செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: கௌரவக்கொலை


          இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம் பெறுவது நண்பர் கோவை ஆனந்தராஜா விஜயராகவனின் படைப்பு.  என்ன மூச்சு வாங்குகிறதா, பெயரைப் படிப்பதற்குள்?  அது தெரிந்துதானோ, இல்லை அவருக்கே ஒவ்வொரு இடத்திலும் தனது சிறிய இந்தப் பெயரை தட்டச்ச அலுப்பு பட்டோ தனது பெயரினை சுருக்கமாக 'கோவை ஆவி' என்று சுருக்கிக் கொண்டுள்ளார்!!!


          வரின் தளம் பயணம்.


          நடிப்பார்வம் மிக்கவர்.  குறும்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் உற்சாக இளைஞர்.  இயக்குநரும் கூட.  இவரது விசேஷ திறமை பாடல்கள் வரி எழுதுவதும், அதற்கு தானே இசையமைத்துப் பாடி விடுவதும்.  'இது நம்ம ஆளு' பாக்யராஜ் சொல்வது போல இவர் அமைக்கும் அந்த டியூன்களில் மோகனமும், ஹம்சானந்தியும் ஆங்காங்கே தலை காட்டும்.  இனிமையாகப் பழகக் கூடிய நண்பர்.  


தற்சமயம் ஒரு தமிழ் வார இதழ் நிறுவனத்தில் பணி புரிகிறார்.  கலை ஆர்வம் மிக்கவர்.  உலகத் திரைப்பட விழாவை ரசிக்க கோவை..  மன்னிக்கவும் கோவாவுக்கே சென்று வந்தவர்.  "கோவையிலிருந்து கோவா வரை" என்று அவர் ஒரு புத்தகம் போடும் எண்ணமிருக்கிறதோ என்னவோ...  பாடல்களின் ரசிகர்.   பார்த்தத் திரைப்படங்களுக்கு சுடச்சுட விமர்சனம் எழுதி வந்தார்.  இப்போது தொடர்கிறாரா, தெரியவில்லை!


          தனது படைப்பைப் பற்றிய சிறியதொரு முன்னுரைக்குப் பின் அவரது படைப்பு கீழே...


======================================================================

Dear Sriram Sir,

          கௌரவக் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த  அந்த சமயம், மனிதம் என்ற சொல்லை இவர்கள் எல்லாம் முன்பின் கேட்டிருப்பார்களா? என்ற சந்தேகத்துடனே எழுதிய கதை இது. இது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொலைச் சம்பவங்களுக்கும் ஓரளவு பொருந்தும் என்றே  நினைக்கிறேன். 

வருத்தங்களுடன், 
கோவை ஆவி.


=======================================================================


கௌரவக் கொலை

 

 கோவை ஆவி



வீட்டின் வெளியே ஜிம்மி நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள எழுந்து சென்றவளை 'லக்ஸு, நீ இரு நான் பாக்குறேன்' என்றவாறு எழுந்து வந்தான், கதவின் தாழ்ப்பாள்களை நீக்கி சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவே இல்லை.  கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தான் சுப்பிரமணி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தோன்றவில்லை. உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். 

நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை கைகளால் ஒற்றியபடி உள்ளே வந்தான். 'யாருங்க?' அவள் கண்களில் இன்னும் பயம் இருந்தது. 


'யாருமில்ல, வீணா மனச போட்டு அலட்டிக்காதே. நாய் சும்மா தான் குரைச்சிருக்கு. நாளைக்கு வரும்போது அதுக்கு ஃபெடிக்ரீ வாங்கிட்டு வரணும். அதுக்குதான் குரைச்சிருக்கும்' என்றவாறு மெத்தையில் அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அவளும் மெத்தை மீது ஏறி அவன் மார்பில் அணைந்தபடி அமர்ந்தாள். 

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளை ஆதரவாய் அணைத்தபடி, 'கவலைப்படாத லக்ஸு, யாரும் வரமாட்டாங்க. நமக்கு காசியண்ணன், ரேவதியக்கா துணை இருக்கிற வரைக்கும் நம்மை யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது.' என்று அவள் தலையை ஆதரவாய் வருடினான். அவள் சற்றே கண்ணயர்ந்தாள். அவளை அருகே கிடத்திவிட்டு, டார்ச்சை எடுத்துக்கொண்டு கொல்லைப் புறமாக சென்றான்.

