புதன், 5 செப்டம்பர், 2018

புதன் 180905

                       
எங்கள் ப்ளாக் ஆரம்பிக்கும் முன்புவரை, DD என்றாலே, எங்களுக்குத் தெரிந்தவர் இவர் ஒருவர்தான்! 






எங்கள் ப்ளாக் ஆரம்பித்த சில வாரங்களில், நானும் ஸ்ரீராமும் பதிவுலகில் மேய ஆரம்பித்ததும், எங்களுக்குப் பரிச்சயமானவர் திண்டுக்கல் தனபாலன். 

அதற்கப்புறம் எங்களுக்கு, DD என்றாலே இவர்தான்! 


                     
இவர் பதிவுலகின் பரோபகாரப் பழனி.

எங்கள் ப்ளாக் வளர்ச்சிக்குப் பல ஆலோசனைகள், உதவிகள் செய்துள்ளார், செய்துகொண்டிருக்கிறார்.

சென்றவார கேள்வி பதில் பகுதியில் இவருடைய பத்துக் கேள்விகளை சேர்க்கவில்லை. முற்றிலும் என் தவறுதான்! அவர் கேள்விகள் வியாழன் பதிவில் காணப்பட்டதால், மறதி மன்னார்சாமியாக அவற்றைச் சேர்க்க மறந்துவிட்டேன்! டி டி மன்னிக்கவும்!

எனவே இந்த வாரம் அவர் கேள்விகளுக்கு முதல் மரியாதை!


திண்டுக்கல் தனபாலன் :

பதில்களை விட கேள்விகள் கேட்பது மிகவும் சிரமம்... அதைவிட முதலில் கேள்வி பிறப்பதே அதிக சிரமம்...(!) ஏனென்றால் பதில்கள் தெரிந்து விட்டால் பல கேள்விகள் எளிதாக பிறக்கும்... ஆனால், இங்கு கேள்விகள் மட்டும் தான் என்னில் பிறந்தவை... பதில்கள் கூறியவர் வேறு ஒருத்தர்... அது யாரென அனைவருக்கும் தெரியும்...! அதை விடுங்க, இப்போ :-


கீழே பத்து கேள்விகள் கேட்டுள்ளேன்... ஒவ்வொரு கேள்விற்கும், "பதில் இவ்வாறு இருக்கலாம்" என்று நினைத்து அடுத்த கேள்வி கேட்டுள்ளேன்... (இதை சிந்தித்து பதில் வேண்டாம்) "உங்களை பொறுத்தவரை" என்று அனைத்திற்கும் பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்...


இதே கேள்விகளை உங்கள் தளத்தில் வரும் அனைத்து கருத்துரையாளர்களிடம் (புதன் அன்று ?) முன் வைக்கிறேன்...

==> கருத்துரையாளர்களின் கவனத்திற்கு(ம்)


(01) தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...?
தலைமை என்றால் தொண்டர்கள் மதிக்கிற தன்மையோடு இருக்க வேண்டும். அச்சப் படுவதாகவோ பரிசுகள் எதிர்பார்ப்போடு அல்ல.

I quote the differences between LEADER and BOSS. 

Image result for differences between leader and boss

Substitute " people " or " followers"  in place of "employees". 

தலைவர் லீடர் ஆக இருக்கவேண்டும். பாஸ் ஆக இருக்கக்கூடாது. 

(02) நல்ல சிந்தனைகள் வாழ்க... சிந்தித்தால் மட்டும் போதுமா...?
      

சிந்திக்கத் திறனும் செயலாற்றும் வல்லமையும் நல்ல காம்பினேஷன்.

(03) அடேடே...! சரி, நல்லவரா மட்டும் இருந்தால் போதுமா...?
             

நல்லவராகவும் வல்லவராகவும் இருப்பதே என்றும் விரும்பத் தக்கது.
                 
(04) ஓஹோ, அப்படியா...! இந்த நல்லதையெல்லாம் மத்தவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது...?
                

நல்லனவற்றை பிறர் சகாயமின்றி தானே பகுத்தறிவதே உயர்வு.
(05) அட, அருமைங்க... சரி, கூடவே இருக்கிறவர்கள் எப்படி இருக்கணும்...?
                 

கூட இருப்பவர்கள் நம் பெரும் பலமாக இருக்க வேண்டும்.                
       
(06) ஆகா...! ஆனாலும் இதை கெடுக்கவே சூழ்ச்சி நடக்குமே...?
                    

சூழ்ச்சிக்கு பலியாகாததே நற்பண்புக்கு அடையாளம்.
 
(07) எல்லாம் தெரியுமா...? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா...?
                    

எல்லாம் தெரிந்தோர் இலர். ஏட்டளவில் தெரிந்தோர் பலர். அதுவாவது தெரிகிறதே என மகிழ்வோரும் உளர்.
                            
