திங்கள், 24 அக்டோபர், 2016

"திங்க"க்கிழமை 161024 :: அவியல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.



அவியல் என்று ஒன்று வந்ததே, மிஞ்சின குறைந்த அளவு உள்ள காய்கறிகளை வைத்து என்ன செய்வது என்று யோசித்ததால்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கல்யாணம் முடிந்து மறுநாள் கட்டுச்சாதம் அன்னைக்கு மிஞ்சின காய்கறிகளை வைத்து அவியலும், பலவித கலந்த சாதங்களும் எங்கள் பக்கத்தில் செய்வார்கள். பொதுவாக வீட்டில், அவியலுக்கு என்று காய் வாங்குவது அபூர்வம். (யார் தேவையான காய் எல்லாவற்றிலும் 100 கிராம்னு வாங்கறது?). அவியல் என்பது திருநெல்வேலிப் பகுதியில் பிரபலமானது. கேரளாவில் இது முக்கியமான பண்டிகை நாட்களில் செய்யப்படுவது. பெரும்பாலும் உணவுவிடுதிகளில் முருங்கைக்காய் சேர்ப்பார்கள். எனக்கு இது ரொம்பவும் எரிச்சலாக இருக்கும். நிம்மதியா அவியலைச் சாப்பிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் (முந்தைய தலைமுறை) நாட்டுக் காய்கள் மட்டும்தான் சேர்ப்பார்கள். அதாவது, ஆங்கிலக் கறிகாய்களுக்குத் (பீன்ஸ், கேரட், உருளை போன்றவை) தடா. அதேபோன்று, அவியலுக்கு உணவு விடுதிகளில் செய்வதுபோல், நீள் சதுரவாக்கில் அழகழகாகவெல்லாம் திருத்தமாட்டார்கள். கொஞ்சம் பெரிய அளவில்தான் திருத்துவார்கள். அவியல்ல புளியும் சேர்ப்பார்கள். பெரும்பாலும் மாங்காய் சேர்த்துப் பார்த்ததில்லை. இதற்கு, மாங்காய் குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் கிடைக்கும் என்பது காரணமாயிருக்கலாம். மாங்காய் சேர்த்தால், புளி சேர்ப்பது தேவையில்லை.





நான், அவியல் பண்ணுவதற்காகவே, எல்லாக் காய்களையும் கொஞ்சம் வாங்கினேன். அவியலுக்கு அவசியம் தேவையான காய்கள்,  கத்தரி, அவரை, வாழை, பூசணி ஆகியவை. சேப்பங்கிழங்கு, வெண்டை, உருளை, பீன்ஸ், சேனை சேர்த்தால் நல்லா இருக்கும்.  கேரட் அவியலைக் கொஞ்சம் வண்ணமயமாக்கும். காய்களை ஓரளவு அளவில் திருத்திக்கொள்ளவும். கத்தரி, பூசணி, உருளை ஆகியவற்றைக் கொஞ்சம் பெரியதாகவும், மற்றவற்றை நீள் சதுரவாக்கிலும் திருத்திக்கொள்ளணும். சேப்பங்கிழங்கு, உருளை இவற்றை நான் முதலில் கொஞ்சம் வேகவைத்துக்கொண்டேன்.  மற்றவற்றை, குக்கரில், கொஞ்சம் புளிஜலம் சேர்த்து வேகவைத்துக்கொண்டேன். ரொம்ப வேகவேண்டாம்.

அரைக்கிலோ காய்கறிக்கு, அரை மூடித் தேங்காய் தேவை.  தேங்காயும், 4 பச்சை மிளகாயும் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு) வழுமூன மிக்சியில் அரைக்கவும். நான் இதிலேயே கொஞ்சம் உப்பையும் சேர்த்துக்கொள்வேன்.

 


இப்போ, குக்கரில் ஓரளவு வெந்திருக்கும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். நீரை வடிகட்டிவிடலாம்.   கடாயில, தேங்காய் எண்ணையில் கடுகு பொரித்து, அதில் இந்த வெந்த காய்கறிகளைப் போடவும். அதனுடன் தேங்காய் பேஸ்டையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, மிதமான தீயில் கொஞ்சம் சுட வைக்கவும். தேங்காய் கொஞ்சம் ஆகவேண்டும். புளி போதவில்லை என்று தோன்றினால், குக்கரிலிருந்து எடுத்தபோது, நீரை வடிகட்டினோமே அதைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.



அடுப்பை அணைத்துவிட்டு, 2-3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், 2 ஆர்க் காம்புடன் கூடிய கருவேப்பிலையையும் சேர்த்துக் கலக்கவும். அப்புறம் நல்ல புளிக்காத தயிரை 1 ½ கப் அளவில் சேர்த்துக் கலக்கவேண்டியதுதான். (பின்குறிப்பைப் பார்க்க)





அவியல் பண்ணுவது ரொம்ப சுலபம். கொடுத்துள்ள இத்தனை காய்கறிகளும் வேண்டுமா என்று மலைக்கவேண்டாம். கொஞ்சம் குறைவாக இருந்தால் அவியலின் கம்பீரம் குறையாது. என்ன, வாழைக்காய், அவரை (அல்லது பீன்ஸ்), சேப்பங்கிழங்கு, கத்தரி, பூசணி இவைகள் இருந்தால் போதும். எங்க அம்மா, பச்சைத் தக்காளிக் காய் மட்டும்போட்டு அவியல் செய்வார்..அது இன்னும் என் மனதிலேயே இருக்கு.  சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு என்று சொல்வதுபோல், எங்க அம்மா பண்ணித்தருவதுபோல் நீயும் பண்ணு என்று மனைவியிடம் சொல்லாத கணவன் வெகு அபூர்வமல்லவா?




தொட்டுக்க வேண்டாம்.. அப்பிடியே ச்சாப்பிடுவேன்.. என்பதுபோல, எனக்கு அவியலுக்கு, வெறும் சாதம், வாசனைக்குக் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் (எங்கள் வீடுகளில் நெய்தான் சாதத்துக்கு) போதும். என்னைப் பொறுத்தவரையில் அவியல், கொஞ்சம் காரமான கலந்த சாதங்களுடன் (புளியோதரை, எள்ளுச்சாதம்-கார வகை) நன்றாக இருக்கும். அடைக்கு அவியலைத் தொட்டுக்கொள்ளலாம் என்று கண்டுபிடித்த மஹராசனே.. நீயே அனுபவி அந்தக் காம்பினேஷனை.. எனக்கு வேண்டாம்.  (அடைக்கு மரியாதை… நெய்யுடன் சேர்ந்த வெல்லப் பொடி. இல்லாட்டா இட்லி மிளகாய்ப்பொடி. மற்ற காம்பினேஷன்லாம், சும்மா எண்ணிக்கைக்குத்தான்.. சரவணபவன், சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என்று வண்ண வண்ணமாக சட்னி தருவதுபோல)

பின்குறிப்பு:
1.   பொதுவாக, அவியலில் (அதாவது அடுப்பை அணைத்தபின்), உடனேயே தயிர் சேர்க்கவேண்டாம். பரிமாறுவதற்கு முன் தயிர் சேர்க்கலாம் என்று சொல்வார்கள். அப்போதுதான், சாயும்காலத்தில் அவியல் மிஞ்சியிருக்கும்போது, திருப்பி தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். இல்லைனா, அவியல் புளிக்கும். ஆனால் எங்கள் வழக்கத்தில் கடவுளுக்குப் படைத்தபின் அதில் எதையும் சேர்க்கும் வழக்கம் இல்லை. அதனால் அவியல் பண்ணும்போதே தயிரையும் சேர்த்துவிடுவார்கள்.

