வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வேண்டுதல் வேண்டாமை

"என்ன கோபால், நம்ம ஊரு கோவில்ல ஒரே கூட்டம் நேற்று?"

"ஆமாம். கோயிந்து, புது வருஷம் பிறந்திருக்கு இல்லே? அதுதான்..."

கோவிந்து: "உங்களுக்கு முன்னாடி ... இரண்டு பேர் ...."  

கோபால் [மனதுக்குள் 'கோவிலுக்கு நீங்கள் எல்லாம் வருவதே இதுக்குத்தானே']: "என் மனைவியும் மச்சினியும்."

கோவிந்து: "ஓஹோ, என்ன வேண்டிகிட்டீங்க? எங்க ஊர்ல எல்லாம் கூட ஹோலிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே அல்லோல கல்லோலப் படும்."

கோபால்: "அதுவா, நான் எனக்கு புரமோஷனும் நிறைய ஓவர்டைமும் கிடைக்கணும் என்று வேண்டிக் கொண்டேன். நீங்க?"

கோவிந்து: "நாங்கள் எல்லாம் கோவிலுக்குப் போனால் 'சாமி நல்ல புத்தியைக் கொடு' என்றுதான் வேண்டிக் கொள்வோம் "

கோபால்: "அதுவும் சரிதான். அவரவரிடம் இல்லாததைத் தானே வேண்டிப் பெற முடியும்?"   















வியாழன், 29 ஏப்ரல், 2010

இன்றும் ஒரு புதிர்.

நானும் என் நண்பர்கள் இருவரும், எங்கள் வங்கிக்குச் சென்றோம். கவுண்டரில் வழக்கமான சிடுமூஞ்சி. வங்கியில் எக்கச் சக்கக் கூட்டம். எங்கள் மூவருக்குமே பணம் எடுக்கவேண்டும்.  வரிசையாக எங்கள் செக்குகளை கொடுத்து டோக்கன்கள் வாங்கிக் கொண்டோம்.

எங்கள் மூவரிடமும் இருந்த டோக்கன்களின் எண்களைப் பார்த்தோம்.
இருந்த டோக்கன்கள் எல்லாம் முடிந்து போய் அடுத்த ரவுண்டு வர ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்துகொண்டோம். என்னுடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவர் அறிவு ஜீவி. காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல், புதிர்கள் போட ஆரம்பித்தார்.

அறிவு ஜீவி கேட்ட இரண்டு கேள்விகள் இங்கே:

* மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தி மிகச் சிறிய எண்  என்ன கொண்டு வர முடியும்?

* மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தி மிகப் பெரிய எண் என்ன கொண்டு வர முடியும்?

(மூன்று டோக்கன்களையும் பயன்படுத்த வேண்டும். எண் மேலே தெரியவேண்டும். கழித்தல் கூட்டல் போன்ற குறிகள் எதுவும் பயன்படுத்தக் கூடாது. இன்னும் சரியாகச் சொன்னால் - மூன்று டோக்கன்களையும் தரை மீதோ / மேஜை மீதோ வைத்துக் காட்டும்படி இருக்க வேண்டும்..)

இதற்கு வாசகர்களின் பதில்களைப் பார்த்த பின், அறிவு ஜீவி கேட்ட மற்ற கேள்விகள், புதிய பதிவாக பார்ப்போம்.    

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

விடுமுறைப் புதிர்

புதிர்களுக்கு விரைவாக நிறைய பதில்கள் தருவதும் படைப்பாற்றல்தான் என்று ஏற்கெனவே பார்த்தோம். இதோ சில சுலபமான கேள்விகள். பதில்களை பின்னூட்டமாகப் பதியலாம் அல்லது எங்கள் ஜி மெயிலுக்கும் (engalblog@gmail.com) அனுப்பலாம். 

விடை / (பொருள்)  எட்டு (8) என்று வருகின்றாற்போல், சில கேள்விகளை நீங்கள் அமைக்கவேண்டும். எழுத்துக்களால் அல்ல, தீக்குச்சிகள் கொண்டு.
1) பத்து தீக்குச்சிகள் கொண்டு.
2) ஒன்பது தீக்குச்சிகள் கொண்டு.
3) எட்டு தீக்குச்சிகள் கொண்டு.
4) ஏழு தீக்குச்சிகள் கொண்டு. ** (ஒரு விடை கீழே காண்க)
5) ஆறு தீக்குச்சிகள் கொண்டு.
6) ஐந்து தீக்குச்சிகள் கொண்டு.
# ஒன்றிலிருந்து நான்கிற்குள் தீக்குச்சிகள் உபயோகித்து எட்டு கொண்டு வருபவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள் உண்டு.

ஏழு தீக்குச்சிகளைக் கொண்டு எட்டு வரவழைத்த சுலபமான வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
                                                                  
பின் குறிப்பு: 
ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட விடைகளும் இருக்கக்கூடும். 

