புதன், 6 ஏப்ரல், 2016

வைகையில் ஒரு பயணம்.. அதில் 3 கேரக்டர்கள்..




                                                

சமீபத்தில் மதுரை செல்ல வேண்டி இருந்தபோது என்னுடைய பயண விருப்பம் பஸ்ஸாக இருந்தது.  கொஞ்சம் காசு அதிகம்  என்றாலும் ஏதோ எனக்கு அதில் இருக்கும் சௌகர்யம் ரயிலில் இல்லை.  நிறைய பேருக்கு இதில் எதிரான கருத்து இருக்கலாம்.  நான் வேற மாதிரி!

ரயிலில் போனால் குறைந்த கட்டணம், சௌகர்யமான கழிப்பிட வசதி, சாப்பிட வரும் பண்டங்கள் இத்யாதி இத்யாதி என்று பட்டியல் போடலாம்.  அல்ப காரணங்களுக்காக எனக்கு பஸ் வசதி.   இறங்குமிடம் வருகிறதா என்று பார்க்க வசதி!  மற்றவர்கள் தொல்லை அதிகம் இல்லை.  முக்கால்வாசி படுத்த நிலையில் பயணம் செய்யலாம்.  என்னமோ விடுங்களேன்... பஸ்தான் பிடிக்கும்!

ஆக, கூட வரும் உறவின் கட்டாயத்தின் பேரில் வைகைப் பயணம்.  அவரே முன்பதிவு செய்து விட்டார்.  என்னிடம் சொன்னால் நான் சரி, சரி என்று காலை வாரி விடுவேன் என்பது அவரது முன் அனுபவம்!  



எக்மோர் ரயில் நிலையத்தில் 3 வது நடைமேடையைத் தாண்டும்போது எங்களையுமறியாமல் பழைய 'எஸ்கலேட்டர்' அனுபவம் நினைவுக்கு வந்து  சிரித்தோம்!  மறக்க முடியாத அனுபவம்.

எப்போதுமே ஒரு ராசி.  நாம் ஏறப்போகும் பெட்டி அந்த நடைமேடைக்குள் நாம் நுழையும் இடத்திலிருந்து  நீ.... ளமாக நடக்கும் வகையில்தான் இருக்கும்.   இன்றும் அப்படியே..  
பிழை திருத்தம் : நாம் என்பதை நான் என்று வாசிக்கவும்!

மாமா பயணத்தில் படிக்க ஒரு வாராந்தரி வாங்கிக் கொண்டபோது 'இடார்சி ரயில் நிலையமும் கல்கியும்' நினைவுக்கு வந்தது!


ஆளுக்கு 4 இட்லி (மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெயில் மூழ்கடித்து ஊற வைத்தது!), தயிர்சாதம், தொட்டுக்கொள்ள மாகாளி வைத்து ஆளுக்கு ஒரு (தூக்கி எறிந்து விடக்கூடிய) டப்பா (
ஹிஹிஹி... போதும் என்றுதான்... வேண்டுமானால் ரயிலில் ' கொஞ்சமாக ' ஏதாவது வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றுதான்) , அப்புறம்... அப்புறம்...  ஹிஹிஹி.. தெரியும், ஒரு பக்கம் கூட முழுதாகப் படிக்க மாட்டேன்.  ஆனாலும் வழக்கம் போல ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டேன்.  

டிக்கெட் பரிசோதகர் சீக்கிரமே எங்கள் பக்கம் வந்து விட்டது,  பான்ட்ரி காருக்கு அடுத்த கதவு எங்கள் கதவாக அமைந்தது (வாசனை!),  சில சின்ன ரயில் நிலையங்களிலும் ஓரிரு நிமிடம் நின்று சென்றது, அதிவேக ரயில் என்று பெயரெடுத்த வைகை, மாட்டு வண்டி போலப் பயணம் செய்தது, எல்லாமே ஒரு குறிப்பிட்ட அளவில் விற்ற போது காலிப்ளவர் 65 மற்றும் பிரெட் ஆம்லெட் இரண்டும் ஏராளமாக, தட்டு தட்டாய் அடுக்கிக் கொண்டு விற்பனைக்குச் சென்று கொண்டே இருந்ததும், அவை காலியாக திருப்பிக் கொண்டு வந்த விற்பனையாளர்கள் போன்ற ஆச்சர்யங்கள்.

