திங்கள், 27 மார்ச், 2017

"திங்க"க்கிழமை – வாழைக்காய் புளிக்கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     எங்க அம்மா பண்ணறதுல எனக்கு இந்தக் கூட்டு எப்போவும் பிடிக்கும். இது பண்ணம்போதெல்லாம், எங்க அம்மா மோர்க்குழம்பும் செய்வார்கள். இந்த இரண்டு காம்பினேஷனும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 



அதுவும், ரொம்ப சுடச் சுட சாப்பிட்டால் நல்லா இருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை, இதனைப் பண்ணலாம் என்று தோன்றிவிட்டது. அதுவும் சென்னையிலிருந்து கொண்டுவந்த பெரிய வாழைக்காய் இருந்தது.  நான் மேற்கு மாம்பலத்தில் ஒரு கடையில் (வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கு எதிராக இருக்கிற சின்ன தள்ளுவண்டிக் கடை) ரெகுலராக தேங்காய்ப்பொடி, எள்ளுப்பொடி, வடாம் போன்றவைகள் வாங்குவேன். அங்குதான், மோர்க்குழம்பு மிக்ஸும் வாங்கினேன். ஒரு பாக்கெட் 50 ரூபாய்னு நினைக்கிறேன். ஐந்து அல்லது ஆறு தடவைகளுக்கு வரும். அதனால, அன்று சுலப மோர்க்குழம்பும், வாழைக்காய்ப் புளிக்கூட்டும் பண்ணினேன்.

இதுக்கு, தேங்காய் துருவல் + தேங்காய் சிறிய சில்லுகள், 3-4 தேக்கரண்டி கடலைப் பருப்பு,  வறுத்து அரைப்பதற்கு 2 ஸ்பூன் கொத்தமல்லி விரை, ½ ஸ்பூன் மிளகு, 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2-3 மிளகாய்ப்பழம் தேவை.  (வாழைக்காய் இல்லாமலா?)




முதலில் கடலைப்பருப்பை அரைப்பதத்துக்கு வேகவைத்துக்கொண்டு, நீரை வடிகட்டிவிடவும்.

தேங்காய்த் துருவலையும் சில்லையும் எண்ணையில் கொஞ்சம் வறுத்து தனியாக வைத்துவிடவும்.



சிறிது எண்ணெயில், கொத்தமல்லிவிரை, மிளகாய்ப்பழம், மிளகு, உளுத்தம்பருப்பு இவைகளை வறுத்துக்கொண்டு ஆறினபின், மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். கர கரவென இருக்கவேண்டும்.



வாழைக்காயைச் சதுரமாகத் திருத்தி, கொஞ்சம் புளி ஜலத்தில் உப்பு, மஞ்சப்பொடி போட்டுக் கொதிக்கவிடவும். 1 வாழைக்காய்க்கு சிறிய அளவு எலுமிச்சம்பழ அளவு புளி போதும். நான் ¾ ஸ்பூன் புளிப்பேஸ்ட் உபயோகித்தேன். இதோட கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.



கொஞ்சம் கொதித்து, புளி வாசனை போனபின், அரைத்த பொடியையும், வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் கடலைப் பருப்பையும், தேங்காயையும் போட்டுக் கொதிக்கவிடவும்.



கூட்டு இப்போ தள தள பதத்தில் இருக்கும். ஒருவேளை, தண்ணீர் அதிகமாக வைத்துவிட்டால், 1 ஸ்பூன் அரிசி மாவைத் தண்ணீரில் கரைத்து கொதிக்கும்போதே சேர்த்துவிடுங்கள். அப்போ, கூட்டு கொஞ்சம் தள தள பதத்துக்கு வந்துவிடும்.

அடுப்பை அணைத்தபின், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தேங்காய் எண்ணெயில் தாளித்துவிடவும்.




இங்கு (கல்ஃப் நாடுகள்… எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், சௌதி, குவைத், கத்தார் போன்ற நாடுகள்)  தயிர், மோர், பால் போன்றவை, கடைகளில் எப்போதும் கிடைக்கும். அதிலும் கொழுப்பு எடுத்தது, எடுக்காதது என்று இரண்டு வகைகளிலும் கிடைக்கும்.  நம்ம ஊருல (தமிழ்நாட்டுல) நாமே தயார் செய்துகொள்ளவேண்டும். இப்போதான் கெவின் போன்ற சில பிராண்டுகள் வர ஆரம்பித்திருக்கிறது. 


