Tuesday, June 5, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமலா ஹரிஹரன்


அனைவருக்கும் வணக்கம்...

இந்த படத்தை பார்த்ததும் கதை எழுதும்  ஒரு எண்ணம் உதித்தது. அந்தளவிற்கு படத்தின் தாக்கம் என் மனதை மிகவும் பாதித்தது. அதனால் மனிதினில் வந்த வார்த்தைகளை கற்பனை கலந்து கதையாக வடித்திருக்கிறேன். நான் கதைகள் சுமாராகதான்  எழுதி வருகிறேன். ஆனால் நிறைய எழுத வேண்டுமென்ற ஆர்வம் மட்டும் ரொம்பவே உண்டு.  உங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரி எழுதியிருக்கிறேனா  என அறியும் ஆவலோடு, உங்கள் அனைவரின் ஊக்கமும் உற்சாகமும் எனக்கு என்றும் துணையாக இருக்குமென்ற அன்பான நம்பிக்கையோடும், இந்தக் கதையை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்களில் கதை  எப்படியுள்ளது என தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை மனமுவந்து வெளியிடும் "எங்கள் பிளாக்" கிற்கு என் மனம் நிறைந்த சந்தோஷங்களையும் மனமார்ந்த நன்றிகளையும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
உங்கள் சகோதரி.

============================================================================================================================


 மூன்றாம் அன்னை.
கமலா ஹரிஹரன் ஆற்றின் சலசலத்து ஓடும் நீரையே கண் கொட்டாது பார்த்தபடி இருந்தார் விச்சு.  உலகத்தின் தாயும் தந்தையுமான ஈஸ்வரனின் பெயரை, பெற்றோர்கள் அன்பாக தன் பிள்ளைக்கு இட்ட பெயராகிய அழகான விஸ்வநாதனை சுருக்கி அவருக்கு கிடைத்த  மற்றொரு பெயர்.

அப்படி  அழைக்கும் போது ஒரு உரிமை வருவதாக ஊர், உறவு அனைவரும் அழுத்திச் சொல்லியே அந்தப் பெயர் மறு பேச்சின்றி ஸ்திரமாக நிலைத்துப் போனது.

வாய் தன்னிச்சையாக மந்திரங்களை ஜபித்தபடி இருந்தாலும், கண்களும் மனமும் தறி கெட்ட குதிரையாக அலை பாய்ந்தபடி இருந்தன.  இன்று என்னவாயிற்று எனக்கு?  கேள்விகள் மனதில் பூக்க ஆரம்பித்தன.

மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் இருந்தாலும், கைகூப்பி, கண்மூடி யாருடைய செய்கைகளையும் கண் வழியே மனதில் இருத்தாது, ஓடும் ஆற்றின் சங்கேத  பாஷையான சலசல வென்ற வார்த்தைகளை மட்டும் உள்ளிருத்தியபடி, அந்த ஜீவனுக்குள் இறைவனின் நாமாவளிகளை உச்சரித்து உருவேற்றி இந்த உலகை சற்று மறந்திருப்பதே அவரின் தவமாகும்.

அந்த நேரம் அவரின் ஆத்மார்த்த தவம் செய்யும் நேரம். அதிகாலை எழுந்து காலை கடன்களை முடித்து இந்த ஆற்றங்கரை அழகை ரசித்தபடி, இங்கு வந்து விட்டால், ஒரு இரண்டு மணி நேரம் இவர் தனக்காகவே  ஒதுக்கப்பட்ட நேரமாகவே  கருதுவர்.

இந்த நேரத்திற்காக  அவர் அதிகாலை கண் விழித்ததும், செய்யும் வேலைகளை என்றுமே செய்ய தவறியதில்லை. தன் மனைவி  இருக்கும் போதே அவள் உடல் நிலைக்காக அடுக்களைக்குள் அவளை அதிகம் விடாமல், காலை  காஃபியிலிருந்து இரவு உணவு வரை பார்த்து பார்த்து  செய்தவர்.

அவ்வூரின்  உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார் விஸ்வநாதன் . அந்த கால கட்டத்தில் அன்னைக்கு அன்னையாக அவர் மனைவி அவர் கெளரவத்திற்கு பங்கம் வராமல், தாங்கள் பெற்ற மூன்று ஆண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, வாலிப வயது வந்ததும் அவர்கள் காலில் நிற்கும் சமயத்தில், மூத்தவனுக்கும், இரண்டாவது பையனுக்கும் மணமுடித்து தன் கடமையை செய்து அவர் தோளோடு தோளாக நின்று துவளாமல்தான் இருந்தாள்.

திருமணமான மூன்று வருடங்களில் வேலை பார்க்கும் இடத்தில்  பதவி உயர்வு பெற்று இரண்டு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு வந்து செல்லும் போதும் மனம் தளராமல் "வாழ்க்கை வசதிகளை அவர்களாவது அனுபவிக்கட்டும்"  என்று மனதாற வாழ்த்தி அனுப்பியவள்தான்.

இவர் அனைவரும் சேர்ந்திருந்த பழைய காலத்தை எண்ணி  "குழந்தைகளை எப்படி விட்டு பார்க்காமல் இருப்பது" என்ற போதும் கூட  சமாதானமாக தேற்றியவள்தான்.  மூன்றாமவன் கல்லூரி முடித்து அங்கேயே ஒரு வேலை கிடைத்து அமர்ந்தவுடன் இவனாவது தங்களுடன் இருக்கட்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ....  சற்று  ஓய்ந்து சோர்ந்து போனாள்...

இத்தனை நாள் எனக்காகவும்,  குழந்தைகளுக்காகவும்  மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த அவளுக்கு நாம் செய்யக் கூடாதா என்ற நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இவர் அவளின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

அந்த சமயத்தில் மூன்றாவது பையனுக்கும் தக்க இடத்தில் பெண் கூடி வரவே, மனமொப்பிய திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து இரண்டு அண்ணன்கள், தத்தம் குடும்பத்துடன்  வந்திருந்து குடும்பத்தை கலகலப்பாக்கி, விடுமுறை முடிந்ததும், புறப்பட்டு சென்றனர்.

அப்போதும்  பெற்றோர்கள் இருவரும் சிறிது காலம் தம்முடன் வந்து தங்கலாமென பெரியவன் சொன்ன போது விஸ்வநாதன்  அவசரமாக மறுத்தார்.  புது மருமகளைத் தனியே விட்டு எப்படி வருவதென்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.  "சரி... உங்கள் செளகரியம். ... " என்றபடி பிள்ளைகள் செல்ல பழைய வாழ்க்கை திரும்பவும் திரும்பியது விஸ்வநாதனுக்கு.

மருமகள் வந்த புதிதில் சற்று  மனம் தயங்கினாலும்,  அவளின் சில இயலாமை நேரத்தில்  இவரின் உபசாரங்கள் தேவையாகி போனதில், காலப்போக்கில் இனிதாகவே  அவளும் அவற்றை ஏற்க தயாராகி விட்டதால் இவரின் சங்கோஜங்கள் மறைந்தே போயின.  மாமியாரின் உடல் பலவீனமும்  சற்றே மோசமாக, அவரை கவனிக்கும் பணியில் இவரது  காலைக் கடமைகளும் அவளுக்கு பழக்கப்பட்டு விட்ட  ஒன்றாயின.....

காலம்  "என்றுமே ஒரே மாதிரி திசையில் பயணப்பட எனக்கு விருப்பமில்லை"  என்பதை விஸ்வநாதனின் மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு சுழன்று சென்று காண்பித்தது.  தன் அம்மாவின் அன்பிற்கு பிறகு அவளின் மொத்த அன்பையும் இவளிடமே பெற்று வந்த விஸ்வநாதன், அவளும் மறைந்தவுடன் ரொம்பவே தளர்ந்து போனார்.

பிள்ளைகள் வந்து துக்கத்தைச் சுமந்து, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி, செல்லும் போது அப்பாவை ஒரு மாற்றத்திற்காக தங்களுடன் வந்து தங்கிச் செல்ல அழைத்த போதும், இவர் மறுத்து விட்டார். சட்டென்று  மனதின் பழைய நினைவுகளை உதறி வர விருப்பமில்லை எனக் கூறித் தவிர்த்து விட்டார். பிள்ளைகளும்  மேற்கொண்டு வற்புறுத்த இயலாமல், இளையவனிடம் கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

நெருங்கிய உறவு பிரிந்ததென்றால் காலம் வேகமாக பறக்கும் என்பார்கள். அதன்படி அது காலில் சக்கரம் கட்டிய மாதிரி உருணடோடிச் சென்றது.  வழக்கப்படி வருந்தும் தன் மனதை செப்பனிட்டபடி,    தன் கடமையைச் செய்யும் பணியில் விஸ்வநாதனின் நேரமும், பொழுதும் ஓடிக் கொண்டேயிருந்தது.

ஆற்றங்கரை தவம் முடிந்து வந்ததும் உடை மாற்றி உணவருந்தி பேரனோடு சிறிது பொழுதை கழித்த பின் தன்னறைக்குள் சென்று தாழிட்டு கொண்டால் மாலைதான் மறுபடி அவரை காண முடியும். மனைவியின் மறைவுக்குப் பின் தனது அறையில் அமர்ந்து அவர் தன் நாளில் பாதியை எவருடனும் அதிகம் பேசாமல், கழிப்பது வீட்டிலுள்ள மகன், மருமகளுக்கு வித்தியாசமாக பட்டது. அது போக தன் அலமாரியின் சாவியை தன் பூணூலில்  எப்போதும் முடிந்திருக்கும் அவரை, அவர் மகன் உட்பட வீட்டில் அனைவரும் கேலியாக பேசும் போதும் அதை ஒரு நாளும் ஒரு விஷயமாக பொருட்படுத்தியதில்லை....

அன்று மகன் வந்து வாசல் திண்ணையில் தன்னருகே  அமர்ந்ததும் ஏதோ பீடிகையாய் பேச வந்திருக்கிறான் என புரிந்து கொண்டார்.