காபி, டீ வழக்கம்போலவே சஹிக்கவில்லை!  வடை (ஒரு ப்ளேட் - 2 வடை - 20 ரூபாய்) சுமார், கட்லெட்டும் (20 ரூபாய்) அவ்வண்ணமே! காலிப்ளவர் 65 ஒரு ப்ளேட் 30 ரூபாயாம்.  பரவாயில்லை ரகம். ஒரே நேரத்தில் கொண்டு வந்ததால் மிளகாய் பஜ்ஜியை சுவைக்க முடியவில்லை.  உங்களுக்குத் தெரியும் நான் அளவோடு ரசிப்பவன்....!    ஆச்சர்யகரமாக தக்காளி சூப் (20 ரூபாய்) இந்தமுறை நன்றாக இருந்தது.  வாங்கலாமா வேண்டாமா என்ற இருநிலை எண்ணத்திலேயே நான் விட்டது போளி!  

ஏறி அமரும்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த சக பயணியர்கள் தாம்பரம் தாண்டும்போது கசகசவென நெருக்கி அடித்து..


ஏறும்போது இப்படி இருந்தது வைகை.



பிற்பகல் 1.20க்குப் புறப்பட்ட வைகையில்  ஆறு அல்லது 7 மணிவரை பயணத்தைப் பொறுமையாகச் செய்ய முடிகிறது.  அப்புறம் பொறுமை போய்விடுகிறது.  திருச்சி ஆறு மணிக்கு வந்து விடுமென்றே நினைத்தேன்.  ஆறே முக்காலுக்குத்தான் வந்தது.  திண்டுக்கல்லைத் தாண்டும்போது தனபாலன் நினைவுக்கு வந்தார்.  மணி 7.45.  கொடை ரோடு வந்து, கூடல் நகர் வந்த பின் நீண்ட நேரம் நின்று, மதுரையை அடையும்போது இரவு 9.20.

மூன்று கேரக்டர்கள் பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தாலும் இன்னும் சில விஷயங்களும் சொல்ல வேண்டும்.  தாண்டிச் சென்ற இளைஞர்கள் சிலரும், அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்களும் என் எதிரே வந்து அமர்ந்த அந்த (சுமார்) 22 வயதுப் பெண்ணுடன் (நான் சொல்லப் போகும் 3 கேரக்டர்களில் ஒருவர்) சேர்த்து செல்ஃபி (போல) எடுத்துக் கொண்டு அவசரம் அவசரமாக நகர்ந்தது, (என்ன அல்ப ஆசையோ)


உறுதி ஆகாத பயணச்சீட்டு வைத்திருந்த ஒருவர் காலியாக இருந்த இடங்களில் எல்லாம் தவணை முறையில் அமர்ந்தது, பயணச்சீட்டுப் பரிசோதகர் அதற்கு ஆட்சேபித்தார் என்பதால் அவர் இங்குமங்கும் தாண்டிச் செல்லும்போதெல்லாம் எழுந்து, தள்ளி நின்று ஸீன் காட்டினார் ஒருவர்.  "நான் காசைக் கொடுத்து விடுகிறேன்.. எனக்கு ஒரு ஸீட் - டிக்கெட் -கொடுங்கள் என்கிறேன்" என்று


சுமார் பன்னிரண்டு வயதுப் பையன் ஒருவன் அவன் அப்பாவிடமிருந்து அவ்வப்போது பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வாங்கிக் கொண்டு பான்ட்ரி கார் சென்று அவர்கள் வியாபாரத்துக்கு அமோக ஆதரவளித்தான். 

சுமார் 50, 55 வயது மதிக்கக் கூடிய ஒருவர் ரயில் நின்ற ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் கீழே இறங்கி நின்று விட்டு, ரயில் புறப்பட்டதும் கூடவே நடந்து ஏறிக் கொள்வது என்று அவர் மனைவிக்கும் இலேசான பதட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  என்ன ஆசையோ!
அந்த 3 கேரக்டர்கள்? 

முன்னுரையே அதிகமாகி விட்டது. 

அதனால்....

வழக்கம்போல.....

'தொடரும்' தான்!













இரண்டு படங்களைத் தவிர மற்றவை இணையத்திலிருந்து நன்றியுடன்!

53 கருத்துகள்:

  1. பயண அனுபவம் இனிமையாக இருந்தது. தொடர்கிறேன்.
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. ஆஹா மதுரை வைகைப் பயணமா.... சுவாரஸ்யமான தொடக்கம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் இந்த ரயில் பயணமே எப்போதும் பிடிப்பது இல்லைதான். ரயில் பயணத்தில் பாத் ரூம் போன்ற ஒருசில செளகர்யங்கள் உண்டுதான் என்றாலும், பஸ் போல அது நமக்கு ஏனோ அந்நியோன்யமாக இருப்பது இல்லை எனத் தோன்றுவது உண்டு.

