வியாழன், 19 ஜனவரி, 2017

அடுத்த ஒரு வருடத்தில்... ஜனவரி எதிர்பார்ப்புகள் 3 :: சக பதிவர்களின் கருத்துகள்



 "ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?"


     இந்த எங்களின் கேள்விக்கு வலையுலக பதிவர் நண்பர்கள் பதிலளித்து வருகிறார்கள்.  அந்தத் தொடரில் இன்று மூன்று மூத்த பதிவர்கள் கருத்துகள் இடம் பெறுகின்றன.

     எங்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்.




==================================================================
 
 
 



//ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?//
 

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் எதிலுமே நிபுணத்துவம் இல்லாத நான் எப்படி கணிக்க முடியும்?  இருந்தாலும் முயற்சிக்கிறேன். 
 

ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் வளர்ச்சி அல்லது மாற்றத்தை உணர ஒரு வருடம் என்பது மிக மிக குறைந்த கால அளவு. எனவே கலை, இலக்கியம் இவற்றில் பிரமாதமான குறிப்பிடத்தக்க மாறுதல் இருக்காது என்றே கருதுகிறேன். வலை உலகம் இன்னும் கொஞ்சம் விரிவடையும்.
 

விஞ்ஞானம் என்பது மிகவும் பரந்து விரிந்த ஒரு துறை. அதிலும் ஒரு வருடத்திற்குள் பெரிய மாற்றங்கள் வந்து விடும் என்று கூற முடியாது. தகவல் தொழில் நுட்பம் இன்னும் விரிவடையலாம். இதில் என்னுடைய விருப்பம், மருத்துவ செலவுகள் குறைய வேண்டும். 
 

பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், நம் நாட்டை பொறுத்த வரை இப்போது இருப்பதை விட அதிகமானவர்கள் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் இவைகளை பயன் படுத்த ஆரம்பிப்பார்கள். 
 

பள்ளி, கல்லூரி கட்டணங்கள் குறையலாம், குறைய வேண்டும் என்பது ஆசை. உலக அளவில் பெட்ரோல் விலை அதிகமாகலாம். தங்கம் விலை சரியவும், ஷேர் மார்க்கெட் உயரவும் வாய்ப்பு உள்ளது. 
 

தமிழக அரசியலில் இரட்டை இலை கருகி விடும் என்றே கருதுகிறேன். தாமரை மலருமா என்பது கேள்விக்குறிதான். என்னதான் மற்ற கட்சிகள் மல்லு கட்டினாலும், சூரியனார்தான்  எழும்புவார்  என்று தோன்றுகிறது. மோடியின் செல்வாக்கு குறையாது.
 

மற்றபடி பொதுவாக கேட்டால்  என்னுடைய விருப்பம் நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப் பட வேண்டும்.  மணல் கொள்ளை அறவே ஒழிக்கப்பட வேண்டும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலான வேஸ்ட் மேனேஜ்மேண்ட் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். பெரிய குடியிருப்புகள் அங்கு சேரும் மக்கும் குப்பைகளை அந்தந்த வளாகத்துக்கு உள்ளேயே தனியாக எருக்குழி அமைத்து பிரித்தெடுக்க நிர்பந்திக்கப்  பட வேண்டும். ஸ்வச் பாரத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
 

மற்றபடி மக்கள் வழக்கம் போல் நடிகர் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வார்கள், சாமியார்களின் கஜானாவை நிரப்புவார்கள், கந்து வட்டிக்கு கடன் வாங்குவார்கள். தொலை காட்சியில் சீரியல்கள் பார்ப்பார்கள். ஆடம்பரமாக திருமணம் செய்வார்கள், விவாகரத்துகள் அதிகரிக்கலாம். 
 

புத்தாண்டின் துவக்கத்தில் பாசிட்டிவாக யோசிக்க வைத்ததற்கு நன்றி!



=================================================================


காமாட்சி மஹாலிங்கம்   ::
 
 
 
 



2018 எப்படி இருக்க வேண்டும்? அல்லது இருக்கும்.


ஸமீபத்தில் நமக்கு ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட சோதனை மறக்க முடியாதது.


