Tuesday, February 27, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : காவல் - ரிஷபன்காவல்

இன்று எல்லா வேலைகளும் சட்டென முடிந்து விட்ட மாதிரி இருந்தது. 

ஒரு வாரமாய்த் தனிமை. புவனா ஊருக்குப் போயிருக்கிறாள். கூடவே இரண்டு வயது ஜ்வல்யாவும்.

' இட்லிக்கு அரைச்சு வச்சிருக்கேன். ரெண்டு நாள் இட்லி.. ரெண்டு நாள் தோசைன்னு செஞ்சுக்குங்க. பருப்புப் பொடி இருக்கு. சாதம் வடிச்சா போதும்'

அவள் தோள் மேல் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டேன்.

' என்னைப் பத்தி யோசிக்காதே. நீ பத்திரமா போயிட்டுவா.. அம்மாவுக்கு நல்லபடி ஆவணும்.'

அவள் அம்மாவுக்கு கேன்சர் என்று தெரிந்து விட்டது. ஒரே மகள். அவள் அப்பா ஃபோன் செய்தார். இல்லை அழுதார். 

' ப்ச்.. என்ன மாமா இது.. சொல்லக் கூடாதா.. சரி.. புவனா நாளைக்கு அங்கே இருப்பா.. எனக்கு இப்போ ஆடிட்.. முடிஞ்சதும் நானும் வரேன்..'

புவனாவிடம் பணம் ATM கார்ட் கொடுத்தாச்சு. வைத்தியம்.. குணம்.. டாக்டர்.. கடவுள் கையில். 

ரயிலேற்றி விட்டு வந்தபோது தான் கவனித்தேன். வாசல் கேட் பூட்டி இருந்தது. அதுவும் வெளிப்பக்கம்.

" பாலு"

என்ன அழைத்தாலும் வாட்ச்மெனை காணவில்லை. அதற்குள்ளா பூட்டி விட்டான். பதினொரு மணிக்குத்தானே பூட்டுவது. அதற்குள் வந்து விடுவேன் என்றுதானே சொல்லாமல் போனேன்.

ஏறிக் குதித்து உள்ளே போய் விடலாம். நாளை.. செக்ரட்டரியே ஏறிக் குதித்தார் என்று வரலாறு பேசும். 

வாசல் படிக்கட்டில் அமர்ந்தேன். நிதானிக்கலாம். என்ன செய்ய.. வேலைக்கு வைத்து இரண்டு வாரம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படியா.. 

அரை மணி ஓடியது. சைக்கிளில் பாலு வேகமாய் வந்து இறங்கினான். என்னைப் பார்த்ததும் அதிர்ந்தான். 

ஒன்றும் சொல்லவில்லை. கதவைத் திறந்ததும் உள்ளே வந்து படிக்கட்டு பக்கம் திரும்பும்போது.. 

"சாப்பிடாமல் வந்திட்டேன்.. அதான் போயிட்டு"

" சரிப்பா. எனக்கு ஒண்ணுமில்ல. வேற யாராச்சும் இப்படி வந்து காத்திருந்தால் நல்லாவா இருக்கும். "

" சின்ன கோவம்.. சமைக்கலன்னு.. அப்புறம் மனசு கேக்காம.. "

எனக்கும் மன்னிக்கும் மூட்.  விட்டு விட்டேன். 

மறுநாள் இரவு. பத்து மணி. தற்செயலாய் பால்கனியில் நின்றிருந்தேன். புவனாவுடன் இத்தனை நேரம் பேசியாச்சு. இனி தூங்கப் போகலாம். ஆடிட்டருடன் அலைந்ததில் கூடுதல் அலுப்பு.

வாசல் கதவில் சத்தம். எட்டிப் பார்த்தால்.. பாலு. வெளியே பூட்டிக் கொண்டு.. சைக்கிளில் ஏறி..

