ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஞாயிறு 160731 ஹாபி - தொடர் கண்காணிப்பு. (சுருக்கமா ஃபாலோ அப்)


சென்ற ஞாயிறு  ஹாபி பதிவுக்கு அபார வரவேற்பு! 

நன்றி நண்பர்களே! 

சில சந்தேகங்கள் கேட்கப்பட்டிருந்தன சந்தேகமும், அதற்கான  விளக்கமும் இதோ: 

rajalakshmi paramasivam said...

மிகவும் உபயோககரமானத் தகவல். சின்ன சந்தேதகம்.கோகோ பீட் ஒருமுறைப் போட்டால் பிறகு மாற்ற வேண்டுமா?எவ்வளவு நாளைக்கு ஒரு முறை அதை மாற்ற வேண்டும். வெறும் கீரை மட்டும் தான் அதில்வருமா? அல்லது பூச்செடிக்கும் மண்ணிற்குப் பதிலாக கோகோ பீட் உபயோகபடுத்தலாமா?          
விளக்கம்:
நான், கோகோ பீட் மற்றும் வெர்மிகம்போஸ்ட்  வாங்கியது, சென்னை டிரேட் சென்டரில் - ஜூன் மாதம் நடந்த வீட்டுப் பொருட்கள் கண்காட்சியில். 
அந்த ஸ்டால் அளித்த கார்ட் இது: 
    

அட்டையில் காணப்படும் மின் அஞ்சலுக்கு, வாசகரின் சந்தேகத்தைக் கேட்டு, ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதினைந்து நிமிடங்களுக்குள், அந்தக் கடை அதிபர் ஆதித் குமார் என்பவரிடமிருந்து பதில் வந்தது. 

அந்த பதிலின் சாராம்சம்:  

கோகோ பீட், தேங்காய் உரிமட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ('நார்சீவல்' என்று பெயர் உண்டு என்று என்  அண்ணன் மகள் கூறினார்.) இந்த நார்சீவல், மண்ணை விட அதிக நாட்கள், ஈரப்பதத்தை தன்னகத்தே தேக்கி  வைத்திருக்கும் திறன்  பெற்றது. 

ஆரம்ப  நாட்களில், நார்சீவலில்   உயிர்சத்துகள்  எதுவும் கிடையாது. ஆனால், நாள் பட, நாள் பட, நார்சீவல் நம்  உபயோகத்தில்  மக்கத் துவங்கும். அப்போது அதனிடம் நைட்ரஜன் சத்து  வந்துவிடுகிறது.  அந்த  சத்தை  அது, தன்னகத்தே  வளருகின்ற செடிகளுக்கு அளிக்கிறது. 

நார்சீவலை அடிக்கடி மாற்றத் தேவை இல்லை. பலமுறை, கீரை சாகுபடிக்கு அதை உபயோகப்படுத்தலாம். ஆனால், பூச்செடிகள்   போன்ற , வேர்கள் எளிதில் அழுகுகின்ற வகை தாவரங்களை  நார்சீவல் அமைப்பில்  பயிரிட்டால், நார்சீவல் பழுதாகிவிடும். அதில் மீண்டும் பயிரிடல்  வேண்டாம். வேறு  புதிய  நார்சீவல்  தளம்  அமைத்துக்கொள்ளுதல்  நல்லது.  

மண்புழு  உரத்துடன்  கூடிய  நார்சீவல்,  (That is, Vermi compost with cocopeat) புதினா, வெந்தயக்கீரை, கொத்தமல்லி போன்ற  இலை / கீரை  வகைகளுக்கு ஏற்றது. இந்த  வகை  தாவரங்களுக்கு  வேண்டியது, நைட்ரஜன்  மட்டுமே.  அதை  வெர்மிகம்போஸ்ட்  அளித்துவிடுகிறது.    

பழச்செடிகளை  அல்லது    காய்கறிச் செடிகளை, நார் சீவல்  அமைப்பில்  பயிரிட  நீங்கள்  விரும்பினால், நார் சீவல்  + செம்மண் +   கம்போஸ்ட்  + bone meal + sea weed extract   எல்லாமாகக் கலந்துகொண்டு   அதில்  காய்கறிச் செடிகளைப்  பயிரிடலாம். கம்போஸ்ட்  நைட்ரஜனை  அளிக்கிறது;  மற்ற  இரண்டும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்  சத்துகளை  அளிக்கும். இந்த  சத்துகள், காய்கறிச்  செடிகள்  வளர  தேவையானவை.   
 
பூச்செடிகள்  வளர்க்க  வேண்டும்  என்றால்,  நார் சீவல்  +  கம்போஸ்ட்   +  செம்மண்   கலவை  உதவும்.  செம்மண்  சேர்ப்பது, பூச்செடிகளின்  உறுதியான  தண்டு, வேர்ப்பகுதிகளை  உறுதியாகத்  தாங்கிப்பிடிக்க.  பூச்செடிகளின்  வேர்கள்,  நார் சீவல்  போன்ற  அதிக  ஈரப்பாங்கான  இடத்தில்  எளிதில்  அழுகிவிடும்.  எச்சரிக்கை  தேவை.  ஈரத்தைக்  குறைக்கத்தான்   செம்மண்  சேர்க்கப்படுகிறது.  ஆனால்,  பூச்செடி   போட்டு,  அது  வேர்ப்பகுதி  ஈரத்தால்   அழுகிவிட்டால்,  பிறகு,  அந்த   நார்சீவல்  கலவையை  மீண்டும்  உபயோகிக்க கூடாது.. 

சரி.  இப்போ  என்னுடைய  கொத்தமல்லித்  தொட்டியைப்  பாருங்கள்.  
     
     
பழைய  ஃபிரிட்ஜின் பாலி கார்பனேட்   காய்கறிப்  பெட்டி.  (அந்த  ஃபிரிட்ஜை  வீட்டுக்கு  வெள்ளையடிக்க  வந்தவருக்கு  இலவசமாகக்  கொடுத்துவிட்டேன்.)   பெட்டியை    எடுத்து,  அடியில்  நான்கு  மூலைகளிலும்  1/8" (3 mm) dia  ஓட்டை  (மொத்தம்  நான்கு ஓட்டைகள் மட்டுமே. ஒவ்வொரு  மூலையிலும்  ஒவ்வொன்று Thanks : Kayjee)  போட்டுக்கொண்டேன்.   தொட்டியில்  பாதிக்கு  மேலே  செம்மண்  நிரப்பினேன்.  பிறகு  நார்  சீவல், இரண்டு  அங்குல  ஆழத்துக்கு இட்டேன்.   கொத்தமல்லி  விதைகளை, இருபத்துநான்கு  மணி நேரம்  தண்ணீரில்  ஊறவைத்துக்கொண்டேன்.  ஊறிய  விதைகளை கம்போஸ்ட் உடன் கலந்து நார் சீவல்  படுக்கைக்கு  மேல்  இட்டேன். 

பதினான்கு  நாட்கள்  தொடர்ந்து தொட்டியை  வீட்டுக்கு  வெளியே  நிழலில்  வைத்து, தண்ணீர்  தெளித்து வந்தேன்.  ஜூலை  நான்காம்  தேதி  ஆரம்பித்த  தவம்,  ஜூலை பதினான்கு சமயத்தில்தான்  முளை விட்டது.  

