Wednesday, August 30, 2017

புதன் புதிர் 170830 - சொல்லமுடிந்தால் நீங்கள் கில்லாடிதான். - நெல்லைத்தமிழன்
1.  யாருடைய எழுத்து போல் தோன்றுகிறது?  


கீழே உள்ள மூன்று பத்திகள் மூன்று எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்கள் யாராக இருக்கக்கூடும்?


(அ)  இவை போதாதென்று ஸாடிஸமும்…   எரியும் சிகரெட்டைத் திறந்த மார்புச் சதையில் வைத்து தேய்த்து அணைப்பதும், சுடும் சாம்பலை வயிற்றுப் பிரதேசத்தில் தட்டுவதும், உடம்பு வலிக்கிறது என்று சொன்னாலும் விடாமல் துன்புறுத்துவதும், பசிக்கிறது என்றால் சாப்பிடப் போகவிடாமல் தடுப்பதும்… இவையெல்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் ஸாடிஸம் இல்லாமல் வேறு என்ன?  எதுவும் புரியாத சின்னக் குழந்தையாய், ரொம்ப நேரத்துக்குப் பரிதவித்து அழுதுவிட்டு, சாரு பாத்ரூமுக்குள் சென்று குஸளிர்ந்த நீரில் முகம் கழுவி ஒரு வழியாத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். அன்று எடுத்த தீர்மானத்தின்படி பல்லைக் கடித்துக்கொண்டு அடுத்து வந்த மாசங்களைக் கடத்தினவன், இனி நிச்சயமாய் இந்த ஆளை மாற்ற முடியாது என்ற ஆயாசம் தோன்றியதும், பழையபடி வேலைக்குப் போனால் என்ன, அட்லீஸ்ட் சில மணி நேரங்களாவது நிம்மதியாய்க் கழிக்கலாமே என்று எண்ணி சுரேஷிடம் பேச, அவன் எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை போட்டான். ‘வேலைக்கா? திரும்பவுமா? வொய்? நா சம்பாதிக்கற பணம் உனக்குப் போதலையா?”  “பணத்துக்காகத்தான் வேலைக்குப் போகணுமா சுரேஷ்?”


(ஆ)  நான்கு திசை நாடுகளிலிருந்தும் நானாவித நாவாய்கள் நங்கூரம் பாய்ச்சி அலைகளில் நடனமிடும் காரணத்தால் நயனங்களுக்கு மிக இனியதும், நாலாவித சமயங்களுக்கும் இடங் கொடுத்ததால் இதயத்துக்கும் அமைதியளிப்பதும், நாகலிங்க மரங்கள் கரையோரமாகக் கூட்டம் கூட்டமாகக் காணப்பட்டதால் சோழ மன்னர்களின் சிவபக்திக்கு அடையாளமாக விளங்கியதும், புத்தவிஹாரமான சூடாமணி விஹாரம் முழுவதும் கட்டப்படாவிட்டாலும், முக்கால்வாசி எழும்பியதாலேயே அதன் கலைத்தன்மையின் சிறப்பை விளக்கி, கடற்கரையின் கலங்கரை விளக்கம்போல புத்த சமயத்துக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் தெரிந்ததும், அந்த விஹாரத்தால் பேரழகு பெற்றதுமான நாகையின் கடற்கரை அன்று விடியற் காலையில் இயற்கையின் பொலிவை எல்லாம் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்ததென்றாலும், அந்த அழகு எதுவும் நாகர் குலத்தவனான உபேந்திரன் மனத்தை அணுவளவும் தொடவில்லை.


(இ)  ‘வாழ நினைத்தால் வாழலாம்’ எனும் கண்ணதாசன் பாட்டுக்கு உரிய வியாக்கியானம்-

‘வாழ்க்கை எனும் ஒரு சொல்லுள் ஒளிந்துகிடக்கிறது. அதனை ஓர்வார், வெற்றித் தேரில் ஊர்வார்! வறுமையிலேயே வாட்க்கொண்டு, வாழ்க்கை தமக்கு வாய்க்கவில்லையே என – மூக்கைச் சிந்துவோருக்கு எல்லாம் ஒன்று சொல்வேன்.

“ஊழிற் பெருவலி யாவுள” என்பது, ஒருபுறம் இருக்கட்டும், ‘வாழ்க்கை’ எனும் சொல்லை – அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பாருங்கள்….
அந்த ஊழ், ஆகும் கூழ்!
நொந்தாரையும்; நொந்து நொந்து வெந்தாரையும் பார்த்து…
வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது ‘வா’ என்று:
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து ‘வாழ்’ என்’கிறது
எதை நம்பி என்ன்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை ‘கை’ என்று;

அதுமட்டும் அல்ல, கைகொண்டு உழைத்தாலும், காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது – முதல் எழுத்தும், மூன்றாம் எழுத்தும், நான்காம் எழுத்தும் சேர்ந்து ‘வாக்கை’ என்று;

மேற்சொன்ன கருத்தை உள்வாங்கி உழைத்தால் – நீ பெறுவது என்னவென்ன்று முதல் எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்கிறது ‘வாகை’ என்று!

‘வா’, ‘வாழ்’, ‘கை’, ‘வாக்கை’, ‘வாகை’ – எனும் அய்ந்து சொற்களைத் தன்னுள் சூல்கொண்டு நிற்கும் ஒரே சொல் ‘வாழ்க்கை’!


==================================================================================


2.  எழுத்தாளரின் நாவல்/சிறுகதை திரைப்படமாக வந்ததில் உங்களுக்குத் தெரிந்தது சொல்லுங்கள். யார் அதிகமான விடை தருகிறார் என்று பார்க்கலாம். ஒரு உதாரணம், ‘சிறை’-அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து வந்தது.


=================================================================================


3.  இந்தப் படங்களில் சேராதது, அல்லது தனித்து நிற்பது எது? இந்தத் திரைப்படங்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?

தூக்குத் தூக்கி
சதி லீலாவதி
நந்தனார்
வாழ்க்கை


=======================================================================================


4.  இந்த ஓவியம்(?) அல்லது புகைப்படம் – யார் வரைந்திருக்கக்கூடும் அல்லது யார் புகைப்படம் எடுத்திருக்கக்கூடும்? ஃபேமஸ் ஆள்தான். எந்தப் பத்திரிகையில் வெளியானது என்று சொல்லமுடிந்தால், நீங்கள் கில்லாடிதான்.
=====================================================================================அன்புடன்

நெல்லைத்தமிழன்75 comments:

பால கணேஷ் said...