    வைகை எக்ஸ்ப்ரஸ் முதன் முதலாக ஓட்ட ஆரம்பித்தபோது என்னென்ன அலம்பல்கள் செய்தார்கள் ! மதுரையை விட்டால் திருச்சி .... திருச்சியை விட்டால் சென்னையில் மட்டுமே நிற்கும். இடையில் அநாவஸ்யமாக எங்காவது நிறுத்தப்பட்டால், அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ சார்ஜ் ஷீட் என்றெல்லாம் கேள்விப்பட்டது உண்டு. பிறகு திண்டுக்கல்லில் ஓர் ஸ்டாப்பிங் கொடுத்தார்கள். இன்று இவ்வளவு கேவலமான நிலைமையா?

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. //சுமார் 50, 55 வயது மதிக்கக் கூடிய ஒருவர் ரயில் நின்ற ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் கீழே இறங்கி நின்று விட்டு, ரயில் புறப்பட்டதும் கூடவே நடந்து ஏறிக் கொள்வது என்று அவர் மனைவிக்கும் இலேசான பட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன ஆசையோ!//

    அவர் ஏன் தன் மனைவிக்கு பட்டத்தைக் கொடுக்கணும். ஒருவேளை அவளுக்கு பட்டம் பறக்க விட மிகவும் ஆசையாக இருக்குமோ?

    பட்டமா ..... பதட்டமா ? :)

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமாக இருக்கிறது...
    தொடர்கிறோம் சகோ:)
    தம 4

    பதிலளிநீக்கு
  6. வைகையில் நான் பயணம் செய்தது ஒரே ஒரு முறைதான் அதுவும் மதுரையில் இருந்து சென்னைக்குதான்.எனக்கு பஸ் பயணம் அதுவும் இரவு நேரப்பயணம்தான் புடிக்கும்

    இந்த பதிவு பழையகால நினைவுகளை தூண்டிவிட்டது

    பதிலளிநீக்கு
  7. எனக்கு பஸ், ரயில் பயணங்கள் இரண்டுமே பிடிக்கும். ஜன்னல் ஓரம் சீட் கிடைத்து விட்டால் இன்னும் ஆனந்தம்.
    தொடர்கிறேன்.





    பதிலளிநீக்கு
  8. இரயில் பயணங்களும், பயணிகளை அவதானிப்பதும் சுவாரஸ்யமானவை. தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  9. வைகைக்குப் பல்லவன் பரவாயில்லை ரகம். விழுப்புரம் வரைக்கும் நல்ல வேகத்தில் போவாங்க. அதுக்கப்புறமா என்னமோ ஆயிடும். மாம்பலம் போறதுக்குள்ளே திக்கித்திணறித் தடுமாறும்! :) இம்மாதிரி குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் பலர் இருக்காங்க. அது சரி, அந்த அம்மாவுக்குப் ப"த"ட்டமா? இல்லைனா கணவர் பட்டம் கொடுத்தாரா? :P :P :P :P

    பதிலளிநீக்கு
  10. ரயில் பயணத்தை இன்னும் முடிக்கவில்லையே... இந்த மாதிரிப் பயணங்களில் நிறைய கேரக்டர்ஸைப் பார்க்கலாம். எழுதினதை வாசித்துப் பார்த்தால், ரயிலில் சாப்பிடக் கொண்டுபோனவற்றை, வீட்டுக்குத் திருப்பி எடுத்துப் போனமாதிரி இருக்கு. ரயில் பேன்ட்'ரில செய்கிற பண்டங்கள் சுத்தமாக இருக்கா? ரயில் பயணங்களில் உள்ள சந்தோஷம் பஸ் பயணத்தில் வராது. அது கச கச என்று இருக்கும். பஸ்ஸை ஸ்டான்டர்டு மோட்டலில் நிறுத்துவார்கள். அங்கு எல்லாமே ரொம்ப விலையிலும், தரம் குறைவாகவும் இருக்கும்.போதாதற்கு, கண்ட கண்ட படம்லாம் போட்டு தலைவலியை உண்டாக்கிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. பகல் நேரப் பயணத்தில் இது ஒரு அட்வாண்டேஜ் சக பயணிகளை கவனிக்கலாம் பொழுது போய் விடும் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. ரயில் பயணம் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் வேடிக்கப் பார்த்துக் கொண்டே வரலாமே. அப்புறம் எழுந்து நடக்கலாம். சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்கலாம்..நிகழ்வுகளும்..உங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருக்கிறது...தொடர்கின்றேன். அட தக்காளி சூப் நல்லாருந்துச்சா...பரவால்ல ஸ்ரீராம். பெரும்பாலும் அதில் போடும் ப்ரெட் பழையதாய் இருக்கும்...கடுக்கென்று.

