Monday, February 13, 2017

"திங்க"க்கிழமை 170213 :: சுலப கொத்தமல்லி சாதம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


சுலப கொத்தமல்லி சாதம்

இங்க டிசம்பர் இறுதியிலிருந்து பிப்ரவரி வரை காய் வரத்து நிறைய இருக்கும். இங்கேயே விளைகிற கோஸ், காலிஃப்ளவர், பீட்’ரூட், கத்தரி, கீரைவகைகள் என்று ரொம்பப் புதிதாகக் கிடைக்கும். இந்தியாவிலேருந்தும் நிறைய காய்கறி வருடம் முழுக்க வந்தாலும், குளிர் காலத்தில் ரொம்ப ஃப்ரெஷாக இருக்கும். ரொம்ப வெயில் காலமான மே-செப்டம்பர் மாதங்களில் காய்கறிகள் வரத்து அவ்வளவாக இருக்காது. இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். அங்கிருந்து இள கிளிமூக்கு மாங்காய்கள் 5 வாங்கிவந்திருந்தேன். அதைவைத்து மாங்காய் சாதம் பண்ணவேண்டும் என்பதுதான் திட்டம். இதுக்கெல்லாம் எனக்கு வார விடுமுறை நாள்தான் சரிப்படும். சென்ற வெள்ளி அன்று, புதிதாகக் கிடைத்த கொத்தமல்லி கட்டுகள் வேறு வாங்கிவந்தேன். என் ஹஸ்பண்டு, கொத்தமல்லி சாதம் பண்ண சுலபமான செய்முறை சொன்னாள்.  மாங்காய் சாதம், கொத்தமல்லி சாதம் இரண்டையும் அன்று செய்துமுடித்தேன். 


இன்னைக்கு, சுலப கொத்தமல்லி சாதம் செய்முறை. சாதத்தை அளியாமல் வடித்தபின், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு ஆறவைக்கவும்.  சாதம் குழைந்துவிட்டால், கலவை சாதம் சரிப்படாது.


கொத்தமல்லி ஒரு கட்டைச் சுத்தம் செய்து, அதனுடன் 1 அல்லது 1 ½ பச்சை மிளகாய், 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல் வைத்து மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும். 


  
வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்தபின், அரைத்துவைத்த கொத்தமல்லி பேஸ்டைப் போட்டு, குறைந்த தணலில் வதக்கவும். பச்சை வாடை கொஞ்சம் போய், கிட்டத்தட்ட மருதாணி பதத்திற்கு கலவை வந்தபின் அடுப்பை அணைக்கவும்.
 
இதை அப்படியே சாதத்துல சேர்த்துத் தேவையான  உப்பையும் சேர்த்துக் கலக்கவேண்டியதுதான்.


 
இங்கு பச்சைப் பட்டாணி கிடைத்ததால், அதனைச் சிறிது உப்பு போட்டு வேகவைத்துக்கொண்டேன். அதையும் கொத்தமல்லி பேஸ்டோட போட்டு வதக்கிக்கொண்டேன். கொத்தமல்லி சாதத்துடன் உப்பு போட்ட வேர்க்கடலை கொஞ்சம் சேர்த்துக் கலக்கினேன். இது இரண்டும் அவசியம் கிடையாது.


 
பசங்க ஆர்வமா சாப்பிடணும்னா, 2 ஸ்பூன் கேரட் துருவலையும் வதக்கும்போது சேர்த்துக்கொண்டால், கொஞ்சம் பச்சை, அங்க அங்க ஆரஞ்சு நிறம் என்று கொத்தமல்லி சாதம் பார்க்கக் கவர்ச்சியா இருக்கும். நான் கேரட் சேர்க்கவில்லை. கொத்தமல்லி சாதம் ரொம்ப நல்லா இருந்தது. ரொம்பக் குறைந்த சமயத்தில் செய்துவிடலாம்.
இதுக்குத் தொட்டுக்கொள்ள எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் அன்றைக்கு உருளை கட் கரேமது செய்தேன். பொதுவாக, இந்த சாதத்திற்கு வெள்ளரிக்காய் சீவின தயிர்ப் பச்சடி நல்லா இருக்கும்.


விரைவில் மாங்காய் சாத செய்முறையோடு வருகிறேன்.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

41 comments:

Avargal Unmaigal said...

கொத்த மல்லி சாதத்திற்கு தொட்டு கொள்ள காரமான எலுமிச்சை ஊறுகாய் அல்லது லேஸ் சிப்ஸ் அருமையாக இருக்கும்

Avargal Unmaigal said...