                Coriander

      

சனி, 30 ஜூலை, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1)  ஹமிர்பூரா வசூல் ராஜாக்கள்.
 
 


2)  மிஞ்சியதைத் தருவதல்ல இது.  தனியாகச் சமைத்துத் தருவது.  உணவு வங்கி.
 
 


3)  செயல்பாட்டுக்கு ஏற்றதா, வருமா என்பதை எல்லாம் விடுங்கள். அரசுப்பள்ளி என்றாலே இப்பமாய் நினைக்கும் காலத்தில் அங்கிருந்து ஒரு குருத்து தோன்றுவதை பாராட்ட வேண்டும்.  பரமக்குடி அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர் காளீஸ்வரன்.

வியாழன், 28 ஜூலை, 2016

வியாழன் விடைகள். 160728

                                      
கணக்கு தணிக்கை முதல் கேள்வியின் சரியான பதிலுக்கு (பி. சுசிலா) முழு மதிப்பெண்கள்  பெறுகிறார்! 

# பலாப்பழத்தில்  உண்டு; பனம்பழத்தில்  இல்லை!  == லா 
# ஆம் ஆத்மியா / பி ஜே பி யா - இந்த மட்டையாளர்? அவர் பெயரில் உண்டு; ச ரி க ம ப த நி யில் இல்லை! === சி (த்து) 
# பிள்ளையில் உண்டு; கொள்ளையில் இல்லை! == பி 
# மச்சு வீட்டில் உண்டு; மாடி வீட்டில் இல்லை!  == சு 

வாழ்த்துகள் ஸ்ரீ வரதராஜன். 

                                                     
    

இரண்டாம் கேள்விக்கு, பல முயற்சிகள் செய்த மாடிப்படி மாதுவுக்கு வாழ்த்துகள். 

 Mastered / wanted / blended / mixed 
WORKED / TEACHED / BUILDED / CREATED / INVENTED / DIRECTED / CONSTRUCTED 

GUESSED / GUARDED / GUSTED


    கணக்கு தணிக்கை: Garbled. Taylored (sic) ...it should have been tailored. 

எங்கள் கணக்குப்படி, G யில் ஆரம்பித்து, ED என்று முடிகின்ற எல்லா (ஆங்கில அகராதியில் வரும் ) வார்த்தைகளும் ஓ கே. ED யை எடுத்துவிட்டாலும் அந்த வார்த்தைக்குத் தனி அர்த்தம் இருந்தால் இன்னும் சிறப்பு. 
எனவே (எனிவே) ஜி யில் ஆரம்பித்து, இ டி  யில் முடித்து வார்த்தை சொன்ன ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வார்த்தைக்கும் நூறு பாயிண்டுகள். 

வாழ்த்துகள்.

மூன்றாவது கேள்விக்கு விடை: 
ராமராவ். 

பட்டியலிடப்பட்ட எல்லோரும் முதல் நான்கு  புதிர்ப் பதிவுகளில் மொத்தமாக உள்ள நூற்று முப்பத்து நான்கு (இன்றளவில்)  கமெண்ட்களில் - ஆளுக்கு ஒரே ஒரு கமெண்ட் இட்டவர்கள். (1 out of 134) ராமராவ் மட்டும் மூன்று விடைகளும் சரியாகச் சொல்லியிருக்கிறார்.   
    
நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போம். 
    
(மாதவன் கேட்டதால், சினிமாவைக் குறைத்து, மற்றதை அதிகப்படுத்தி  புதிர் கேள்விகள் இட்டோம். ஆனால் மாதவன் இந்தப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆகையால்,  ---------------------------   ? )  
                      

புதன், 27 ஜூலை, 2016

புதன் புதிர் 160727 யார்? எது ? யார்?

                                                 
                                                              
சினிமாவில் ஆரம்பிப்போம். அப்போதான் ஒரு சுவாரஸ்யம் வரும், (மாதவன் தவிர மற்றவர்களுக்கு!) 

ஒன்று: 

ஒளிந்திருக்கும் திரையுலகப் பிரமுகரைக் கண்டுபிடியுங்கள். 

# பலாப்பழத்தில்  உண்டு; பனம்பழத்தில்  இல்லை!
# ஆம் ஆத்மியா / பி ஜே பி யா - இந்த மட்டையாளர்? அவர் பெயரில் உண்டு; ச ரி க ம ப த நி யில் இல்லை! 
# பிள்ளையில் உண்டு; கொள்ளையில் இல்லை! 
# மச்சு வீட்டில் உண்டு; மாடி வீட்டில் இல்லை!  

இரண்டு : 

What is the next word?

COOKED, ENGINEERED, DOCTORED, _____________.

மூன்று: 

Based on the comments received for our past 4 (Wednesday) quiz posts, find the odd man out from the following 5 people.

கடந்த நான்கு வார  புதன் புதிர்ப் பகுதிகளில் பின்னூட்டம் அளித்த நபர்களில்,   இந்த   ஐவரில்,  வரிசையில் சேராத, ஒற்றை மனிதர் யார்? & ஏன்?

நெல்லைத் தமிழன் 
ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் 
வெங்கட் நாகராஜ் 
ராமராவ் 
பெசொவி 
   
    
பின்னூட்டங்களில் சரியான விடைகள் யாரும் சொல்லவில்லை என்றால், நாளைய  பதிவில்  பார்ப்போம். 
         

செவ்வாய், 26 ஜூலை, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: உத்தம வில்லன்




          இன்றைய எங்கள் "கேட்டு வாங்கிப் போடும் கதை " பகுதியில் இடம் பெறுவது நண்பர் கார்த்திக் சரவணன் அவர்களின் படைப்பு. 

          இவரின் தளம் ஸ்கூல் பையன்.

          நான் நேரில் சந்தித்துள்ள பதிவர்களில் இவரும் ஒருவர்.  வாத்தியாரின் சிஷ்யர்களில் ஒருவர்.  ஜப்பான் பாஷை அறிந்தவர்.  குறும்படங்களில் இவர் மட்டுமல்ல, இவர் மகனும் நடித்துள்ளார். 

   
          கதை பற்றிய இவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு..


=======================================================================


கதை  உருவான விதம்  ::

          கே.கே.நகர் சிவன் பார்க்கில் நண்பர்  ஒருவருடன் ஒரு சின்ன சந்திப்பு.  சந்திப்பு முடிந்ததும் இருவரும் அருகிலிருந்த கடையில் தேநீர் குடித்துவிட்டு வெளியேறினோம். பிளாட்பாரத்தில் நடந்து வருகையில் கால்வாய் மீது பொருத்தியிருந்த கல் மூடி சற்று விலகியிருந்தது. அதை கவனிக்காத நண்பர் கால் இடறி விழப் பார்த்தார். நல்லவேளையாக நான் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். "நீ மட்டும் சொல்லலேன்னா விழுந்து காலை உடைச்சிருப்பேன்" என்றார். அந்த கணத்தில் உதித்தது இக்கதை. அவர் சொன்னதை இக்கதையின் கிளைமாக்ஸ் உணர்த்தும் என்றும் படிப்பவர்களுக்கு  இது சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்றும்   நம்புகிறேன். நன்றி...


