சொல்லு.”

ஆறுமுகத்துக்குக் கசக்குமா என்ன? தங்கை மனதை மாற்றினார். அப்பா ரங்கனைப் படிக்க வைப்பதில் பாவம் தீர்ந்து விடுமென எண்ணி விட்டார் போலும். ரங்கனுக்குக் கொஞ்சம் தன்மானம் அடிவாங்கின மாதிரி தோன்றினாலும் கல்லூரி ஆசை கை கூடியதில் ரோஷம் ஓடி ஒளிந்தது. பி.காம் முடித்த கையோடு வங்கி வேலையும் கிடைத்தது. அம்மா சொன்ன வாக்கு மாறாமல் பத்துக்குப் பதினைந்து பவுனாக நகை போட்டுக் கோவிலில் கல்யாணம் முடித்து, வீட்டுத் தோட்டத்திலே பந்தல் போட்டு ஊரைக் கூட்டிச் சாப்பாடு போட்டாள். திருமணத்துக்கு முன் தினம் வரை பெரியக்காவின் குழந்தைகள் இரண்டும் வசந்தா ஊட்டினால்தான் சாப்பிட்டன.

ஊர் மெச்சிய கல்யாண விருந்திலே வருத்தமாகக் கை நனைத்த ஜீவனாக அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியர். பதினோராம் வகுப்புப் பரீட்சையில் மாநிலத்தில் முதலாவதாய் வந்து, பள்ளிக்குப் பெயர் வாங்கித் தருவாள் வசந்தா எனப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர். ‘பெரிய கலெக்டராய் வருவாள்’ என வாய்க்கு வாய் பாராட்டியவர். இவரிடம் முணுமுணுப்பாகத் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுத் தளர்வாக வெளியேறினது இன்றும் கண்களினின்று அகலாக் காட்சியாக.

ழைப்பு மணி ஒலிக்க நினைவுகளிலிருந்து மீண்டார்.

பக்கத்திலிருந்த சொர்ணம் “இனியெங்க காவேரி வரப் போறா? ஏஜெண்டா இருக்கும். இல்லேன்னா அந்தப் பையனையே திருப்பித் துரத்தி விட்டிருப்பார். சும்ம மல்லுக்கு நிக்காம ரூவாயக் குடுத்தனுப்புங்க. கீரைக்கு நடையா நடக்கறது பத்தாம, விடிஞ்சும் விடியாமப் பேப்பருக்கு நடக்கப் போறீங்களாக்கும்?” அலுத்துக் கொண்டவள் “அத்தன காலையில தெருவெல்லாம் வெறிநாய்ங்க அட்டகாசம் வேற” கண்களை உருட்டிச் சின்னக் குழந்தையைப் பயமுறுத்துவதைப் போலச் சொன்னாள். அதே தெருவழிதான் அந்தச் சின்னப்பையனும் வரவேண்டும் எனும் நினைப்பு அவளுக்கு எழாதது வேதனையைத் தர, எதுவும் பேசாமல் போய்க் கதவைத் திறந்தார். நின்றிருந்தது சிறுவன் அல்ல. பளிச் முகத்தோடு பள்ளிச் சீருடையில் பதிமூன்று வயது மதிக்கத்தக்கச் சிறுமி.

யாரெனக் கேட்கும் முன்னர் அவளே “வணக்கம் சார். என் அம்மாதான் காவேரி. எதுத்த வீட்டுல வேல பாக்கும் அக்காவ வழியில பாத்தேன். அம்மா வரலன்னு பெரியம்மா கோவமா இருப்பதா சொன்னாங்க. ‘எனக்கும் நேரமில்ல. நீ போனா என்னாடி’ன்னாங்க. அம்மாக்கு ஒடம்பு முடியல. நாள வந்திடுவாங்க. எதும் செய்யணுமின்னா சொல்லுங்க. ஸ்கூலுக்கு லேட்டாப் போயிக்கலாம். மொதப் பீரியடு கேம்ஸுதான்” படபடவெனப் பேசினாள். சூட்டிகையான அந்தக் குழந்தையின் முகத்தில் அம்மாவின் வேலையைக் காப்பாற்றிக் கொடுக்க வந்தப் பெருமிதம்.