யோசியுங்கள், விடை அளியுங்கள், உங்களை யார் என்று எங்கள் மூலம் உலகுக்கு உணர்த்துங்கள். 

திங்கள், 26 ஏப்ரல், 2010

ஸ்ரீ சியாமா சாஸ்திரி

சங்கீத மும்மணிகளில் ஒருவர் ஆகிய ஸ்ரீ சியாமா சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 26, 1762) என்று  படித்தேன்.
                                                                
 காலத்தினால் அழியாத பாடல்களை இயற்றுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சியாமா சாஸ்திரி அவர்களால் மதுரை மீனாட்சியின் பேரில் பாடப் பெற்ற நவரத்னமாலிகை பாடல்கள் மிகவும் பிரசித்தம். மத்யமாவதியில் அவர் இயற்றிய 'பாலிஞ்சு காமாட்சி' போன்ற பாடல்கள் மனதை உருக்கும் சக்தி வாய்ந்தவை. 

இதை எழுதும்போதே, இரண்டு வருடங்களுக்கு முன், ஹிந்து நாளிதழில், படித்த செய்தி ஒன்றும் நினைவுக்கு வருகிறது. சியாமா சாஸ்திரி வழித் தோன்றல்கள், சென்னை குரோம்பேட்டை சித்லப்பாக்கம் பகுதியில், வறுமையில் வாடுகிறார்கள் என்னும் செய்திதான் அது. 
                                 
எத்தனையோ சங்கீத விழாக்கள், சங்கீத சபாக்கள், சங்கீத ஆர்வலர்கள், சங்கீத விற்பன்னர்கள் நிறைந்த நம் நாட்டில், இவர்களுக்கு உதவி புரிய யாரும் முன் வந்ததாகத் தெரியவில்லை. 

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஞாயிறு - 41

ஸ்டெப் ஒன்று :


ஸ்டெப் இரண்டு: 


ஸ்டெப் மூன்று: 


ஸ்டெப் நான்கு:


ஸ்கான் / கிளிக் 


அனுப்புதல் :
engalblog@gmail.com  (JPG Format)    

சனி, 24 ஏப்ரல், 2010

வாசகர் விருப்பம்.

பல வாசகர்கள் அலையிலும், வலையிலும், தொலையிலும் கேட்டுக் கொண்டதால், படைப்பாற்றல் பயிற்சி எண் ஒன்றுக்காக, எங்களுக்கு இதுவரை வந்த எல்லாப் படங்களையும் இங்கு வெளியிடுகிறோம். 
அடுத்த பயிற்சியிலும், வாசகர்கள் மற்றும் அவர்கள் வீட்டுக் குழவிகள், கிழவிகள், கிழவர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சின்னஞ்சிறு கதை. விடியோ வினோதம்.

வெளி நாட்டிலிருக்கும் ராமுவால் திடீரென்று இந்தியா வர முடியவில்லை. விடியோவில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். யார் யாரையோ கேட்டுவிட்டு கடைசியில் என் சிபாரிசுக்கு வந்தார்கள் ராமுவின் வீட்டார். நெருங்கிய நண்பன் விசுவத்தை விடியோவுக்கு ஏற்பாடு செய்தேன்.

இரண்டே நாளில் விசுவம் போன் செய்தான். " தனியா ம்யூசிக் விடியோ மேலே ரெகார்ட் செய்யணுமான்னு தெரியலை " என்றான்.

" ம்யூசிக் போடாமல் அப்பிடியே விட்டால் நல்லா இருக்காது. பொருத்தமா தேடிப் போட்டுடு. "

" சுலபமாசொல்லிட்டே. இவங்க ஒத்தொத்தருக்கும் பிடிச்ச மாதிரி, கமெண்ட் வராத மாதிரி ம்யூசிக் பிடிச்சுப் போடறது அவ்வளவு சுலபம் இல்லை. பார்க்கறேன். "

நான்கே நாட்களில் ராமு வந்துவிட்டான். அவனோடு உட்கார்ந்து நானும் விடியோ பார்த்தேன்.

அமைதியான பின்னணி இசை எனக்கு நன்றாக இருப்பதாகப் பட்டது. " விசுவம் நல்லா செட் அப் பண்ணி சவுண்ட் குடுத்து எடுத்திருக்கான்." என்றேன்.

ராமுவின் அக்கா பதில் சொன்னாள்: " வாஸ்தவம். இல்லாத போனா நான் கதறக் கதற அழுதது ரெகார்ட் ஆயிருக்கும். அம்மா போன சோகத்துக்கு மேலே இந்த கண்றாவி வேறே சேந்திருக்கும்" என்றாள்.