அடப் பாவி. எத்தனை நாளாய் இந்த வேலை.
நேற்று சொன்னது பொய்யா..

என் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு கீழிறங்கினேன்.  சிட் அவுட்டில் உட்கார்ந்தேன். வா.. எப்போது வேண்டுமானாலும்.

மணி 11.30. பாலு எவ்விதப் பதட்டமும் இன்றி இறங்கிக் கதவைத் திறந்ததும்.. மறைவிலிருந்து வெளிப்பட்டேன்.

" என்னப்பா "

" அம்மா.. ஒடம்பு சரியில்லைன்னு. "

" என்கிட்ட சொல்லிட்டு போக வேண்டியதுதானே"

" நீங்க தூங்கி இருப்பீங்க.. தொந்திரவு பண்ண வேணாம்னு "

" அதுக்கு ஏன் வெளியே பூட்டு"

" திறந்து வச்சுட்டு போனாத் தப்பில்லியா"

லாஜிக் பேசினான்.

" நான் கவனிச்சுட்டேன். நீ தினமும் இதான் செய்யறே.. டியூட்டி பார்க்காம போகறதும் இல்லாமல் கதவையும் பூட்டிட்டு.. யாராவது வந்தால்.. எவ்வளவு சங்கடம் "

பாலு பதில் சொல்வதற்குள் கீழ்த்தள குடித்தனக்காரர் ஒருவர் வந்தார். 

" போன வாரம் அரை மணி வெளியே நின்னேன்.. பூட்டியிருந்துச்சுன்னு"

" பாலு.. இது தப்பு.. உனக்கு எதுவும் சிரமம்னா சொல்லிரு.. வேற ஆள் பார்த்துக்கிறோம். நீ கீழே டூட்டி பார்க்கிறேங்கிற நம்பிக்கைல தான் நாங்க வீட்டுக்குள் நிம்மதியாத் தூங்கறோம். உனக்கே சரின்னு படுதா.. "

அவனை யோசிக்க விட்டு மேலேறி வந்து விட்டேன். அடுத்த நாள்.. எட்டிப் பார்த்தால் சிட் அவுட்டில் பாலு. அருகில்.. யார் அது. அந்தப் பெண்.

கீழே இறங்கிப் போனேன். எழுந்து நின்றான்

" அய்யா தான் செக்ரட்டரி" என்றான் அவளிடம்.

கழுத்தில் புது மஞ்சள் கயிறு.

" ஒரு மாசம் ஆவுதுங்க கல்யாணம் ஆகி"

"ஓ.."

" சமைக்க லேட் ஆவுது.. அதான்.. அவளைத் தொல்லை பண்ண வேணாம்னு வந்துட்டு பத்து.. பத்தரைக்குப் போய் சோறு தின்னுட்டு வந்துருவேன்.. இப்ப அவளே எடுத்துகிட்டு வந்துட்டா.. நடந்தே.  எங்க வீட்டுப்பக்கம் லைட் சரியா இல்லீங்க.. அதான் எப்படிப் போவன்னு கேட்டுகிட்டு"

புன்னகைத்தேன்.

" பொறுமையா சாப்பிட்டு.. நீயே கொண்டு போய் விட்டுட்டு வா. எனக்குத் தூக்கம் வரல. நான் நிக்கிறேன் இங்கே.. நாளைலேர்ந்து நீயே போய்ட்டு வந்துரு.. கேட் பூட்ட வேணாம். லேட் பண்ணாம மட்டும் வந்துரு"

அன்றிரவு புவனாவை மறந்து விட்டு தூங்க முடிந்தது என்னால்.. கொஞ்சம் பெருமையுடன்.

51 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்!

துரை செல்வராஜூ said...

கடமை ஒரு பக்கம் இருந்தாலும்...
பாசமும் பந்தமும் பின்னிக் கொண்டிருக்கின்றனவே..

பெருந்தன்மை... அதுவே சிறப்பு...