அந்த சுற்று வட்டாரத்தில் அரைக் கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகளோ வேறு எதுவும் கடைகளோ கிடையாது. ஊரை விட்டு தப்பி ஓடி வரும் போது கையில் எந்த வேலையும் இல்லை அவனுக்கு. நண்பர் ஒருவர் இரக்கப்பட்டு இவர்கள் தங்க பொட்டல் காட்டுக்குள் இருக்கும் இந்த வீட்டை கொடுத்தார். தான் வேலைபார்க்கும் மில்லில் அவனுக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். 

 அந்த வீட்டிலிருந்து காய்கறி, பால் என்று எது வாங்க வேண்டுமென்றாலும் அவனிடம் இருந்த ஒரு ஓட்டை சைக்கிளை வைத்து மேட்டில் மிதித்துச் சென்று தான் வாங்கி வர வேண்டும்.அவன் வேலைக்குச் செல்லும் நாட்களில் லக்ஷ்மி கதவை நன்றாகத் தாழிட்டுக் கொண்டு தனியாகத் தான் இருப்பாள். மூன்று முறை தட்டிய பிறகே கதவைத் திறக்க வேண்டும் என்பது அவளுக்கு அவன் இட்ட உத்தரவு. தனிமையில் இருக்கும் தன் மனைவியின் பாதுகாப்பிற்காய் ஒரு வாரம் முன்பு தான் ஒரு நாயை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து கட்டியிருந்தான்.  

எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது நேற்று வரை. நேற்றிரவும் இதே போல குரைப்புச் சத்தம் கேட்டு விழித்த விஷயம் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மிக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிந்தால் இன்னும் பயந்து விடுவாள். கொல்லைக் கதவை சாத்திவிட்டு படுக்கையறை வந்து கட்டிலில் அவள் அருகே படுத்துக் கொண்டான். ஆனால் நடு இரவு தாண்டியும் உறக்கம் வராமல் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆறு மாதத்திற்கு முன்பு ஊர்த் திருவிழாவில் அவளைப் பார்த்தபோது அவளுடைய சாதியோ, இத்தனை பிரச்சனைகள் வரும் என்றோ அவன் கனவிலும் சிந்தித்திருக்கவில்லை. 

அவன் வாலிபத்திற்கே உரிய தூண்டுதலால், திருவிழாவிற்குப் பிறகு அவளை அடிக்கடி பார்த்தவன், இவள்தான் தன் துணை, வாழ்ந்தால் இவளோடு தான் வாழ்வது என்ற முடிவையும் எடுத்து விட்டான். அவளுக்கும் இவனைப் பிடித்தது தான் விதி செய்த விளையாட்டு. இருவரும் யாரும் அறியாமல் ஊர் எல்லையில் இருக்கும் அய்யனார் கோவிலின் பின்புறம் சந்தித்துக் காதல் வளர்த்தார்கள். அவளுக்கு உள்ளூர சிறிது பயம் இருந்தாலும் அவன் அவளிடம் கூறிய, காசியண்ணன்-ரேவதியக்கா கதையை அவள் இதற்கு முன்னர் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். 

ஆனாலும் அதை அவன் வாயால் அடிக்கடி சொல்லச் சொல்லி கேட்டு தன் மனதை திடப்படுத்திக் கொள்வாள். அவர்கள் ஊரைவிட்டு ஓட முடிவெடுத்த நாளுக்கு முந்தைய நாளும் அவன் மடியில் சாய்ந்தவாறு 'சுப்பு, ஏதாவது பிரச்சனைனா, நிஜமாவே காசியண்ணனும், ரேவதியக்காவும் நம்மள காப்பாத்துவாங்களா?'  

