திங்கள், 18 ஏப்ரல், 2016

திங்கக்கிழமை 160418 :: தேங்காய்ப்பொடி



சாம்பார், குழம்பு வகையறாக்கள் செய்து அலுத்துப் போன ஒரு நாளில் கைகொடுப்பவை இது போன்ற பொடிகள்.  அது மட்டுமல்லாது, ஒரே மாதிரி சமையலறையில் வேலை செய்து 'ஒரு நாள் சுலப சமையல் இருக்கக் கூடாதா?  ஓய்வு கிடைக்காதா?' என்று ஏங்கும் இல்லத்தரசிகளுக்கு இது ஒரு அருமையான வரப்ரசாதம்.

இந்த தேங்காய்ப்பொடி ஒரு வகையில் தேங்காய்த் துவையலின் காய்ந்த வெர்ஷன்!

நமக்கும் எல்லாச் சமையலும் அலுத்துப்போன நாளில் இது நம் நாவுக்கு ஒரு தனிச் சுவையைக் கொடுக்கும் பாருங்கள்...  சுவாரஸ்யம்தான்!

ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.  50 கிராம் உளுத்தம் பருப்பையும், உங்கள் காரச் சுவை, அல்லது காரத் தேவையைப் பொறுத்து காய்ந்த மிளகாயும் (நாங்கள் பத்து மிளகாய் எடுத்துக் கொண்டோம். கொப்பரைத் தேங்காயாக இருந்தால் பத்து மிளகாய்ப் போறாது!) பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.  அடுப்பை அணைத்த பிறகு அந்தச் சூட்டிலேயே துருவிய தேங்காயை புரட்டிக் கொள்ளவும்.  பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இவை அனைத்தையும்  மிக்ஸியிலிட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  
 
 
 

படத்தில் உருட்டி வைக்கப் பட்டிருப்பது போலத் தெரிந்தாலும் அது பொடிதான் என்று அறியவும்!!!!


கொஞ்ச நாட்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.  சூடான சாதத்தில் நெய்யோ, நல்லெண்ணெயோ இட்டுப் பிசைந்து சாப்பிடலாம். பச்சை மோர்க்குழம்பு (மோர்சாறு) இதற்குத் தொட்டுக் கொள்ளலாம். சமயங்களில் தோசைக்கும், மோர் சாதத்துக்கும் கூடத் தொட்டுக் கொள்ளலாம்!

58 கருத்துகள்:

  1. இதையே கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் அரைச்சால் தேங்காய்த் தொகையல்:-)

    பதிலளிநீக்கு
  2. துளசிம்மாவிற்கு சமையலே தெரியலை......அல்லது பதிவை ஒழுங்காக படிக்கலை போல இருக்கு....இந்த பொடியில் சிறிது தண்ணிர்விட்டு அரைத்தால்தான் துவையல் இல்லையென்றால் அது பொடிதான்

    பதிலளிநீக்கு
  3. இன்னமும் பொடி வகையராவிலே
    மூக்குப்பொடி ஒண்ணு தான் பாக்கி இருக்கும்னு
    நினைக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. மூக்குப்பொடி ரெசிபிக்கு மூன்றாம்...

    பதிலளிநீக்கு
  5. தேங்காய்ப்பொடி மோர்சாதம் காம்பினேஷன் திருப்திகரமானது.

    பதிலளிநீக்கு
  6. அருமை!தேங்காய் சாதம் இங்கே செய்வதுண்டு

    பதிலளிநீக்கு
  7. இதை கன்யாகுமரி மாவட்டத்தில் நாங்கள் தவணப்பொடி என்று சொல்வோம்..

    பதிலளிநீக்கு
  8. அருமையான தேங்காய்ப்பொடி....
    செய்முறை விளக்கம் அருமை....
    அம்மாவை தொந்தரவு செய்ய
    வேண்டாம் நாமளே செய்யலாம்...

    பதிலளிநீக்கு
  9. இதே இதே...பொடிதான்...