அதுவும் சிறிய பாக்கெட்டுகளில். இந்த மாதிரிப் பிரச்சனை இங்கே கிடையாது. எப்போ தேவையோ  அப்போ பக்கத்துக் கடைகள்ல வாங்கி வந்து உபயோகிக்கவேண்டியதுதான். தேவைக்கு ஏற்றார்ப்போல், எல்லா வித அளவுகளிலும், அதிக பட்சமாக 3 லிட்டர் வரையிலும் கிடைக்கும். எல்லாமே 1 வாரத்துக்கு உபயோகப்படுத்தும் அளவு (காலாவதியாக 1 வாரம் இருக்கும்). முன்னெல்லாம், மோரோ தயிரோ கொஞ்சம் புளித்திருக்கணும்னா (உணவுக்கு) அதுக்கு மோரை வெளியில் வைத்திருக்கவேண்டும் அல்லது 4 நாள் ஆன மோரை உபயோகப்படுத்தலாம். 


இப்போ, புளித்த (Sour) தயிர் என்றே புதுமையாக வர ஆரம்பித்துவிட்டது. இங்க உணவுத் தரக் கட்டுப்பாடு ரொம்ப கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. அதுனால, காலாவதியான உணவுகளைக் கடைகளில் பார்வைக்குக்கூட வைத்திருக்கமுடியாது. சோதனைகள் உண்டு. அப்படி வைத்திருந்தால் உடனே கடையை மூடும் அளவு நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். அதனால் உணவின் சுகாதாரத்தைப் பற்றி ரொம்பவும் கவலைப்படவேண்டிய தேவை இருக்காது. (இதைப் பற்றியே தனியாக ஒரு இடுகை எழுதும் அளவு விஷயம் உண்டு)

மோரை, லெபான் என்று அழைப்பார்கள். கெட்டியாக இருக்கும்.  மோர் 2 டம்ளர், மோர்க்குழம்புப் பொடி 1-2 ஸ்பூன், மஞ்சப்பொடி (சும்மா கலருக்காக), தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் சுட வைத்தால் மோர்க்குழம்பு ரெடி. நான் எப்போதாவதுதான் மோர்க்குழம்புப் பொடியை உபயோகப்படுத்தி (சோம்பலா இருக்கும்போது, அல்லது கூட்டு/கறி ரெடியாகிவிட்டால் உடனே மோர்க்குழம்பு பண்ணணும்னா) மோர்க்குழம்பு செய்வேன். தாளிக்கத் தேவையில்லை என்றாலும் (அதிலேயே கருவேப்பிலை, கடுகு உண்டு) நான் கடுகு, புதிய கருவேப்பிலை போட்டுத் தாளிப்பேன். அன்று, வாழைக்காய் கூட்டுக்கு மோர்க்குழம்பு செய்திருந்தேன்.

செய்துபாருங்கள். நல்லா இருக்கும்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.




[ நான் இதுவரை இது சாப்பிட்டதில்லை நெல்லைத்தமிழன்..  மேலும் அரிசிமாவு சேர்ப்பதை முன்னர் அவ்வப்போது செய்து வந்ததுண்டு.  இப்போதெல்லாம் செய்வதில்லை!  ஒருமுறை செய்து பார்க்கலாம்! 

நான் நீலக்கலரில் கமெண்ட் போடாவிட்டால் அந்த டிஷ் எனக்குப் பிடிக்காது என்கிற கெட்டபெயர் எனக்கு வந்து விட்டதால் அதை நீக்கிக்கொள்ளும் முகத்தான் கமெண்ட் போட்டு விட்டேன்! - ஸ்ரீராம் ]

33 கருத்துகள்:

  1. தயிரை விட மோர்க்குழம்பு எனக்கு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  2. மோர்க்குழம்பு பிடிக்கும் எனக்கும்! இங்கேயும் கெட்டியான Mother Dairy தயிர் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. மோர்குழம்பு சாப்பிடுவேன் ஆனால் அது பிடித்தமான லிஸ்டில் கிடையாது ஆனால் சாம்பார் வத்தக்குழம்பு ரசம் இப்படி அடிக்கடி செய்வதால் ஒரு மாற்றத்திற்கு இதை சாப்பிடுவதுண்டு... அவ்வளவுதான் ஆனால் எங்காத்து மாமிக்கு இது பிடித்தமான ஒன்று...

    பதிலளிநீக்கு
  4. இங்கு நெல்லைதமிழன் சொன்ன கூட்டு இதுவரை நான் கேள்விபடாத ஒன்று ஒரு நாள் செய்து பார்க்கணும்..