2.   தயிர் புளிப்பாக இருக்கும் என்று தோன்றினால் (காலையில்), காய்கறிகளைக் குக்கரில் வைத்துவேகவைக்கும்போது, புளிஜலம் சேர்க்கவேண்டாம். மாங்காயையும் திருத்தி அவியலில் சேர்ப்பதானால், புளிஜலம் தேவையில்லை.

3.   காய்கறிகள் ஒவ்வொன்றுக்கும் வேக, ஒவ்வொரு உஷ்ணநிலை வேண்டும். எல்லாத்தையும் ஒரேமாதிரி குக்கரில் வைத்தால் ஒன்றும் தவறில்லை. வாழை, கத்தரிக்கு வேக நேரமாகாது.  எல்லாக் காயும் முக்கால் வெந்திருந்தால் போதும். கடைசியில் கடாயில் தேங்காய் பேஸ்டுடன் கொதிக்க வைக்கும்போது மீதி வெந்துவிடும்.

4.   அவியல் கொஞ்சம் நீர்க்க இருந்தால்மட்டும் (அடுப்பில் இருக்கும்போது), 1 தேக்கரண்டி அரிசிமாவு கரைத்துச் சேர்க்கலாம்.


நான் வெள்ளிக்கிழமை அவியல் செய்தபோது, வடகங்களும் அப்பளாமும் பொரித்தேன். சாதம், அவியல், வடகம். இந்தக் காம்பினேஷன் எனக்குப் பிடித்தது.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

82 கருத்துகள்:

  1. அவியல்...! இந்த வாரத்தையைப் பார்க்கும்போதே நாவூறுகிறது. அவியலில் முருங்கையைத் தோலுடன் சேர்க்காமல் வேகவைத்து உள்ளிருக்கும் சதைப்பகுதியை சேர்த்தால் ருசிக்கும். அதே நேரம், வெண்டை, புளி அவியலின் மணத்தையும் சுவையையும் குலைக்குமென்றே தோன்றுகிறது. கொத்தவரங்காயும் சேர்க்கலாம்.....!!!!

    பதிலளிநீக்கு
  2. அவியல்...! இந்த வாரத்தையைப் பார்க்கும்போதே நாவூறுகிறது. அவியலில் முருங்கையைத் தோலுடன் சேர்க்காமல் வேகவைத்து உள்ளிருக்கும் சதைப்பகுதியை சேர்த்தால் ருசிக்கும். அதே நேரம், வெண்டை, புளி அவியலின் மணத்தையும் சுவையையும் குலைக்குமென்றே தோன்றுகிறது. கொத்தவரங்காயும் சேர்க்கலாம்.....!!!!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வலையில் நண்பர் நெல்லைத் தமிழன்
    தொடர்ந்து அசத்திக்கொண்டே இருக்கிறார்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  4. படங்களுன் விளக்கம் தந்து நெல்லைத்தமிழன் மிகவும் அசத்துகிறார் இப்படி அவர் விளக்கத்துடன் சமையல் குறிப்புக்கள் கொடுக்க ஆரம்பித்தால் சமையைல் ரிசிப்பியை தந்து வலைத்தளங்களை நடத்தும் பெண்கள் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஒடும் நிலை ஏற்பட்டுவிடும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. பொதுவாக சமையல் குறிப்புகளே நான் எனக்காக படிப்பது இல்லை. ஏனெனில் எனக்கு அந்த அவசியம் இதுவரை ஏற்பட்டதும் இல்லை.

    என் முதல் 22 வயது வரை என் அம்மாவின் சமையல். அதன்பின் மேலும் 22 ஆண்டுகள் என் அம்மாவுடன் துணை சேர்ந்துகொண்டு என் மனைவி செய்து போட்ட சமையல், அதன்பிறகு அடுத்த 6 ஆண்டுகள் மனைவி மட்டும் தனியாக என்னை ஸ்பெஷலாக கவனித்தது; அதன் பின் ஒரு 5 ஆண்டுகள் மனைவியும் மருமகள்களுமாக போட்டி போட்டிக்கொண்டு கவனித்தது என 55 ஆண்டுகள் சுகமாக ஓடிப்போய் விட்டன.

    அதன்பின் நானும் என் மனைவியும் இப்போது சமையல்கட்டு பக்கமே போவது இல்லை. எல்லாம் பொறுமையில் பூமாதேவியான என் மருமகள்களில் ஒருத்தியே சப்ஜாடாக கவனித்துக் கொள்கிறாள். நாங்கள் வயிறார சாப்பிட்டு மனதார மகிழ்ந்து பாராட்டி அவளை வாழ்த்தி ஆசீர்வதிப்பதோடு சரி.

    அதிலும் இந்த எல்லாக்காய்கறிகளையும் ஒன்றாகச் சேர்த்து செய்யும் அவியல் என்பது ஏனோ எனக்குப் பிடிப்பது இல்லை. அதற்கும் ஆயிரம் காரணங்கள் உள்ளன. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் .... இங்கு இப்போது வேண்டாம்.

    ஆர்வமுள்ளவர்கள் நான் எழுதியுள்ள ‘உணவே வா .... உயிரே போ’ என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

    இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையேயும் இந்தப்பதிவினைப் படிப்பானேன் என்று தாங்கள் எல்லோரும் முணுமுணுப்பது எனக்கும் என் காதுகளுக்குக் கேட்கத்தான் செய்கிறது.

    சமையலில் அவியல் பிடிக்காவிட்டாலும்கூட, நம் பதிவர் ‘நெல்லைத் தமிழன்’ அவர்களின் எழுத்துக்கள் சமீபகாலமாக எனக்கு மிகவும் பிடித்துள்ளன. அதனால் அவர் சொல்லியுள்ளது அனைத்தையும் சுவாரஸ்யமாகப் படித்தேன். மகிழ்ந்தேன். அவருக்கு என் அன்பான பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

    ’எங்கள் ப்ளாக்’க்கின் இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. அவியல் உருவாவதற்கான காரணம் சாலப் பொருத்தம்.
    பல காய்கறிகளின் கலவையான் அவியல் எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அவியல் செய்முறையில் அசத்திவிட்டார் நெல்லைத் தமிழன்.
    த ம 4

    பதிலளிநீக்கு
  8. அசத்தல் அவியல் படங்களுடன்! கிழங்கு சேர்த்ததில்லை..செய்து பார்க்கவேண்டும்..