முதல் பத்தி சிவசங்கரி - மேபி சுறாமீன்கள் நாவல்னு நினைப்பு. ரெண்டாவது பத்தி சாண்டில்யன் - நாகதேவி நாவல்ல இருந்து. மூணாவது.... ங்ஙே...

பால கணேஷ் said...

திரைப்படமாக வந்த நாவல்கள்ன்னா.... மகரிஷியின் பத்ரகாளி, புவனா ஒருகேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், என்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சுஜாதாவின் ப்ரியா, காயத்ரி, இது எப்படி இருக்கு, உமாசந்திரனின் முள்ளும் மலரும். இன்னும்.... யோசிக்கறேன்.

பால கணேஷ் said...

நந்தனார் கதை ஒட்டாததுன்னு நினைக்கறேன். மத்த மூணுக்கும் உள்ள ஒற்றுமை பொம்களைங்களாண்ட உசாரா இருந்துக்கடா மவனேன்றது. இது ஒண்ணு மட்டும் உம்மாச்சி பக்தி. கரீக்ட்டா..?

பால கணேஷ் said...

படத்தை வரைந்தவர் ரங்கநாதன் என்கிற ஓவியர் மாருதி. மே பி அவர் கல்யாணப் பத்திரிகையில வரைஞ்சிருக்கக் கூடும்.

பெசொவி said...

நந்தனார் என்ற பெயரில் ஒரு படம் மட்டுமே வந்துள்ளது. மற்ற படங்கள் ஒரே பெயரில் இருமுறை வந்துள்ளன. இது வேறுபாடு.

பால கணேஷ் said...

வாஸந்தியின் ஜனனம் நாவல் யாரோ எழுதிய கவிதை என்றும், கலைமணியின் தில்லானா மோகனாம்பாள் அதே பெயரிலும், ராவ்பகதூர் சிங்காரம் விளையாட்டுப் பிள்ளை என்ற பெயரிலும், அகிலனின் கயவியி, ஸாரி, கயல்விழி நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றும் அனுராதாரமணனின் கூட்டுப் புழுக்கள் நாவல் அதே பெயரிலும், வேறொரு நாவல் ஒரு மலரின் பயணம் என்றும் திரைப்படமாக வெளிவந்தன.

Bhanumathy Venkateswaran said...

1. சிவ சங்கரி - பாலங்கள் நாவல் என்று நினைக்கிறேன்.
2. சாண்டில்யன்

KILLERGEE Devakottai said...

நந்தனார் + தூத்து தூக்கி இரண்டும் தனித்து நிற்கிறது.

KILLERGEE Devakottai said...

தூக்கு தூக்கி.

Geetha Sambasivam said...

ஹையோ, முதல்லேயே பார்க்காமல் போயிட்டேன். இப்போ அநேகமா கணேஷ்பாலா எல்லாம் சொல்லிட்டார்.

Bhanumathy Venkateswaran said...

Kalki - Tiyaga boomi, parthiban kanavu
Sivasangari - Oru singam muyalagiradhu(Avan Aval Adhu),Nandu,Kutti
Maniyan - Idhya Veenai, Mogam mupadhu varusham,and another film in which Kamal Hassan, Gemini Ganesan and Sujatha acted and was directd by Gemini Ganesen
Pushpa Thangadurai - Oru Oodhapoo kan simittugiradhu
Bagyaraj wrote Mouna Ragam in a weekly as a serial and didn't write the end(climax).Similarly Bharthiraja also wrote one of his film's story as a serial in Kalki.
Uma chandran - Mullum malarum
Maharishi - bhuvana oru kelvikuri, Oru oodai nadhiyagiradhu.
Sujatha - Gayatri, Jannal malar, Priya, karaiyellam shenbagapoo.Even the Alai payudhe was written by him in Kalki Deepavali Malar as a short story in the name 'Maniviyai thedi'
Marina's 'Thani Kudithanam' was published as serial(drama)in A.V.,later staged as drama and then it came as a film.
Let me think and come back.

Bhanumathy Venkateswaran said...

First I typed all answers in Tamil and sent via phone, it didn't came(Grrrr).That's why typed in English

Bhanumathy Venkateswaran said...

T.Janakiraman - Moga mull

நெல்லைத் தமிழன் said...

இன்னும் எந்தக் கேள்விக்கும் யாரும் முழுமையான விடைகள் தரவில்லை. கீ.சா போன்றவர்கள் தப்பிக்க நினைக்க வேண்டாம். விடைகள் இதே இடுகையில் நாளை IST 19:00க்குள் வெளியாகும்.

பால கணேஷ் said...

அப்புறம்,ராஜேந்திரகுமாரின் வணக்கத்திற்குரிய காதலியே நாவல் அதே பெயரிலும், நரகத்துக்குப் புதியவன் நாவல் மூடுபனி என்றும் படமானது. அப்புறம் மகரிஷியின் நதியைத் தேடி வந்த கடல், அப்புறம் லட்சுமி எழுதிய பெண்மனம் நாவல் இருவர் உள்ளம என்ற பெயரில் படமானது. புஷ்பா தங்கதுரையின் லீனா மீனா ரீனா நாவல் அந்த ஜுன் 16ம் நாள் என்ற பெயரில் படமானது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போட்டிக்கு நான் வரவில்லை. அப்படியென்றால் வெற்றி பெற்றதாகத்தானே அர்த்தம்?

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பத்தி சிவசங்கரி! இரண்டாவது பத்தி சாண்டில்யன். மூன்றாவது...இருங்கள் மனதில் படுகிறது டக்குனு வரலை...மீண்டும் வருகிறேன்...

படங்களில் தனித்து இருப்பது நந்தனார். ஒற்றுமை தெரியய்வில்லை...

