திங்கள், 6 நவம்பர், 2017

"திங்க"க்கிழமை 171106 - ஐயங்கார் / கோவில் புளியோதரை - நெல்லைத்தமிழன் ரெசிப்பி



புளியோதரைக்கு ஆதாரமானது புளிக்காய்ச்சல். 


இதைப் பல விதங்களில் செய்யலாம். அதைப் பொறுத்து கோவில் புளியோதரை, மிளகு புளியோதரை என்று பல்வேறு பெயர் கிடைக்கும். ஒரு தடவை கீதா ரங்கன், அவரோட பின்னூட்டத்தில் நாங்க எப்படிச் செய்வோம்னு கேட்டிருந்தாங்க. (அது கேட்டு நாளாச்சு). அது மனசுல இருந்ததுனால, சென்ற வாரம் செய்தேன்.

பொதுவா, விசேஷ நாட்கள்ல செய்யும்போது மிளகாய் (செத்தல் மிளகாய்) சேர்க்கமாட்டோம். நாங்க (எங்க பூர்வ வீட்டில) ஆங்கிலக் கறிகாய்கள் சேர்க்கமாட்டோம். (உருளை, தக்காளி, கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல், பீட்ரூட் போன்ற நம்ம நாட்டில் அந்தக் காலத்தில் இல்லாத காய்கள்.) பழங்களுக்கு விதிவிலக்கு. நான் அன்றைக்கு செய்தபோது, வெறும் மிளகு புளியோதரையாக இல்லாமல், 4 சிவப்பு மிளகாயும் சேர்த்தேன்.

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலில் புளியோதரையில் உப்பு சேர்க்கமாட்டார்கள் (ஆனால் அது சுவையில் வித்தியாசத்தை உணரவைக்காது). பொதுவா, என் அனுபவத்தில், கோவிலில் சாப்பிடும் பிரசாதத்தைப் போல், வீட்டில் செய்தால் அந்த சுவை வராது. அதற்குக் காரணம் அது பிரசாதம் என்பதால்தான்.


தேவையானது

மிளகு 3 மேசைக் கரண்டி
கொத்தமல்லி விரை (தனியா) 1 மேசைக் கரண்டி

புளிக்காய்ச்சல் தயாரிக்க



புளி பேஸ்ட் அல்லது ஊறவைத்து எடுத்த கொஞ்சம் கெட்டியான புளித் தண்ணீர் 2 ½ கப்

வற்றல் மிளகாய் - 4

நல்லெண்ணெய் 4 மேசைக் கரண்டி

கடலைப் பருப்பு 4 மேசைக் கரண்டி

உளுத்தம்பருப்பு 4 மேசைக் கரண்டி

வெந்தயம் 1 மேசைக் கரண்டி

கடுகு – திருவமாற

பெருங்காயம் – கொஞ்சம்

மஞ்சள் தூள்

தேவையான உப்பு

இது தவிர, வறுத்துக்கொண்ட, தோலில்லாத வேர்க்கடலை.



எப்படிச் செய்யறது?



வாணலியில் நல்லெண்ணெய் விட்டு எண்ணெயைக் காயவிடவேண்டும். 



அப்புறம் அதில் கடுகு போட்டு வெடித்ததும், வற்றல் மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் போட்டு நன்றாக வறுக்கவும். வற்றல் மிளகாய் கொஞ்சம் கருப்பானால் பாதகமில்லை. பின்னர் இதில் 2 ஆர்க் கருவேப்பிலையையும், புளிக் கரைசலைச் சேர்க்கவும். 



கொஞ்சம் கொதித்தவுடன் 1 1/2 -3 நிமிடம் ஆகும், மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இப்போ இதோட வேர்க்கடலையைச் சேர்க்கவும். 



நல்லாக் கொதித்து பாதியளவு வந்தபின்பு அடுப்பை அணைத்து, இறக்கிவைக்கவும். இப்போ புளிக்காய்ச்சல் ரெடி. இதனை ஆறியபின்பு, குளிர்சாதனத்தில் வைத்துவிடலாம். எங்கள் பூர்வ வீட்டில், புளிக்காய்ச்சல் செய்துவைக்கும் (அதாவது அடுத்த நாள் அல்லது அதற்குப் பின்பு சாதத்தில் கலப்பதற்காக) வழக்கம் இல்லை.

பச்சரிசி சாதம் உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். (இதுக்கு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயும் அரிசியோட சேர்க்கலாம்). சாதத்தை தட்டில் பரத்திவைத்து ஆறியபின்பு, கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்கவும். இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைச் சேர்த்து, சாதம் பிளவுபடாதவாறு கலக்கவேண்டும்.



இப்போ, மிளகு, கொத்தமல்லி விரையை மிக்சியில் பொடிசெய்து, சாதத்துடன் கலந்துவிடவேண்டியதுதான். கலக்கும்போதே புளியோதரை வாசனை செமயாக இருக்கும்.



அன்றைக்கு நான், கேரட் பச்சிடியும், பாகிஸ்தான் மெல்லிய சேமியாவில் பாயசமும் செய்திருந்தேன்.



பின் குறிப்பு :

சிலர் க.பருப்பு, உ.பருப்பு, வெந்தயம் போன்றவற்றுடன் சிறிது ஜீரகம் சேர்ப்பார்கள்.

வற்றல் மிளகாய் சேர்க்காவிட்டால், வெறும் மிளகுப் பொடி சேர்ப்பதால், இது மிளகுப் புளியோதரை ஆகிவிடும்.

ரொம்ப ரிச்சா செய்யணும் என்று நினைக்கிறவர்கள், வேர்க்கடலைக்குப் பதிலாக முந்திரிப் பருப்பு சேர்ப்பார்கள். தேங்காய் சாதத்துக்கு முந்திரிப் பருப்பு எடுப்பாக இருப்பதுபோல், புளியோதரையில் அப்படி எடுப்பாக இருப்பதில்லை. அதனால் நான் சேர்க்கவில்லை.

கருவேப்பிலையை மறக்கக்கூடாது. அது கூடுதல் வாசனை தரும்.
நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

[ இதுவரை என் கையால் புளிக்காய்ச்சல் செய்ததில்லை.  எனக்கு மிகவும் பிடித்த ரெஸிப்பி.  ஆனால் திருப்தியாய் புளியோதரை (என் நாலுமுழ நாக்குக்கு) அமைவது அபூர்வம்.  இன்றுவரை என் நண்பர் சுகுமார் செய்து தந்த புளிக்காய்ச்சலுக்கு இணையாய் எங்கும் என்றும் சாப்பிட்டதில்லை.  ஒருமுறை முயற்சிக்க வேண்டும்.  ஸ்ரீராம்  ]


97 கருத்துகள்:

  1. தீஞ்சுவைத் திங்கள்..
    திகட்டாத திங்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. கோயிலில் வழங்குவதைப் போல் வீட்டில் செய்ய வராது.. ஏனெனில் அது பிரசாதம்..

    உண்மை... சொல்லும் சுவையும் அருமை..

    பதிலளிநீக்கு
  4. நான் புளியோதரை செய்யும் போது வேர்க்கடலை சேர்ப்பதில்லை.. ஏனெனில் சமயத்தில் கடலை எண்ணெய் வாசம் வருவதனால் ..... நல்லெண்ணெய் மட்டுமே பிரதானம்...