    பதிலளிநீக்கு
  9. அவியல் எனக்கும் பிடித்தமானது. அதில் புளி சேர்ப்பதில்லை. இதே போல் பொங்கல் அன்று பொங்கல்கறி என்று பலவித காய்கறிகளையும் போட்டு தேங்காய் பெருஞ்சீரகம் வறுத்தரைத்து செய்வதுண்டு. அதுவும் எனக்குப் பிடிக்கும். பலருக்கும் பிடிக்காத கறி அது. :))))

    இங்கே படங்களோடு அழகாக விளக்கியிருக்கும் விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அவியல் செய்முறையில் தேங்காய்ப் பச்சை மிளகாய் சீரகம் அரைத்துதானே செய்திருப்பீர்கள். இது என் கண்ணில் படவில்லையோ. தேங்காய்ப் பேஸ்ட் என்பது மட்டும் படித்திருக்கிறேன். நாட்டுக் காய்கறிகள் அவியல் தான் உத்தமம்.

    ஆறின பிறகுதான் தயிர். செய்து இறக்கும்போது தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை. ம்ம்ம்ம். மணம்.
    எங்கள் வீட்டிலும் அடைக்கு அவியல் கிடையாது. வெண்ணெய் உண்டு. கார்த்தால செய்த குழம்பு உண்டு. நன்றி நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  11. ரைக்கிலோ காய்கறிக்கு, அரை மூடித் தேங்காய் தேவை. தேங்காயும், 4 பச்சை மிளகாயும் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு) வழுமூன மிக்சியில் அரைக்கவும். நான் இதிலேயே கொஞ்சம் உப்பையும் சேர்த்துக்கொள்வேன். sorry for the munthirikkottai pinnoottam.

    பதிலளிநீக்கு
  12. வல்லி அக்கா சொல்வது போல் தேங்காய் பச்சை மிளகாயுடன் சிறிது சீரகம் வைத்து அரைப்போம். திருநெல்வேலி பக்கம் அவியல், கூட்டாம் சாதம் செய்ய காய் கடையில் கேட்டால் கொடுப்பார்கள், நாகர் கோவில் ஊரிலும் காய் கடையில் கொடுப்பார்கள் . உறவினர் வருகை, விசேஷ நாட்களில் கண்டிப்பாய் இடம் பெறும். அப்புறம் காய்கள் நிறைய நிறைய வித விதமாய் இருந்தாலும் தயிர் நிறைய இருந்தாலும் அவியல் செய்வோம்.
    நெல்லை தமிழன் படங்களுடன் அழகாய் செய்முறை விளக்கம் தருகிறார். அம்மா சமையலை புகழாத பிள்ளைகள் உண்டோ ! ஆண் , பெண் இருவரும் புகழ்வார்கள். நெல்லை தமிழன் அவியல் அருமை. பகிர்வுக்கு நன்றி உங்களுக்கு ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. வாரக்கடைசியில், வாங்கிய காய்களில் மீந்தவற்றை ஒன்றாக்கி அவியல் என்ற பெயரில் காலி செய்துவிடுவேன். தேங்காயோடு, சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், நான்கு பூண்டு பல்லும் போடுவேன் - வாய்வு பிரச்னை தவிர்க்க. என் மாமியார் தயிர் சேர்ப்பதில்லை, ஒரேயொரு தக்காளி கடைசியில் போடுவார். நானும் அப்படியே.

    அவியலுக்குப் புளி சேர்ப்பது புதிய தகவல்.

    பதிலளிநீக்கு
  14. அவியல் பதிவு மிக அருமை. எங்கள் ஊரான பாளையங்கோட்டையில் அவியல் மிகவும் பிரபலமானதாகும். அவியல் காய் என்றாலே கடையில் கொடுத்து விடுவார்கள். நாங்கள் தேங்காய், பச்சை மிளகாயுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைப்போம். இறக்கும் போது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்குவோம். நானும் அவியல் பதிவு கொடுத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  15. அடடா அவியலுக்கு எத்தனை ஆர்வலர்கள்.. கோபால் ஸார் மட்டும் பிடிக்காதுன்னு சொல்லி இருக்காங்க.மதுரைக்காரங்க அடை அவியல்தான் பெஸ்ட் காம்பினேஷன்னு சொல்லுவாங்க.. திருநவேலி காரங்க ஆடி பெருக்கு சித்ரான்னங்களுடன் அவியல் செய்வாங்க.. கேரளாகாரங்க சொல்லவே வேணாம் நினைச்சப்போலாம் அவியல் செய்வாங்க..செய்முறை விளக்கம் படங்கள் சேர்த்திருப்பது மேலும் சுவை கூட்டி விட்டது..

    பதிலளிநீக்கு
  16. ஆஹா அவியல் செய் முறையும் இணைத்திருக்கும் படங்களுமே அவியல் சாப்பிட தோணுதே.. சொல்லி சென்ற விதமும் நல்லாருக்கு.. மும்பையில் தாதர் மட்டுங்கா பகுதி காய் மார்க்கெட்களில் நிறய தமிழ் காரர்கள் காய் விற்பவராக இருப்பார்கள்.. அங்க போயி அவியல் ஒருகிலோன்னு சொன்னாலே போதும் தேவையான காய்களை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து தந்துவிடுவார்கள். சில வியாபாரிகள் ஒரொரு காய் ஓரோரு விலை விக்குது எப்படி கொஞ்சம் கொஞ்சம் தர முடியும்னு முரண்டு பண்ணுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... கோபு பெரிப்பாக்கு அவியல் பிடிக்காதா...(((..
      எங்காத்லலாம் வாரக்கடைசி நாள்ல அவியலோ...பொரிச்ச கொழம்போ தான் செய்வோம்.. தின சரி காய் நறுக்க எடுக்கும்போதே 2,3- காய்களை தனியா எடுத்து வச்சுடுவோம்
      அடை அவியல் சரி வராது. ரெண்டுமே ஹெவி ஐட்டம்...
      பொரிச்ச கொழம்புனா அரச்சுகலக்கிதான் பெஸ்டா இருக்கும். நம்ம தமிழ்காரா மாதிரி வேற யாராவது இப்படி நாக்க வளர்த்து வச்சிண்டிருப்பாளோ...)))

      நீக்கு
    2. அவியல் காய்களின் படங்கள் செய்முறை விளக்கம் நல்லா இருக்கு. நான் பண்ணினதில்ல. நிறய காய் மிஞ்சினா புலாவ் இல்லனா வெஜ் குருமாதான் இப்ப இந்த குறிப்பு பாத்து அவியல் பண்ணி பார்க்கலாம்னு தோணுது...