"அப்பா... நா சொல்றதை நிதானமா கேளுங்க..  இந்த ஒரு மாசத்துல நா எத்தனையோ வாட்டி உங்ககிட்டே எடுத்து சொல்லியாச்சு... நீங்க பிடிவாதமா மறுத்துண்டே இருக்கேள்.. நல்லா யோசிச்சு பாருங்க.. பெரியண்ணா தினமும் ஃபோன் செஞ்சு அப்பா என்ன சொல்றார் ... உன்னோட முடிவு என்னன்னு கேட்டுண்டே இருக்கான்.. . எத்தனை நாள்தான் இந்த வேலையிலேயே கட்டிண்டு அழப் போறே. . உனக்கு  ரெண்டு குழந்தையாச்சு... புரிஞ்சுக்கோங்கிறான்...  நம் மன்னியின் அண்ணாவோட சொந்த கம்பெனிதாம்பா.. நான் பாத்து வைக்கிற அந்த கம்பெனியில நல்ல போஸ்ட்..  போகப்போக நல்ல உயர்வு வந்தா நீயும் இங்க வர்றதுக்கு சான்ஸ் இருக்குங்கிறான்.... எல்லாரும் சேர்ந்திருந்தால் நல்லாதானே இருக்கும்"னு சொல்றான். அவன் சொல்றதுலே என்னப்பா தப்பு? ..... அம்மாவும் நம்மை விட்டு போயாச்சு. இனி இந்த ஊர்ல என்னப்பா இருக்கு?  சரி.. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இந்த வீட்டை விக்க வேண்டாம்... வாடகைக்கு விட்டுட்டாவது, நாம டெல்லிக்கு போயிட்டா, சீக்கிரம்  அந்த கம்பெனியில ஜாயின் பண்ணி குழந்தைகளும் ஸ்கூல் தேடி கரெக்டா இருக்கும்பா..  அவரும் எத்தனை  நாளைக்கு அண்ணா மன்னிக்காக யாரையும் வேலையிலே போடாம வெயிட் பண்ணிகிட்டிருப்பா சொல்லுங்கோ"...   அவன் பேசிக் கொண்டே போனான்..

விஸ்வநாதன் ஏதும் பேசாது நிலம் பார்த்து யோசித்தவர்  "அது எப்படிடா?  பழகின இடத்தை விட்டு திடீர்ன்னு எப்படிப்பா கிளம்புறது..... இந்த ஊரும், நீரும் நான் பிறந்ததிலிருந்து எனக்கு பழகிப் போச்சுடா.. அதனால்தான் உன் அண்ணன்கள் அழைச்சப்போ கூட என்னாலே சட்டுன்னு நகர முடியலே... இப்ப கூட நீ மட்டும் வேணா,  இல்லையில்லை...  நீங்க எல்லோரும் கிளம்புங்கோ....  நான்  எப்படியோ  இங்கேயே இருக்கேன்.. வர்றதை பத்தி அப்புறமா பாத்துக்கலாம்... "

அவரை மேற்கொண்டு பேச விடாது இடைமறித்தான் அவன்.

" அது எப்படிப்பா.. . அம்மா இருந்தாலாவது  பரவாயில்லை... உங்களை தனியே இங்கே விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி?" இத்தனை நாளா அதுக்காகத்தான் எங்கேயும் போகாம இருந்தேன்...

" அதானே பாத்தேன்.  நாம நல்லபடியா முன்னுக்கு வர்றது அவருக்கு என்னிக்குமே பிடிக்காதே.. பெரியவா ரெண்டு பேர் மேலேயும் மட்டுந்தான் இவாளுக்கு அக்கறை...  இல்லாம போனா அவாளை மாதிரி நம்மையும் எப்பவோ வெளி நாட்டுக்கு அனுப்பிச்சி அழகு பார்க்க மாட்டாளா?  எல்லாம் சுயநலம்... தங்களுக்காக நம்மளை இங்கே தக்க வைச்சுண்டவர்தானே உங்க அம்மா...  அதே போல் இவரும்  இப்போதைக்கு ஏதேதோ பேசி சமாளிக்கிறார்.. ."  மருமகளின் வார்த்தைகள் சாட்டையால் மனதில் அடிக்க  சடாரென்று எழுந்து தன்னறைக்குள் புகுந்தார் விஸ்வநாதன் ...

"நான்தான் பேசிகிட்டு இருக்கேனே.. நீ எதுக்கு தேவையில்லாமே நடுவிலே வர்றே?"  மகன் கடிந்து கொள்வதும், அதற்கு அவள்  "ஆமாம், நீங்க கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிண்டே இருப்பேள்.. உங்க அப்பா காதுலே வாங்கனாதானே..  தினமும் ஆத்தங்கரைக்கு போறதும், ஆத்துக்கு வந்ததும் ரூம்லே போய் அடைஞ்சுகிறதுந்தான் உங்க அப்பாவுக்கு தெரியும். அப்படி என்னதான் இருக்கோ அந்த அறையிலே.... இந்த ஒரு வீட்டை தவிர்த்து வேறு என்ன சொத்தா  இருக்கு நமக்கு? அதுவும் பங்குலே போயிடும்.... கொஞ்சம் முன்னேறி அவங்களை மாதிரி காசு சேர்த்து வச்சாதானே பிற்பாடு நமக்கு செளகரியமா இருக்குன்னு அவருக்கு புரியாதா? என்று கொஞ்சம் சத்தமாகவே முணமுணப்பதும் அவருக்கு கேட்டது.

மறுநாள் காலை வழக்கம் போல்  எழுந்து ஆற்றங்கரைைக்கு நீராட செல்லும் முன் பாலை காய்ச்சி, காபி குடிக்கலாம் என அடுக்களை சென்றவருக்கு சற்று அதிர்ச்சி...

காலை கடமைகளை அவருக்கு முன்னமேயே எழுந்து மருமகள் ஆற்றிக் கொண்டிருந்தாள். அவள் பார்வை "இன்னமும் எனக்கு உங்கள் மேல் கோபம் குறையவில்லை" என்றது. கொஞ்ச நாட்களாகவே இவரின் உபசாரங்களை அவள் புறக்கணித்து வந்தவள் இன்று காலை காப்பியிலேயே ஆரம்பித்த  மாதிரி தெரிந்தது.

"நீங்கள் எங்கள் பேச்சை கேட்பதில்லை.... நாங்கள் உங்கள் உதவிகளை மட்டும் ஏற்க வேண்டுமாக்கும்..." என்ற புறக்கணிப்புக் கொடி அங்கு பறந்து கொண்டிருந்ததை உணர்ந்தார்.

ஒரு பேச்சும் இல்லாமல் தனக்கு முன் வைக்கப்பட்ட காபியை,  உணவுப் பொருளை நாம் அவமதிக்க கூடாதென்ற எண்ணத்தில் விழுங்கி விட்டு, அகன்றார் விஸ்வநாதன்.

மகனைப் பற்றியோ, சற்றேறக்குறைய வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மருமகளின் நினைவோ  "தாத்தா நானும் வருவேன்"  என்று தினமும் அடம் பண்ணும் இரண்டரை  வயது பேரனின் பாசத்தையோ, "இந்த தாத்தா எப்பவுமே அப்படித்தான்...  நான் சிறு குழந்தையா இருக்கும் போது கூட என்னை கைப்பிடித்து அழைத்துப்போ.... என அப்பா தினமும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். அப்போதே என்னை கூட்டிண்டு போகாதவர் இப்போ உன்னை மட்டும் எப்படி.?"  என்ற அலட்சிய பாவம் கண்ணுக்குள் வார்த்தைகளாய் தெரிய, பள்ளிக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த எட்டு வயது பேத்தியின் கோபப்பார்வையையோ, அவரை என்றுமே எதுவுமே செய்ததில்லை.

இன்றும் மெளனமாக  வழியில் எந்த காட்சிகளிலும் மனதில் பிடிபடாதவராய் நடந்தார்.

"விச்சு.. என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் போது விடியறதுக்குள்ளே....... காலங்கார்த்தாலே, சீக்கிரமே கிளம்பிட்டே?.."
வழியில் தன்னை போன்றவர்களின் கேள்விகளுக்கு, எப்போதும் போல் அமைதியான புன்னகையுடன் பதில் கூறியவாறு ஆற்றங்கரையை தொட்டு விட்டார்.

மேல் துண்டை இடுப்பில் சுற்றிய வண்ணம் வேட்டி சட்டையை துவைத்து வைத்து விட்டு,  ஆற்று நீரின் சலசலப்பு பாஷையை உள் வாங்கியபடி ஆற்றின் படிககல்லின் மேல் அமர்ந்தார்.

அனைவருக்கும் அன்னையாகிய தாமிரபரணி  "எந்த வித கவலையையும் என்னிடம் கூறி விட்டு நிம்மதியாய் இரு" என்றபடி சிரித்தவாறு சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது இவருக்கு.

"பெரியவனும், சின்னவனும் எப்படியோ நல்லபடியா  படிச்சு முன்னுக்கு வந்து இப்போ வாழ்க்கையிலே நல்லாயிருக்காங்க.... அவங்களுக்கும் தலா ரெண்டு பையன்களாகவே ஆண்டவன் கொடுத்திட்டான். அவங்க மேல் படிப்புக்குன்னு நீங்க உங்க அப்பா சொத்து பத்துக்கள் உங்களோடு சேமிப்புன்'னு, அவங்க கேக்கறப்பல்லாம் கொடுத்தீங்க.  மூன்றாமவன் உங்களைப் போல்  படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்கு ஆசைப்படாம நம்மளோடவே இங்கேயே தங்கிட்டான்.  இப்போ அவனுக்கும்  கல்யாணமாகி ஒரு பொண்ணும், பையனும் பிறந்தாச்சு... அதனாலே என் பேத்திக்கு எனனோட நகையெல்லாம்,  மேலும் உங்க அம்மா வேறு நா கல்யாணமாகி வரச்சே எனக்கு போட்ட நகைகளையும் , இவனுக்கே கொடுக்கலாம்ன்'னு நினைக்கிறேன். உங்களுக்கு சம்மதந்தானே?" என மனைவி தன் கடைசி நாட்களில் முடியாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவள் கையை அன்புடன் பிடித்துக் கொண்டவாறு, "இப்போது அதுக்கு என்ன அவசரம்... காலம் வரும் போது நீயே உன் பேத்தி பெரியவளானதும்,சந்தோஷமா கொடுக்கலாம்.." என்று இவர் சமாதானமாகக் கூறியதும், அவள் ஒரு புன்னகையுடன் இவர் கையை லேசாக அழுத்தி விட்டு மெளனமானாள். அந்த அழுத்தத்தில் "என் விருப்பம் அதுதான்" என்ற தீர்க்கமான முடிவும் இருந்ததை புரிந்து கொண்டார்.

