புதன், 19 ஜூலை, 2017

நான் செய்தது சரியா?





ஒரு ரசமான சம்பவம். 

     
     அலுவலகத்தில் இருந்தேன்.  அலுவலகம் இருந்த வளாகத்துக்குள் நாய்கள் பெருகி விட்டதாகச் சொல்லி புகார் கொடுத்திருந்தனராம்.  அதனால் அவற்றைப் பிடிக்க நாய் வண்டி வந்திருந்தது.  வளாகத்துக்குள் சுமார் பத்து நாய்கள் இருக்கும்.  எல்லாம் எனக்கும் நண்பர்கள்.  அங்கிருக்கும் எல்லோருக்குமே செல்லங்கள், நண்பர்கள்தான்!  ஆனால் ஏனோ, யாராலோ  புகார் சென்று வண்டி வந்திருந்தது.

     சிறு வயதிலிருந்து இது போன்று செல்லங்களைப் பிடித்துச் செல்லும் காட்சி கண்டு கண் கலங்கியிருக்கிறேன்.  ஒரு முறை போராடி, ஒருமுறை லஞ்சம் கொடுத்து, ஒருமுறை சண்டை போட்டு என்று சில செல்லங்களை மீட்டுமிருக்கிறேன்.

     இந்த முறை அலுவலகத்தில் என்மேல் எல்லோரும் இது பற்றி கிண்டலாக கமெண்ட் செய்வார்கள் என்று ஏனோ சும்மா இருந்து விட்டேன்.  கஷ்டமாக இருந்ததால் வெளியில் சென்று கூடப் பார்க்கவில்லை.

     வேறு ஒரு அறைக்குச் சென்று விட்டு மறுபடி என் அறைக்கு வருகிறேன். பார்த்தால் வாசலில் ஒரு கறுப்புச் செல்லம் பம்மியிருந்தது.  சாதாரணமாக கட்டிடத்துக்குள் நுழையவே நுழையாது.  இன்று அதன் எச்சரிக்கைகளும், கட்டுப்பாடுகளும் தளர்ந்த நேரம் போலும்.

     "ஏய்..  என்ன இங்கே உட்கார்ந்திருக்கே...  வெளியே போ"  என்றேன்.


      நாக்கு வெளியில் நீட்டி, பதட்டத்த்துடன் அமர்ந்திருந்த அந்தக் கறுப்புச் செல்லம் என்னை லட்சியம் செய்யவில்லை.  மறுபடி அதை வெளியே செல்லச் சொன்னேன்.  எழுந்து அது வரவும்,  வெளியே செல்லப் போகிறது என்று நினைத்தேன்.  ஆனால் அதுவோ என் கால்களைச் சுற்றி ஒரு வலம் வந்து விட்டு மறுபடியும் உள்ளேயே நகர்ந்தது.  இவை எல்லாமே நான்கு கால்களில் கம்பீரமாக நடந்து அல்ல.  அமர்ந்த நிலையைக் காட்டிலும் சற்றே உயர்ந்த நிலையில் தவழ்ந்த வகையில்!

     கிட்டத்தட்ட காலில் விழுந்த பாவம்.  கால்களை சுற்றி வந்தது அதன் சமிக்ஞையாய் இருந்திருக்கலாம்.  உள்ளே அதேபோல தவழ்ந்த நிலையில் நகர்ந்த அது, ஒரு ஓரமாக மறைவிடம் போலத் தோன்றிய இடத்தில் உட்கார்ந்து, அதுவும்  எதிர்ப்பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தது! 

     என்னிடம் தஞ்சம்புகுந்த அதைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்தேன்.  என் அறைக்குள் வருபவர்களை வாசலிலேயே நிறுத்திப் பேசி அனுப்பினேன்.  இரண்டு அட்டைப் பெட்டிகளை வைத்து அதை மறைத்தேன்.

      நாய் வண்டிக் காரர்கள் பெரும்பாலும் அதைக் கொண்டுபோய்க் கொல்வதில்லை.  குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுவந்து அதே இடத்தில் விட்டு விடுவது வழக்கம்.  ஏற்கெனவே  சிகிச்சை நடந்திருக்கிறது என்றாலும், புகாருக்காக மறுபடி வந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரிதாக ஒன்றும் ஆபத்தில்லை, போய்வா என்று செல்லத்திடம் சொல்லலாம்.  நமக்குத் புரிகிறது.  ஆனால் பயந்திருந்த அதன் முகத்தைப் பார்த்தால் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை.  ஆபத்தான நாயும் இல்லை அது.  பணிவான, அன்பான நாய்.