========================================================================


உத்தம வில்லன்
 
கார்த்திக் சரவணன்




கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.

அந்தப் பெயரைப் பார்த்ததும் சகலமும் மறந்து ஒரு விரக்தியும் கோபமும் கலந்த நிலைக்குச் சென்றுவிட்டேன். "ஹலோ" என்றேன். "எங்கே இருக்கே, அருண்?" என்றார் நாராயணன். "சார், நான் இப்போ அம்மன் கோவில் தெரு வந்திருக்கேன்" என்றேன். "நம்ம கடை கிட்ட தானே, அங்கேயே இரு. வர்றேன்" என்று தொடர்பை துண்டித்தார்.  எனக்கு முகம் இருண்டது. அவர் வருவதற்கு ஒரு ஐந்து நிமிடம் ஆகும். அதற்குள் அவரைப்பற்றி உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

அலுவலகத்தில் அவர் எனக்கு பாஸ். ஒரு படத்தில் வடிவேலு கேட்பாரே, "அவர் உனக்கு பாஸா இல்ல லூஸா" என்று. யாராவது அவரிடம் ஒரு முறை பேசிவிட்டால் போதும், என்னிடம் இதே வசனத்தை சொல்லிவிட்டுப் போவார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பவர். மனிதத்தன்மை என்பதை கொஞ்சம் கூட அறியாதவர். இப்போது கூட என்னால் காத்திருக்க முடியுமா என்று கூட கேட்கவில்லை. காத்திரு, வருகிறேன் - அதீத அதிகாரம்.

அலுவலகத்தின் வேறு ஒரு பிரிவில் இருந்தேன், அங்கே எனக்கு ஐந்து உயர் அதிகாரிகள். ஐந்து பேரும் ஐந்து விதம். சமாளிக்க முடியவில்லை என்பதால் மாற்றல் கேட்டிருந்தேன். "நாராயணன் சாரோட பி.ஏ. அடுத்த மாசம் ரிட்டையர் ஆகறார், அந்த இடத்துக்குப் போறியா?" என்று எம்.டி. கேட்டபோது சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். ஐந்து விதம் விதமான ஆட்களை சமாளிப்பதைவிட ஒரே ஒரு யுனிக் ஆளை சமாளித்துவிடலாம். எப்படிப் பட்டவராயினும் - என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பதோ வேறு மாதிரி.

ஒரு காபி குடிக்கலாம் என்று கிளம்பும்போது தான், "அருண்" என்று குரல் கொடுப்பார். "காபி குடிக்க கிளம்பிட்டியா? பரவாயில்லை, பொறுமையா வந்து பாத்துக்கலாம்" என்பார். "இல்லை, பரவாயில்லை சார், சொல்லுங்க" என்றால் "போயிட்டு பொறுமையா வாப்பா" என்பார். சரி சார் என்று நகர்ந்தால் தொலைபேசியில் "அருண் காபி குடிக்கப் போறானாம், ஒரு அரை மணி நேரம் கழிச்சு பாத்துக்கலாம்" என்று என் காதுகளில் கேட்பது போல் கூறுவார். எனக்கு அப்போது சுர்ரென்று கோபம் தலைக்கேறும். எதுவும் சொல்லாமல் வெளியேறிவிடுவேன்.

ஒரு கடிதம் தட்டச்சு செய்யச்சொல்வார். டிக்டேட் செய்யும்போது சொன்னதை அப்படியே தட்டச்சு செய்து கொடுத்தால் இன்னும் பல வரிகள் சேர்ப்பார், பலவற்றைத் திருத்துவார். இது எல்லா இடத்திலும் இருப்பதுதான் என்கிறீர்களா? குறைந்தபட்சம் பத்து முறையாவது திருத்திக் கொடுத்துவிடுவார். பதினொன்றாவது முறையாக கொண்டுபோய்க் கொடுத்தால் "பான்ட் சைஸை சின்னது பண்ணுப்பா, ரெண்டு பேஜுக்கு லெட்டர் அடிச்சா மினிஸ்டர் எப்படி படிப்பார்?" என்று கேள்வி கேட்பார். இதை எதிர்பார்த்தே சில நேரங்களில் அளவை சுருக்கி ஒற்றைப் பக்கத்தில் தட்டச்சு செய்து கொடுத்தால் "ஏப்பா, உனக்கு அறிவில்ல, இவ்வளவு சின்னதா இருந்தா மினிஸ்டருக்கு எப்படி கண்ணு தெரியும்? நல்லா பெரிசா ரெண்டு பக்கத்துக்கு அடிச்சு எடுத்திட்டு வா" என்பார். "சார், மினிஸ்டருக்கு இங்கிலீஷ் தெரியாது" என்றால், "ஏன், அவரோட பி.ஏ.வுக்குத் தெரியாதா? எல்லாரும் உன்னை மாதிரி மரமண்டையாவா இருப்பாங்க? எதித்துப் பேசறியா, நான்சென்ஸ், சொன்னதை செய்" என்று அடக்கிவிடுவார்.

அவருக்கு என்னை எப்போது அதட்டி, மிரட்டி வேலை வாங்கவேண்டும். ஏதாவது பேசினால் மேலும் மிரட்டி ஜெயிக்கவேண்டும். இவ்வளவு ஏன், இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டுமானால் கூட அவரது இஷ்டப்படித்தான் எடுக்கவேண்டும். அவரிடம் சேர்ந்த புதிதில் நெருங்கிய நண்பனுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டதற்கு, "பதினஞ்சாம் தேதியா? அப்போ வேண்டாம், இருபதாம் தேதிக்கு மேல என்னைக்காவது ஒரு நாள் எடுத்துக்கோ" என்றார். யோவ், மனதுக்குள் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் ஒரு வினாடி தொண்டை வரை வந்துபோனது. அதிலிருந்து ஏற்கனவே செத்துப்போன தாத்தா பாட்டியை மீண்டும் கொன்றோ அல்லது உயிருடன் இருக்கும் தாத்தா பாட்டியைக் கொன்றோதான் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது திடீரென்று வாந்தி பேதி மயக்கம் என்று பொய் சொல்லிவிடுகிறேன். ஒரு முறை அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. "ரெண்டு மாசம் முன்னாடி உங்க பாட்டி செத்துட்டாங்கன்னு சொல்லி லீவ் போட்டியே, அது யாரு?" என்றார். "அது அப்பாவோட அம்மா சார், இப்போ செத்தது அம்மாவோட அம்மா சார்" என்று சொல்லி சமாளித்துவிட்டேன்.

நீங்கள் பாத்ரூமில் அழுதிருக்கிறீர்களா? நான் அழுதிருக்கிறேன். ஒரு முறை இருமுறையல்ல. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அழுதுவிடுவேன். இல்லை இல்லை, அழவைத்துவிடுவார். கலங்கிய கண்களுடன் மீண்டும் நான் வருவதைப் பார்த்ததும், "ஏன்பா, அழுதியா என்ன?" என்பார். இல்லை என்று சொன்னாலும் சரி, ஆமாம் என்று சொன்னாலும் சரி, அவரது வாயோரம் கசியும் ஒரு குரூரப் புன்னகை அவரது மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும்.