    இதில் கொஞ்சம் வேறு சில குறிப்பாக சின்ன வெங்காயம், புளி சேர்த்து, செய்தால் கேரளத்துச் சம்மந்தி. நீங்களும் கொடுத்திருக்கின்றீர்கள் இதற்கு முன். அதில் பூண்டு சேர்த்திருந்தீர்கள். சின்ன வெங்காயம் சேர்த்துப் பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  10. 'திங்க'க் கிழமைக்கு பொருத்தமான பதிவுதான் :)

    பதிலளிநீக்கு
  11. தேங்காய்ப் பொடி பொதுவாக கேரளத்தில்தான் செய்வார்கள். (அங்கே தேங்காய் அந்தக் காலத்தில் அதிகமாக விளைந்ததனால் இருக்கலாம்). 'நெய்யோ அல்லது தேங்காய் எண்ணையோ சாதத்தில் விட்டுக்கொண்டு, இதையும் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதில் பச்சை மோர்க்குழம்பு நிறைய பேருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். (மோர்ச் சாத்துமது என்று சொல்லுவோம். சிவப்பு மிளகாய், வெந்தயம் வறுத்து அரைத்து, உப்பு, மோருடன் கலப்பது. அது இந்த சாதத்துக்கு எப்படி சரியாக இருக்கும்?)

    அதெப்படி டீச்சர்/மதுரைத் தமிழன் - இந்தப் பொடியை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்தால் தொகையல் வரும்? தொகையலுக்கு புளி சேர்க்க வேண்டாமா? கீதா மேடம் இன்னும் பின்னூட்டம் இடவில்லை. இல்லாவிட்டால் சொல்லியிருப்பார்கள்.

    தேங்காய் பொடி சாதம், தேங்காய் சாதமாக ஆகவேண்டுமானால், கடலை/கருவேப்பிலை, கடலைப் பருப்பு/உளுந்து சிறிது வாணலியில் எண்ணை விட்டு வறுத்துச் சேர்த்தால், தேங்காய் சாதமாக ஆகும்.

    இதுக்கு மோர் சாத்துமதை விட, சென்ற வாரத்தில் காய வைத்திருந்த வத்தல், வடாம்தான் நல்ல காம்பினேஷன்.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் சொன்ன பக்குவத்தில் கொஞ்சம் புளியை வறுத்து சேர்த்து பொடித்து விடுவோம்.
    தேங்காய் பொடி அருமை.

    பதிலளிநீக்கு
  13. இந்த பொடியை ஊத்தப்பம் மேலே விட்டு சாப்பிட்டா யம் யம்

    பதிலளிநீக்கு
  14. நன்றி துளசி டீச்சர்... ஆமாம், தொகையல் ரெடி... ஆனால் மதுரைத் தமிழன் சொல்வது போல கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கனும்.. நீங்களும் அதைத்தான் சொல்ல வந்தீர்கள்... ஆனால் சொல்லவில்லை! இது போல ரெடிமேட் தோசை மாவு எல்லாம் கூட முன்னால் கொஞ்ச நாள் அரைத்து வைத்திருந்தோம்.. இப்போ எல்லாம் அப்படிச் செய்யறதில்லை!

    :))

    பதிலளிநீக்கு
  15. வாங்க மதுரைத் தமிழன். உண்மைதான் நீங்கள் சொல்வது!

    பதிலளிநீக்கு
  16. ஹா. ஹா... ஹா... சுப்பு தாத்தா... ஏன், கோலப்பொடியைக் கூடச் சொல்லலாமே! :)))))

    மூக்குப் பொடியைச் சாப்பிடலாம்னா அதுக்கும் ரெஸிப்பி போட்டுடலாம்! விட்டுப் போன பொடி இன்னும் ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  18. நன்றி அப்பாதுரை... "மூக்குப்பொடி ரெசிபிக்கு மூன்றாம்...??? அபுரி!