(08) சரிங்க, சொல்புத்தியும் கேட்காம, சுயபுத்தியும் இல்லாம செயல்பட்டா...?
                  

அப்படி இருந்து கொண்டு அயலில் குறைகாண்பது அநீதி.             
                     
(09) ம்... சுயநலம் தான் பிரதானம்ன்னு ஆயிட்டா...?
                               

சுயநலம் பிரதானமாக ஆகிவிட்டால் அல்ல ஆகி விட்டதே என்பதே நம் புலம்பல்.  
             
       
(10) அற்புதம்ங்க... வாயிலே வடை சுட்ற ஆட்கள் இப்போ பெருகிகிட்டு வர்றாங்க... முதல் கேள்விற்கு இப்போ என்ன பதில் சொல்லப் சொல்றீங்க...?
                        

ஆ! மறுபடியும் முதலிலிருந்தா! 
                     
எந்த புதனில் உங்களின் பகிர்வை (பதில்களை) எதிர்ப்பார்க்கலாம்...? நன்றி...

தாமதத்திற்கு மன்னிக்கவும்! இதோ இந்த புதனில் போட்டுவிட்டோம்!


இடையே,
எங்கள் ஆசிரியர் ஒருவரின் குறுங்கவிதை :

பிளாகர் புலம்பல்!

அச்சில் காண்பதோர் ஆனந்தம்
அதன் பின்னே அன்பர் பலர்
மெச்சிக் கொண்டால் மெய் சிலிர்ப் பு -- இச்சையாய்
நண்பர் விழைவு நான்கைந்து வந்துவிழ
உண்பது மறந்து உறக்கமும் கெட்டதே!



பானுமதி வெங்கடேஸ்வரன்:

பெண்கள்தான் அதிகம் கேள்வி கேட்கிறார்கள். ஆண்களுக்கு சந்தேகம் வராதா? அல்லது தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லையா?
                               

பெண்கள்தான் சந்தேகப்பிராணிகள் என்று நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்! 

விளம்பரங்களை பார்த்து பொருளை வாங்கி விட்டு ஏமாந்த அனுபவம் உண்டா?
                             

மாயமோதிரம், உலகத்தின் எந்த ரேடியோ நிகழ்ச்சியையும் கேட்க முடிந்த ரேடியோ, இப்படி எத்தனையோ வாங்கி ஏமாந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.  
               

விளம்பரங்களைப் பார்க்காமலேயே வாங்கி ஏமாந்த அனுபவங்கள் நிறைய உண்டு!             

இது உண்மையாக இருக்கக்கூடாதா? என்று நினைத்த வதந்தி ஏதாவது உண்டா?
              

ராமர் பிள்ளை பெட்ரோல் மாதிரி வதந்திகளா இல்லை 12..12..12 அன்று
உலகம் அழிய போகிறது என்பதைப் போன்றவையா?  
         

நான் பணிபுரிந்த தொழிற்சாலையில், போனஸ் தருகின்ற சமயங்களில், பலரும் பலவிதமான வதந்திகள் கிளப்புவார்கள். அரிசிப் பஞ்சம் இருந்த (1970 +) வருடங்களில், வெல்டர் கோவிந்தன் என்னிடம் சொன்ன போனஸ் ஃபிரிஞ்சு பெனிஃபிட்ஸ்  (ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு மூட்டை அரிசி, ஒரு பவுன் தங்கக்காசு ++ என்ற) வதந்தி உண்மையாக இருக்கக்கூடாதா என்று நினைத்தது உண்டு! 
              

பிள்ளையார் சதுர்த்தி வருகிறதே, வழக்கமான தேங்காய் பூரணம், எள்ளுப்பூரணம், உளுத்தம் பூரணம் கொழுக்கட்டைகளைத் தவிர பனீர் கொழுக்கட்டை, ட்ரய் ஃபிரூட்ஸ்(dry fruits) கொழுக்கட்டை போன்றவை சுவைத்திருக்கிறீர்களா?/செய்திருக்கிறீர்களா?
                     

விநாயக சதுர்த்தி அன்று சோதனை முயற்சி எதுவும் செய்வதில்லை.
மற்ற நாட்களில் சாக்கலேட்டு பன்னீர் cauliflower, இப்படி நிறைய...

               

கொழுக்கட்டைகள் செய்வதில் நான் எக்ஸ்பர்ட். ஆனால், சரியான மாவு பதம் இருந்தால்தான் சாத்தியம். எனக்குப் பிடித்தவை தேங்காய்ப் பூரண இனிப்புக் கொழுக்கட்டைகள்தான். எங்கள் வீட்டில் நாங்கள் செய்வது அ , இ , உ கொழுக்கட்டைகள் மட்டுமே! 
               

