புதன், 8 ஜூன், 2016

தியேட்டர் நினைவுகள் - 3 :: படம் பார்க்கச் சென்று விறகுக் கட்டையால் அடி வாங்கிய சம்பவம்..




     தஞ்சையில் இருந்தவரை படம் பார்க்க நண்பர்களோடு சைக்கிளில் செல்வோம்.  டிக்கெட் வாங்கும் வேலை நண்பர்களில் யாராவது ஏற்றுக் கொள்வார்கள்.  எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அடித்துப் பிடித்து வாங்கி விடுவார்கள்.  வெளியில் வந்து வெற்றி வீரனைப் போல சலம்புவார்கள்!  
 
    
                                   Image result for thirisoolam tamil film images   Image result for thirisoolam tamil film images

     திரிசூலம் படத்துக்கு டிக்கெட் வாங்கிய நண்பனின் சட்டை கிழிந்து விட்டதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.  அவன் சைக்கிள் கடை வைத்திருந்தான்.  அவன் வைத்திருந்த ஓரிரு நல்ல சட்டைகளில் அதுவும் ஒன்று.  அப்புறம் என் சட்டைகளில் அவனுக்குப் பிடித்த இரண்டு மூன்று சட்டைகளைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.  நான் பரிதாபப் பட்டதன் பின்விளைவு!


Image result for portar ponnusamy tamil film images

     இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.  பெய்யும் மழையில் சைக்கிளில் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ் என்று அடித்துக் கொண்டு சென்று படம் பார்ப்போம்.  படம் முக்கியமல்ல.  எங்கள் குழுவினர் கூடி இருப்பதுதான் முக்கியம்.  'போர்ட்டர் பொன்னுசாமி' என்கிற மகா மொக்கைப் படத்துக்கெல்லாம் நண்பர்களின் வற்புறுத்தலால் சென்றிருக்கிறேன். 


     மழையில் நனைந்ததால் சட்டையை அவிழ்த்து விட்டு வெறும் உடம்புடன் ஓரிரு நண்பர்கள் படம் பார்ப்பார்கள்.  எனக்கும் இன்னும் ஓரிரு நண்பர்களுக்கும் அது மானக்கேடான விஷயமாக இருக்கும்.  எங்களை வெறுப்பேற்றவே அவர்கள் மீண்டும் மீண்டும் அப்படிச் செய்வார்கள்.  அப்புறம் சந்திக்கும்போது அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.

     குறுகிய டிக்கெட் கவுண்டரில் நுழைந்து நடப்பது எரிச்சலான வேலை.  அதுவும் கூட்டமான படங்களுக்கு.  என் நண்பன் சைக்கிள் கடை சசிக் குமார் இது மாதிரி இடங்களில் டிக்கெட் வாங்குவதில் கில்லாடி.  இந்தப் பழக்கங்களில் கூட்டமே இல்லாத படங்களின் கவுண்டர்களில் கூட கம்பிகளின் மேலேறி உயரத்திலேயே நடப்பான்!  எங்களிடமும் சரி,  திட்டும் தியேட்டர்க் காரர்களிடமும் சரி, "பழகிடுச்சு தோஸ்த்து ..  அப்புறம் என்ன த்ரில்?" என்பான்!

     மதுரை சினிப்ரியா காம்ப்ளெக்சில் காந்தி படம் ரிலீஸ் ஆனது.  இதை சுகப்ரியாவில் போட்டிருந்தார்கள் என்று நினைவு.  நம்புங்கள்.. அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைப்பதே சிரமமாக  இருந்தது.  தஞ்சையில் இருந்த என் நண்பர்கள் போல மதுரையில் கிடையாது.  சாதாரணமான, அசகாய வேலைகளுக்கு அப்பாற்பட்ட இரு நண்பர்களுடன்தான் அந்தப் படத்துக்குச் சென்றேன்.  நம்முடைய செயல்களும் சேரும் குழுவைப் பொறுத்தேதானே அமைகிறது! 


     அன்று அதிசயமாக டிக்கெட் கவுண்டருக்குள் நுழையுமளவு ஃப்ரீயாக இருந்தது.  நுழைந்து விட்டோம்.  கொஞ்ச நேரத்திலேயே பின்னால் கூட்டம் சேர்த்து நெருக்க ஆரம்பித்து விட்டது. 