இந்த மாதிரியான வெரைட்டி சாதம் செய்வது எங்காத்து மாமியின் வேலை காரணம் அவருக்கு ஈஸியாக செய்யும் உணவுவை மட்டும் அவர் செய்வார் ஹீஹீ

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடிக்கும்...

KILLERGEE Devakottai said...

நல்ல ஐயிட்டம்
//ஹஸ்பெண்டு சொன்னாள்// என்று வருகின்றதே ?

Geetha Sambasivam said...

இங்கே போணியாகாது! :) ஆனால் பச்சைமிளகாய், கொத்துமல்லி, உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துச் சட்னியாக வைச்சுப்பேன். :)

Avargal Unmaigal said...

இந்த முறை படங்களை மிக சிறந்த முறையில் வரிசைப்படுத்தி பதிவிட்ட முறை நன்றாக இருக்கிறது . முடிந்தால் அடுத்த தடவை பதிவிடும் போது வரிகளை அளைண்ட்மென்ட் align Justify பண்ணிபோடுங்கள் .

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பிடித்த உணவு
நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பிடித்த உணவு
நன்றி நண்பரே

middleclassmadhavi said...

Nice. Can be done without coconut also!!

Thulasidharan V Thillaiakathu said...

சேம் சேம்!!! என்ன புளி சேர்த்து அரைப்பதுண்டு. பருப்பு போடாமல் இப்படித்தான் அரைத்து மருதாணி போன்று வதக்கி வைத்துக் கொள்ளுவது.கொஞ்சம் பெ காயம். புதினாவும் இம்முறையிலேயே.காயம் சேர்க்காமல். சேர்த்தாலும் வாசனை தெரியாது!! சாதத்திற்கு என்றால் இப்படித்தான்.. எண்ணெய் மட்டும் குக்கிங்க் ஆயில் அல்லது நல்லெண்ணை.கடலை பட்டாணி சேர்ப்பதில்லை கடலை மட்டும் எப்போதேனும் சேர்த்துச் செய்வதுண்டு.

இதில் வேரியேஷன்...

மருதாணிப் பக்குவத்தில் வதக்கும் போது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கினால் அது ஒரு ஃப்ளேவர்

அதனுடன் வெந்தயம் வறுத்து பொடித்து இறுதியில் சேர்த்து வதக்கி எடுத்தால் அது வித்தியாசமான தொக்கு ஃப்ளேவர்..டேஸ்ட் சூப்பரா இருக்கும் கலந்தும் சாப்பிடலம தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

இதிலேயே பூண்டும், வெங்காயமும், அல்லது ஏதேனும் ஒன்று மட்டும் என்று அரைத்து வதக்கி அது ஒரு ஃப்ளேவர்....

அரைக்கும் போது இத்துடன் உ பருப்பு, க பருப்பு வறுத்து அரைத்து, ப் மிளாகாய்க்குப் பதில் சிவப்பு மிளகாய் வைத்து அரைத்தல்..பெ காயம் வறுத்துப் போட்டு. இது கலந்தும் சாப்பிடலாம், தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்...மருதானிப் பக்குவமும் தொட்டுச் சாப்பிட அதுவும் ப்ரெட் சான்ட்விச் தடவ நன்றாக இருக்கும்

இப்படி கலந்தும் கலக்காமலும் என்று...பல காம்பினேஷனில் புதினா கொத்தமல்லி தனித்த்னியாக அல்லது இரண்டும் கலந்து என்று...அவரவர் டேஸ்டின் படி...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

அட திங்கட்கிழமை இன்றும் அதிசயம் தமிழ்மண ஓட்டுப் பெட்டி தரிசனம்...போட்டாச்சு வந்ததா தெரியலை இப்பதான் அட நெல்லை மணமணக்க கொத்தமல்லி சாதம் செய்திருக்காரே என்று அவர் ஊருக்குப் போயிருக்கு போல....நெல்லைத் தமிழன் தமிழ்மணம் அங்க வந்திருந்தா அதுக்குக் கொஞ்சம் சாதம் போட்டு எங்கள் ப்ளாகுக்கு அனுப்பிடுங்க...ஹிஹிஹி

கீதா

Bagawanjee KA said...

அதென்ன , உருளை கட் கரேமது:)

ADHI VENKAT said...

பிரமாதமான படங்களுடன், குறிப்பும் அருமை..

இன்று எங்கள் வீட்டில் கொத்தமல்லி சாதமும், வெங்காய தயிர்ப்பச்சடியும்..வரமிளகாய், புளி, சீரகம் சேர்த்து அரைத்து வதக்கி தண்ணீர் விட்டு அரிசியை களைந்து போட்டு விசில் விடுவேன்.புலாவ் போன்று உதிர் உதிராக வரும்..