    பதிலளிநீக்கு
  5. நாங்க மி.வத்தல் சேர்க்கும்போது முதலிலேயே அதைப் போட்டு நன்கு கறுப்பாக வறுத்த பின்னர் கடுகு, கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சேர்ப்போம். உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளிதத்தில் சேர்ப்பதில்லை. ஆனால் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு சாதம் கலக்கும்போது அல்லது புளிக்காய்ச்சல் இறக்குகையில் சேர்ப்போம். மற்றபடி இதே போல் தான் கோயில் புளியோதரை போல் பண்ணும்போது. மற்ற நேரங்களில் மி.வத்தல் கொஞ்சம் சேர்ப்பதால் அதன் அளவைக் குறைத்துக் கொண்டு மிளகை நல்லெண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாதம் கலக்கும்போது சேர்ப்போம். நெ.த. கலக்குகிறார் எல்லாத்திலேயும்! அருமை!

    பதிலளிநீக்கு
  6. வாவ்.... புளியோதரை எனக்கும் பிடித்தமான விஷயம். இதுவரை முயற்சித்ததில்லை. இப்போது செய்யத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  7. புளியோதரை வாசம் வீசுகிறது
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  8. புளியோதரை எனக்கு சற்று அதிகமாகவே பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா, புளியோதரை என்று வாசித்தவுடன் ஐயங்காராய் லட்சணமாய் ஓடோடி வந்துவிட்டேன். ஐயங்கார் கோவில் மட்டுமல்ல; ஐயங்கார் வீட்டுப் புளியோதரையும் அசத்தல்தான். ஒரு கொசுறுத்தகவல்; அனேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புளியோதரையில் மிளகாய்க்குப் பதில் நல்ல மிளகு மட்டுமே உபயோகப்படுத்துவது வழக்கம். அது வேறு விதமான அபாரமான ருசி. :-)

    பதிலளிநீக்கு
  10. நெ த என் வேண்டுகோளை ஏற்று செய்து இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    உங்கள் ரெசிப்பு சற்று வித்தியாசம். திருக்குறுங்குடி கோயில் புளியோதரை மிக மிக மிக மிக டேஸ்டியாக இருக்கும். பெரும்பாலும் அதைச் செய்பவர் நாகுனேரி ரெங்கன்மாமாவுடன் இருந்த ராமானுஜம் அண்ணா அவர்கள். அவரிடம் குறிப்பும் அப்போதே திருமணத்திற்கு முன்பே வாங்கியிருந்தேன் ஆனால் வர் கொடுத்த அளவு பெரும்படி! கோயிலுக்குச் செய்வதில் போடுவது போன்று அளவு. அதை நான் வீட்டளவிற்கு செய்வது. அதில் வெந்தயம் பெருங்காயம் இரண்டும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து புளிக்காய்ச்சல் சேர்ந்து இறக்குவதற்கு முன் கொஞ்ச நேரம் முன்பு போட்டு வாசனை வந்ததும் இறக்கனூம். மிளகாய் வத்தல் சிறிதாகக் கிள்ளி கிள்ளிப் போட்டு சிவக்க வறுத்த பின் கடுகு, உ பருப்பு, க பருப்பு தாளிதம் செய்து புளி விட்டு மஞ்சள் பொடி போட்டு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு கிளறி இறுதியில் வெ. பெ பொடி சேர்த்து வாசனைவ் அந்ததும் இறக்கணும். நோ கொத்தமல்லி. அது இங்கு சென்னைப் பக்கங்களில் கோயில்களில் சேர்த்து வழங்குவதை இங்கு வந்த பின் தான் அறிந்தேன் அது போன்று மிளகும். எங்கள் வீட்டிலும் இரு பாட்டிகள் வீட்டிலும் திருக்குறுங்குடி கோயில் மெத்தடில். அப்பா வழிப் பாட்டி மட்டும் தாளிதம் செய்யும் மிளகாய், இரு பருப்புகளிலும் பாதி எடுத்து வைத்துக் கொண்டு தனியாக வறுத்து பொடி செய்து வெ பெ பொடி சேர்க்கும் முன் சேர்த்து கிளறுவார்கள் கணிசமாக வருவதற்கு. புளியின் அதீத சுவையைக் கூட அது மட்டுப்படுத்தும் என்பார்கள். அப்புறம் கொஞ்சம் வெல்லம் சேர்ப்பார்கள்.

    நான் இந்த இரு மெத்தடும் செய்ததுண்டு. மிளகாய்க்குப் பதில் வெறும் மிளகு மட்டும் சேர்த்தும் செய்வதுட்னு. திருப்பதியில் ஒரு முறை மிளகோரை பிரசாதம் கிடைத்தது சுவையோ சுவை....!! அதிலிருந்து வீட்டில் அவ்வப்போது செய்வேன்.

    மாமியர் வீட்டில் இதே போன்று புளிக்காய்ச்சல் செய்து அதில் கொத்தமல்லிவிரை, மிளகு பொடி செய்து சேர்ப்பார்கள். சில சமயம் ஜீரகமும். நான் இந்தமுறையைச் செய்வது வெகு அபூர்வம்.

    புளியோதரையில் நீங்கள் சொல்லியிருப்பது போல் நிறைய வேரியேஷன்ஸ் உண்டு. காஞ்சிபுரம் புளியோதரை வித்தியாசமாக இருக்கும். என் நாத்தனாரின் மாமியார் வீட்டு ரெசிப்பி அது.

    எனக்குப் புளியோதரை ஃபேவரிட்!!

    உங்கள் ரெசிப்பியையும் நோட் செய்து கொண்டேன். செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி நெ த.

    கீதா



    பதிலளிநீக்கு
  11. கோயில் புளியோதரை கோயில் புளியோதரைதான். அது பிரசாதம் என்பதால்...

    சேட்டைக்கார அண்ணா சொல்லியிருப்பது போல் பார்த்தசாரதி கோயில் புளியோதரை தனி டேஸ்ட்.! மிள்கு மட்டும் தான்.

    நான் எந்தக் கோயில் சென்றாலும் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது பிரசாதம் உண்டா என்று. பெருமாள் கோயில் என்றால் புளியோதரை உண்டா என்று அறிந்து கொள்வேன்!! ஹிஹிஹி. சமீபத்தில் மாங்காடு அம்மன் கோயிலில் புளியோதரை டேஸ்ட் செய்தேன். அருமையாக இருந்தது. திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரசாதம் விற்பார்கள் புளியோதரை நன்றாக இருக்கும். பொடி தோசையும் ரொம்ப நன்றாக இருக்கும். சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். தயிர்சாதம் கிடைக்கும். அக்கோயிலுக்குப் பிக்னிக் வருவது போல கூட்டம் மாலை வேளையில் வருவதைப் பார்க்கலாம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் உங்கள் நண்பர் ரெசிப்பியை அளவு கேட்டு போடலாமெ இங்கு ப்ளீஸ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பார்க்க அழகாக இருக்கிறது்
    செத்தல்-வற்றல் இரண்டு வகை மிளகாய்க்கும் வித்தியாசம் உண்டா?
    -அப்பாதுரை

    பதிலளிநீக்கு
  14. ஆஆஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் ரெசிப்பியா?:).. என்னுடைய குழைசாதத்தைத்தான் புளிச்சாதமா மாத்திட்டாரோ என நினைச்சு கொப்பிவலது கேய்க்க வந்தேன்:).. ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் இடிக்காமல் நில்லுங்கோ.. நானும் கியூவில நிண்டு படிச்சிட்டு வாறேன்:).

    பதிலளிநீக்கு
  15. பெருமாள் கோவிலென்றால் முதலில் நினைவில் தட்டுவது புளியோதரைதான். திருமாலின் திருமுகம் சற்றுக் கழித்துத்தான் திரும்புகிறது ! சாப்பாட்டு ராமன்களாய்ப் பிள்ளைகளைப் படைத்த சாமிக்கு இதுவும் வேண்டும்..இன்னமும் வேண்டும்.

