Tuesday, September 12, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மன்னிப்பு - பானுமதி வெங்கடேஸ்வரன் - சீதை 19
     ராமனை ஸீதை மன்னிக்கும் கற்பனையில் இன்று வெளியாவது திருமதி பானுமதி வெங்கடேசன் அவர்களின் படைப்பு.   


மன்னிப்பு 
பானுமதி வெங்கடேஸ்வரன்அன்று அயோத்தி நகரமே சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி திளைத்தது. பின்னே தசரத குமாரன் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா? அதுவும் ராமனுக்கு திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள். வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. 


கொடுத்து கொடுத்து கைகளும், புன்னகைத்து, புன்னகைத்து கன்ன கதுப்புகளும் லேசாக வலிக்கத் துவங்கி இருந்தன தசரத குமாரனுக்கு. பெரியவர்களிடமும், குல குரு வஸிஷ்டரிடமும் பெற்ற ஆசிகள், மாமனார் ஜனகர் மாப்பிளைக்காக அனுப்பியிருந்த தாராள  ஸ்ரீதன பொருள்கள், அருமையான ராஜ விருந்து இவைகளால் ராமனுக்கு தலை சற்றே கிறுகிறுக்க சீதையை சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. 


மிகவும் அசதியாக இருப்பது போல சோம்பல் முறித்தபடி படுக்கையில் சரிந்தான். 


"கொடுத்து கொடுத்தே இன்றைக்கு மிகவும் களைத்து விட்டீர்கள்  போலிருக்கிறது" என்றபடி ராமனின் கரங்களை எடுத்து மெல்ல நீவி விட்டபடியே சீதை கூற, 


அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,


" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் 


"ஏன் இல்லாமல்? எனக்கு மட்டுமல்ல, என் சகோதரிகளுக்கும் உண்டு..'', 


''நான் சித்திரை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று பிறந்தவன் என்பது தெரிந்திருப்பதால் என் ஜென்ம தினத்தை கொண்டாடுகிறோம். நீ பிறந்த தினம், நட்சத்திரம் எதுவுமே தெரியாதே எதை கொண்டாடுவீ ர்கள்?''


"ஏன்? என் தந்தை என்னை கண்டெடுத்த நாளைத்தான் என் பிறந்த நாளாக கொண்டாடுவார்.."


"உன்னை பெற்றவர்கள் யார் என்பதும் தெரியாது, எங்கே, எப்பொழுது பிறந்தாய் என்றும் தெரியாது, ஜனக மஹாராஜா யாகத்திற்க்காக நிலத்தை உழும் பொழுது அவரால் கண்டெடுக்கப் பட்டதால் ஜானகி ஆகி விட்டாய். ஆனால் நானோ, ரிஷ்ய ஸ்ரிங்கர்  தலைமையில் என் தந்தை புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவ புருஷன் கொணர்ந்த பாயசத்தை என் தாய் அருந்தியதால் பிறந்தவன். அழகிலும், குணத்திலும் நீ எனக்கு இணையாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் நான்தான் உன்னைவிட மேம்பட்டவன். ஒருவருடைய பிறப்புதானே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யும்...  அந்த வகையில் உன்னை விட உசத்தியான நான் அதை பொறுப்படுத்தாமல் உன்னை மணந்து கொண்டிருக்கிறேன்" குறும்பாக கூறினான் ராமன்.


சுருக்கென்று தைத்தது சீதைக்கு. விளையாட்டாக கூறப்பட்டதா?  அல்லது அந்த போர்வையில் மனதில் இருப்பது வெளியில் வந்து விட்டதா?  நான் இழி குலத்தை சேர்ந்தவளா?  பாதிக்கப்பட்ட மனது பதில் சொல்ல தீர்மானித்தது. 


"இருக்கலாம்..  என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா?  தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்..  இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" 


காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான்.  திரும்பி படுத்துக் கொண்டான். அவன் விழித்துக் கொண்ட பொழுது சீதை அங்கு இல்லை. 


மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக இருப்பது போல 
காட்டிக் கொண்ட சீதை, தனிமையில் ராமனை புறக்கணித்தாள். அவளின் இந்த பாரா முகம் ராமனுக்கு புதிது. அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். 


அன்று பகல் உணவு முடித்து ஓய்வு எடுத்துக் கொள்ள அவர்களின் பிரத்யேக அரண்மனைக்கு வந்தவன், சீதை வருவதற்கு முன், தன் கை விரல் மோதிரத்தை கழட்டி, அறையின் ஒரு மூலையில் போட்டான். அவள் வந்து உறங்கி விழித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனும் அப்போதுதான் விழிப்பவன் போல எழுந்து கொண்டு,'' உனக்கு என் மேல் என்ன கோபம் இருந்தாலும் நான் தூங்கி கொண்டிருக்கும் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரத்தை கழட்டி வைத்துக் கொள்வது சரி கிடையாது.." 


"இது என்ன புது கதை?  நான் எதையும் கழட்டவில்லை. எந்த மோதிரத்தை சொல்கிறீர்கள்?" 


"நம் திருமணத்தின் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரம்.."


"அதையா காணவில்லை? ஐயோ!  அது சப்த ரிஷிகளில் ஒருவராகிய காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது. அதை அவர் மிகுந்த மரியாதையோடும், கவனத்தோடும் பாதுகாத்து வந்தார்,  நம் திருமணத்தின் பொழுது உங்களுக்கு அணிவித்தார், அதையா  காணவில்லை..?  காலையிலிருந்து எங்கெல்லாம் சென்றீர்கள்? கடைசியாக எப்போது அதை பார்த்தீர்கள்? 


"இங்கு வரும்வரை அது என் கையில்தான் இருந்தது. இப்போதுதான் காணவில்லை"


"திருமணத்தில் போடப்பட்ட மோதிரம் தொலைந்து போவது துர் சகுனம் அல்லவா?"  பதட்டமும் துக்கமும் சீதையை பற்றிக் கொண்டன. 


"இரு இரு, அவசரப்பட வேண்டாம்,அந்த மோதிரம் கொஞ்சம் தளர்வாகத்தான் இருக்கும், அதுவும் கொஞ்ச நாட்களாக நழுவி விழுந்து விடுமோ என்று தோன்றியது, ஒரு வேளை படுக்கையில் விழுந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.." பேசிக் கொண்டே படுக்கையை உதறி தேடுவது போன்ற தன் நடிப்பை துவங்கினான்.


சீதை நிஜமாகவே தேட, அவள் கையில் சிக்கியது தொலைக்கப்பட்ட மோதிரம். "இதோ இங்கே இருக்கிறது! அப்பாடா!  காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது.." கண்கள் பனிக்க அந்த மோதிரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு கணவனிடம் நீட்டினாள்.


"அட! நானும் இத்தனை நேரமாக ததேடிக் கொண்டிருக்கிறேன், என் கண்களில் படவேயில்லை, நீ கண்டு பிடித்து விட்டாயே..!  நிஜமாகவே நம் இருவரில் நீதான் உசத்தி.  நீயே எனக்கு அணிவித்து விடு" என்று தன் கரத்தை அவள் முன் நீட்ட


இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.
பின் குறிப்பு:

இந்த சம்பவம் அனந்தராம தீக்ஷதர் எழுதியிருக்கும் சுந்தரகாண்ட பாராயண புத்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கும். 
தமிழ்மணத்தில் வாக்களிக்க...  (தமிழ்மணம் மீண்டு[ம்] வந்து விட்டது!)

62 comments:

துரை செல்வராஜூ said...

அன்றும் இன்றும் வென்றது சீதையே!..

அருமை.. மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

Geetha Sambasivam said...

சேங்காலிபுரத்தின் கதாகாலட்சேபங்களில் இதைக் கேட்டதாக நினைவில் இல்லை. இது முற்றிலும் புதியது! பகிர்வுக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான பதிவு. வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,
இதே மோதிரம் பல நேரங்களில் அவர்களைச் சேர்த்திருக்கிறது.

