இந்தக் கதை பற்றிய அவரது கருத்தும், தொடர்ந்து அவரது படைப்பும்.
"இந்த கதை , நான் ராமகுண்டம் என்ற ஊரிலிருந்து ரிலீவ் ஆகி திருச்சிக்கு
ஜி.டி.யில் வந்து கொண்டிருந்த போது எழுதியது. ஊர் வந்தவுடன் முதல் காரியமாக
தினமணி கதிருக்கு அனுப்ப, அவர்களும் ப்ப்ளிஷ் பண்ணினார்கள். தினமணி
கதிருக்கு கதை அனுப்புவது என்பது அந்த காலத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த
விஷயம்.
இனி கதைக்கு வருவோமா?
அந்த பாக்டரி க்வார்ட்டர்ஸில் எனக்கு ஒரு வீடு 'அலாட்' ஆகி இருந்தது.
வீட்டு நம்பர் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.. B 309. அக்கம் பக்கத்து
க்வார்ட்டர்ஸில் உள்ள குழந்தைகள் தான் எனக்கு நண்பர்கள்...அவர்கள் அத்தனை
பேரும் நான் ஆபீஸ் விட்டு வந்ததும் என் வீட்டிற்கு வந்து விடுவார்கள்..ஒரே
கதையும் பாட்டும் என ஏக கும்மாளம்...
கொஞ்சுவோம்... திட்டுவோம்.... அது ஒரு தனி உலகம்... நான் ஊருக்கு போகப் போறேன் என்று சொன்னதும் அத்தனை குழந்தைகளும் அழுதார்கள்...
பிறகு மனதை தேற்றிக் கொண்டு, எனக்கு ஒரு பார்ட்டி
கொடுத்தார்கள்... எல்லாரும் Five Star சாக்லேட் சாப்பிட்டோம்... எனக்கு ஹீரோ
பேனா பரிசளித்தார்கள்...
வாழ்நாளிலேயே எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் அது!
'என் 'நண்பர்களுடன்' ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளாமல் வந்து
விட்டோமே'என்று ட்ரைனில் ஏறும் வரை ...... GT யில் பயணிக்கும் வரை ... இருந்த
அந்த ஏக்கம் வாரங்கலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, விஜயவாடா வரும்
போது சுத்தமாக மறைந்தே விட்டது!
ஆம்....விஜயவாடாவில் இந்த கதை முடிந்து விட்டது!
இந்த கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை என்றாலும், அந்த திவாகர்,ஷிரவந்தி,ஆஷா,ரூபா,ரவிச்சந்திர ஸ்வரூப் ...என்று அத்தனையும் அந்த குழந்தைகளின் பெயர்கள் தான்!
இது போதும் என நினைக்கிறேன்....
இனி கதை,"
ராகவ புரம் ரயில்வே ஸ்டேஷன்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆரண்யநிவாஸ் ஆர். ராம மூர்த்தி
க்ராண்ட் ட்ரங்க்' நிதானமாக ஓடிக் கொண்டு இருந்தது. ஒன்பது மணி பகல்
பொழுதில், அந்த குளிரூட்டப் பட்ட ' ஏசி சேர் காரி'ன் 'ஸ்க்ரீனை' விலக்கி,
மூடியிருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.
ராகவ புரம் ரயில்வே ஸ்டேஷன்!
கண நேரத்தில் வந்து மறைந்து போனது ஸ்டேஷன்.
ராகவ புரம்.
என்ன ஒரு அழகான ஊர்! என்ன ஒரு அழகான பெயர்!
'சௌத் சென்ட்ரலி'ல் என்னை மாற்றிய போது, முதன் முதலாக அங்கு தான்
'போஸ்டிங்'. அதை விட்டு வந்து ஒரு பத்து வருடம் இருக்குமா? ஏன் அதற்கு
மேலும் கூட இருக்கலாம்.
ஆந்திராவில் ' கரீம் நகர்' ஜில்லாவைச் சேர்ந்த அந்த ஊரில் இருந்த அந்த
இரண்டு வருடங்களும்..வருடங்களா . வருடங்கள் அல்ல... என் வாழ்வின் வசந்த
உத்சவங்கள்...அல்லவா அவை!
' காஃபி சாப்பிடறேளா?'
' கொஞ்சம் குடேன்'
லலிதா 'ஃப்ளாஸ்க்'கிலிருந்து காஃபி கொடுத்தாள்.அந்த நேரத்திற்கு, அது ரொம்ப சுகமாக இருந்தது.
மனம் மெள்ள பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது.
லலிதாவை நான் ராகவபுரம் கூட்டிக் கொண்டு போகவில்லை.அவள்
அப்போது திருச்சி 'ஜங்ஷனி'ல் புக்கிங் க்ளார்க்.
குடித்த காஃபியில் லைட்டாக ஒரு கசப்பு.
அசை போடும் பழைய நினைவுகளூடே ஒரு வித சோகம்...
எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம். குழந்தையே இல்லாத பாவி நான்...
இந்த வம்சம்...அரியூர் அனந்த நாராயண கனபாடிகள் என்கிற பாரம்பர்யமான
வம்சம்...
அரியூர் அனந்த நாராயண கனபாடிகள் என்கிற அந்த ஆணி வேரின்... காய்ந்து..... தீய்ந்து போன கடைசி வேர்க்கட்டை தான் அனந்த ராமனாகிய நான் .....
இந்த ஆதங்கத்தினால் கூட குழந்தைகள் மீது எனக்கு பாசம் இருக்கலாம்.