     "கு க சிகிச்சை செய்த நாய்களைப் பிடிக்க எங்களுக்கு அதிகாரமில்லை.  என்றாலும் புகார் தந்திருக்கிறார்கள்.  என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றனர் பிடிக்க வந்திருந்தவர்கள்.

     வெளியிலிருந்து புதிதாக வந்திருந்த வெள்ளைச்சிவப்பு நாய் ஒன்று அவர்களுக்கு குறுகிய ஒரு இடத்தில் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் காட்டிவிட்டுப் பிடிபட்டது!  
 
     ரொம்ப நேரம் மறைந்திருந்த இதையும், இதேபோல இருக்கும் இன்னொன்றையும் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.  நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  
     தேடிக்கொண்டிருந்த ஒருவருக்கு யாரோ ஒரு குடிமகன் குடித்து விட்டு உடைத்துப் போட்டிருந்த பாட்டில் ஓடு ஒன்று காலில் கிழித்து, ரத்தம் வர,  காலைக் கழுவ தண்ணீர் கேட்டு என்னிடம் வந்தார்.  'இங்கேயே நில்லுங்கள்' என்று வாசலிலேயே நிறுத்தி உள்ளே சென்று ஒரு பெரிய பாட்டிலில் தண்ணீர் பிடித்துத் தந்தேன்.  இது என்னை நிமிர்ந்து இடுக்கிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தது.

     நீண்ட நேரத்துக்குப் பிறகு வண்டி வெளியில் செல்ல, அதற்குப்பின் 15 நிமிடங்கள் கழித்து செல்லத்தை வெளியேறச் சொன்னேன்.  நிமிர்ந்து பார்த்து விட்டு .'என்னை விட்டு விடு.. கருணை காட்டு' என்று கண்கள் மற்றும் நாக்கால் பாவம் காட்டியது.  மறுபடியும் மறுபடியும் அதனிடம் மனிதனிடம் பேசுவது போல நான்கைந்துமுறை பேசினேன்.  'என்னை மாட்டி விட்டு விடாதே' என்றேன்.  'உன்னால் என் பேர் கேட்டு விடப் போகிறாது என்றேன்.  என்ன புரிந்ததோ, ஓரிரண்டு நிமிடம் தாமதித்தது.  
 
     மெல்ல எழுந்து முன்போல தவழாமல், நடந்து சென்று, அடிமேல் அடி வைத்து அறையைத் தாண்டி, வராந்தாவில் சென்று இரண்டு பக்கமும் தலையை மட்டும் ஜாக்கிரதையாக நீட்டி எட்டிப் பார்த்தது. ஒன்றும் ஆபத்து இல்லை என்று உறுதியானது போலும்.  தயக்கத்துடனேயே இறங்கி சென்று கட்டிடத்தின் பின்புறம் சென்று விட்டது!

படங்கள் ::  இணையத்திலிருந்து நன்றியுடன்...
 
மொபைலில் படிப்பவர்கள் இங்கே தொட்டு தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியும்.

58 கருத்துகள்:

  1. "நான் செய்தது சரியா" - இது என்ன கேள்வி? எனக்கும் அடையாறில் இரவு நேரத்தில் உலவும் நாய்களைக்கண்டு ரொம்ப பயம்தான். எங்க கடித்துவிடுமோ என்று. அதனால் தெரு நாய்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. வெறுப்பு. ஆனாலும், நீங்கள் சொல்வதுபோல் நடந்து, அந்த நாய் 'பயத்தில் பம்முகிறது, நம்முடைய கருணையை எதிர்பார்க்கிறது' என்று தோன்றுமானால், நாய் என்ன, எந்த விலங்கோ அல்லது செடிகளைப் பற்றியும் அப்படி ஒரு எண்ணம் தோன்றினால், அதற்கு உதவாமல் இருந்தால், மனித ஜென்மம் எடுத்து என்ன பயன்?

