திங்கள், 8 பிப்ரவரி, 2016

"திங்க"க்கிழமை 160208 :: விசேஷ டிப்ஸ்கள்!


இந்த வாரம் செய்முறை வேறு மாதிரி.  எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்று இல்லாமல், எப்படிச் சாப்பிடுவது என்பதற்கு எனக்குத் தெரிந்த டிப்ஸ்!

- சில விசேஷங்களில் காலை டிஃபனும், அடுத்து சாப்பாடும் அடுத்தடுத்து இடம் பெற்று விடும்.  உதாரணமாக காலை ஆறரை மணிமுதல் அல்லது 7 மணிமுதல் டிஃபன்.  9 மணிக்கே சாப்பாடு.
 

                                   Image result for idli images   Image result for vadai images
 
 
 
இது மாதிரி சமயங்களில் நீங்கள் அங்கேயே இருப்பவரானால், டிஃபனை முதல் பந்தியில் முடித்து விடுதல் நலம்.  அப்படியானால் சாப்பாட்டை மூன்றாவது பந்தியிலாவது ருசிக்கலாம்.  இட்லி, பொங்கல், ஊத்தப்பம், வடை, பூரி என்று ஏகப்பட்ட ஐட்டங்கள் போட்டால் ஒன்றிரண்டைத் தியாகம் செய்தால் கூடப் பரவாயில்லை.  அல்லது குறைந்த பட்சம் ஒவ்வொரு வகையிலும் ஒன்று மட்டும் சாப்பிடுதல் நலம்.  வயிறு நிரம்பி விடாது.  


                                Image result for akkaravadisal images Image result for ven pongal images
 
அதே காலை டிஃபனில் பொங்கல் அல்லது நெய் கலந்த ஸ்வீட்கள் போட்டால் அவற்றை அடக்கி வாசிக்க வேண்டும்!  இல்லா விட்டால் வயிறு 'டம்'மென்று ஆகி, பின்னர் ருசிக்கப் போகும் சாப்பாட்டின் சுவையை உணர முடியாமல் செய்து விடும்.  அதிலும் இந்தப் பொங்கல் இருக்கிறதே..   அந்த நாள் முழுவதும் வேறு எதுவும் சாப்பிட முடியாமல் செய்து விடும்!  மதியச் சாப்பாட்டைக் கூட விடுங்கள்!  அது ஒரு திருமணமாயிருந்தால் அன்று மாலை போடவிருக்கும் டிஃபன்!  அதுவே வெளியிலிருந்து நிகழ்ச்சிக்கு வருபவராயிருந்து, தாமதமாக வந்து விட்டால் டிஃபனை பகிஷ்கரித்து விடுங்கள்.  ஏனென்றால் ஆறிப்போன டிஃபனை விட, சூடான சாப்பாடு அதிகச் சுவை!


                                                                 Image result for unienzyme images
 
இது போன்ற விசேஷ நாட்களில் கொஞ்சம் வயதானவர்கள் Unienzyme Capsule கைவசம் வைத்துக் கொள்வது நல்லது.  நாள் முழுவதும் வித்தியாசமான ஐட்டங்கள் யாவற்றையும் ருசிக்கலாம்.

                      Image result for filter coffee images      
Image result for cool drinks images
 
- நடு நடுவே காஃபி, கூல் ட்ரிங்க்ஸ் போன்ற பானங்கள் தருவார்கள்.  ஆசைப் பட்டு விடக் கூடாது.  ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள் என்றாலாவது ஓகே,  காஃபி, செயற்கை ட்ரிங்க்ஸ் போன்றவையும் நம் வயிற்றை அடைத்து, கெடுத்து, வேறு எதையும் ருசிக்க விடாமல் செய்து விடும்! 