அழகான இனிய சம்பவம் போல கதை...

Thulasidharan V Thillaiakathu said...

ஹை!!! ரிஷபன் அவர்களின் கதை!!! பானுக்கா காலை வணக்கம்!!!

கதை ரொம்ப அருமை...ரிஷபன் ஸார்...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்!! கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹை பானுக்கா வந்துட்டீங்களா,...நான் நீங்க வந்துருப்பீங்களோனு கொடுத்தேன்...இப்ப நான் நடைய கட்டிருவேன் ஹிஹிஹி...காலை கடமைகள்!!

காவல்காரரிடம் அவரது யதார்த்த கஷ்டம் புரிந்து கொண்டு கருணை காட்டுவது...அப்பொறுப்பையும் சற்று நேரம் எடுத்துக் கொள்வது...என்ற பாத்திரப் படைப்பு நல்ல்லாருக்கு..

பொதுவாக காவல்காரர் சற்று நேரம் இயற்கை உபாதைக்காக ஒதுங்கினால் கூடச் சத்தம் போடும் உலகம் இது. அதுவும் கன்னாபின்னாவென்று..மத்த குடியிருப்பை விட அதிகச் சம்பளம்....பொறுப்பில்லை....அவுட் என்று...

இப்படியும் மனிதத்துடன் செய்ய முடியும்...இப்படிச் செய்யும் போது காவல் காரருக்கும் இன்னும் பொறுப்புடன் இருக்கத் தோன்றும்...என்ற ஒரு கோணம்....பரஸ்பர புரிதல் ஏற்படும் என்ற ஒரு கோணம்....ஒரு வின் வின் சிச்சுவேஷன்...அருமை..

கீதா

துரை செல்வராஜூ said...

நல்லதொரு கதையை படிச்சுட்டு
அப்படியே காலார நம்ம தளத்துக்கும் வாங்க!...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கதை
நன்றி நண்பரே

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா ரிஷபன் ஜி கதை.

நல்ல மனம் வாழ்க....

Bhanumathy Venkateswaran said...

ரிஷபன் சாரின் கதை, நிதானமாகத்தான் படிக்க வேண்டும்.

KILLERGEE Devakottai said...

பெருந்தன்மையான மன்னிப்பு உயர்வானவையே...
அவர்களும் மனிதர்கள்தானே...

சிறிய "நச்" கதை வாழ்த்துகள் ரிஷபன் ஸார்

Anuradha Premkumar said...

அழகிய புரிதல்...நன்று

நெ.த. said...

ரிஷபன் சார்.. கதையில் மனித நேயத்தை இயல்பா கொண்டுவந்திருக்கிறார். அவசர உலகில் நாம் நம் வாழ்வில் உதவுபவர்களின் சொந்த வாழ்க்கையைக் கவனிக்க விட்டுவிடுகிறோம். பாராட்டுகள்.

Bhanumathy Venkateswaran said...

ஒரு பெரிய விஷயத்தை மிக எளிமையாக சொல்வதுதான் ரிஷபன் சாரின் சிறப்பு. நல்ல வாசிப்பு அனுபவம் தந்த திரு.ரிஷபன் அவர்களுக்கும், எங்கள் ப்ளாகுக்கும் நன்றி!

நெ.த. said...

ரிஷபன் சார்.. கதையில் மனித நேயத்தை இயல்பா கொண்டுவந்திருக்கிறார். அவசர உலகில் நாம் நம் வாழ்வில் உதவுபவர்களின் சொந்த வாழ்க்கையைக் கவனிக்க விட்டுவிடுகிறோம். பாராட்டுகள்.

G.M Balasubramaniam said...

நல்ல எழுத்தாளர் ரிஷபன் ஒரு நிகழ்வு போதும் அவருக்கு கதை எழுத பாராட்டுகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான கதை,
ரிஷபனின் பதிவுகளைப் படித்துமுள்ளேன்.

athiraமியாவ் said...