இதெல்லாம் போகட்டும் விடுங்கள். ஒரு முறை எம்.டி.யிடமே என்னைப் பற்றி குறை சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் எம்.டி.யைக் கண்டு பேசியபோது அவரே இதைச் சொன்னார். "அருண், நாராயணன் உன் மேல பெரிய அபிப்ராயம் வச்சிருக்கலை போல, என்ன சார் எனக்கு பி.ஏ. கொடுத்தீங்கன்னு கொஞ்சம் புலம்பினார். ஆனா அவரைப் பத்தி எனக்குத் தெரியும், ஐ தின்க் யு ஆர் டூயிங் வெல், கம்ப்ளையன்ட் வராம பாத்துக்கோ" என்றார். எம்.டி.க்கு என்னைப்பற்றித் தெரியும், இருந்தாலும் அவரே இப்படிச் சொல்கிறாரே எனும்போது கொஞ்சம் சுருக்கென்று குத்தியது. சரிதான், நான் இல்லையென்றால் நிறுவனத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் இந்த நாராயணன், அதான் எனக்கு பாஸாக வந்து வாய்த்திருக்கும் லூசு இல்லையென்றால் எம்.டி,க்கு கை ஒடிந்தது போலாகிவிடும். என் தலையெழுத்து - வேறு நிறுவனத்துக்கு முயற்சி செய்யலாம் என்றால் மார்க்கெட் நிலைமை வேறு சரியில்லை. நான் பார்க்கும் இதே வேலையை என்னைவிட குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய பலரும் காத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட குடும்பத்துக்காக வேலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சூழல்.

அதோ, அவர் வந்துகொண்டிருக்கிறார். தூரத்தில் வெள்ளை நிற டி ஷர்ட்டும் கருப்பு நிற டிராக்சும் அணிந்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நடந்து வருகிறார். நான் பார்க்கிறேன் என்பதை அவரும் கவனித்துவிட்டார். தினமும் மாலை வேளைகளில் வருவார், நான்கைந்து தெருக்களை ஜிக்ஜாக் வடிவில் நடந்து கடந்து செல்வார். வரும் வழியில் நான் குடியிருக்கும் தெருவில் அவர் ஒரு தம் அடிப்பார். இதோ, கடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். நானும் கடையை நோக்கிச் சென்றேன். திடீரென்று இருட்டிக்கொண்டு வந்தது. சோவென்று மழையும் கொட்டத் தொடங்கியது. துளித்துளியாகத் தொடங்கி சிறு நீரோட்டமாக மாறி பெருவெள்ளமாகப் பெருகிய தண்ணீர் ஓடி அந்த டிரைனேஜில் விழத்தொடங்கியது. 

நாங்கள் கடையின் ஓரமாக ஒதுங்கிக்கொண்டோம். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துவிட்டு, "அருண், அடுத்த வாரம் மும்பை போகணும், நாளைக்கு காலைல ஆபிஸ் போனதும் டிக்கட் புக் பண்ணிடு, அப்புறம் அந்த கவர்மென்ட் டிப்பார்ட்மெண்டுக்கு ஒரு லெட்டர் அனுப்பனும்னு சொன்னேனே, அனுப்பவே இல்லையே" என்றார். எந்த இடத்தில் என்ன பேசுகிறார், சே. இங்கு வந்தும் அலுவலக விஷயங்களைப் பேசுகிறார் என்றுதான் ஆரம்பத்தில் சில நாட்கள் மாலை நேரங்களில் இங்கு வருவதைத் தவிர்த்துவந்தேன். அனால் இதை மனதில் வைத்துக்கொண்டு அடுத்தநாள் அலுவலகத்தில் அவர் என்னைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதற்கு இதுவே மேல் என்று சகித்துக்கொண்டிருக்கிறேன். அரை மணி நேரம் சென்றிருக்கும், நன்றாக இருட்டியிருந்தது. பெரும் மழை சிறு தூறலாக மாறியிருந்தது. சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் மட்டும் வடியவில்லை.

 "ஓகே, பாக்கலாம். நாளைக்கு காலைல வந்ததும் மறக்காம செஞ்சிடு" என்று ஆணையிட்டுவிட்டுப் புறப்பட்டார். "சார், மழை நிக்கலையே" என்றேன். "பரவாயில்லை அருண், லேசா நனைஞ்சாலும் என்னோட வாக்கிங் எக்ஸர்சைஸ் நிறுத்தவேண்டாம்னு பாக்கறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். நான் அவரிடம் அங்கே மூடப்படாத டிரைனேஜ் இருக்கிறதென்று சொல்லவில்லை.


திங்கள், 25 ஜூலை, 2016

"திங்க"க்கிழமை 160725 :: சிறுதானியமாவு கொழுக்கட்டை, மற்றும் அடை.



          இந்த வாரமும் தோழி ஹேமாவின் ரெஸிப்பி.  நான் ஏற்கெனவே சொன்னது போல அவர் ஒரு ஆரோக்கிய சமையல் ஆராய்ச்சியாளர்.  புதுசு புதுசாக முயற்சி செய்து பார்ப்பவர்.  எனக்கு சமையலில் ஆர்வம் உண்டு என்பதால் எனக்கு டேஸ்ட் பார்க்க சாம்பிள் கொண்டுவந்து விடுவார்.
 
 

         சென்றவாரம் நெல்லைத்தமிழன் படங்களுடன் ஒரு ரெஸிப்பி அனுப்புவதாக பின்னூட்டமிட்டிருந்தார்.  இதுவரை வரவில்லை!
 


 

          இனி இன்றைய திங்கற ஐட்டத்துக்குப் போவோமா நேயர்களே....  எல்லோரும் சண்டை போடாம வரிசையா வாங்க....  ஆங்...  அப்படித்தான்...






          ஒரு கப் மல்டிக்ரெயின் மாவு,  அதாவது வரகு, சாமை, தினை எல்லாம் கலந்த சிறுதானிய மாவு ஒரு கப்.   கேரட், பீன்ஸ், குடைமிளகாய் எல்லாம் சேர்த்து கால் கப்.  பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு.
 

 

         வெங்காயம் தேவைப்படுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.  பூண்டு இதற்குச் சேராது! 
 


 

          ஒரு கடாயில் முதலில் சிறுதானிய மாவை லேஸாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை அதில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து வேக விட்டு, இந்த மாவையும் அதில் சேர்த்து கிளறி, ஒரு முட்டை வெண்ணெய், நல்லெண்ணெய் விட்டு கைகளால் கொழுக்கட்டை மாவு போலப் பிசைந்து கொள்ளவும்.
 
 

         
 
          இதை இரண்டு வகையில் செய்து  சாப்பிடலாம். ஒன்று இதை பிடிக்கொழுக்கட்டை போல  வேகவைத்து சாப்பிடலாம்.  இரண்டாவது வகை தோசைக்கல்லில் இந்த மாவை ஆடை போலத்  தட்டி, ஃபோர்க்கால் துளைகளிட்டு, அதில் எண்ணெய் விட்டுத்  சாப்பிடலாம்.
 