ஆனால் காஃபியின் தரம் அறிய ஒரு முறையாவது ருசித்து விட வேண்டும்.  கொஞ்சமாக ருசிக்கலாம். இதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது.  காஃபியை அவர்கள் மொத்தமாகக் கலந்து வைத்திருப்பார்கள்.  எனக்கோ சர்க்கரைக் குறைவாய் இருக்க வேண்டும். (நான் டயபடிக் அல்ல) எனவே காஃபி தயார் செய்யுமிடம் சென்று எனக்கு வேண்டிய அளவில் சர்க்கரை போட்டு வாங்கிக் கொள்வேன்.  அதுவும் கால் கோப்பைதான்!
ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.  ரொம்ப ஆச்சாரம் பார்க்கும் வீட்டின் நிகழ்ச்சி.  சமையல் வேலை கூட அதே போன்ற ஆட்களைத்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  காஃபியைத் தயார் செய்பவர், டிகாக்ஷனைப் பாலுடன் கலந்து சர்க்கரைப் போட்டு ஒரு கப்பில் ஊற்றிக் குடித்துப் பார்த்தார்.  தூக்கித்தான் குடித்தார்.  திருப்தி.  மிச்சத்தை அப்படியே அந்தப் பாத்திரத்தில் இருந்த காஃபியுடன் சேர்த்து விட்டார்!  விசேஷங்களிலும், ஏன் ஹோட்டல்களிலும் கூட சமையல் செய்யும் இடத்தைப் பார்க்கக் கூடாதுதான்!  சில இடங்கள் சுத்தமாகவே இருக்கும்.  


                                                                        Image result for bhel poori images

                                 Image result for pop corn images    Image result for pani poori images 

 
- பாப்கார்ன், பானி பூரி, பேல்பூரி, பஞ்சு மிட்டாய் எல்லாம் சில கல்யாணங்களில் ஏற்பாடு செய்திருப்பார்கள்.  அவை எல்லாம் நமக்கு வேண்டாம்.  இவற்றை ருசித்தோமானால் பின்னர் பரிமாறப்படப் போகும் சிலபல முக்கியப் பதார்த்தங்களைச் சுவைக்க முடியாமல் போகலாம்!  "நாம் பார்க்காத பாப்கார்னா, இல்லை, பஞ்சு மிட்டாயா!  ஹ!" என்று நகர்ந்து விடவேண்டும்.  பேல், பானி பூரிக்களைச் சுவைக்க மனம் ஆசைப்படுமானால் அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.



                                                                         Image result for south indian marriage dining hall images
 
- பரிமாறும்போது முதலிலிருந்தே சில ஐட்டங்களைக் காலி செய்யத் தொடங்கி விட வேண்டும்.  உதாரணமாக முதலில் பரிமாறப்படும் துளிப் பாயசம், தயிர்ப் பச்சடி.  அந்தத் துளிப் பாயசத்தை உடனே காலி செய்யா விட்டால், அடுத்து பரிமாறப்படும் பருப்பு, சாம்பார் போன்றவைகளுடன் கலந்து சுவை கெடுக்கும்!  தயிர்ப் பச்சடியை எதனுடன் சேர்த்து சாப்பிடுவது என்று புரியாமல் அது பாட்டுக்கு சாப்பிடப்படாமல் அனாதையாய் நின்றிருக்கும். 

                                                                        Image result for south indian marriage dining hall images
 
- பிடித்த அயிட்டங்களைச் சிலபேர் கடைசியில் சாப்பிட என்று வைத்திருப்பார்கள்.  பிடிக்காத ஐட்டங்களை உடனே காலி செய்து விடுவார்கள்.  ஆனால் இது தவறு.  ஏனென்றால் ஒரு விசேஷத்தில் பெரும்பாலும் செலவாகாமல் மிஞ்சுவது இது போன்ற துணைப் பொருட்கள்தான்! 

கோஸ் கறி, உசிலி, தயிர்ப் பச்சடி போன்றவை நிறைய மிஞ்சி விடும்.  (நாம் வீட்டில் செய்யும் உருளைக் கிழங்குக் கறியின் சுவையை விசேஷங்களில் பரிமாறப்படும் போது எதிர்பார்க்க முடியாதுதான்)  இவற்றை தள்ளி விடவே முயற்சிப்பார்கள்.  எனவே நமக்குப் பிடித்தவற்றை முதலில் காலி செய்தால் அவை மறுபடி பரிமாறும்சாத்தியக்கூறு உண்டு.  பிடிக்காதவற்றை அப்படியே வைத்திருந்தோமானால் மேற்கொண்டு அவற்றைப் பரிமாறாமல் தாண்டிச் சென்று விடுவார்கள். 