கீதா சாம்பசிவம் : 
             

கணவன், மனைவிக்குப் பயந்தவர் போல பல ஜோக்குகள் வருகின்றன! ஆனால் உண்மையில் அப்படித் தான் நடக்கிறதா? குறைந்த பட்சம் உங்க வீடுகளில்?

கணவன் மனைவி இடையே ஒருவரை மற்றவர் சங்கடப் படுத்தக் கூடாது என்ற பாங்கு இருக்கும் - இருக்க வேண்டும். இதன் காரணமாக சில விஷயங்கள் அடுத்தவருக்கு செல்ல வேண்டுமா எனும் தயக்கம் உண்டாவது இயல்பு தான்.
          

ஆ ..... ஆமாமுங்க! உண்மையில் அப்படித்தான் நடக்குதுங்க! 
           

கல்யாணம்னாலே என்னமோ ஓர் கால்கட்டு, விலங்கு என்பது போல் ஆண்கள் சொன்னாலும் அந்தக் கல்யாணம் செய்துக்க அவங்க ஏன் முன் வருகிறார்கள்?

கல்யாணம் கால்கட்டாக இருப்பினும் அதில் விரும்பத் தக்கதும் நிறைய இருக்கிறதே. எனவே இருபாலரும் அதை ஆர்வமாக எதிர்நோக்குவது சரிதான். 
         

ஜோக்குக்காக சொல்வது எதுவும் உண்மை கிடையாது. உண்மை என்றால் அதில் ஜோக்கு கிடையாது. 
     

பெண்களைப் பற்றி ஆயிரம் குற்றம், குறை சொல்லிட்டு அந்தப் பெண்கள் பின்னாலேயே சுத்தும் மர்மம் என்ன? 
            

இருபாலரிடை ஈர்ப்பு இயற்கையின் நியதி. அலசலுக்கு அப்பாற்பட்டது.
         

எனக்குத் தெரிந்து குற்றம் குறை சொல்பவர்கள் யாரும் பெண்கள் பின்னே சுற்றியது இல்லை. 
          

எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு தான் காரணம்னா குற்றம் ஏன் கண்டு பிடிக்கணும்?
              

ஈர்ப்பு எல்லாம் இற்றுப் போனபின்தான் குற்றம் காணல் தொடங்குகிறது. 
              

அந்தக் காலத்தில் ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தைக் கவனிச்சாங்க என்கிறார் நெ.த. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வீடுகளில் இருந்திருக்கலாம். ஆனால் பொதுவாக வீட்டு நிர்வாகம் பெண்கள் கையில் தான் இருந்தது! சரியா, தப்பா? 
            

குடும்ப நிர்வாகம் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே கவனிக்கப் படுகிறது என்பதே என் கணிப்பு.
             

நீங்க எல்லோரும் ஆசைக்குக் கணினி கற்க நேர்ந்ததா? அவசியத்துக்கா?
            

நான் கணினியை. ஆசைக்குக் கற்று அன்றாடம் பயன்படுத்தி அலுவலகத்தில் அதற்காகப் பாராட்டும் பெற்றேன்.
             

ஆசை, ஆசை, ஆசை! அதனால் வந்தது அவசியம். புதியவற்றைத் தெரிந்துகொள்வதில் எங்கள் எல்லோருக்கும் அடங்காத ஆர்வம் உண்டு. 
              

கணினி கற்க ஆரம்பிச்சப்போ பல விசித்திர அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அவை சுவாரசியமானவையா? இல்லைனா அசடு வழியும் தன்மையுள்ளதா? (எனக்கு இரண்டும் உண்டு)
                  

கமா, முழுப்புள்ளி, மிஸ்ஸிங் பிராக்கெட் கதி கலங்க அடித்த அனுபவம் நிறையவே உண்டு.                

ஆரம்ப காலங்களில் ஃபோர்ட்ரான், பேசிக் மட்டும் தெரிந்துகொண்டு, ப்ரோக்ராம் எழுதி, அதை ஓட்டும்போது அது எரர், எரர் என்று சொல்லிச் சொல்லி ஓட மறுக்கும். வேதாளத்தைத் துரத்தும் விக்கிரமாதித்தனாக இராப்பகலாகப் போராடி வெற்றி பெற்ற அனுபவங்கள் நிறைய உண்டு.
                   

கணினியில் எப்போ உட்காருவீங்க? காலை எழுந்து காலைக்கடன்களை முடிச்சுட்டுக் காஃபி சாப்பிட்டதுமா? இல்லைனா எழுந்ததுமேவா? 
              

கணினியில் அதிக நேரம் செலவழிப்பது உண்மைதான். ஆனால் பல் தேய்க்கு முன்பே எல்லாம் இல்லை.
                 

கணினியில் உட்காருவதே இல்லை. அதில் உட்கார்ந்தா அது பூந்தி ஆயிடும்! 
                 