அவன் அவளை நோக்கி புன்னகைத்துவிட்டு 'எத்தனை முறை சொல்லியிருக்கேன் லக்ஸு, இன்னும் சந்தேகமா? நல்லா கேட்டுக்கோ.  தன் தொண்டையை செருமிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான். 'இந்த ஊர்லையே மொதோ மொதோ டவுனுக்கு காலேஜ் படிக்க  போனது, ரெண்டே பேர், ஒருத்தர் நம்ம காசியண்ணன், இன்னொருத்தர் ரேவதியக்கா.
இவங்க ஒரே காலேஜ்ல தான் படிச்சாங்கன்னாலும் இவங்களுக்குள்ள
காதல் வந்தது என்னவோ காலேஜ் விட்டு ஊருக்கு ஒண்ணா திரும்ப
நடந்து வரும்போது தான். ஒருத்தர ஒருத்தர் மனசார விரும்பினாங்க.


காசியண்ணன் வேற ஜாதி, ரேவதியக்கா வேற ஜாதி. நம்ம ஊர்ப்
பயலுவலுக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா? அதனால அவங்க
யாருக்கும் தெரியாம இதே அய்யனார் கோவில் பின்னாடி தான்
சந்திச்சுப்பாங்க.' என்று அவன் கூறவும் 'நம்மள மாதிரி' என்று கூறி
குறும்பாகச் சிரித்தாள் லக்ஷ்மி.

'ஆமாம், நம்மள மாதிரியே. ஒரு நா ரேவதியக்காவுக்கு உன்ன மாதிரியே
திடீர்னு பயம் வந்திடுச்சு. 'காசி நம்மள ஊர்ல ஏத்துக்குவாங்களா?, எனக்கு
பயமா இருக்கு.' என்று அழ ஆரம்பித்திருக்கிறாள். ரேவதியக்காவை
சமாதானப் படுத்திய காசியண்ணன் ஒரு முடிவேடுத்தாரு. அதன்படி
அடுத்த நாள் காலையில ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாரு. 

'நானும் ரேவதியும் மனசாரக் காதலிக்கிறோம். ரெண்டு பேரும் கல்யாணம்
செய்துக்க ஆசைப்படுறோம். எங்களால ஓடிப் போயிருக்க முடியும். ஆனா
இந்த ஊரப் பத்தியும் சாதி வெறி பத்தியும் வெளிய தப்பா பேசிக்கிறாங்க.
அந்த களங்கத்தை எங்க கல்யாணம் துடைக்கட்டும். நம்ம கிராமம் சாதிய
ஒழிச்ச கிராமங்கள்ல முன்னோடியா இருக்கட்டும்' னு வீராப்பா பேசினார்.
அவர் காதல்ன்ற வார்த்தைய சொன்னதுமே கூட்டத்துல சலசலப்பு
ஆரம்பிச்சிடுச்சு. 

'டவுனுக்கு படிக்க அனுப்பினது தப்பா போச்சு' என்று
சிலரும் 'சாதி கெட்டு பொண்ணத் தேடுறவன பேச விடாதீங்க,
வெட்டிப் போடுங்க' என்று காட்டமான குரல்களும் வந்தன. 

அத்தனை சப்தங்களையும் ஒரே கையசைப்பில் நிசப்தமாக்கினார் ஊர் தலைவர். 'அந்தப் பய சொல்றதுல என்னய்யா தப்பிருக்கு? இன்னும் எத்தன
நாளைக்கு தான் சாதிய புடிச்சு தொங்கிகிட்டு இருப்பீங்க, நாளைக்கு
அய்யனார் கோவில்ல வச்சு ரெண்டு பேருக்கும் கல்யாணம்' என்று
கூறிவிட்டு புறப்பட்டார். கூட்டத்தில் சலசலப்பு இருந்த போதும்
தலைவரே கூறிவிட்டபடியால் அமைதியாக கலைந்து போனார்கள்.


காசியண்ணனும் ரேவதியக்காவும் சந்தோஷத்தை கண்களாலேயே
பரிமாறிக் கொண்டனர், மறுநாள் நடக்க இருந்த விபரீதம் தெரியாம
ரெண்டு பேரும் ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தாங்க.  மறுநாள் காலை
காசியண்ணன் குளிச்சு, ரேவதியக்காவுக்கு புடிச்ச அந்த பச்சைக் கலர் கோடு போட்ட சட்டை போட்டுக்கிட்டு அய்யனார் கோவில் நோக்கி கிளம்பினாரு. அவர் அங்கே போய் சேர்றதுக்கு முன்னேயே அங்கே கூட்டம் நெறைஞ்சிருந்தது.  காசியண்ணன் கூட்டத்தை விலக்கிவிட்டு அய்யனார் சிலைகிட்ட போனாரு. அவருக்கு அப்படியே தூக்கிவாரி போட்டுச்சு. 