நிறைய கதைகள் திரைப்படங்களாக வந்துள்ளன...சிதைக்கப்பட்டும் உள்ளன...அந்த லிஸ்டும்

இது எப்படி இருக்கு
ப்ரியா
காயத்ரி (இதைப் பற்றி சில வாரங்களுக்கு முன் ஸ்ரீராம் சொன்னார்...ஸ்ரீராம் நன்றி!)
கரையெல்லாம் செண்பகப்பூ
வானம் வசப்படும்
ஆனந்த தாண்டவம்
விக்ரம்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
யாருக்காக அழுதான்
சில நேரங்களில் சில மனிதர்கள்
உன்னைப் போல் ஒருவன்

பாவை விளக்கு
பார்த்திபன் கனவு
கள்வனின் காதலி
தியாக பூமி

தில்லானா மோகனாம்பாள்

இருவர் உள்ளம்,
காஞ்சனா
மோகமுள்
மோகம் முப்பது வருஷம்
புவனா ஒரு கேள்விக்குறி
அணையா விளக்கு
பொன்னர் சங்கர்
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
உதிரிப்பூக்கள்
சொல்ல மறந்த கதை

நண்டு,
அவன் அவள் அது
47 நாட்கள்

திகம்பர சாமியார்


வணக்கத்துக்குரிய காதலியே
குற்றம் 23

இன்னும் உண்டு....டைப் பண்ண முடிலப்பா...

இதில் பல படங்கள் துளசியின் உபயம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த ஓவியம்/புகைப்படம் பி சுசிலா!! மத்தது தெரியலை ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை அந்த மூன்றாவது நினைவுக்கு வந்துவிட்டது வாலி என்று நினைக்கிறேன். அவர் ஒரு தொடர் ஆவியில் எழுதி வந்தார். ஆனால் நான் தொடர் முழுவதும் வாசித்ததில்லை. ரயிலில்/பேருந்தில் பயணிக்கும் போது ஆவி வாங்குவதுண்டு. அப்படி ஏதோ ஒரு முறை வாங்கியதில் வாசித்த நினைவு.

கீதா

கோமதி அரசு said...

அ. ராஜேந்திரகுமார்
ஆ. பொன்னியின் செல்வன்
இ. பாலகுமரன்

கடைசி படம் ஜோதிர்லதா கிரிஜா என்று நினைக்கிறேன். (காதில் வளையம், கோண வகிடு அவர்கள்தான் என்று சொல்கிறது)
அல்லது உமாசந்திரன்.

கல்கியின் கள்வனின் காதலி படமாய் வந்து இருக்கிறது, பார்த்திபன் கனவும் வந்து இருக்கிறது.
காயத்திரி சுஜாதா
தியாகு சிவசங்கரியின் கதை (மனிதனின் மறுபக்கம்)

மோகமுள்-ஜானகி ராமன்

Thulasidharan V Thillaiakathu said...

த ம சுற்றிக் கொண்டே இருக்கு. விழுந்ததா தெரியவில்லை....

கீதா

கோமதி அரசு said...

நிறைய பேர் சொல்லி விட்டார்கள்.

Bhanumathy Venkateswaran said...

Lakswhmi's Pen manam novel was made as Iruvar ullam(Sivaji ganesen & saroja Devi)

Rajendra Kumar's 'Vanakathukuriya Kadhaliye'novel was made as a movie in the same title staring Rajinikanth&Sridevi(double role) by A.C.Trilokchander.

Manian's Ilavu katha Kiligal came as 'sollathan ninaikiren' by K.Balachander.

R.K.Narayan's famous novel 'The Guide' came in the same title. Even Devadas and Chemeen(by Thagazhi Sivasangara Pillai) are novels made as movies.

In English also so many novels were made as movies. Mario Puzo's God father, Arther Hailey's 'Airport' Sidney Sheldon's 'Blood line', 'If tomorrow comes'are some examples.

Movies like Jazz, Exorcist were also published as novels first,and then made as movies.

Recently the famous Harry Potter written by J.K.Rowling.

Bhanumathy Venkateswaran said...

கே.பாலசந்தர் ஒரு வீடு இரு வாசல் என்று இரண்டு கதைகளை ஒரே படத்தில் எடுத்திருந்தார். அதில் முதல் கதை அனுராதா ரமணனுடையது.அதன் முடிவு தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். கணேஷ்,குமரேஷ் நடித்திருந்த படம் அது.

Bhanumathy Venkateswaran said...

1.
அ. சிவசங்கரி. கதை 'பாலங்கள்'.
ஆ. சாண்டில்யன்
இ. வாலி என்று தோன்றுகிறது. அல்லது சாரு நிவேதிதா(ஹி ஹி)

3.சதி லீலாவதி, எம்.ஜி.ஆரின் முதல் திரைப் படம், நந்தனார் கே.பி.சுந்தராம்பாளின் முதல் திரைப் படம், வாழ்க்கை வைஜெயந்தி மாலாவின் முதல் திரைப்படம், ஆக தூக்குத் தூக்கித்தான் தனித்து நிற்கிறது.

4. கணித மேதை சகுந்தலா தேவி.

விஜய் said...

விடை எனக்கு தெரியவில்லை. உங்களின் விடையாக காத்திருக்கிறேன்
தமிழ் செய்திகள்

ஸ்ரீராம். said...

//உங்களின் விடையாக காத்திருக்கிறேன் //

அப்போ எல்லாக் கேள்விகளுக்கும் விஜய் தான் பதிலா?!!

ஏகாந்தன் Aekaanthan ! said...

புதிருக்குப் பொதுவாக எதிர்ப்பக்கத்தில் நின்று வேடிக்கைப்பார்ப்பவன் நான். இருந்தும், எழுத்தாளர்களைப்பற்றி எழுதிவிட்டீர்களே என்று படித்துப்பார்த்தால், பெரிதாக என்னிடம் விடையில்லை.

பத்துவரிகளில் ஒரே வாக்கியத்தை உன்னதமாகச் செலுத்தும் ஒரு எழுத்தாளர் சாண்டில்யன் என்பதில் சந்தேகமில்லை{1(ஆ)}. பெண் எழுத்தாளர்களில் கொஞ்சம் லக்ஷ்மி, வாசந்தி, இந்துமதி என்று ஆரம்பித்து, சல்மா, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை எனக் கவிதைப்பக்கம் தாவிவிட்டேன். சிவசங்கரி, ரமணிசந்திரனையெல்லாம் நான் அடையாளம் காண வாய்ப்பேயில்லை!

சினிமாப்படங்களைப்பற்றி சொல்ல நிபுணர்கள் நம்மிடையே நிறையவே இருக்கிறார்கள்!