    எதையாவது தின்று நொட்டைவிட்டுவிட்டு தேவாம்ருதம் என்கிறார்கள் சில அசடுகள். கோவில் புளியோதரையைத் தாண்டியா தேவாம்ருதம் ?

    பதிலளிநீக்கு
  16. புளியோதரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. கடந்த ஒரு வருடமா செய்ய நினைக்கிறேன் இன்னும் செய்தபாடில்லை.. ஏனெனில் எனக்கு மட்டும்தான்ன்ன்ன்ன் பிடிக்கும் இங்கு:)..

    //4 சிவப்பு மிளகாயும் சேர்த்தேன்.
    // ஹா ஹா ஹா இப்போதெல்லாம் ரொம்ப உஷாராகிட்டீங்க நெ தமிழன்.. சிகப்பு மிளகாய் எனில் பழ மிள்காயையும் நினைக்க வாய்ப்பிருக்கு:).

    ///கொத்தமல்லி விரை (தனியா) //
    ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊ கீதா ஓடிக்கம்ம்ம்:).. ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர் நெ தமிழன்:).. அதிராட கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும் பிக்கோஸ்:) மீக்கு டமில்ல டி ஆக்கும்:).. க்கும் க்கும்:).

    ///வற்றல் மிளகாய் கொஞ்சம் கருப்பானால் பாதகமில்லை. ///
    ஹா ஹா ஹா எல்லாமே பிரிஞ்சுபோச்செனக்கூஊஊஊ:) கீதா கூட இதைக் கவனிக்கவில்லையே... அது அடுப்பில் மிளகாயைப் போட்டுவிட்டு படமெடுக்க கமெரா தேடி ஓடியிருக்கிறார்ர்:) இங்கின கறுத்து விட்டதூஊஊஊ:)... இபோ நமக்குச் சொல்றார் கறுப்பானால் பறவாயிலையாம்ம்ம்ம்.. நோஓஓஓஓ அதெப்படிக் கறுக்க விடலாம்?:) நான் இதை சுப்றீம் கோட் வரை கொண்டு போகப்போகிறேன்ன்ன்:) என்னை ஆரும் தடுக்கக்கூடாதூஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  17. @அதிரா, புளிக்காய்ச்சலுக்கு வற்றல் மிளகாய் சேர்த்தால் நன்கு கறுத்தால் தான் ருசி! அந்தப் புளிச் சாறில் ஊறிய வற்றல் மிளகாயைத் தொட்டுக் கொண்டே மோர் சாதம் சாப்பிடலாம்! :) அப்புறமாக் கோயில் புளியோதரைக்குப் பொதுவாக மிளகாய் வற்றல் சேர்ப்பதில்லை. மிளகு மட்டும் தான் சேர்ப்பார்கள்! இங்கேயும் ஶ்ரீரங்கம் கோயிலில் வெளி ஆண்டாள் சந்நிதி கோஷ்டியில் பார்த்திருக்கேன். கோஷ்டி முடிஞ்சதும் கொடுக்கும் புளியோதரையில் மிளகு மட்டுமே இருக்கும். அதே பிரசாதம் பின்னர் அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் செல்லத் தூக்கில் கொடுப்பதில் மி.வத்தல் இருக்கும். எப்போவானும் மி.வத்தல்+மிளகு! இது நான் பல பெருமாள் கோயில்களில் பார்த்திருக்கேன். முகப்பேர் சந்தான ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி(கட்டாயமாய் மிளகு போட்டுத் தான் இருக்கும்.) காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் போன்ற பல கோயில்களின் பிரசாதங்களிலும் மிளகு தான் இருக்கும். அதுவே கோயில் பிரசாத ஸ்டால்களில் வாங்கினால் மிளகாய் வற்றல் சேர்த்த புளியோதரை கிடைக்கும். இது தனி! அது தனி! (இப்போதெல்லாம் எல்லாக் கோயில்களிலும்!)

    பதிலளிநீக்கு
  18. அது என்னமோ தெரியலை, திங்கள் முதல் வியாழன் வரை "எங்கள் ப்ளாக்" வலைப்பக்கம் என்னோட வலைப்பக்கத்து டாஷ் போர்டில் இருந்து வர முடியாது! வெள்ளிக்கிழமை சாயந்திரத்துக்கு மேல் தான் வர ஆரம்பிக்கும்! :) இன்னிக்கும் அப்படியே! முகநூலில் இருந்து வர வேண்டி இருக்கு! ஹெஹெஹெஹெஹெ

    பதிலளிநீக்கு
  19. புளிக்காய்ச்சல், சாம்பார் போன்றவற்றில் ஜீரகம் சேர்த்தால் அவ்வளவு ருசி இருக்காது. ஜீரக வாசனை மேலிட்டுக்கொண்டு இருக்கும். :(

    பதிலளிநீக்கு
  20. நானும் இதுபோலத்தான் செய்திருக்கிறேன், ஆனால் மிளகு, கொத்தமல்லி சேர்த்ததில்லை, சாதத்திலும் இப்படி நல்லெண்ணெய் சேர்த்ததில்லை. இவற்றைச் சேர்த்து செய்து பார்க்கிறேன் ரெசிப்பி பார்த்து இப்பவே நாக்கெல்லாம் என்னமோ பண்ணுது..

    அதில் நேற்றிலிருந்து படு குளிராக இருக்கு இங்கு.

    அதென்ன 4 பிளேட்ஸ் இருக்கு?.. புளிக்காச்சலையும் சுவாமிக்கு வச்சனீங்களோ?... இந்தக் காலையிலேயே சாப்பிடோணும்போல வருதே... எனகு புளிப்பெனில் எப்பவும் பிடிக்கும்.

    சுவீட்ஸ் சொக்கலேட் பெரிதாக பிடிக்காது சாப்பிடமாட்டேன்ன் ஆனா பிட்டர் ரேஸ்ட்ல நிறைய இனிப்புக்கள் வருமே அவை ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  21. ///புளிக்காய்ச்சல், சாம்பார் போன்றவற்றில் ஜீரகம் சேர்த்தால் அவ்வளவு ருசி இருக்காது. ஜீரக வாசனை மேலிட்டுக்கொண்டு இருக்கும். :(///

    ஆங்ங்ங்ங் இப்போ கீதாக்காவும் இந்த விசயத்தில் நல்ல பிறக்டிஸ் ஆகிட்டா:) அதேதான் விடாதீங்கோ கீதாக்கா:)..

    பதிலளிநீக்கு
  22. மிளகு தவிர்த்து மிச்சம்லாம் நாங்க செய்வதுப்போலதான் செய்திருக்கீங்க

    பதிலளிநீக்கு
  23. அது என்ன நெ.த. கலந்திருக்கும் புளியோதரை பச்சை நிறமாத் தெரியுது! எனக்கு மட்டுமா? :)

    பதிலளிநீக்கு
  24. நன்றி எங்கள் பிளாக்-ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு.

    திருப்தியாக புளியோதரை எப்போதும் அமையாது. நமக்கு அப்போ பசி இருக்கணும், புளியோதரையில் சேர்மானம் சரியாக இருக்கணும். எனக்கென்னவோ தோணுது, ஒரு தடவை சாப்பிட்டதுபோல் எப்போதும் இருக்காதுன்னு. சந்தேகம் தீர்க்க, நீங்கள் உங்கள் நண்பர் சுகுமாரிடம் இன்னொருமுறை புளிக்காய்ச்சல் செய்து தரச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயம் உங்கள் மனைவி செய்திருப்பார். எதற்கு நீங்கள் அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  25. @ அப்பாவி athira said...