கணினி இல்லாமல் உங்களால் ஒரு நாள் இருக்க முடியுமா? முகநூல் பார்க்காமலோ, கணினியைப் பார்க்காமலோ இருப்பீர்களா?
                  

கணினி இல்லாமல் இருப்பதில் கஷ்டமில்லை.
               

மாதத்தில் ஒருநாளாவது அப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் இருப்பதில்லை. நெட் இல்லாத நாட்களில் கணினி பக்கம் வருவதில்லை! 
              

ஏகாந்தன் : 
            

ஏன்.. என்ற கேள்வி.. 
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..

- ரசித்திருப்பீர்கள். மனைவி ஏதாவது சொல்லுகையில் இந்த வரி ஞாபகம் வந்து வாயைத் திறக்க முயற்சித்ததுண்டா? இல்லை, மனைவி எதிர்ப்பட்டதுமே பாட்டெல்லாம் பக்கத்து ஜன்னல் வழி பாய்ந்து வெளியேறிவிடுகிறதா?
             

 தம்பதியரிடையே எழும் விமர்சனம் பெரும்பாலும் நியாயமாக இருக்கும்.
                   

மனைவி கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பாட்டில் பதில் சொல்லி, பாட்டு வாங்குவேன்! 
                 

ரேவதி நரசிம்ஹன் : 
             

உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுபவர்கள் அதிகமா
அலட்சியம் செய்பவர்கள் அதிகமா.

முகத்தில் காட்டும் கவனம் ,
உடலின் பயிற்சிக்குக் காட்டுகிறார்களா.
            

முகம், முடி விஷயத்தில் காணப்படும் அளவுக்கு கவனம் உடல் நலத்தில் அறவே காணப்படுவதில்லை.  

அலட்சியம் செய்பவர்கள்தான் அதிகம் காணப்படுகிறார்கள். இங்கே பெங்களூரு வீதிகளில், காலை நேரத்தில் நடந்து செல்பவர்கள் என்று பார்த்தால், பத்தில் எட்டு பேர், வீட்டு வேலை செய்யும் வேலைக்காரப் பெண்மணிகள்தான்!  மற்ற இரண்டு பேர், கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிக்கும் குழந்தைகள்.                

மாடித் தோட்டம் போட்ட அனுபவம் உண்டா? 

நிறைய உண்டு. 
             

60 கருத்துகள்:

  1. ஆஹா.... இன்றைக்கு தனபாலனின் சிறப்பான கேள்விகள்.

    எல்லா கேள்விகளும், உங்களின் பதில்களும் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. ஹலோ.... மைக் டெஸ்டிங்.... 1 2 3... 3 2 1....

    இன்னும் யாரும் வரலையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உங்கள் தளத்தில் இருந்தேன் வெங்கட்.. ! அதுதான் மைக் டெஸ்டிங் செய்யவேண்டிய நிலைமை!

      நீக்கு
    2. நானும் வந்துட்டேன், ஆனால் மணிக்கொடி காலத்தில் இருந்தேன். அதோடு பு.கி. இஃகி, இஃகி! மறந்துட்டேன். :)

      நீக்கு
    3. மணிக்கொடி அனானிக்கு உங்கள் பதில் என்ன கீதாக்கா?

      நீக்கு
  3. இன்னிக்கு புதன்கிழமைனே மறந்து போச்சு! இப்படிக்கிழமைகளை மறக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கமெண்ட்டிலேயே முதல் கேள்வி தொடங்கி விட்டது! வாங்க கீதாக்கா... காலை வணக்கம்!

      நீக்கு
    2. ஆமாம், அடுத்த வாரத்துக்கான கேள்வி

      நீக்கு
    3. இந்தமாதிரி கிழமைகளை இந்த வயசில் மறக்கவில்லை. ஒருவேளை 95 வயசாகும்போது அப்படி ஆகுமான்னு தெரியலை. அந்த வயது வரும்போது, அதுக்கு ஏகப்பட்ட வருடம் இருக்கு, அப்போ சொல்றோம்னு பதில் சொல்வாங்களோ? (On a serious note, நான் கிழமையை நினைக்கும்போது அன்றைய இடுகை எ.பியில் என்னவாக இருக்கும் என்பதை நினைப்பேன். அதேபோல நேற்றைய இடுகையை வைத்து இன்றைய கிழமை சட்னு ஞாபகம் வரும்)