அந்தக் கருப்பு-வெள்ளைப்படம் - பார்க்கப் பார்க்கக் குழப்பம்தான் அதிகமாகிறது. நிறுத்திக்கொள்கிறேன்..!

Geetha Sambasivam said...

பாதிக்கும் மேல் எல்லோரும் சொல்லியாச்சு! இனிமேல் இதிலே ஆர்வம் எப்படி வரும்? அதுவும் சினிமா விஷயத்தில் பானுமதி ஒரு லிஸ்டே கொடுத்திருக்கார்! :)

Iyappan Krishnan said...

ஓவியம் - பிரபல ஓவியர் மாருதி

புலவர் இராமாநுசம் said...

நான் வரவில்லை! த ம 8

G.M Balasubramaniam said...

இதிலெல்லாம் ஆராய்ச்சியா முடியலை சாமி

athira said...

ஆவ்வ்வ்வ்வ் கீதா... கதை லிஸ்ட் படிச்சு நா.. அப்படியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:).. எனக்கு ஸ்ரோறி புக்ஸ் நிறையப் படிக்கப் பிடிக்கும்... நீங்கள் சொன்னதில் சிலது படித்திருக்கிறேன்.. உதிரிப்பூக்கள் படம் 5 தடவைகள் வரை பார்த்து விட்டேன்ன்...

ஸ்ஸ்ஸ்ஸ் புதிரை விட்டிட்டு என்னமோ பேசுறேன் என நெல்லைத்தமிழன் அடிக்கப்போறார்ர்..:)

athira said...

இம்முறை நான் புதருக்குள்.. வெரி சோரி.. பல்லுத்தடக்கிட்டுது.. புதிருக்குள் வரமாட்டேன்ன்ன்:) கிஃப் அப் பண்ணிடுறேன்:).. இனிமேல் புதிர் போடும்போது சுவீட் சிக்ஸ் டீன் ஆட்களும்... மன்னிக்கவும் சுவீட் 16 உம்(இங்கின நான் மட்டும்தானே:)) பதில் சொல்லக்கூடியமாதிரிப் புதர்.. சொறி புதிர் போடும்படி கனம் கோட்டார் அவர்களைக் கேய்ட்டுக்கொள்கிறேன்_()_.

கோமதி அரசு said...

மகரிஷியின் கதை சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு என்று படமாச்சு, சிவகுமார், ஸ்ரீதேவி, சத்தியகலா நடித்தார்கள், கதையின் பேர் மறந்து விட்டது.
செம்மீன் படம் தகழிசிவசங்க்கபிள்ளை கதை சினிமாவானது.

கோமதி அரசு said...

தகழி சிவசங்கர பிள்ளை

கோமதி அரசு said...

ஆயிரம் வாசல் இதயம் படம்- கதை தாமரை மணாளன்.
ஒரு மலரின் பயணம் - அனுராதா ரமணன்

கோமதி அரசு said...

நந்தனார் மட்டும் தனித்து நிற்கிறது. மற்ற மூன்று படங்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது அதை பாலகணேஷ் சொல்லி விட்டார்.

Bagawanjee KA said...

கடைசி படம் ,கவிக் குயில் சரோஜினி நாயுடு மாதிரி இருக்கே :)

திருமாறன் said...

1 அனுராதா ரமணன்
சாண்டில்யன்
வலம்புரி ஜான்.

Angelin said...

எழுத்தாளர் ஜெயகாந்தனை அவரது படங்களையும் ஒருத்தரும் சொல்லலியே ..??இல்லை நான்தான் ட்ரெயின் ஸ்டார்ட் ஆனதும் ஓடிவந்து ஏறிட்டேனோ :) அதான் அரைகுறையா கேள்விகளை படிச்சிட்டு எழுதறேனான்னு டவுட்
எதுக்கும்

சில விடைகளை எழுதிட்டு போறேன்
சில நேரங்களில் சில மனிதர்கள்
யாருக்காக அழுதான்
நடிகை நாடகம் பார்க்கிறாள்

Angelin said...

ஹாஹாஆ இப்போதான் பார்க்கிறேன் கீதா எழுதினதை ஓகே ஓகே :) லேட்டா பின்னூட்டத்தை பார்த்தேன்

Angelin said...

குற்றம் 23 ..ராஜேஷ்குமார்

Angelin said...

ஹை யாருக்குமே சேத்தன் பக்கத்தும் நண்பர்கள் படமும் ஞாபகம் வரல

Thulasidharan V Thillaiakathu said...

//உங்களின் விடையாக காத்திருக்கிறேன் //

அப்போ எல்லாக் கேள்விகளுக்கும் விஜய் தான் பதிலா?!!// ஹாஹாஹாஹாஹாஹா ...ஸ்ரீராம் நான் அதை வாசித்துவிட்டு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க...

கீதா

Angelin said...

அறிஞர் அண்ணாவின் படைப்புக்களும் சினிமாவா வந்திருக்கணும் மாடி வீட்டு ஏழை ஓர் இரவு
ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சி விட்ருங்க :)

Angelin said...

விசாரணைன்னு ஒரு படம் அதுவும் ஒரு நாவலை தழுவி வந்தது


Thulasidharan V Thillaiakathu said...

ஆவ்வ்வ்வ்வ் கீதா... கதை லிஸ்ட் படிச்சு நா.. அப்படியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:).// ஹாஹாஹா அதிரா அதான் ஷாக் ஆனதுனாலதான் புதருக்குள்னு வந்துருச்சு போல ஹிஹிஹிஹி

உதிரிப்பூக்கள் (சிற்றன்னை-கதை) ஐயோ கண்ணீர் தாரை தாரையாக வந்து....ரொம்ப எமோஷனல் படம் மகேந்திரன் டைரக்ஷன் அழகா இருக்கும்...

பானுக்கா கொடுத்தறக்கறத பாதக்கலையா மயங்கியிருப்பீங்க...நான் விட்டதெல்லாம் சொல்லிருக்காங்க...

கீதா

ஜீவி said...

வெகு பிரமாதமாக முயற்சி செய்திருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்...