    >>> ஸ்ஸ்ஸ்ஸ்.. கொஞ்சம் இடிக்காமல் நில்லுங்கோ..
    நானும் கியூவில நிண்டு படிச்சிட்டு வாறேன்:) <<<

    நல்லவேளை.. சனங்கள் வாறதுக்குள்ள நான் பிரசாதம் வாங்கிட்டனம்!..

    பதிலளிநீக்கு
  26. அன்பின் நெ. த. அவர்களுக்கு,
    தாங்கள் எனது பதிவு ஒன்றினுக்கு எழுப்பிய ஐயத்திற்கு
    இன்று விடை பகர்ந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்...

    சரி.. சரி.. அவங்களுக்கு சும்மா தொந்தரவு கொடுக்காம -
    போய்ப் புளியோதரை செய்யிற வேலையப் பாருங்க!..
    இங்கே கிளம்புற வாசம் தேம்சு கரை வரைக்கும் போகோணும்.. சொல்லிட்டேன்!..

    பதிலளிநீக்கு
  27. ///நல்லவேளை.. சனங்கள் வாறதுக்குள்ள நான் பிரசாதம் வாங்கிட்டனம்!..//

    ஹா ஹா ஹா துரை அண்ணன்... பன்மைக்குத்தான் வாங்கிட்டினம் என வருமாக்கும்:) நீங்க ஒருமை எல்லோ:) ஹா ஹா ஹா..

    சத்தியமா நேற்றுக்கூட நினைச்சேன்ன்.. முழிச்சிருந்து துரை அண்ணனை முந்தி முதல் கொமெண்ட் போடோணும் ஒருக்கால் எனினும் என:) ஆனா இந்தக் குளிருக்கு, குல்ட்டை விட்டு வெளியே வரவே முடியுதில்லை கர்ர்ர்:))

    பொறுங்கோ பொறுங்கோ.. புலி ஓதரை செய்து எலோரையும் விரட்டப்போறேன்ன் விரைவில்:).. ஆனா புளியோதரைக்கு என் வாழைக்காய்ப் பிரட்டல்தான் பொருத்தமா இருக்குமென நினைக்கிறேன்:) நீங்க என்ன நினைக்கிறீங்க துரை அண்ணன்?:)..

    கீதாகா உங்க லிங்கைப் பிடிச்சுப் போய்ப் பார்க்கிறேன்.. கொஞ்சத்தாலயாக்கும்:)

    பதிலளிநீக்கு
  28. வெந்தயம்,தனியா,மிளகுசிறிது வறுத்துப் பொடி செய்து போடுவதுதான் என் வழக்கம். புளி புதுசும்,பழசுமாகச் சேர்த்துக் கரைத்து விட்டால் கலர் அழகாக வரும். கீதா சாம்பசிவம் மெத்தட் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதே. கட்டிப் பெருங்காயம் நல்ல வாஸனையைக் கொடுக்கும். எண்ணெய் நல்லெண்ணெய் உபயோகித்துத்தான் புளியஞ்சாதம் யாவருமே செய்வார்கள். ஒரு துளி வெல்லம் வழக்கம்தான்.புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து புளிக்குழம்பு சுருங்கும்போதுதான் நல்ல பதம் வரும். அப்போதும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கர்நாடகா மண்டையா ஐயங்கார்கள் புளிக் காய்ச்சலுக்கு உலர்ந்த கொப்பரைத் துருவல் சேர்ப்பார்கள். பொடி அதிகமாகவும்,புளி குறைவாகவும் இருக்கும். வற்றல் மிளகாயை முழுவதுமாகத்தான் வறுப்பது வழக்கம். சிவப்புக் கொண்டைக்கடலை தாளித்துக் கொட்டும் போதே சேர்ப்பது வழக்கம். பெருமாள் கோவில் புளியோதரையை யாராலும் மி்ஞ்ச முடியாது. ஆமாம் சுய புராணமாக இருக்கே என்கிறீர்களா. கோவிலை விடுங்கோ. ஐயங்கார் வீட்டு தயாரிப்பும் அப்படியே நம்பர் ஒன் என்பார்கள். அது உங்களுக்கும் பொருந்துகிறது. கூடவே பச்சடி,பாயஸம். வெளுத்துக் கட்டலாம். அரிசி பழசா ,நல்ல ரகமா இருக்கணும். நன்றி நெ. தமிழன். மிளகாய் கீ.சாம்பசிவம் சொன்னது ஞாபகம் வைக்கவும். உப்பும்,புளிப்பும் ஊறி நன்றாக இருக்கும். துளி தயிர் சாதமும் கூட இருந்தால் நன்றாக இருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. அப்பா.. எப்படியோ ஒத்து வந்தாயிற்று..

    புளியோதரைக்கு வாழைக்காய் வறுவல் நன்றாக இருக்கும்.. அப்படியே சுட்ட அப்பளம்... ஆகா!..

    பதிலளிநீக்கு
  30. காமாட்சி அம்மா அவர்களது குறிப்பு இன்னும் சிறப்பு..

    வாழ்க புளியோதரை!..

    பதிலளிநீக்கு
  31. அது என்னமோ உண்மை தான் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போல் வீட்டில் செய்தால் வராது எவ்வ்ளவு முயற்சித்தாலும் அது போல வேர்க்கடலை சேர்த்தால் தான் சுவையாக இருக்கும் கடுகு நேர் திருவமாற கொடுத்து இருக்கீங்களே அப்படியென்றால் என்ன எனக்கு சிலது பழய பேச்சு வழக்கு புரியாது அருமையாக குறிப்புடன் புளியோதரை காண்பித்து இருக்கீங்க
    சகோ உங்கள் பிளாக் எது உங்கள் பெயரை கிளிக் செய்தால் காண்பிக்க வில்லை அதனால் கேட்டிக்கிறேன் இங்கு

    பதிலளிநீக்கு
  32. படிச்சி முடித்து கமெண்ட் போட்டுடு பார்த்தா காமாட்சி அம்மா கீதா சிஸ் எல்லோரும் குறிப்புகள் கொடுத்து இருக்காங்க சூப்பர்
    ஹா ஹா அதிரா நல்லெண்ணெய் போட்டு சமையல் பத்தி சொன்னா படிக்கச் வருவதற்க்கு முன் விளக்கெண்ணெய் பாட்டிலோட வந்து படிச்சு இருக்கீங்க மிஸ்டேக்கை .......ஐயோ என்னோடது எல்லாம் நிறைய மிஸ்டேக் வருமே கூகிள் இன்புட் நான் யூஸ் பண்ணுறேன் ரொம்ப வரும் மிஸ்டேக் பார்க்காம விட்டா

    பதிலளிநீக்கு
  33. திருவமாற என்றால் தாளிப்பதற்கு!..