“இல்லம்மா. நீ ஸ்கூலுக்கு...”

பாய்ந்து வந்த சொர்ணம் இவரைத் தள்ளாத குறையாக இழுத்து நிறுத்திக் கதவை விரியத் திறந்து விட்டாள்.

இப்படியான தாக்குதலைச் சற்றும் எதிர்பாராதவர் அதிலிருந்து மீண்டு வரும் முன்னரே “நல்லதாச்சுப் பொண்ணே. வேறொண்ணும் செய்ய வேண்டாம். இன்னைக்கு ஒரே ஒரு நாள்.., பாத்திரத்தை மட்டும் தேச்சுக் கொடுத்துட்டுப் போயிடு” என்ற சொர்ணத்தைப் பின் தொடர்ந்தாள் அந்தச் சின்னபெண், முதுகில் பள்ளிக்கூடப் பையுடன் கருத்துப் போனக் கால் கொலுசுகள் சுடிதாருக்குக் கீழே தலைநீட்டி ’ஜலங் ஜலங்’ எனச் சத்தமிட.

திகைத்து நின்றிருந்த சபாபதிக்கு “ஒரே ஒரு மாசந்தானேங்க” ஐம்பது வருடங்களுக்கு முன் அப்பாவிடம் சொன்ன அம்மாவும், கணுக்கால் தெரியும் பாவாடை தாவணியில் மஞ்சள் துணிப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு அம்மா பரிசளித்தப் புதுக் கொலுசுகள் மின்னப் பெரியக்காவுடன் ரயிலேறிய வசந்தாவும் மீண்டும் நினைவுக்கு வந்தார்கள்.

***

59 கருத்துகள்:

  1. சித்திரம் தீட்டுவதுபோல நிகழ்ச்சிகளை மெருகேற்றி வழங்கிய அருமையான கதை..!

    பதிலளிநீக்கு
  2. அருமை யதார்த்தமான நடை

    பதிலளிநீக்கு
  3. ராமலக்ஷ்மி கதையை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள். ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்.

    முன்பு என்னகருத்து சொன்னேன் என்று நினைவு இல்லை. இப்போது தோன்றும் எண்ணம் இந்த குழந்தையின் படிப்பு வசந்தா போல் பாதியில் நின்று விடாமல் தொடர வேண்டும் என்பது தான்.
    மீண்டும் ஒரு வசந்தா ஆகாமல் இருக்க பிராத்தனைகள். அது போல் பேப்பர் பையன் படிப்பும் தொடரவேண்டும். எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் பையன் படித்துக் கொண்டு இருக்கிறான் காலையில் வெகு சீக்கீரம் போட்டு விட்டு ஓடுவான்.
    மதுரையில் என் அம்மாவீட்டு பக்கம் தன் அம்மாவிற்கு துணையாக பள்ளிவிட்டுவந்த பின் பூ கட்டுவான் ஒரு சிறுவன். இப்படி கஷ்டப்பட்டு படிக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது முடிந்த உதவிகளை பக்கத்தில் இருப்பவர்கள் செய்தாலே போதும் .

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கதையை ஏற்கெனவே படிச்சுக் கருத்துச் சொன்ன நினைவு இருக்கு. என்னனு நினைவில் வரலை. ஆனாலும் அருமையான கதை. மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி மாறுகின்றார்கள் என்பதைச் சொல்லுகிறது. அம்பத்தூரில் இருந்தப்போ எங்க வீட்டில் வீட்டு வேலை செய்த பெண்ணின் மகளுக்குப் பத்தாம் வகுப்புப்படிக்கையில் நாங்க பண உதவி செய்ததை அந்தப் பெண்மணி அந்தக் குழந்தையின் திருமணத்திற்குப் பயன்படுத்திவிட்டு (எங்களிடம் உண்மையைச் சொல்லவே இல்லை. ஒருவருஷம் கழிச்சுக் குழதை பிறந்தப்போத் தான் தெரிய வந்தது. நாங்களும் பள்ளிப்பாடத்தில் மும்முரம் னு நினைச்சோம்.)அந்தப் பெண்ணின் படிப்பை நிறுத்தித் தன்னைப் போல் வீட்டு வேலை செய்ய இன்னொரு வாரிசாக ஆக்கியதை இப்போது நினைத்தாலும் மனசு வேதனைப்படும். :(