      நீக்கு
  17. அவியலுக்கு வேண்டாத கஷ்ணமும்,விபசாரிக்கு வேண்டாத புருஷனுமில்லை என்று கேரளத்தமிழ்க்காரர்கள் சொல்வார்கள். விபசாரி பதம் உபயோகித்ததற்கு மன்னிக்கவும். வசனம் அது. ஐந்து கஷ்ணம் முக்கியமென்பார்கள். கஷ்ணம் என்பது காய்கள் போலும். மொத்தன்,இளவன்,வாழைக்காய்,சேனை, முருங்கைக்காய் இவை இருந்தாலே போதும். வருஷம் பூராவும் கிடைக்கும் வஸ்த்துக்களாக இருக்கும்.பூசணி,பறங்கிதான் மொத்தன் இளவன்.
    பூசணிக்காய் இல்லாத அவியல் தளர இருக்காது. நீர்க்காய் அல்லவா? ஒரு பாலக்காட்டுக்காரமாமா 70 வருஷங்களுக்கு முன் சொல்லியது இது. வாழைக்காய் கறுக்காமலிருக்க புளி ஜலம். சேனை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதற்காகவும் புளி தேவையாக உள்ளது. குக்கர் வந்த பின்னர் காய்களை திட்டமான ஜலத்துடன் வேக வைப்பது ஸுலபமாகி விட்டது. வெண்டைக்காயும்,சேப்பங்கிழங்கும் கொழகொழப்பான வஸ்துகள். அதனால் அதுவும் மைனஸ். பீன்ஸ் அவரை,காரட்,உ.கிழங்கு, பச்சை பட்டாணி எல்லாம் சேர்த்து சுவைகொடுக்கும். மாங்காய் சேர்க்கும் விதம் அவர் பாணியில்,மாங்காயை நன்றாகச் சிதைத்து வேகும் காய்களில் ஒரு குழியை நடுவில் உண்டாக்கி அதில் போட்டு காய்களாலேயே மூடிவட வேண்டும். ஒரு கொதி வந்த பிறகு கலக்க வேண்டுமாம். பக்குவம் எப்படி?தேங்காயுடன்கூட பச்சைமிளகாய்,சீரகம்,அரை டீஸ்பூன் பச்சரிசியும் பிசறி வைத்து வெழுமூணாக அரைத்துக் கலக்கி ஒருகொதிவிட்டுத் தயிரைச் சேர்த்து இறக்கி நல்ல தேங்காயெண்ணெய் ஒருஸ்பூன் சேர்த்து கரிவேப்பிலையை அலம்பி உருவிப்போடாமல் ஆர்க்காகவே சேர்த்து சிறிது நேரம் கழித்து மூடவேண்டும். தண்ணீர் அதிகம் இருந்தால்,வடிப்பது,வேண்டுமானால் சேர்ப்பது அதை, என்பது யாவும் ஒன்றுதான். இப்போது தமிழ்நாட்டுக் கல்யாண சமையலில் அவியல் இல்லாமலிருப்பதில்லை. அவியலுண்டாக்கி பப்படாம் காய்ச்சிவிட்டால் அவஸரசமையல். காய்ச்சுவது பொரிப்பதைச் சொல்கிரார்கள். உங்கள் சமையலுக்குக் கேட்பானேன். இப்படியும் கருத்துகள் உண்டு என்பதற்காக எழுதினேன். புளிப்புக்கு மாங்காய்,புளி எதுவானாலும் மிதமாகப் போதும். மஞ்சள்பொடியும்,உப்பும் வேண்டாமா என்று குரல் வருகிறது. எல்லோருக்கும் தெரிந்தவைகள் சிலஸமயம் விட்டுப்போகும். நான் கூட பதிவு போட்டிருக்கிறேன் வெகுநாள்முன்பு. வரவேற்கிறேன் உங்களையும்,உங்கள் பதிவையும். அன்புடன் நான் பாலக்காடு இல்லை.

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    என்னாலான ஓர் உபகாரம் .... என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒரு நால்வருக்கு, நான் உங்கள் அட்ரஸ் கொடுத்து, இங்கு அவியல் சாப்பிடச் சொல்லி அனுப்பியுள்ளேன். இங்கு இதுவரை வருகை தந்துள்ள அந்த நால்வருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள். :) :) :) :)

    மேலும் சிலரும் சற்றே தாமதமாக அவியல் சாப்பிட வரலாம். எதற்கும் கொஞ்சம் ஸ்டாக்கில் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவியல் சாப்பிட ஆசையுடன் ஓடி வந்தேன். மிச்சம் மீதி இருக்குதா சட்டிய வழிச்சு போடுவீங்களா. படங்களும் செய் முறை குறிப்பும் ரொம்ப விவரமா அழகா சொல்லி இருக்கீங்க. சிலபேரு புளி சேர்க்க சொல்லுறாங்க சிலபேரு தயிரு சேர்க்க சொல்லுறாங்க. ரோஜா வை எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அது ரோஜா தானே. அவியலும் எந்த பக்குவத்தில் செய்தாலும் அவியல் அவியல்தானே.ருசியும் சூப்பர்தானே. பின்னூட்டத்துலயும் நிறைய பேரு பக்குவ முறைகள் சொல்லி இருக்காங்க.எல்லாமே செம டேஸ்டுதான்...

      நீக்கு
  19. அருமை!
    "அடைக்கு மரியாதை… நெய்யுடன் சேர்ந்த வெல்லப் பொடி. இல்லாட்டா இட்லி மிளகாய்ப்பொடி" - நம்ம டேஸ்ட் கூட சிலரோட ஒத்துப் போகுதே! வாழ்க!

    பதிலளிநீக்கு
  20. இங்கே மதுரைப் பக்கம் பெரும்பாலான கல்யாணச் சாப்பாட்டில் அவியலும் அவசியம் உண்டு !அதான் , சாப்பாட்டுக்கு மரியாதை :)

    பதிலளிநீக்கு
  21. அவியல் கேரள மக்களின் முக்கியமான உணவு இங்கு ஓணம் வரும் பொழுது மலையாளி நண்பர்கள் அழைப்பார்கள் நல்ல சுவையாக வைப்பார்கள் நண்பர் நெல்லையாருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. //என்னாலான ஓர் உபகாரம் .... என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒரு நால்வருக்கு, நான் உங்கள் அட்ரஸ் கொடுத்து, இங்கு அவியல் சாப்பிடச் சொல்லி அனுப்பியுள்ளேன்.//


    நன்றி வைகோ ஸார். தங்கள் தளத்தில் பின்னூட்டம் இடும் பிரத்தியேக நண்பர்களின் வருகையைப் பார்த்தபோதே யூகித்து விட்டேன்.

    //மேலும் சிலரும் சற்றே தாமதமாக அவியல் சாப்பிட வரலாம். எதற்கும் கொஞ்சம் ஸ்டாக்கில் இருக்கட்டும்//

    இது அட்சயப்பாத்திரமாக்கும்! எவ்வளவு பேர்கள் வந்தாலும் இருக்கும்!!!

