புதன், 30 மார்ச், 2016

ரேஷன் கடை - அனுபவம்

 
 
வீட்டுக்கு மாமா வந்திருந்தார்.  அந்த நேரம் கேஸ் வந்திருக்க, பில் 525 ரூபாய் என்றிருக்க,  அவர் 575 ரூபாய்க் கொடுங்க" என்றார்.

இவர்கள் போடும் உருளையில் சரியான அளவில் எரிவாயு இருக்குமா என்பதே எனக்குச் சந்தேகம்.  உருளையிலிருந்து எரிவாயுவைத் திருடும் வீடியோ காட்சி ஒன்றை வாட்சாப் பகிர்விலும் பார்த்துத் தொலைத்திருந்தேன். 

ஒவ்வொரு முறை 25 நாட்கள், 28 நாட்களிலேயே தீர்ந்து கழுத்தறுக்கும்.  நாம் பெரிய அளவில் சமையல் எதுவும் கூடச் செய்திருக்க மாட்டோம்!  ஏன், வெளியூர் கூட சென்று வந்திருப்போம்.  
இதை அவர்களிடம் சொன்னால் நாம்தான் எடை பார்க்கும் கருவி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமாம்.  அவர்கள் கொண்டு வர மாட்டார்களாம்.  செய்தித்தாளில் நாம் படிக்கும் தகவல்கள் எல்லாமே இவர்களால் மறுக்கப் படும்!
 
"வாஷர் செக் செய்ங்க"  என்று கூறி பணம் எடுக்க உள்ளே சென்றேன். 

சில்லறையாய் இல்லை.  'ரிஸ்க்'தான்!  இவர்களிடம் போனால் மிச்சத்தை அடித்துதான் பிடுங்க வேண்டும்!!  600 ரூபாய் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
 
"வாஷர் சரியாய் இருக்கு" என்றார் விநியோகர்!

பில்லை வாங்கிப் பார்த்த மாமா "ஏண்டா 50 ரூபாய் அதிகம் கொடுக்கறே?"  என்று கேட்டார்.
 
"என்ன புதுசாக் கேக்கறீங்க!  எப்போதுமே அப்படித்தான் மாமா.  முன்னால் எல்லாம் 20 ரூபாய் அதிகம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் முப்பது ரூபாய் என்றார்கள்.  இப்போது ஏஜென்ஸி மாற்றி விட்டார்கள்.  அப்புறம் இவர்கள் இப்போதெல்லாம் 50 ரூபாய் அடித்துப் பிடுங்குகிறார்கள்." என்றேன்.
 
இதையெல்லாம் காதில் வாங்காமல் 'யாரையோ பற்றிப் பேசுவது போல நின்றிருந்தார் அந்தத் ' தொழிலாளி '.   600 ரூபாய் நான் அவரிடம் கொடுக்க, அவர் 20 ரூபாய் மிச்சம் தந்தார். 
 
"உங்க கணக்கு என்றாலும் 575 தானே...  எங்கே மிச்சம் 5 ரூபாய்?" என்றேன். 
 
"சில்லறை இல்லை.  நீங்கள் 5 ரூபாய் கொடுங்க"  என்றபடி பத்து ரூபாயை எடுத்தார்.  நான் அதைக் கையில் வாங்கிக் கொண்டு  "அப்புறம் அடுத்த தரம் தர்றேன்" எனவும், அவர் மனசில்லாமல் டிரைவரிடம் 5 ரூபாய் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார்.  மாமாவிடம் இரண்டு 5 ரூபாய் சில்லறை இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார்!

கொஞ்ச நேரம் தயங்கி நின்று விட்டுச் சென்றார்.  எனக்கு 5 ரூபாய்க்கு அவரை ஏங்க வைத்து விட்டதில் கொஞ்சம் பெருமையாய் இருந்தது!  ஒரு அல்ப திருப்தி!
 
"இதெல்லாம் இப்படியே விடக் கூடாதுடா..  இவர்களை எல்லாம் டீல் செய்ய வேண்டிய விதத்தில் செய்ய வேண்டும்" என்றார் மாமா. 
 
"ஒன்றும் பயனில்லை மாமா...  இவர்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று பவ்யமாய்ப் பகர்ந்தேன்.
 