    இடுகை அம்பேரிக்காவிலிருந்து (யார் இப்படி எழுதுவார்கள் என்று தெரிகிறதா?) எழுதுனீங்களா? கிட்டத்தட்ட புதன் முடிந்து வியாழன் ஆரம்பிக்கிறது (வியாழன் எழுந்து புதன் உறங்கிற்று). இப்போ போட்டுருக்கீங்களே! த.ம +1

    பதிலளிநீக்கு
  2. ஜீவகாருண்யம் இருக்கிறது உங்களுக்கு .
    முன்பு மாதிரி இல்லாமல் கொல்லாமல் இருப்பது மனதுக்கு நிம்மதி.
    படங்களை பார்க்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்வு. அடைக்கலம் நாடி வந்த ஜீவனுக்குக் கருணையுடன் உதவியதே சரி! அதிலும் நாய்கள் மீது உங்களுக்குத் தனி நேசம் உண்டென்றும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  4. மிகச் சரி
    அடைக்கலம் என வந்தவரை(தனை)
    காப்பதே முறை
    நானாக இருந்தாலும் அப்படித்தான்
    செய்திருப்பேன்

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் இத்தகைய சிறு சிறு காரியங்கள்தாம் நம்மை மனிதர்களாக நமக்கே உறுதிசெய்கின்றன. ஆபத்பாந்தவனானீர்கள் அந்த நாய்க்கு நீங்கள். இவருக்கு எப்படி நன்றிக்கடன் ஆற்றப்போகிறோம் நாம் என்று நினைத்தவாறே சென்றிருக்கும் அது.

    பதிலளிநீக்கு
  7. ஆபத்தில் வந்தபேருக்கு அபயம் கொடுத்திடுதல் நல்லோரின் மாண்பு. நல்ல வேளை. அதுவும் நன்றியுடன் வெளியேற முடிந்தது. இல்லாவிட்டால் காலம் பூரவும் குற்ற உணர்வு தோன்றிக்கொண்டே இருக்கும். யாராக இருந்தாலும் இப்படிதான் செய்ய வேண்டும்.காருண்யம்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை!! 4 கால் செல்லங்கள் மனிதர் போலவேதான்! மனம் நெகிழ்ந்தேன். 😊

    பதிலளிநீக்கு
  9. நாய் நேயம் மெய் சிலிர்க்க வைத்தது :)

    பதிலளிநீக்கு
  10. மனிதநேயம் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்தது சரியே...
    பிறருக்கு இது கேலியாக தெரியலாம்

    உங்கள் நிலையில் நானிருந்தாலும் இதையே செய்வேன் அதேநேரம் எனக்கு நாய் வளர்ப்பதில் இஷ்டம் கிடையாது.

    பதிலளிநீக்கு
  11. நல்ல மனம் வாழ்க..

    பிற உயிர்களைக் காப்பதுவும் நல்லறம்..

    பதிலளிநீக்கு
  12. தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?!!

    பதிலளிநீக்கு
  13. பள்ளிக் காலத்தில் என்னை நாய் கடித்துவிட்டதால் நாயைக் கண்டாலே எப்போதுமே எனக்கு பயம்.

    பதிலளிநீக்கு
  14. What I write here is an outcome of my personal experience. Even the outskirts of Chennai is very dangerous during night rides especially when you are on two wheelers. Each street, even a small gully will have minimum 5 ~ 7 stray dogs and its always a nightmare crossing them. Even last week my son was chassed by three street dogs near my house in Adambakkam, fell from his bike and got injured. Sorry to say that I am scared of street dogs which obviously results in hatred.

    பதிலளிநீக்கு
  15. Its tricky... Of course no one has any right to harm others unless extremely threatened. But, increasing number of common dogs leads to some sort of problem to the public as these are not trained / handled by one/two persons.

    It's a part of life.

    Eswaro Rakshathu !

    பதிலளிநீக்கு
  16. ஹூம்! நம்ம அம்பத்தூர் வீடு இந்தச் செல்லங்களுக்கு பிரசவ ஆஸ்பத்திரியாகவே இருந்திருக்கு! அப்படி இருக்கையில் நாய் வண்டிக்காரங்க வந்தாலும் நம்ம வீட்டுக்குள்ளே தைரியமா வந்துடுவாங்களா என்ன? ஹாஹாஹாஹாஹா!

    அது சரி, நெ.த. அம்பேரிக்காவிலிருந்து இடுகைனு எழுதி இருக்காரே! அது யாருங்க? :) அம்பேரிக்காவிலிருந்து நீங்க தான் எழுதி இருக்கீங்களோ?