    பதிலளிநீக்கு
  23. பொதுவான ஒரு குறிப்பு. நான்(நாங்கள்) அவியலில் புளி சேர்ப்பதில்லை. மற்ற நண்பர்களுக்கு நெல்லைத்தமிழன் வந்து பின்னர் தனித்தனியாக பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் மிகுந்த நன்றி. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுதுவேன். இப்போ தென்கிழக்கு ஆசிய நாட்டில் ஒரு கான்ஃப்ரன்ஸ்க்காக வந்துள்ளேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். வெளியிட்ட ஶ்ரீராமுக்கு எப்போதும்போல் நன்றி. கீதா மேடம் இன்னும் விளக்கமான பின்னூட்டமிடவில்லை.

    பதிலளிநீக்கு
  25. மெதுவாக வாங்க நெல்லைத்தமிழன்.

    கீதாக்கா.. நெல்லைத்தமிழன் கேட்பது காதில் விழுகிறதா?

    பதிலளிநீக்கு
  26. அகமும் ரொம்ப பிஸி என்று ஓரிடத்தில் எழுதியிருந்தார். பாலக்காட்டு செய்முறை அதாரிட்டியாச்சே. கஷ்ணம் வார்த்தை மை.ம.கா.ரா கமலையும் டெல்லி கணேஷையும் ஞாபகப்படுத்திடுத்து. வைகோ சார்... "நாலு பேருக்கு நன்றி அந்த நாலு...". கான்ஃபரன்ஸ் சில நாட்கள் முடிந்ததும் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். வைகோ சார், "அட்டா அபடையைத் தின்று பழகு" மாதிரி "அட்டா அவியல் உண்டு உறங்கு" எழுதமாட்டீர்கள் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம்.

    உண்பதில் பிடித்தது.

    செய்யத் தெரியாது.

    படித்தேன்...!

    அடுத்தமுறை சாப்பிடும் போது உங்கள் நினைவு வரும்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. /////எங்க அம்மா பண்ணித்தருவதுபோல் நீயும் பண்ணு என்று மனைவியிடம் சொல்லாத கணவன் வெகு அபூர்வமல்லவா?////
    ஆமா ஆமா
    பலமுறை இப்படி சொல்லி வாங்கிக் கட்டிக்க கொண்டது உண்டு :)

    பதிலளிநீக்கு
  29. அவியல் மிகவும் பிடித்த ஐட்டம் நெல்லைத் தமிழன். அவியல் இல்லாமல் எங்கள் சத்யா (விருந்து) எதுவும் இருக்காது நாங்கள் கேரளத்து ஸ்டைலில் செய்வது வழக்கம். நன்றி குறிப்பிற்கு

    கீதா: மை ஃபேவரிட். அப்படியே சாப்பிட்டுவிடுவேன்...குக்கரில் எல்லா காய்களையும் போட்டு கொஞ்சமே கொஞ்சம் புளித் தண்ணீர் தெளித்து (பூஷணியே தண்ணீர் விட்டுக் கொள்ளூம் வெள்ளரியும் சேர்ப்பதுண்டு) குக்கரை ஆவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை அணைத்துவிட்டால் போதும். அவியல் காய்கள் நன்றாக வெந்திருக்கும் அதே சமயம் குழைந்திருக்காது. தேங்காய் மிளகாய் ஜீரகம் கொஞ்சம் உண்டே. நீங்கள் சேர்ப்பது இல்லையா? தயிரும் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் பின்னர் சேர்ப்பது இல்லை செய்தவுடன் அதுவும் கொஞ்சம் சேர்ப்பது. பாலக்காடு முறையில் செய்வது வழக்கம். அல்லது கேரளத்து வகையில் செய்வதுண்டு. கெட்டியாக இருக்கும்.

    சூப்பர் நெல்லை ரொம்பவே அசத்துறீங்கப்பா... ஸ்ரீராமிற்கு இணையாக!!! சபாஷ் சரியான போட்டி!!ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  30. விசேஷ நாட்கள் என்றால் கேரள உணவில் அவியல் மஸ்ட்

    பதிலளிநீக்கு
  31. அவியல்

    பெயர் ஒன்று. செய்யும் விதங்கள் பல.

    பொதுவாக அவியலில் புளி சேர்ப்பதில்லை. ஆனால் சிலர் புளி விட்ட அவியல் செய்கிறார்கள். எப்படி செய்தால் என்ன. சுவையாக இருந்து பாத்திரம் காலியானால் சரி.

    என் புகுந்த வீட்டார் பாலக்காடு ஐயர். நாங்க பக்கா தஞ்சாவூர் ஐயர் (என் மாமியாரின் வார்த்தைகளில் நாங்க கிழக்கத்திக் காரிகள்). ஆனா இப்போ ரெண்டும் சேர்ந்த கலவை (அவியல்) ஆயிட்டேன்.

    புக்ககத்தில் சீரகம் அவியலுக்கும், மோர்க்குழம்புக்கும் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டேன். மற்றபடி திருமணம் ஆன அன்றிலிருந்தே தனிக்குடித்தனம் (கற்பனை குதிரையை தட்டி விட வேண்டாம். நூத்துக்கு நூறு அக்மார்க் பெரியவங்க பார்த்து வெச்ச திருமணம்தான்) ஆனதால் வீட்டய்யாவை சாப்பாட்டில் மட்டும் எங்க சைடு இழுத்துட்டேன்.

    அவருக்கு அவியல் பிடிக்கும். அதனால் அடிக்கடி செய்வேன். மேலும் அடைக்கு நல்லதொரு SIDE DISH.

    அழகான நெல்லைத் தமிழைப் போல் நெல்லைத் தமிழனின் அவியலும், படங்களும் அருமை.

    வாழ்த்துக்களுடன்
    ஜெயந்தி ரமணி
    http://aanmiigamanam.blogspot.in/
    http://manammanamveesum.blogspot.in/

    பதிலளிநீக்கு
  32. //என்னாலான ஓர் உபகாரம் .... என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒரு நால்வருக்கு, நான் உங்கள் அட்ரஸ் கொடுத்து, இங்கு அவியல் சாப்பிடச் சொல்லி அனுப்பியுள்ளேன். இங்கு இதுவரை வருகை தந்துள்ள அந்த நால்வருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள். :) :) :) :)

    மேலும் சிலரும் சற்றே தாமதமாக அவியல் சாப்பிட வரலாம். எதற்கும் கொஞ்சம் ஸ்டாக்கில் இருக்கட்டும்.//

    விலாசத்த தேடி சிரமப்படாம வந்துட்டேன் கோபு அண்ணா.