பல பெரியவர்களின் உரைகளில் மோதிரத்துக்குத் தனி மதிப்பு.
இங்கே சொன்ன கதையும் அருமை மிக அருமை.
பாவம் சீதை.

எல் கே said...

புதுசா இருக்கே

கோமதி அரசு said...

புதிய தகவல். கதை சொன்ன விதம் அருமை.
விளையாட்டு பேச்சு என்றாலும் மனதை நோகச்செய்யும் இல்லையா?

Durai A said...

சொன்னதிலிருந்து தெரிந்ததற்கு அறிவித்ததிலிருந்து அறிந்ததற்கு வாசகரைத் தாவ வைக்கும் இந்த foreshadow உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானது. நிறைய பேர் கையாளுவதில்லை. பாராட்டுக்கள்.

KILLERGEE Devakottai said...

பிணக்கம் இருந்தால்தான் கணவன்-மனைவி இரசித்தேன் மாறுதலான படைப்பு.

நெல்லைத் தமிழன் said...

வித்தியாசமான தகவல். பாராட்டுகள்.

Geetha Sambasivam said...

//இதே மோதிரம் பல நேரங்களில் அவர்களைச் சேர்த்திருக்கிறது.//

அனுமன் எடுத்து வந்தது இந்த மோதிரம் தான் என்பது வரை தெரியும். மற்றபடி இந்தக் கதையை யாரும் சொல்லிக் கேட்டதில்லை நானும்! :)))))

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: வித்தியாசமான படைப்பு! அருமை! பாராட்டுகள், வாழ்த்துகள்!

கீதா: மிகவும் புதிய கதை! அதாவது இப்படியான ஒரு நிகழ்வை வாசித்ததில்லை. என் பாட்டியும் சொன்னதில்லை. பாராயணப் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒன்றை இங்கே உங்கள் வடிவில் கதையாகச் சொன்னது அருமை. எனக்கு இதில் கேள்விகள் இருக்கிறதுதான் (நீங்கள் எழுதியதில் இல்லை பானுக்கா...எங்கிருந்து உங்களுக்குக் கரு கிடைத்ததோ அதில்..) என்றாலும்...கேட்கவில்லை... உங்கள் நடை அருமை! எழுதியவிதமும் அருமை! பானுக்கா வாழ்த்துகள், பாராட்டுகள்!

Asokan Kuppusamy said...

வித்தியாசமான பார்வையில் பதிவு பாராட்டுகள் த.ம.வாக்கு பெட்டி வந்து விட்டதே, ஒரு வேளை பொதுக்குழுவிற்கு போய் விட்டு வந்திருக்குமோ ?

Madhavan Srinivasagopalan said...

ஆஹா... அருமை...
இதுவோர்.. இனிமை...

நெல்லைத் தமிழன் said...

மா.ஸ்ரீ - இன்னும் கவிதை மயக்கத்திலிருந்து வெளியே வரவில்லையா?

ஆஹா... அருமை...
இதுவோர்.. இனிமை...
படைப்பே பெருமை
கருத்தோ குளுமை ன்னு நீட்டியிருக்கலாமே.

விஜய் said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் டமில்மனம்... கம்பக் யாஆஆஆஆஆஆஆஆஆ:))... கரெக்ட்டா நான் போஸ்ட் போடும் நேரம் பார்த்துக் காணாமல் போய் வந்திருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

mohamed althaf said...

அருமை

Bagawanjee KA said...

எப்படி வாழ வேண்டுமென்று ராமனை சான்றாகச் சொல்வார்கள் ,அந்த மஹா புருஷன் மனத்திலும் இப்படி ஒரு தாழ்ந்த எண்ணமா :)

Angelin said...

ஹை தமிழ்மணம் வந்தாச்சு :)

athira said...