அவளின் கட்டளைப்படி, மனப்பூர்வமாக அவள் தரும் அவளது நகைகள் மட்டுமல்லாது, அவள் பேரில் இருக்கும் இந்த வீட்டையும், தங்கள் காலத்திற்கு பின் தன் மூன்றாம் மகன் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று, கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்த  ஒரு வாரத்தில்  அவள் மறைந்ததை, அவளின் கடைசி ஆசையை நிறைவேற்ற, தன் மகன்கள் வெளி நாட்டிலிருந்து இம்முறை அம்மாவின் வருட நினைவு நாளுக்கு வரும் போது நிதானமாக பேசி அவர்களின் முழுச் சம்மதம் பெற்று எழுத்து பூர்வமாக  தன் மகனிடம்  தான் ஒப்படைக்க நினைத்ததை கூறும் முன் தப்பாக புரிந்து கொள்ளும் மருமகளை நினைக்கையில் சங்கடமாக இருந்தது விஸ்வநாதனுக்கு.

மூன்று மகன்களையும் பார்த்துப் பார்த்து ஒன்று போல் வளர்த்து விட்ட தன் மனைவி  தன் சம்பாத்தியத்தில் சாமர்த்தியமாக குடும்பமும் நடத்தி, சேமித்ததை, குழந்தைகள் படிப்புக்கு செலவழித்த போதும் துணையாய் நின்று ஊக்கமும் அளித்தாள்.  அதே சமயம் கடைசி மகனின் படிப்பில் அவனின் விருப்பத்திற்கு மாறாக அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் இல்லை.

 "ஒருவரை கட்டாயப்படுத்திச் செய்யும் செயல்களில் வீண் சிரமங்கள்தான் பலனாக கிடைக்கும்" என்பாள். அவன் விருப்பம் அவன் எந்த வேலைக்கு போக வேண்டுமென தீர்மானிக்கிறானோ அது படி நடக்கட்டும்.  யார் மீதும்  விருப்பமின்றி சுமைகளைை  ஏற்ற கூடாது என்பது அவளின் எண்ணம்...... வீட்டுக்கு   வந்த மருமகளால், அவளுக்கு எத்தனை உபகாரங்கள் செய்து மகளாக பாவித்தும், இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லையே? ஏன்? வேறொரு இடத்திலிருந்து வந்ததினால் இவர்கள் பாசங்களை உணரும் சக்தி இல்லையோ?

இவ்வளவு பெரிய பொறுப்பை தன் மகனின் வருவாய் குறைவு என்ற ஒன்றின் காரணமாக,  அதனால் அவன் மேல் கொண்ட கழிவிரக்கத்திற்காக, தன் வசம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் மனைவியுடன், மானசீகமாக தனிமையில் அமர்ந்து பேசுவதைத் தவறாக நினைத்து, அதைக் குற்றமாக கருதுவதால் வரும் வருத்தங்கள் அவரைச் சிறிது  துனபுறுத்ததான்  செய்தது .

"அம்மா தாமிரபரணி.... அம்மாவின் மடி சாய்ந்து வேதனைகளை பகிர்ந்து கொள்வது போல், உன்னிடமும் என் அன்னையின் நினைவுகளை, மனைவியின் பிரிவுகளை சொல்லி, உன் ஓட்டத்தின் நடுவிலேயே உன்னையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்." 

"அன்னைக்குப்பின் அன்னையாக வழி நடத்தியவளிடம் பேசாமல், மனதின் பாரங்களை யாரிடம் சொல்வது?  இரண்டு அன்னைகளை என் வாழ்வில் தவற விட்டு விட்டேன். என் பாவங்களைப் போக்கி, என் மனதை உன் தூய்மையால் நிறைத்து, தினமும் என் உடல் அழுக்கோடு, உள்ளத்து அழுக்கும் களைந்து, என் உணவாகி, உயிராகிக் கலந்த உன்னை எப்படிப் பிரிவேன்? இருவரையும் பிரிந்த பின், இப்போது உன்னையும் விட்டு பிரிந்திருக்கச் சொன்னால் எப்படி? அதை நீயும் நானும் எப்படி சகிக்க முடியும்?  என் உயிர் இருக்கும் போது  அந்த சம்பவம் நடந்து விடுமா?  தாயே..  பதில் சொல்லு... மெளனம் கலைத்து பதில் சொல்லு.... "மனதில்  விம்மலுடன் எழுந்த சோகம்  கண்ணின் நீர்துளிகளாக  உருப்பெற்று கூப்பிய கரங்களில் உருண்டோடி விழுந்து ஓடிக் கொண்டிருக்கும் நீருடன் கலந்து சங்கமித்தது. 

"இப்போதும்  உன்னிடந்தான் என்னோட ஆற்றமைகளைச் சொல்ல முடியும்.  அம்மா... தாமிரபரணி.... . அன்னையாக உன் தோள் சாய்ந்துதான் தினமும் என் சுமைகளை உன்னிடம் இறக்குகிறேன்.." மனதினில் மந்திரங்களுக்கு முன்பாக வார்த்தைகளை கோர்த்த மாலைகளாகத் தொடுத்து அன்னை தாமிரபரணிக்கு மனதுக்குள்ளாகவே சூட்டினார்.

அம்மாவிடம் சஞ்சலங்களை கூறிய பிறகு வருத்தம் வடிந்து, பறவையின் லேசான இறகை போல், மனசு நிம்மதியை சந்தித்த மாதிரி இருந்தது.

எழுந்து மெள்ள படி இறங்கி நீரை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டவர், ஒரு நமஸ்காரத்துடன் நீரில் அமிழ்ந்து தன்னை தூய்மை படுத்திக் கொள்ள துவங்கினார். காலை இன்னும் ஒர் அடி எடுத்து வைத்து நகர்ந்த போது சட்டென பள்ளமான இடத்திற்குச் சென்று விட்டதை உணர்ந்தார்.  மேலெழும்ப விடாமல், இத்தனை நேரம் அமர்ந்திருந்த கால்கள் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்க  இன்னமும் நீரின் அடியில் தன் உடல் இழுத்துச் செல்வதை உணர முடிந்தது.

அந்த நேரத்திலும் தன் பூணூலில் இருந்த தன் அலமாரியின் சாவியை இன்று யதேச்சையாக கழற்றி தன் மனைவியின் புகைப்படம் இருக்கும் மேஜையின் மேல் அவளருகே வைத்து விடடு  வந்ததை  உறுதிப் படுத்திக்கொண்டார்.

"ஐயோ..  இந்த விச்சு மாமா நேத்து மணல் எடுத்த இடத்தில் ஆழத்தில் மாட்டிக் கொண்டார் போலும்...  முங்கியவர் ஆளையே காணோமே.... சீக்கிரம் யாராவது வந்து காப்பாத்துங்கோ....." 

"இவ்வளவு நாழி இங்கேதான் உட்கார்ந்திருந்தார்... இப்பத்தான் குளிக்க கீழே இறங்கினார்... சீக்கிரம் இங்கே வாங்கோ.."

கூச்சல்கள்... யாராரோ அலறும் சத்தங்கள் லேசாக காதில் மோதி தேய்ந்தன.. மனசு லேசாக போன மாதிரி உடம்பும் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. நினைவு சறுக்கல்கள் நடுவே, தான் வேறு இடத்திற்கு செல்வதையும்  உணரமுடிந்தது.

திடீரென நெஞ்சில் ஏற்பட்ட வலி நடுவே  "விச்சு,  நீ பிறந்ததிலிருந்து, அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் உன் கடமைகளை சரியா பண்ணிட்டே... இன்னமும் ஏன் வருத்தப்பட்டு மனசை வருத்திக்கிறே?. . எங் கூட வர்றியா?  உன் அம்மாக்கள்கிட்டே உன்னை பத்திரமா சேர்த்துடுறேன். நிம்மதியா இருக்கலாம். வர்றியா..". மென்மையான குரல் ஒன்று காதருகே கேட்டது.

விச்சுவிற்கு தன் பயணம் சுகமாக இருப்பது போல் அவருக்கு தோன்றியது.

சற்று நேரத்தில் "விச்சு, என் கிட்டே வந்துட்டியா  கண்ணே"  அம்மாவின் குரல் மிக.. மிக.. அருகிலேயே கேட்டது.

கரையில் ஒரே கூச்சலும், கும்பலுமாக ஆரவாரமாக இருந்தது.

தாமிரபரணி தன் இயல்பு மாறாமல் எப்போதும் போல் சலசலவென்று சத்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தாள்.

88 comments:

Geetha Sambasivam said...

ஒரு நிமிஷம்னா இத்தனை நாழியா/

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

கீதா

Geetha Sambasivam said...

தொடர

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா கீதாக்கா நோ நோ நான் க்ளிக்கி முழு பக்கமும் வரதுக்குள்ள அக்கா வந்தாச்சு..ஸ்பீடோ ஸ்பீடு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கமலா சகோ கதையா ஆஹா!!! பார்க்கறேன்....கதை ஸோ நிதானமா வாசிக்கணும்...

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

துரை செல்வராஜூ said...

நெஞ்சம் நெகிழ்ந்து கலங்குகின்றது...

காவிரி ஆயினும்
தாமிரபரணி ஆயினும்
அன்பானவர்கள் அல்லவோ அவர்கள்...

அன்பிலும் இப்படித்தான் முடிவு போலும்!..

Geetha Sambasivam said...

மனதைத் தொட்ட கதை!

Thulasidharan V Thillaiakathu said...

பாதி வரை வாசித்துவிட்டேன்...நன்றாக இருக்கிறது....வரேன் கருத்திட பின்னர்...இப்போது வரை வாசித்ததில் ஒரு கருத்து தோன்றியது...முடிவு பார்த்துவிட்டு எழுதுகிறேன்...

கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா அக்கா, துரை செல்வராஜுஸார், கீதா ரெங்கன்.