ஆனால் அதற்காக அவற்றை வீணாக்கும் பழக்கம் தவறு.  நான் வீண் செய்ய மாட்டேன்.  கடைசியில் அவற்றையும் காலி செய்து விட்டுத்தான் எழுவேன்!  முதலில் பரிமாறும்போதே கட்டாயம் பிடிக்காத பண்டங்களை கைகாட்டித் தடுத்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் சுவை எப்படி என்று தெரிந்து கொள்ள மட்டும் கொஞ்சமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்!
- சில நேரங்களில் நாம் எக்ஸ்ட்ரா அப்பளம் அல்லது வடை கேட்டோமானால், நாம் எழுந்திருக்கும் வரை அந்தக் குறிப்பிட்ட சர்வர் நம் பக்கம் வருவதையே தவிர்த்து விடுவார்.  அல்லது கண்டும் காணாது போல தாண்டிச் செல்வார்.  நாம் சங்கோஜப்பட்டு மறுபடி கேட்க மாட்டோம்.  அப்படியே கேட்டாலும், திரும்பி  "ஏ... ராஜா... ஸாருக்கு ஒரு வடை கொண்டு வா.." என்று குரல் கொடுப்பார்.  அந்த "ராஜா" ஏனென்று கூட பதில் சொல்ல மாட்டார்! நீங்கள் இது மாதிரி சமயங்களில் சர்வரைக் கேட்பதைவிட, பெண் / மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் பந்தி விசாரிக்க வருவார்கள் இல்லையா, அப்போது அவர்களிடம் இது மாதிரி எக்ஸ்ட்ரா ஐட்டங்களைக் கேட்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 
 

               Image result for pathar peni images                 Image result for pathar peni images
 
- விசேஷங்களில் 'இவை எல்லாம் நிச்சயம் நன்றாயிருக்கும்' என்று சில விஷயங்களைப் ஓரளவு (!) பட்டியலிடலாம்.  அவை யாவன : தயிர்வடை, சாம்பார் வடை போன்றவை, சில சமயங்களில் அவியல், பதர்ப்பேணி போன்ற சமாச்சாரங்கள், சிலவகைப் பாயசங்கள் (எல்லா வகையும் அல்ல),  சப்பாத்தி-பனீர் மசாலா!  
 
         Image result for milk payasam images    Image result for chapati, images Image result for paneer gravy images
 
இது மாதிரி விசேஷங்களில் போடப்படும் வெரைட்டி ரைஸ் அவ்வளவு சுகமாக இருப்பதில்லை.  அவற்றை முடிந்தவரைத் தவிர்த்து விட்டால், குறைத்து விட்டால் வயிற்றுக்கு நல்லது.


-

57 கருத்துகள்:

  1. நல்ல டிப்ஸ் கிடைச்சிடுச்சு...
    இப்போ யார் பந்திக்குக் கூப்பிடுவா,,ஹ்ம்ம்...

    :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான டிப்ஸ்.....ஆனால் எங்கள் ஊரில் இப்படி எல்லாம் பொதுவாக அயிட்டங்கள் கிடையாது வைப்பதில்லை. கேரளத்து ஸ்டைலில் மட்டுமே...கல்யாணம் போன்ற விசேஷங்களும் ஒரு சில மணி நேரங்களே என்பதால் ஒரே சாப்பாடுதான். தமிழ்நாட்டுக் கல்யாணங்கள் குறித்துச் சமீபத்தில் கேள்விப்பட்டது எல்லாம் செம செலவு என்பது போல் தோன்றியது உணவும் வீணாகின்றது என்பதும்...