வயதான பெண்கள் கூட அம்மா என்று விளிக்கும் அளவிற்கு பிராபல்யம் பெற்ற ஒரு தலைவியை இழக்க நேரிட்டது எதிர் பாராதது. திரும்ப வருவார் என்ற தோற்றத்தை உள்ளடக்கிய செய்திகள், திடீர் மறைவு என மக்களை உலுக்கிப் போட்டிய சோகம் வேறென்ன வேண்டும்?


அடுத்து வரும் தலைவியோ, அல்லது தலைவரோ, நம்பிக்கைக்கு உள்ளவராக, தயவு மனப்பான்மை உள்ளவராக, எதிர்க் கட்சியின் உறுப்பினர்களின் நல்ல ஆலோசனைகளை செவி மடுப்பவராக, யாவரையும் மதித்து நடத்துபவராக, வன்மம், சூது, லஞ்சம்,லாவண்யம், அற்றவராக இருக்க வேண்டும். எதிராளியின் மன உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பவராக, இருக்க வேண்டும்.


முதலில் மதுவரக்கனை ஒழிக்கக் மக்கள் மனதிற்கிணங்க கடின முயற்சியுடன், செயல்படுபவராக இருந்து பெண்களின் குடும்பங்களை உருப்படச் செய்ய வேண்டும். பெண்கள் முன்னேற, அரசியலிலும் நல்ல இடங்களைப் பிடித்து,நாட்டிற்கு நன்மைசெய்ய ஆதரவு பெறுக வேண்டும். பல இரும்புப் பெண்மணிகள் உதயமாக வேண்டும்.


லாப நோக்கில் மதுவரக்கனை இறுக்கிப் பிடிக்காமல், ஓடஓட விரட்ட வழி செய்ய வேண்டும்.


கஷ்டங்கள் ஒழிந்து ஏழைபாழைகளும் ஓரளவிற்குப் பிரச்சினை இல்லாமல் காலந்தள்ள, ஸாமான்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.


மேலை நாட்டிற்கு நிகரான கல்வியைநம் நாடே வழங்கி இளைஞர்கள், நாட்டை விட்டு அயல் நாட்டிற்குப் போகாத அளவிற்கு தடுக்க வழி செய்து பெற்றவர்களுக்கு ஆதரவு அளிக்க முயற்சி செய்ய அடி கோலவேண்டும்.


கல்வி,சுகாதாரம்,மருத்துவ வசதி,யாவற்றிலும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு ஏழை எளியவர்களுக்கும் கிடைக்கும் வழியில் ஏற்பாடுகள் செய்ய அடி கோல வேண்டும். பொது மக்கள் திருப்தி அடைய வேண்டும்.


உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப் பட்டாலும் நாம் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை என்றும் அறிகிறோம்.


நம் நாட்டில் முதலீடு செய்ய அதிகம்பேர் முன் வருகிரார்கள். தமிழ் நாட்டிலும் இவைகளைப் பயன் படுத்தி, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க வேண்டும்.


நம் நாடு மனித வளம் நிரம்பியது. தொழிலில் முன்னேற்றம் காண்பது எளிது.


பொதுவாக நம்நாட்டில், அரசியலும்,நீதி நிர்வாகமும் ஸரியான முறையில் பேணப்படுவதாகவே பொதுவான அபிப்ராயம் உள்ளது.


தொழில் வளத்தைப் பெருக்கி, ஏழ்மையை ஒழித்து முன்னுக்கு வர திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.


குறுகிய காலத்தில் முடியாவிட்டாலும், மக்கள் மனதில் ஓரளவு திட்டங்களைப் பரப்பி உற்சாகமூட்ட வேண்டும்.

நதி நீர்ப் பங்கீட்டை ஸுமுகமாகத் தீர்த்து பசுமை விளங்க வழி செய்தால் ஓரளவு கஷ்டங்கள் தீரும்.


நதிகளின் இணைப்பைக் கொண்டு வர பாடுபட வேண்டும். உற்பத்தித் திறன் பெருகி ஸுய தேவை பூர்த்தியாகும்.


வாயளவில் இல்லாமல் செயலிலிறங்கினால் முடியாதது எதுவுமில்லை.


ஆய கலைகள் அறுபத்து நான்கினுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும். நாடு சிறக்க தமிழகம் சிறக்க ஆவன செய்வதவசியம்.


விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. தேவையும் முன்னேறுகிறது. புரிந்து கொள்வதே கஷ்டமாகத் தோன்றும் போலுள்ளது.


இலக்கியம் தமிழிற்கு மதிப்பளித்து நல்ல படைப்புகள் வெளிவர வேண்டும். ஏற்கெனவே உள்ள அறிய படைப்புகள் பாதுகாத்து உலகமறியச் செய்ய வேண்டும்.


வலைப்பூக்களுக்கு ஆதரவு அளித்து மாலைகளாகவும்,வாஸனைப் பூக்களாகவும்,மனங்கவர் மணமுள்ள மலர்களாகவும் வாசம் பரப்ப வேண்டும்.


பொதுவாகச் சொல்லப் போனால் எதிர் பார்ப்புகள்தான் அதிகம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தனிப்பட்ட ஸௌகரியங்கள் செய்து கொடுக்க வேண்டும். அரசு இதை ஒரு சட்டமாக இயற்றி வயதானவர்களைப் பேணிக்காக்க வழி செய்வதவசியம்.


என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!  பதவிப்போட்டியும்,ஒருவரை ஒருவர் கவிழ்க்கும் எண்ணமும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்ற எண்ம்ம்தான் மேலோங்குகிறது.


உடலை வளைத்துக் குறுக்கிக் கூழைக் கும்பிடு போடுவதை நிறுத்தி கண்யமாக மரியாதை கொடுக்கப் பழகப் பழகுவார்களா, பழக்கப் படுத்தலாமா என்று தோன்றுகிறது. நடக்குமா?


ஒரு வயது முதிர்ந்த பெண்மணியாக இவையெல்லாம் அடுத்தடுத்துத் தோன்றுகிறதே தவிர பாகு படுத்தியோ, இவை எல்லாம் செய்வார்கள் என்றோ எழுதத் தோன்றவில்லை.


பதவியைத் தக்க வைத்து நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு சற்று வீறு நடைபோடும்.


ஏற்கெனவே நடைமுறையிலுள்ள நல்ல காரியங்கள் தொடரும். வரவு என்ற கணக்கில் வைத்து மதுவரக்கனை விரட்டப் பின் தங்குவார்கள். சற்று முற்போக்காகவே நடந்து மக்களின் நல்லெண்ணத்தைப்பெற அம்மாவின் பெயரைச் சொல்லி முயற்சிப்பார்கள் என்ற நல்ல எண்ணத்துடன் நம்பிக்கையாக இக்கட்டுரையை முடிவுசெய்என்று என் உள் மனம் சொல்கிறது.


யாவரும் அப்படியே ஆகுக என்று அம்மாவை நினைத்துச் சொல்லுங்கள்.


அன்புடன்
காமாட்சி மஹாலிங்கம்.




===============================================================
G M பாலசுப்ரமணியம்   ::
 
 
 
 


ஸ்ரீராமுக்காக

மாற்றங்கள்தான் மாறாதது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அதுவே வாழ்க்கையின் spice ம் கூட. அதுவும் தெரியாத வீஷயங்களில்  தலை கொடுக்கலாமா இருந்தாலும்  இந்த மனுஷனின் எண்ணங்களையும்  கேட்கலாமே என்று ஸ்ரீராம் நினைத்திருக்கிறார் கலை இலக்கியம் விஞ்ஞானம்  பொருளாதாரம் போன்ற வற்றில் எனக்கு அறிவு மிகவும் குறைவு


என் வாழ்க்கையில் நான் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறேன் ஆனாலும்  என்னை பாதிக்கும் சமாச்சாரங்கள் எல்லாமே  சமூகமும் மக்களின் அறியாமையும்தான் .  நீ மட்டும்தான் அறிவாளியா என்று பலரும்  கேட்கக் கூடும் எனக்குத் தெரிந்ததைத்தானே கூறமுடியும்?