கதை பயங்கர நீளமாக இருந்திடுமோ கடவுளே என்ன பண்ணப் போகிறேன் எனும் கலக்கத்தோடு உள்ளே வந்தேன்ன்.. மிக ரசனையாக இருக்கு.. சோட் அண்ட் சுவீட்டாக குட்டியான ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கதை எழுதிய பானுமதி அக்காவுக்கு... இதோ அஞ்சுவின் கபேர்ட் இல் இருக்கும் நீலக்கல்லு மோதிரத்தை ஓடிப்போய் எடுத்து வந்து அணிவித்துக் கெளரவிக்கிறேன். வாழ்த்துக்கள்.

Angelin said...

பானுமதி அக்கா சூப்பர்ப் .இதுவரை கேள்விப்படாத வாசித்திராத சம்பவம் ரொம்ப நல்லா இருக்கு ரசித்தேன் .

Angelin said...

/திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள்.வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. //

நாமெல்லாம் ஏன் அந்த கால கட்டத்தில் பிறக்கலைன்னு இருக்கு :)

Govindarajapuram Krishnamoorthy said...

பலே பானு உங்கள் இந்த படைப்பு மிக அருமையாக உள்ளது. இது போன்ற இன்னும் பல சிறந்த படைப்புகளை தருவிர்களாக. நன்றி.

athira said...

//அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,


" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் ///

ஓவர் தற்பெருமை ராமனுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

athira said...

///அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. ///

என்னை அவுஸ்திரேலியாவில கேட்டாக...
நியூஸிலாந்தில கேய்ட்டாக...
அமேரிக்காவில கேய்ட்டாக... ஏன்
அந்தாட்டிக்காவிலயும் கேய்ட்டாக.... இடையில புகுந்து நீங்க எதுக்கு வில்லை உடைச்சீங்க??? நாஅன் என்ன நீங்கதான் வேணுமென அழுதேனா?:) இப்போ எதுக்கு உயர்வு தாழ்வு பேசுறீக?:)).. சே..சே.. யாராவது சீதைக்கு என் மெயில் ஐடியை அனுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) ஐடியாக் கொடுக்கப்போறேன்ன்:).. ஹா ஹா ஹா.

athira said...

//காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான்.///

அவர் மனம் நோகும்படி பேசுவாராம் ஆனா சீதை பேசினால் மட்டும் வலிக்குதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சீதைக்கும் மனம் இருக்குதுதானே... சூப்பர் சீதை ... கீப் இட் மேலே:)) ஹையோ தனியா இங்கின மாட்டிட்டனோ:)..

///அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். ///

அப்பகூடப் பாருங்கோ.. மன்னிப்புக் கேட்கோணும் எனத் தோணல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

athira said...

///இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.///

சரி சரி விடுங்கோ... கணவன் தானே.. மனைவி, விட்டுக்கொடுத்துப் போவதில் ஒன்றும் தப்பில்லை.. சீதையின் நல்ல மனம் வாழ்க.. என்றும் அதிரா போற்ற வாழ்க!!!:))

athira said...

///Angelin said...
பானுமதி அக்கா சூப்பர்ப் .இதுவரை கேள்விப்படாத வாசித்திராத சம்பவம் ரொம்ப நல்லா இருக்கு ரசித்தேன் .//

இது பத்தாது.. அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு 10.30 க்குள் தேம்ஸ் கரைக்கு வரவும்:)).

துரை செல்வராஜூ said...

>>> அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு 10.30 க்குள் தேம்ஸ் கரைக்கு வரவும்!..<<<

ஒன்னும் வெளங்கலையே.. ராவு..ல வரச் சொல்றா..களா!.. பகல்..ல வரச் சொல்றா..களா!..
மனுசனக் கொழப்பி விடுறதிலயே குறியா இருக்காங்கள்.. எப்பவும்!....

துரை செல்வராஜூ said...

எதுக்கும் Lifeboat எடுத்துக்கிட்டுப் போவம்.. நீஞ்சத் தெரியாது..ல்லா!..

புலவர் இராமாநுசம் said...

இருவருக்கும் வாழ்த்துகள் த ம 10

துரை செல்வராஜூ said...