     வியர்வை, கசகசப்பு, எரிச்சல். 


     பின்னால் நகர்ந்து வெளியேயும் போக முடியவில்லை.  ஒரு ஒழுங்கான வரிசையாக இல்லாமல், அந்தக் குறுகிய இடத்தில் நம்முடன் நெருக்கி அடித்துக் கொண்டு ஆட்கள்.   நிமிர்ந்து மட்டும் பார்க்கக் கூடாது!!!  கைலியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நம் தலைக்குமேல் ஆட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருப்பார்கள்.  இவர்கள் படம் பார்க்க வந்தார்களா, டிக்கெட்டை வாங்கி ப்ளாக்கில் விற்க வந்தார்களா என்று அனுமானிக்க முடியாது.  ஆங்கிலப் படங்களில் கூட இது மாதிரி ந(ண்)பர்கள் நம் அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  'எதை' எதிர்பார்த்து வருகிறார்களோ!

     இந்நிலையில் டிக்கெட்டே வேண்டாம், வெளியே போனால் போதும் என்று மூச்சு முட்ட ஆரம்பித்து விட,  கவுண்டர் அருகே வந்தும் கூட,  கவுண்டருக்குள் கை விட முடியாமல் அருகிலிருந்தும், மேலிருந்தும், கீழிருந்தும் கைகள் கவுண்டருக்குள் நெருக்க,  வந்தார்கள் தியேட்டர்க் கார அடிப்பொடிகள்!  கையில் உருண்டையாக சவுக்காலான கட்டைகள்.  


                                         Image result for gandhi film images


                                                                                            



     சும்மா மிரட்டுவார்கள், ஃப்ரீயானால் டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்திருந்தேன்.  என்னைப் பார்த்தால் கௌரவமாக இருக்கும், அடிக்க மாட்டார்கள் என்றும் நம்பினேன்!!!!   ஒழுங்காய் வரிசையில் நின்று வந்த நான் வெளியில் தள்ளப்பட்டு விழ, ஏற்கெனவே ஓரத்தில் எல்லாம் அடிப்பது போல பாவ்லாவில் ஆரம்பித்து, ரசிகர்களின் எதிர்க்குரலால் நிஜமாகவே அடிக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த 'தடி'யர்கள்.  என்னுடைய இடது காலில் அடி விழுந்தது.  வலி தாங்க முடியவில்லை. சுதாரிப்பதற்குள் இன்னொன்று.  தனியாக ஓடி வந்து நின்று விட்டோம்.


     காத்திருந்து, படம் ஆரம்பித்தபின், கூட்டம் குறைந்த நிலையில் நண்பர்களுடன் தியேட்டர் மேலாளர் அறைக்குச் சென்று புகார் செய்தும் பயனில்லை. அறைக்கு அருகிலேயே நெருங்க விடவில்லை.  தூரத்திலிருந்தே கத்த வேண்டி இருந்தது.  அவமானமாக இருந்தது.  








                                 Image result for gandhi film images


     ஒரு அஹிம்சாவாதியின் வரலாறைப் பார்க்கப்போனால் இவ்வளவு ஹிம்சையா என்று இன்றுவரை அந்தப் படத்தைப் பார்க்கவில்லை!  தொலைக்காட்சியில் போடும்போது கூடப் பார்க்கத் தோன்றவில்லை.  எங்காவது பென் கிங்க்ஸ்லியின் படத்தைப் பார்த்தால் கூட இன்றும் என் இடது கணுக்காலில் வலிக்கும்!!!



27 கருத்துகள்:

  1. மறக்க இயலாத நினைவுதான் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. mmmm காந்தியும் ஒரு வகையில் ஹிம்சா வாதி தான். அதைப் பத்தித் தனியாச் சொல்றேன். இப்போ சாப்பிடணும். போயிட்டு வரேன். :)