ADHI VENKAT said...

பிரமாதமான படங்களுடன், குறிப்பும் அருமை..

இன்று எங்கள் வீட்டில் கொத்தமல்லி சாதமும், வெங்காய தயிர்ப்பச்சடியும்..வரமிளகாய், புளி, சீரகம் சேர்த்து அரைத்து வதக்கி தண்ணீர் விட்டு அரிசியை களைந்து போட்டு விசில் விடுவேன்.புலாவ் போன்று உதிர் உதிராக வரும்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

காரசாரமில்லாவிட்டாலும், பசுமையான இந்தப்பதிவு வழக்கம்போல் உங்கள் பாணியில் மிகவும் அருமை.

//இந்த சாதத்திற்கு வெள்ளரிக்காய் சீவின தயிர்ப் பச்சடி நல்லா இருக்கும்.//

எனக்கு இந்த சாதமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். எனக்கு அந்த வெள்ளரிக்காய் சீவின தயிர் பச்சிடி ஒன்றே போதும். ஆனால் குறைந்தது சுமார் ஒரு பக்கெட்டாவது வேண்டும். அப்படியே சாப்பிடுவேன். அடுத்த அரை மணி நேரத்திற்கு வேறு எதுவுமே எனக்குத் தேவைப்படாது. :)

//விரைவில் மாங்காய் சாத செய்முறையோடு வருகிறேன்.//

வாங்கோ .... வாங்கோ. :)

Angelin said...

நானும் இப்படித்தான் செய்வேன் ..பட்டாணி சேர்த்ததில்லை இதே போல வல்லாரையிலும் மா இஞ்சியில் கூட செய்வேன் கூட கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்துப்பேன் ..எண்ணெய் எப்பவுமே நல்லெண்ணெய் தான் தாளிக்க .வெயிட்டிங் for மாங்கா சாதம் .

G.M Balasubramaniam said...

கொத்துமல்லிசட்னியாகச் செய்தால் அதை உபயோகிப்பதை உண்பவரிடம் விடலாம் நீங்கள் இருக்கும் ஊர் எது

கோமதி அரசு said...

அருமையான அழகான படங்கள்.
கொத்தமல்லி சாதம் நீங்கள் சொல்லும் முறையில் செய்து பார்க்கிறேன்.

vic said...

KILLERGEE Devakottai said...
நல்ல ஐயிட்டம்
//ஹஸ்பெண்டு சொன்னாள்// என்று வருகின்றதே ?
திரும்பவும் முதல்ல இருத்தா ?

Avargal Unmaigal said...

@Thulasidharan V Thillaiakathu

///சேம் சேம்!!!//
சமையல் குறிப்பு நன்றாகத்தானே இருக்கிறது அதுக்கு போய் சேம் சேம் சொல்லலாமா? ஹீஹீ

Asokan Kuppusamy said...

ருசிதான் நல்ல ருசி

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பசங்களுக்கும் மிகவும் பிடிக்கும்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பசங்களுக்கும் மிகவும் பிடிக்கும்

Bhanumathy Venkateswaran said...

கொத்துமல்லி சாதம் செய்யும் பொழுது, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்ததும் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை அதோடு சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அரைத்த கொத்துமல்லி விழுதை போட்டு வதக்கி விட்டு, சாதத்தோடு கலந்து இறுதியில் ஒரு மூடி எலுமிச்சை பழத்தையும் பிழிந்து விடுவேன்.

இதே முறையில் மின்ட் ரைஸும்(புதினா சாதம்) செய்யலாம். அதற்கு புதினா, தேங்காய், ப.மிளகாயோடு கொஞ்சம் இஞ்சி மற்றும் பூண்டு நன்கு பற்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

Bhanumathy Venkateswaran said...

இதற்கு சரியான ஜோடி வை.கோ. சார் சொல்லியிருப்பதைப் போல துருவிய வெள்ளரி தயிர் பச்சடிதான். ஜவ்வரிசி வடாமும் சேரும்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு. உங்கள் கருத்து இல்லாததனால், இது உங்களுக்குப் பிடிக்காது போலிருக்கிறது. என் ஹஸ்பண்ட் சொல்வா, எனக்கு சுலபமா பண்ணறது (அவள் பண்ணறது) எதுவும் பிடிக்காது என்று. நான் செய்யும்போது, நேரம், பசி, பொறுமை இவற்றைப்பொருத்து, சமயங்களில் சுலபமாக எது செய்ய இயலுமோ அதனைச் செய்வேன்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். கார எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும். அதைவிட சிப்ஸ் பரவாயில்லை. எனக்கு ரெய்த்தாதான் பிடிக்கும், அதுவும் வெள்ளரிப் பச்சிடி.