உண்மையில் எனக்கு நீந்தத் தெரியும்.. வேறெந்த முடிவுக்கும் போய் விடவேண்டாம்!..

ராஜி said...

அருமை

ஸ்ரீராம். said...


நம்ம ஏரியாவில் கண்டிஷனல் கருவுக்கான கதை. அஞ்சு என்னும் ஏஞ்சலின் எழுதியிருக்கும் கதை...

https://engalcreations.blogspot.in/2017/09/blog-post_12.html#more

Angelin said...

மிக்க நன்றி ஸ்ரீராம் :)

ராமலக்ஷ்மி said...

அருமையான நடையில் அறிந்திராத கதை. பாராட்டுகள்!

G.M Balasubramaniam said...

அனந்த ராம தீட்சிதருக்கா பாராட்டுகள் இல்லை அதைச் சொன்ன உங்களுக்கா அருமை மேம்

athira said...

///துரை செல்வராஜூ said...
>>> அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு 10.30 க்குள் தேம்ஸ் கரைக்கு வரவும்!..<<<

ஒன்னும் வெளங்கலையே.. ராவு..ல வரச் சொல்றா..களா!.. பகல்..ல வரச் சொல்றா..களா!..
மனுசனக் கொழப்பி விடுறதிலயே குறியா இருக்காங்கள்.. எப்பவும்!....///

ஹா ஹா ஹா.... ஹையோ என்னால சிரிச்சு முடியுதில்ல.. கையில இருந்த ரீ... கீ போர்ட்ல ஊத்துப்பட்டுட்டுதூஊஊஊ:))

////துரை செல்வராஜூ said...
எதுக்கும் Lifeboat எடுத்துக்கிட்டுப் போவம்.. நீஞ்சத் தெரியாது..ல்லா!..///
யாருக்கு எனக்கோ தெரியாது?:).... நல்லாச் சொன்னீங்க கர்:).. சுவிமிங் ஃபூல்ல... ஒரு 10 நிமிஷமா ச்ச்ச்சும்மா கையையும் காலையும் அடிஅடி என அடிச்சு.. தலையையும் அங்கால இங்கால.. லெஃப்ட்டு ரைட்டு என திருப்பிப்போட்டு எழும்பிப் பார்க்கிறேன்ன்ன்.. அதிலயே நிக்கிறேன்ன் ஒரு அடிகூட மூவ் ஆகல்ல:)) ஹா ஹா ஹா:)..

athira said...

///துரை செல்வராஜூ said...
உண்மையில் எனக்கு நீந்தத் தெரியும்.. வேறெந்த முடிவுக்கும் போய் விடவேண்டாம்!..///

அஞ்சூஊஊஊஊஊஉ பிளீஸ்ஸ்ஸ்ஸ் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதீங்க.. மோதிரம் தராட்டிலும் பறவாயில்லை:) துரை அண்ணனுக்காக ஆவது குதிக்காமல் தேம்ஸ் கரையிலயே நில்லுங்கோ வாறேன்ன்ன்... அவர் காட்டும் அக்கறையைப் பார்த்தால் வைர நெக்லஸ் வாங்கித் தந்தாலும் தருவார்ர்[என் வள்ளியின் நேர்த்திக் கடனை முடிக்க:)].. எதுக்கும் பொறுமையைக் கடைப்பிடிப்போம்:))

athira said...

///ஸ்ரீராம். said...

நம்ம ஏரியாவில் கண்டிஷனல் கருவுக்கான கதை. அஞ்சு என்னும் ஏஞ்சலின் எழுதியிருக்கும் கதை...

https://engalcreations.blogspot.in/2017/09/blog-post_12.html#more///

ஆவ்வ்வ்வ்வ் அஞ்சு கதை எழுதியிருக்கிறாவாஆஆஆஆஆ?:) இது நாட்டுக்கு நல்லதில்லையே:)) ஹா ஹா ஹா:)..

ஏகாந்தன் Aekaanthan ! said...