 

          காரச் சட்னி  பொருத்தமான காம்பினேஷன்.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஞாயிறு 160724 :: ஹாபி


சமீபத்திய  வாக்கெடுப்பில், ஞாயிறு படம் பதிவுகள், டெப்பாசிட்  இழந்ததால், பதிவுலக  நண்பர்களுக்கு. ஞாயிற்றுக்கிழமைகளில்  படத்துடன்  சுவையான  சில  விஷயங்களைப்  பகிர்ந்துகொள்ள  ஒரு  முயற்சி இது.  
    
வாசகர்களும், அவர்களுடைய  ஹாபி  பற்றி, படத்துடன்  விவரங்கள் அனுப்பலாம். மற்ற  நண்பர்களுக்கு  அவை பயன்படும். 

இந்தப் படத்தைப் பாருங்கள். இது என்னுடைய  மொட்டைமாடித்  தோட்டத்தின்  ஒரு  சிறு  அங்கம். 


கொட்டாங்கச்சியில் வெந்தயக்கீரை. 

எப்படிச் செய்தேன் என்று சுருக்கமாகக் கூறுகின்றேன். 

முதலில்,  ஒரு   டீஸ்பூன் வெந்தயத்தை, சிறிய  கோப்பையில்  தண்ணீர் விட்டு, அதில் இருபத்துநான்கு  மணி நேரம்  ஊறவிட்டேன்.  

தேங்காயை உடைத்து, குடுமிப்பக்கம்  உள்ள  கொட்டாங்கச்சியில், குடுமியைப் பிய்த்து  எடுத்தபின், (தேங்காயையும் துருவி  எடுத்தபின் தான்  ) அதில்  சுலபமாக ஓட்டை போட அல்லது ஓட்டையுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம். 

                                                            

இந்தக் கொட்டாங்கச்சியில், முக்கால் பகுதிக்கு, சிறிதளவு கோகோ பீட் நிரப்பினேன். 

அது என்ன கோகோ பீட்? (நன்றி : இளங்கோவன் ரங்கராஜன்)  

 தென்னை மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட  பொருள். செங்கல் வடிவில் கிடைக்கிறது. அதில் கொஞ்சம் வெட்டி, தண்ணீரில் ஊறப்போட்டால்,  சில மணி நேரங்களில் (ஊறப்போடும்  அளவைப்  பொருத்தது. நான்  முழு  செங்கல்லையும்  ஒரு  பாக்கெட்டில்  ஊறப்போட்டதால், ஒன்றரை  நாட்கள் ஆயிற்று!)  பொலபொல வென நார் வடிவில், ஒரு பொருள் கிடைக்கும். (ஒரு கொட்டாங்கச்சுக்கு, பத்து  கிராம் அல்லது  இருபது  கிராம்  கோகோ   பீட் போதும் என்று நினைக்கின்றேன். 
  


அப்புறம் நமக்குத் தேவை, இந்த மண்புழு  உரம்.  



     
கொட்டாங்கச்சுவில், முக்கால் பகுதி  ஊறிய  கோகோ பீட்  போட்டேன்  அல்லவா? 

அதன்  மீது  போட, ஒரு கைப்பிடி அளவு வெர்மிகம்போஸ்ட்  எடுத்துக்கொண்டு, அதனோடு (இருபத்துநான்கு மணிநேரம் ) ஊறிய அரை ஸ்பூன்  வெந்தயத்தைக் கலந்துகொண்டு, கோகோ பீட்  லேயர் மீது  தூவினேன். 

அப்புறம், காலை & மாலை  இருவேளைகளிலும்  லேசாக  தண்ணீர் தெளித்து வந்தேன். 

பத்து நாட்களுக்குள், படத்தில்  காணும்  வெந்தயக்கீரை தயார்!  

 சந்தேகங்கள் எதுவும் இருந்தால், கேளுங்க. பதிலுகிறேன். 


one more useful link here: 

     

சனி, 23 ஜூலை, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  இப்படி ஒரு மனைவியும் அமைய வேண்டுமே...  வித்தியாசமான சிந்தனை.  மார்க் டிசௌஸாவும் அவர் மனைவியும்.
 



2)  BSNL நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற ஷ்யாம் பிஹாரி பிரசாத் என்ன செய்தார்?
 





3)  முகநுால் மூலம் மக்களை ஒருங்கிணைத்து, புதுத்தாங்கல் ஏரியை சுத்தப்படுத்தி வரும், 'தாம்பரம் மக்கள் குழு' ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்.
 


4)  சபாஷ்.... சபாஷ்... இப்படி ஒவ்வொரு பஞ்சாயத்தும் முடிவு செய்தால் நலம்.  மதுரை எல்லீஸ் நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள்.
 


5)  இந்த வாரமும் ஒரு நடிகர் பாஸிட்டிவ்...  மலையாள நடிகர் திலீப்.
 


6)  நகைக்கு ஆசைப்படாத அமுதா.  
 


7)  நாலுகால்களை காக்கும் கீதாராணி.
 



8)  "....இக்கட்டான சூழலில் இருந்த செரினாவுக்கு, லாவகமான பிரசவ வழிமுறைகளை அரவாணிகள் மேற்கொண்டனர். இதையடுத்து, 7:40 மணிக்கு, செரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது....."
 


9)  பணம் நோக்கமல்ல. சேவையே முக்கியம்.  ராஜமாணிக்கம்.
 


10)  சுஜித் கட்டணம் கட்ட பணம் இல்லாமல், படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்வில் கொண்டு வந்த மாற்றம்.
 


11)  ஆசிரியை கிருஷ்ணவேணி.


வெள்ளி, 22 ஜூலை, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160722 :: க பா லி !

                 
இதில்  நித்தியைப் பார்க்க நேரிடலாம். ஆனால் அவரை ஓரம் ஓதுக்கிவிட்டு, மீதியைப்  பாருங்கள்.
                             


இந்த வீடியோவுக்கும், கபாலிக்கும்,  என்ன  சம்பந்தம் என்று கேட்காதீர்கள்.

இங்கே  க = கண்ணால், பா = பார்க்காமல்  லி = லிட்டரலாக படிக்கும்  பெண்.

க பொ போ?
(கல்லு பொறுக்கியெடுத்தடிக்கப்   போறீங்களா?  )

க  க  கா  கா !

கபாலீ (ஸ்வரா ),  க (ற்பகாம்பா )  கா(ப்பாற்று),  கா(ப்பாற்று) !
                             

வியாழன், 21 ஜூலை, 2016

வியாழன் விடைகள் 160721


முதல் கேள்விக்கு முதல் (சரியான ) விடை அளித்தவர் பால கணேஷ். 

                                       

இரண்டாவது கேள்விக்கு சரியான பதிலை, முதலாக அளித்தவர்: 




  
மூன்றாவது கேள்விக்கு, சரியான பதிலை இரண்டு முறை அளித்தவர் : 

மோஹன் . இவர் மே 2011 முதல் பதிவுலகில் இருக்கின்றார். வேறு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரே அனுப்பி வைத்தால், அதை மற்றவர்களுக்கும் பகிர்கிறோம். 