"என்ன செய்ய முடியாது?"
 
"இதெல்லாம் இப்படியே பழகி விட்டது.  இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.  புகார் செய்ய இந்த நம்பருக்கு டெலிபோன் செய்யுங்கள் என்கிறார்கள்...  அங்கு போட்டால் ஃபோனே போக மாட்டேன் என்கிறது.  தப்பித் தவறிப் போனாலும் எடுப்பதில்லை.  இவர்களிடம் தகராறு செய்தால் அடுத்த மாதம் பயங்கர லேட்டாகத் தருகிறார்கள்.  கேட்டால் சப்ளையே இல்லை' என்கிறார்கள்...ஹ்ம்ம்..."  என்றேன் வெறுப்புடன்.  (வைகோ ஸார் கவனிக்க!)
 
"பேப்பரில் இப்படி அதிகம் பணம் கேட்டால் புகார் கொடுக்கச் சொல்லி டெலிபோன் நம்பர் கொடுத்திருந்தார்களே..  பார்த்தாயோ..."

"செய்தித் தாள்களில் வந்த இது மாதிரித் தகவல்களை கதவில் ஒட்டி வைத்திருந்து அவர்களிடம் காட்டினேன்.  சுவாரஸ்யமாய்ப் படித்து விட்டுக் காசை வாங்கிக் கொண்டு சென்றார் - 50 ரூபாய் எக்ஸ்ட்ராவுடன்தான்!  இதில் தீபாவளி, பொங்கல் என்று வந்து விட்டால் போதும்..  அந்தப் பண்டிகைகள்
தாண்டியிருந்தால் கூட, அந்த மாதத்தில் வரும் ஏறி வாயு உருளையின் காசைக் கொடுக்கும்போது பண்டிகை இனாமையும் சேர்த்துக் கேட்பார்கள்.  கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடிகிறதா என்ன! ..."

"நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள்?"

"பில்லில் எவ்வளவு போட்டிருக்கோ அதுதான்.  நானும் மாடி போர்ஷனில்தான் இருக்கேன்.  அதுவும் செகண்ட் ஃப்ளோர்.."
"எப்படி உங்களுக்கு மட்டும்....?  ஏதாவது புகார் கொடுத்தீர்களா?  சண்டை, கிண்டை..?"

"இதை விடு... இது நான் சண்டை போடாமல், எனக்கு வாய்த்திருப்பவனே ஒழுங்காக இருக்கிறான்.  ஆனால் நான் இப்படி டீல் செய்த விஷயம் ஒன்று இருக்கிறது.  ரேஷன் கடை அனுபவம் ஒன்றைச் சொல்றேன் கேட்கிறாயா?" என்றார்.
 
"சொல்லுங்கள்" என்றேன் சுவாரஸ்யமாய். 
 
அதற்குள் பாஸ் அவருக்குப் பிடித்த தேநீரைக் கொண்டுவந்து கையில் கொடுக்க, அதைப் பருகுவதில் சற்று நேரம் கழிந்தது.  ரேஷன் கடையில் வாங்கும் தேயிலை பற்றிப் பேசினார் பாஸ்.
 
நான் அவர் தேநீரைக் குடித்து முடிக்கக் காத்திருந்து, ரேஷன் கடை அனுபவத்தை ஞாபகப் படுத்தினேன்.

சொல்லத் தொடங்கினார்.


                                                                                                                                                        [ தொடரும் ]

25 கருத்துகள்:

  1. நீங்களும் கதைத் தொடரா. இந்தப் புலம்பலுக்குத் தனி ப்ளாக் ஆரம்பிக்கணும் ஸ்ரீராம்.>}}}}

    பதிலளிநீக்கு
  2. பெட்டிசன் பெரியண்ணாவாய் இருப்பாரோ :)