    கீதா: வேண்டியதை மட்டுமே போட்டுக் கொள்வேன். டயர் வேறா..அதனால்...பல அயிட்டங்களைத் தவிர்த்துவிடுவேன்...காய்கறிகளைத் தவிர்ப்பதில்லை. உணவை வீணாக்கவே மாட்டேன். எங்கள் வீட்டிலும் அப்படியே என்பதால்...ஒருவேளை கை மறுத்துக் காட்டியும் இலையில் போட்டுவிட்டார்கள் என்றால் ஸ்வீட் என்றால் எடுத்து வைத்துக் கொண்டுவிடுவேன்... அதை வீணாக்குவதில்லை. சாப்பிடும் முன் என்றால் அருகில் வேண்டப்பட்டவர்கள் என்றால் கொடுத்துவிடுவேன்.
    நல்ல டிப்ஸ் அதுவும் இப்போதெல்லாம் அதீத உணவு வகைகள். வீணாவதும் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
    அது சரி அந்த ஆச்சார வீட்டில் அவர் எப்படித் தான் சுவை பார்த்ததைக் (தூக்கிக் குடித்தார் என்றாலும்) கலந்தார்!!!!!!!! ஆசாரம்????

    பதிலளிநீக்கு
  3. பந்தி புராண டிப்ஸ் படிச்சாச்சு ,செயல்படுத்திப் பார்க்கலாம்னா ,நேற்றோடு..அழைக்கப் பட்ட விசேசங்கள் எல்லாம் முடிஞ்சு போச்சே :)

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அருமை அருமை, நல்ல நல்ல யோசனைகள் தான்.

    நான் தயிர் பச்சடியை உடனே சாப்பிட்டுவிடுவேன். அப்புறம் தாங்கள் சொன்னது போல் பிடிக்காத அயிட்டங்களைத் தான் முதலில் காலிசெய்வேன். இப்ப மாத்திக்கிறேன்.

    புகைப்படங்கள் அனைத்தும் சாப்பிடத்தூண்டும் வகையில்,, அதுவும் அந்த இடியாப்பம்,, ம்ம்,

    நல்ல டிப்ஸ் தான் சொல்லியிருக்கீங்க,, நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ருசியான பதிவு. டிப்ஸ் அருமை. நான் எனக்குப் பிடிக்காத பதார்த்தங்களை என் இலையில் போடவே அனுமதிக்க மாட்டேன்.

    ஒருவேளை ஏற்கனவே பரிமாறப்பட்டிருந்தால், அவற்றை என் பக்கத்து இலைக்கு முதல் வேலையாக மாற்றிவிடுவேன். பிறகு தான் நான் சாப்பிடவே ஆரம்பிப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. கிட்ட வரச்சேயே எது வேணும், எது வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆகவே பிரச்னை இல்லை. ஆனால் பாருங்க, ரசிச்சு, ருசிச்சு ரசம் சாதம் சாப்பிடும்போது, பாயசத்தைக் கிண்ணத்தில் ஊற்றினதுமே மோருக்குச் சாதத்தை எடுத்து வந்து விடாப்பிடியாத் தலையில் கட்டப்பார்ப்பது இன்னமும் குறையவில்லை. சென்ற வாரம் சென்றிருந்த மைத்துனர் வீட்டுத் திருமணத்திலும் பிரபலமான ஏ.எஸ்.ராஜசேகரன் அவர்களின் காடரிங் சேவை. அங்கேயும் இதே குறை தென்பட்டது. நான் ரசம் சாதம் சாப்பிடுகையில் மோருக்குச் சாதத்தை எடுத்து வர, வேறு வழியில்லாமல் ரசம் சாதத்தைக் கைகளால் மூடி ஒதுக்கிக் கொண்டு மோர் சாதம் போட இடத்தைக் காட்டினேன். பக்கத்தில் நம்ம ரங்க்ஸ் அப்போத் தான் ரசம் ஊற்றிப் பிசைந்து கொண்டிருந்தார்! அங்கே கொண்டு போனதும் கத்தினார் பாருங்க! ஆடிப் போயிட்டேன். அப்புறமா சூபர்வைசரிடம் சொல்லிச் சாப்பிட்டதும் கொண்டு வரச் சொன்னோம். இது மாதிரியான குறைகளை வைணவர்களின் கல்யாணங்களில் பார்க்கவே முடியாது! அவங்க அவங்க சொந்த மனிதர்களைத் தவிர மற்றவரைப் பந்தி பரிமாற அனுமதிப்பது இல்லை. அது தான் முக்கியக் காரணம்! :(