    பதிலளிநீக்கு
  19. ம்ம்ம்.. ஆனால் இது சாதம் பிசைந்து கொள்ள ஏற்பட்டது அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  20. நன்றி புலவர் ஐயா... தேங்காய் சாதம் வேறு.. அது இரண்டு வகையாய் முன்னரே எங்கள் ப்ளாக்கில் கொடுத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  21. 'தவணப்பொடி' புதுச் செய்தி! நன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி அஜய்.. ஏற்கெனவே உங்கள் கவிதைகளைப் படித்து இப்போதுதான் காதல் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். இப்போது உறுதியாகிறதோ, இன்னும் உங்களுக்கு மணமாகவில்லை என்று?

    பதிலளிநீக்கு
  23. நன்றி கீதா. நாங்கள் முன்பே இதைக் கொடுத்திருக்கிறோமா... நேற்று செக் செய்து பார்த்து விட்டுத்தானே எழுதினேன்?

    பதிலளிநீக்கு
  24. நன்றி நண்பர் நெல்லைத் தமிழன். கேரளத்தில்தான் செய்ய வேண்டுமா என்ன? நாங்கள் மோர்சாறு என்று சொல்வது நீர்த்த (சற்றே புளித்த) மோரில் மஞ்சள் பொடி, வெந்தயப்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து, கடுகுடன் தஞ்சாவூர்க் காய்ந்த குடைமிளகாயை எண்ணெயில் பொரித்துப் போட்டு விடுவது..துவையளுக்குப் புலி சேர்த்தும் செய்யலாம், சேர்க்காமலும் செய்யலாம். டேஸ்ட் மாறும். அவ்வளவுதான்! தேங்காய் சாதம் முற்றிலும் வேறு! அதிலும் இரண்டு வகையாக நாங்கள் செய்வோம். அதற்கு ரெஸிப்பி முன்னரே கொடுத்திருக்கிறோம்! வத்தல், வடாம்........ ம்ம்ம்... ஓகே!

    பதிலளிநீக்கு
  25. நன்றி கோமதி அரசு மேடம்.. புளி சேர்த்து நாங்களும் அரைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  26. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  27. புலியை வைத்துத் துவையளா? அசைவத் துவையலோ? (நெல்லைத் தமிழனுக்குச் சொன்ன பின்னூட்டம் பார்க்கவும்!)
    நாங்கள் தேங்காயை நன்றாக வறுத்துவிடுவோம் - கெடாமல் இருக்குமென்று.
    இந்த ஊரில் கொப்பரை, வெல்லம் புளி சேர்த்து சட்னிபொடி செய்வார்கள் லேசான தித்திப்புடன் நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ள பயன்படும் ஆல்-இன்-ஆல் பொடி இது.

    இரண்டு பொடிகளுமே வீட்டில் செய்வேன் நன்றாக செலவழியும்!

    பதிலளிநீக்கு
  28. செய்யச் சொல்லிப் பார்க்கலாம் ஆனால் அரபிக்காரிகள் கேட்க மாட்டார்களே..

    பதிலளிநீக்கு
  29. நெல்லைத்தமிழன் சொன்ன மோர்ச்சாத்தமுது இரவு நேரங்களில் கை கொடுக்கும். நன்றி நெல்லைத்தமிழன். ஜவ்வரிசி வத்தல் வடாமோடு அப்பா செய்தால் இன்னும் சுவை.

    பதிலளிநீக்கு
  30. அம்மா அருமையாகச் செய்வார். காரம் இல்லாத ,புளி வறுத்து,எள்ளும் சேர்த்து கலக்கல் காம்பினேஷனில் இருக்கும்.
    இங்கே கிடைக்கும் உறைனிலை தேங்காய்த்தூள்
    அவ்வளவு ருசிப்பதில்லை.

    தேங்காய்ப் பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளலாம்.நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  31. துவையளுக்கு புலி!!!! கவனிக்காமல் விட்ட தவறு! துவையலுக்கு புளி என்றிருக்க வேண்டும்! தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ரஞ்சனி மேடம்.