      நீக்கு
  4. இஃகி, இஃகி, தற்செயலா மணிக்கொடி காலம் பதிவைப் படிச்சுட்டு இங்கே வந்தப்புறமாத் தான் இன்னிக்கு ஆறுமணி ஓட்டம், பிடி இல்லைனு தெரிய வந்தது. கிழமை என்னன்னே தெரியாம நீங்களும் இருந்த அனுபவம் உண்டா? எனக்குப் பல சமயங்களிலும் அன்றைய கிழமை போல் இல்லாமல் வேறே ஏதானும் கிழமைனு தோணும். உதாரணமாத் திங்கள் அன்றே செவ்வாய் என நினைப்பேன். புதன்கிழமையைப் பல சமயங்களிலும் ஞாயிறு மாதிரி நினைச்சது உண்டு. :))) தலையைப் பிச்சுக்க வைக்கிறேனோ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்செயலா இருக்காதுக்கா... ஒரு அனானி மணிக்கொடி காலப் பதிவில் ஒரு கேள்வி கேட்டிருக்கார்... அதுதான்! கிழமைக்கு குழப்பங்கள்... ஓ... பதில் இப்போ சொல்லக்கூடாதோ!

      நீக்கு
    2. பதிவுகளில் அனானியாகப் பின்னூட்டம் இடுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் அனானியாகக் கருத்துச் சொல்லி இருக்கீங்களா? எனக்கு அது எப்படினு இன்னும் தெரியலை, அல்லது புரியலை! :(

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... அனானி பற்றியே அடுத்த கேள்வி!!!

      நீக்கு
    4. கீதா அக்கா நான் போனில் பின்னூட்டமிடும்போது அவசரத்துக்கு அனானியா வருவேன் .பேரும் எழுதித்தான் போடுவேன் .இல்லைனாலும் நீங்க எல்லாரும் ஈஸியா கண்டுபுடிக்கிறீங்க நான்தான்னு :)

      blogger கூகிள் அக்கவுண்ட் இல்லாதவங்க அனானியா பின்னூட்டமிட்ட வசதி .

      நீக்கு
  5. இரண்டு D.D.க்களின் புகைப்படங்களையும் இணைத்து குடும்பத்தில் பிரச்சனையை வளர்த்து விடுவது போல் தெரிகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.. உங்க பார்வையே வித்தியாசமானதுதான்... ஹா... ஹா... ஹா...

      நீக்கு
  6. கடுகு சாரின் தற்செயல் நிகழ்வுகள் பதிவுகளைப் படிச்சீங்களா? அம்மாதிரித் தற்செயல் நிகழ்வுகள் உங்க வாழ்க்கையிலும் நடந்தது உண்டா? அந்தப் பதிவைப் படிச்சதுமே எனக்குத் தெரிந்த ஒரு தற்செயல் நிகழ்வு ரா.கணபதிக்குப் பிறந்த நாள் என்பதை முகநூலில் படிச்சுட்டு வந்தால் கோமதி அரசு அவரைப் பற்றியே பதிவு இட்டிருந்தார். ஆனால் அவங்களுக்கு அன்னிக்கு அவரோட பிறந்த நாள் என்பதே தெரியாது. இந்தத் தற்செயல் நிகழ்வு பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதன்... அடுத்த புதன்....!

      நீக்கு
    2. கீதா, அன்று இன்னொரு தற்செயலும் நடந்து இருக்கிறது.

      //ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு அவனது இசையில் தழைத்த கொடியான மீராவின் அமிருதக் கதையைத் தொடங்குகிறோம். கண்னனையும் அவனது கண்மணியான மீராவை நமஸ்கரித்து , இந்த இசைக் கோயிலில் பிரவேசிக்கிறோம் //
      ரா. கணபதி அவர்கள் கிருஷ்ண ஜயந்தியில் ஆரம்பித்த கதையைப் பற்றி கிருஷ்ணஜயந்தி அன்றே தெரியாமல் தற்செயலாக பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
  7. கேள்வி-பதில்கள் சிந்தனையை தூண்டியது.

    பதிலளிநீக்கு
  8. துரை ஸார் வரும் நேரம் நெருங்குகிறது!

    பதிலளிநீக்கு
  9. எல்லா கேள்வி களும். பதில் களும் ஸ்வாரஸ்யமாகவும் யதார்த்த மாகவும் இருந்தன.!!!!பனி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் உ.வ.சங்கத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் நல்வரவு... ம்

    பதிலளிநீக்கு
  11. இன்னைக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது..ங்கண்ணா!...

    பதிவு வர்ற நேரம் தாறுமாறா இருக்கும்..ந்னு தெரிஞ்சும் உள்ளே வர முடியலை....

    வேலை அதிகமாகி விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இந்த வரி எப்போதும் தயாரா டைப் செய்து காத்திருப்பேன். நேற்று அடித்த வரிகள் அப்படியே இருக்க அதில் இணைத்து அடிக்கிறேன்!

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. இவர் பதிவுலகின் பரோபகாரப் பழனி.
    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இன்னொரு பட்டமும் கிடைத்து இருக்கிறது.
    ஏற்கனவே. வலை உலகத்தில் அன்பால் நிறைய அன்பர்கள் வலையுலக சித்தர் என்று கொடுத்து இருக்கிறார்கள்.

    திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன்.
    அவர் கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. கவிதை எழுதும் ஆசிரியர் ஸ்ரீராம் தானே?
    கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. ஆசிரியர் குழுவிற்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. எங்கள்Blog ஆசிரியர்கள் குழுவிற்கு நன்றி...

    பதில்கள் அருமை... (கிட்டத்தட்ட சரி...!)

    இவைகளே இரண்டு பதிவுகளாக, வியாபார நேரம் போக அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்... இங்கு கேள்விகளை சுருக்கி விட்டேன்... அதை மட்டும் உரையாடலாக மாற்ற வேண்டும்...

    பதில்கள் ஒருவர் ஏற்கனவே சொல்லி விட்டார்... கூடுதல் இணைப்பாக ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் பாடல் வரிகள்...!

    இன்று பதிவு வெளியிட்டுள்ளேன்... இன்னும் ஒரு பதிவு எழுதிமுடித்தால் "புகழ்" அதிகாரம் முடிந்து விடும்... பிறகு இந்த கேள்வி பதில்கள் பற்றிய பதிவுகள்...

    அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...

    // 01. தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...? // இப்போதைக்கு ஒன்று சொல்கிறேன்... அந்த தலைமை :- அரசியல்வாதி

    பதிலளிநீக்கு
  17. பானுமதி வெங்கடேஸ்வரன் அம்மாவிற்கு :

    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்...

    ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்...
    நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
    ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்...
    நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
    ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்...
    ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
    ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...
    ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...

    பதிலளிநீக்கு
  18. கேள்வி பதில் பதிவு வித்தியாசமாக இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  19. பெங்களூரில்தான் நடைப் பயிற்சி செய்பவர்கள் மிக அதிகம். ஜெ.பி நகர் பக்கத்துல மினி ஃபாரஸ்ட்ல நான் எப்போதும் நிறைய பேர் நடப்பதைப் பார்க்கிறேன். இதுபோல் பல பூங்காக்காளில் காலை வேளையில் நிறைய பேர் நடப்பார்கள். அதுக்கு கிளைமேட்டும் நல்லா இருக்கும். சென்னைல அதுபோல மிக அதிகமாகப் பார்க்கவில்லை என்றாலும், இங்கும் 4 மணிக்கு எழுந்து நடப்பவர்கள், ஜாகிங் செய்பவர்களை தினமும் பார்க்கிறேன். யோகா வகுப்புகளுக்கும் பலர் செல்கிறார்கள். (ஒருவேளை வீட்டிலேயே இருப்பதால் இதெல்லாம் கேஜிஜி சாருக்குத் தெரியலையோ? இல்லையே அவரும் நடப்பதாகத்தானே சொன்னார்..)

    பதிலளிநீக்கு
  20. //கணவன், மனைவிக்குப் பயந்தவர் போல// - கீசா மேடம்... இது பெரும்பாலும் உண்மைதான். இதற்கு காரணம் சிம்பிள். பெண்கள் ஓரளவு மாரலில் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். அதனாலேயே கணவன், மனைவிக்கு Mid Ageக்கு அப்புறம் நிச்சயம் அடங்கினவர்தான். இதுக்கு பயம் என்ற வார்த்தை உபயோகம் சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவ் விரைவில் சபைக்கு வரவும் !! இங்கே பாருங்க

      நீக்கு
  21. //உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுபவர்கள் அதிகமா அலட்சியம் செய்பவர்கள் அதிகமா.// - வல்லிம்மா நல்ல கேள்வி கேட்டிருக்கீங்க. நானும் ரொம்ப அலட்சியமாகத்தான் 20+ வருடங்கள் இருந்தேன். பிறகு ரியலைஸ் செய்தேன். உடம்பில் அக்கறை இல்லை என்றால், நமக்கு நாமே பிரச்சனையை உருவாக்கிக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். நிறைய பேர், சிகரெட் மற்ற பழக்கங்கள்னால ஒரு பிரச்சனையும் இல்லை என்பார்கள், உடம்பு என்பது, பொறுமையாகக் காத்திருந்து 50+க்கு மேல்தான் தன்னுடைய ரியாக்‌ஷனைக் காண்பிக்கும். அப்போது டூ லேட் என்றாகிவிடும். ஒவ்வொருவரும் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். சும்மா 'பகவான் பாத்துப்பார்' என்று சொல்வது தவறு. குறைந்த பட்சம், ஒரு நாளைக்கு தொடர்ந்து 40 நிமிடங்களாவது நடைப் பயிற்சி தேவை (அதுமட்டும் போதவே போதாது. அது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சக்கரை போல). நிச்சயம் பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யணும். பல பிரச்சனைகள் மூச்சுப் பயிற்சியினாலேயே தீர்ந்துபோயிடும். தினமும் குறைந்த பட்சம் 2+ லிட்டர் தண்ணிர் குடிக்கணும் (இது மோர், குழம்பு, ரசம் போன்றவற்றினால் சேரும் தண்ணீரைத் தவிர்த்து).