    பதிலளிநீக்கு
  7. சிலர் உயிர் வாழ சாப்பிடுகிறார்கள் சிலர் சாப்பிட உயிர் வாழ்கிறார்கள்.நான் சாப்பிடுவது மிகவும் மெதுவாக. பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் பெரும் பாலான சமயத்தில் நான் சுவை பார்க்கத் துவங்கும் போது பந்தியே முடிந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  8. பந்தியில் சாப்பிடுவது ஒரு கலைதான்.

    பதிலளிநீக்கு
  9. இதெல்லாம் இப்பொழுது பழைய காலம் என்று ஆகி விட்டது வேதனையானதே...

    பதிலளிநீக்கு
  10. சரி.சரி... நீங்கள் சொன்னதெல்லாம் கவனத்தில் கொண்டாயிற்று. ப.க சார் அவரின் சதாபிஷேகத்துக்குக் கூப்பிட மறந்துவிட்டார். எங்கள் பிளாக்கில் என்ன சௌகரியம்னா... ஆசிரியர் குழு, ரெகுலர் வாசகர் குழு என்று ஏகப்பட்ட பேர் இருக்காங்க. சரி.. எப்போ இன்விடேஷன் அனுப்பறீங்க? நீங்க சொன்னதெல்லாம் ஃபாலோ பண்ணவேண்டும்னா, கல்யாணம்தான் சரிப்பட்டுவரும். இன்விடேஷன் அனுப்ப மறந்துறாதீங்கோ...

    பதிலளிநீக்கு
  11. பசியை கிளப்பிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    நல்ல ஐடியா...பின்பற்றுகிறோம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. படங்களை பார்த்ததும்,பதார்த்தங்களின் ருசி நினைவில் வந்து விட்டது!

    பதிலளிநீக்கு
  14. அருமையான டிப்ஸ்....
    ஆனா போட்டிருக்கும் படமெல்லாம் பார்த்ததும் பசி கிளம்பிடுச்சு அண்ணா...

    பதிலளிநீக்கு
  15. அருமை நண்பரே
    பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதும்கலைதான்

    பதிலளிநீக்கு
  16. பந்தியில் சாப்பிடும் முறை பற்றி எழுதி விட்டீர்கள். தற்போது சிலர் ஹோட்டல்களில் கல்யாணம் நடத்துகிறார்கள். அங்கு பந்தி பரிமாறும் முறை இல்லாது buffet முறை கடைப்பிடிக்கப்படுகிறது. buffet முறையில் எப்படி சாப்பிடுவது என்றும் ஒரு பதிவு இடுங்கள்.

    கேரளத்தில் கல்யாணம் என்றால் ஒரே ஒரு சாப்பாடு மட்டும் போடுவார்கள். அது எந்த நேரமானாலும் சரி. அது 3 பாயசம் உட்பட 21-31 ஐட்டம் கொண்டதாக இருக்கும்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. திரு JK22384, அண்ணா, பஃஃபே முறையில் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பரிமாறும் முறையே தெரியவில்லை! :( அதோடு இரண்டாம் முறை உணவை எடுக்கவோ அல்லது மீண்டும் உணவை எடுக்கவோ ஏற்கெனவே சாப்பிட்ட தட்டை வைத்துவிட்டு வேறொரு புதிய தட்டை எடுக்க வேண்டும் என்பதும் பலருக்கும் தெரிவதில்லை. ஸ்பூன், கத்தி போன்றவற்றை வைக்கும் முறையும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் புரிவதில்லை! :( பஃபே தென்னிந்தியாவுக்கு ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்தில் ஒரு சில நிகழ்வுகளின் போது சாப்பாடு பஃஃபே முறை என அறிவிப்பார்கள். ஆனால் வரிசையாக வந்து நாமே தேர்வு செய்து எடுத்துக்கொள்ளும் முறையே கிடையாது. எல்லா உணவுகளையும் ஒரே சமயத்தில் வாரித் தட்டில் போட்டுக் கொள்வார்கள். அல்லது நமக்குப் போட்டுவிடுவார்கள். :(