    பதிலளிநீக்கு
  33. அட்ரஸ்
    அனுப்பியதும்
    அவியல் சாப்பிட
    அலறி
    அடித்துக்க்கொண்டு
    அவசர
    அவசரமாக
    அன்பு வருகை தந்து
    அசத்தியுள்ள என்
    அன்புக்குரிய

    ’ப்ராப்தம்’,
    ’ஹாப்பி’,
    ஷாமைன் பாஸ்கோ &
    ஜெயா

    ஆகியோருக்கு
    என் இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  34. //அட்ரஸ்
    அனுப்பியதும்
    அவியல் சாப்பிட
    அலறி
    அடித்துக்க்கொண்டு
    அவசர
    அவசரமாக
    அன்பு வருகை தந்து
    அசத்தியுள்ள என்
    அன்புக்குரிய

    ’ப்ராப்தம்’,
    ’ஹாப்பி’,
    ஷாமைன் பாஸ்கோ &
    ஜெயா

    ஆகியோருக்கு
    என் இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு //


    எனது நன்றிகளும்... அவர்களை இங்கு வரவழைத்த உங்களுக்கும் எனது நன்றிகள் வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது அட்சயப்பாத்திரமாக்கும்! எவ்வளவு பேர்கள் வந்தாலும் இருக்கும்!!!//

      அட்சய பாத்திரத்தில் எடுக்க எடுக்க காலி ஆகாம வந்துகிட்டே இருக்கும்லா அதான் லேட்டா வந்திட்டேன் பின்னூட்டத்துல ஆளாளுக்கு அவியல் செய்முறை சொல்லி இருப்பத பார்த்தாலே கலக்குது.. ஒருத்தரு சொல்லுறாங்க புளி சேர்ங்ஙணும் மற்றவங்க தயிர் சேர்க்க.. .தேங்கா மிளகாயுடன் சீரகம் சேர்க்கணுமா வேணாய் ஆனாலும் பதிவில் படங்களும் செய்முறைகளும் நல்லாவே இருக்குது

      நீக்கு
  35. ப்ராப்தம்’,
    ’ஹாப்பி’,
    ஷாமைன் பாஸ்கோ &
    ஜெயா

    ஏங்க கோபால் ஸார்...... நாங்கல்லாம் உங்க கண்ணுல படவே இல்லியா.. ஸோ....ஸேட்.....

    பதிலளிநீக்கு
  36. அவியல் எனக்கும் பிடித்தது தான். அதில் முருங்கை சேர்ப்பது எனக்கும் பிடிப்பதில்லை! :) ஆனால் பெரும்பாலானவர்கள் முருங்கை சேர்த்து தான் செய்கிறார்கள் என்பது தான் சோகம்!

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரத்தா, ஸபுரி... said...

    //ப்ராப்தம்’, ’ஹாப்பி’, ஷாமைன் பாஸ்கோ & ஜெயா
    ஏங்க கோபால் ஸார்...... நாங்கல்லாம் உங்க கண்ணுல படவே இல்லியா.. ஸோ....ஸேட்.....//

    அன்பு நண்பரே, அப்படியெல்லாம் நினைக்காதீங்கோ, ப்ளீஸ்.

    என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து இங்கு இதுவரை எட்டு நபர்கள் வருகை தந்துள்ளீர்கள் என்பதே உண்மையிலும் உண்மை.

    நான் என் மூலம் மெயில் கொடுத்து அழைப்பு விடுத்துள்ள ஆறு நபர்களில், இந்த நால்வர் மட்டுமே இதுவரை வந்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைக் குறிப்பிட்டுச் சொல்லி உள்ளேன்.

    ஆல் இஸ் வெல், ஸ்ரத்தா ஸபுரி ஆகிய தாங்கள், ஸ்ரீனி வாசன் + மற்றொருவர் ஆகிய நால்வரும் எனக்காகவே என்னையும் அவியலையும் மோப்பம் பிடித்து இங்கு தாங்களாகவே வந்துள்ளீர்கள் என்பதும் எனக்கு நன்றாகவே புரிகிறது.

    உங்கள் நால்வரின் மெயில் ஐ.டி. எனக்குத் தெரியாது அல்லவா. அதனால் என்னால் உங்கள் நால்வருக்கும் அவியல் சாப்பிட அழைப்பு அளிக்க முடியவில்லை என்பதை உணர்ந்துகொள்ளவும்.

    எனினும் உங்கள் அனைவருக்குமே என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனக்குப் பிடிக்காது என்பதால் கஷ்டப்பட்டு செய்துள்ள அவியலை வீணாக்கி விடக்கூடாது. அதனால் நீங்கள் எல்லோரும் வந்து, ரஸித்து ருசித்துச் சாப்பிட்டவரை எனக்கும் மகிழ்ச்சியே.

    நான் மேலும் அழைத்துள்ள ஒருசிலர் வருவார்களோ .... மாட்டார்களோ ! அவர்கள் வரும் வரை இந்த அவியல் ஊசிப்போய் விடாமல் இருக்கணுமே என ஒரே கவலையாக உள்ளது, எனக்கு. :)))))

    பதிலளிநீக்கு
  38. ஓ.....//.இங்கு தாங்களாகவே வந்துள்ளீர்கள் //

    அப்ப நாங்க அழையா விருந்தாளிகள்னு சொல்றிங்களா...ஆமா அதுவும் சரிதான். எப்பவும் புது லிங்க் என் வலைப்பதிவு கமெண்ட் பாக்ஸில் தானே தருவீங்க. இப்ப அந்த அழைப்பும் இல்லாம வந்தது தப்புதான். ஸாரி ரியலி ஐயாம் வெரி வெரி ஸாரி...

    பதிலளிநீக்கு
  39. பாரதி அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன, தோலெடுத்த முருங்கை அர்த்தமுள்ளது. நாங்கள் முருங்கை சாப்பிடும் வழக்கம் இல்லாததாலும், தோலுள்ள முருங்கை எரிச்சலாக இருந்ததாலும் எழுதினேன். அன்றைக்குக் கொத்தவரங்காயும் போட்டேன். படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். எழுத விட்டுப்போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  40. கரந்தையார்... உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  41. அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் - எவ்வளவு நாளாயிற்று, 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்ற வரிகளை மீண்டும் படிப்பதற்கு. என் அப்பாவை நினைவுகூற வைத்துவிட்டீர்கள். நீங்கள் உங்கள் ஆர்வத்துக்காக அவ்வப்போது சமையல் செய்கிறீர்களா அல்லது, வேறு வழியில்லாமல் (பூரிக்கட்டையைத் தவிர்க்க) அவ்வப்போது சமையல் செய்யவேண்டிவருகிறதா? :) உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வைகோ சார்... உங்கள் பின்னூட்டத்துக்கும், சில எக்ஸ்பர்ட்டுகளை, செய்முறை சரியா என்று படிக்கத் தூண்டியதற்கும் நன்றி. சாப்பாட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கும், நன்றாகச் (வக்கணையாக என்பது தான் சரியான சொல்) சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு, நல்ல ஆர்வமுடன் சுருசியாகப் பண்ணித்தருபவர்கள் அமைவது கொஞ்சம் அரிதுதான். சம்பந்திகளில் நன்றாகச் சமையல் பண்ணவும், அடுத்தவர்களுக்குக் குடுத்து மகிழும் மனம் அமைவதும் இன்னும் அரிது. அதிலும், அடுத்த ஜெனரேஷன் (நாட்டுப்பெண்.. ) மாமனாருக்குப் பிடித்தமானதாக ஆர்வத்துடன் சமைத்துத்தருவது அதிலும் அரிது. (சமயத்தில் அவர்களுக்குத் தொந்தரவு தராமல், கட்டிலிலேயே பல பல முருக்கு, முந்திரி வகையராக்களைத் தயாராக வைத்திருக்கும் உங்கள் முன்யோசனையும் அரிதுதான்). இந்தக் கொடுப்பினை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். (அவர்களுக்கு அடுத்த ஜெனெரேஷனும் உங்களுக்கு ஆர்வமாக ஏதாவது பண்ணித்தருவதாக அமையட்டும்). (என்ன... அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது... என்ற அவ்வைப் பாட்டியின் பாடல் நினைவுக்கு வருகிறதா?)