அவதார புருஷனான ராமனை, சராசரி மனிதனுக்கும் கீழாக, தந்திரமும் சல்லித்தனமும் உடையவனாக சித்தரித்திருக்கிறாரா அனந்தராம தீக்ஷிதர் (கதையின் கருவுக்குச் சொந்தக்காரர்)? அதுவும் சுந்தரகாண்ட பாராயணப்புத்தகத்தில்? புண்ணியம் மிக அதிகம் அவருக்கு. ராம, ராம..!

Geetha Sambasivam said...

ஏகாந்தன், எனக்கும் அதுதான் ஆச்சரியம்! :)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Angelin said...

/ லெஃப்ட்டு ரைட்டு என திருப்பிப்போட்டு எழும்பிப் பார்க்கிறேன்ன்ன்.. அதிலயே நிக்கிறேன்ன் ஒரு அடிகூட மூவ் ஆகல்ல:)) ஹா ஹா ஹா:)..//ஹையோ ஹையோ இதுக்குதான் என்ன போல ஸ்லிம்மா இருக்கணும் :) வெயிட்டுக்கு கீழே போயிட்டீங்கதுரை செல்வராஜூ said...

மனுசனுக்கு வார்த்தையை விட வைர நெக்லசா பெரிசு???...

ஜீவி said...

//"இருக்கலாம்.. என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா? தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" //

அட்டகாசம்.

ஏதோ இப்படித் தான் நிஜமாகவே நடந்த மாதிரி எழுதி வாசிப்பவர்களை நம்ப வைக்கிறார்களே! அது தான் எழுதுவோரின், கதைகள் புனைவோரின் சாமர்த்தியம்.

காமாட்சி said...

ஒரு விளையாட்டாக மானிட ஜென்மம் எடுத்தவர் விளையாடி இருக்கலாம் இல்லையா? நிஜமாக இருக்குமோ?கதை அழகுதான்.

Bhanumathy Venkateswaran said...

பாராட்டிய அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

Bhanumathy Venkateswaran said...

@கீதா சாம்பசிவம், பகவான்ஜி & ஏகாந்தன்: அவதாரம் என்பதற்கே இறங்கி வருதல் என்றுதான் பொருள். மனிதனாக வரும் பொழுது மனிதனைப் போலத்தானே நடந்து கொள்வார்கள். நான் கில்லர்ஜி, காமாட்சி அம்மா, ஜீ.வி. சார் எல்லோரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

@ ஏஞ்சலின்://வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. //
நாமெல்லாம் ஏன் அந்த கால கட்டத்தில் பிறக்கலைன்னு இருக்கு :)//

இப்போதும் கூட குழந்தை பிறந்த பதினோராம் நாள் புண்யாகவாசனத்தன்று விதை நெல்லொடு கொஞ்சம் பணமும் தரும் பழக்கம் உண்டு

ஜீவி said...

மானிட ஜென்மம் எடுத்தவர் என்றால் மானிடராகத் தானே தன் பேச்சில், செயலில் வாழ நேரிடும்?.. அவதாரப் புருஷர் என்றால் அப்படி இருக்கக் கூடாது என்று குழப்பிக் கொள்வது மானிட ஜென்மெடுத்து அவர் வழிகாட்டிய மேன்மையையும் மனத்தில் கொள்ளாது செய்து விடும் இல்லையா?..

வாலி வதை படலத்தில் கம்பன் கொள்ளாத எழுச்சியா?.. கம்பன் இராமன் சரிதத்தை மானுடருக்குச் சொல்லவே அவதரித்தவன்.
சேங்காலிபுரமும் உபந்நியாச உணர்வில் நெகிழ்ந்து கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல் வேந்தர்.
குறைத்து மதிப்பிடுவதற்கு இயலாத இராம தாசர்கள்.

Bhanumathy Venkateswaran said...

@GMB sir: //அனந்த ராம தீட்சிதருக்கா பாராட்டுகள் இல்லை அதைச் சொன்ன உங்களுக்கா அருமை மேம்//

எல்லா புகழும் ராமனுக்கும் சீதைக்குமே!