வித்தியாசமாக யோசித்தவர்கள் பட்டியலில் முதலில் வருபவர் மாதவன். வாழ்த்துகள்! 

நிறையக் கருத்துகளை அள்ளி வீசிய கீதா சாம்பசிவம் மேடத்திற்கு நன்றி. 

புரியாத, புதிர்க் கருத்து இட்டவர் அனுராதா பிரேம். 

நிறைய முயற்சிகள் எடுத்திருப்பவர் வல்லிசிம்ஹன் .

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வர முயன்றவர், பெ சொ வி. பழைய புதன் புதிர்களைப் பார்த்திருந்தால், இவர் மூன்றாவது கேள்விக்கு மிகச்சரியான பதிலை அளித்திருப்பார். அவர் சொன்ன forged என்ற பதில் கன்வின்சிங் பதில்தான். 

Our explanation is Engineer and Doctor are professionals and have meaning without addition of 'ed' ( D க்கு முன்னாடி E ) to them. Forged is not so. There is no word 'Forg' in dictionary. 

Madhavan's comment, Mastered & Bachelored are worth a mention here. While I am typing this, the blogger window shows that bachelored is non existent. Master and bachelor are not professions.   (Madhavan is getting ready to contest this view!) 

துளசிதரன் தில்லையகத்து, ஏஞ்சலின், கணக்கு தணிக்கை எல்லோருடைய முயற்சிக்கும் வாழ்த்துகள். Tampered, Fortified, Falsified etc .. are good guesses. But if you delete 'ed' from these words, either they are meaningless or not referring to a profession . 
Lawyered word is not available in web dictionary. 

எப்பவும் வந்து பிரசண்ட் சார் சொல்லிப்போகும் கில்லர்ஜி, வலிப்போக்கன் இருவருக்கும் நன்றி.  

புதிர்ப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றி. 

மீண்டும் அடுத்த வாரம் (மாதவனுக்குப் பிடித்த வகையில் 2/3 others - 1/3 cinema) கேள்விகளுடன் வருகின்றேன். 
      
நான் 'ஜிங்'னு போயிட்டு, ஜா ஆ   ஆ   ஆ ஆ   ஆ ஆ ங் னு வரேன்! பை. 
               

புதன், 20 ஜூலை, 2016

புதன் புதிர். 160720 :: படம், பெயர், என்ன வார்த்தை?



ஒன்று :  

தமிழ்ப் படம். சுமார் எழுநூற்றுப் பதினொரு  மாதங்களுக்கு  முன்பு வந்த சூப்பர் ஹிட் படம். 
ந . தி. கள் நடித்தது  ஆறெழுத்துப் படம். எது?   


இரண்டு :  

இங்கே  உள்ள  படங்களைப் பாருங்கள். இந்தப்  படங்கள்  மூலம், ஒரு தமிழ்ப் படத்தின்  (மூன்று  வார்த்தைகள் கொண்ட தமிழ்ப் படம்) பெயரைக்  குறிப்பிட்டிருக்கிறோம். படத்தின் பெயர் என்ன? 


     


மூன்று:  

கோடிட்ட இடத்தில் இருக்கவேண்டிய ஆங்கில வார்த்தை எது?  

-------------------------- ,   ENGINEERED, DOCTORED.  

செவ்வாய், 19 ஜூலை, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அரசன் தந்த பரிசு




          எங்கள் பிளாக்கின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியை அலங்கரிப்பது பிரபல பதிவர் மின்னல்வரிகள் கணேஷ் (பாலா)
          அவரின் தளம் மின்னல் வரிகள்.

          கணேஷ் பதிவுலகில் எந்த அளவு பிரபலம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  பதிவுலகில் "வாத்தியார்" என்று அன்புடன் அழைக்கப்பட்டு நிறைய சிஷ்யர்களை பெற்றிருப்பவர் பாலகணேஷ்.  இனிய நண்பர்.  நகைச்சுவை மன்னர்.  இவரின் சிரிதாயணம்... மன்னிக்கவும் சரிதாயணம் புத்தகம் ஒரு நகைச்சுவை விருந்து.  எம் ஜி ஆர் ரசிகர்.  திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, அந்தக் கால, இந்தக் கால இலக்கியம், கதைகள், கட்டுரைகள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.  நிறைய எழுத்தாளர்களுக்கும், பிரபலங்களுக்கும் நண்பர்.  இவர் எங்களுக்கும் நண்பர் என்பதில் எங்களுக்கும் பெருமை.

          இவரிடம் முன்னரே ஒருமுறை பத்திரிகையில் வெளியான கதை கேட்டிருந்தேன்.  அவர் கவனிக்கவில்லை என்பதை அவர் மடல் காட்டுகிறது.  இப்போது வந்திருக்கும் இந்தக் கதையை வெளியிடுவதில் ஸந்தோஷம் கொள்கிறோம்.
அவரின் முன்னுரை கீழே...  தொடர்ந்து அவர் படைப்பு.


=====================================================================


     "2011ம் ஆண்டு ஒரு அழகிய மாலையில் திரைக்கதை மன்னர் மதிப்பிற்குரிய திரு.கே.பாக்யராஜ் அவர்களை அவரது அலுவலகத்தில் நானும் வேணு அண்ணாவும் (சேட்டைக்காரன்) சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம். பலப்பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் வேணு அண்ணா அவர் ஒரு ஆலயக் கல்வெட்டில் கண்ட செய்தி ஒன்றைப் பற்றிக் கூறினார். உடனே பாக்யா ஸார், “‘அந்த ராஜா எப்டி இதுக்கு ஒத்துகிட்டான்? எப்டி ஒத்துக்க வெச்சாங்க? இத ஒரு கதையா எழுதினா நல்லாருக்கும்” என்றார். சற்றும் யோசியாமல் மு.கொ.தனமாக, “நான் எழுதிட்டு வரேன் சார்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். நம்ம மூளை வழக்கம்போல கிராஸ்ல யோசிக்க, ‘மன்னனை ஏன் மத்தவங்க ஒத்துக்க வெச்சிருக்கணும்..? சர்வ அதிகாரம் படைச்ச மன்னனே ஏன் இத மத்தவங்கள ஒத்துக்க வெச்சிருக்கக் கூடாது?’ அப்டின்னு தோணுச்சு. உடனே சிறுகதையா எழுதி அவர்ட்ட கொண்டுபோய்த் தந்தேன். “பாத்துட்டு சொல்றேங்க.” என்றார் குறுஞ்சிரிப்புடன். அதன்பின் வந்த ஐந்தாறு நாட்களும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பின் போதும் அவர் கருத்துக் கூறுவார் என்று அவர் பெயரை எதிர்பார்த்து ஏமாந்தேன். ஏழாம் நாள் வந்த பாக்யாவில் சற்றும் எதிர்பாராத விதமாக கதை பிரசுரமாகியிருந்தது. அவர் வாய்விட்டுக் கூறாமலேயே அவரின் விமர்சனம் புரிந்தது. பின்னர் சந்திக்கையில் ‘நான் வேற மாதிரி கொண்டு போலாம்னு யோசிச்சிருந்தேன். நீங்க யோசிச்சதும் நல்லா இருக்கு” என்றார் சுருக்கமாக. (அவர் என்ன யோசித்திருந்தார் என்பதை மட்டும் சொல்லவே இல்லை எத்தனை கேட்டும்.) எங்கள் (ப்ளாகில்) இடத்தில் இதைப் படிக்கும் உங்கள் விமர்சனங்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் மனதில் மீண்டும் பூத்திருக்கிறது..."