    அவியல் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்க ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். மிஞ்சின காய்களை வைத்து அவியல் பண்ணுவதால், உங்களுக்குப் பிடிக்காத காயும் அதில் சேர்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. வேகும் பதமும் உங்களுக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது (வெண்டை ரொம்பக் குழைந்துவிடும். சமயத்தில், சில காய்கள் தேவையான அளவு வேகாமல் போய்விடும்). பின்னூட்டத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. மூங்கில்காற்று முரளிதரன் அவர்களுக்கு நன்றி. 'சால', 'நனி' - இதெல்லாம் இப்போ உபயோகப்படுத்துவது குறைந்துவிட்டது. நல்ல தமிழ்.

    பதிலளிநீக்கு
  44. கூட்டாஞ்சோறு செந்தில்குமாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. தேன்மதுரத் தமிழ் கிரேஸ் - கிழங்கு சேர்த்துப்பாருங்கள் (அதுவும் உருளைக் கிழங்கு தோலோடு). நன்றாகத்தான் இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  46. கீத மஞ்சரி மேடம் - நீங்கள் சொல்லும் பொங்கல் கூட்டு - 7 கறி கூட்டு என்று திருவாதிரைக் களிக்குத் தொட்டுக்கப் பண்ணுவதா? பின்னூட்டத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வல்லி மேடம் - உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. நாங்கள் சீரகம் சேர்ப்பதில்லை (தேங்காய், ப.மிளகாயோடு). என் ஹஸ்பண்ட் (கும்பகோணம்) சீரகம் சேர்ப்பார். (புளிசேரிக்கும் எங்கள் வீட்டில் சீரகம் கிடையாது. என் ஹஸ்பண்ட் சீரகம் சேர்ப்பார். ஆரம்பத்தில் குறை சொல்லுவேன்.. அதை அவர் சேவைக் குழம்பு என்று சொல்லும்போது, புளிசேரி என்று எங்கள் வீட்டுப் பெயர் சொல்லு என்பேன். அப்புறம் நான் பண்ணும்போது சில சமயம் சீரகமும் உடம்புக்கு நல்லதுதானே என்று சேர்ப்பேன். எங்கள் வீட்டில், வெண்டையைப் பொடியாக நன்கு வறுத்து, தேங்காய், ப.மி அரைத்த மோரில் கலந்து செய்வதை, வெண்டைக்காய் கிச்சடி என்போம். சித்திரையில் மாங்காயில் வெல்லம் சேர்த்துப் பண்ணுவதை, மாங்காய்ப் பச்சிடி என்போம். என் ஹஸ்பண்ட், வெண்டை பச்சிடி என்று பெயர் மாற்றியதில் எனக்கு வருத்தம்தான்)

    பதிலளிநீக்கு
  48. கோமதி அரசு மேடம்.. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. நெல்லை, குமரி வழக்கங்களைக் குறிப்பிட்டதற்கு நன்றி. சாப்பிட்டுப் பழகியதாலோ, அல்லது முதன்முதலாக உணவின் சுவையை அறிமுகப்படுத்துவதாலோ, எல்லாக் குழந்தைகளுக்கும், எவ்வளவு சுமாராகப் பண்ணினாலும், அம்மா சமையல், தனி ரகம்தான். எங்கள் அம்மா, ரொம்ப நன்றாகச் சமைப்பார்கள்.. அப்புறம் எப்படி மறக்க இயலும்? நல்லவேளை, என் ஹஸ்பண்டுக்கு நல்ல சமையல் ரசனை, கைத் திறமை. இல்லாவிட்டால்.. நினைத்துப்பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. (எனக்கு சாப்பாடு நன்றாக இல்லையென்றால் பிடிக்காது. உணவு என்பது வெறும் வயிற்றை ரொப்புவதற்கல்ல.. ரசனையுடன் உண்ணுவதற்கு என்று நான் நம்புகிறவன்)

    பதிலளிநீக்கு
  49. ஹுசைனம்மா - உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. பச்சைத் தக்காளி, அவியலில் இருந்தால் எனக்கு ஓகே. தக்காளிப் பழம் - எனக்குப் பழக்கமில்லை.

    பதிலளிநீக்கு
  50. சாரதா மேடம்.. பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் பாளையங்கோட்டையா? அங்கேயே நான் 5 வருடத்துக்குமேல் வாழ்ந்திருக்கிறேன். நீங்களெல்லாம் சமையல் ஜாம்பவான்ஸ். இடுகையைப் படித்துக் கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  51. ஆல் இஸ் வெல் - பின்னூட்டத்திற்கு நன்றி. அவியலுக்கு நிச்சயமாக ரசிகர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  52. ப்ராப்தம் - பின்னூட்டத்திற்கு நன்றி. நிறைய கடைகள் (கேரளா, குமரி, நெல்லை போன்ற இடங்களிலும்) அவியலுக்கு என்று எல்லாக்காய்களிலும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுத் தருவார்கள். அதில் மிகக் குறைந்த விலைக் காய்கறிகளும் உண்டுதானே.. நாம் சில காய்களை அதிகம் கேட்டு, அது விலை அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  53. ஹேப்பி - தினசரி காய்களிலிருந்து 2-3 ஒதுக்கு வைப்பீங்களா அவிலயலுக்கு? அதுவும் நல்ல மெதடாகத்தான் தெரியுது. நன்றி.