    அப்புறம் இந்த யூட்யூப்ல வேற வட இந்திய ரயில்ல பான்ட்ரி கார்ல எப்படிச் சமைக்கிறார்கள் பொருள்கள் எப்படி இருக்கின்றன என்று ஒரு வட இந்திய டி வி காரர்கள் வேறு நேரடியாக எடுத்துப் போட்டிருக்க அதை நான் ஏதேச்சையாக ஒரு பதிவிற்கு வேண்டிப் படம் தேடும் போது பார்த்துத் தொலைக்க....வேண்டாம் அப்புறம் நீங்கள் அன்று சாப்பிட்டது இன்று "உவ்வே" ஆகிவிடும்... இப்போது தொலைதூர ரயில்களில் பான்ட்ரி சேவை ரத்து செய்யப்படுகிறது என்றும் இ கேட்டரிங்க் வருகிறது. நமக்கு வேண்டியதை நம் பி என் ஆர் நம்பர் கொடுத்து, உணவிற்கும் செய்துவிட்டால் காலை உணவு மதிய உணவு எல்லாம் அந்ததந்த ஸ்டேஷனுக்கு வரும் போது நம் சீட்டிற்கு வந்து விடும் என்று மெயில் ஐ ஆர் டி சியிடமிருந்து வந்தது. என்னவோ போங்க.....

    (துளசிக்கு வேலைப் பளு..வாசிக்க முடியவில்லை அதனால் "றேன்")

    கீதா

    பதிலளிநீக்கு
  13. நானும் தொடர்ந்து ரயிலில் வருகிறேன் நண்பரே நல்ல சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  14. ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தப் பயணம். ஆனால் நேரம் ஆகஆக
    நம் பொறுமையை சோதனைக்கு உள்ளாக்கி விடுகிறது. உங்கள் வைகைப் பயணக் கேரக்டர்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்....

    பதிலளிநீக்கு
  15. சௌகர்யம் என்றாலும் ரயில் பயணம் எனக்கும் போரடிக்கும் :)

    பதிலளிநீக்கு
  16. ரயில் பயணம் செய்தால்தானே... ஜாலியா இருக்கமா?? போர் அடிக்குமான்னு எனக்கும்... தெரியும்

    பதிலளிநீக்கு
  17. பல்லவன்ல திருச்சி போலாம். சுருக்க முடியும்.
    வைகைல மதுரை போய் 25 வருஷம் ஆச்சு.
    சுவாரஸ்யமான கம்பெனி. மேலும் மனம் ஊருக்குப் போகும் சந்தோஷம்.
    ஜன்னலோரம் அமர்ந்து பழைய நினைவுகளையும் பழைய ஊர்களை ரசித்தபடி போனதால் அலுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  18. ஆஹா! அந்த மூன்று கேரக்டர்கள் பற்றிச் சொல்லாமல் வைகை போல நீண்டு மெதுவாகப் போக எண்ணிவிட்டீர்கள் :))
    எனக்கு கார் தான் சாய்ஸ், எல்லாம் நம்மிஷ்டம் :)

    பதிலளிநீக்கு
  19. நன்றி நண்பர் செந்தில் குமார்

    பதிலளிநீக்கு
  20. நன்றி வைகோ ஸார். ரயில் பயணத்துக்கு எதிர் ஓட்டு போடுவதில் நீங்களும் நானும் ஒன்று! வைகை இப்போது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் அப்புறமும் சிறு ஊர்களிலும் நின்று செல்கிறது.

    பதிலளிநீக்கு
  21. பட்டம் இல்லை, பதட்டம்தான் வைகோ ஸார். ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  22. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  23. நன்றி மதுரைத் தமிழன். நீங்கள் இந்தியா வந்தே நீண்ட நாட்களாகி விட்டதோ!

    பதிலளிநீக்கு
  24. நன்றி கோமதி அரசு மேடம். ஜன்னலோர ஸீட் எங்கே கிடைக்கிறது? இரவுருக்கு இடையில் இடுக்கிக் கொண்டு உட்காரத்தான் இடம் கிடைத்தது. நல்லவேளை வலது தோள் மோதல் என் பாஸ்!