படிக்க படிக்க கதை சுவாரஷ்யம்.. ஆனா எனக்கு கதையின் கொன்செப்ட் ஏ புரியவில்லை.. ஒருவேளை 2ம் தடவை படிச்சால் புரியுமோ என திரும்ப படிச்சேன்.. கதாசிரியர் என்ன சொல்ல வந்திருக்கிறார் எனப் புரியவில்லை...

இளம் வயதில் அந்த வோச்மானே பிரிந்து தவிக்கும்போது என் தவிப்பு ஒன்றும் பெரிதல்ல என எண்ணுகிறாரா... கதைபோல தெரியவில்லையே.. குறை நினைச்சு ஆரும் திட்டிடாதீங்கோ.. இன்னும் கொஞ்சம் எழுதியிருந்தால் தான் எனக்குப் புரியுமோ என்னமோ...

ஆனா வரிக்கு வரி ரசிக்க வைக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை. ஒரு சிறிய நிகழ்வு! அதை எத்தனை அழகாக, ஆழமான சிந்தனையுடன், கருத்துடன் நமக்கு அன்றாடம் உதவியாக, நமக்கு வேலை செய்பவர்களுக்கும் நமக்கு ஏற்படுவது போன்றவை ஏற்படும்...அதையும் நாம் கண்ணுற வேண்டும். மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் படைபபளி ரிஷபன் அவர்கள். மிகவும் ரசித்தேன்! வாழ்த்துகள் சார்!

துளசிதரன்

ரிஷபன் said...

இதுவரை ரசித்தவர்களுக்கும்..
இனி ரசிக்கப் போகிறவர்களுக்கும் அன்பின் நன்றி.

ரிஷபன் said...

புரிதலுக்கு நன்றி

ரிஷபன் said...

ஹை.. அந்த இன்னொரு கோணத்தையும் பிடித்துக் கொண்டதற்கு.. நன்றி

ரிஷபன் said...

நன்றி

ரிஷபன் said...

ஆம். சின்னச் சின்ன நிகழ்வில் தானே கதை ஒளிந்திருக்கு.

ரிஷபன் said...

அன்பு நன்றி

ரிஷபன் said...

என் நன்றியும்

ரிஷபன் said...

வாழ்க்கையே புரிதலின் அடிப்படையில் என்றே என் நம்பிக்கையும். நன்றி

ரிஷபன் said...

அன்பு நன்றி

Angel said...

ஆஹா !அருமை . எல்லா மனிதருக்கும் மன்னிப்பும் பெருந்தன்மையும் மாட்சிமையான குணங்கள் .
அழகான கதை .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் .

ரிஷபன் said...

அன்பு நன்றி

ரிஷபன் said...

அன்பு நன்றி

ரிஷபன் said...

வின் வின் .. ஆஹா !
ஒவ்வொரு நிகழ்வும் மனதைச் செம்மைப்படுத்துகிறது.
எப்போதும் ஒரே போல இருக்க முடியாது தான். ஆனால் சில நேரங்களில் பரிவு வெளிப்படும்போது நமக்கே நம்மைப் பற்றி ஒரு பெருமிதம்.
அன்பு நன்றி

ரிஷபன் said...

அன்பு நன்றி

ரிஷபன் said...

அன்பு நன்றி

ஸ்ரீராம். said...

ரிஷபன் ஸார் கதை பற்றி வைகோ ஸார் என் மெயில் பெட்டிக்கு அவர் கருத்தை அனுப்பியிருயிருக்கிறார். அது கீழே :

ஒரு மிகச்சிறிய இயல்பான, அன்றாட நிகழ்வினை எடுத்துக்கொண்டு, எவ்வளவு அழகானதோர் மிகச் சிறந்த சிறு கதையை, தனக்கே உரித்தான தனித்திறமைகளுடன், செதுக்கி ஜூஸ் போல நமக்குப் பருகக் கொடுத்துள்ளார், நம் ரிஷபன் ஸார்.