அங்கே ரேவதியக்காவ ஒரு மரக்கம்பு நட்டு வச்சு அதில் கட்டி
வச்சிருந்தாங்க. அவங்க கன்னத்துல, கழுத்துலன்னு நிறைய
இடத்துல இருந்து ரத்தம் வந்துட்டு இருந்துச்சு. காசியண்ணன பார்த்ததும்
அங்கிருந்த ஊர் தலைவர் 'இதோ தொரை வந்துட்டாரு, அவனையும்
புடிச்சு கட்டுங்கடா' ன்னு கத்தினாரு. 

அவரையும் ரெண்டு பேர் புடிச்சு அதே மாதிரி கம்புல கட்டி வச்சாங்க. ஊர் தலைவர் ஒரு கழியால அவரை சரமாரியா அடிச்சாரு. அவரை மோசமா திட்டுனாரு. இப்படி நம்பி ஏமாந்துட்டமேன்னு வேதனை காசியண்ணன் கண்ணுல தெரிஞ்சது. 'உன்ன மாதிரி நாய்க இனிமே காதல் கத்திரிக்கான்னு வார்த்தைய சொல்லவே பயப்படணும்.' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வெட்டப்பட்ட ஒரு மரத்தின் அடிப்பாகத்தை  ரேவதியக்கா முன்னாடி வச்சாங்க. காசியண்ணன் கதற ஆரம்பிச்சாரு. வேண்டாம் வேண்டாம்னு சொல்லிப் பார்த்தாரு. ஆனா அவர் சொல்லக் கேக்க அப்போ அங்க யாருமே இல்ல.

'வெட்கங்கெட்டு போன சிறுக்கி இவளுக்கு தான் மொதல்ல' என்று
 கூறியவாறு ஆட்டை வெட்டும் ஒரு கத்தியை ஓங்கினாரு. காசியண்ணன்
கண்களை இறுக மூடிக் கொண்டார், பின்பக்கமாக கட்டப்பட்ட அவர்
கைகள் அந்த மரத்தைப் பிடுங்க முயற்சித்து தோற்றது. ஒரு பெரிய
அலறலுக்குப் பின் அவர் முகத்தில் ஏதோ ஈரம் படிந்தது. கண்விழித்துப்
பார்த்த போது பிசுபிசுவென ரத்தம் எங்கும் சிதறிக் கிடந்தது. சடலமாய்க்
கிடக்கும் ரேவதியை பார்க்கப் பிடிக்காமல் மேல்நோக்கி கதறினார்.

'இதோ பாருங்கடா, இளவட்டங்களா, சாதிய மறந்த ஒவ்வொருத்தனுக்கும்
இதுதான் தண்டனை.' என்று கர்ஜித்தபடியே தன்னை நோக்கி வந்த
ஊர் தலைவரை பார்த்து காசியண்ணன் 'எங்களைக் கொன்னுட்டதால
நீங்க ஜெயிச்சுட்டதா அர்த்தம் கெடையாது. நான் ஆவியா வந்து சாதி
பேர சொல்லி உயிரை எடுக்கிற எல்லோரையும் பழி வாங்குவேன்.' ன்னு
சொல்லிட்டு இருக்கும்போதே அவர் கழுத்தில் கத்தி விழுந்தது.






முகத்தை துடைத்துவிட்டு கத்தியை அருகிலிருந்தவனிடம்
கொடுத்துவிட்டு கையை கழுவிக் கொண்டிருந்தார் ஊர்த் தலைவர்.
'இந்த பொணங்கள காட்டுக்குள்ள தூக்கி வீசிடுங்க. நாயோ நரியோ
சாப்பிடட்டும்' ன்னு சொல்லிட்டு கையை தன் மேல் துண்டால் துடைத்துக்
கொண்டிருந்தார். காசியண்ணன் மற்றும் ரேவதியக்காவின் கைக் கட்டுகள்
அவிழ்க்கப்பட்டன.  தலை துண்டாய் கிடக்கும் முண்டங்களை பார்க்கப்
பிடிக்காமல் கூட்டத்திலிருந்த பெண்கள் பாதிப் பேர் நகர்ந்து சென்றனர்.