======================================================================

அரசன் தந்த பரிசு 
 
 

பால கணேஷ் 
 
 

 



மேலைமங்கலம் முழுவதும் ஒரே விஷயத்தைத்தான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. சற்றுமுன்  பறையறிவித்துச் சொல்லப்பட்ட செய்திதான் அது.

“நம் மன்னர் பெரிதாய் ஒரு சிவன் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் அவரவரால் முடிந்த  பணத்தைக் கொடுக்கலாமென்றும், பேரமைச்சரிடம் ஒரு பணம் கொடுத்தாலுங்கூட அவர்களின் பெயர் கோயில் திருப்பணிக் கல்வெட்டில் பொறிக்கப்படுமென்றும் சொல்கிறார்களே... என்ன ஆச்சரியம்..! அரசாங்க கஜானாவில் இல்லாத பணமா ?” என்றான் ஒருவன்.

“அப்படியல்லடா. ஒரு நல்ல காரியத்தில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார். அவர் நினைத்தால் ஒரு புதிய வரியை விதித்து. அதில் வரும் பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மிக எளிதாயிற்றே...? எதற்கு இப்படிப் பறையறிவிக்க வேண்டும்?” என்றான் மற்றவன்.

“நீ சொல்வதுதான்  சரியென்று தோன்றுகிறது. இன்றே என்னால் முடிந்த பணத்தை நான் பேரமைச்சரிடம் கொடுக்கப் போகிறேன்” என்றான் இன்னொருவன். பேசியபடியே அவர்கள் நகர்ந்தார்கள்.

“ஏனடி, உன் புத்தி கெட்டு விட்டதா என்ன..? நாமெல்லாம் பணம் கொடுத்து, அதை பேரமைச்சர் ஏற்றுக் கொள்வதா? நடக்கும் விஷயமாகப் பேசடி...” என்றாள் மோகனவல்லி.

“ஏனம்மா... தேவதாசிகள் என்றால் கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுக்கக் கூடாதென்று எதுவும் சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்ன உரிமை இருக்கிறதோ, அது எனக்கும் உண்டுதானே? நிச்சயமாக நான் கோயில் திருப்பணிக்காக ஆயிரம் பொன்னைப் பேரமைச்சரிடம் கொடுக்கத்தான் போகிறேன்.”

“வேண்டாமடி. இதனால் வீண் பிரச்னைகள்தான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.  அனாவசியமாக வம்பை விலை கொடுத்து வாங்காதே...” மோகனவல்லியின் குரலில் பதற்றம் இருந்தது.

“எந்த வம்பும் இல்லையம்மா... என்னுடைய காலத்துக்குப் பின்பும் என் பெயர் சொல்லுமளவு ஏதேனும் ஒரு விஷயம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை நான் இழந்துவிட விரும்பவில்லை. நாளையே நான் பேரமைச்சரைப் பார்க்கத்தான் போகிறேன்...”  என்றாள் அபரஞ்சி திடமான குரலில்.

பேரமைச்சர் அம்பலவாணரின் முகம் செக்கர்வானமெனச் சிவந்திருந்தது. “விளையாடுகிறாயா அபரஞ்சி? நமது மன்னர் ரணதீரர் எழுப்பும் இந்த ஆலயம் காலம் உள்ளளவும் நிலைத்து நின்று அவரது நல்லாட்சியைப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக எழுப்பப் போகிறார். இப்படியான ஒரு பெரும் பணியில் தம் பெயர் மட்டுமல்லாது, குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். அதற்காக...?  உன்னிடமிருந்து நான் ஆயிரம் பொன் என்ன... பத்தாயிரம் பொன் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாது.”

“ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது பேரமைச்சரே... குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று மன்னர் விரும்பினார் என்றால் நானும் குடிமக்களில் ஒருத்தியல்லவா? நான் கொடுத்தால் என்ன?”

“ஆலயச் சுவர்களில் ஒரு விவசாயி கொடுத்தது இவ்வளவு பணம், ஒரு வியாபாரி கொடுத்தது இவ்வளவு பணம் என்று பொறிக்கும் போது, தேவதாசி கொடுத்தது இவ்வளவு பணம் என்றா உன் பெயரைப் பொறிக்க முடியும்? வருங்கால சந்ததியினர் இதைப் படித்தால் எள்ளி நகையாட மாட்டார்களா? ஒரு நற்பணிக்குக் களங்கம் கற்பித்தது போல் ஆகிவிடுமே... இந்த எண்ணத்தைத் துறந்து நீ இங்கிருந்து போய்விடு...” என்றார் அம்பலவாணர் கண்டிப்பான குரலில்.

தாசி அபரஞ்சியிடம் இன்னும் பலவிதமாக அவர் எடுத்துக் கூறியும், அவள் ஏற்க மறுத்துவிடவே, சினமடைந்த அவர் அவளை வெளியே தள்ளும்படி வீரர்களை அழைத்து உத்தரவிட்டார். சினத்தின் உச்சிக்குப் போன அபரஞ்சி கூச்சலிட்டாள். “பேரமைச்சரே... என்னை அவமதித்து விட்டீர். நான் இப்போதே மன்னரிடமே சென்று திருச்சபையில் (நீதிமன்றத்தில்) நீதி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றபடியே சென்றாள்.

திருச்சபையில் பேரமைதி நிலவியது. மன்னன் ரணதீரன், சலனமில்லாத முகத்தோடு அபரஞ்சியை ஏறிட்டான். “உன் வழக்கைச் சொல்லம்மா...”
“மன்னா... காலமெல்லாம் தங்கள் பெயர் சொல்லும் வண்ணம் நீங்கள் கட்டும் ஆலயத்தில் என் பெயரும் இடம்பெற வேண்டுமென்று நான் மிகவிரும்பி ஆலயத் திருப்பணிக்காக பேரமைச்சரிடம் ஆயிரம் பொன் கொடுத்தேன். அவர் ஏற்க மறுத்து, என்னையும் அவமதித்து விட்டார்....” என்றாள் அபரஞ்சி.

அவையில் பெரும் சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேச முற்பட்டதால் எழுந்த அந்த சலசலப்பை மன்னரின் ஒரு கையசைப்பு அமைதிப்படுத்தியது. 

“அம்பலவாணரே... ஏன் அபரஞ்சி கொடுத்ததை ஏற்க மறுத்தீர்கள்?” என முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு தவழ, வினவினான் மன்னன்.

“எப்படி மன்னவா ஏற்க முடியும்? இவள் தாசிக் குலத்தில் பிறந்தவள். நாட்டில் பல ஆண்களின் மோகத்தீயை அணைத்தவள் அல்லவா?” என்றார் அம்பலவாணர்.

“உம்மையும் சேர்த்துத்தானே..?” என்று மன்னன் இடக்காகக் கூறவும், பேரமைச்சர் குரல் எழும்பாமல் திகைத்துப் போய் அமைதியானார்.