    பதிலளிநீக்கு
  25. நன்றி கீதா மேடம். டெஸ்டினேஷன் ஊர் நெருங்கும்போது ஸ்லோ ஆகி விடும் போலும்!

    பதிலளிநீக்கு
  26. நெல்லைத் தமிழன் ஸார்.. காதைக் கொண்டுவாருங்கள், ஒரு விஷயம் சொல்கிறேன். கொண்டு போனது திருச்சி தாண்டும் நேரம் காலி செய்து விட்டோம்! எதுவும் மிச்சம் இல்லை. வடை வாங்க பான்ட்ரி காருக்கே சென்றோம். சுத்தமாகத்தான் இருந்தது. நிறைய பேர்களைப் பார்க்கலாம்தான். ஆனாலும் என்னவோ எனக்கு பஸ் தான் பிடிக்கும்! இப்போது நல்ல ஹோட்டலில்தான் நிறுத்துகிறார்கள் நெல்லைத் தமிழன் ஸார். முன்னால போல இல்லை!

    பதிலளிநீக்கு
  27. நன்றி கீதா. ஆமாம்... இந்த தடவை தக்காளி சூப் நிஜமாக நன்றாகவே இருந்தது. ப்ரெட்டா அது? நான் ஏதோ மரத்தக்கைன்னு நினைச்சேன்! இங்கே பான்ட்ரி கார் பரவாயில்லாமல் நன்றாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். ஆமாம், ஆரம்பத்தில் ரயில் பயணமோ, பஸ் பயணமோ சுகமாகத்தான் இருக்கின்றது. சொல்லப் பட்ட நேரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டே இருந்தால் பொறுமை போய்விடுகிறது!

    பதிலளிநீக்கு
  29. நன்றி பகவான்ஜி. நீங்களும் நானும் ஒரு கட்சி போல!

    பதிலளிநீக்கு
  30. இதுவரை ரயிலில் பயணம் செய்ததே இல்லையா நண்பர் வலிப்போக்கன்? ஆச்சர்யமாய் இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  31. நன்றி வல்லிமா... பிரயாணங்களுக்கு இடையில் போதிய இடைவெளி இருந்தால் ஓகே. மீண்டும் மீண்டும் பயணம் செய்யும்போது அலுப்பு மேலிடுகிறது. பயணக் காரணங்களும், பணிக்குத் திரும்ப வேண்டிய அவசர விடுப்புகளும் அதற்கு ஒரு காரணம்!

    பதிலளிநீக்கு
  32. அந்த 3 கேரக்டர்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன். நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  33. ரயில் பயணம் தான் எப்பவுமே. பேருந்துப் பயணம் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். ரயில் பயணத்தில் சக பயணிகளைப் பார்த்துக்கொண்டு வந்தாலே பொழுது போய்விடும்.
    அந்த 3 கேரக்டர்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். திரு ஜோக்காளி அவர்களின் கதையை படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  34. அசௌகரியங்கள் இருந்தாலும் எனக்கும் ரயில் பயணத்தை விட பேருந்துப் பயணமே பிடிக்கும்.ரயில் எப்போதுமே ஊரை விட்டு ஒதுங்கியே செல்லும்.பேருந்து ஊருக்குள் நுழைந்து செல்லும். இப்போதோ பை பாஸ் சாலை பயணங்களால் ரயிலைப் போலவே பேருந்துகளும் ஊர்களுடனான நெருக்கத்தை குறைத்து விட்டது

    பதிலளிநீக்கு
  35. எனக்கும் கிரேஸ் சொன்னது மாதிரி கார் தான் இஷ்டம்! நினைத்த நேரம் நிறுத்தலாம். எல்லாமே நம் விருப்பம்! அந்த மூன்று கதாபாத்திரங்கள் பற்றியறிய ஆவல்! தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. சுவாரசியமான பயணம்
    தொடர்ந்து பதியுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  37. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  38. தனியே குடும்பமாக பயணம் எனின் கார் நண்பர்களுடன் ஏதேனும் டிரிப் எனில் van!ஐரோப்பாவுக்குள் எங்கே செல்வதானாலும் எமது சொந்த வாகனம் தான், ரயிலிலும் பேருந்திலும் ஏறி இறங்கி துணிமணிபெட்டிகளுடன் அலைய முடியாதுப்பா.!