கட்டவிழ்ந்ததும் இரு சடலங்களும் தரையில் விழுந்தன. அப்போது
அங்கிருந்த ஒருவன் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான். அவன் எதற்காக
அப்படி ஓடுகிறான் என்று புரியாமல் எல்லோரும் அவன் காட்டிய
திசையில் பார்க்க அங்கே காசியண்ணனின் தலையில்லாத முண்டம்
எழுந்து நின்றது. வெட்டுக்கத்தி வைத்திருந்தவனை நோக்கி நடந்தது. அவன் அதைக் கீழே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான். கூட்டம் சிதறி ஓட ஆரம்பித்தது.அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஊர்த் தலைவரை நோக்கி நகர்ந்து வந்தது காசியண்ணனின் முண்டம். 

கீழே கிடந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஒரே வெட்டு. பின்னர் ரேவதியக்காவின் உடலை தூக்கிகிட்டு  இந்தக் காட்டுக்குள்ள போயி மறைஞ்சுட்டாரு. இதான் லக்ஸு அந்தக் கத' என்று சொல்லிமுடித்த போது லக்ஷ்மிக்கு வியர்த்திருந்தது.

'சுப்பு, எனக்கென்னவோ இன்னும், கடைசில முண்டம் உயிரோட வந்து
ஊர்த்தலைவர வெட்டுச்சுன்னு சொல்றத நம்ப முடியல.' என்றவளை
கோபமாக முறைத்துவிட்டு 'இந்தக் கதைய நா மட்டுமா சொல்லுறேன்.
ஊரே சொல்லுது. அதெப்படி?' 'ஆனா பஞ்சாயத்து முடிஞ்சு எல்லோரும்
போயிட்டதாவும், இந்தப் பிணங்களை காட்டில் போட்டுட்டு போனதாகவும்
ரெண்டு நாள் கழிச்சு ஊர்த்தலைவர் இதே இடத்துல வெட்டுப்பட்டு
கிடந்ததாவும் ஒரு கதை சுத்துதே' என்றவளை செல்லமாக கன்னத்தைக்
கிள்ளிவிட்டு 'புருஷன் சொல்ற கதைய தான் பொண்டாட்டி நம்பணும்.'


'சரி புருஷா' என்றவளை முத்தமிட்டு, 'லக்ஸு, நாளைக்கு யாருக்கும்
தெரியாம காலையில நாலு மணிக்கு இங்கே வந்திடு' என்று கூறிவிட்டு
இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றார்கள்.

மறுநாள் காலை மூன்று  மணிக்கே வந்து காத்திருந்தான் சுப்பிரமணி.
கடிகாரத்தில் ஐந்து மணி ஆகியும் லக்ஷ்மியைக் காணவில்லை என்றதும்
அவனுக்கு பதட்டம் அதிகமானது. சற்று நேரத்தில் யாரோ ஓடி வரும்
சப்தம் கேட்டு அய்யனார் சிலைக்குப் பின்னால் நின்று கொண்டு எட்டிப்
பார்த்தான். யாரோ துரத்தி வருவது போல் வேகமாக ஓடி வந்து
கொண்டிருந்தாள் லக்ஷ்மி. லக்ஷ்மியின் முகம் பார்த்ததும் வெளியே
வந்தான் சுப்பிரமணி. அவள் பின்னால் இரண்டு பேர் துரத்திக் கொண்டு
வந்தனர். லக்ஷ்மி சுப்பிரமணியைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு
அழுதாள். கையில் அரிவாளுடன் இருவரும் அவர்களை நெருங்கினர்.


அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காற்றடித்தது. அய்யனாரின்
கையில் இருந்த நீளமான வெட்டுக்கத்தி காதல் ஜோடிகளை வெட்ட வந்த இருவரின் தலையையும் பதம் பார்த்தது. சற்றே அதிர்ந்த போதும் இருவரும் ஆசுவாசமடைந்தனர். லக்ஷ்மியின் முகத்தில் இப்போது காசியண்ணன் ரேவதியின் கதை உண்மைதான் என்ற நம்பிக்கையின் தெளிவு தெரிந்தது.