    பதிலளிநீக்கு
  3. ரெட் ஹில்ஸ் லஷ்மி தியேட்டரில் ஏழாவது படிக்கையில் புன்னகை மன்னன் படம் பார்க்க சென்று இப்படிதான் டிக்கெட் கிடைக்காமல் தியேட்டர் காரர்கள் சவுக்கால் அடிக்க நல்ல வேளை எனது மாமா அடிவாங்காமல் தப்பி திரும்பி வந்தார். அந்த நினைவு நிழலாடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. தியேட்டருக்குப் போய்ப் படம்பார்க்க வேண்டி அடி ஏதும் வாங்கியதில்லை. திருச்சியில் பெரிய கடை வீதி சந்தான அல்லிமால் தெருவில் நண்பனுடன் தங்கி இருந்தேன் தினம் அருகே இருக்கும் ஏதாவது தியேட்டருக்குப் போய் என்ன பாடாவதிப் படமானாலும் பார்ப்போம் ஏன் என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
  5. தடியன் செய்த வேலைக்கு காந்தி பலிகடாவா :)

    பதிலளிநீக்கு
  6. ஒரு அஹிம்சாவாதியின் வரலாறைப் பார்க்கப் போனால் இவ்வளவு ஹிம்சையா ? உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விடயம்தான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  7. கீதா மேடம் சொல்லவந்தது நான் சொல்கிறேன். அவர் பாட்டுக்கு உண்ணாவிரதம் அது இது என்று பல தடவை நம் தலைவர்களை ஹிம்சை செய்து காரியம் சாதித்திருக்கிறார். அவர்மேல் கொண்ட நன் மதிப்பால், தான் சரி என்று நம்புவதைக்கூட அவருக்காக விட்டுக்கொடுக்கும்படி காந்தி ஹிம்சை செய்தார். அது, நேருவிலிருந்து, வல்லபாய் படேலிலிருந்து ஒரு பெரிய லிஸ்ட். (அதனால்தான், காந்தியின் உண்ணாவிரதத்துக்காக, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவசர அவசரமாக, பாகிஸ்தானுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை எல்லோர் எதிர்ப்பையும் மீறி, நேரு 15-20 கோடி கொடுத்தார். அதனை வைத்து பாகிஸ்தான் இந்தியாவுடன் போருக்கு ஆயத்தமானதுதான் மிச்சம். காந்தி இப்படியே உண்ணாவிரத ஆயுதத்தையும் அஹிம்சை ஆயுதத்தையும் எடுத்துச் செயல்படுவது, பாகிஸ்தானுக்கே (மற்றும் இந்திய முஸ்லீம்களுக்கே) ஆதாயமாக முடிவதை எண்ணித்தான், ஹிந்து நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டவர்கள், அதனை நம்பியவர்கள், காந்தியையே கொலை செய்தனர். (இதெல்லாம் வரலாற்றில் உள்ளது)

    நிற்க... அப்போது காந்தி படத்துக்கு அளவுக்கு அதிகமாகக் கூட்டம் கூடியதற்குக் காரணம், வரி விலக்குதான். அதாவது 10 ரூ டிக்கட், 3 ரூ. அதேசமயம், படமும் அருமை. நான் இந்தப் படத்தை ஊட்டியில் பார்த்ததாக நினைவு. படத்துக்கு டிக்கெட் வாங்கி, காலில் அடிபட்டாலும் ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம். டிக்கெட்டே கிடைக்காமல், அடி மட்டுமா? இறந்தும் காந்தி உங்களுக்கு ஹிம்சை கொடுத்துவிட்டாரே !

    பதிலளிநீக்கு
  8. படம் முக்கியமல்ல. எங்கள் குழுவினர் கூடி இருப்பதுதான் முக்கியம். நண்பர்களின் தத்துவமே இதுதான்.

    பதிலளிநீக்கு
  9. படம் முக்கியமல்ல. எங்கள் குழுவினர் கூடி இருப்பதுதான் முக்கியம். நண்பர்களின் தத்துவமே இதுதான்.

    பதிலளிநீக்கு
  10. இப்படியான ரசிகர்கள் மீது நடக்கும் தடியடி அநாகரிக செயலை கண்டிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அனுபவத்தை ரசித்தேன். அவசியம் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று காந்தி. ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. இவ்வளவு கஷ்டபட்டு இருக்கிறீர்களா? சினிமா பார்க்க.

    பதிலளிநீக்கு
  13. வாங்க நண்பர் கரந்தை ஜெயக்குமார். நன்றி உங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  14. வாங்க கீதா மேடம். 'காந்தியின் ஹிம்சைகள்' என்று தனிப் பதிவாப் போடப் போறீங்களா? ஐயம் வெயிட்டிங்!