கோமதி அரசு அவர்களுக்கு மட்டும் ஒரு நினைவூட்டல்.. மகரிஷியின் கதையின் பெயர் தான் 'சாய்ந்தாடம்மா.. சாய்ந்தாடு'.. குமுதத்தின் மாத இதழான மாலைமதியின் குறுநாவலாக வெளிவந்தது.

கோமதி அரசு said...

ஜீவி சார் உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி. 73லிருந்து 80 வரை மாலை மதி வாங்குவேன்.

அதன் நினைவுதான். படம் பேரும் அதுதானா?

Geetha Sambasivam said...

@Angelin,"மாடி வீட்டு ஏழை" என் நினைவைப் பொறுத்தவரையில் ஆங்கில நாவல் ஒன்றைத் தழுவி கவியோகி சுத்தானந்த பாரதியாரால் தமிழாக்கம் செய்யப்பட்டது! Victor Hugo Nove "Les Miserables" என நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

நான் சொல்வது தப்பாயும் இருக்கலாம். ஆனால் "மாடி வீட்டு ஏழை" என்ற பெயரில் சுத்தானந்த பாரதி எழுதி இருப்பது மட்டும் தெரியும்.

கோமதி அரசு said...

ரங்கோன் ராதா, வேலைக்காரி, ஒர் இரவு இவை திரு. அண்ணாதுரை அவர்கள் கதை படமாக்க பட்டது.

கோமதி அரசு said...

ஏழைபடும்பாடு தான் ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன் ஜாவர் சீத்தாராமன் காவல் உயர் அதிகாரி, ஏழை நாகைய்யா.
ஏழைபடும் பாடு கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதியது.

கோமதி அரசு said...

மாடிவீட்டு ஏழை சந்திரபாபுவின் படம். அதனால் மாடி வீட்டு ஏழையானார் என்பார்கள்.

நெல்லைத் தமிழன் said...

எனக்கு ரொம்ப நாள் காக்கவைக்கும் எண்ணமில்லை. அப்புறம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமே போய்விடும். இங்கு முயற்சி செய்தவர் அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்தப் புதிர்களைத் தொகுக்கும்போது, இது இன்டெரெஸ்டிங் ஆக இருக்குமா என்று தோன்றியது. வாசகர் வட்டத்தைவைத்து, ரொம்ப கடினமான கணக்குப் புதிர்லாம் போட்டா, மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் (அட சரியாச் சொல்லிட்டேனே.. ஆனா எழுதும்போது மாதவன் ராஜகோபாலன் என்றுதான் மனதில் வந்தது), பெசோவி, மாதவன் சகோதரர்கள் மட்டுமே பெரும்பாலும் பதில் சொல்கிறார்கள் (யாராகிலும் விட்டுப்போயிருக்கலாம், மன்னிக்க). அதுனாலதான் கதாசிரியர்கள், திரைப்படம் மற்றும் ஓவியத்தை எடுத்துக்கொண்டேன்.

மூன்று நாவல்களின் பகுதிகளைக்கொடுக்கும்போது, ஒன்றை சுலபமாக வைத்து மற்றவற்றைக் கொஞ்சம் கடினமாக வைத்தேன். அவரவர்களுக்குரிய நடை உள்ள பகுதியாக எடுத்துக்கொண்டேன். அதே சமயம் ஏதேனும் மெசேஜ் சொல்வதாகவும் இருக்கவேண்டும் என்று தோன்றியது.

அனுப்பிய உடனேயே, அதிர்ச்சிதரும் விதமா முதலிரண்டு ஆசிரியர்களின் பெயரை ஸ்ரீராம் சொன்னார். 'அட.. சரியான பகுதியைத்தான் கொடுத்துள்ளேன்' என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவரிடம் விடையைக் கன்ஃபர்ம் செய்யவில்லை.

வெளியிட்ட உடனேயே நண்பர் பாலகணேஷ் அவர்கள் சட சட என்று முயற்சித்ததைப் பார்த்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரும் சிலவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதில் கொஞ்சம் சந்தோஷம்தான். ஆனால், இரண்டாவது கேள்வி, கேஜிஜி சார் டைப்பான கேள்வி. ஆனாலும் பதில்கள்மூலம் நானும் நிறையத் தெரிந்துகொண்டேன். உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். ஜீவி சார் பதில் எழுதலையே என்பதில் கொஞ்சம் ஆச்சர்யம்தான் (முதல் மற்றும் நான்காவது கேள்விக்கு)

இப்போது ஒவ்வொரு கேள்விக்கான விடைகள்.

நெல்லைத் தமிழன் said...

1. அ. சிவசங்கரி - பாலங்கள் நாவல். இதில் 1907-1931, 1940-1964, 1965-1985 என்று மூன்று காலகட்டத்தில் மூன்று தலைமுறைகளைப் பற்றிய கதை. விகடனில் வந்தது. எல்லோரும் எண்ணுவதுபோலவே, 1907-31க்கு கோபுலுவும், 40-64க்கு மாருதியும், 65-85க்கு ஜெயராஜும் ஓவியம் வரைந்து அந்தக் காலகட்டத்தைக் கண்ணுள் கொண்டுவந்தார்கள். சிவசங்கரி அவர்கள் சாவியின் கண்டுபிடிப்பு என்று சொல்லவும் வேண்டுமோ? (பிரபல்யப்படுத்தியதில்)

1. ஆ - இந்தமாதிரி எழுத்துக்கு ஒரே ஒரு சொந்தக்காரர்தான். சாண்டில்யன் அவர்கள். நாகதேவி நாவலின் ஆரம்பம்தான் இது. சாண்டில்யன் அவர்கள், கல்கி ஆரம்பித்துவைத்த ராஜபாட்டையை, வெகு தொலைவு நீடிக்கச் செய்தார், தன்னுடைய கடுமையான உழைப்பின்மூலம். ஒரு நாவலுக்கு 20,000 பக்கம் (கையெழுத்துப் பிரதி) எழுதியிருக்கிறார் சாண்டில்யன் அவர்கள். என்ன ஒரு அசுர சாதனை.