மீண்டும் நாய் குரைக்கும் சப்தம் கேட்டு கண்விழித்த சுப்பிரமணி விடிந்து
விட்டதை உணர்ந்தான். தன் மார்பை சுற்றியிருந்த லக்ஷ்மியின் கைகளை
விடுவித்துக் கொண்டு எழுந்தான். அப்போது லக்ஷ்மி திடீரென அழும்
சப்தம் கேட்டு திரும்பினான். 

'என்ன லக்ஸு, என்ன ஆச்சு?' என்றான் பதறியபடி. 'என்னய்யா பொழப்பு இது, தினமும் நாய் குரைக்கரதுக்கு எல்லாம் பயந்து பயந்து வாழறோம். இதுக்கு இந்த கருமம் காதலை பண்ணாமலே இருந்து தொலைச்சிருக்கலாம்.' 

'என்ன லக்ஸு இப்படி சொல்றே, நாம இப்போ சந்தோஷமா தானே இருக்கோம்' என்றவனை நிமிர்ந்து பார்த்து. 'நெசமா சொல்லுய்யா, சந்தோஷமா தான் இருக்கோமா, இப்படி சொந்தம் பந்தம் யாரும் இல்லாம இப்படி ஒரு இடத்துல வந்து வாழ்றது சந்தோசமாவா இருக்கு?' 

'லக்ஸு உன் பிரச்சனை அதில்லை. வேற ஏதோ இருக்கு. என்னன்னு சொல்லு' என்றவனை பார்த்த லக்ஷ்மி தன் மனதை அங்குலம் அங்குலமாக புரிந்து கொண்ட கணவனை பெருமையோடு பார்த்தாள். பின் மீண்டும் அழத்
துவங்கினாள். 'என்னன்னு சொல்லிட்டாவது அழு லக்ஸு' என்றான்
பொறுமை இழந்தவனாய். 

'இல்ல சுப்பு, காசியண்ணன் ரேவதியக்கா கதை சொல்றவங்க இதையும்
சொல்றாங்களே' என்று நிறுத்தினாள். அவள் எதை சொல்லப் போகிறாள்
என்பதை முன்பே உணர்ந்திருந்தாலும் 'எதை?' என்று கேட்டான். 

'இல்ல, அவங்க ஊர் எல்லையில மட்டும் தான் காவல் காப்பாங்க, ஊரைத் தாண்டி வரமாட்டாங்கன்னும் சொல்றாங்களே' அவனும் அந்தக் கதைகளை
கேட்டதால் தான் ஒவ்வொரு இரவும் உள்ளூர பயந்து நடுங்கினான்.


இருந்த போதும் அவளை ஆறுதல் படுத்த 'லூஸு, அவங்க கடவுள் மாதிரி
எல்லா எடத்திலயும் இருப்பாங்க.' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே
கதவு தட்டப் படும் சப்தம் கேட்டது. இருவருக்கும் பயம், கைகளில் ஒரு
தடியை பிடித்தபடியே கதவைத் திறந்தான். அங்கே ஒரு வயதான
பெண்மணி நின்றிருந்தார். தான் வழி தவறி வந்துவிட்டதாகவும்
உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் அங்கே
தங்கியிருந்துவிட்டு செல்லலாமா என்று அனுமதியும் கேட்டார்.


சுப்பிரமணி முதலில் யோசித்த போதும் தான் வெளியே சென்றிருக்கும்
போது லக்ஷ்மிக்கு ஆதரவாக இருக்க ஒருத்தர் இருந்தால் நல்லது என்று
எண்ணி அதற்கு சம்மதித்தான். பின்னர் லக்ஷ்மியிடம் கூறிவிட்டு பால்
மற்றும் காய்கறிகள் வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.


