ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஞாயிறு 160724 :: ஹாபி


சமீபத்திய  வாக்கெடுப்பில், ஞாயிறு படம் பதிவுகள், டெப்பாசிட்  இழந்ததால், பதிவுலக  நண்பர்களுக்கு. ஞாயிற்றுக்கிழமைகளில்  படத்துடன்  சுவையான  சில  விஷயங்களைப்  பகிர்ந்துகொள்ள  ஒரு  முயற்சி இது.  
    
வாசகர்களும், அவர்களுடைய  ஹாபி  பற்றி, படத்துடன்  விவரங்கள் அனுப்பலாம். மற்ற  நண்பர்களுக்கு  அவை பயன்படும். 

இந்தப் படத்தைப் பாருங்கள். இது என்னுடைய  மொட்டைமாடித்  தோட்டத்தின்  ஒரு  சிறு  அங்கம். 


கொட்டாங்கச்சியில் வெந்தயக்கீரை. 

எப்படிச் செய்தேன் என்று சுருக்கமாகக் கூறுகின்றேன். 

முதலில்,  ஒரு   டீஸ்பூன் வெந்தயத்தை, சிறிய  கோப்பையில்  தண்ணீர் விட்டு, அதில் இருபத்துநான்கு  மணி நேரம்  ஊறவிட்டேன்.  

தேங்காயை உடைத்து, குடுமிப்பக்கம்  உள்ள  கொட்டாங்கச்சியில், குடுமியைப் பிய்த்து  எடுத்தபின், (தேங்காயையும் துருவி  எடுத்தபின் தான்  ) அதில்  சுலபமாக ஓட்டை போட அல்லது ஓட்டையுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம். 

                                                            

இந்தக் கொட்டாங்கச்சியில், முக்கால் பகுதிக்கு, சிறிதளவு கோகோ பீட் நிரப்பினேன். 

அது என்ன கோகோ பீட்? (நன்றி : இளங்கோவன் ரங்கராஜன்)  

 தென்னை மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட  பொருள். செங்கல் வடிவில் கிடைக்கிறது. அதில் கொஞ்சம் வெட்டி, தண்ணீரில் ஊறப்போட்டால்,  சில மணி நேரங்களில் (ஊறப்போடும்  அளவைப்  பொருத்தது. நான்  முழு  செங்கல்லையும்  ஒரு  பாக்கெட்டில்  ஊறப்போட்டதால், ஒன்றரை  நாட்கள் ஆயிற்று!)  பொலபொல வென நார் வடிவில், ஒரு பொருள் கிடைக்கும். (ஒரு கொட்டாங்கச்சுக்கு, பத்து  கிராம் அல்லது  இருபது  கிராம்  கோகோ   பீட் போதும் என்று நினைக்கின்றேன். 
  


அப்புறம் நமக்குத் தேவை, இந்த மண்புழு  உரம்.  



     
கொட்டாங்கச்சுவில், முக்கால் பகுதி  ஊறிய  கோகோ பீட்  போட்டேன்  அல்லவா? 

அதன்  மீது  போட, ஒரு கைப்பிடி அளவு வெர்மிகம்போஸ்ட்  எடுத்துக்கொண்டு, அதனோடு (இருபத்துநான்கு மணிநேரம் ) ஊறிய அரை ஸ்பூன்  வெந்தயத்தைக் கலந்துகொண்டு, கோகோ பீட்  லேயர் மீது  தூவினேன். 

அப்புறம், காலை & மாலை  இருவேளைகளிலும்  லேசாக  தண்ணீர் தெளித்து வந்தேன். 

பத்து நாட்களுக்குள், படத்தில்  காணும்  வெந்தயக்கீரை தயார்!  

 சந்தேகங்கள் எதுவும் இருந்தால், கேளுங்க. பதிலுகிறேன். 


one more useful link here: 

     

19 கருத்துகள்:

  1. Good! வெந்தயக் கீரையை நிறைய வெங்காயம், நிறைய பூண்டு, நிறைய சீரகம், நிறைய காரமிளகாய், பெருங்காயம், கொஞ்சம் butter மட்டும் போட்டு நிறைய தண்ணீரில் நன்றாக கடைந்து பொன்னி புழுங்கலரிசி சோறுடன் (கொஞ்சம் விதை விதையாக வடித்து; அதாவது கொஞ்சம் கூட குழைக்காமல்!) அதுவும் இரவு உணவுடன் வெட்டினால் கும்மென்று இருக்கும்! கீரை கடைந்தது அதிகமாகவும், சாதம் கொஞ்சமாக உள்ளே போனால் நல்ல திருப்தி--உடம்புக்கும் நல்லது!