1. இ. வாலி அவர்கள் - நினைவு நாடாக்கள் என்ற புத்தகத்தில். இதைக் கண்டுபிடிப்பது சுலபம் என்று நினைத்தேன். வாலி மட்டும்தான், அர்த்தமுள்ள முற்றெதுகையில் எழுதுவார். அவர்தான் ஓர்வார்-ஊர்வார், ஊழ்-ஆகும் கூழ், 'நொந்தாரையும்-வெந்தாரையும் என்றெல்லாம் எழுதுவார். வாசிக்கும்போது ரசிக்கமுடியும். அதனால் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன். (எதுகை மோனையில் இன்னொருவர் டி.ராஜேந்தர் அவர்கள், ஆனால் அது அலுப்பாக இருக்கும், ரசிக்கமுடியாது). வாலியுடைய அனுபவங்கள் புத்தகம், சிவகுமாரின் அனுபவங்கள் - நிறைய செய்திகளைத் தன்னகத்தே கொண்டவை. வாலியின் புத்தகத்தைப் படித்தால், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முன்னேற முடியும் என்பதும், சிவகுமாரின் அனுபவங்கள் நெருப்பின் நடுவேயும் நினைத்தால் எரியாக் கற்பூரமாக இருக்கமுடியும் என்பதும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கும்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்தவர்கள் பாலகணேஷ், பானுமதி வெங்கடேஸ்வரன், தில்லையகத்து கீதா ரங்கன், கோமதி அரசு, ஏகாந்தன் மற்றும் திருமாறன் ஆகியோர்.

முழுமையாக சரியான பதில்கள் சொன்னவர் தில்லையகத்து கீதா ரங்கன். இதில் இரண்டாமிடம் பாலகணேஷ் மற்றும் பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள். பாராட்டுகள். முயற்சித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நெல்லைத் தமிழன் said...

2. எழுத்தாளரின் நாவல்/சிறுகதை திரைப்படமாக வந்தது - இது கேஜிஜி சார் டைப் கேள்வியாகக் கேட்டேன். அதாவது நான் கொடுத்த உதாரணம் மிஸ்லீடிங் ஆக இருக்கவேண்டும் என்று. நான் நினைத்திருந்தேன், எங்கே 10-15 நாவல்களுக்கு மேல், தமிழ்த் திரைப்படம் வந்திருக்கப்போகிறது, ஒரு சிலர், 7வரை சொன்னாலே அதிகம். ஆனால், இதற்கு சரியான பதிலாக, 'ஏகப்பட்ட திரைப்படம் வந்திருக்கிறது. நூற்றுக்கும் மேலாகச் சொல்லமுடியும்' என்று சொல்லி, ஆங்கிலத் திரைப்படங்களை மேற்கோள் காட்டுபவர்கள்தான் 'சரியான பதிலை'ச் சொன்னவர்கள் என்று நான் எண்ணியிருந்தேன். (ஜுராசிக்பார்க், காட்ஃபாதர், லார்ட்ஸ் ஆஃப் தி ரிங்க்ஸ், ஹாரி பாட்டர் போன்று பலப் பல படங்களைக் குறிப்பிடலாம். அதிலும் சிலர் தவறு செய்வார்கள் என்று நினைத்தேன், முழுவதுமாக நாவலை அடியொற்றி வந்த படங்கள் மிகவும் குறைவு. காட் ஃபாதர் 1ஐச் சொல்லலாம்.). இருந்தாலும், தமிழ்த் திரையுலகில் வந்த ஏகப்பட்ட படங்களைச் சொன்னவர்கள் பாராட்டுக்குரியவர்கள். எனக்குமே நிறைய படங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

பாலகணேஷ், பானுமதி வெங்கடேஸ்வரன், தில்லையகத்து கீதா, கோமதி அரசு, அதிரா, ஏஞ்சலின் ஆகியோர் பதிலளித்திருக்கிறார்கள். சமீபத்தைய, 'பரதேசி' படத்தைக் குறிப்பிட மறந்துவிட்டீர்களா? ஆங்கிலப் படத்தையும் கோடிகாட்டிய பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்தான் சரியான விடையைச் சொன்னவர், பாலகணேஷ் பாராட்டுக்குரியவர்.

நெல்லைத் தமிழன் said...

3. படங்களில் சேராதது-தனித்து நிற்பது எந்தப் படம், கொடுத்துள்ள படங்களின் ஒற்றுமை என்ன? - சேராதது/தனித்து நிற்பது - இந்த மாதிரி கேள்விகளுக்கு பல பதில்கள் இருக்கக்கூடும் என்பதை நான் தவறவிட்டுவிட்டேன்.

ஒற்றுமை - இந்தப் படங்கள் பெயரில் 1 படத்துக்கு மேலே அதிகமான படங்கள் வந்துவிட்டன. நந்தனார் (கேபி சுந்தராம்பாள் நடித்தது, ஜெமினியின் தண்டபாணி தேசிகர் நடித்து வெளிவந்தது), தூக்குத்தூக்கி (ஒன்று பழைய காலத்தது இரண்டாவது எம்ஜியாருடையது), சதிலீலாவதி (எம்ஜியார், கமல்), வாழ்க்கை (வைஜயந்திமாலா-ஏவிஎம், சிவாஜி-அம்பிகா).

தனித்து நிற்பது- நந்தனார் - காரணம், மற்ற படங்களெல்லாம், தலைப்பு ஒன்றாக இருந்தாலும் கதை வேறு. ஆனால் இரண்டு நந்தனார் படத்திலும் கதை ஒன்றுதான்.

பாலகணேஷ், பெசோவி, கில்லர்ஜி, பானுமதி வெங்கடேஸ்வரன், கோமதி அரசு ஆகியவர்கள் விடை சொல்லியிருக்கின்றனர். முதல் கேள்விக்கு பாலகணேஷ், கில்லர்ஜி, கோமதி அரசு, பானுமதி வெங்கடேஸ்வரன் ஆகியோர் சரியான விடை சொல்லியிருக்கின்றனர். அதிலும் பாலகணேஷ், பானுமதி ஆகியோர் வெற்றி பெற்றவர்கள். இரண்டாவது கேள்விக்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

முயற்சித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

நெல்லைத் தமிழன் said...

4. ஓவியமா அல்லது புகைப்படமா, யார் வரைந்தது/எடுத்தது, எந்தப் பத்திரிகையில் வந்தது?

1963ல் குமுதம் எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள், பேஜன்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான காட்டுவாசிப் பெண்ணின் பாஸ்போர்ட் சைசில் இருந்த படத்திலிருந்து கண்களையும் சிரிப்பையும் கொண்டு ஒரு படத்தை ஓவியர் மாருதியிடம் வரைந்துதருமாறு கேட்டுக்கொண்டார். அந்த ஓவியம் குமுதம் அட்டைப்படமாக அப்போது வெளியிடப்பட்டது.