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கதையை ஒவ்வொருவரும் தங்களது சொந்த அனுபவங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். காரணம், குழந்தைகளைப் பணியமர்த்துவது குறைவதற்கு பதிலாக அண்மைக்காலங்களில் மிகவும் அதிகரித்திருப்பதைத்தான் காண முடிகிறது. அனாவசியமாக, வார்த்தைகளுக்குப் பசைபோட்டு வாசிப்பவர்களுக்கு வலியேற்படுத்த மெனக்கெடாமல், எளிமையான நடையில் கதை சொல்லியிருப்பதற்கே ஒரு சபாஷ் போடணும்.

    பதிலளிநீக்கு
  7. இயல்பான, எளிமையான நடையில் சமூக அவலம் உணர்த்தும் சிறுகதை.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  8. சில நிகழ்வுகள் மனதில் பாதிப்பை உண்டுபண்ணும் அப்படி பாதிப்பேற்படுத்தும் நிகழ்வுகள் கதாசிரியையின் கதையில் பளிச்சிடுகிறது அழகான கதை நினைத்துக் கொண்டே இருக்கும்போது வரும்கதை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. மனதை தொட்டது கதை சென்ற விதம் அருமை நண்பரே... சகோ ராமலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துகள்.
    தமிழ் மணத்தில் இரண்டைத் தொட்டமைக்கு வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. கதையைப் பகிர்ந்து கொண்ட எங்கள் ப்ளாகிற்கும், கருத்தளித்த நண்பர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அருமையான கதை ..பகிர்வுக்கு நன்றிகள் ..
    எப்படித்தான் சிலருக்கு சிறு பிள்ளைங்கள வேலை வாங்க மனம் வருதோ :( ..மனித மனம் சுயநலம் பிடித்தது பல நேரங்கள்,தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் என்பது கசக்கும் உண்மை ..எங்க வீட்டில் ஊரில் இருந்தப்போ ஒரு பெண்மணி அவங்க மகளை (7 வயது ) கூட்டிட்டு வருவார் துணைக்கு எங்கம்மா முதல் நாளே கண்டிப்பா சொல்லிட்டார் அச்சிறு பெண் சும்மா உக்காந்திருந்தா மட்டுமே வீட்டில் விடுவேன்னு :) எங்களை விட ரெண்டு வயது sinna பெண்ணை வேலை வாங்குவது அம்மாக்கு பிடிக்கல .
    மற்றொரு விஷயம் ..இங்கே வெளிநாடுகளில் வேலை செய்ய ஒரு வயது வரம்பு இருக்கு ..
    13 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் மட்டுமே பேப்பர் போடலாம் அதுவும் 15 வயதுக்கு கீழ் எட்டு மணிநேரத்துக்கு மேலே ஒரு வாரத்தில் வேலை செய்ய முடியாது .அப்படி பெற்றோரால் வேலைக்கு செல்ல வற்புருதபட்டா யாரும் கம்ப்ளெயின்ட் பண்ணலாம் .ஸ்கூல் போற நேரத்தில் கட் பண்ணீட்டு வேலைக்கெல்லாம் போக முடியாதிங்க .சபாபதி போன்ற வாயில்லா கோழைகள் சுயநலம் பிடித்த காமாட்சி சொர்ணம் போன்றோர் உள்ளவரை வசந்தாக்களும் ,காவேரியின் மகளும் சன்மான கொலுசுகளும் தொடரும் :(

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான கதை! சீர்திருத்தங்களை வெளியாருக்கு சொல்லும் சமயம் நாமெ அதை கடைபிடிக்க தவறி சூழ்நிலைக் கைதிகளாக சிக்கிக் கொள்வதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்! அருமை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. காலத்தின் விழிப்புணர்வுக்கு ஏற்றவாறான கதை. பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சகோதரி!