    பதிலளிநீக்கு
  18. அருமையான டிப்ஸ். படங்களும் மிக அழகு. எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வழிமுறைகள் நல்லாத்தான் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  20. வழிமுறைகள் நல்லாத்தான் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  21. நன்றி கிரேஸ். எப்போ யார் கூப்பிடறாங்களோ அப்போ யூஸ் பண்ணிக்குங்க..!

    பதிலளிநீக்கு
  22. நன்றி துளசிஜி. சில வருடங்களுக்குமுன் ஒரு கேரளத் திருமணத்துக்கு வந்து பந்தியில் அமர்ந்து திணறித்தான் போய்விட்டேன்! பாதி ஐட்டங்களுக்குப் பெயரே தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  23. நன்றி கீதா. நானும் பிடிக்காத ஐட்டங்களை மறுத்துத்தான் விடுவேன். குறிப்பாக உசிலி, அப்பளம்! எதையும் வீணாக்குவதில்லை.

    பதிலளிநீக்கு
  24. நன்றி பகவான்ஜி. நேற்றோடு முடிந்து விடுமா என்ன! இனியும் அழைப்புகள் வரும். அது ஒரு தொடர் கதை!

    பதிலளிநீக்கு
  25. நன்றி நண்பர் எஸ் பி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். அது இடியாப்பம் அல்ல. பதர்ப்பேணி! சேமியா பதர்ப்பேணி. படங்கள் எல்லாம் இணையத்திலிருந்து நன்றியுடன்! இப்போதெல்லாம் தயிர்ப்பச்சடியில் காராபூந்தி போடுவதே இல்லை என்பது என் குறை!

    பதிலளிநீக்கு
  27. நன்றி வைகோ ஸார். பக்கத்து இலை நம் உறவாயிருந்தால் சரி! சென்ற வருடம் நான் சென்றிருந்த ஒரு விருந்தில் இப்படி நடந்து, ஒரு சுவையான சம்பவம் - சுவையற்ற சண்டை - நடந்தது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  28. நன்றி கீதா மேடம். ஆமாம், சில சமயங்களில் இப்படி அவசரப்படுவது போல பரிமாறுபவர்கள் நிற்பது உண்டு. நான் சாதாரணமாக வேகமாகச் சாப்பிடுவேன். ஆனால் இப்படி வந்து நின்றால் வேண்டுமென்றே மெல்ல சாப்பிடுவேன்! பத்து நாட்களுக்கு முன்னால் சென்றிருந்த ஒரு விழாவில் பந்தியில்ஒரு வரிசையில் எல்லோரும் எழுந்து விட, ஒரு வயதானவர் மட்டும் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இல்லை மடிக்கும் பெண்மணி அவருக்கு முந்தின இலை வரை மடித்து வைத்து விட்டுக் காத்திருக்க, பொறுக்க முடியாமல் அந்தப் பெண்மணியைக் கடிந்து கொண்டேன். அதில் விழா அமைப்பாளர்களுக்கு என்மேல் சற்று குறை!

    பதிலளிநீக்கு
  29. நன்றி ஜி எம் பி ஸார். சுவைத்து உண்பதும் நல்லதுதானே..

    பதிலளிநீக்கு
  30. இல்லை கில்லர்ஜி.. இதெல்லாம் இப்போது நடப்பவைதானே..