ஓவியரின் இயற்பெயர் வெ.ரங்கனாதன். சென்னைக்கு வந்த புதிதில், சினிமா விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்துகொண்டே குமுதம் இதழுக்கு ஓவியம் வரைந்துகொடுத்தபோது, இவரது பெயரிலேயே ஓவியம் வெளியானால் பணிபுரியும் இடத்தில் பிரச்சனை உண்டாகும் என்று நினைத்து, புனைபெயர் யோசிக்கும்போது ராயப்பேட்டையில் அவர் தங்கியிருந்த மேன்ஷனுக்கு எதிரே இருந்த மாருதி ஃபார்மசி என்ற பெயர்ப் பலகை கண்ணில் பட, அதையே தன்னுடைய பெயராகத் தேர்ந்தெடுத்தார்.

ஓவியர் பெயரைச் சொன்னது பாலகணேஷ் மற்றும் ஐயப்பன் கிருஷ்ணன் அவர்கள். (புதிய வாசகர்?). இருவருக்கும் பாராட்டுகள். முயற்சித்த மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நெல்லைத் தமிழன் said...

கோமதி அரசு - "மாடிவீட்டு ஏழை சந்திரபாபுவின் படம். அதனால் மாடி வீட்டு ஏழையானார் என்பார்கள்" - சந்திரபாபுவின் குண இயல்புகளைப் பற்றி இரண்டுவகையாகவும் படித்திருக்கிறேன். (கண்ணதாசன், அவரைப் போட்டுப் படமெடுத்தபோது, அன்றைய படப்பிடிப்புக்கு அழைக்க கண்ணதாசனே அவர் வீட்டுக்குப் போனபோது, வீட்டின் இன்னொரு வாசல் வழியாக சந்திரபாபு வெளியேறி கண்ணதாசனை முதல் முதலாக அழச் செய்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியிருக்கிறார்). அவர் மிகுந்த கலாரசனையும் கலையில் மனம் ஒன்றிவிடும் குணம் கொண்டவர். சிவாஜி மற்ற எல்லாரோடும் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தபோது, ராதாகிருஷ்ணன் பேச்சில் மயங்கி, அவர் மடியில் உட்கார்ந்து கன்னத்தைத் தடவிக்கொடுத்தார் (ப்ரோடாகால் மறந்து. ஜனாதிபதி அவர்களும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரசித்தார் என்றும் படித்திருக்கிறேன்)

சந்திரபாபு, அளப்பரிய பணத்தால் பெரிய வீட்டைக் கட்டி, கார், நேராக முதல் மாடி படுக்கை அறைக்கே நேராக வரும்படி வகை செய்து வீடுகட்டினார். அதைப் பார்த்து பல திரையுலகத்தினர் வியந்தனர், பலர் வயிறு எரிந்தனர். ஒரு சமயத்தில் 'மாடி வீட்டு ஏழை' என்ற படத்தை எடுத்து அவர் சம்பாதித்து, பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டை விற்க நேர்ந்தது.

Geetha Sambasivam said...

என்னோட வேண்டுகோள் எப்போவுமே புதிர்கள் கொடுத்தால் விடையை வெளியிட வேண்டாம் என்பதே! பல முறை சொல்லி ஓரிரு முறை கேஜிஜி அப்படிச் செய்திருக்கார்! விடைகளை மட்டும் வெளியிடாமல் நிறுத்திக்கலாம். எல்லோரும் சொல்லிக் கொண்டே போவதில் இதில் கலந்து கொள்ள எனக்கு அவ்வளவாக ஆர்வம் வருவதில்லை. அதோடு பல சமயங்களில் பதிவுகளைப் பார்க்க நேரமும் ஆகி விடுகிறது! அப்போ எல்லாம் முடிஞ்சுடும்! :)

நெல்லைத் தமிழன் said...

கீ.சா மேடம் - அதுல ஒரு பிரச்சனையும் இருக்கு. நாம எழுதியது போனதா இல்லையா என்பதே தெரியாது. இன்னொண்ணு, பாதி எழுதும்போதே பப்ளிஷ் ஆனாலும் நமக்கு அது தெரியாது.

நீங்க சொல்றதும் ஒரு வகையில் சரி. ஏன்னா, பின்னால் விடை சொல்லுபவர்கள், முதலில் சொல்பவர்களின் விடையைப் பார்த்துச் சொல்கிறார்களா, அல்லது அதை க்ளூவாக வைத்து மேலும் கண்டுபிடிக்கிறார்களா, அல்லது எதையும் பார்க்காமல் சொந்தமாகச் சொல்லுகிறார்களா என்பது தெரியாது.

Angelin said...

@கீதாக்கா @கோமதியக்கா தாங்க்ஸ் les miserables ஆமா இது ஜாவர் சீதாராமன் டைரக்ட் பண்ண படம்னு அப்பா அப்போ அடிக்கடி சொல்வார் ..
எங்க வீட்ல முதமுதல்ல வி சி டி பிளேயர் வாங்கினப்போ அப்போ நாங்க சின்ன பிள்ளைங்க எங்கப்பா அடிக்கடி 5 காசெட்ஸ் வாடகைக்கு எடுப்பார் அதில் ஒன்னு இந்த மாடிவீட்டு ஏழை நாங்க அதைத்தவிர அதில் ஜிவாஜி அங்கிள் படம்னு அப்போதான் படம் பிரிண்ட் மேலிருக்காதே அதை பார்க்கவே மாட்டோம் ...கடைசீ வரைக்கும் பாக்கலை ..


Angelin said...

ஆமாம் ஆமாம் கீதாக்கா aka கீ .சா அக்காவின் பதில்கள் வெளியிடுவது பற்றிய பின்னூட்ட்டதை நானு யும் வழி மொழிகிறேன்

Angelin said...

@நெல்லை தமிழன் ..யெஸ் எஸ் பரதேசி படம் ரெட் டீ என்கிற பேரில் வெளி வந்தது இல்லையா அதை தேடி பிடிச்சி படிக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா ஒரு டாக்யூமென்டரி பிபிசில பார்த்ததில் டீ குடிக்கிற ஆசையே போச்சு

Angelin said...