    எனது பதினாங்கு வயதில் சேலம் டவுனில் நானே வீட்டுக்கு வீடு வார இதழ்களை என் சொந்த பொறுப்பில் போட்டவன் தான்! பள்ளிப் படிப்பும் மாலையில் இந்தக் காரியமும் சேர்ந்தே நடந்தது. சுமார் 50 வீடுகளாக இந்தப் பணி அதிகரிக்க பத்திரிகைகளை எல்லோருமே சுடச்சுட படிக்க விரும்பவே விகடனும் குமுதமும் 5 இதழ்களுக்கு மேல் வாங்க நேரிட்டது. 16 வயதில் திருவாரூரிலிருந்து வெளிவந்த 'மாதவி' என்னும் வாரப் பத்திரிகைக்கு சேலம் நகரில் விற்பனை ஏஜெண்ட்! பத்திரிகை எழுத்துலகில் இளம் வயதிலிருந்தே இருநத இருக்கின்ற ஆர்வம் இன்றைய 74 வய்து வரை தொடர்கிறது. எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் இளம் வயதில் நம் மனத்தில் படியும் எண்ணங்கள், அதற்கான செயல்பாடுகள் காலம்பூராவும் பலரில் தொடர்ந்தே வருகின்றன என்பதால்.

    அதனாலேயே இளம் வயதில் கல்வி மிக மிக முக்கியம். எல்லோருக்குமான கல்வி ஒரு தேசத்தின் மலர்ச்சி.
    நம் தேசத்திலோ வேலைக்காகக் கல்வி என்று அமைந்து போய் விட்டது, சிலருக்கு கல்விக்கு முன்னான வேலையாக சூழ்நிலை, அவசிய நிர்ப்பந்தங்களால் கல்வி மறுக்கப் படுகிறது. அந்த மறுத்தலை மாற்றுவதற்காகவே இந்த விழிப்புணர்வு. கல்விக்கு பின்னான வேலையையும் அனைவருக்கும் நிச்சயப்படுத்த வேண்டும். அதுவே கல்விக்கு முன்னான வேலை நிர்பந்தத்தை நிகழச் செய்யாமல் தடுக்கும் வலிமை பெற்றிருக்கும்.

    என் நண்பர் ஒருவர் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். போன வாரம் அவரைச் சந்திக்க நேர்ந்தது. சுமாரான பரப்பளவு கொண்ட கடையின் உள் சுவரில் ஒரு பெரிய படம் மாலை சூட்டப்பட்டு மாட்டியிருக்கும். நண்பர் புகைப்படத்திலிருந்த பெரியவரை தெய்வமாக மதிப்பவர். பத்து வயதில் புகைப்படப் பெரியவரின் ஒர்க் ஷாப்ப்பில் பணியைக் கற்றுக் கொண்டது, இன்று இந்த ஒர்க் ஷாப்பை தனதாக நடத்தும் பயிற்சியை வளர்த்திருக்கிறது. ஹோண்டா, யமஹா என்று எந்த வண்டியையும் கழற்றிப் பழுது பார்த்துப் பூட்டுவதில் நண்பர் அதி திறமைசாலி.

    தனது இளம் வயதில் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை அவர் நினைவில் இன்றும் தணலாக மறைந்திருக்கிறது. அதனால் இயல்பாகவே எந்தச் சிறாரையும் பணிக்கு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் வளர்ந்த பையன்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் ஆட்டோமொபைல் கல்வியைப் படித்தவர்கள்.சிலர் பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தியார்கள். கல்வி கற்கும் வாய்ய்ப்பை இழந்த சிலரிடம் தொழிலைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமிருப்பதாக அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.


    பதிலளிநீக்கு
  14. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதை....... இன்றைக்கும் இப்படி பல குழந்தைகளின் நிலை இருப்பது சோகம்.....