நிறைய பேர், இது சுலபம் என்று வெரைடி சாதம் செய்வதால், பசங்களுக்கு எப்போதுமே கலவை சாதம் பிடிக்காது என்றே நினைக்கிறேன். உங்கள் மனைவி அப்போ அப்போ ஏதாவது சமையலறையில் செய்கிறார் என்று உண்மையைச் சொல்லிட்டீங்க.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

நன்றி கில்லர்ஜி. என் மனைவியார் எனக்குப் பல ஆலோசனைகள் சொல்வதாலும், நான் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அவர்கள் செய்வதாலும், அவர்தான் என் ஹஸ்பண்ட்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கலவை சாதம் அவருடைய விருப்பமில்லை போலிருக்கிறது. அதுவும் சரிதானே.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

நன்றி மிடில் கிளாஸ் மாதவி. நான் செய்துபார்த்தவரை, தேங்காய் சேர்ப்பதால் சுவை கூடுகிறது. பட்டாணி சேர்ப்பதால் சுவையில் மாற்றமில்லை. அது தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். உங்கள் காம்பினேஷன் நல்லாத்தான் இருக்கும், பூண்டு/வெங்காயம் தவிர. அது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றவில்லை. இதே செய்முறையில் புதினா சாதம் நல்லா இருக்கும், பசங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு புதினா வாசனை பிடிப்பதில்லை.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி பகவான்ஜி. உருளைக்கிழங்கை சதுரமாக வெட்டி, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பில் தாளித்து, காரம், பெருங்காயப் பொடி போட்டு நன்றாக வதக்கினால் (ரோஸ்ட் பதத்துக்கு) உருளை கட். கறி ரெடி. பெரும்பாலும் சுலபம் என்பதாலும், இங்கு எப்போதும் உருளைக்கிழங்கு கிடைக்கும் என்பதாலும் (நல்ல புதியது) அடிக்கடி செய்வேன்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கோவை2தில்லி ஆதி வெங்கட் மேடம். உங்கள் செய்முறையில் (அப்போ உங்களின் பிளாக்கில் படித்துவிட்டு செய்துபார்த்தது) எனக்கு நன்றாக வரவில்லை. என் ஹஸ்பண்ட் இங்கு வரும்போது மீண்டும் செய்துபார்க்க எண்ணம்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கோபு சார். ஏன் 'காரசாரமாக இல்லை' என்று சொல்லிவிட்டீர்கள்? தேவைனா, கூட ரெண்டு பச்சை மிளகாயையும் அரைத்துவிட்டுக்கொண்டால் ஆச்சு. வெள்ளரிக்காய் பச்சடி பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? நானும் எடை குறையவேண்டும் என்று வெள்ளரிக்காய் பச்சிடி, ஒரு பெரிய கிண்ணம் சாப்பிடுவேன். (ஆனால், ஒரு வேளை உணவுக்குப் பதிலாக சாப்பிடவேண்டியதை, உணவுக்குப் பின் சாப்பிட்டதால் எடை கூடியதுதான் மிச்சம்)

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஏஞ்சலின். வல்லாரை-வாய்ப்பில்லை. மாங்காய் இஞ்சி நன்றாக இருக்கும்போல்தான் தெரிகிறது. செய்துபார்த்ததில்லை. இஞ்சி சேர்த்த எதுவும் பசங்களுக்குப் பிடிக்காது.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஜி.எம்.பி ஐயா. நான் கல்ஃப் தேசத்தில் இருக்கிறேன்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கோமதி அரசு மேடம்.

நன்றி VIC

'நெல்லைத் தமிழன் said...

நன்றி அசோகன் குப்புசாமி

நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

'நெல்லைத் தமிழன் said...

நன்றி பானுமதி வெங்கடேசுவரன் மேடம்... எலுமிச்சை பிழிந்தால் எலுமிச்சம்பழம் வாசனை வந்துவிடாதோ? கொத்தமல்லி வாசனையை அமுக்கிவிடாதோ.. செய்துபார்க்கிறேன்.

எனக்கு உருளைக்கிழங்கு கூட்டும் இதற்குப் பிடிக்கும். அதன் செய்முறையை விரைவில் எழுதுகிறேன்.

athira said...

சுலப கொத்தமல்லிச் சாதம், மிக சுலபமா இருக்கு, இதுவரை செய்ததில்லை, செய்யோணும், ஆனா என்ன வீட்டில் என்னைத் தவிர யாரும் எந்தச் சாதமும் சாப்பிட மாட்டினம் கர்:))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!