    என்ன அதிகாலையில் எந்திரிக்கனும்!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் உப்ப்யோகரமானத் தகவல். சின்ன சந்தேதகம்.கோகோ பீட் ஒருமுறைப் போட்டால் பிறகு மாற்ற வேண்டுமா?எவ்வளவு நாளைக்கு ஒரு முறை அதை மாற்ற வேண்டும். வெறும் கீரை மட்டும் தான் அதில்வருமா? அல்லது பூச்செடிக்கும் மண்ணிற்குப் பதிலாக கோகோ பீட் உபயோகபடுத்தலாமா?

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள். வெந்தயக் கீரை பத்தி இங்கேயும் பார்க்கலாம்.http://geetha-sambasivam.blogspot.in ஹிஹிஹி, ஒரு விளம்பரந்தேன்! :)

    பதிலளிநீக்கு
  4. புதிய பகுதி நல்லா இருக்கு. இதையே கொஞ்சம் பெரிய டப்பாவில் தயார் செய்தால், கொத்தமல்லியையும் விதைத்துவிடலாமே.. வெந்தயக் கீரையைவிட, ஃப்ரெஷ் கொத்தமல்லிக்கீரைதான் எல்லா நாளும் தேவையாயிருக்கு. (ஏன்னா வெந்தயக்கீரை அளவு கொட்டாங்கச்சியில் குறைவாகத்தான் வரும்). இந்தப் பகுதிக்காகவே (வீட்டு விளைபொருள்) நீங்களும் மெனக்கெட்டால் (ஒவ்வொரு வாரம் அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை) மாடித்தோட்டம் (பால்கனித்தோட்டம்) வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

    கீதா மேடம்.. எப்போ ரெசிப்பி பார்த்தாலும், உங்கள் பிளாக்கிலும் ஒரு எட்டு பார்த்து செய்முறை தெரிந்துகொள்கிறேன். இன்று நான், மாங்காய் தொக்கு செய்முறை பார்க்கலாம் என்று இருக்கிறேன். வார இறுதியில் செய்தது, கொஞ்சம் அல்வா பதத்தில் வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. பார்க்கவே அழகாக உள்ளது...நன்று ...மேலும் பயனுள்ள செய்திகள்...

    பதிலளிநீக்கு
  6. ஒரு தொட்டியில் மண் எடுத்து அதில் வெந்தயத்தைப் போட்டு நீர் ஊற்றி வந்தால் கீரை வரும் இல்லையென்றால் வீட்டுத் தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையிலும் விதைக்கலாம் ஒரு முறை கீரையை அறுவடை செய்தால் அவ்வளவுதான் இதற்கு மார்க்கெட்டில் கீரை வாங்கிவிடலாம் ஹாபி காஸ்ட்லி யாக இருக்கும் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. புதுமையான பாணி நன்று தொடரட்டும் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  8. மண்தொட்டியில் வெந்தயத்தைத் தூவி தண்ணீர் விட்டு வந்தாலே முளைத்து செடியாகி பலன்தருமே. இந்த கோகோ பீட்டெல்லாம் நிஜமாக எனக்குத் தெரியவே தெரியாது. வெளிநாட்டில் கறிகாய் பேக் செய்து வரும் பிளாஸ்டிக் ட்ரேயில் மண்ணைப் போட்டு செய்திருக்கிறேன். ஆழம் அதிகமில்லாததால் ட்ரரேயை ஜாக்கிரதையாகப் பாத்துக்கணும் அவ்வளவுதான். புதியவிவரப்பதிவு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. சென்னை வாசிகளுக்கு உதவும்! கிராமத்தில் இருப்பவர்கள் மண்ணிலேயே விதைக்கலாம்!பயனுள்ள பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஹை ! நம்ம ஏரியா :) நனையும் பால் can ,பிரிங்கிள்ஸ் டப்பா ,மில்க் டின் யோகர்ட் டப் எதையும் விட்டு வைக்கறதில்லை எல்லாத்திலையும் கொத்த மல்லி ,மேத்தி வளர்த்திருவேன்
    சென்னை வெயிலுக்கு தளதள்ளனு வளர்ந்திருக்கு

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே,

    நலமா? செடிகள் நம் முயற்சியில் வளர்வது மகிழ்ச்சி தரும் விஷயந்தானே! படமும் பதிவும் நன்றாக உள்ளது.மற்றும் பயனுள்ள தகவல்களையும் தந்திருப்பதற்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹாிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல தகவல். கொட்டாங்குச்சியில் வெந்தய கீரை மட்டும்தான் வளருமா? மற்ற கீரைகளும் வளர்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  13. கேட்கப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு, அடுத்த ஞாயிறு பதிவில், இயன்றவரையிலும் பதில் சொல்கின்றேன். பாராட்டிய எல்லோருக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. செடி வளர்ப்பது போல ஒரு மன இனிமை கொடுக்கும் ஹாபி வேறு இல்லை.
    அழகான முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் .நன்மை கிடைக்கட்டும். இங்கேயும் வெந்தயக் கீரை போட்டு நன்றாக வந்திருக்கிறது.கண்ணுக்கு இனிமை. செழுமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!