    பதிலளிநீக்கு
  17. நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பர் கைலாசநாதன் நடராசன்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி நண்பர் சேட்டைக்காரன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் கில்லர்ஜி. தமிழ்மண இரண்டாமிடம் பெற்றதற்குப் பாராட்டியதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அருமையான கதை நண்பரே, பகிர்ந்தமைக்கு நன்றிகள். சகோ ராமலட்சுமிக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. நல்ல கதையா இருக்கே ,கேட்காமலே இதை நீங்கள் போட்டிருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  25. நான் கூட பேப்பர் போடும் பையன் பற்றி கவிதை ஒன்றை எழுதியுள்ளேன்

    பதிலளிநீக்கு
  26. வாசித்ததும் கண்களில் கண்ணீர் முட்டி நின்று விட்டது. இங்குதான் இப்படி. குழந்தைத் தொழிலாளிகள் மனிதர்களின் சுயநலத்திற்காகப் பலியாக்கப்படுகின்றார்கள். வெளிநாடுகளிலும் குழந்தைகள் வேலை செய்கின்றார்கள் ஆனால் இப்படி அல்ல. அங்கு வயது உண்டு. வயது வந்த பிள்ளைகள் மட்டுமே போக முடியும் அதுவும் பள்ளிக்குப் போகாமல் போக முடியாது. புகார் கொடுத்தால் அவ்வளவுதான்...

    இப்போது குறிப்பாகப் பெண் குழந்தைகள் இப்படி வேலைக்குப் போவது குறைந்துள்ளதாகத் தெரியவில்லை. மனிதர்கள் சுயநலவாதிகள்...

    அருமையான நடையில் அழகாக மனதைத் தொடும் வகையில் சொல்லிச் சென்றுள்ளார். வாழ்த்துகள் சகோதரிக்கும் இதைப் பகிர்ந்த தங்களுக்கும்..

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் மீண்டும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  28. அன்பு ராமலக்ஷ்மியின் கதை நினைவில் இருக்கிறது. மிக உருக்கம். நிதர்சனமாக இப்பவும் தொடர்கிறது. ஆனால் எங்க வீட்டு ராணி...உதவி செய்பவர் தன் பேரன் பேத்திகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளார். மொத்தம் 11 பேரன் பேத்திகள். அத்தனை குழந்தைகளுக்கும் எங்கள் காலனியே உதவி செய்கிறது. ராணியும் கணவரும் பால் பாக்கெட் வினியோகம் காலை 4 மணிக்கு ஆரம்பித்தால் 6 மணிக்கு முடிப்பார்கள். நல்ல வருமானம். வெற்றி பெற்ற மங்கையரில் ராணியை ஒருத்தியாக வைக்கிறேன். எல்லாக் குழந்தைகளுக்கும் இது போல வாழ்வு கிடைக்கணும். ராமலக்ஷ்மிக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  29. //சகோதரி ராமலக்ஷ்மியின் படைப்புகளில் ஒரு சமூகப் பார்வை இருக்கும்.//

    உண்மை. கதையின் சுவாரசிய வடிவமைப்பினால், தொய்வும் இருக்காது.

    பதிலளிநீக்கு
  30. எளிய நடையில் மிகவும் யதார்த்தமான கதை. கதாசிரியருக்குப் பாராட்டுகள். வெளியிட்டுள்ள எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.

    Same problem for sending comments to the above Post also.

    VGK

    பதிலளிநீக்கு
  31. நடைமுறை அவலத்தைக் கருவாக எடுத்து நல்ல நடையில் எழுதியிருக்கும் ராமலெக்ஷ்மிக்குப் பாராட்டுக்கள்! காலம் எவ்வளவு முன்னேறினாலும் நம் நாட்டில் குழந்தைகளை வேலைக்கு வைப்பது இன்னும் குறைந்தபாடில்லை. புரட்சி பேசுபவர்கள் கூட அவர்கள் சுயநலத்துக்காக கொள்கையை மாற்றிக் கொள்கிறார்கள் என்ற உண்மையை மனதைத் தொடுமாறு எடுத்துச் சொன்ன விதம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  32. இந்தக் கதை அக்காவின் தளத்தில் படித்த ஞாபகம்...
    மிகச்சிறப்பாக எழுதக்கூடியவர்...
    வாழ்த்துக்கள் கதை பகிர்ந்த தங்களுக்கும்... கதை எழுதிய அக்காவுக்கும்...