    பதிலளிநீக்கு
  32. ஹா.... ஹா.... ஹா... நன்றி நண்பர் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  33. நன்றி வல்லிம்மா. உப்பு, காரம் உறைக்க இருந்தால் நாவுக்கு சுகம்தான்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம்
    ஐயா
    அழகாகசொல்லியுள்ளீர்கள் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம் த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  35. இந்த வகையுடனே கொஞ்சம்,உளுத்தம் பருப்பு, எள் வறுத்துப்போட்டு பொடி செய்து சேவையுடன் கலந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். சிறிது காரம் அதிகம் உங்கள் பொடியில். ருசியாயிருக்கு. ஒரு துளி ருசிபார்த்தால் போயிற்று. அன்புடன்

    பதிலளிநீக்கு
  36. எங்களைப் பொறுத்தவரை தினமுமே சாம்பார், குழம்புனா அலுப்புதான் வருது! ஆகவே எலுமிச்சைச் சாதம், புளிசாதம், எள் சாதம், தக்காளி, கத்திரிக்காய் சாதம், கொ.கடலை சாதம்னு விதவிதமா கலந்த சாதம் பண்ணிடுவேன். இட்லி, தோசை செய்தால் அப்போத் தான் சாம்பார் கொஞ்சமா! அதுவே மிஞ்சிப் போகும்! :) ஆனாலும் பாருங்க, இந்தப் பொடி வகை எல்லாம் எங்க வீடுகளிலே அவ்வளவாச் செய்யறதில்லை!

    பதிலளிநீக்கு
  37. அதென்னமோ தெரியலை, இந்த விஷயத்தில் என் பிறந்த வீடும், புகுந்த வீடும் ஒற்றுமையாகப் பொடி சாதம்னாலே காத தூரம் ஓடுவாங்க. அப்படியும் என் கல்யாணத்தில் அங்கமணிச் சீருக்குப் பற்பல பொடிகள் (பல்பொடியும் சேர்த்து) பண்ணி வைச்சாங்க. அவற்றை நாங்க குடித்தனம் வந்து மூணு வருஷம் ஆகியும் செலவு செய்ய முடிந்ததில்லை! :) இதிலே இந்தத் தேங்காய்ப் பொடி மாமியார் வீட்டிலே தான் அதிகமாச் செய்வாங்க. ஏனெனில் அங்கே தேங்காய்க்குக் கவலை இல்லை. மாமியார் இஷ்டத்துக்கு ஒரு நாளைக்கு எட்டிலிருந்து பத்துத் தேங்காய் உடைப்பாங்க. கவலையே பட மாட்டாங்க. தென்னந்தோப்புகள் இருந்தனவே! :) நாங்க அங்கேருந்து ஒரு தேங்காய்ச் சில் கூடச் சாப்பிட்டதில்லை என்பதைத் தனியா வைச்சுப்போம். இந்தத் தேங்காய்ப் பொடி இருக்கே, இதுக்குக் கொஞ்சம் கடலைப்பருப்பும் எங்க மாமியார் வீட்டிலே சேர்ப்பாங்க.

    பதிலளிநீக்கு
  38. பொடி சாதமே சாப்பிட்டதில்லைங்கறதாலே என்ன தொட்டுப்பாங்கனு தெரியலை. ஆனால் துவையல் அரைச்சால் நான் மோர்ச்சாறு செய்வேன். அதுக்குக் கொஞ்சம் புளித்த மோரில் அரிசிமாவு, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு நன்றாகக் கரைத்துக் கொண்டு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், து.பருப்பு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்து இந்தக் கரைத்த மோரை ஊற்றி ஒரு கொதி வந்ததுமே கீழே இறக்கணும். அல்லது நுரை வந்ததுமே கீழே இறக்கணும். இதான் தொட்டுப்போம்.

