செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: செய்தித்தாள் சொன்ன & சொல்லாத கதை



          எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் நண்பர் பெசொவி அவர்களின் கதை.  அதாவது  'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களின் கதை. 


          இவரின் தளம் வந்துட்டான்யா வந்துட்டான்.


          2010 லிருந்தே எங்கள் நண்பர்.  இப்போதும் எங்களின் புதிர்ப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பவர்.  மன்னையின் மைந்தர்.


          அவரின் முன்னுரை தொடர்கிறது..  அதைத் தொடர்வது அவரின் கதை.


=======================================================================


என்னுடைய கதைக்கான முன்னுரை:   கதை எழுதவேண்டும் என்ற ஆவல் இல்லாதவர் இருப்பது மிகவும் குறைவு. நானும் கதை எழுத ஆசைப்பட்டேன். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குமுன் விகடன் இதழுக்கு ஒரு கதை கூட அனுப்பிவைத்தேன். வாசகர்களின் நல்ல நேரம் அது பிரசுரமாகவில்லை. நல்ல நேரம் எப்போதும் தொடருமா? 2009ல் வலைப்பூவில் நுழைந்தேன். வந்துட்டான்யா வந்துட்டான் என்ற பெயரில் ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன். 


எனக்குத் தோன்றிய கருத்து(?!)க்களை எழுதத் தொடங்கினேன். இங்கு நாமே ஆசிரியர் என்பதால் ஜோக், கதை, கவிதை என்று கன்னாபின்னா வென்று எழுதினேன். ஃபேஸ்புக் வந்தபின்னர் தற்போது வலைப்பூ பக்கம் செல்வதில்லை.  எல்லா கைங்கரியங்களும் ஃபேஸ்புக்கில்தான்.  நான் என் வலைப்பூவில் எழுதிய பல கதைகளில் ஒன்று இந்தக் கதை. இக்கதையைக் கேட்டு வாங்கிப் போடும் எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவிற்கும் படிக்கப் போகும் உங்களுக்கும் நன்றி!


=================================================================== 


 டிஸ்கி : ஒரு சாதாரண கதை, அசாதாரண கோணத்தில்



செய்தித்தாள் சொன்ன & சொல்லாத கதை 


பெயர் சொல்ல விருப்பமில்லை


செய்தித்தாள் சொன்னது:

ஜனவரி : கா.மு.எ.க. தலைவர் பழனிசாமி மரணம். கட்சி துணை செயலாளர் கதறல்.

கா.மு.எ.க. தலைவர் பழனிச்சாமி நேற்று அதிகாலை காலமானார். தீவிர வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்த அவர் நேற்று முன் தினம் இரவு படுக்கப் போகுமுன் விஷம் கலந்த பாலை குடித்து விட்டதாகவும், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் அவர் உடலைப் பரிசோதித்த அரசு டாக்டர் தெரிவித்தார். கட்சியின் துணை செயலாளரான அய்யாசாமி  "ஐயோ, தலைவரே, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே!" என்று அவர் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி மனத்தை உருக்குவதாக இருந்தது. "கட்சியின் அடுத்த தலைவராக தலைவரின் ஒரே மகன் ராஜதுரை விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்" என்று திரு அய்யாசாமி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஜூன் : கா.மு.எ.க. தலைவர் ராஜதுரை சாலை விபத்தில் மரணம். 
சமீபத்தில் காலமான கா.மு.எ.க. தலைவர் பழனிசாமியின் மகன் ராஜதுரை. இவர் தந்தைக்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டது தெரிந்ததே. அவர் நேற்றிரவு, ஒரு கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு லாரி அவர் கார் மீது மோதியதில் அந்த இடத்திலேயே இறந்தார். கட்சியின் அடுத்த தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கட்சியின் துணைப் போது செயலாளர் அய்யாசாமி நிருபர்களிடம் கூறினார்.


ஜூலை: கா.மு.எ.க. தலைவராக திரு அய்யாசாமி தேர்வு. கட்சி செயற்குழு கூடி முடிவெடுத்தது.

கா.மு.எ.க. கட்சியின் தலைவர் பழனிச்சாமியும் அவர் மகன் ராஜதுரையும் சமீபத்தில் அடுத்தடுத்து இறந்தது தெரிந்ததே. இதை அடுத்து, அந்தக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு கட்சியின் செயற்குழு நேற்று கட்சி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளரான அய்யாசாமி  கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைவர் பழனிசாமியின் கனவுகளை நிறைவேற்றுவதே தன்னுடைய லட்சியம் என்று கூறினார்.