இன்னமும் மொபைல் உலாதான் என்பதால் சற்றுக் கடினமாக உள்ளது.

நெ.த. said...

கதை கொஞ்சம் நெடியது. படத்துக்காக எழுதப்பட்டதாயினும், ஆற்றின்போக்கில்தான் வாழ்க்கை போகவேண்டும். இடையில் தன் சொந்த விருப்பம் குறுக்கிட்டால், குடும்பச் சிக்கல் உருவாவதைத் தவிர்க்க இயலாது.

சென்டிமென்ட் என்று அடுத்த ஜெனரேஷனுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கையைத் தடுப்பதற்கும் அதில் சிக்கல் ஏற்படுத்துவதற்கும் பெற்றோருக்கு உரிமை உண்டா? அது வெறும் சுயநலமல்லவா என்ற கேள்வியையும் மனதில் ஏற்படுத்துகிறது.

பாராட்டுகள் கமலா ஹரிஹரன்

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

கமலா ஹரிஹரன் அவர்களின் கதை அருமை

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

மனதைத் தொட்ட கதை. பாராட்டுகள் கமலா ஹரிஹரன் ஜி!

வல்லிசிம்ஹன் said...

மிக அழகான இயல்பான,
சோகம் ததும்பும் கதை.

ஆற்றோடு போக வேண்டுமா என்று ஆற்றாமையாக
இருக்கிறது.

மென்மேலும் கதைகள் வர வாழ்த்துகள் கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

மனதைத் தொட்ட கலக்கிய கதை. என்னவோ செய்துவிட்டது முடிவும் இடையில் வந்த சில உரையாடல்களும்.

அந்த உரையாடல்கள் பொதுவாக எல்லா குடும்பங்களிலும் நிகழ்வது என்றே தோன்றுகிறது. அப்படி என் மனதை பாதித்ததை நானும் ஒரு கதையில் எழுதியிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை வழக்கம் போல். இப்போது 3 கதைகள் முடித்திருக்கிறேன். இரண்டு சிறியவை. ஒன்று கொஞ்சம் நெடுங்கதை...உணர்வுபூர்வமான ஒன்று. முதலில் கல்கி சிறுகதைப் போட்டி பற்றி ஸ்ரீராம் சொன்னதும் அனுப்பலாம் என்றிருந்தேன். ஆனால் ஏனோ மனம் திருப்தி அடையவில்லை...முடித்தவற்றை அப்படியே ஆறப் போட்டுவிட்டேன். அப்புறம் அதில் கொஞ்சம் வேலைகள் முடித்து கே வா போ க வுக்கு அனுப்பலாம் என்று...

கமலா சகோ கதை அருமை...வருகிறேன்...இரு கருத்துகள் ஆனால் கதைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. கதையில் வரும் இரு விஷயங்களைப் பற்றி பொதுவான கருத்து...எனது தனிப்பட்ட கருத்து....

கீதா

Kamala Hariharan said...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

நான் எழுதிய கதையை வெளியிட்ட "எங்கள் ப்ளாக்" கிற்கும், சகோதர் ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

படித்து கருத்தும், பாராட்டுகளும் தந்த அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.

கதையை படித்தவர்களுக்கும், இனி படிக்க வரும் அனைவருக்கும் தனிதனியே நன்றி கூற கொஞ்சம் கடமைகளை முடித்து விட்டு வருகிறேன். தாமதத்திற்கு தயை கூர்ந்து மன்னிக்கவும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

"அன்னைக்குப்பின் அன்னையாக வழி நடத்தியவளிடம் பேசாமல், மனதின் பாரங்களை யாரிடம் சொல்வது? இரண்டு அன்னைகளை என் வாழ்வில் தவற விட்டு விட்டேன். என் பாவங்களைப் போக்கி, என் மனதை உன் தூய்மையால் நிறைத்து, தினமும் என் உடல் அழுக்கோடு, உள்ளத்து அழுக்கும் களைந்து, என் உணவாகி, உயிராகிக் கலந்த உன்னை எப்படிப் பிரிவேன்? இருவரையும் பிரிந்த பின், இப்போது உன்னையும் விட்டு பிரிந்திருக்கச் சொன்னால் எப்படி? அதை நீயும் நானும் எப்படி சகிக்க முடியும்? என் உயிர் இருக்கும் போது அந்த சம்பவம் நடந்து விடுமா?/// heart wrenching lines.

Thulasidharan V Thillaiakathu said...

நான் சொல்ல வந்த இரு விஷயங்களில் ஒன்று

பொதுவாகவே பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் முன்னேறுவதற்கு வழி விடலாம் என்று தோன்றும். அதாவது நான் இங்குதான் இருப்பேன் என்ற பிடிவாதம் கூடாது என்று நினைப்பேன். அதுவும் அவர்கள் ஆசையாக அழைக்கும் போது. வைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதே பெரிய விஷயம் இல்லையா….அதனால்….மொபிலிட்டி உள்ள வரை.
இது எனக்கும் பொருந்தும். எனவே நான் என்னைச் சுற்றி நடக்கும் பலவற்றையும் சிறு வயதிலிருந்தே உற்று நோக்கி அத்தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு இடைஞ்சலாக இலலாமல் உதவி அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழணும் என்று. என் மகன் எங்கு அழைக்கிறானோ அங்கு சென்று அவனோடு இருக்கணும் என்றும் நினைபப்துண்டு. அவனுக்கும் உதவியாக இருக்கலாமே என்று தோன்றும். நாம் அவர்களுடன் மொபிலிட்டி உள்ள வரை சென்று அட்ஜஸ்ட் செய்யும் போ)து அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள் என்று ஒரு நம்பிக்கை.

இது என் பெற்றோர் மற்றும் என் மாமனார் மாமியாரிடம் கற்றவை. அப்படியும் இல்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாதுதான். விதி....ப்ராப்தம் அவ்வளவுதான்...

அதுவும் இக்காலக் கட்டத்தில் பிழைப்பு தேடி போகும் குழந்தைகளைப் பெரியவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் நிலைமைதான். அவர்களுக்கு என்று சில குறிக்கோள்கள்... விருப்பங்கள். அதை நாம் நிறைவேற்றிக் கொடுக்கத்தான் வேண்டும். அதுவும் குழந்தைகள் தங்களோடு வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும் போது அதை மறுப்பது சரியா என்றும் தோன்றும். இது நடைமுறையில் பெரும்பாலான வீட்டிலும் உண்டுதான்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மற்றொரு விஷயம்...பல குடும்பங்களில் நிகழும் கம்யூனிக்கேஷன் கேப். பெற்றோர் பிள்ளைகளிடத்தில் அல்லது பிள்ளைகள் பெற்றோரிடத்தில் ஃப்ரீயாகப் பேசி ஒரு சில விஷயங்களைக் க்ளியர் செய்து கொள்ளாமல் இருப்பது. குழந்தைகள் புரிந்து கொள்பவர்களாக மெச்சூர்டாக இருந்தாலும் கூட சில விஷயங்களை குறிப்பாக இந்தக் கொடுக்கல் விஷயங்களில் பெரியவர்கள் உயிருடன் இருக்கும் போதே குழந்தைகள் எல்லோரையும் அழைத்து சொல்லி வைத்துவிடுவது நலல்து என்றே தோன்றும்.

அப்படி இல்லாததால் பல மன வருத்தங்கள் அதுவும் எதிர்பார்க்கும் குழந்தைகளிடம் வருத்தங்கள் ஏற்படவே செய்கிறது. இந்த உலக விஷய்ங்களில் பற்றில்லாத குழந்தைகள் என்றால் பிரச்சனை இல்லை. அதுவும் நல்ல குழந்தைகளாகவே இருந்தாலும் கூட ஒரு சில தருணங்களில் இப்படியான வார்த்தைகள் வந்து விடுகின்றன. எனவே பெரியவர்கள் குழந்தைகளிடம் அதுவும் ஒன்றில்லாமல் இரண்டு இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஃப்ராங்காகச் சொல்லி விடுவது நலல்து என்று தோன்றுவதுண்டு. அப்படி இல்லாததால் நிறைய குழந்தைகள் உள்ள குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை நேரில் கண்டதால் இதையும் நான் ஒரு கதையில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்....அதைத்தான் முடிக்கவில்லை இன்னும் ஹா ஹா ஹா ....

நம் உயிர் எப்போது போகும் என்று தெரியாது. எனவே நம் மனதில் சில என்ன யாருக்கு எந்தக் குழந்தைக்கு என்ன என்பதைச் சொல்லிவிட்டால் நல்லது...வீண் மன உளைச்சல்கள், குழந்தைகளுக்குள் வீண் மனப்பிரஸ்தாபங்கள், உறவு முறிதல் என்றெல்லாம் ஒரு சிலருக்கு ஏற்படாமல் போகுமோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் எல்லாக் குழந்தைகளும் மெச்சூர்டாக இருக்க முடியாது அப்படியே இருந்தாலும் சில தருணங்களில் அவர்கள் சூழ்நிலை அப்படிப் பேச வைத்துவிடுகிறது...என்றே தோன்றுகிறது...மனப்பக்குவம் என்பது எல்லோருக்கும் வருவதில்லையே...

கீதா

KILLERGEE Devakottai said...

வணக்கம் சகோ
கதை மனதை கனக்க வைத்து விட்டது.

முடிவு சுபமில்லை என்றாலும் இப்படித்தான் இருக்கவேண்டும். அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் விபத்து போன்று சொன்னவிதம் நன்று.

அலமாரிச் சாவியை சரியான இடத்தில் ஞாபகப்படுத்தியது அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

"அன்னைக்குப்பின் அன்னையாக வழி நடத்தியவளிடம் பேசாமல், மனதின் பாரங்களை யாரிடம் சொல்வது? இரண்டு அன்னைகளை என் வாழ்வில் தவற விட்டு விட்டேன். என் பாவங்களைப் போக்கி, என் மனதை உன் தூய்மையால் நிறைத்து, தினமும் என் உடல் அழுக்கோடு, உள்ளத்து அழுக்கும் களைந்து, என் உணவாகி, உயிராகிக் கலந்த உன்னை எப்படிப் பிரிவேன்? இருவரையும் பிரிந்த பின், இப்போது உன்னையும் விட்டு பிரிந்திருக்கச் சொன்னால் எப்படி? அதை நீயும் நானும் எப்படி சகிக்க முடியும்? என் உயிர் இருக்கும் போது அந்த சம்பவம் நடந்து விடுமா?//

கமலா சகோ இது மனதைத் தொட்ட வரிகள். இது ஆணுக்கு/கணவனுக்கு மட்டுமல்ல பெண்ணிற்கும்/மனைவிக்கும் பொருந்தும்.