மனித உணர்வுகள் மகத்தானவை. மதிக்கத் தகுந்தவை. அதனைப் போற்றிப் பாதுகாத்து நடந்துகொள்ள, பொதுவாக அனைவராலும் முடிவது இல்லை.

அதனால் மட்டுமே, மனித நேயம் மிக்க, இந்தக் கதாசிரியர் அவர்களை என் எழுத்துலக மானஸீக குருநாதராக நான் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து வருகிறேன்.

என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
வீ..........ஜீ

ஏகாந்தன் Aekaanthan ! said...

குருநாதர் டைட்டில் எல்லாம் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் என்ன எழுதுவது?!

குட்டிக்கதை குடுகுடுவென ஓடிற்று..

கோமதி அரசு said...

மனிதநேய கதை . மனதை புரிந்து கொண்டு பரிவு காட்டியது அருமை.

ஜீவி said...

புவனா ஊருக்குப் போயிருக்கிறாள் என்ற ஒற்றை வரியில் மனைவியின் பெயர் புவனா என்று சொல்லியாயிற்று.
=============
"பாலு.."
என்ன அழைத்தாலும் வாட்ச்மேனைக் காணவில்லை.
ஓகோ! வாட்ச்மேன் பெயர் பாலுவா?..
==================
//ஏறிக் குதித்து உள்ளே போய் விடலாம். நாளை.. செக்ரட்டரியே ஏறிக் குதித்தார் என்று வரலாறு பேசும். //

இவர் தான் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி என்றும் தெரியப்படுத்தியாச்சு..
================
-- இதெல்லாம் தான் எழுதி எழுதி பழக்கப்பட்டவர்களுக்கே பழக்கமாகும் அசாதாரணமான எழுத்து நடை. சின்னச் சின்ன வார்த்தைகளில் எல்லாத்தையும் வளைத்துப் போடுகிற நடை.
வெளிப்படச் சொல்லாமல் சொல்லி விடுகிற வார்த்தை ஜாலங்கள்.

இளம் எழுத்தாளர்களுக்கு பாடப் புத்தகம் இந்த மாதிரியாக எழுதுவோரும் அவர்களின் எழுத்தும் தான். இவர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

Asokan Kuppusamy said...

புது மனைவியின் புரிதலும், மனைவியின் பிரிதலும் ஒருங்கே இணைத்து அமைக்கப்பட்ட சிறப்பான கதை பாராட்டுகள்

ரிஷபன் said...

அன்பு நன்றி

ரிஷபன் said...

ஆஹா.. தன்யனானேன்.
அன்பின் நன்றி.

ரிஷபன் said...

வைகோ ஸாரின் பெருந்தன்மை..
அவரது எழுத்து வீச்சு மிகப் பெரிது.
மனப்பூர்வ நன்றி.

ரிஷபன் said...

அன்பு நன்றி

துரை செல்வராஜூ said...

இன்றைக்கு புதனா...புதிரா?..

காமாட்சி said...

அருமை. ஏன் கமென்ட் போவதில்லை. அன்புடன்

காமாட்சி said...

மனிதாபிமானமிக்கவரின் முடிவைச் சுருங்கச் சொல்லி கதைக் கருவைப் புரியவைத்த விதம். அழகோ அழகு. காவல் பாதுகாப்பு. பாராட்டுகள். அன்புடன்

வல்லிசிம்ஹன் said...

கோபப் படாத கதா நாயகன்.
அன்பு காவல்காரன். இளமையின் நளினம்,
அன்பு புரிதல்,மனித நேயம். மிக அருமை ரிஷபன் ஜி.

Geetha Sambasivam said...

மனிதாபிமானம் மட்டுமின்றி இளவயதினரைப் புரிந்து கொள்ளும் பெருந்தன்மையும்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!