செய்தித்தாள் சொல்லாதது:

"ஐயா, எப்படியோ நீங்க தலைவராயிட்டீங்க! அடுத்தது சீக்கிரம் முதல்வரா?" காவிப்பல் தெரிய சிரித்த துரைசாமியிடம், "பின்ன என்னடா? காலம் காலமா நான் இந்தக் கட்சியில இருக்கேன். என்னை விட்டுட்டு தன் பையனை தலைவர் ஆக்கணும்னு அந்தாள் ஆசைப்பட்டார்.  விடுவேனா, நானு? அதான், பால்ல விஷத்த கலந்து குடுத்தேன். தலைவர் அவுட். சில மாசத்திலேயே அவர் பையனையும் பரலோகம் அனுப்பிட்டேன்.  இப்போ, நானே தலைவரா ஆயிட்டேன்" பெருமிதம் பொங்க சொன்னார் அய்யாசாமி.

சில வருடங்கள் கழித்து - செய்தித்தாள் சொன்னது :

ஜூன்  : சட்டசபை கலைக்கப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல்.


சுயேச்சைகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆளும் மா.மு.இ.க. தன் பெரும்பான்மையை இழந்தது. இதை அடுத்து, முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, சட்டசபை கலைக்கப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்தப் படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.


செய்தித்தாள் சொல்லாதது:

"தலைவரே, நானும் எத்தனையோ நாளா உங்க கிட்ட கேட்டிருக்கேன், எனக்கும் எம்.எல்.ஏ. வா ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை" இளித்தான் துரைசாமி.
 
"என்னடா, இப்படி கேட்டுட்ட? உனக்கு இல்லாத சீட்டா? கவலையே படாத, உனக்கு எந்த தொகுதி வேணும்? ஒரு அப்ளிகேஷன் பாரம் எழுதி கட்சி ஆபீஸ்ல கொடு."என்ற ஐயாசமியிடம் "அதுக்கில்லீங்கையா, உங்க மகன்தான் என்னை போட்டி போட வேண்டாம்னு சொல்றாரு". "அவனுக்கு என்னடா தெரியும்? அவனை விடு,  நீயெல்லாம் தாண்டா எனக்கு தூண் மாதிரி. நீ இல்லைனா எனக்கு எதுவுமே இல்லடா" ஆதரவாக முதுகைத் தடவிக் கொடுத்தார் அய்யாசாமி.
 
செய்தித்தாள் சொன்னது:
 
ஜூலை  : கட்சியில் இளைஞர்களுக்கே முன்னுரிமை - அய்யாசாமி பேட்டி
 
வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் படும் என்று கா.மு.எ.க. தலைவர் அய்யாசாமி தெரிவித்தார். நடராஜன் தன் மகன் என்பதால் மட்டும் அவருக்கு சீட் வழங்கப் படவில்லை என்றும், இது கட்சியின் முடிவு என்றும் அவர் தெரிவித்தார். பல வருடங்களாக கட்சியில் இருக்கும் சிலருக்கு டிக்கெட் வழங்கப் படாதது ஏன் என்று கேட்கப் பட்டபோது அப்படி பார்த்தால் கட்சி அலுவலகத்தில் இருக்கும் நாற்காலி மேசை போன்றவற்றிற்கு கூட அந்தத் தகுதி இருப்பதாக அவர் நகைச்சுவையுடன் பதில் அளித்தார். பேட்டியின்போது உடனிருந்த துரைசாமி, தலைவரின் முடிவை தான் முழு மனத்தோடு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பல வருடங்களாக இந்தக் கட்சியில் இருந்து வந்திருக்கும் இவருக்கும் எம்.எல்.ஏ. சீட் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  

ஆகஸ்ட் : கா.மு.எ.க. தலைவர் மரணம். தொண்டர் கதறல்.