    பதிலளிநீக்கு
  39. பச்சை மோர்க்குழம்புன்னா எங்க வீடுகளிலே மி.வத்தல், கொ.விதை, கொஞ்சம் வெந்தயம், தேங்காய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொண்டு புளித்த மோரில் உப்புச் சேர்த்துக் கலக்கிவிட்டுக் கடுகு, ஓமம் தாளிப்போம். மஞ்சள் பொடியும் சேர்ப்பதுண்டு. இதைச் சூடு செய்ய மாட்டோம். இதைத் தான் பச்சை மோர்க்குழம்பு என்போம். நம்ம ரங்க்ஸுக்கு அவ்வளவாப் பிடிக்காது. நானும் என் மாமியாருமே இதன் ரசிகர்கள்.

    பதிலளிநீக்கு
  40. எள்ளுப் பொடி சாதம் கலந்தால் அன்னிக்கு மோர்க்குழம்பு கட்டாயம் உண்டு.

    பதிலளிநீக்கு
  41. அந்த மோர்ச்சாறுக்கும் என் மாமியார் வீட்டில் ஓமம் சேர்ப்பாங்களாம். மோர் ரசம்னு அவங்க சொல்றாங்க. எனக்கு இதிலே எல்லாம் ஓமம் சேர்த்தால் அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. :)

    பதிலளிநீக்கு
  42. @கீதா சாம்பசிவம்
    நீங்க வந்தா இரண்டு மூன்று ரெசிபிக்கள் இலவசமாகக் கிடைக்கிறது!பச்சை மோர்குழம்பு செய்து பார்க்கவேண்டும்.

    பொடி சாதம் என்றால் எங்கள் வீட்டில் அப்பளம், வடகம் தான்! ரொம்பவும் மென்னியைப் பிடிக்கிறது என்றால் ஒரு கூட்டு செய்துவிடுவேன்!

    பதிலளிநீக்கு
  43. நன்றி காமாட்சி அம்மா... காரம் அதிகம் சாப்பிட்டுப் பழகி விட்டது. இந்த அளவில் கூட காரம் கம்மியாக இருந்தது போலத்தான் இருந்தது!

    பதிலளிநீக்கு
  44. நன்றி கீதா மேடம்... அப்போ டெய்லி நீங்க சாம்பார் செய்யறதில்லையா? வெரைட்டி ரைஸா? ஐ...!

    பதிலளிநீக்கு
  45. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... அங்கமணிச் சீர்! எப்பவோ கேட்ட வார்த்தை! இப்போ எல்லாம் இது செய்யறாங்களா? ஒரு பதிவு தேத்தலாம் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
  46. ஆமாம் கீதா சாம்பசிவம் மேடம். துவையல் சாதத்துக்குத்தான் மோர்சாறு பொருத்தம். போடி சாதத்துக்கு நெல்லைத் தமிழன் சொன்னது போல வடாம் தொட்டுக் கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  47. இல்லை கீதா சாம்பசிவம் மேடம்... நாங்கள் ஓமம் அதில் போடுவதே இல்லை! அந்த வாசனை அதன் ருசியைக் கெடுத்து விடும் என்பது என் ருசி!

    பதிலளிநீக்கு
  48. நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம். கீதா மேடம் ரெசிப்பிகளுக்குக் கேட்கணுமா! இதற்காகவே நண்பர் நெல்லைத் தமிழன் லேட்டாக இந்தப் பதிவு படிக்க வந்தும் அவருக்கு அப்போது இந்தப் பின்னூட்டங்கள் கிடைக்கவில்லை பாருங்கள்! எனக்கென்னவோ கூட்டு பிடிக்கறதே இல்லை! அதற்குப் பதில் ஒரு கரண்டி தயிர் விட்டுச் சாப்பிடலாம்!

    பதிலளிநீக்கு
  49. நான் போட்ட பின்னூட்டம் எங்கே?பின் தொடர்வதா கிளிக் செய்து விட்டு பேஸ்புக்கில் இட்ட அதே பின்னூட்டத்தை இங்கேயும் இட்டேனே? எங்கே போயிருக்கும்?

    பதிலளிநீக்கு
  50. இங்கு இதெல்லாம் செய்து பார்க்க முடியாது... ஊருக்கு வரும்போது பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!