ஏகாந்தன் Aekaanthan ! said...


@ காமாட்சி வெங்கடேஸ்வரன்: //அவதாரம் என்பதற்கே இறங்கி வருதல் என்றுதான் பொருள்.//

’இறங்கி வருதல்’ என்பதற்கு ’இப்படியா’ பொருள் கொண்டீர்கள்? குணநலனிலும் ‘இறங்கிவிடுவதா’? இதற்குமேல் நான் என்னத்தைச் சொல்ல!

@ ஜீவி: //மானிட ஜென்மம் எடுத்தவர் என்றால் மானிடராகத் தானே தன் பேச்சில், செயலில் வாழ நேரிடும்?.. அவதாரப் புருஷர் என்றால் அப்படி இருக்கக் கூடாது என்று குழப்பிக் கொள்வது..//

ராமன் மானிட ஜென்மம் எடுக்கவில்லை என இப்போது யார் சொன்னது! ஆனால் ஒன்றைத் தயைகூர்ந்து கவனியுங்கள்: ராமாயண காவியத்தில் அவன் ஒரு சராசரி மானுடனாகக் காட்டப்படவில்லை. அவன் ஒரு புருஷோத்தமனாக, அதாவது புருஷர்களில் உத்தமனாக - உத்தம புருஷனாகக் காட்டப்படுகிறான். இவ்வுலக வாழ்வில், ஒரு மானுடன் எப்படி இருக்கவேண்டும், எப்படி வாழவேண்டும், எத்தகைய நியதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும், எப்படி இருந்தால், எப்படி வாழ்ந்தால் உத்தமம், உன்னதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அல்லவா அவன் இருந்தான்? அப்படியல்லவா அவனது பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது? அப்படி இருந்ததால்தானே அவன் மதிக்கப்படுகிறான், கொண்டாடப்படுகிறான்? அதனால்தானே அந்தக் காவியத்திற்கு ‘ராமாயணம்’ என்றே பெயர்! ஒரு சராசரி மனிதனாக அவன் நடந்துகொண்டான், வாழ்ந்தான், போய்ச்சேர்ந்தான் என்பதற்கா அவனது கதைக்கு ‘ராமாயணம்’ என்று பெயர் வைத்து காலமெல்லாம் அதைப்பற்றிப் பேசியும், எழுதியும், விவாதித்தும் வருகிறீர்கள்?

Bhanumathy Venkateswaran said...

@அதிரா: எனக்கு நீலக்கல் மோதிரம் வேண்டாம். நீலக்கல் எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது. ராசி பார்த்துதான் அணிய வேண்டும். வைரம் நோ ப்ரொப்லெம்!

Bhanumathy Venkateswaran said...

சிறு கதை காவலர் ஸ்ரீராமுக்கும், எங்கள் ப்ளாகுக்கும் மனமார்ந்த நன்றி!

Bhanumathy Venkateswaran said...

@தில்லையகத்து கீதா: கீதா உங்கள் கேள்வியை கேட்க என்ன தயக்கம்?அல்லது பயம்? நம் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுதுதானே சுவாரஸ்யம் கூடும்? அவ்வை நடராசன் பட்டிமன்றங்களைப் பற்றி,"கருத்துக்கள் மோதுவது, லட்டும் லட்டும் மோதுவது போல, அதில் பூந்தி உதிர்ந்து நிறைய பேருக்கு சாப்பிட முடியும்" என்பார். உங்கள் சந்தேகத்தையும் வெளிப்படுத்துங்கள்.

Geetha Sambasivam said...

அவதாரம் என்பது இறங்கி வருதல் என்பது தேவ நிலையிலிருந்து மானுட நிலைக்கு வருவதைச் சுட்டுவதாக நினைத்தேன். தன் நிலையிலிருந்து கீழே இறங்குவதை என்று நினைக்கவில்லை.