    பதிலளிநீக்கு
  33. எளிய நடையில் மிகவும் யதார்த்தமான கதை. ஓவியமாக அமைந்துள்ள காவியமாகக் காட்சியளிக்கிறது.

    கதாசிரியருக்குப் பாராட்டுகள். வெளியிட்டுள்ள எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  34. வை.கோ.சார்! நீங்கள் குறிப்பிடும் காவியத்திற்கான படத்தை வரைந்தவர் ராமு என்னும் ஓவியர்.

    பதிலளிநீக்கு

  35. ஜீவி said...
    வை.கோ.சார்! நீங்கள் குறிப்பிடும் காவியத்திற்கான படத்தை வரைந்தவர் ராமு என்னும் ஓவியர்.//

    மிக்க மகிழ்ச்சி. ‘ராமு’ என்னால் மறக்க முடியாததோர் பெயர். என் சீமந்த புத்ரனான G. RAMAPRASAD ஐ நாங்கள் செல்லமாக அழைக்கும் பெயரும் அதுவே. தகவலுக்கு மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  36. உயர்திரு. ஜீவி சார் அவர்கள், தனது சிறுவயதில், தனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்தையும், தனக்குப் பரிச்சயம் ஆன வேறுசிலரின் அனுபவங்களையும், விரிவாக விளக்கி இங்கு பின்னூட்டமாகத் தந்துள்ளது, நமக்கெல்லாம் ஓர் பாடமாகத்தான் உள்ளது.

    இளமையில் வறுமை என்ற கொடுமையால், எனக்கும் இதுபோல பல்வேறு கசப்பான அனுபவங்கள், என் பள்ளிப்படிப்பு முடிந்து, மேற் படிப்புகளை என்னால் தொடர முடியாமல் நிகழ்ந்துள்ளன.

    அவை பற்றிய செய்திகளில் கொஞ்சம் மட்டும் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற என் விறுவிறுப்பான நகைச்சுவைத் தொடரில் எழுதியுள்ளேன். ஆரம்ப முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/03/1.html நிறைவுப்பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    இந்த என் தொடரின் அனைத்துப்பகுதிகளையும் மிகவும் ஆர்வமாகப் படித்து, நம் மதிப்புக்குரிய திரு. ஜீவி சார் அவர்கள், மனம் திறந்து எழுதியுள்ள பின்னூட்டங்கள் என்னால் என்றுமே மறக்க முடியாத பொக்கிஷங்களாகும் என்பதை நன்றியுடன் மீண்டும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  37. நெகிழ வைக்கும் நடை.அருமை.வாழ்த்துக்கள்.இயன்ற வரை நம்மால்முடிந்த உதவிகளை செய்வோம்

    பதிலளிநீக்கு
  38. வை.கோ. சார்! உங்களுக்கே தெரியும். அந்தக் கால கூட்டுக் குடும்ப வாழ்க்கை வளத்தில் வறுமையே தெரியாது. அதுவும் குழந்தைகளை வறுமையே தெரியாமல் வளர்ப்பார்கள். வார்ப்பத்திரிகைகளை வாங்கி அதில் வரும் தொடர்களதகளை 'பைண்ட்' செய்து புத்தகங்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காக நான் 'லெண்டிங் லைப்ரரி' நடத்தினேன்.

    பள்ளிக்குப் போய் படிக்க வேண்டிய பால பருவத்தில் வேலைக்குப் போவது ரொம்பவும் கொடுமையானது. கல்விக் கூடத்திற்குப் போய் கற்றுத் தேர்ந்த வாலிப வயதில் தகுந்த வேலை கிடைக்காமல் தடுமாறுவது அதனினும் கொடிது. அறிவுக்காக கல்வி அல்ல நம் நாட்டில். வேலைக்காகவே கல்வி. கல்வி கற்றும் தகுந்த வேலை கிடைக்கவில்லை எனில், 'எதற்காக என் படிப்புக்கு செல்வு செய்தார்கள்?..இதற்கு பெட்டிக்கடை வைத்திருக்கலாம்' என்று நொந்து போகும் வாலிப உள்ளங்களுக்கு நம்மிடம் பதிலில்லை.