    பதிலளிநீக்கு
  31. நன்றி நண்பர் நெல்லைத் தமிழன். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி நண்பர் கரகாட்டக்காரன்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி ஜேகே ஸார். நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கேரளத் திருமணம் சென்று வந்து அதைப் பற்றியும் எழுதி இருந்தேன். ஹோட்டல்களில் சாப்பிடும் முறை பற்றி எழுதவா? அவசியம் எழுதுகிறேன். அதற்கு முன்னால் அப்படி சந்தர்ப்பம் அதிகம் கிட்ட வேண்டுமே..!

    பதிலளிநீக்கு
  35. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். பஃபே முறையில் இரண்டாவது முறை அதே உணவை எடுக்க, மறுபடி ப்ளேட் எடுக்க வேண்டுமா? எனக்கும் தெரியாது!

    பதிலளிநீக்கு
  36. நன்றி சகோதரி சாரதா. உங்கள் தளம் வந்து படித்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  37. பஃபே முறையில் முதலில் வரிசையில் வந்து சாலட், ராய்த்தா போன்றவற்றைக் கிண்ணங்களில் எடுத்துக் கொண்டு நாம் உட்காரப் போகும் மேஜையில் வைக்கலாம். பின்னர் தட்டும், பேப்பர் டவலும் சேர்த்தே வைத்திருப்பார்கள். அவற்றை எடுத்துக் கொண்டு நாம் தேவையான உணவை, (பெரும்பாலும் தால், சப்ஜி போன்றவைகளும் ஃப்ரைட் ரைஸ் போன்றவைகளும், நான், சப்பாத்தி, ருமாலி ரொட்டி, பரோட்டா, பூரி, பட்டுரா போன்றவைகளும் இருக்கும்.) இவற்றில் எது தேவையோ அவற்றைக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு நாம் ஏற்கெனவே கிண்ணங்களை வைத்திருக்கும் மேஜையில் அமர்ந்து சாப்பிடலாம். நாம் அங்கே வைத்துவிட்டால் பெரும்பாலும் யாரும் அங்கே உட்கார மாட்டார்கள். அதோடு ஸ்பூன், ஃபோர்க், கத்தி போன்றவை மேஜையிலேயே ஒவ்வொரு நாற்காலிக்கும் முன்னால் வைத்திருப்பார்கள். முதல் தடவை எடுத்த உணவைச் சாப்பிட்டதும், அடுத்த முறை அதே உணவு வரிசையில் வேறு உணவை எடுத்தாலோ அல்லது அதே உணவைத் திரும்பச் சாப்பிட எடுத்தாலோ புதிய தட்டைத் தான் பயன்படுத்தவேண்டும். ஸ்பூனை நீங்கள் படுக்கை வசத்தில் வைத்துச் சென்றிருந்தால் எடுத்துச் சென்று விடுவார்கள். ஆகவே அதற்கென உள்ள இடத்தில் வைத்திருந்தால் அதே ஸ்பூனைப் பயன்படுத்திக்கலாம். இல்லை எனில் புதிய ஸ்பூன் எடுக்கலாம். புதிய பேப்பர் டவலும் எடுக்கலாம். சாட் வகைகள் தனியாகவும், ஸ்வீட் போன்றவைகள் தனியாகவும் இருக்கும். சாட் வகைகளை நீங்கள் முதலிலும் சாப்பிட்டுக்கலாம். மெயின் கோர்ஸ் முடிச்சுட்டும் சாப்பிட்டுக்கலாம். தயிர் வடை, தயிர் சாதம்(தென்னிந்தியத் திருமணங்களில்) தனியாக இருக்கும். அதைக் கடைசியில் எடுத்துக்கணும். எல்லாம் முடிச்சுட்டுக் கடைசியில் டெசர்ட் கோர்ஸ்! ஸ்வீட்டே பல இடங்களில் டெசர்ட்டாக இருக்கிறது. ஒரு சிலர் கேக்கோடு ஃபலூடாவும் கொடுப்பார்கள். அதைச் சாப்பிடும் முறை தனி! :) சில இடங்களில் சூடான குலோப்ஜாமுனோடு ஐஸ்க்ரீம் வைத்திருப்பார்கள். சில இடங்களில் ஸ்வீட் வைத்துவிட்டு ஐஸ்க்ரீம் தனியாகக் கொடுப்பார்கள். ஐஸ்க்ரீம் கடைசியில் தான். அது முடிஞ்சதும் மீட்டா பான் எனப்படும் ஸ்வீட் பீடா! அப்பாடா! சாப்பாடு முடிஞ்சது! திணறுது போங்க! :)