    பதிலளிநீக்கு
  17. நேத்து மத்தியானம் வரை வந்து பார்த்தால் இங்கே ஒண்ணையும் காணோம். புதிரும் வரலை. கௌதமனோ முகநூலில் ஓட்டுச் சேகரித்துக் கொண்டிருந்தார். அதனால் லீவு போலனு நினைச்சேன். பார்த்தா சாயங்காலமா/ராத்திரி(?) பதிவு வெளியிட்டிருக்கீங்க! அநியாயமா இல்லையோ! :)

    பதிலளிநீக்கு
  18. http://sivamgss.blogspot.in/2008/02/p.html

    நம்ம அனுபவம் கொஞ்சம் போல, மாதிரிக்கு! பாம்புகளையே வளர்த்திருக்கோமாக்கும்! :)

    பதிலளிநீக்கு
  19. உங்கள் கருணை உள்ளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  20. நாய்கள் என்றாலே கேவலமாக சித்தரிக்கிறது நமது இதிகாசங்கள் விரைவில் அது பற்றி எழுதுவேன் நான் பயிற்சியில் அம்பர் நாத்தில் இருந்த போதுகாலை ஜாக்கிங் செய்ய போகும்போதுகையில் ஒரு தடியுடனோடுவேன் நாய்கள்துரத்தும்

    பதிலளிநீக்கு
  21. சாரி ஸ்ரீராம்....நான் பதிவு வெளியானதும்...வண்டி, வைரவர்களைப் பார்த்ததும்....மனம் கஷ்ட்டமாகி போய்விட்டேன்.....கமெண்டிட வருத்தமாக இருந்தது...அப்புறம் நம்ம அட்டெண்டன்ஸ் வேணுமெனு....இப்பத்தான் தைரியமா படிச்சு முடிச்சேன்...ஒட்டு உங்களுக்கே...ஆனால் மற்ற செல்வங்களை நினைத்து வருத்தம்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. வாங்க நெல்லை.. புதன் புதிர்க்காரர் நீண்ட விடுப்பில் இருக்கிறார். எனவே ஒரு பதிவு. பழகாத நாய்களிடம் பயப்பட்டிருக்கிறீர்கள். இவை எல்லாமே நன்கு பழகிய நாய்கள். ஏனோ எனக்கு பழகாத நாய்களிடமும் பயம் கிடையாது! அதிகாலை நடைப்பயிற்சி சென்ற நாட்களில் புதிய நாய்கள் எல்லாம் வந்து பயமுறுத்தி இருக்கின்றன என்னை. நான் பயப்பட்டதில். இதை என் நடக்கும் நினைவுகள் தொடரில் கூட எழுதி இருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை பயமே வேண்டாம்...கையில் பிஸ்கட் வைத்துக் கொள்ளுங்கள்...அங்கங்கே போடுங்கள். ஒன்று எல்லாம் அதை எடுக்க ஓடும்...இல்ல என்றால் அதுகளுக்குள் சண்டை போடும்...நீங்கள் பாட்டுக்குப் கண்டுக்காமல் கையை நன்றாக விரித்து என் கையில் ஒன்றுமல்ல என்பது போல் சென்றுவிட்டா ல் அவை போய்விடும்.....ஹிஹிஹி ரொம்வ ப்ரோசீஜர் சொல்றேனோ....ஹஹஸ்

      நீக்கு
    2. கீதா என்று முடிப்பதற்குள் கமெண்ட் போயிடுச்சு....

      நீக்கு
  23. வாங்க கோமதி அரசு மேடம். இன்று செய்தித்தாளில் நாய்களை பிடிக்கும் செயலுக்கு ஏதோ தடை விதித்திருக்கிறது நீதிமன்றம் என்று படித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க .ராமலக்ஷ்மி. அது என்னிடம் வந்து உதவி இன்னும் கண்களில் நிற்கிறது! ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  25. வாங்க ராஜி.. சரியா தவறா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்!

    பதிலளிநீக்கு
  26. வாங்க ரமணி ஸார். ஆமாம், காட்டிக்கொடுக்க மனம் வரவில்லை!

    பதிலளிநீக்கு
  27. அன்பே சிவம் கமெண்ட் போட்டு அழித்து விட்டார். எனக்குப்புரியவில்லை என்று சொல்ல வந்தேன். கமெண்ட்டே காணோம்!

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஏகாந்தன் ஸார்.. அப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடுமா அந்த நாலுகால் ஜீவனுக்கு?