கா.மு.எ.க. தலைவர் அய்யாசாமி நேற்று காலை காலமானார். கடந்த சில நாட்களாகவே அவர் சோகமாக இருந்ததாகவும், நேற்று முன் தினம் இரவு தூங்கப் போகும்போது பாலில் விஷம் கலந்து குடித்து விட்டதாகவும், தூக்கத்திலேயே உயிர் போய் விட்டதாகவும் உடலைப் பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார். அவருடனேயே இருக்கும் தொண்டரான துரைசாமி "ஐயோ, தலைவரே, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே!" என்று அவர் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி மனத்தை உருக்குவதாக இருந்தது. "கட்சியின் அடுத்த தலைவராக தலைவரின் மகன் நடராஜன் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்" என்று திரு துரைசாமி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

(எஸ், நீங்க எதிர்பார்த்த மாதிரி, கொஞ்ச நாளிலேயே நடராஜன் கார் விபத்தில் இறந்ததும் திரு துரைசாமி அடுத்த தலைவர் ஆனதும் உண்மைதான்!)

23 கருத்துகள்:

  1. கதையின் நீதி.. அரசியல்ல திருட்டுத்தனம் பண்ணித்தான் மேல வரமுடியும். தன்னோட அல்லக்கைகளுக்கும் எப்படி முன்னேறுகிறோம் என்று சோல்லப்படாது. இதுதானே கடந்த 50 வருடங்களா நடக்குது

    பதிலளிநீக்கு
  2. அரசியல் ஊழல் மட்டும் இல்லை. வெறி கொண்டது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. மன்னர் காலத்திலிருந்து இப்படித்தானே நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மன்னர் காலத்திலிருந்து இப்படித்தானே நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. துரைசாமிக்கு ஆப்பு வைக்க மதுரைசாமி வராமலா போயிடுவார் :)

    பதிலளிநீக்கு
  6. அரசியல் எப்போதோ கெட்டுவிட்டது!அதற்கு இது சான்று!

    பதிலளிநீக்கு
  7. கதையில் அரசியல் ஒரு தொடர் கொலை

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான கதை
    கட்டுக்கோப்பாகச் சொல்லிப் போனவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. // அடுத்த தலைவர் ஆனதும் உண்மைதான்! //
    ஓ! இஃதொர் உண்மைக் கதையோ ?

    பதிலளிநீக்கு
  10. போனவாரக்கதையும், இந்த வாரக் கதையும் கதை என்ற தலைப்பின் கீழ் வராது என்பதை அடக்கத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன்,யுவர் ஆனர்! எல்லாமே நிகழ்ந்தவை, நிகழ்ந்து கொண்டிருப்பவை, எதிர்காலத்தில் நிகழப்போகிறவை. சரித்திரம் திரும்புகிறது, மறுபடி மறுபடி!
    பெசொவிக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா ஹா... சிரித்தாலும் இது உண்மை என்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்பார்கள்.அதன் அர்த்தம் இதுதானோ? அல்லது குல வித்தை கல்லாமற் பாகற்படும் என்பதுதான் இதன் தொடர்களாக இருக்கும். இருக்கவும் போகும். அரசியல் தொடர்பாக ஒருகதை.அழகானது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. அட! செய்தி வடிவில் ஒரு கதை. வித்தியாசமாய்..ம்ம் நாற்காலிக்கு அடிபோடும் இந்த டெக்னிக் பண்டை முதல் அரசாட்சியிலிருந்து இப்போது மக்களாட்சி வரை நடந்து வருவது என்பது வரலாறு தொடர்கிறதே அல்லாமல் பக்குவம்?? அடையவில்லை என்றே தோன்றுகிறது..

    பெசாவி அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. கதையல்ல நிஜமோ? சிறப்பான படைப்பு! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  15. தலைவர் எவ்வழியோ .... தொண்டனும் அவ்வழியே .... ! என்ற உண்மையை உணர முடிகிறது.

    கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    வெளியிட்டு படிக்கத்தந்த எங்கள் ப்ளாக்குக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. என்னிடமிருந்து கதையைக் கேட்டு வாங்கிப் போட்ட எங்கள் ப்ளாக் குழுமத்துக்கு நன்றி!
    படித்து மகிழ்ந்த மற்றும் வாழ்த்திய வாசகர்களுக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு
  17. கேடுகெட்ட அரசியல்...

    நல்ல கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. இதுதான் அரசியல்...
    அமைதிப்படை சத்தியராஜை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரம் துரைசாமி....
    அருமை.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை. இது உலகெங்கும் நடந்த / நடக்கிற/நடக்கப்போகும் நிகழ்வு என்றே தெரிகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!