இந்த வரிகளை வாசித்ததும் எனக்கு வல்லிம்மா நினைவு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பெரியவர் விச்சுவின் மனதில் தோன்றிய ஆழமான அந்த எண்ணம் நதித்தாய்க்கும் புரிந்துவிட்டது போலும்..ஆம் தினமும் பார்க்கிறாளே...அதான் அவரைத் தன்னோடு இழுத்துக் கொண்டுவிட்டாள் போலும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாகவே எழுதுகிறீர்கள் கமலா சகோ! உணர்வு பூர்வமாக நன்றாகவே எழுதுகின்றீர்கல். நடை, மொழி எல்லாமே நன்றாக இருக்கிறது. உங்கள் வலையிலும் படிக்கிறோமே..உங்களின் மென்மையான மனதைப் பிரதிபலிக்கும் எழுத்து....நீங்கள் நன்றாக எழுதலையோனு நினைக்க வேண்டாம்....நிறைய எழுதுங்கள்..

எனக்கும் தோன்றும் நன்றாக எழுதலை என்று இங்கு வரும் ஒவ்வொருவரது கதையும் படிக்கும் போதும் எனக்குத் தோன்றும் ச்சே நாம் இன்னும் நன்றாக எழுதணும்...நாம் எழுதறது ஒன்றுமே இல்லை என்று...நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும் தான்...

எனவே இன்னும் நிறைய எழுதுங்கள் சகோ...வாழ்த்துகள்!! பாராட்டுகள்!!!

கீதா

கோமதி அரசு said...

நெகிழ்வான கதை. தாமிரபரணியை பார்த்துக் கொண்டு என் காலம் மட்டும் இருக்கிறேன்.என்னை பார்த்துக் கொள்ள ஆள் போட்டுக் கொள்ளலாம். டெல்லி தானே? விமானத்தில் பறந்து வந்து அடிக்கடி பார்த்துக் கொண்டால் போச்சு என்று விச்சு சொல்லி இருக்கலாம்.

ஆற்றில் மண் அள்ளுவதால் ஏற்படும் தீமையை சொன்னது போலும் ஆச்சு.
கதை நன்றாக இருக்கிறது.

சாவி மேஜையில் கழற்றி வைத்து விட்டு வந்தது தற்செயல் என்றாலும் அதை குறிப்பிட்ட போதே அவரின் முடிவு தெரிந்து விட்டது.
வாழ்த்துக்கள் கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் உங்கள் இணையம் சரியாகிடணும்...மொபைல் வழி வலை உலான்றது ரொம்பக் கொடுமை...கருத்தெல்லாம் (பெரிதாக ...எனக்கு இது ஹி ஹிஹிஹிஹிஹி!!!) அடிப்பதெல்லாம் ரொம்பவே கடினம்...தப்புத்தப்பா வரும் அதை எடிட் செய்து மீண்டும் அடித்து ஹையோ போர்..

சீக்கிரம் சரியாகணும் ஸ்ரீராம்...உங்கள் இணையம்....வியாழன் பதிவு வரணுமே!!! நாளை கௌஅண்ணா பார்த்துக் கொள்வார்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நம்ம மக்களுக்கு ஓர் அறிவிப்பு..டண் டண் டண் டண்...நான் நாளையிலிருந்தே பெரும்பாலும்....கொஞ்சம் கொஞ்சம் தான் அப்பப்ப எட்டிப் பார்க்க இயலும். வலைப்பக்கம்..

சனி 9... ஞாயிறிலிருந்து 10 முழுவதுமே வர இயலாது. 19 ஆம் தேதி வரை...அப்புறம் தான் வலை உலா.....

விவிவிஐபி வருகிறார்...எனவே இன்றிலிருந்து ப்ரிப்பரேஷன்ஸ் பேக் பண்ணி அனுப்ப... அப்புறம் அடுத்த வாரம் முழுவதும் அவரோடுதான் ஸ்பெண்டிங்க் டைம்....

எனவே ஏஞ்சல் பூசாரின் வாலை எனக்கும் சேர்த்து பிடித்து இழுத்து வையுங்க....அப்புறம் நானும் வந்து பார்த்துக்கறேன்....ஹா ஹா ஹா ஹா ஹா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தாமிரபரணியை பார்த்துக் கொண்டு என் காலம் மட்டும் இருக்கிறேன்.என்னை பார்த்துக் கொள்ள ஆள் போட்டுக் கொள்ளலாம். டெல்லி தானே? விமானத்தில் பறந்து வந்து அடிக்கடி பார்த்துக் கொண்டால் போச்சு என்று விச்சு சொல்லி இருக்கலாம்.//

ஆமாம் கோமதிக்கா நல்ல கருத்து...எனக்கும் தோன்றியது இப்படியான வார்த்தைகள் இல்லை என்றாலும் கருத்து.......சொல்ல விடுபட்டது...

கீதா

G.M Balasubramaniam said...

வயதானவர்களும் சரி இளையவர்களும் சரி விட்டுக் க்பொடுக்க மாட்டேன் என்கிறார்கள் தேவை இல்லாத்தபிரச்சனைகள் அதனால் தானே இம்மாதிரி கத்சைகள் எழுத முடிகிற்து கதை எழுதியவருக்குப்பாராட்டுக்ள் கருத்துகளெப்போதும் எழுதியவருடையது போல் இருக்காது கவலை வேண்டாம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... கமலா ஹரிஹரன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

நெ.த. said...

@கீதா ரங்கன் - //நம்ம மக்களுக்கு ஓர் அறிவிப்பு..டண் டண் டண் டண்..// - நாட்டு மக்களுக்கோர் நற்(?)செய்தி. விரைவில் தி.பதிவுகளில், ஆவக்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, கொள்ளுப்பொடி, புளிக்காய்ச்சல், பூண்டுப்பொடி செய்முறைகளை எதிர்பாருங்கள். வழங்குபவர் - புலாலியூர்...சாரி சாரி.. தில்லையகத்து கீதா ரங்கன். Thanks to Junior Rangan.

Bhanumathy Venkateswaran said...

மனதை தொட்ட நிறைவான கதை. உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
கதையின் முன் பகுதியில் இன்னும் கொஞ்சம் உரையாடல்கள் இருந்திருக்கலாமோ?
இறுதியில் அவர் இறக்காமல், அன்னை போல அவர் நினைத்த தாமிரபரணியிடம் விடை பெற்று மகனோடு புது இடத்தை, புது வாழ்வை நோக்கி செல்வது போல் அமைத்திருந்தால் அந்த கதா பாத்திரம் இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கும். அவர் நிலையில் இருக்கும் பலருக்கும் அறிவுறுத்தியது போலவும் இருந்திருக்கும்.

Anuradha Premkumar said...

மிக உணர்வு பூர்வமான கதை...மனம் நெகிழ்கிறது..

athira said...

இன்று கமலா சிஸ்டரின் கதையா?... படத்துக்கான கதை தொடருதோ.. கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன் என நினைக்கிறேன்... இன்னும் கதை படிக்கவில்லை.

athira said...

///Geetha Sambasivam said...
ஒரு நிமிஷம்னா இத்தனை நாழியா///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எத்தனை நழி?:) எத்தனை தடவை ஜொள்ளிட்டேன்ன் உங்கட ரைமை சரியா செட் பண்ணி வைங்கோ என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... எங்களையும் நித்திரை கொள்ள விடாமல் 5.58 இல இருந்து குய்யோ முறையோ இது தகுமோ என ஸ்ரீராமையும் டென்சனாக்கிக்கொண்டு:))... இருங்கோ நாளையிலிருந்து கீசாக்காவுக்கு நித்திரைக் குளிசை குடுத்திட்டு.. மீ களம் குதிக்கப்போறேன்ன்ன்ன்ன்ன்:))

athira said...

///எனவே ஏஞ்சல் பூசாரின் வாலை எனக்கும் சேர்த்து பிடித்து இழுத்து வையுங்க....அப்புறம் நானும் வந்து பார்த்துக்கறேன்....ஹா ஹா ஹா ஹா ஹா...

கீதா///

ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ் அப்போ என் செக்:) இனிமேல் என்னிடம் சரண்டராகிடுவா:)) அதிரா நீங்க ரெம்ம்ம்ம்ம்ப நல்லவ எனச் சொல்லித்திரிவா பாருங்கோ:)) ஹா ஹா ஹா.

ஹையோ 9ம் திகதிக்குள் மீ ஒரு போஸ்ட் போட்டிடோணும்ம்ம்ம்:)).. வி ஐ பி ஃபுரொம் அம்பேரிக்காவா கீதா?:) கலக்குங்கோ கலக்குங்கோ:))

Angel said...

//அன்னையாகிய தாமிரபரணி "எந்த வித கவலையையும் என்னிடம் கூறி விட்டு நிம்மதியாய் இரு" என்றபடி சிரித்தவாறு சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது இவருக்கு.//

ரசித்த வரிகள் .

மிகவும் மனதை நெகிழ வைத்த கதை .எனக்கு எப்பவும் வயதில் பெரியவங்க மனசு வருத்தப்பட்டாலோ இல்லை முகம் வருத்தத்தில் வாடினாலோ மனசுக்கு கஷ்டமாகிடும் ..படத்துக்கு அழகான கதையை தந்த சகோதரி கமலா ஹரிஹரனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

Angel said...

ஆவ் !!கீதா ,,என்ஜோய்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/நெஞ்சம் நெகிழ்ந்து கலங்குகின்றது/

கதையை ரசித்துப் படித்து நெகிழ்ந்ததற்கு மிக்க நன்றிகள். தங்களின் கருத்துக்கள் மிகவம் மகிழ்ச்சியை தருகிறது.