சுதந்திரம் கிடைக்கும்  முன்பே பிறந்தவன் நான்  பல கால கட்டங்களையும்  சந்தித்திருக்கிறேன் . ரேடியோவையும்  கிராம போனையும் டெலிபோனையும்   ஆ வென்று பார்த்த காலமும்  உண்டு அன்றைக்கு இப்போதைய முன்னேற்றம் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது  தொழில் நுட்பங்கள் பெருகிவிட்டன தொலைத்தொடர்புகளும் நினைத்துப்பார்க்காதவை 

இப்படி எல்லாம் சொல்லப் போனால் ஒரு சாரார் பழங்கதைகளைப் பேசி ராமாயண காலத்திலேயே வானூர்தி இருந்தது  சோழர் காலத்திலேயே கட்டிடக் கலை அபரிமிதமாக வளர்ந்திருந்தது கணிதக் கலையின் முன்னோடிகள் நாம் என்றெல்லாம் பேசத்தொடங்கி விடுவார்கள் உடல் உறுப்பு மாற்றம் என்பது அந்தக் காலத்திலேயே இருந்தது விநாயகரே அம்மாதிரி உடல் உறுப்பு மாற்றம் செய்தவர்தான்  என்பார்கள்


இதையெல்லாம் சொல்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல இவர்களிடம் மாற்றம்  பற்றிப்பேச முடியாது


 எனக்குத் தெரிந்த மாற்றங்கள் எல்லாம் நம்முடைய சராசரி வயது உயர்ந்திருக்கிறது, மருத்துவக் கலை நினைத்துப்பார்க்க இயலாத அளவுக்கு முன்னேறி இருக்கிறது தொழில் நுட்பங்கள் வளர்ந்திருக்கிறது படிப்பறிவும் கூடி இருக்கிறது. சிசுமரணம் மிகவும் குறைந்திருக்கிறதுமுன்னைக்கு இப்போது மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் மலேரியா காலரா ப்ளேக் போன்ற வியாதிகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன.


 இவற்றை எல்லாம் விட மக்கள் சிந்திக்கத்துவங்கி விட்டார்கள் அவர்களை சாதி மதம் என்னும்  பெயரில் அடக்கி வைக்க முடியாது பொறுத்தது போதும் என்று பொங்குகிறவர்கள் நிறைந்து வருகிறார்கள்  உண்மையான மாற்றம் என்பது 2018க்குள் நிகழப்போவது அல்ல மாற்றங்கள் வரும் நாம் அறியாமலேயே  வரும்
ஆனால் இன்ன காலத்துக்குள் இன்னின்ன மாற்றங்கள் வரலாம்  என்று கூற நான் என்ன பஞ்சாங்கமா எழுதப் போகிறேன் 


இருந்தாலும்  பஞ்சாங்கம் பார்ப்பதும் ஒரு வசீகரமான விஷயம் தான்   நாளை நடப்பதை இன்றே அறிய மனம் விழைகிறது அதையே தொழிலாக்கி வயிறும்  வசதிகளும் வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்  
அரசியல் மாற்றங்கள் ஓரளவுக்கு கணிக்கக் கூடியவை இருந்தாலும்  காவிகளின் சக்தி ஓங்கி வருவது காணும்போது நாம் முன்னேறாமல் பின்னோக்கிச்செல்கிறோமா என்னும் சம்சயமும் எழுகிறது எது எப்படி இருந்தாலும் மக்க்கள் விழிக்கத் துவங்கி விட்டார்கள் நெல் எது உமி எது என்று அறியும் பக்குவம் வளர்கிறது


 இவனிடம் போய் எழுதக் கேட்டேனே என்று ஸ்ரீராம்  எண்ணாதவரை நல்லது/ இவன்  இப்படித்தான்  எழுதுவான் என்று பலரும் யூகித்திருக்கலாம்ஆனாலும்  ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்  விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்   அதை அறியாதவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை என் எண்ணங்கள்தானே எழுத்தாக முடியும்


=============================================================================

22 கருத்துகள்:

  1. ஜி.எம்.பி ஐயா கூறுவதுபோல் மக்கள் இன்று சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள்
    இனி மக்களை ஏமாற்றுவது கடினம்தான்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. நேர்மறை எண்ணங்கள் அனைத்தும் நடக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. முத்தான மூவரின் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் அவரவர்கள் பாணியில் வெளியிடப்பட்டுள்ளன. பகிர்வுக்கு நன்றிகள் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ !

    பதிலளிநீக்கு
  4. gmb அய்யாவின் ' இதையெல்லாம் சொல்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல இவர்களிடம் மாற்றம் பற்றிப்பேச முடியாது"என்கிற கருத்து முக்கியமானது ,இன்றைய ஜல்லிக் கட்டு பிரச்சினைக்கும் அவர்களே காரணம் :)

    பதிலளிநீக்கு
  5. பானுமதிம்மாவின் தமிழ்நாட்டரசியல் கணிப்பு பலித்திடாமல் இருக்க வேண்டும் ஹிஹீஹிஹி!! உலகாளும் சூரியன் வேண்டும் அவன் இல்லை என்றால் உலகமே இல்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு கறுப்பு சிவப்பு சூரியன் வேண்டாம். தாமரை நல்ல மலர் அழகு மலர் அது இறைவனுக்கு மட்டும் போதும்! தமிழ்நாட்டிற்கும் வேண்டாம்... இரட்டை இலை வைத்து ஒன்றும் செய்ய முடியாது...வேர் வேண்டுமே!! எனவே அதுவும் வேண்டாம்.வேறு ஏதேனும் நல்லது நடக்க வேண்டும். இது உட்டோப்பியன் உலகக் கனவு நடக்காது என்று தெரியும்!!

    காமாட்சியம்மாவின் எண்ணங்கள் அனைத்தும் நமதே!! பேராசைதான் இல்லையாமா ...எனக்கு அதில் மிகவும் பிடித்தது //வலைப்பூக்களுக்கு ஆதரவு அளித்து மாலைகளாகவும்,வாஸனைப் பூக்களாகவும்,மனங்கவர் மணமுள்ள மலர்களாகவும் வாசம் பரப்ப வேண்டும்.// நாமளும் அதுல இருக்கோம்ல அதான்....

    ஜிஎம்பி சார் எதிர்பார்த்ததே! இருந்தாலும் கொஞ்சம் அரசியல், மற்றும் பொருளாதாரம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன் பேசியிருக்கலாமோ சார்...யார் கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன இங்கு நமக்குள் மட்டும்தானே!....

    தொடரட்டும் கனவுகளும், கணிப்புகளும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எங்களின் எதிர்பார்ப்பும் அதுவே. நல்ல உத்தியைக் கையாண்டு பகிர்ந்தமைக்கு பாராட்டுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் ..வேஸ்ட் மேனேஜ்மண்ட் ,கல்வி கட்டணம் குறைதல் நீர்மேலாண்மை அனைத்தும் அருமையான ஆசைகள் .விருப்பங்கள்
    அரசியல்தான் திரிசங்கு சொர்க்கம் மாதிரி ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது .தங்களின் .விருப்பங்களும் ஆசைகளும் நிறைவேறட்டும்

    பதிலளிநீக்கு
  8. @காமாட்சி மகாலிங்கம் அம்மா வின் ஆசை எதிர்பார்ப்புக்கள் நியாயமானவையே அவ்வாறே நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ..நிச்சயம் மதுவாரக்கனை துரத்தி ஓடிஏ வைக்கணும் அதற்க்கு கட்சி பாரபச்சமின்றி அனைவரும் பாடுபடவேண்டும்

    பதிலளிநீக்கு
  9. @ G.M.B .ஐயா .சரியா சொன்னீங்க ..தற்சமயம் மனடக்கும் விஷயங்களை கவனித்தோமானால் ..மக்கள் இருட்டறையில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள் ..அவர்களை இனம் மதம் சாதி மற்ற இன்னபிற விஷயங்களை வைத்து பிரிப்பது கடினம் .ஒற்றுமையை குலைக்க சகுனிகளும் கூனிகளும் உருவாகிடாமல் கவனமாக இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  10. @காமாட்சி மகாலிங்கம் அம்மா வின் ஆசை எதிர்பார்ப்புக்கள் நியாயமானவையே அவ்வாறே நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ..நிச்சயம் மதுவரக்கனை துரத்தி ஓட வைக்கணும் அதற்க்கு பாரபட்ச்சமின்றி அனைவரும் பாடுபடவேண்டும்

    பதிலளிநீக்கு
  11. பதிவர்களின் கருத்துக்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. மூன்று அனுபவசாலிகளின் முத்தான கருத்துக்கள் அனைத்தும் அனுபவத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்குது, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. மூவருமே தம் எண்ணங்களுக்கு ஏற்பவே மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று நம்ப்வதாகத் தெரிகிறது.
    மாற்றமே! நல்லவை நடக்க வேண்டும் என்று விரும்புவர்கள் இவர்கள். அதனால் இவர்கள் நல்ல விருப்பங்கல் நிறைவேறுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்து!