    பதிலளிநீக்கு
  34. வாங்க துரை செல்வராஜு சார்... வேர்க்கடலை புளிக்காய்ச்சல் காச்சும்போது சேர்த்தால், உடனே உபயோகப்படுத்தவேண்டும். பழைய வேர்க்கடலையாக இருந்தால் அதில் சிக்கு வாசனை வந்துவிடும். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். வசிஷ்டர் வாயால் 'பிரம்மரிஷி' பட்டம் வாங்குவது சுலபமா? உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி. நான் இதுவரை கொண்டைக்கடலை சேர்த்து சாப்பிட்டதில்லை. கொத்தமல்லி விரை சேர்க்காமல்தான் பொதுவா சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. வருகைக்கு நன்றி வெங்கட். உங்க இரயில் பிரயாணத்துக்கு உங்கள் வீட்டில் 'புளியோதரை' மற்றும் சப்பாத்தி வகையறாதான் செய்துதருவார்கள் என எண்ணியிருந்தேன். ஒரு நாள் புளிக்காச்சல் செய்துவைத்துவிட்டால், அவசரத்துக்குக் கைகொடுக்குமே. டிசம்பர் முதல் வாரத்தில் செய்தால், ஜனவரி வரை, தில்லி குளிருக்கு, ஃப்ரிட்ஜ் வேண்டாமே.

    பதிலளிநீக்கு
  37. வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  38. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. அப்போ அப்போ சுற்றுலா செல்பவர்களுக்கு 'புளியோதரை' பிடித்துத்தானே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க அவர்கள் உண்மைகள் துரை. எங்க ரொம்ப நல்லாருக்குன்னு எழுதினா, வீட்டம்மா இதைச் செய்யச் சொல்லிடப்போகிறார்களே என்ற பயமா?

    பதிலளிநீக்கு
  40. வாங்க சேட்டைக்காரன் வேணுஜி சார். மிளகு புளியோதரை அல்லிக்கேணியின் விசேஷம். அதைவிட, இந்த முறை (தீபாவளி சமயத்தில்) பார்த்தசாரதி கோவில் பிரசாத ஸ்டாலில் கொடுத்த சர்க்கரைப் பொங்கல் அதைவிட அருமையாக இருந்தது. (அதிசயமா). முன்னாலெல்லாம், திருப்பதி கோவிலில் கியூவில் இருக்கும்போது, 1 ரூ அல்லது 2 ரூபாய்க்கு புளியோதரை தருவார்கள். அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். பெருமாள் அருள் எப்படியும் கிடைக்கும். உடனடியாகக் கிடைப்பது ருசியான பிரசாதம்தானே. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. தில்லையகத்து கீதா ரங்கன் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்க சொல்லியிருக்கற மாதிரி நிறைய வேரியேஷன்ஸ் உண்டு. புளி சூடு, மிளகாய்/மிளகு காரம், நல்லெண்ணெய் குளிர்ச்சி, வெந்தயம்-குளிர்ச்சிக்காக. அவ்வளவுதான்.

    நானும் எந்தக் கோவிலுக்குப் போனாலும் கண்டிப்பாக பிரசாத ஸ்டால் விஸிட், பர்சேஸ் உண்டு. நிறைய இடங்களில் அவ்வளவு நன்றாக இருக்காது. திருவிட எந்தைப் பெருமாள் கோவிலில் நீங்க சொல்ற மாதிரி பிரசாத ஸ்டால் உண்டுன்னு தெரியாது. அடுத்த முறை அவன் அருளும், பிரசாதமும் வாய்க்கணும்.

    பதிலளிநீக்கு
  42. வருகைக்கு நன்றி அப்பாதுரை சார். நாம வற்றல் மிளகாய், சிவப்பு மிளகாய்னு சொல்றதை, இலங்கைத் தமிழர்கள் 'செத்தல் மிளகாய்' என்று குறிப்பிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  43. வாங்க அதிரா.... மண்டபத்துல நானே செய்முறை எழுதினா, 'நான் நானேதான் செய்துபார்த்தது' என்று சொல்லவேண்டியிருக்கு. இதுல உங்க 'குழை சாதத்தை' உல்டாவாக எழுதினா, அவ்வளவுதான். இப்போகூட யாரோ, 'அ.அ வின் குழைசாதம் செய்தேன்.. சரியா வரலை... தூரப் போடாமல் நோட்டுலாம் ஒட்டப் பயன்படுத்திக்கிட்டேன். என் பையனுக்கு நான் ஹெல்ப் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம்' என்று சொல்லியிருந்தார்கள். நிச்சயமா கீதா ரங்கன் அவர்களோ அல்லது மதுரைத் தமிழனோ......... இல்லை :)

    பதிலளிநீக்கு
  44. வருகைக்கு நன்றி ஏகாந்தன் சார்... இதயம்/மனதைப் படைத்த இறைவன் வயிறையும் படைத்திருக்கிறானே. அவன் தரிசனம் மனதுக்கு நிறைவு. அவனது பிரசாதம் வயிற்றிற்கு நிறைவு.

    'தேவாம்ருதம்' என்பது நம் பசியைப் பொருத்தது. நல்ல பசி வேளையில், எனக்கு வெறும் மோர் சாதமும், மாங்காய் ஊறுகாயுமே 'தேவாம்ருதம்'.

    பதிலளிநீக்கு
  45. மீள் வருகைக்கு நன்றி அப்பாவி அதிரா. உங்களுக்கு 'குறை கண்டுபிடித்த' திருப்தி கிடைக்கச்செய்யாமல், மற்றவர்களெல்லாம் விளக்கம் சொல்ல வருகிறார்கள் (மிளகாய் கறுத்தது, கீதா சாம்பசிவம் மேடம், அது சரியான முறை என்று சொன்னது....). உங்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கு.

    எப்போ உங்கள் குரல் பழைய நிலைமைக்கு வந்து, 'ஆஷா போஸ்லே அதிரா'ன்னு போட்டுக்கப்போறீங்க?

    பதிலளிநீக்கு
  46. மீள் வருகைகளுக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

    "திங்கள் முதல் வியாழன் வரை "எங்கள் ப்ளாக்" வலைப்பக்கம் என்னோட வலைப்பக்கத்து டாஷ் போர்டில் இருந்து வர முடியாது!" - இது ஒருவேளை தெய்வக் குற்றமாக இருக்குமோ? ஏன்னா, நீங்க புதுசா 'திங்கக் கிழமை'க்குப் போட்டியா ரெசிப்பி எழுத ஆரம்பித்ததிலிருந்துதான் இந்தப் பிரச்சனை உங்களுக்கு வர ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்.

    'ஜீரகம்' பற்றி நீங்கள் எழுதியுள்ளது சரி. எனக்குமே சாம்பாரில் ஜீரகம் அகப்பட்டால், அது ருசியைக் குறைப்பதாகத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  47. மீள் வருகைக்கு நன்றி அதிரா. குளிர் காலத்தில், சூடான சாதத்தில் ரசம் போட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். உங்களுக்கெல்லாம் (பெண்களுக்கு) நீங்களே செய்து பிறகு சாப்பிடணும்.

    ஆமாம் அதிரா... எல்லாவற்றையும் சன்னிதியில் அன்று வைத்தேன்.

    பதிலளிநீக்கு
  48. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  49. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  50. @கீதா சாம்பசிவம் மேடம்- "பச்சை நிறம்" - ... அன்றைக்கு சாப்பிட கொஞ்சம் நேரமாகிவிட்டது. அதனால்தான் கடைசிப் படம் சரியாக வரவில்லை. அதனால், நிறம் சிறிது பச்சை நிறம்போல் தெரிகிறது. உங்களின் அந்த ரெசிப்பிக்களை நான் இதற்கு முன்பே வாசித்திருக்கிறேன் (அப்போவே என் FILEல் காப்பி செய்து வைத்திருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  51. மீள் வருகைக்கு நன்றி துரை செல்வராஜு சார் - நான் நிறைய பின்னூட்டங்கள்/சந்தேகங்கள் எழுப்பியிருக்கிறேன். அவற்றிற்கு உங்கள் தளத்தில் பதில் பார்த்தமாதிரி ஞாபகம் இல்லையே (காரணத்தையும் நான் யூகித்தேன். சிறிது பழைய இடுகைக்கு நான் பின்னூட்டமிட்டால், அதை நீங்கள் திரும்பப் படிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால்). அதுபோல இங்கும் 'சென்ற புதனுக்கு முந்தைய புதன்' உங்களுக்குப் பதில் அளித்திருந்தேன்.