காலை வெயில் முகத்திற்கு நேராக அடிக்க மேட்டில் சைக்கிளை
சிரமப்பட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் திரும்பத்
திரும்ப லக்ஷ்மி கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வந்தது. 'யோவ்,
காசியண்ணன், ரேவதியக்காவ கொன்னது மாதிரி நம்மளையும்
கொன்னுடுவாங்களா? என்ற கேள்வி அவன் மனதில் மீண்டும் மீண்டும்
எதிரொலித்தது. அவன் லக்ஷ்மிக்கு சொன்ன பதிலையே தனக்கும்
சொல்லிக் கொண்டான். 'ஊர விட்டு ஓடி வந்து நாலு மாசம் ஆச்சு.
இனியுமா நம்மள நெனச்சுகிட்டு இருப்பாங்க' என்று ஆறுதல் சொல்லிக்
கொண்ட போதும் சாதியின் கொடூரத்தை அவன் உணர்ந்திருந்ததால்
அவன் மனம் ஆறுதலடைய மறுத்தது. சந்தையை அடைந்து அங்கே
காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென மனதிற்குள் எதோ
மின்னல் வெட்டியது என்னவோ தவறு நிகழ்ந்துவிட்டதாய் உணர்ந்தான்.
காலையில் வந்த அந்த வயதான பெண்மணியை எங்கோ பார்த்தது
போலத் தோன்றியது. 

காய்கறிப் பையை கீழே போட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு
வேகமாக அழுத்தினான். வரும்போது இறக்கம் என்பதால் சைக்கிள்
வேகமாகப் பறந்தது. செம்மண் சாலையில் புழுதி பறக்க ஒட்டி தன் வீடு
வந்து சேர்ந்தான். முன்பக்கக் கதவு திறந்திருந்தது. 'லக்ஸு லக்ஸு' என்று
குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே சென்றான். அந்த சிறிய ஹாலைக்
கடந்து அவன் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தான். அங்கேயும் அவளைக்
காணவில்லை. அருகே இருந்த சமையலறையில் நுழைய, நொறுங்கிப்
போனான். அங்கே கழுத்தில் இரத்தம் வழிய லக்ஷ்மி கீழே கிடந்தாள்.


அவள் நாடித்துடிப்பை பார்த்தான். சப்தமின்றி அடங்கியிருந்தது.
சுப்பிரமணிக்கு தலை சுற்றியது. அந்தப் பெண்மணியை வீட்டில் சேர்த்தது
எவ்வளவு பெரிய தவறு என தன்னைத்தானே நொந்து கொண்டான்.


தலையில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டு புலம்பினான்.
கொல்லைப் புறத்தில் யாரோ முனகும் சப்தம் கேட்கவே கோபத்துடன்
கையில் கிடைத்த கத்தியை எடுத்துக் கொண்டு அங்கே சென்றான்.  


அங்கே அந்தப் பெண்மணி கழுத்தில் ரத்தம் வழிய விழுந்து துடித்துக்
கொண்டிருந்தார். சுப்பிரமணி தனக்கிருந்த கோபத்தையெல்லாம் அந்த
பெண்மணியின் உடலை பலமுறை குத்தி ஆற்றிக் கொண்டான், கத்தியை
தூர எறிந்தான். 

அந்தப் பெண்மணி உயிர் பிரியும் முன் 'பின்னாடி   பின்னாடி' என்று கூறிக் கொண்டே தலை சாய்ந்தார். அவர் காட்டிய திசையில் திரும்பிய சுப்பிரமணியை நோக்கி கண்களில் சாதி வெறியுடன்
பாய்ந்து வந்துகொண்டிருந்தது ஜிம்மி.

23 கருத்துகள்:

  1. கண்களில் சாதி வெறியுடன் ஜிம்மி
    நாய்க்குமா?
    தம +1

    பதிலளிநீக்கு
  2. ஆணவக் கொலைஎன்றதும்.. சங்கர் கௌசல்யாதான் என் நிணைவுக்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆணவக் கொலைஎன்றதும்.. சங்கர் கௌசல்யாதான் என் நிணைவுக்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆணவக் கொலைஎன்றதும்.. சங்கர் கௌசல்யாதான் என் நிணைவுக்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  5. காசியண்ணன் கொன்ற ஜாதிவெறி பிடித்த ஊர்தலைவர்தான் அடுத்த ஜென்மத்தில் ஜாதிவெறி பிடித்த நாயாக மாறிவிட்டாரோ..???

    பதிலளிநீக்கு
  6. காதலால் ஜாதியை ஒழிக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஆங்காங்கே இந்த ஜாதிப்பிரச்சனைகள் நன்கு துளிர்விட்டு வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    மொத்தத்தில் காதல் ஜோடிகளின் நிம்மதியும் கெட்டு, பிறரால் வன்முறைகள் தூண்டப்பட்டு, எப்போதுமே சமூகத்திற்கு அஞ்சி அஞ்சி வாழ வேண்டியுள்ளது என்பது, இன்றும் மறுக்கவே முடியாத கசப்பான உண்மையாகத்தான் உள்ளது.