    பதிலளிநீக்கு
  3. தொடருங்கள் நட்பே
    நாங்களும் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. ரேஷன் கடை அனுபவம் என்று சோல்லி விட்டு சிலிண்டர் அனுபவம் சொன்னீர்கள். மாமா சொல்லுவார் என்று தொடரும் போட்டு விட்டீர்கள். மாமாவும் சொல்வாரா? அவர் வேறு ஏதேனும் ஆதார் கார்டு அனுபவம் சொல்லிவிட்டு மாமாவுக்கு மாமா கடைசியில் ரேஷன் கடை பற்றி சொல்ல வருவாரா? ஏனெனில் நாட்டு நடப்பு அப்படி இருக்கிறது.(ஓரு நகைச்சுவைக்காக) - இதன் தொடர்ச்சியைப் படிக்க ஆவலாக இருக்கின்றேன். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  5. வாவ்,அன்றாடப் பிரச்சனைகள் பற்றிய அலசல்.
    // எனக்கு 5 ரூபாய்க்கு அவரை ஏங்க வைத்து விட்டதில் கொஞ்சம் பெருமையாய் இருந்தது! ஒரு அல்ப திருப்தி!
    //
    எங்களுக்கும்.. :)

    பதிலளிநீக்கு
  6. கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களை ஒன்னும் செய்ய முடியவில்லை..தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகத்“தான் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  7. கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களை ஒன்னும் செய்ய முடியவில்லை..தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகத்“தான் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  8. நாமே அதிகமாகக் கொடுத்துப்பழக்கிவிட்டு பின் புலம்புவோம் நாங்கள் பத்து ரூபாய் அதிகம் கொடுப்போம் அவர் சிலிண்டருக்குக் கனெக்க்ஷன் கொடுத்து எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று பார்ப்பார்அந்தப் பத்து ரூபாயும் அவர் கேட்டுக் கொடுப்பதல்ல ஒரு மனிதாபிமானம்தான் வெயிலில் கொண்டுவந்து செக் செய்து போகிறார் இல்லையா. ரேஷன் கடை அனுபவத்துக்குக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. டாபிக் வற்றாத சுரங்கம் அல்லவோ?! காத்திருக்கேன் மேலும் படிக்க...

    பதிலளிநீக்கு
  10. அந்த அனுபவத்திற்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. 50 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டுமா!
    மாமாவின் ரேஷன் அனுபவம் படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. உண்மையில் இதெல்லாம் சட்டம் ஆக்கப்பட்டு விட்டது போலாகி விட்டது... நானும் ரேஷன் கடைக்கு வருகிறேன் நண்பரே..

    பதிலளிநீக்கு
  13. முங்க்பெல்லாம் பத்து ரூபா கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போ இருபது ரூபா.

    சிலிண்டர் டெலிவர் செய்யும் ஆட்களின் வேலைநிறுத்தம் போது, ஆட்கள் இல்லீங்க.. நீங்க வேணா காலி சிலிண்டரைக் கொடுத்து விட்டு மாற்று சிலிண்டரை எடுத்துச் செல்லுங்கள்' என்று காஸ் எஜென்ஸியில் சொன்னார்கள். போக வர ஆட்டோ செலவு, அடுக்கு மாடிக் குடியிருப்பில் சிலிண்டருடன் இறங்கி, ஏறி என்று.. நம்மால் முடியாது, சாமி என்று திகைத்திருந்தோம். நியூஸ் பேப்பரில் என்றால் மாற்று சிலிண்டர் பெற்றுக் கொள்ள பெரிய க்யூ!.

    விசாரித்ததில், கொண்டு வந்து போடும் இந்த ஆட்கள் "ஏஜென்ஸி ஆட்கள்; அவர்களுக்கும் ஐஓஸிக்கும் சம்பந்தமில்லை" என்று நண்பர் ஒருவர் சொன்னார். ஆனால் யூனிஃபார்மில் காஸ் நிறுவனத்தின் சின்னம் உண்டு.
    இவர்களுக்கு ஊதியம் கொடுப்பது பெட்ரோலிய நிறுவனமா, காஸ் ஏஜென்ஸியா?.. தெளிவுபடுத்துங்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. என்னைக் கேட்டால் உங்கள மாதிரி ₹50-100னு குடுத்து பழக்கப் படுத்துறவங்களதான் சொல்லனும். இதுனாலதான் இதுவே ஸ்டாண்டர்ட் ஆகி மத்தவங்கள படுத்துது. கொஞ்சம் கூட சமூக அக்கறையே இல்ல!!:-).
    குடுத்துட்டு வந்து அத ப்ளாக்குல எழுதிட வேண்டியது.??!!!