    புளியோதரை போன்ற கலந்த அன்னங்களுக்கு வாழைக்காய் வறுவல் (சிப்ஸ்) வடகம் போன்றவை ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  52. //திருமாலின் திருமுகம் சற்றுக் கழித்துத்தான் திரும்புகிறது !

    😃 😋

    பதிலளிநீக்கு
  53. //கலந்த அன்னங்களுக்கு வாழைக்காய் வறுவல் (சிப்ஸ்)

    home made வாழைக்காய் வறுவல் - ஆகா.. வருடக்கணக்கிலாகிறது. 😌

    பதிலளிநீக்கு
  54. வாங்க காமாட்சி அம்மா... உங்களின் நீண்ட பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

    கர்நாடகா மாண்ட்யா ஐயங்கார்கள் (Mandya), அவங்களை மைசூர் ஐயங்கார்கள் என்போம், தமிழ் நாட்டிலிருந்து Migrate ஆனவங்க. அவங்க கொப்பரைத் துருவலைச் சேர்ப்பார்கள். அதுனாலதான் எம்.டி.ஆர். பிராண்ட் புளிஹோரை மிக்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

    அவங்க, திவ்யப்ப்ரபந்தத்தை கன்னட மொழியில் பிரின்ட் செய்த புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள் (திவ்யப்ப்ரபந்தம் தமிழ்). நான் அந்தப் புத்தகத்தை வாங்கி, சட சடவெனப் படித்ததும், எனக்கும் கன்னடம் படிக்கத் தெரியும் என்று நினைத்துகொண்டுவிட்டார், என் நண்பனின் தந்தை.

    நீங்கள் சொன்னதுபோல், என்னதான் புளியோதரை சாப்பிட்டாலும், கடைசியா கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டால்தான் திருப்தி. (எனக்கு பாயசம் சாப்பிடணும்.. அதுதான் சாப்பாட்டில் கடைசி ஐட்டம்)

    வருகைக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது ஒரு திங்கக் கிழமை பதிவு மீண்டும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  55. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி. 'திருவமாற'-துரை செல்வராஜு அவர்கள் விளக்கம் அளித்துவிட்டார். கோவில்ல தரும் தயிர்சாதத்தின் சுவையும், நாம் வீட்டில் பண்ணினால் வராது. இத்தனைக்கும் அவர்களது INGREDIENTSஐவிட நாம் RICHஆகப் போடுவோம். பிரசாதத்தின் மகிமையே மகிமை.

    நான் பிளாக் வைத்துக்கொள்ளவில்லை. வாசகனாகவே இருக்க விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  56. @அதிரராவ் //கொத்தமல்லி விரை (தனியா) //
    ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊ கீதா ஓடிக்கம்ம்ம்:).. ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர் நெ தமிழன்:).. அதிராட கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும் பிக்கோஸ்:) மீக்கு டமில்ல டி ஆக்கும்:).. க்கும் க்கும்:).//

    கர்ர்ர்ர்ர்ர்ர் :) சும்மா சவுண்ட் விட்டுக்கிட்டு முதல்ல அந்த கண்ணாடியை போடுங்க போடாம பார்த்தா இப்படித்தான் தப்புத்தப்பா தெரியும்

    பதிலளிநீக்கு
  57. @ நெல்லைத்தமிழன் //புளியோதரை சாப்பிட்டாலும், கடைசியா கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டால்தான் திருப்தி//

    நான் எப்பவும் பிக்கினிக் போகும்போது குட்டி பாக்ஸ் செய்வேன் சப்பாத்தி கிழங்கு புளியோதரை அப்புறம் கிரீக் யோகர்ட் போட்டு வெழுமென பிசைந்த தயிர் அன்னம் :)
    என் ப்ரண்ட் ஹேமா இப்படித்தான் சொல்வா :) தளர பிசைந்த என்பதை கண்ணை மூடிக்கிட்டு ஸ்பூனால் சாப்பிடும்போது என்னே ருசி தெரியுமோ !!!

    பதிலளிநீக்கு
  58. என்னாதூஊஊஊஊ என் குழை சாதத்தில் தவறா?:).. சரியான அரிசி பாவிக்கவில்லை அவர்கள் என நினைக்கிறேன்:).. ஆடத்தெரியாதவர் மேடை சரியில்லை எண்டாராம்:)... அப்பூடிச் சொல்லியாவது தப்பிச்சுடுவோம்ம்... அதுசரி அந்த மல்லி விரை:) என் டவுட்டைக் கிளீன் வெரி சோரி கிளியர் பண்ணுங்கோ நெ தமிழன்:).. அது மல்லி விதை எனத்தாரே வரும்???..

    பதில் வரத்தாமதமானால் நான் பாடிப்போடுவேன் ஜொள்ளிட்டேஎன்ன்ன்ன்ன்:).. பிறகு பொத்துப் பொத்தென மயங்கி விழுவோருக்கு நான் பொறுப்பல்ல:)..

    பதிலளிநீக்கு
  59. எப்பவும் கோவில் ப்ரசாதங்களுக்குஈடில்லை ..என்னதான் திருப்பதி லட்டுவை அண்ணாச்சி ஸ்டால்களில் செஞ்சாலும் அந்த ஒரிஜினல் ருசி வரவே வராது .அது அந்த பொருட்களை சமைக்கும் இடம் சூழல் பாத்திரம் எல்லா விஷயமும் அடங்கியிருக்கு ..

    பதிலளிநீக்கு
  60. ஆவ்வ்வ் அஞ்சுவும் இங்கின கம்பி மேலயோ?:) இது தெரியாமல் காலை வச்சிட்டனே:)..

    நாளைக்குப் புளியோதரை செய்யலாம் என நினைக்கிறேன்(செவ்வாய் விரதத்துக்கு) நேக்கு மட்டும்:).

    பதிலளிநீக்கு
  61. அது பேச்சுத்தமிழ் மியாவ் ..

    பதிலளிநீக்கு
  62. ஏஞ்சலின் வருகைக்கு நன்றி. எங்க அம்மாவும் பிக்னிக் என்றால், பூரி/உருளைக் கிழங்கு, புளியோதரை மற்றும் வழுமூன பிசைந்த தயிர் சாதம், தேங்காய் தொகையல் (இது புளி சேர்த்துச் செய்வது) ஆகியவைதான் தயார் செய்வார்கள். இரயில் பிரயாணம் என்றால், மிளகாய்ப்பொடி தடவிய நல்லெண்ணெய் சேர்த்த இட்லி, தயிர்சாதம், தேங்காய் துகையல். 'அந்த நாளும் வந்திடாதோன்னு இருக்கு'.