//அவன் ஒரு புருஷோத்தமனாக, அதாவது புருஷர்களில் உத்தமனாக - உத்தம புருஷனாகக் காட்டப்படுகிறான்.// பகவான் ஜி சொல்லி இருப்பது தான் நான் சொல்லுவதும், மற்றபடி சீதையை அவன் கடிந்து கொண்டு அக்னி பிரவேசத்துக்குச் சம்மதம் கொடுத்தது, பின்னால் சீதையைப் பிரிந்தது அனைத்தும் ஓர் அரசனாக அவன் நிலைப்பாடு! இவற்றையும் பல பதிவுகள் மூலம் விளக்கி இருக்கேன். வாலியை ராமன் மறைந்திருந்தே கொல்லவில்லை.

Geetha Sambasivam said...

ராமன் வாலியை வதம் செய்ய வில்லை எடுத்து நாண் ஏற்றுகையில் அது செய்யும் "டங்"காரத்தினால் சுற்றுவட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்ததையும், பறவைகள் முதல், காட்டு மிருகங்கள் வரை அச்சமுற்றுக் கலங்கியதையும் வால்மீகி குறிப்பிட்டிருப்பார்.அப்படி இருக்கையில் ராமன் தன்னை மறைந்திருந்து கொன்றான் என்று வாலி எப்படி நினைப்பான்? கம்பர் வாலி வதப் படலத்தில் அவ்வாறு குறிப்பிட்டிருப்பார்!

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2015/05/blog-post_6.html

Bhanumathy Venkateswaran said...

//இறங்கி வருதல்’ என்பதற்கு ’இப்படியா’ பொருள் கொண்டீர்கள்? குணநலனிலும் ‘இறங்கிவிடுவதா’?//

இல்லை குண நலனில் இறங்கி வருவதென்று நான் கொள்ளவில்லை. அப்படி நான் பொருள் கொண்டதாக எழுதிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், அது சொல்ல வந்ததை சரியாக புரிய வைக்கத் தெரியாத என் பலவீனம்.

ராமனின் மோதிரத்தை அனுமனிடமிருந்து பெற்றுக் கொண்ட சீதை ராமனையே அடைந்தவள் போல் சந்தோஷம் கொண்டாள். என்று இடத்தில், அவளுக்கு ஏன் ராமனையே அடைந்தது போல சந்தோஷம் ஏற்பட்டது என்ற காரணத்தை விளக்க மேற் கண்ட கதையை கூறியிருப்பார் அனந்தராம தீக்ஷதர். சீதைக்கும்ராமனுக்கும் ஏற்பட்ட சின்ன ஊடல், அது தீர இந்த மோதிரம் எப்படி உதவியது? என்பது அவள் நினைவுக்கு வருகிறது.

இந்த கதை ஹைலைட் செய்வது ராமனின் காதலை. காதலில் தோற்பவர்கள் ஜெயிக்கிறார்கள், ஜெயிப்பவர்கள் தோற்கிறார்கள். (இந்த சூஷுமம் புரியாததால்தான் இன்று இளைய இளைய தலைமுறையினர் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.) சீதையை ஜெயிக்க வைக்க தான் அவளிடம் தோற்பது போல நடிக்கும் பொழுது அவன் இன்னும் கொஞ்சம் உயரவில்லை? இதில் சல்லித்தனம் எங்கே வந்தது? இங்கே விஞ்சி நிற்பது அவனுடைய காதல். ராமனுக்கு காதல் வரலாமா? என்று கேட்டு விடாதீர்கள்.

புருஷர்களின் உத்தமன் என்பதெல்லாம் நம்முடைய unrealistic perception. நல்லவனாக இருந்ததால் அவன் ஹீரோ ஆகவில்லை. தீயவர்களை அழித்ததால்தான் அவன் ஹீரோ. நம் புராணங்கள் எதுவுமே யாரையும் அப்பழுக்கு இல்லாதவர் என்று காட்டவில்லை. 'குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்' என்பதுதான் நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சட்டென முடிந்து விட்டது போல தோன்றினாலும் அருமை.

Bhanumathy Venkateswaran said...

நன்றி முரளிதரன்!😊

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!