    சரி, இத இங்க எழுத அந்த சிலிண்டர் டெலிவரிக்காரருக்கு ராயல்டி/ஃபிஈ குடுத்திட்டீங்களா....

    எல்லார்கிட்ட / எல்லா இடத்துல இதே ₹50 வாங்கறாங்களா இல்ல ஆள் பாத்து கேக்கறாங்களா?


    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. இங்கே 70 என்னத்தைச் சொல்ல...?
    ரேன் கடைல பார்ப்போம்:)

    பதிலளிநீக்கு
  16. //"இதெல்லாம் இப்படியே பழகி விட்டது. இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. புகார் செய்ய இந்த நம்பருக்கு டெலிபோன் செய்யுங்கள் என்கிறார்கள்... அங்கு போட்டால் ஃபோனே போக மாட்டேன் என்கிறது. தப்பித் தவறிப் போனாலும் எடுப்பதில்லை. இவர்களிடம் தகராறு செய்தால் அடுத்த மாதம் பயங்கர லேட்டாகத் தருகிறார்கள். கேட்டால் சப்ளையே இல்லை' என்கிறார்கள்...ஹ்ம்ம்..." என்றேன் வெறுப்புடன். (வைகோ ஸார் கவனிக்க!)//

    கவனித்தேன். அதே ..... அதே ..... உண்மைதான்.

    எங்கும் வியாபித்துள்ள வியாதி இது. ஒன்றும் செய்வதற்கு இல்லை.

    ஏதேனும் நாம் இதில் புரட்சியாகச் செய்ய நினைத்தால், லீக் ஆகும் வாயு உருளை நமக்கு சப்ளை செய்யப்பட்டு, நம் உயிருக்கே அது உலை வைக்கும் ஆபத்தும் அவர்கள் கையிலேதான் உள்ளது.

    விலை மதிக்க முடியாதது நம் உயிர். அதனால் நாம் இதில் மிகவும் ஜாக்கிரதையாக பெருந்தன்மையுடன் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
  17. ஹூம், இதுக்கெல்லாம் எதுவும் செய்ய முடியலை என்பதே உண்மை! ஒவ்வொரு முறையும் ஐந்து ஐந்து ரூபாயாக ஏறிக்கொண்டே போகிறது, விலைவாசியைப் போல்! வாங்கி ருசி கண்டவர்கள் விட மாட்டார்கள். :(

    பதிலளிநீக்கு
  18. எங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கிறது. ஆனால் சாமான்கள் எதுவும் கிடைக்காது. ஏழ்மை கோட்டிற்குக் கீழ் இருப்பாவர்களுக்கு மட்டுமே அரிசி, கோதுமை முதலியன கிடைக்கும்.
    இந்த காஸ்காரர்களிடம் ஒன்றும் பேசவே முடியாது.
    எங்கள் ஊரில் ஆட்டோமாடிக் காஸ் புக்கிங் சிஸ்டம் வந்துவிட்டது. உங்கள் ஊரில் வந்துவிட்டதா? அதிலேயே புகாரும் பதிவு செய்யலாம். இதுவரை புகார் செய்ததில்லை அதனால் புகார்களை எப்படி கையாளுகிறார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  19. எங்க ஊர்ல கொண்டு போடற விஷயம் எல்லாம் இல்லை. நான் வண்டியில் சென்றுதான் எடுத்து வருகிறேன். நாங்கள் இருக்கும் ஊர் அப்படியானது. நகரத்திற்குள் மட்டுமே வீட்டிற்குக் கொண்டு கொடுப்பார்கள்.

    கீதா: ஸ்ரீராம் எங்களுக்கும் அதே 50 ரூபாய்தான். இந்த விலை ஒவ்வொரு பகுதிக்கும் விச்சியாசப்படுகிறது. கேளம்பாக்கம் பகுதிக்கு எல்லாம் இன்னும் கூடுதல் என்று கேள்விப்பட்டேன். அதே அனுபவம்தான் இங்கும். நம்மூரில் லஞ்சம் என்பதே சட்டமாகிய பின்? ஒருவர் இருவர் சண்டைப் போட்டுப் பயனில்லை. பலரும் இணைந்து செய்தால்தான் நடக்கும். நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்தான் ஆனால் அதற்கு நடையாய் நடப்பதற்கும், துட்டிற்கும் எங்கு செல்வது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!