    பதிலளிநீக்கு
  63. அதிரா - கொத்தமல்லி விரை, விதை இரண்டும் சரியான சொற்கள்தான். உங்க 'குற்றம் கண்டுபிடித்த திருப்தியை' நான் கெடுக்க விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் சென்றுவிட்டேன். ஏஞ்சலின் சொன்னதுனால, அடுத்த தடவை என் இடுகையைப் படிக்கும்போது, கண்ணாடி, பூதக்கண்ணாடி என ஒன்றின்மேல் ஒன்று போட்டு செக் செய்வினம். அதனால் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  64. @அதிரா- நாளைக்குப் புளியோதரை செய்யலாம் என நினைக்கிறேன்(செவ்வாய் விரதத்துக்கு) நேக்கு மட்டும்:). - எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும், விரத நாட்களில் நீங்கள் பிறருக்கு, அதுவும் கணவர் குழந்தைகளுக்கு மனதாலும் கெடுதல் நினைக்க மாட்டீர்கள் என்று. செவ்வாய் விரதத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  65. ஆவ் இருங்க நெல்லை தமிழன் நான் இன்னும் புளியோதரை கமெண்டுக்கு வரலை அதுக்குள்ளே இந்த பூனை டவுட்டை க்ளியர் செய்ய போயிட்டேன் :)

    நானும் இப்படித்தான் செய்வது வழக்கம் ஆனா மிளகுத்தூள் சேர்த்ததேயில்லை !! இனி இதே போல செய்து பார்க்கிறேன் ..
    அப்புறம் புளியோதரைக்கு மொறு மொறுப்பா ரோஸ்ட் செஞ்ச உருளை செம்ம காம்போ !

    பதிலளிநீக்கு
  66. @ஏஞ்சலின்- // திருப்பதி லட்டுவை அண்ணாச்சி ஸ்டால்களில் செஞ்சாலும் அந்த ஒரிஜினல் ருசி வரவே வராது //

    கோவில் பிரசாதத்துக்கு மட்டும்தான் இது பொருந்தும். பிரசாத ஸ்டால்களில் விற்பதற்கு இது பெரும்பாலும் பொருந்தாது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இப்போது பெரிய லட்டு போன்றவைகள் விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் சுவை நன்றாக இல்லை. இதுபோல் ஸ்ரீரங்கம் பிரசாத ஸ்டாலில், எனக்குத் தெரிந்து எதுவும் நன்றாக இருக்காது. ஆனால், கோவில் புளியோதரை, திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிருதம் போன்று பல கோவில்களின் தனித்தன்மையுள்ள பிரசாதம் ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  67. //அவங்க கொப்பரைத் துருவலைச் சேர்ப்பார்கள்//

    நான் ரொம்ப வருஷம் முன்னாடி தேவி பத்திரிக்கைன்னு நினைக்கிறேன் அதில் ஒரு தொடர்கதை வாசிச்சேன் அதில் இந்த கொப்பரை சேர்த்த புளியோதரை ரெசிப்பி வந்தது ..அப்போ யோசிச்சேன் எப்படி இருக்கும்னு ..கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ருசியுடன் இருக்கும்னு நினைக்கிறேன் ..என்ன சொன்னாலும் நல்லெண்ணெய் தான் பெஸ்ட் புளியோதரைக்கு .

    பதிலளிநீக்கு
  68. ஏஞ்சலின் - உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மிளகு அரைத்து (கரகரப்பா) சேர்த்துப்பாருங்கள். (அப்போ மிளகாய் போடவேண்டாம் அல்லது வெகு குறைவாக). நல்லா இருக்கும்.

    புளியோதரைக்கு உருளை ரோஸ்ட் அவ்வளவு எடுக்காதுன்னு நான் நினைக்கறேன். புளியோதரை காரம், தொட்டுக்க உள்ளதும் காரமாக இருந்தால் எடுக்காது. ரெய்த்தா/தயிர் பச்சிடி நல்லா இருக்கும்.

    கொப்பரை சேர்த்து புளிஹோரை செய்தால் அது பரவாயில்லாமல்தான் இருக்கும். எம்.டி.ஆர் மிக்ஸ் வாங்கி கொஞ்சம் நாளாயிடுத்துன்னா தேங்காய் சிக்கு வாசனை வந்து புளிஹோரை ரொம்ப சுமாரா இருக்கும். தமிழக புளியோதரைதான் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  69. ஹாஹா :) நெல்லைத்தமிழன் பூனைக்கு நீங்க பிங்க் எழுத்தில் போஸ்ட் எழுதினது கண்ணுக்கு படவில்லை :)
    பார்த்தா பிங்க் எனது கொப்பி ரைட் :) நம்ம சொல்றதுன்னா காப்பிரைட் :) னு சண்டைக்கு வருவாங்க

    பதிலளிநீக்கு
  70. நெல்லை... ஒருமுறை செய்யும் சுவை மறுமுறையும் அப்படியே வராதுதான். ஆனாலும் சுகுமார் செய்வதில் அடிப்படை மாறாமல் இலேசான மாற்றங்கள் இருந்தாலும் உரைக்காது.

    அவரே சமீபத்தில் தன் பாணியை சற்றே மாற்றிக்கொண்டு மிளகு அதிகம் சேர்த்தபோது பழைய டேஸ்ட் வரவில்லை என்பதைச் சொன்னேன். அவர் கட்டிப் பெருங்காயம்தான் சேர்ப்பார். பச்சையாகவும் சேர்ப்பார். வறுத்தும் சேர்ப்பார். முன்னர் சுவைத்த சில சுவைகள் மறக்காது. அதில் சுகுமார் புளிக்காய்ச்சல் ஒன்று.


    இன்னொன்று என் அம்மா கைமணத்தில் மிளகுக் குழம்பு. அவர் மறைவதற்கு மூன்று மாதங்கள் முன்பு எனக்காக பிரத்யேகமாக பெரிய அளவில் செய்து கொடுத்த மிளகுக் குழம்பை சென்னை வந்து நிறையே பேருக்கு சுவைக்கக் கொடுத்தேன்.

    பதிலளிநீக்கு
  71. நான் இங்கின புயுசு புயுசாத் தமிழ் பழகுறேனாக்கும்:)... ஒரு குட்டி ஹார்ட்டுக்குள்ள எவ்ளோ விசயத்தைத்தான் சேவ் பண்ணி வைக்கிறதாம் நான்:)... டாங்ஸ் அஞ்சு, நெ.தமிழன்:) அப்பவும் ஒத்துக்கொள்றாரோ பாருங்கோ:) ஹ்ர ஹா ஹா சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  72. // கடைசியா கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டால்தான் திருப்தி //

    இரவில் நான் சாதம் சாப்பிடுவதில்லை! டிஃபன்தான். நேற்று மதியம் தாயி சாதத்துக்கு தொட்டுக்கொள்ள எங்கள் வீட்டில் காய்த்த பச்சை மிளகாய் போட்டு புளி மிளகாய் செய்து கொண்டேன்!


    தேங்காய் எல்லாம் சேர்ப்பார்களா? நான் மாட்டேன். மேலும்பழைய வாசனை சீக்கிரமே வந்து விடும்!