    பதிலளிநீக்கு
  29. வாங்க காமாட்சி அம்மா. எங்கள் அலுவலகத்தில் நிறைய பேர் நாய் எதிர்ப்பாளர்கள்.அது ஒரு கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  30. வாங்க மஹி.. மனிதன் தான் வாழ மட்டும்தான் இந்த பூமி என்று நினைக்கிறான். அதுதான் கஷ்டம்!

    பதிலளிநீக்கு
  31. வாங்க கில்லர்ஜி. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  33. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க மிகிமா... மனதுக்குள் பாட்டாவே படிச்சுட்டேன் உங்கள் பின்னூட்டத்தை!

    பதிலளிநீக்கு
  35. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க தமிழ் இளங்கோ ஸார். நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க kurukku Muttan. முதல் வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவம் வேறு போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  38. வாங்க மாதவன். நியாயங்கள் புதிரானவை!

    பதிலளிநீக்கு
  39. வாங்க கீதாக்கா. 'பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே' என்கிற டி எம் எஸ் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன! பூத்திருக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்! எனவே வேறு பதிவு போட்டு விட்டேன். இனி புதிர் வருமா என்பது புதிர்தான்!

    பதிலளிநீக்கு
  40. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஜி எம் பி ஸார். உங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன். நாய்களைக் கல்லாலோ,, வேறு எதாலுமோ அடிப்பவர்களைக் கண்டால் கோபம் வரும் எனக்கு!!!

    பதிலளிநீக்கு
  42. வாங்க கீதா.. மனக் கஷ்டப்படும்படி ஒன்றும் நான் எழுதவில்லையே.. சுபமாய்த்தானே முடித்த்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  43. ஸ்ரீராம் கஷ்டப்பட்டது முதலில்.....வண்டியைப் பார்த்ததும்....அப்பிரம் முழுசும் படிச்சுட்டு உங்களுக்கு ஓட்டுன்னு சொல்லிட்டேனேயே....

    அடுத்த கமெண்ட் உங்களுக்கு நன்றிசொல்லி போட்டேன்....அந்தக் கருத்து போட்டு....அதுபோகவே இல்ல...அது வேற ஒன்னும் இல்ல.....உங்களுக்கு நன்றி சொல்லிஇருந்தேன்...அந்தச் செல்லத்தைக் காப்பாற்றியதற்கு....அந்த கமெண்டு வெளியாகாமல் படுத்தியது.....இதோ இப்பத்தான் மீண்டும் டைப்...

    கீதா

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம் எங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறோம். தெரு நாய்கள் என்றால் கொஞ்சம் பயம் தான். நீங்கள் செய்த செயல் மிகவும் நல்ல செயல். ஆனால் நான் செய்திருப்பேனா என்று தெரியவில்லை. பிடித்துக் கொண்டு போகட்டும் என்றுதான் நினைத்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  45. தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா. புதிய ஏரியாவில் நான் சந்திக்கும் நாய்களிடமும் எனக்கு 90 சதவிகிதம் பயம் இருந்ததில்லை. சில சமயங்களில் எச்சரிக்கை உணர்வு ஏற்படும். கட்டிப்போட்டே வளர்க்கப்படும் நாய்களுக்கு கோபம் அதிகம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  46. நடந்ததை கண் முன்னே காட்டியது போல் இருந்தது. இப்படி செய்ய பீட்டா வில் இருக்க வேண்டும் என்பதில்லை.

    கேள்விக்கு பதில் சரியே!!!

    பதிலளிநீக்கு
  47. இத்தகைய அனுபவம் எனக்கும் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்டிருக்கிறது. அந்த நாய்க்கு ‘வடிவு’ என்று பெயரிட்டிருந்தோம். முனிசிபாலிட்டி வண்டி வந்து கழுத்தில் கம்பிச்சுருக்கு போட்டு இழுத்துக் கொண்டு போனபோது கொஞ்ச நேரம் வண்டியின் பின்னாலேயே ஓடினேன். ஆனால், தற்போது நான் வசிக்கும் பகுதியில் பல நாய்களால் தொந்தரவு மிகுந்து விட்டது. எனக்கே கார்ப்பரேஷனுக்குத் தகவல் கொடுக்கலாமா என்று ஒரு எண்ணம் வந்து விட்டது. காலம்தான் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது. :-)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!