/அன்பிலும் இப்படித்தான் முடிவு போலும்/
முடிவுகள் என்றுமே நம்மையறியாமல் நடப்பவை அல்லவோ...படைத்த ஆண்டவன் செயலன்றி வேறு ஏது? ஊக்கமிகும் கருத்துக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/மனதைத் தொட்ட கதை!/

கதையை வாசித்தளித்த பாராட்டிற்கு மிகவும் நன்றிகள் சகோதரி.
ஊக்க மிகும் கருத்துக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

@கீதா ரங்கன் - //நம்ம மக்களுக்கு ஓர் அறிவிப்பு..டண் டண் டண் டண்..// - நாட்டு மக்களுக்கோர் நற்(?)செய்தி. விரைவில் தி.பதிவுகளில், ஆவக்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, கொள்ளுப்பொடி, புளிக்காய்ச்சல், பூண்டுப்பொடி செய்முறைகளை எதிர்பாருங்கள். வழங்குபவர் - புலாலியூர்...சாரி சாரி.. தில்லையகத்து கீதா ரங்கன். Thanks to Junior Rangan.//

ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை எல்லாமே திங்கவுக்கு வருமானு தெரியலை....சரி இப்ப வேண்டாம்....அது சஸ்பென்ஸ்...ஹிஹிஹிஹிஹி...(ஹையோ இந்தப் பூஸாரோடு சேர்ந்து ஒரே பில்டப்பு!!!..பூசாருக்கு பெருமையோ பெருமை....ஏஞ்சல் கொஞ்சம் அந்த வாலை வெட்டி விடுங்க..ஓகேயா)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா ஹா ஹா ஹா 9 ஆம் தேதி போஸ்ட் போட்டு தப்பிச்சுரலாம்னு பாக்கறீங்களா..நோ நோ நெவர்....அன்று தேம்ஸ் மட்டுமாவது எட்டிப் பார்த்து உங்க வாலைப் பிடிச்சுட்டுத்தான் கணினியைக் க்ளோஸ் பண்ணுவேன்...ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் பயப்படாதீங்க பூஸாரிடம் எல்லாம் நீங்க சரண்டர் ஆகமாட்டீங்கனு தெரியும்....வரேன் 19 ஆம் தேதி வந்து எல்லாத்துக்கும் சேர்த்து ...

ஆமாம் அதிரா அதே அதே...நீங்க சொல்லும் விவிஐபிதான்..உங்க ட்ரம்ப் அங்கிள்தான்..வரார்...அவர் செக் உங்களுக்குத் தெரியாம ரகசிய விசிட்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல் எஸ் ஏஞ்சல் நன்றி நன்றி...ஜஸ்ட் ஒன் வீக் தான்...ம்ம்ம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கமலா சகோதரி அவர்களுக்கு,

கதை ரொம்பவே நெஞ்சை உலுக்கியது அதுவும் கடைசி முடிவு. உங்கள் மொழி நடை அருமை. மெல்லிய உணர்வுகள் பிரதிபலிக்கும் கதை. இது பல குடும்பங்களில் பெரியவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பிரச்சனைகள் தான். புரிதல் இருந்தால் நன்றாக இருக்கும். கதை முடிவுதான் கொஞ்சம் வருந்தவைத்துவிட்டது. பாராட்டுகள் வாழ்த்துகள் சகோதரி.

துளசிதரன்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/கதை கொஞ்சம் நெடியது/

ஆம் உண்மைதான்.. சுருக்கி எழுத எனக்கு இன்னமும் வரவில்லை.. இனி முயற்சித்துப் பார்க்கிறேன்.

/சென்டிமென்ட் என்று அடுத்த ஜெனரேஷனுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கையைத் தடுப்பதற்கும் அதில் சிக்கல் ஏற்படுத்துவதற்கும் பெற்றோருக்கு உரிமை உண்டா? அது வெறும் சுயநலமல்லவா என்ற கேள்வியையும் மனதில் ஏற்படுத்துகிறது./

வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளிடம் சில சமயங்களில் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதன் பின் அவர்கள் கூறும் யோசனைபடி நடந்து கொள்ளவும் பெற்றோர்களுக்கு உரிமை இருக்கிறதல்லவா.. அந்த இடங்களில் இருவருமே விட்டுக்கொடுத்தால் நலம்.

கதையில் கூட பழகிய இடத்தை விட்டு பிரிய மனமில்லாமல் அவர் யோசிப்பது சுயநலம்தான். ஆனால் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைக்கு முன் அவசரமாக காலம் குறுக்கிட்டு விட்டது.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
ஊக்கமிகும் கருத்துகளுக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா உங்களைக் கலாய்த்தேன் சும்மா...நீங்கள் கெஸ் செய்தவர்தான்....இரண்டு வருடமாகிறது பார்த்து...வாட்சப்பில் வீடியோ கால் கூட வெரி ரேர். ஒன்லி வாய்ஸ் கால்தான் வருவார்...ஸோ கவுன்ட் டவுன் ஸ்டார்ட்டட்....

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கதையை வெளியிட்ட தங்களுக்கு நன்றிகள்.

தங்கள் இணைய பிரச்சனை இன்னமும் சரியாக வில்லையா? விரைவில் சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன்.
நானும் மொபைல் உலா தான். முதலில் கடினமெனினும் பழகி வருகிறது. நன்றி

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என் கதைகள் எழுதும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது. பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி.

ஊக்கமிகும் கருத்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மனதைத் தொட்ட கதை என்ற பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

தங்களின் ஊக்கமிகு பாராட்டுகள் என் எழுத்துக்களை செம்மையாக்கும். நன்றி

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/ஆற்றோடு போக வேண்டுமா என்று ஆற்றாமையாக
இருக்கிறது. /

கதையின் முடிவுக்காக அது நேர்ந்து விட்டது சகோதரி.தங்களுக்கு வருத்தம் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்.

தங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு என் மகிழ்வான நன்றிகள் சகோதரி.

தங்களது கருத்திற்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

athira said...

ஆஆஆஆவ்வ்வ்வ் கதை நீண்டுகொண்டே போகிறதே எனப் படிச்சிட்டு வந்தேன்.. வித்தியாசமான முடிவு... :(. மனித வாழ்க்கை என்பது வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பி இருபோருக்கு இப்படித்தான் ஆகிறது போலும். அழகான கற்பனை.. தொடர்ந்து கதைகள் எழுதுங்கோ...

விச்சுத்தாத்தாவின் வாழ்கை வரலாற்றையே எழுதி விட்டீங்க.

athira said...

///"இப்போதும் உன்னிடந்தான் என்னோட ஆற்றமைகளைச் சொல்ல முடியும். அம்மா... தாமிரபரணி.... . அன்னையாக உன் தோள் சாய்ந்துதான் தினமும் என் சுமைகளை உன்னிடம் இறக்குகிறேன்.." ///

உண்மைதான் குழந்தைகள் வளர்ந்திட்டால் பேச்சுத்துணைக்கு ஆள் இல்லை எனில் இப்படித்தான் பேச வரும்... ஆனா இதுக்காகத்தான் இப்போ பல சினியர் கிளப்ஸ் என உருவாக்கி அங்கு பல விளையாட்டுக்கள் சுற்ருலாக்கள் என ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் மாறிக்கொண்டு வருகிறது..

ஆங்ங் எனக்கு கொஞ்சம் வித்தியாசமான ஒரு ஜிந்தனை:) வருகிறது.. கதை எழுதி அனுப்பிட வேண்டியதுதான்.. சொல்லிக் கொண்டே இருக்கிறேன் இன்னும் ஆரம்பிக்கவில்லை.. இப்படத்துக்கான கதை.

athira said...

//அதிரா உங்களைக் கலாய்த்தேன் சும்மா...நீங்கள் கெஸ் செய்தவர்தான்....இரண்டு வருடமாகிறது பார்த்து...வாட்சப்பில் வீடியோ கால் கூட வெரி ரேர். ஒன்லி வாய்ஸ் கால்தான் வருவார்...ஸோ கவுன்ட் டவுன் ஸ்டார்ட்டட்....

கீதா//

கீதா.. ஒரு கிழமை என்பதால ஒழுங்கா ரைம் ரேபிள் போட்டு சமையுங்கோ ஹொட்டேல் போங்கோ.. ஆனா செவ்வாய்க்கிழமை லஞ்:- அதிராவின் குழைசாதம் எனப் போட்டு வையுங்கோ ஜொள்ளிட்டேன்ன்:))

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/அந்த உரையாடல்கள் பொதுவாக எல்லா குடும்பங்களிலும் நிகழ்வது என்றே தோன்றுகிறது/

ஒரு சில வித்தியாசங்கள் இருப்பினும், எழுதும் சம்பவங்கள் நிஜ வாழ்விலும் சில சமயம் இடம் பெற்று விடுகிறது. நாமும் நடைபெற்ற சம்பவங்களை சிறிது கற்பனை குழைத்து மெருகேற்றி நம் மனதிற்கு உகந்தவாறு எழுதி விடுகிறோம். அவ்வளவுதான்.. தாங்கள் எழுதிய கதைகளை உங்கள் பதிவிலோ, எங்கள் ப்ளாகிலோ ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் சகோதரி. நீங்கள் அழகாக அந்த கதையை கல்கிக்கு அனுப்பியிருக்கலாமே சகோதரி. நீங்கள் என்னை விட சுருக்கி எழுதுவதில் ஆற்றல் பெற்றவர். நான் படித்த உங்கள் கதைகளே அதற்கு சாட்சி.

கதை அருமை என்ற பாராட்டிற்கு மிகவும் நன்றிகள் சகோ.
தங்களின பொதுவான, தனிப்பட்ட கருத்துக்களை வாசித்து பதிலிடுகிறேன்

தங்கள் கருத்துக்களுக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

athira said...

கமலா சிஸ்டர் நீங்கள் மொபைலில் பதில் போடுறீங்கள் போல இருக்கு.. அதனால ஆருக்குப் பதில் குடுக்கிறீங்க எனப் புரியுதில்லை... எப்பவும் பெயரைப் போட்டு விட்டே பதில் குடுங்கோ.. அது எங்கள்புளொக்கில் மட்டும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கு... மொபைலில் காட்டும்.. ஆனா கொம்பியூட்டரில் காட்டாது:).

athira said...