    அதனால் ரயிலிலும் பேருந்திலும் தூரமாய் பயணம் செய்த அனுபவங்கள் குறைவே!சுவிஸில் ரயில் பயணம் விமான பயணத்தினை போல் சுத்தமாக அதிக சத்தமின்றி இருக்கும்,அதிலும் ஐஸ் ரெயின் இன்ரர்சிட்டியில் ஏறினால் 100 கி,மீற்றர்கள் ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடுவோம்.குறுகிய தூர உள்ளூர் பயண ரயில் வண்டிகளும் உண்டு.பயண நேரத்தில் வெளியிட டாய்லட்களை பாயன் படுத்த பிடிக்காமல் போவதால் பயணம் புறப்பட முன்னர் இருந்தே சாப்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வருவேன்.

    அங்கே எப்படித்தான் பயண நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவார்களோ! அடுத்து தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  39. உங்களை நம்பியே பான்ட்ரி தொடங்கியிருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  40. அந்த 3 கதாபாத்திரங்களுக்காக வெயிட்டிங்...

    பதிலளிநீக்கு
  41. ரயிலில் காலார நடக்க முடியும், நாலு பேரைப் பார்க்க முடியும் என்பதால் என் சாய்ஸ் ரயில். இந்த பதிவில் உணவு கடை. Waiting for next...

    பதிலளிநீக்கு
  42. திண்டுக்கல் என்றதும் நான் படித்த செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல் நினைவுக்கு வந்தது. எவ்வளவு நேர்த்தியான கல்வி கிடைத்தது என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழாசிர்யர் பூவராகன் அவர்களையும் பள்ளியின் தேர்ந்த நூலகத்தையும் அந்த மணிக்கூண்டையும் மறக்கவே முடியாது! இப்பொழுது அது மேல் நிலைப் பள்ளி ஆகியிருக்கும்!

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் சகோதரரே.

    நலமா? பேருந்தோ, ரயிலோ பயணம் என்பது சற்று செளகரியமாக இருக்குமாறு அமைந்து விட்டால், நன்றாகவிருக்கும். அதிலும் பகல் நேரத்தில் ஜன்னலோரத்தில் அமரும் வாய்ப்பு கிடைத்தால், பேச்சுத்துணை, புத்தகத்துணையையும் எதிர்பாராது நேரத்தை நகர்த்தி விடலாம். தங்களின் எத்தனையோ பதிவுகளை தவற விட்டமைக்கு வருந்துகிறேன். நேரம் கிடைக்கும் சமயங்களில் அவசியம் படிக்கிறேன். சுவாரஸ்யமாக சொல்லிச்செல்லும் தங்களின் இந்த ரயில் பயணத்தில் இன்றிலிருந்து நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். மூவகையான மனிதர்களின் தன்மையை தாங்கள் தொடர அறிய ஆவலாயுள்ளேன். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  44. ஒரு காலத்தில் எனக்கு வாழ்க்கையில் பயணம் என்பது, பெரும்பகுதி ரெயிலில்தான். இப்போது எல்லாமே பஸ்தான். இந்த பதிவினைப் படித்தவுடன், மீண்டும் ரெயிலில் பயணம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது.

    பாண்ட்ரி கார் சமையல் வாசனையை நினைவு படுத்தி விட்டீர்கள். இன்றும் நாசியில் நிற்கிறது. . அப்போது பல்லவன், வைகை வந்த புதிது. சுத்தம் இருந்தது. விலையும் குறைவு. பாண்ட்ரி காரிலிருந்து விதம் விதமாக கொண்டு வந்தாலும் , எதிரில் இருப்பவர்களை நினைத்துக் கொண்டு, கூச்சம் காரணமாக வாங்கி சாப்பிட்டது குறைவு. எனவே அங்கேயே போய் சாப்பிடுவேன். இப்போது அனுமதி உண்டா?

    தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  45. :) Nice read anna. Enjoyed this after a really long time!

    பதிலளிநீக்கு
  46. I still cant believe you took a selfie with a stranger! Really? Good that you did not miss anything from the Pantry Car excepting the "Ommmmliiiiiiightey". Why no mention about the heat in the Train? Horrible travel two years ago in such a train from Kovai-Chennai. Unbearable heat!

    பதிலளிநீக்கு
  47. நன்றி அனன்யா.

    //I still cant believe you took a selfie with a stranger!//

    நன்றாகப் படிக்கவும். சில இளஞர்கள்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் அவரையும் சேர்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!