    பதிலளிநீக்கு
  73. //பாகிஸ்தான் மெல்லிய சேமியாவில் பாயசமும்//

    விரைவில் ரெசிப்பி எதிர்பார்க்கின்றேன் ..நீங்க சொல்ற மெல்லிய சேமியா இங்கும் இருக்கு ஆனா இதுவரை செஞ்சதில்லை

    பதிலளிநீக்கு
  74. ஏஞ்சலின் - அது பாயசத்துக்கு நன்றாக வரலை. ஒண்ணு, நான் ரொம்பவும் ஒடித்துப் போடலை. ரெண்டு, ஒரு பாக்கெட் முழுவதையும் உபயோகப்படுத்தியதால் அளவு ஜாஸ்தியாயிடுத்து. நம்ம ஊர் சேமியாவையே நான் பெரும்பாலும் பாயசத்துக்கு உபயோகப்படுத்தி இருந்ததால் எனக்கு இந்தப் பாயசம் பிடிக்கலை. டிரெடிஷனல் சேமியா பாயசம் நான் செய்யும் முறையில் எழுதறேன். நான் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை alternateஆக சேமியா பாயசம், வெல்லப் பாயாசம் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  75. அஞ்சூஊஊ உங்களுக்கு என் பாயாச ரெசிப்பி வேணுமோ?:) எங்கள் சென்னை நண்பி சூப்பரா சேமியா பாயாசம் செய்வா.. எனக்கு இனிப்புப் பிடிக்காது ஆனா இந்த அவவின் பாயாசம் மட்டும் நல்லாப் பிடிக்கும்.. சரி என மீயும் செய்தனே:).. சக்கரைப் புக்கை ரேஞ் க்குப் போயிடுத்தூஊஊஊ:). ஆனாப் பாருங்கோ நான் நல்லா சவ்வரிசிப் பாயாசம் செய்வேன்:).. அந்த ரெசிப்பியை அனுப்பட்டோ அஞ்சு???:).

    எங்கள் சின்னவர் அடிக்கடி பாயாசம் கேட்பார்.. சேமியா வேண்டாமாம் .. ரவுண்ட் பாயாசம்தான் வேணுமாம்:)..

    பதிலளிநீக்கு
  76. thanks athiraa :) enakku nellai thamizhan recipe anuppiuttaar ..avasara avasaramaa type seiren

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோஓஓ அஞ்சு அவருக்கு கஸ்டம் கொடுக்காதீங்க நெ த மிழன் பாவம்... அதனால மீ ஸ்டெப்பூ பை ஸ்டெப்பா படத்தோடு அனுப்புறேனே பிளீஸ்ஸ்:)

      நீக்கு
  77. காகிதப்பூக்கள் பிளாக் ஓனர் இனி சில காலம் திங்க கிழமைகளில் மட்டும் சமையல் குறிப்புக்கள் வரும் திசையை பொறுத்து தொடர்பு எல்லைக்கப்பால் சென்றுவிடுவார் :)

    பதிலளிநீக்கு
  78. அமிர்தமான புளியோதரை. புக்ககத்தில் வேறு மாதிரி, பிறந்த வீட்டில் வேறு மாதிரி. ரயில் பயணங்களுக்கு அம்மாவின் புளியோதரையும், இட்லி,தயிர் சாதமும் பயணத்தை இனிக்க வைக்கும். அதுவும் வாழை இலையில் அம்மா வைக்க அப்பா அதைப் பொட்டலம் கட்டுவார். கடகட வென்று திருமங்கலத்தில் கிளம்பும் வண்டி, திண்டுக்கல் வரும்போது
    மூன்றாம் வகுப்பு பஞ்சில் அம்மா பார்சல்களைப் பிரித்துக் கொடுப்பார். வண்டி ஆட்டத்தோடு அந்தப் புளியோதரையை ரசிப்பது அத்தனை இனிமை.
    அம்மா, பெருங்காயம், வெந்தியம், மிளகு+மிளகாய் தனியாக வறுத்து,
    பொடி செய்து கொள்வார். அம்மியின் கரகரப்பு இருக்கும்.
    நல்லெண்ணெய் தாராளமாக விட்டு,கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு
    வறுபட்டதும் கெட்டிப் புளி கரைத்துவிட்டு ,உப்பும் போட்டுக் கொதித்ததும்
    இந்தப் பொடியைக் கலந்துவிடுவார்.
    ஹப்பா. என்ன மணம். கருவேப்பில வேற.
    உங்கள் மிளகுப் புளியோதரை மிக நன்றாக இருக்கிறது.
    தொட்டுக்க ஜவ்வரிசி வடாம் தான். அப்பளம் தான். சில சமயம்
    தேங்காய்ப் பச்சடி .எல்லோர் நினைவலைகளையும் கிளப்பிவிட்டீர்கள். அதற்கே தனி நன்றி மா. உங்களுக்கும் ஸ்ரீராமுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் நெல்லைத்தமிழன்,

    பதிலளிநீக்கு
  79. //திவ்யப்ப்ரபந்தத்தை கன்னட மொழியில் பிரின்ட் செய்த புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள்

    ஆழி மழைக் கண்ணா என்று எப்படி அச்சடிப்பார்கள், படிப்பார்கள்? கன்னடத்தில் ழ உண்டா?

    பதிலளிநீக்கு
  80. வருகைக்கும் நெடிய கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அவர்களுக்கு. பயணங்களை, அதுவும் உணவின் துணையோடு பயணிக்கும் பயணங்களை, வாழ்வில் மறக்க இயலுமா? உங்கள் எழுத்தே எனக்கு உணவின் வாசனையைக் கொண்டுவந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  81. மீள் வருகைக்கு நன்றி அப்பாதுரை சார். இதை (ஆழி மழைக் கண்ணா) நான் செக் செய்யவில்லை. இருந்தாலும், 'பா', 'அப்பா' 'டாட்'. 'ஏ பாப்ஸ்' என்று எப்படிக் கூப்பிட்டாலும், கூப்பிடுவது நம் பிள்ளையல்லவா?

    பதிலளிநீக்கு
  82. வழக்கமாகச் செய்யும் குழம்புதான் சிலநேரங்களில் சென்னை க்ராண்ட் ஸ்வீட்சிலிருந்து வாங்கி மகன் அனுப்புவான்

    பதிலளிநீக்கு
  83. வாவ்!! நானும் இதே முறையில் தான் செய்வேன். எள் கூட வறுத்து கொஞ்சம் போல மிளகுடன் பொடித்து சேர்ப்பேன்.. என் அம்மா கொண்டக்கடலை சேர்ப்பார்.

    மகளுக்கு லஞ்சுக்கு புளியோதரை கொடுத்து அலுத்து விட்டது.. இப்போதெல்லாம் ஆடி 18, கணுவுக்கு, மற்றும் சுற்றுலாவுக்குத் தான் புளிக்காய்ச்சல்..:)

    பதிலளிநீக்கு
  84. வாங்க ஆதி வெங்கட் அவர்கள். எள் நாங்க சேர்த்ததில்லை.

    எல்லா அம்மாக்களும், சுலபம் சுலபம் என்று எண்ணி, கலந்த சாதம் இல்லைனா இட்லி, சின்ன வகுப்புலேர்ந்து பசங்களுக்குக் கொடுத்து, எந்தப் பசங்களுக்குத்தான் கலந்த சாதம் பிடிக்கும்?

    நான் வாழ்க்கையில் ஒரு முறை ஆடி 18க்கு தாமிரவருணி ஆறு சென்றுள்ளேன். காவிரில ஆடி 18க்குத் தண்ணீர் வருதோ?

    கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  85. ஜி.எம்.பி சார்... தவறுதலாக, தம்பட்டம் மிளகு குழம்புக்குப் போகவேண்டிய உங்க பின்னூட்டம் இங்க வந்துவிட்டதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  86. அய்யங்கார் புளியோதரை விட சௌராஷ்ட்ரா மக்கள் செய்யும் புளியோதரை இன்னும் சூப்பரா irukkum. அவர்களும் vainavarkale. முடிந்தால் அதை ஒரு முறை முயன்று paarungal.

    பதிலளிநீக்கு
  87. வாங்க ஜான் கென்னடி. முதல் முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நான் மதுரையில் சௌராஷ்டிர நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தாலும் சாப்பிடும் வாய்ப்பு கிட்டியதில்லை. விரைவில் அறிந்துகொண்டு செய்துபார்க்கிறேன். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!