மேலும் குழந்தைகள் தானே என்று அலட்சியப் படுத்தாமல், நாம் மட்டும் கொஞ்சம்
பொறுமையாய் இருந்தோமானால், அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியது
ஏராளம்! ஏராளம் !!
வந்து சேர்ந்த முதல், இரண்டு நாட்களுக்கு மிகவும் சிரமப் பட்டேன்.
மூன்றாம்
நாள், காலைப் பொழுதில் ஒரு வாண்டு மெள்ள கதவைத் தள்ளி எட்டிப் பார்த்தது.
' அங்க்கிள்....மீரு கொத்தக ஒச்சாரா?'
' ம்'
அதை தாஜா பண்ண பழைய பேப்பர் ஒன்று கிழித்து, ஏரோப்ளேன் செய்தேன்.
குழந்தை போய் விட்டாள்!
' நாக்கு அங்க்கிள்'
' நாக்கு அங்க்கிள்'
பழைய ஆங்கில தினசரி பேப்பரை எடுத்துக் கொண்டு நாலைந்து நண்டு,சிண்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டன!
அவர்களுக்கும் ஏரோப்ளேன் வேண்டுமாம்!
கொஞ்சம்,கொஞ்சமாய் அவர்களுடன் ஐக்யமானேன். அவர்களில் திவாகர் தான்
பெரியவன். ஆறாம் க்ளாஸ். ஷிரவந்தி யு.கே.ஜி. டிங்கு என்கிற ரவி
காந்த்...டிட்டு என்கிற அவன் தம்பி சசிகாந்த்.. ஆஷா.. ரூபா... வம்சிகிஷோர்.. ரவிச்சந்திர ஸ்வரூப்.. ரவா லட்டு என்று கூப்பிட்டால் கோபித்துக் கொள்ளும் ரவிக்குமார் என்கிற பொடியன்....
அந்த ரயில்வே க்வார்ட்டஸில், வந்து சேர்ந்த சில நாட்களிலேயே, நான் ஹீரோ ஆகி விட்டேன்!
' அங்க்கிள்..ஒக்க கதை செப்பண்டி?'
டி.வி.யின் தாக்கம் இல்லாத நாட்கள், அவை!
வாலறுந்த நரி கதை சொன்னேன்...ட்ரீமர்...லிலிபுட்...சாம்ஸன் அண்ட் டிலைலா...ஏக சக்கராபுரத்தில் பாண்டவர்கள் பகாசுரனை வதம் பண்ணியது.....
நான் பட்லர் இங்க்லீஷில் வெளுத்து கட்ட, அதை திவாகர் தெலுங்கில் மொழி பெயர்ப்பான்!
சூழ் நிலையைக் கலைத்தாள்,லலிதா.
' என்ன யோஜனை?'
'ஒண்ணுமில்லே'
அவளுக்கு ஒன்றும் தெரியாது, பாவம்!
மறுபடியும் ராகவபுரம்!
சில நாட்கள் பாட்டும்...கூத்துமாய் பொழுது ஓடி விடும்!
நான் பாட ஆரம்பிப்பேன்.
'....... அங்கார
இங்கார....
நாமம் சாத்தி,
அனுதினமும்,
அனுதினமும்,
கரம் கூப்பி...
சிங்கார
தேவனே
சீனிவாசா...
சீரங்கத்துப்
பெருமாள
சேவிக்கப்
போறோம்..
ஆமா..
சேவிக்கப் போறோம்..
ஆஹா..
சேவிக்கப் போறோம்...
அந்த கடைசி இரண்டு வரிகளை..'ஆஹா..சேவிக்கப் போறோம்' என்று ஒரு மாத்திரை
அழுத்தம் அதற்குக் கொடுத்து, நான் பாட, அத்தனை குழந்தைகளும் 'ஆமா... சேவிக்கப் போறோம்..ஆஹா..சேவிக்கப் போறோம் என்று கத்த...ஏக குஷி!
அடுத்த பாட்டு..
' நன்னே முன்னே பஜ்ஜதீரே..
முடீ..மே க்யா ஹே....'
அடுத்தது...
' ஸாரே...சஹாங்கே அச்சா...'
'சுன்...சுன் கர்த்தி ஆயே சிடியா..' சொல்லிக் கொடுத்தேன்.
கட்டோ கடைசியாய்...
' ஏக் தோ தீன்...'
கோரஸாய் ஒரே கத்தல்!!
திவாகர் மிமிக்ரி நல்லா பண்ணுவான். ப்ரேக் டான்சும் ஆடுவான்.
சில நாள் எனக்கு 'மூட் அவுட்' டாகி விடும். 'போங்கடா, என்று
எல்லாரையும் விரட்டி விடுவேன்.
அடுத்த நாள் சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு வந்து பார்த்தால், வீட்டு
பூட்டைத் திறக்க முடியாது!
சாவி திறக்கும் ஓட்டையில் ஈர்க்குச்சி செருகி இருக்கும்!
ஷிரவந்தியாய் இருக்கும்!
இந்த மாதிரி வேலைகளை அவள் தான் சூப்பராய் செய்வாள்!
ஜி.டி ஓவென்று பெருங்குரலெழுப்பி ஒரு பாலத்தைக் கடந்து செல்ல.....
எனக்கும் ஓவென்று வாய் விட்டு அழ வேண்டும் போல்....
லலிதாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன், ஆதரவாய் !
எனக்கு குழந்தை அவள்!
அவளுக்கு குழந்தை நான்!!!!