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் எனக்கு ஒரு கேள்வி இப்படி சமையல் செய்யும் போது எப்படி உங்களால் இவ்வளவு பொறுமையாக படங்கள் எடுத்டு சமைக்க முடிகிறது... படங்கள் எடுக்க எ யாராவது உதவி செய்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  6. எனக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதெல்லாம் மோர் குழம்புதான் எங்க வீட்டுல, பதிவிலும் ருசியாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. படங்கள் பற்றி நானும் கேட்க நினைத்தேன் ? :) ஒரு சமையல் குறிப்புக்கு படமெடுக்க நானா படும் பாடு இருக்கே :) ஒன்னு க்ளெரிட்டி இல்லை இல்லைனா எங்கூர்ல வெளிச்சமே இல்லை ரெண்டும் இருந்தா ஸ்மோக்கி யோட போகும் ஜீனி போல இருக்கு ..கேக்குதா கேக்குதா கேட்கிறதா ?? :)

    பதிலளிநீக்கு
  8. இதுவரைக்கும் இந்த மாதிரி புளி சேர்த்த கடலை பருப்பு வாழை காம்போவில் செய்ததில்லை ..வித்யாசமா இருக்கு செஞ்சுடுவோம் ..
    எனக்கு மோர்க்குழம்பு பிடிக்கும் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் ..கார்ன் ப்ளெக்ஸ் பவுலில் போட்டு அப்படியே குடிப்பேன் :)

    பதிலளிநீக்கு
  9. அப்புறம் வாழைக்காய் க்கு எப்பவும் தேங்காயெண்ணை தேங்க சில்லுதான் சுவையை கூட்டும் ..நல்லதொரு ரெசிப்பி நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  10. மோர்க்குழம்பு எனக்கும் பிடிக்கும்..பருப்புசிலியுடன் சாப்பிட்டிருக்கிறேன்..கூட்டுடன் சாப்பிட்டதில்லை..:) செய்து பார்க்கிறேன் . புளியில்லாமல் மிளகூட்டல் வாழைக்காயில் செய்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. மோர்க்குழம்பு எனக்கும் பிடிக்கும்..பருப்புசிலியுடன் சாப்பிட்டிருக்கிறேன்..கூட்டுடன் சாப்பிட்டதில்லை..:) செய்து பார்க்கிறேன் . புளியில்லாமல் மிளகூட்டல் வாழைக்காயில் செய்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. இந்தப் புளிப்புக் கூட்டு வித்தியாசமாக கிட்டத்தட்ட எங்கள் பிறந்த வீடு + புகுந்த வீட்டு ரெசிப்பி இரண்டும் கலந்த கலவையாக இருக்கு. இப்படிச் செய்ததில்லை....என்மாமியார் வீட்டில் ஒரு வகை மோர்க்குழம்பில் கடலைப்பருப்பையும் ஊற வைத்து அதனுடன் துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்துச் சேர்ப்பதுண்டு...எனக்கு எல்லா வகையான மோர்க்குழம்பும் பிடிக்கும். ஆனால் கொத்தமல்லிவிரை மட்டும் சேர்த்திருக்கக் கூடாது சாப்பிடுவேன் ஆனால்...

    என் பாட்டி கொத்தமல்லிவிரை சேர்க்க மாட்டார். கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு மிளகு, மிளகாய்பழம் எல்லாம் வறுத்து தேங்காயும் வெதுப்பி அரைத்துச் சேர்ப்பார் அப்படியே நானும் செய்கிறேன்...இதையும் குறித்துக் கொண்டுவிட்டேன்...
    மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. படமும் விளம்கமும் சுவையே!

    பதிலளிநீக்கு
  15. எனக்கு தேங்காய் துருவிப்போட்ட வாழைக்காய் கறி + பொடிமாஸ் + பஜ்ஜி போன்றவை பிடிக்கும்.

    பொதுவாக இதர சில காய்கறிகளில் செய்யும் புளிக்கூட்டு என்பதும் மிகவும் பிடிக்கும்.

    இருப்பினும் வாழைக்காயில் புளிக்கூட்டு இதுவரை நான் சாப்பிட்ட நினைவு இல்லை.

    பல மாமாங்களுக்கு முன்பு ஒருமுறை வாழைக்காய் கச்சலில் (சதைப்பற்று இல்லாத மிகவும் ஒல்லியான - ஸ்லிம்மான வாழைக்காயைக் கச்சல் என நாங்கள் சொல்லுவோம்) என் தாயார் செய்த புளிக்கூட்டு சாப்பிட்ட நினைவு கொஞ்சம் உள்ளது.

    வழக்கம்போல தங்களின் பகிர்வும், படங்களும் சூப்பராக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. மோர் குழம்பு எனக்கு மிகவும் இஷ்டமானதாகும்.