சந்திரபாபு ராஜாஜி ஐயா அவர்கள் மடியில் அமர்ந்த சம்பவம் சமீபத்தில் அம்மா பற்றி நரசிம்மன் என்கிறவர் எழுதிய தொடரில் ஹிந்து பேப்பரில் படிச்சேன் ..நிறைய விஷயங்கள் இங்கே நடமாடும் விக்கிபீடியா நெல்லை தமிழன் கீதாக்கா கோமதிக்கா மற்றும் கணேஷ் அண்ணா இன்னும் சிலர் மூலம் தெரிய அறிய முடிகிறது :)

Geetha Sambasivam said...

இலவசக் கொத்தனார் என்னும் நண்பர் அவரோட வலைப்பக்கம் "இலவசம்" என்பதில் குறுக்கெழுத்துப் புதிர் அடிக்கடி வைப்பார். தொந்திரவு செய்து என்னைக் கலந்து கொள்ள வைப்பார். அப்போ நாம் பதில் அனுப்பும்போது எத்தனை பதில் சரி, எத்தனை தப்பு என்பதை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், பக்கவாட்டில் என்னும் வரிசையில் சொல்லுவார். விடைகளைக் கடைசியில் வெளியிடுவார். நம்ம ஆசான் ஜீவ்ஸ் "ஐயப்பன் கிருஷ்ணன்" (நெ.த.வுக்குப் புதியவர்) :) அவர் கூடப் புதிர்களை இப்படித் தான் வெளியிட்டு பதில் சொல்கையில் எல்லாத்தையும் முதலிலேயே சொல்ல மாட்டார். சரியானதை மட்டும் சொல்வார்! இம்முறை ஏற்கெனவே கேஜிஜி அவர்களால் பின்பற்றப் பட்டுள்ளது! :) அப்போவும் நான் தான் மூக்கை நுழைச்சேன். இப்போவும் நான் தான்! :)

ஸ்ரீராம். said...

சிவசங்கரியின் தியாகு கதை மனிதனின் மறுபக்கம் அல்ல, ஒரு மனிதனின் கதை. அனுராதா ரமணனின் சிறை, ​ , ராஜாஜியின் திக்கற்ற பார்வதி, சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் கதை பொய் முகங்கள் என்கிற பெயரில் படமானது (மேகம் ரெண்டு சேரும்போது என்னும் அருமையான எஸ் பி பி பாடல் ஒன்று உண்டு அதில். இந்தப் பாடல் ஹிந்தி ஆர் டி பரமனின் கிஸ்கா ரஸ்தா (ஜோஷிலா) பாடலை நினைவு படுத்தும்.) என்று செல்ல விட்டுப்போன லிஸ்ட் யோசித்தால் இன்னமும் கூட வரும். பானுமதி வெங்கடேஸ்வரன் படம் பெயர் தெரியவில்லை என்று சொல்லியிருக்கும் படம் மணியனின் இதயமலர்.(செண்டுமல்லிப் பூப்போலே அழகு என்று ஒரு யேசுதாஸ் பாடல் உண்டு)

நன்றி நெல்லைத்தமிழன், ஒரு சுவாரஸ்யமான புதிர்ப்பக்கத்தைக் கொடுத்ததற்கு. பிரபல எழுத்தாளர்களின் வரிகளைக் கொடுத்து முன்பு நானும் பதிவு எழுதி இருக்கிறேன்.

கமெண்ட் மாடரேஷன் முன்பு வைத்தது உண்டு. ஏனோ இப்போது வைப்பதில்லை.

ஜீவி said...

//புனைபெயர் யோசிக்கும்போது ராயப்பேட்டையில் அவர் தங்கியிருந்த மேன்ஷனுக்கு எதிரே இருந்த மாருதி ஃபார்மசி என்ற பெயர்ப் பலகை கண்ணில் பட, அதையே தன்னுடைய பெயராகத் தேர்ந்தெடுத்தார். //

தெரியாத விவரம். (சுவாரஸ்யத்துடன்) தெரிய வைத்தமைக்கு நன்றி.

அட! எப்படியெல்லாம் புனைப்பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாகத் தான் இருந்தது.

ஜீவி said...

முதல் கேள்வியில்: //அன்று எடுத்த தீர்மானத்தின்படி பல்லைக் கடித்துக்கொண்டு அடுத்து வந்த மாசங்களைக் கடத்தினவன்//

கடத்தினவள். (வாசிப்பில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதால் இதைக் குறிப்பிட்டேன்.

அனுராதா ரமணின் கதையின் பெயரும் சிறை தான். அனந்த விகடனில் மாருதியின் ஓவியத்துடன் வந்தது.

ஜெயகாந்தனின் 'அக்னி பிரவேசம்' கதையையும் அ.ராமணனின் 'சிறை' கதையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பின்னவரில் பெண்மை மிதிக்கப்படுவதும், முன்னவரில் பெண்மை போற்றப்படுவதும் தெரியும்.

Bhanumathy Venkateswaran said...

@Angelin welcom back to Engal blog! என்ன கொஞ்ச நாளா காணாமல் போய் விட்டீர்கள்? லாங் லீவா?

Angelin said...

@Bhanumathy akkaa yes summer term holidays ..school starts next week

Bhanumathy Venkateswaran said...

ராயபேட்டையா? திருச்சியில் பெரிய கடை தெருவா?திருச்சியில் என்று படித்ததாக ஞாபகம். மேலும் அவர் இருந்த மான்ஷனுக்கு எதிரே இருந்தது மாருதி பார்மசி அல்ல, மாருதி மெடிக்கல்ஸ்(என் சினேகிதியின் அப்பாவின் கடை)

நான் ஸ்ரீரெங்கத்தில் இருந்த பொழுது அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவருடைய சகோதரி அங்கு இருந்தார். அவர் வரையும் பெண்கள் முகம் ஒரே மாதிரி இருக்கும். அவருடைய சகோதரியின் மகள் அப்படித்தான் இருப்பாள் என்று என் தோழி கூறியிருக்கிறாள்.

Asokan Kuppusamy said...

அ. ராஜேந்திரகுமார்
ஆ. பொன்னியின் செல்வன்
இ. பாலகுமரன்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!