    மேலை நாடுகளில் கல்வி கற்கும் இளம் வயதிலேயே பையனின் மனம் விரும்பும் கல்வியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.(பிரகாஷ்ராஜின் 'டோனி' நினைவுக்கு வருகிறது) ஆனால் இங்கோ பையனுக்கு சீட் கிடைப்பதற்கு ஏற்பவான கல்வி அவனில் திணிக்கப் படுகிறது. வேலை கிடைத்தாலும் விருப்பத்திற்கேற்பவான வேலை கிடைக்காதது அடுத்த கொடுமை. 'கிடைப்பதை விரும்பக் கற்றுக் கொள்' என்பது இங்கு வேதமாகியிருக்கிறது.

    மெக்காலே கல்வி முறை 'இதுவே போதும்' என்று ஓரளவு திருத்தியுடனேயே வாழ நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. தொழிற்கல்வி கற்போரையும் அவர் திறமைக்கேற்பவான முன்னேற்றத்தை காணமுடியாமல் முடக்கிப் போட்டிருக்கிறது. என்னதான் நெருக்கடிகளை எதிர் கொண்டாலும் சொந்தத் தொழில் செய்வோர் ஓரளவு சுதந்திரப் பறவைகள் என்றே சொல்ல வேண்டும்.

    கோவை ஜி.டி.நாயுடுவை பெரும்பாலும் இந்தக் காலத்து இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் தேடுதலில் நிச்சயம் கிடைப்பார். விருப்பம் இருப்பவர்கள் அவர் வாழ்க்கையைப் படித்துப் பார்க்கலாம்.

    'எல்லோருமே ஜி.டி.நாயுடு ஆகி விட முடியுமா?' என்று கேட்போருக்கு என்னிடம் பதிலில்லை. குறைந்தபட்சம் ஜி.டி. நாயுடு போல வாழக்கையில் ஜொலிக்க ஆசையாவது படலாமில்லையயா?

    பதிலளிநீக்கு
  39. //ஜீவி said...
    வை.கோ. சார்! உங்களுக்கே தெரியும். அந்தக் கால கூட்டுக் குடும்ப வாழ்க்கை வளத்தில் வறுமையே தெரியாது. அதுவும் குழந்தைகளை வறுமையே தெரியாமல் வளர்ப்பார்கள்.//

    இது பெரும்பாலும் உண்மையே. சிறு குழந்தையான பருவத்தில், அப்பா அம்மாவுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததால், நாமும் வறுமையை உணர வாய்ப்பே இல்லைதான்.

    இருப்பினும் பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஒருநாள்கூட வீட்டில் சும்மா இல்லாமல் ஏதேதோ குறைந்த வருவாயில், கிடைத்த மிகக் கடுமையான வேலைகளில் சேர்ந்து கொள்ளும்படி ஆனது. இதனால் நிறைய உலக அனுபவம் கிடைத்தது.

    படிப்பினில் மிகுந்த ஆர்வம் எனக்கிருந்தும் என் குடும்ப வறுமையால் மட்டுமே என்னால் என் படிப்பை மேலும் தொடர அன்று இயலவில்லை. பிறகு 40 வயதுக்கு மேல் 47 வயதிற்குள் மட்டுமே மூன்று வெவ்வேறு பல்கலைக்கழங்களில் சேர்ந்து, மூன்று வெவ்வேறு பட்டங்கள் பெற முடிந்தது.

    //வாரப்பத்திரிகைகளை வாங்கி அதில் வரும் தொடர்களதகளை 'பைண்ட்' செய்து புத்தகங்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காக நான் 'லெண்டிங் லைப்ரரி' நடத்தினேன்.//

    புரிகிறது. நானும் அதுபோலத் தொடர் கதைகள் சிலவற்றை கஷ்டப்பட்டுத் திரட்டி பைண்ட்டிங் செய்யாமல் என்னிடம் சேமித்து வைத்துக்கொண்டதும் உண்டு.

    தங்களின் மற்ற அனைத்து விளக்கங்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  40. நன்றி ஹூஸைனம்மா, வல்லிம்மா, குமார், கலையரசி, பாபு, VGK sir & ஜீவி sir.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!