    பதிலளிநீக்கு
  54. ஷமைனே போஸ்கோ - அவியல் ஒரு திசைனா, புலாவ்/வெஜ் குருமா இன்னொரு திசை. ரெண்டும் சேராது. அவியலும் சாதமும் சாப்பிட்டீங்கன்னா, எல்லாக் காயையும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். செய்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  55. காமாட்சி மேடம் - உங்கள் விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் எண்ணம் சரிதான். அவியல், முதலில் கேரளாவிலிருந்துதான் வந்திருக்கும். நம்ம ஊருல (அந்தக் காலத்துல இந்தப் பிரச்சனை அதிகம்) சேனை சமயத்தில் காலை வாரிவிடும். ரொம்ப அரிக்கும். அதுனால, கழுனீருல வேகவைப்பதும் உண்டு. சிவப்பு சேனை ரொம்ப அரிக்கும் என்றும் சொல்வார்கள். இப்போது அந்தப் பிரச்சனை இல்லைனு நினைக்கிறேன். வெண்டைக்காயும், அதைவிட சேப்பங்கிழங்கும் கொழகொழப்பைக் கொடுத்துவிடும். எல்லோருக்கும் பிடிக்காது. கடைல சேர்ப்பதில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  56. கீதா மேடம் - கொஞ்சம் பிஸியாகிட்டீங்களா? இல்லாட்டா குறைந்தது இரண்டு மூன்று பின்னூட்டமாவது வருமே..அதுவும் உணவு சம்பந்தமானதுக்கு. எழுதாதது ஏமாற்றம்தான். நீங்கள் உங்கள் இடுகையை REFERENCEக்குத் தரவேண்டியதே இல்லை. அதைப் படிக்காமல் இருக்க முடியுமா? கொஞ்சம் மாறுதல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  57. வைகோ சார்.. அவியல் பிடிக்காவிட்டாலும், பிடித்தவர்களுக்கு ஷேர் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  58. ஸ்ரத்த சபுரி - 'நன்றி.. ஒவ்வொருத்தர் சொல்ற மாதிரி ஒவ்வொருதடவை பண்ணிப்பாருங்கள். எது உங்களுக்குப் பிடிச்சிருக்கோ அதைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  59. திருமாறன் - உங்கள் கருத்துக்கு நன்றி. சிலரோடு அல்ல, பலரோடு. கடைகள்ல, ஒழுங்கான இட்லி மிளகாய்ப்பொடி கிடைப்பதில்லை (பண்ணத்தெரியாது. எல்லோரும் முருகன் இட்லி கடை, இட்லி மிளகாய்ப்பொடி அருமை என்பார்கள். என்னைப் பொறுத்தவரையில், அது மாவு பவுடர்). அதனால்தான் கடைக்காரங்க, அடை அவியல்னு புது காம்பினேஷனை விளம்பரப்படுத்திவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  60. பகவான்'ஜி - கல்யாணச் சாப்பாடு - எனக்கும் சாப்பிட இஷ்டம்தான். வாய்ப்புதான் இல்லை. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  61. கில்லர்ஜி - நன்றி.. நம்ம ஊருக்குப் போனதுக்கு அப்புறம் உங்களுக்கு தமிழ் நாடு அவியல் சாப்பிட நிறைய வாய்ப்பு கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  62. ஸ்ரீராம் - வெளியிட்டதற்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  63. ஊமைக் கனவுகளின் கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  64. சிவகுமாரன் - உண்மையைச் சொல்வதற்கு எதற்கு வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும். உண்மையோடு கொஞ்சம் பொய்முலாம் பூசினால், நமக்கு வேண்டியது நடந்துவிடப்போகிறது.

    பதிலளிநீக்கு
  65. துளசிதரன் தில்லையகத்துக்கு நன்றி. கீதா ரங்கன் - உங்கள் செய்முறையும் அதேதான் என்று அறிய சந்தோஷம். நன்றி.

    பதிலளிநீக்கு
  66. ஜி.எம்.பி ஐயா - கேரளாவில் விசேஷ நாட்களில் அவியல் நிச்சயமாக உண்டு. நம் ஊரிலிலும் கல்யாணத்தின்போது உண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  67. ஜெயந்தி ஜெயா - உங்கள் கருத்துக்கு நன்றி. வீட்டையாவை சாப்பாட்டில் உங்கள் சைடில் இழுப்பது என்ன கடினமா. நாங்களெல்லாம் பாவப்பட்டவர்கள். இழுத்த இழுப்புக்கு வந்துவிடுவோம். ஆரம்பத்தில் கொஞ்சம் சொல்லிப்பார்ப்போம். கொஞ்சம் மாறுவதுபோல் போக்குக் காட்டுவார்கள். குழந்தை வந்தாச்சுனா, அவங்க சைடுல ஆதரவு வோட்டு ஜாஸ்தியாயிடும். அப்புறம் என்ன, கிடைச்சதைச் சாப்பிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  68. வைகோ சார்.. அவியல் ரசிகர்களுக்கு அறிவித்ததற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  69. ஸ்ரீனிவாசன் - என்ன நம்ம ஊர் வார்த்தைகள்லாம் வருது (இருக்கும்லா). கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட எம்பூட்டு கவனமாக இருந்துகிட்டாலும் சமயத்துல மண் வாசன காட்டி கொடுத்திடுதுல்லா..))))
      சேர்மாதேவிங்க ஊரு( சேரன் மஹாதேவி)

      நீக்கு
  70. வெங்கட்ஜி - கருத்துக்கு நன்றி. நமக்கு ஏற்றமாதிரிப் பண்ண, நல்லாச் சாப்பிட வீடு இருக்கும்போது என்ன கவலை. நான் வெளியில் அவியல் சாப்பிட நேர்ந்தால், முதலில் முருங்கையைப் பொறுக்கித் தள்ளிவைத்துவிடுவேன். என்ன.. ஹோட்டல்களில், முருங்கையை எடுத்துவிட்டால் 2 ஸ்பூன் அவியல்தான் மிஞ்சும்.

    பதிலளிநீக்கு
  71. வைகோ சார் - ஸ்ரத்தா ஸபுரி-இவரை உங்கள் தளத்தில்தான் பார்த்திருக்கிறேன். பேருமே வித்தியாசமாக இருக்கிறது. (இதுவரை கேள்விப்பட்டதில்லை). மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சாப்பாட்டில், உங்களது தேர்வில், பெரும்பாலும் (almost everything என்று சொல்லும்படியாக) எனக்குப் பிடிக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  72. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்காவது, ஸ்ரீராம் அவர்கள், அவர் செய்து பார்த்த ஸ்வீட், கார வகைகளைத்தான் எழுதுவார் என்று தோன்றுகிறது. ஆளுக்கு ரெண்டு இனிப்பு, காரம் கொடுத்தால் எனக்குப் போதாதோ.. அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  73. படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நாவிலிருந்து எச்சில் சொட்டி விட்டது. என் வீட்டில்(தஞ்சாவூர்) அவியல் ஒரு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம் ஆகவே கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.. புகுந்த வீட்டிலோ(பாலக்காடு) அவியலை பிசைந்து சாப்பிடுவார்கள். அதனால் சற்று நீர்க்க இருக்கும். நாங்கள் புளி சேர்க்க மாட்டோம். பூசணி, வாழை, சேனை மஸ்ட். தயிர் புளிப்பு குறைவாக இருந்தால் மாங்காய் சேர்த்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் அவியல் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  74. பானுமதி மேடம்.. இரண்டு வகை அவியலும் எனக்கு இஷ்டம்தான். நீங்கள் சொல்வதை வைத்து, எங்கள் கேரளா கனெக்‌ஷன் (முன்னோர்கள்) னாலதான் அவியலை சாத்த்தோட கலந்து சாப்பிடும் முறை வந்திருக்கும் என நினைக்கிறேன். கருத்திட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!