    பதிலளிநீக்கு
  22. //ஈர்ப்பு இயற்கையின் நியதி. அலசலுக்கு அப்பாற்பட்டது.// - இதுதான் உண்மையான பதில். இது மூச்சு விடுவதைப் போல. அலசி ஆராய்வது கடினம். இதனைத் துறந்து இருப்பவர்கள், இயற்கையை மீறி ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இருக்கிறார்கள். (கடுமையான நியம நிஷ்டை, மனசை முழுமையாகக் கட்டுப்படுத்துவது எல்லாம் கோடியில் ஒருவருக்கும் வருவது கடினம்)

    பதிலளிநீக்கு
  23. //கணினி கற்க ஆரம்பிச்சப்போ பல விசித்திர அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்// - நான் கணிணி வேலை பார்த்தபோது ஆரம்பகாலத்தில் ஒரு விசித்திர அனுபவம் ஏற்பட்டது. ரங்காச்சாரி (லஸ் சர்ச் ரோடு) கடைக்கு எதிரே உள்ள பெரிய அலுவலகத்தில் (கம்பெனி பெயரைத் தவிர்க்கிறேன்), அந்தக் கம்பெனி இந்தியா முழுமைக்கும் பல்வேறு கிளைகள் கொண்டது, நான் கன்சல்டண்ட் ஆக சென்றிருந்தேன். (கணிணி மயமாக்கம் அப்போதுதான் ஆரம்பம்). அங்கு யூனியன் உண்டு (அந்த ஆபீசுலயும்). ஒரு நாள், கம்ப்யூட்டரில் வைரஸ் வந்தது. இது 87ல். உடனே நான் கம்ப்யூட்டரில் வைரஸ் அட்டாக் ஆகியிருக்கு, அதனைச் சரி செய்யப்போகிறேன் என்று சொன்னேன். கொஞ்ச நேரத்தில் ஒரு அக்கவுண்டண்ட், அந்த வைரஸ் காரணமாத்தான் இரண்டு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது என்று ஆரம்பித்து, உடனே அது ஸ்டிரைக்கில் கொண்டுபோய்விட்டது. அவர்கள் ஒருநாள் அடையாள ஸ்டிரைக் செய்தார்கள் (கம்ப்யூட்டர் வைரசால் உடல் நிலை பாதிக்கிறது என்று). எப்படி இந்த அனுபவம்?

    பதிலளிநீக்கு
  24. மாடித் தோட்டம் பற்றிய கேள்விக்கு, //நிறைய உண்டு. // இதுவா தக்க பதில்? இப்படியே போனால் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என்று பதில் சொல்ல ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கே.. தோட்டம் போட்டீர்களா, என்ன என்ன ஈல்டு வந்தது, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் விளைந்ததா, அந்த அனுபவம் என்ன என்றெல்லாம் எழுதவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கௌதமன் சார் கொட்டாங்குச்சியிலே கொத்தமல்லி செடி வளர்த்திருக்கார் :)

      நீக்கு
  25. 1, கிளம்பறேன் என்ற வார்த்தை எப்படி வந்தது ??

    class c கலாசி ஆச்சு ,சாயங்காலம் சாயும்காலம் சாயந்திரம் ஆச்சு ஆனா இந்த கிளம்பறேன் எங்கிருந்து வந்தது என்று எக்ஸ்ப்ளெயின் ப்ளீச் ? :)


    2, சமீபத்திய படங்களில் லிவிங் டுகெதரை ஆதரிக்கிறமாதிரி ஆனா திருமணத்தில் முடிகிறமாதிரி காட்டுகிறார்கள் என்று ஒரு சினிமா விமர்சனத்தில் படித்தேன் .
    லிவிங் டுகெதர் பற்றி தங்கள் ஆணித்தரமான கருத்து என்ன ?
    3,henpecked , cock pecked ,சிதம்பரம் ,மீனாட்சி ஆட்சி இதையெல்லாம் யார் துவக்கி வச்சிருப்பாங்க ??
    4, எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாருக்கு மறதி அதிகம் ?
    வரிசைப்படுத்தி சொல்லவும் ?
    5,பார்க் சேர் ,மரக்கட்டை நாற்காலி சட்டங்களில் தங்கள் பெயரை பொறித்து விட்டு போறாங்களே :) என்ன காரணம் ?
    நேற்றுகூட வாக்கிங் போன பார்க்கில் ஓடையை ஒட்டிய மரப்பாலத்தில் ஒருத்தர் சாவியால் பேர் எழுதறதை பார்த்ததும் இந்த கேள்வி உதித்தது :)