    பதிலளிநீக்கு
  38. ஹையா, எங்கள் ப்ளாக் பதிவு வந்திருக்கே, தெரியுதே! மேலே உள்ள பின்னூட்டத்தில் ஸ்பூனைப் படுக்கை வசத்தில் வைத்தாலும் சரி, ஏற்கெனவே சாப்பிட்ட தட்டில் வைத்திருந்தாலும் சரி, அந்த ஸ்பூனைத் திரும்பப் பயன்படுத்தக் கூடாது! :)))) ஹிஹிஹி, இந்தக் கருத்துக்கு யாருமே பதில் சொல்லலையா, கருத்தே போகலையோனு நினைச்சேன். :)

    பதிலளிநீக்கு
  39. வேறு வேறு பதார்த்தங்கள் எடுக்கும் பொது வேறு வேறு plate எடுக்க வேண்டும் என்கிறீர்கள். தற்போது ஹோட்டல்களில் ஒரு plate க்கு இவ்வளவு என்று விலை வைக்கிறார்கள். செலவான plate எண்ணிக்கையைப் பொறுத்து பணம் கொடுக்க வேண்டும், நீங்கள் சொல்வது போல் செய்தால் plate எண்ணிக்கை கூடிவிடும். ஆகையால் அனுமதிப்பதில்லை.

    தற்போது இந்திய வகை உணவுகளுக்காக தாளி என்ற S S குழித்தட்டுகள் உபயோகிக்கிறார்கள். 6 குழிகள் உள்ள தட்டுகள். இதில் 6 அல்லது 8 பதார்த்தங்கள் வரை ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் environment friendly என்று preference.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  40. கல்யாண சமையல் சாதம். ரொம்ப நாட்களாக இந்த இரண்டாம் தட்டு மஹாத்மியம் தெரியாமலியே போய்க்கொண்டிருந்தேன்.
    பிறகு கற்றுக் கொண்டேன்.
    இங்கு இருக்கும் ஹோட்டல்களில் முக்கால்வாசி ப்ஃபே தான். கொஞ்சம் கொஞ்சமாக ருசிப்பதே மேன்மை.
    திருமணங்களில் வேண்டாம் என்று கை நீட்டுவதே என வழக்கம்.
    யுனி என்சைம் இன்னும் கிடைக்கிறதா.
    அடுத்த தடவை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  41. கீதா அவர்கள் சொல்லியுள்ளது எங்கே ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்டார்டர்களுக்கு, மெயின் உணவுக்கு, டெசர்ட்டுக்கு என்று வேறு வேறு இடங்கள் (டேபிள்கள்) இருந்தால், அதில் நிறைய தட்டுகளும் வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுத் தட்டை எடுத்துக்கொள்வதுதான் சுகாதாரம். ஆனால், இப்படி யாரும் செய்து பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
  42. மீள் மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். எனக்குத் தோன்றிய கருத்தையேதான் ஜேகே ஸாரும் நண்பர் நெல்லைத் தமிழனும் குறிப்பிட்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி வல்லிமா. யூனிஎன்ஸைம் தாராளமாகக் கடைகளில் கிடைக்கிறதே!

    பதிலளிநீக்கு
  44. மீள் வருகைக்கு நன்றி நண்பர் நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  45. பந்தியில் எக்கச்சக்கமான அயிட்டங்களைப்பரிமாறி வீணாக்கும் "நல்ல" பழக்கம் இன்னும் நாஞ்சில் நாட்டில் வரவில்லை. இப்பவும் சம்பிரதாயமான சாப்பாடுதான் பரிமாறப்படுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!