    திலில் ஸ்டோரியை வழங்கியுள்ள கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    இதனை இன்று வெளியிட்டு, படிக்கக் கொடுத்துள்ள ’எங்கள் ப்ளாக்’குக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. கதையிலும் காசியண்ணன் ரேவதி அக்கா ஆவியா

    பதிலளிநீக்கு
  8. நடந்த உண்மைச் சம்பவங்களே மீண்டும், மீண்டும் தொடர்கிறது.
    இவ்வளவு பிரச்சினையோடு இந்தக்காதல் தேவையா ?
    நல்ல கேள்வி நண்பர் திரு. ஆவி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. ஆவி எழுதியதால் இது நிச்சயம் ஆவிக்கதை தான் ப்ரண்ட்ஸ். அதுசரி ஸ்ரீ... அது என்ன ஹம்சானந்தி..? அப்டி ஒரு நந்தியா..? ஹி... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான கதை! ஆவியின் தளத்தில் படிக்க விட்டுப் போய்விட்டது! இப்போது படித்ததில் மகிழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    நல்லகதை. கடைசி வரை திகிலுடன் சுவாரஸ்யமாக சென்றது. கதை எழுதிய கதாசிரியருக்கும், அறிமுகபடுத்திய தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. இக்கதையை ஆவி ஜீயின் தளத்தில் முதலில் படித்ததும் ,நான் இட்ட கருத்தைதான் கரந்தையாரும் முதலில் வெளிப்படுத்தியிருக்கார் :)

    பதிலளிநீக்கு
  13. ஆவியின் இந்தக் கதையை அவரது தளத்திலேயே படித்துவிட்டோம். வித்தியாசமான கதை...எழுதிய விதம் அருமை. அங்கு வாதித்ததும் முதலில் அந்தப் பாட்டிதான் என்று நினைத்து அப்புறம் ஜிம்மியா? ஜிம்மியாக இருக்காது ...(நம்மதான் பைரவர்களின் நண்பர்கள் ஆயிற்றே..அதனால்...) என்று குழம்பி அப்புறம் ஆவியுடன் பேசும் போது....சேச்சி புரியலையா முடிவு உங்களுக்கு..அந்த ஜிம்மிதான் என்று சொல்ல விளங்கிக்கொண்டேன்...

    ஆவி பாராட்டுகள், வாழ்த்துகள். நண்பரின் கதையை வெளியிட்ட எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி..

    கீதா

    பதிலளிநீக்கு
  14. Thanks All for your comments!! Thanks Sriram Sir for introducing in England Blog, it's a honour for me!!

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதை
    கதாசிரியருக்குப் பாராட்டுகள்
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    பதிலளிநீக்கு
  16. இந்தக் கதையை ஏற்கெனவே ஆவியின் தளத்திலேயே திகிலுடன் படிச்சாச்சு! முடிவு தான் மனதை வருத்தியது! ஆனால் இப்போது நடப்பது தானே! :(

    பதிலளிநீக்கு
  17. காதலிக்கவே வேண்டாம். ஜிம்மி யாரோட ஆவி.. பரிதாபம் பா. ஆவி. ஆனந்தராஜா வைச் சொன்னேன். வெற்றி பெற்ற காதலை யாராவது எழுதுங்கப்பா.

    பதிலளிநீக்கு
  18. வித்தியாசமான கதை... தேடி வெளியிட்ட ஶ்ரீராமுக்கும், எழுதிய ஆ.வி க்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. ஆவி பெயர்க் காரணம் இன்று தான் தெரிந்தது. ஜீவி போல ஆவி என்கிற யோசனை வரவேயில்லை.

    முடிவு எதிர்பார்க்காதது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதற்காகவே பாராட்டுகளும், வாழ்த்துக்களும். கதையைச் சொன்ன விதமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  20. ஆவியின் பாடலில் தலைகாட்டுவது ஹம்சானந்தியா ஹிம்சானந்தியான்னு ஒரு பட்டிமன்றம் வைக்கலாமா சார்? ஹஹஹா ;)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!