    6, வக்கீல் வேடத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காவா இல்லை தமன்னாவா ???
    7, 24 மணி நேரம் போதலைன்னு நினைத்ததுண்டா ? எந்த தருணத்தில் ?
    8, காக்கா தூக்கி போச்சு னு சொல்றாங்களே :) அதை எந்த வயசு வரைக்கும் நம்பினீங்க ??
    9, ஜால்றா அடிக்கிறாங்க அப்டிங்கறாங்களே :) உலகின் முதல் ஜால்றா யார் அடித்திருப்பார் ?
    10, சமீபத்தில் அதிகம் வெறுப்பேற்றிய ஒரு சம்பவம் ?
    11, சில நேரங்களில் நம்மையறியாமலேயே ஒரே பாடலின் குறிப்பிட்ட வரிகளை மட்டும் ரிப்பீட்டடா ஹம் செய்வோம் இதற்க்கும் நடக்கபோகிற நடந்த சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா ?
    நட்பு ஒருவர் 3 நாளா செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரிகளை விடாம ஹம்
    செய்றார் ,தூக்கத்திலும் அதே வரிகள் வருதாம் என்ன காரணமாக இருக்கும் ??


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வக்கீல் வேடத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காவா இல்லை தமன்னாவா ???// - என்ன கொடூர மனம். எங்கள் தலைவியை வக்கீல் வேடத்துக்குப் பரிந்துரை செய்ய (காரணம் நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க ஹாஹாஹா)

      நீக்கு
  26. நட்ட நடு இரவில் உதித்த கேள்விகள் எல்லாத்தையும் கேட்டுட்டேன் :)
    இப்போதைக்கு சர்ச் போயிட்டு மீண்டும் வருவேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் எப்படி இருக்கீங்க! பூசார் லீவு இன்னும் முடியய்லை போல!!

      கீதா

      நீக்கு
    2. aaaw கீதா !!! நான் நல்லா இருக்கேன் .வேலை தான கொஞ்சம் அதிகம் இப்போ பாதி குறைஞ்சிடுச்சி கிடைச்ச நேரம் எட்டி பார்க்கிறேன் .

      poos varuvanga seekiram

      நீக்கு
  27. டிடி கேள்விகளும் உங்கள் பதில்களூம் ஸ்டார் வால்யூ.
    அன்பு நெ.த வுக்கு மிக நன்றி அழகாகப் பதில் சொன்ன அன்புக்கு நன்றி மா.

    இருவரும் மனதுக்கு இதமான மக்கள். ஸ்ரீராம் உங்களைப் போல. கீதா, கோமதி, காமாட்சிமா
    மாதிரி.
    இன்னும் எழுதப் போனால் அது நட்புகள் பதிவாகிடும்.

    கீதா சொல்லும் தற்செயல்கள் என் வாழ்வில் நிறைய.
    ஏதோ ஒரு திரைப்படம் பார்த்து நாட்களாகிவிட்டதே என்று நினைத்தேன். நேற்றூ டெலிவிஷனில் சொல்கிறார்கள் ,இந்தப்படம் 4 நாட்களுக்கு பக்கத்தில இருக்கிற தியேட்டரில் வருகிறதாம்.

    longtime visualisation and short time expectations ,and wishes do happen.what a fortune.

    டிடியின் தன்னைதானே நம்பாதது சந்தேகம் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

    இனி அடுத்த வாரக் கேள்வி.

    முகனூலில் சில பதிவுகள் சுய விளம்பரமாகி விடுகிறதே.

    என் கணிப்பில் தப்பா. நானும் அதைப் பின் பற்றுகிறேனா
    சொல்லுங்கள் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  28. துளசிதரன்: டிடி அவர்களின் கேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒவ்வொருவரது கேள்விகளும் நன்றாகவே இருக்கின்றன.

    கேரள வெள்ளத்திற்குக் காரணம் சபரிமலைக்குப் பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சொல்லிக் கொண்டு வந்ததுதான் காரணம் என்று சமூகவலைத்தளங்கள் எல்லாவற்றிலும் சுற்றியது உங்களுக்கும் தெரிந்திருக்கும். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

    கீதா: ஹை இரண்டு டிடி!!! உங்கள் கருத்தேதான் வலை வரும் முன் டிடி என்றாலே அந்த டிடி அல்லது பேங்க் டிடி தான் நினைவுக்கு வரும் வலை வந்த பிறகு டிடி என்றாலே நம் வலைச்சித்தர்தான் நினைவுக்கு வருகிறார்!!!

    எல்லாமே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. தனித்தனியாகக் கருத்து போட முடியவில்லை...இன்னும் நிறைய பதிவுகள் இருக்கு...ஹூம் இதுக்குத்தான் வகுப்புக்கு ஒழுங்கா வரணும் றது ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!