“மன்னர் இவ்வாறு பேசுவது தகாது. ஆலயத்தின் சுவரில் ஒரு தேவதாசியின் பெயரை எவ்விதம் பொறிக்க இயலும்? பின்னாளில் வரலாறு நம்மை இகழாதா? பேரமைச்சர் நடந்து கொண்டதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார் அரசவைப் புலவர்.

“புலவரே... உயர்ந்தவர் - தாழ்ந்தவர், பணக்காரர் - ஏழை, குலமகள் - தேவதாசி என்ற பாகுபாடெல்லாம் உம்மையும் அமைச்சரையும் போன்றோருக்குத்தான். அரசனாகிய எனக்கு என் குடிமக்களில் ஒவ்வொருவரும் சரிசமமே. புரிகிறதா...? தேவதாசியென்றால் அவ்வளவு கேவலமா என்ன? நீரும் நானும் வணங்கும் சிவபெருமானே, தன் அடியவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையார் என்ற தேவதாசியின் வீட்டுக்கு நடையாய் நடந்தாரே... தன் அடியவருக்கு அவளைத் திருமணம் செய்விக்கும் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த சிவபெருமானைக் கேவலமாய்ச் சொல்வீரா? இறைவனையே கணவனாக வரித்து ஆலயத்தில் நடனமாடி இறைவனுக்குப் பணி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்ட தேவதாசிக் குலத்தை எம்மைப் போன்ற அரசர்களும், உம்மைப் போன்ற அரசவை உறுப்பினர்களுமாகச் சேர்ந்தல்லவா இப்படி மாற்றினோம்? அவர்கள் செய்வது பாவம் எனில் செய்யத் தூண்டிய பாவிகள் நாமல்லவோ..? அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்றால் அதில் நமக்கும் பங்கு உண்டில்லையா?”

மன்னன் ரணதீரனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் அரசவைப் புலவர். பேரமைச்சர் அம்பலவாணர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பேசினார். “மன்னவா... நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது. நியாயங்களை உணர முடிகிறது. என்றாலும்... சற்று யோசியுங்கள்... ஆலயத்தின் கல்வெட்டில் தேவதாசி என்றா பொறிப்பது? பின்னர் வரும் சந்ததியினருக்கு அது கேலியாகி விடுமே... என்னவென்று இவள் பெயரைப் போடுவது என்பதுதானே பிரச்சினை? அதனால்தான் இவள் தந்த ஆயிரம் பொன்னை ஏற்க மறுத்தேன். நீங்கள் இவளை ஆதரித்துப் பேசுவதனால் இதற்கொரு முடிவை நீங்களே சொல்லி விடுங்கள். நாங்கள் மனமொப்பி ஏற்றுக் கொள்கிறோம்...” என்றார்.

மன்னன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். புருவங்கள் முடிச்சிட கண்களை மூடி சில நிமிடம் யோசித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் நிமிர்ந்தான். “சரி பேரமைச்சரே... தேவதாசியென்று பெயர் பொறித்தால்தானே கேவலம்? இன்னாருடைய அன்னை என்று பெயர் பொறித்தால் தவறில்லையே... இந்த அபரஞ்சியை இந்த நிமிடம் முதல் என் வளர்ப்புத்தாயாக ஏற்றுக் கொள்கிறேன். ஆடற்கலையில் வல்லவனாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆடல் மண்டபம் எழுப்பி, அதில் மன்னன் ரணதீரனின் வளர்ப்புத்தாய் அபரஞ்சியின் உபயம் என்று பெயர் பொறிக்கச் சொல்லுங்கள்...” என்றான் சிம்மாசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்து நின்று. 

அவை ஸ்தம்பித்தது. அபரஞ்சி கண்ணீர் மல்கியவளாய் அரசரின் காலில் விழப்போனாள். “என்னம்மா இது? நானல்லவா தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தாயே, இனி பேரமைச்சரிடம் நீங்கள் ஆயிரம் பொன்னைத் தரலாம். மனமகிழ்வுடன் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். உங்கள் பெயரும் காலம் உள்ளளவும், இந்த ஆலயம் உள்ளளவும் நிலைக்கும். போய் வாருங்கள்...” என்றான்.

அவையினர் அனைவரும் சுய உணர்வு பெற்றவர்களாய், “மன்னர் ரணதீரர் வாழ்க” என்று மன்னனை வாழ்த்தி உரத்துக் குரல் எழுப்பினர். மகிழ்ச்சியின் அலைகள் அரசனின் அந்த திருச்சபையை நிறைத்தது.

திங்கள், 18 ஜூலை, 2016

திங்கக்கிழமை 160718 :: ஓட்ஸ் அடை.




          எங்கள் அலுவலகத் தோழி ஹேமா புதுசு புதுசாக நிறைய ரெசிப்பிக்கள் முயற்சி செய்வார்.  எல்லாம் ஆரோக்கிய சமையல்!  இரண்டு நாட்களுக்கு முன் ஓட்ஸ் அடை செய்தேன் என்று கூறி, வழிமுறைகளையும் சொன்னார்.  

          நானும் இந்த சனி, ஞாயிறில் செய்து விடலாம் என்று பார்த்தால் நேரம் அமையவில்லை.  அதற்குள் அவரே கொஞ்சம் அரைத்த மாவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார்.  இதை அடை என்று சொல்வதை விட ("ஆமாம், இதை ஏன் அடை என்று சொல்கிறீர்கள், ஹேமா?")  தோசை என்றே சொல்லலாம்.  என்ன பெயரிட்டு அழைத்தாலும் சுவை நன்றாக இருந்தது.  

படத்தில் உள்ள இரண்டு பொருட்களில் எது ஓட்ஸ், எது அவல் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?!!



          ஒரு கப் அவலுக்கு முக்கால் கப் ஓட்ஸ், கால் கப் அரிசி, இரண்டு டேபிள் ஸ்பூன் ரவை எடுத்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.  அரிசிக்கு பதிலாக இரண்டு கரண்டி அரிசி மாவு அல்லது தோசை மாவு கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.

          4 சின்ன வெங்காயம், (அல்லது ஒரு பெரிய வெங்காயம்) 3 பல பூண்டு, ஓரிரு ஈர்க்கு கறிவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சம் சோம்பு, பட்டை மிளகாய் (தேவையான அளவு) ஆகியவற்றுடன் முதலில் மிக்சியிலிட்டு அரைத்துக்கொண்டு, அதனுடன் ஊற வைத்திருக்கும் ஓட்ஸ், அவலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.




          தோசையாக அல்லது அடையாக வார்த்து எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்.




          தக்காளி சட்னி இதற்கு நல்ல பொருத்தமாய் இருக்கும் என்றாலும், இதற்கும் தொட்டுக்க கொள்ள எதுவும் தேவை இல்லை என்றே தோன்றியது எனக்கு.  எங்கள் வீட்டில் நேற்று காலை டிபனாக வெந்தய தோசை செய்து, அதற்கு தேங்காய் சட்னி அரைத்திருந்ததால், அதைத் தொட்டுக்க கொண்டே சாப்பிட்டோம்.