//(ஹையோ இந்தப் பூஸாரோடு சேர்ந்து ஒரே பில்டப்பு!!!..பூசாருக்கு பெருமையோ பெருமை....ஏஞ்சல் கொஞ்சம் அந்த வாலை வெட்டி விடுங்க..ஓகேயா)

கீதா//

அதைத்தான் அப்பவே கழட்டி லொக்கரில வச்சுப் பூட்டிட்டனே:)) ஒரு நெக்லெஸ் போட வழியில்லை.. கடசி வாலோடு திரியலாம் என்றால் அதுக்கும் வழியில்லமல் போச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

கீதா என் பக்கம் உங்களுக்கு நேற்று ராத்திரி ஒரு பதில் குடுத்தேன் பிளேன் பற்றி.. படிச்சிருக்காட்டில் படிச்சிடுங்கோ:))

நெ.த. said...

அதிரா - அந்தப் பையன் ஆசையா அம்மா சாப்பாடு சாப்பிடவும், கொடுக்கும் packed foods கொண்டு செல்லவும், எல்லாருடனும் நேரம் செலவழிக்கவும் வர்றார். இப்படி சர்வசாதாரணமாக 'குழை சாதம்' பண்ணிக்கொடுங்கன்னு கீதா ரங்கனுக்கு ஷாக் (ஷாக்க்ட்ட்ட்) கொடுக்கலாமா?

Kamala Hariharan said...

அதிரா சகோதரி

ஆமாம் நான் அனைவருக்கும் மொபைலில்தான் பதில் அளித்து வருகிறேன். நான் கருத்துரை இட்டவர்களுக்கு பதிலாக அவர்களின் கமெண்ட்ஸ்க்கு கீழேயே டைப் செய்து வருகிறேன். இந்த பிரச்சனை எனக்கு தெரியாதே... என் கணினியில் சிறு பிரச்சனை காரணமாக மொபைல் வழி உலா தான் வருகிறேன்.இந்த மாதிரி டைப் அடிப்பது எனக்கு செளகரியமாக இருப்பதால் இந்த முறையில் பதிலளித்து வருகிறேன். தகவல் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

Angel said...

//குழை சாதம்' பண்ணிக்கொடுங்கன்னு கீதா ரங்கனுக்கு ஷாக் (ஷாக்க்ட்ட்ட்) கொடுக்கலாமா?//

கர்ர்ர் நெல்லைத்தமிழன் //குழைசாதம் // பேரைக்கேட்டாலோ பார்த்தாலோ கண்ணுதலை எல்லாம் சுத்துது

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

வரிகளை குறிப்பிட்டு பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

வல்லிசிம்ஹன் said...

இந்த வரிகளை வாசித்ததும் எனக்கு வல்லிம்மா நினைவு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை....////அன்பு கீதா,
எத்தனை நல்ல உள்ளம் உங்களுக்கு.
ஆமாம் இது போலப் பல பிரச்சினைகள்.
பெண்களால் பிடிவாதம் பிடிக்க முடியாது.
ஆண்களால் முடியும்.

குழந்தைகளை விட்டுக்கொடுக்க எந்த அம்மாவுக்கும் மனசு வராது.

வாழ்வு பூராவும் விட்டுக் கொடுத்தல் தான்.
சகோதரி கமலா,வெகு அழகாகக் கதை சொல்லி இருக்கிறார்.
பாவம் அந்த அப்பா.

நெ.த. said...

ஏஞ்சலின் - //கண்ணுதலை எல்லாம் சுத்துது// - நான் சொல்லவேண்டாம்னு நினைத்தேன். அ.அ எங்கிட்ட வாட்சப்ல சொன்னது, அதைத்தான் (குழைசாதம்) தயார்செய்து கொஞ்சம் ஆறவைத்து விரல்களில் தடவி கட்டு போட்டாங்க, அதுனாலதான் விரைவில் உங்களுக்கு குணமாயிடுச்சு என்று. நான் இதைப்போய் உங்கள்ட கேட்டு வெரிஃபை பண்ணவேண்டாம்னு நினைத்தேன்.

காமாட்சி said...

கதை மனதை உருகவைத்துவிட்டது என்றால் பிரத்யக்ஷமாக இந்தக்கால பெற்றோர்களின் மனச்சுமை தெரிகிறது. நிதி வசதியில் பின்தங்கி விடும்நிலை கடைசி மகனுக்கு ஏற்பட்டு விடுவதுதான் காரணம். எவ்வளவோ வார்த்தைகள் மற்றவர்களைச் சொல்லும்போது கூட தனக்காகத்தான் சொல்கிரார்களோ என்று யோசிக்க வைத்துவிடும். கதையில் பெரியவருக்கு விடுதலை கிடைத்து விடுகிறது. நிஜ வாழ்க்கையில் நோயுற்றவர்களாக இருந்தால் என்ன என்ன செய்ய முடியும்? மிகவும் யோசனை செய்ய வைத்து விட்டது கதை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பொருமை எவ்வளவு அவசியம். என்னால் கதையாக நினைக்கவே முடியவில்லை. பாராட்டுதல்களம்மா. அன்புடன்

Kamala Hariharan said...

கீதாரெங்கன் சகோதரி,

அதிரா அவர்களின் "தனியாக எடுத்து எழுதவும்" என்ற ஆலோசனையின் பேரில் இப்போது தட்டச்சு செய்கிறேன்.

தங்களின் விரிவான இரு கருத்துக்களையும் படித்தேன். மிக அழகாக வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். அந்த காலத்தில் முக்கால் வாசி கூட்டுக் குடும்பங்கள் இருந்ததினால், பணப் பிரச்சனைகள் வீட்டின் ஆண்களே முடிவெடுத்து பெண்களின் ஆலோசனைகளையும் செவிமடுக்காது முடித்து விடுவதுண்டு. அதில் கூட குறைய என்ற பிரச்சனைகள் இடையில் முளைக்கும். பெண்களும் அடுப்படியை விட்டு வெளிகாட்டாது (எந்த பிரச்சினையையும்) இருந்தார்கள். காலம் மாற மாற கூட்டு குடும்பங்கள் பிரிந்து, பெற்றோர் தம் குழந்தைகள் என்று ஆன பிறகு, வேறு வடிவத்தில் பிரச்சனைகள் தலை தூக்கியது. நீங்கள் சொல்வது உண்மைதான்...நிறைய குழந்தைகள் (இரண்டுக்கும் மேலாக) இருக்கும் பட்சத்தில் ஒரு குழந்தை பெற்றோரை அன்பாக வைத்துக் கொண்டு பாசமாக கவனித்துக் கொள்ள ஆசைப்படும். மற்ற குழந்தைகளுக்கு இடம் பொருள்
ஏவல் என்று அதெல்லாம் சரிப்பட்டு வராத சமயத்தில் உள்ளுக்குள் வருத்தம் இருந்தலும், அதை வெளிக்காட்ட தெரியாது. பெற்றோர்களுக்கு அனைவரும் ஒன்றுதான். அவர்களும் உயர்த்தி தாழ்த்தி பேச முடியாமல், மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். மனப்பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை.

தங்களது வாழ்வியல் கதைகளையும் எழுதி முடித்து வெளியிடுங்கள். ஆவலோடு எதிர் பார்க்கிறேன். உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களின் ஊக்கமிகு பாராட்டுக்கள் என் எழுத்துக்களுக்கு உரமாகும்.

தங்கள் மகன் வெளி நாட்டிலிருந்து வருவதை அறிந்தேன். அவருடன் நிறைய நேரங்கள் செலவழித்து மகிழ்வுடன் இருங்கள். மகனுக்கும் என் அன்பான வாழ்த்துகள். நன்றி

Angel said...

நோ நோ நம்பாதீங்க

@ நெல்லைத்தமிழன் ..அ .அ இப்படித்தான் நிறைய புரளியை கிளப்புவாங்க :) அன்னிக்கு உங்க ரெசிப்பி ஒன்னை தேட போய் எங்கல்ப்ளாகில் இந்த குழாய் :) சாதம் கண்ணில் பட்டுத்தான் அந்த வெட்டுகாயமே ஆச்சு .

athira said...

//நெ.த. said...
அதிரா - அந்தப் பையன் ஆசையா அம்மா சாப்பாடு சாப்பிடவும், கொடுக்கும் packed foods கொண்டு செல்லவும், எல்லாருடனும் நேரம் செலவழிக்கவும் வர்றார். இப்படி சர்வசாதாரணமாக 'குழை சாதம்' பண்ணிக்கொடுங்கன்னு கீதா ரங்கனுக்கு ஷாக் (ஷாக்க்ட்ட்ட்) கொடுக்கலாமா?///

ஆஆஆஆஆஆஆஆங்ங்ங் நான் ஜொன்னனே:)) கடவுள் ஒத்துக் கொண்டாலும் பூசாரி ஒத்துக்கொள்ள விட மாட்டாராம் அப்பூடி இருக்கே இப்போ என் நிலைமை:).. என் கொமெண்ட் பார்த்த உடனேயே கீதா மார்க்கட் போயிட்டா பொருட்கள் வாங்க குழை...ஜாதத்துக்கு:)).. இப்போ நெ.த நின் கொமெண்ட்டைப் பார்ஹ்ட்து டக்குப் பக்கென மூடு மாறிடப்போறாவே ஹையோ மீ என்ன பண்ணுவேன்ன்:)) ஒருவராவது செய்யவும் மாட்ட்டினம்மாம்ம்:).. செய்ய வெளிக்கிடுவோரை விடவும் மாட்டினமாம் கர்ர்ர்ர்ர்ர்:))..

இங்கு வீட்டிலயாவது செய்வோம் என்றால்ல்.. அம்மா சொல்றா “குழைசாதமோ சீ சீ அதெதுக்கு வேண்டாம்” என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

athira said...

///Angel said...
நோ நோ நம்பாதீங்க

@ நெல்லைத்தமிழன் ..அ .அ இப்படித்தான் நிறைய புரளியை கிளப்புவாங்க :) அன்னிக்கு உங்க ரெசிப்பி ஒன்னை தேட போய் எங்கல்ப்ளாகில் இந்த குழாய் :) சாதம் கண்ணில் பட்டுத்தான் அந்த வெட்டுகாயமே ஆச்சு .///

ஹலோ என்னிடம் நெ.தமிழனின் வட்சப் நம்பர் இருக்கு என என் செக்:) க்குப் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஅண்மை:)) ஹா ஹா ஹா ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ:)).. அஞ்சுவோடு சேர்ந்து இப்போ அண்ணியும் கலைக்கப் போறாவே என்னை ஹா ஹா ஹா:)).. வர வர எல்லோரும் எதிர்க்கட்சியிலயே சேர்ந்திடுறாங்க:)..