    :)))

    பதிலளிநீக்கு
  15. வாங்க தளிர் சுரேஷ். உங்கள் பின்னூட்டம் படிச்சதும் வந்த ஒரு அல்ப திருப்தி என்ன தெரியுமா? "அப்பாடி... மற்ற தியேட்டர்களிலும் அடிச்சிருக்காங்க.. நம்ம நண்பர்களும் அடி வாங்கி இருக்காங்க!"

    சும்மா சொன்னேன். இது ஆங்காங்கே வழக்கம்தான் போல!

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஜி எம் பி ஸார்... அதெல்லாம் ஒரு வயசுதான்!

    //என்ன பாடாவதிப் படமானாலும் பார்ப்போம் ஏன் என்று தெரியாது. //

    பொழுது போகத்தான்!!..

    பதிலளிநீக்கு
  17. வாங்க பகவான் ஜி.. நான் அந்தப் படத்தைப் பார்க்காததால் அவருக்கு என்ன நஷ்டம்?

    பதிலளிநீக்கு
  18. வாங்க நண்பர் கில்லர்ஜி.. அவங்களுக்கென்ன? படம் பார்க்க வரவங்கள்லாம் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைப்பு! வருகை + கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க நண்பர் நெல்லைத் தமிழன்.. காந்தி எளிமையா இருக்கக் கொடுத்த விலை அதிகம்னு சொல்வாங்க... வெளிநாட்டுல திடீர்னு கொண்டு வாடா கழுதைப் பாலை... நான் அதைத்தான் குடிப்பேன்'னா எங்க போவாங்க... நிற்கச் சொன்னீர்கள். எப்போது உட்காரணும்னு சொல்லலையே...!!!!! வரிவிலக்குக் கொடுத்த எல்லாப் படங்களுக்கும் கூட்டம் வந்துடுச்சா என்ன!

    பதிலளிநீக்கு
  20. வாங்க நண்பர் வலிப்போக்கன். உண்மைதான். சேர்ந்து, மகிழ்ந்து, பேசிச் சிரித்திருந்த நாட்கள் அவை!

    பதிலளிநீக்கு
  21. வாங்க நண்பர் நேசன்.. இவளவு வருடங்கள் கழித்து என்னத்தைக் கண்டிக்க! மன்னித்து விட்டுடுவோம்!

    பதிலளிநீக்கு
  22. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. பார்த்து விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  23. வாங்க கோமதி அரசு மேடம்.. அப்போ வேற பொழுது போக்கு என்ன? இதுவும் சிலோன் ரேடியோவும்தான்! அதுதான்.

    பதிலளிநீக்கு
  24. எங்க ஊரில்(திருச்சி) அப்போதெல்லாம் ஆண்கள் வரிசையில் கும்பல் அதிகமாக இருந்தால் பெண்களிடம் டிக்கெட் வாங்கித் தரச் சொல்லி வேண்டுவார்கள். நாங்கள் அந்த மாதிரி சேவை எல்லாம் செய்திருக்கிறோம். உங்கள் ஊரில் அந்த பழக்கம் கிடையாதா?

    பதிலளிநீக்கு
  25. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்... இந்த வழக்கம் உண்டு.... உண்டு.... உண்டு... அதெல்லாம் குடும்பத்தோடப் போகும்போது. நண்பர்கள் நாங்கள் குழுவாகப் போகும்போது வீர தீர சாகசங்களுக்குத்தான் முதலிடம்! ஹிஹிஹி... சாகசங்களை என் நண்பர்கள் செய்வார்கள். நான் ஓரமாகப் பார்த்து நிற்பேன்.

    பதிலளிநீக்கு
  26. அடடா... டிக்கெட் வாங்கப் போய் அடி வாங்கிட்டீங்களே.....

    எக்ஸ்ட்ரா டிக்கெட் விற்கப் போய் சட்டை கிழித்துக் கொண்ட நண்பர் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
  27. இப்படி எல்லாம் கூட நடக்குமா? இது வரை அப்படி அனுபவம் இல்லை. கூட்டமாக இருந்தால் வந்துவிடும் வழக்கம். உங்கள் அனுபவம் வேதனைதான்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!