    அதுவும் நீங்க சொல்லும் லெபான் என்ற கெட்டி மோர் .... ஆஹா .... நான் அங்கு வந்தபோது மிகவும் விரும்பிச் சாப்பிட்டுள்ளேன் .... வரும் போது சில லிட்டர்கள் வாங்கி எடுத்துக்கொண்டும் வந்துள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2015/01/17.html

    இதோ இந்த என் பதிவினில் அந்த மோர் படத்தையும் காட்டி மகிழ்ந்துள்ளேன். :)

    பதிலளிநீக்கு
  17. இந்தக் கூட்டு எங்க வீடுகளில்/குடும்பத்தில் வாழைக்காயில் மட்டுமில்லாமல் கத்திரிக்காய், கொத்தவரை, அவரை போன்றவற்றிலும் செய்வது உண்டு. துவரம்பருப்புச் சேர்த்துக் கொஞ்சம் தளரச் செய்தால் கூட்டுக் குழம்பு என்போம். பருப்புச் சேர்க்காமல் நெ.த. சொல்லி இருக்கும் முறையில் செய்வது கூட்டு. இதுக்கு மோர்க்குழம்பு தான் நல்ல துணை. எங்க வீட்டில் கத்திரிக்காயில் செய்யும் இந்தப் புளிக்கூட்டுக்கு எங்க குடும்பத்தில் எல்லோரும் ரசிகர்கள். இதுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வோம். கத்திரிக்காய்ப் புளி விட்ட கூட்டு+ மோர்க்குழம்பு எங்க வீடுகளில் விசேஷ நாட்களில் ஓர் முக்கிய உணவு. இதுக்குப் பிதுக்கு மொச்சை எனப்படும் தோலியை எடுத்த வெள்ளை மொச்சைப்பருப்பை முதல்நாளே ஊற வைத்துச் சேர்ப்போம். கடலைப்பருப்புப் போடுவதில்லை. :)

    பதிலளிநீக்கு
  18. நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கமென்ட் பார்க்கிறேன். அதிலும் 'முகத்தான்' வார்த்தைய பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உங்க பாஸை செய்துபார்க்கச் சொல்லுங்கள். எனக்கு ரொம்பப் பிடித்தது இந்தக் கூட்டு (மோர்க்குழம்பு அல்லது புளிசேரி இல்லாமல் இதனைச் சாப்பிடமாட்டேன்)

    பதிலளிநீக்கு
  19. நன்றி கில்லர்ஜி. மோர்க்குழம்புதான் செய்வதற்கு எளிதானது.

    நன்றி வெங்கட். மோர்க்குழம்பு செய்யும்போது இந்தக் கூட்டும் செய்துபாருங்கள் (வாழைக்காய் தில்லியில் கிடைக்கும்தானே?)

    பதிலளிநீக்கு
  20. நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். உங்க வீட்டம்மாவுக்குப் பிடிக்கும்னா, AUTOMATICஆ உங்களுக்கும் பிடிக்கவேண்டுமே (வேற வழி?)

    மீள் வருகைக்கும் நன்றி. புளி அளவு ஓரிரு முறை செய்யும்போது நன்றாக பிடிபட்டுவிடும். 'இன்றைக்குச் செய்வதை புகைப்படம் எடுக்கவேண்டும், எங்கள் பிளாக்குக்கு அனுப்ப' என்று நினைக்கும்போது ஒவ்வொரு ஸ்டெப்பிலயும் புகைப்படம் எடுத்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி அசோகன் குப்புசாமி. ஜலதோஷம் பிடித்தால், ஜீரக ரசம்னா செய்வாங்க. மோர்க்குழம்புனா, திருப்பி சளி போகாதே...

    பதிலளிநீக்கு
  22. நன்றி ஏஞ்சலின். கலாய்க்காதீங்க. இப்போல்லாம் ஐபோன்ல படம் எடுத்தாலே ப்ரொஃபஷனல் கேமராவில் எடுப்பதுபோல் வந்துவிடுகிறது. நான் கணிணித் துறையில் வேலைபார்ப்பதால் கொஞ்சம் அதீத ஜாக்கிரதை உணர்வு. அதனால் எந்தப் படத்தையும் 2-3 முறை எடுத்துடுவேன். ஒண்ணு சொதப்பினாலும் இன்னொண்ணு சரியா வந்துடும்னு.