    பதிலளிநீக்கு
  14. அறிஞர்களின் கருத்துகளை
    கருத்திற்கொள்வதே சிறப்பு

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம் பொசுக்கென்று மூத்த பதிவர் என்று சொல்லி விட்டீர்கள்? (கர்ர்ர்...) நான் இன்னும் சீனியர் சிட்டிசன் ஆகவில்லை.ஆகும் உத்தேசமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  16. Bhanumathy Venkateswaran said...

    //ஸ்ரீராம் பொசுக்கென்று மூத்த பதிவர் என்று சொல்லி விட்டீர்கள்? (கர்ர்ர்...) நான் இன்னும் சீனியர் சிட்டிசன் ஆகவில்லை.ஆகும் உத்தேசமும் இல்லை.//

    தாங்கள் சொல்வது மிகவும் கரெக்டூஊஊஊஊ. நானும் இதனை எனக்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்சம் வருந்தவும் செய்தேன்.

    இருப்பினும் மெச்சூரிடியான எழுத்துக்களில் இந்த மூவரில், தாங்களே மூத்த பதிவர் என்பதை நினைத்து நானே என்னை சமாதானமும் செய்துகொண்டேன். :)

    அதனால்தான் தங்களுக்கு நம் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ முதலிடம் கொடுத்து சிறப்பித்துள்ளார் போலிருக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  17. //ஸ்ரீராம் பொசுக்கென்று மூத்த பதிவர் என்று சொல்லி விட்டீர்கள்? (கர்ர்ர்...) நான் இன்னும் சீனியர் சிட்டிசன் ஆகவில்லை.ஆகும் உத்தேசமும் இல்லை.//


    //இருப்பினும் மெச்சூரிடியான எழுத்துக்களில்.. தாங்களே மூத்த பதிவர் என்பதை நினைத்து..//

    சரியாகச் சொன்னீர்கள், வை.கோ.சார். சகோதரி (மேடத்தைத் தவிர்த்து விட்டேன், பாருங்கள்) பானுமதி
    தங்கள் பாராட்டிற்கு முற்றிலும் தகுதியானவர்.







    பதிலளிநீக்கு
  18. நல்ல கருத்துகள்....

    நல்லதாகவே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  19. மூத்தோர் சொல் அமுதம்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. @ வை.கோ. சார் & ஜீ.வீ. சார் : oh! My God! தலை கிறுகிறுக்கிறது. பூமியில் காலை அழுந்த ஊன்றிக் கொள்கிறேன். பாராட்டுகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. Bhanumathy Venkateswaran said...
    @ வை.கோ. சார் & ஜீ.வீ. சார் : oh! My God! தலை கிறுகிறுக்கிறது.//

    ஏன் என்ன ஆச்சு? ஒருவேளை ஏதும் விசேஷமாக இருக்குமோ? :)

    //பூமியில் காலை அழுந்த ஊன்றிக் கொள்கிறேன்.//

    என்ன இப்படி சீனியர் சிடிசன் மாதிரி ’பூமியில் காலை அழுந்த ஊன்றிக் கொள்கிறேன்’ எனச் சொல்லி விட்டீர்கள். ஓஹோ .... ஒருவேளை இப்போதுதான் புதிதாக நடக்க ஆரம்பித்துத் தளிர்நடை போடும் குழந்தையாகவும் இருக்கலாமோ ! :) Then it is OK !

    //பாராட்டுகளுக்கு நன்றி!//

    //நான் இன்னும் சீனியர் சிட்டிசன் ஆகவில்லை.ஆகும் உத்தேசமும் இல்லை.// என்ற உங்கள் வரிகளிலேயே ’ஆகும் உத்தேசமும் இல்லை’ என்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஸித்தேன். சிரித்தேன். மகிழ்ந்தேன். அதனால்தான் என் கருத்தினையும் எழுதி பதிவு செய்தேன்.

    என்றும் இதேபோல இளமையான மனதுடன் வாழ்க ! வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!