Kamala Hariharan said...

வணக்கம் கில்லர்ஜி சகோதரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/கதை மனதை கனக்க வைத்து விட்டது.

முடிவு சுபமில்லை என்றாலும் இப்படித்தான் இருக்கவேண்டும். அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் விபத்து போன்று சொன்னவிதம் நன்று./

பாராட்டிய விதம் மனம் மகிழச் செய்தது.
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

போட்டோவில் சாவியை கண்டு அது சம்பந்தபட்ட சில வார்த்தைகளையும் சேர்த்தேன்.

தங்களின் கருத்துகளுக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

athira said...

//அதிரா அவர்களின் "தனியாக எடுத்து எழுதவும்" என்ற ஆலோசனையின் பேரில் இப்போது தட்டச்சு செய்கிறேன். //

கமலா சிஸ்டர்.. தனியாக என்றில்லை, நீங்கள் மொபைலில் ரிப்ளை பட்டினைக் கிளிக் பண்ணிக் குடுக்கலாம் ஆனா பெயர் போட்டுப் பதில் குடுங்கோ... மொபைலில் பார்ப்போருக்கு தெரியும்.. ஆனா கொம்பியூட்டரில் பார்ப்போருக்கு யாருக்கு எந்தப் பதில் எனத் தெரியுதே இல்லை:((

Kamala Hariharan said...

கீதா சகோதரி,

/கமலா சகோ இது மனதைத் தொட்ட வரிகள். இது ஆணுக்கு/கணவனுக்கு மட்டுமல்ல பெண்ணிற்கும்/மனைவிக்கும் பொருந்தும்.

இந்த வரிகளை வாசித்ததும் எனக்கு வல்லிம்மா நினைவு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை..../

தாங்கள் கூறுவது உண்மைதான்.
வல்லிமாவின் நினைவு வந்ததை குறிப்பிட்டு கூறியிருந்தது எனக்கும் வருத்தத்தை தந்தது.

Kamala Hariharan said...

கீதா ரெங்கன் சகோதரி

/எனக்கும் தோன்றும் நன்றாக எழுதலை என்று இங்கு வரும் ஒவ்வொருவரது கதையும் படிக்கும் போதும் எனக்குத் தோன்றும் ச்சே நாம் இன்னும் நன்றாக எழுதணும்...நாம் எழுதறது ஒன்றுமே இல்லை என்று./

நீங்கள் மிகவும் அழகாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் கோமதி அரசு சகோதரி,

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/தாமிரபரணியை பார்த்துக் கொண்டு என் காலம் மட்டும் இருக்கிறேன்.என்னை பார்த்துக் கொள்ள ஆள் போட்டுக் கொள்ளலாம். டெல்லி தானே? விமானத்தில் பறந்து வந்து அடிக்கடி பார்த்துக் கொண்டால் போச்சு என்று விச்சு சொல்லி இருக்கலாம்./

தாங்கள் கூறியுள்ளது போலும் எழுதியிருக்கலாம். தோன்றவில்லை.

/ஆற்றில் மண் அள்ளுவதால் ஏற்படும் தீமையை சொன்னது போலும் ஆச்சு.
கதை நன்றாக இருக்கிறது./

ஆம் ஒரு முறை இதே போல் இக்கட்டில் என் நாத்தனார் ஊருக்கு போயிருக்கும் போது (கல்லிடைக்குறிச்சி) ஆற்றங்கரை குளியலில், மணல் எடுத்த இடத்தில் நான் மாட்டிக்கொண்டேன்.
மனதில் இருந்த அந்த பிரதிபலிப்பே கதையின் முடிவு.

வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி.

தங்கள் கருத்துக்களுக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் ஜி.எம்.பி சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விட்டு கொடுக்கும் மனப்பான்மை யாருக்கும் இல்லையாததால்தான் இந்த மாதிரி பிரச்சனைகள் உருவாகின்றன.
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

தங்களது பாராட்டுக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை செம்மையடையச் செய்யும். பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்.

தங்கள் கருத்துக்களுக்கும்,அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் தனபாலன் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களின் பாராட்டுகள் நான் வலைத்தளம் ஆரம்பித்த நாளிலிருந்தே என் எழுத்துக்களை ஊக்கப்படுத்தி இருக்கிறது. அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போதும் மனமுவந்து தந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்.

Kamala Hariharan said...

வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/இறுதியில் அவர் இறக்காமல், அன்னை போல அவர் நினைத்த தாமிரபரணியிடம் விடை பெற்று மகனோடு புது இடத்தை, புது வாழ்வை நோக்கி செல்வது போல் அமைத்திருந்தால் அந்த கதா பாத்திரம் இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கும். அவர் நிலையில் இருக்கும் பலருக்கும் அறிவுறுத்தியது போலவும் இருந்திருக்கும்/

தாங்கள் கூறியிருப்பதும் அருமையான முடிவு. அவ்வாறு எழுத எனக்கு ஏனோ தோன்றவில்லை. சோகமாக முடிந்திராமல், சுபமாக முடிந்திருக்கும். ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.

தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என் எழுத்தை செம்மையடையச் செய்யும். நன்றி.

தங்கள் கருத்துக்களுக்கும்,அன்பான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

Kamala Hariharan said...

வணக்கம் அனுராதா பிரேம்குமார் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/மிக உணர்வு பூர்வமான கதை...மனம் நெகிழ்கிறது../

கதையை படித்து பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

தங்கள் கருத்துக்களுக்கும்,அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் அதிரா சகோதரி

படத்திற்கான கதைதான் படித்து விட்டு வாங்க... நன்றி சகோதரி.

Kamala Hariharan said...

வணக்கம் ஏஞ்சல் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கதையின் வரிகளை குறிப்பிட்டு ரசித்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் தந்த சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தங்கள் கருத்துக்களுக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் துளசிதரன் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கதையை படித்து ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
தங்களது ஊக்க மிக்க கருத்துக்கள் என மனதிற்கு மகிழ்வடையச் செய்கிறது. என் எழுத்துக்களுக்கு, அது நல்ல உரமாக அமையும் என்ற நம்பிக்கையும் வருகிறது. தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

தங்கள் கருத்துக்களுக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Asokan Kuppusamy said...

நெகிழ்வான கதை பாராட்டுக்குரியது

Kamala Hariharan said...

வணக்கம் அதிரா சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/ஆஆஆஆவ்வ்வ்வ் கதை நீண்டுகொண்டே போகிறதே எனப் படிச்சிட்டு வந்தேன்.. வித்தியாசமான முடிவு... :(. மனித வாழ்க்கை என்பது வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பி இருபோருக்கு இப்படித்தான் ஆகிறது போலும். அழகான கற்பனை.. தொடர்ந்து கதைகள் எழுதுங்கோ...

விச்சுத்தாத்தாவின் வாழ்கை வரலாற்றையே எழுதி விட்டீங்க./

ஆம் சற்று நீண்ட கதைதான். சுருக்கி எழுத எனக்கு இன்னமும் வரவில்லை. உங்கள் அனைவரிடமிருந்துதான் இனி கற்றுக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கள் என்ற ஊக்கத்திற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

அவர் உங்களுக்கு தாத்தாவாகி விட்டாரா? ஹா ஹா ஹா ஹா.

Kamala Hariharan said...

அதிரா சகோதரி

/குழந்தைகள் வளர்ந்திட்டால் பேச்சுத்துணைக்கு ஆள் இல்லை எனில் இப்படித்தான் பேச வரும்... ஆனா இதுக்காகத்தான் இப்போ பல சினியர் கிளப்ஸ் என உருவாக்கி அங்கு பல விளையாட்டுக்கள் சுற்ருலாக்கள் என ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் மாறிக்கொண்டு வருகிறது../

உண்மைதான்.. முதியோர் இல்லங்கள் உருவாக காரணங்கள் அவர்களுடன் இளைய தலைமுறைகள் பேச பிரியபபடாததுதான். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

வெகு விரைவில் இப்படக்கதை தங்களிடமிருந்தும் அன்புடன் எதிர் பார்க்கிறேன். நீங்கள் அருமையாக எழுதுவீர்கள். நன்றி சகோதரி.

Kamala Hariharan said...

வணக்கம் காமாட்சி சகோதரி

தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/கதையில் பெரியவருக்கு விடுதலை கிடைத்து விடுகிறது. நிஜ வாழ்க்கையில் நோயுற்றவர்களாக இருந்தால் என்ன என்ன செய்ய முடியும்? மிகவும் யோசனை செய்ய வைத்து விட்டது கதை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பொருமை எவ்வளவு அவசியம். என்னால் கதையாக நினைக்கவே முடியவில்லை. பாராட்டுதல்களம்மா. அன்புடன்/

தங்கள் யோசனைகளுக்கும், அன்பான கருத்துக்களும் பாராட்டுதல்களும் என் மனதை நிறைவடைய செய்கின்றன.

தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என் எண்ணங்களை, எழுத்துக்களை திருத்தியமைக்கும் என நம்புகிறேன்.

தங்கள் கருத்துக்களுக்கும்,அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிம்மா.

Kamala Hariharan said...

அதிரா சகோதரி

முதலில் தாங்கள் சொல்ல வந்தது என்னவென்று தெரியாமல் குழம்பி விட்டேன். தற்சமயம் பெயரிட்டு பதில்கள் தந்துள்ளேன் மிக்க நன்றி சகோதரி.

Kamala Hariharan said...

வணக்கம் அசோகன் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

/நெகிழ்வான கதை பாராட்டுக்குரியது/

தங்களின் பாராட்டுக்களுக்கு என் மனமுவந்த நன்றிகள்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

மனதைத் தொட்ட கதை, கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களின் ஊக்கமிகு கருத்துரைகளுக்கு
மிக்க மகிழ்ச்சி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!