    மோர்க்குழம்பு, தோசை/அடைக்கெல்லாமும் நல்லா இருக்கும். எனக்கு பூசணி (பச்சை. நிறையபேர் பரங்கிக்காயை பூசணி என்று சொல்கிறார்கள்) தான் (காய்) மோர்க்குழம்பில் போட்டால் மிகவும் பிடிக்கும். வாழைக்காய் கூட்டுக்கு தேங்காய் சில்லு சேர்ப்பதால், தேங்காய் எண்ணெய் நீங்கள் சொல்வதுபோல் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஆதி வெங்கட் அவர்களே. மோர்க்குழம்புக்கு பருப்புசிலி நல்ல காம்பினேஷன். இந்தக் கூட்டும் நல்லா இருக்கும். செய்துபாருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க கீதா ரங்கன். பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒரே பகுதில (ஒரே ஊர், ஏரியா) இருந்ததுனா, செய்முறைல வித்யாசம் இருக்காதுல்ல. அப்புறம் பழக்கவழக்கமும் ஒரே மாதிரி இருந்து போரடிக்கும்ல.

    எங்க வீட்டுலயே (அம்மாவின் வீடு) சமையல்ல கொஞ்சம் கேரளா (திருஅனந்தபுரம்) சாயல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கோபு சார். 'கச்ச வாழைக்காயை' பல மாமாங்கங்களுக்குப் பிறகு எனக்கு ஞாபகப்படுத்தியதுக்கே நன்றி சொல்லணும். சின்ன வயசுல (9ம் வகுப்பு வரை), தோலெடுக்காமல் கச்சை வாழக்காயில் கரேமதுலாம் எனக்கு அவ்வளவு பிடிக்காது. பெரும்பாலும், வாழைமரம் மழை/புயல்ல சாஞ்சுடுத்துனா, கச்சை வாழைக்காய் விற்பனைக்கு வரும்.

    மீள் வருகைக்கும் நன்றி. அல் ரவாபி மோர், எமிரேட்ஸில்தான் (UAE) கிடைக்கிறது. மற்ற கல்ஃப் தேசங்களில், ஒவ்வொரு பால் பிராண்டும் (அல் மராய், அல் ஸாஃபி, நடா, நாடக் போன்ற பல பிராண்டுகள்) நினைத்தவாறு ப்ரொமோஷனல் விலையில் விற்கலாம். ஆனால் எமிரேட்சில் மட்டும், எல்லா பிராண்டுகளும் தங்களுக்குள் சின்டிகேட் அமைத்துக்கொண்டு ஒரே விலையில்தான் விற்கும். அனாவசியமாக போட்டி போட்டு விலை குறைப்பு செய்துவிடக்கூடாது என்று.

    பதிலளிநீக்கு
  26. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. மோர்க்குழம்புக்கு கத்தரி (மொச்சை போட்டது) அல்லது வாழைக்காய் புளிக்கூட்டு நல்ல காம்பினேஷன்.உங்கள் பின்னூட்டம் படிக்கும்போதே பசி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு வாரத்துக்கு என் ஹஸ்பண்ட் இங்க வர்றா (அனேகமா நாளை). அவளுக்குச் சொல்ல மெனு கிடைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  27. புளிச்ச கீரையே இங்கே கிடைக்கலே ,பரவாயில்லை உங்களுக்கு புளிச்ச தயிர் கிடைக்குதே :)

    பதிலளிநீக்கு
  28. புளிக்கூட்டு என்ற பெயரையே இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. அதாவது எந்தக்கூட்டிலும் புளி சேர்த்ததே இல்லை. இம்முறையில் முயன்றுபார்க்கிறேன். மோர்க்குழம்பு மிகப் பிடித்தமானது..அத்துடன் சேனை வறுவல்தான் எப்போதும் செய்வது.

    பதிலளிநீக்கு
  29. என்ன பகவான்ஜி... அங்க கிடைக்காததா? புதுக்காய்கறிகள், புது கீரைகள்.....

    பதிலளிநீக்கு
  30. நன்றி கீதமஞ்சரி. மோர்க்குழம்புக்கு, சேனை வறுவல், சேப்பங்கிழங்கு ரோஸ்ட், உருளை காரக்கறி என்று எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சாப்பிடறது. புளிக்கூட்டு பண்ணுங்க (ஆனால், புளி கொஞ்சம் குறைவாக விடுங்க. ஒரே புளியா இருக்கக்கூடாது)

    பதிலளிநீக்கு
  31. வாழைக்காய் புளிக்கூட்டு
    படங்களுடன்
    செய்முறை வழிகாட்டல்
    அருமை

    பதிலளிநீக்கு
  32. பொறுமையாப் படம் எடுத்து விரிவாச் சொல்லியிருக்கிறார்.
    எனக்கு மோர்க்குழம்பு மீது அதிக பற்றுதல் உண்டு... அவசரத்துக்கு சுலபமாச் செய்துக்கிடலாம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!