காலமாகிவிட்ட ராமுவின் அம்மா வின் ஈமச் சடங்கு விடியோ ஓடிக் கொண்டே இருந்தது.

உலக புத்தக தினம்.

                                        

உலக புத்தக தினமாகிய இன்று,
உங்களைப் 'பெரிதும் கவர்ந்த புத்தகம் எது' என்றும், அந்தப் 'புத்தகத்தின் ஆசிரியர் யார்' என்றும் விவரங்களை  பின்னூட்டமாகப் பதியுங்கள்.

நிபந்தனைகள்:
# நீங்க ஒரு தடவையாவது அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்திருக்க வேண்டும்.

# ஒருவரே எவ்வளவு புத்தகங்கள் பற்றி வேண்டுமானாலும் பதியலாம்.  

இந்தப் பதிவின் நோக்கம் : 'எங்கள்' வாசகர்களின் ஆர்வம் எந்த வகைகளில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதுதான். மேலும் நாங்க + மற்ற வாசகர்கள் எந்தப் புத்தகம் அல்லது புத்தகங்கள் வாங்கலாம் என்பதற்கு ஒரு வழிகாட்டியாகவும் இது அமையலாம்.   

வியாழன், 22 ஏப்ரல், 2010

சொல்பவர் யார்? யாருக்கு?


ஒரு முறை என்னை நானே பார்த்துக் கொண்டேன்.  எனக்குப் பழக்கமில்லாத உடை உடுத்திக் கொண்டிருப்பது போல் தோன்றியது.  என்றாலும் மனதில் பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்ற உணர்வு இல்லவே இல்லை.  ஒரு மாதிரியான சம நிலை, நன்றாக இருந்தது.  இந்த இடத்துக்கு இதுதான் சரியான உடை போலும்!  

அக்கம் பக்கம் எல்லாம் என்னை மாதிரியே பலரும்.  ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியான மேக் அப்பில் (இந்த வார்த்தை இங்கு பொருத்தமில்லாதது போல தோன்றியது). எல்லாரிடமும் ஒரு அசாதாரண அமைதி.  சுகமாக ஒரு தென்றல் வீசுவது போலவும் சுகந்தம் பரவுவது போலவும் ஒரு உணர்ச்சி.  

நான் செத்துப் போனதும் என் உடம்பை (அது என்னது இல்லை மாதிரி இப்போது உணர்கிறேன்) மையமாக வைத்து பலரும் பல மாதிரியாக நினைத்தும், பேசியும், செயல்பட்டும் தங்களை வேண்டுமென்றேயும், தெரியாமலும் வெளிப்படுத்தியது நன்றாக நினைவுக்கு வருகிறது.  அதெல்லாம் ரொம்ப முக்கியமில்லை என்கிற எண்ணம் கூட உடன் வருகிறது.  

திடீரென்று சூழ் நிலையில் ஒரு குறிப்பிடத் தக்க ஆனால் இன்னதென்று சொல்ல முடியாத மாற்றம்.  அங்கிருக்கும் எல்லாரும் யாருடனோ பேசுவது போல நன்றாகத் தெரிகிறது.  ஆனால் சப்தம்?  கொஞ்சம் கூட இல்லை.  பாஷை கூட ஏதும் பயன் படுத்தப் பட வில்லை என்றே தொன்றுகிறது.  எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸெப்ஷன் என்று மனக் காட்சிக்குச் சொல்வார்களே அது போல் இது எக்ஸ்ட்ரா சென்சரி லிஸனிங் போலும். இல்லை இல்லை, லிஸனிங் இல்லை, கான்வெர்ஸிங். உரையாடுவது யாரிடம்?  என்ன பேசுகிறார்கள்? எதைப் பற்றி? எதை எதிர்பார்த்து?  தெரிந்து கொண்ட மாதிரியும் தெரியாதது போலவும் ஒரே சமயத்தில் இருந்தது.   

திடீரென்று இங்கும், எனக்குள்ளும் என்று சொன்னால் சரியாக இல்லையோ, ஒரு புது அதிர்வு. 

"என்ன, எப்படி இருக்கிறது எல்லாம்?" என்ன அப்பா, என்ன அம்மா என்று குறிப்பிட்டுக் கேட்காதது பொருத்தமாக இருந்தது.  

"அடுத்து என்ன என்று பார்க்கத் தோன்றுகிறது" புத்திசாலித் தனமான பதில் இல்லைதான்.  ஆனாலும் உண்மையானது.  கேட்கப் படாத கேள்விக்கு சொல்லப் படாத பதில் சொல்லியாகிவிட்டது. 

"இந்த ஆளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்த பின் எனக்கு சொல்லி அனுப்பு-- வேண்டாம் வேண்டாம், செய்து முடி. அது முடிந்ததும் நானே வருகிறேன் "
புது அதிர்வு அங்கிருந்து அகன்றது தெரிந்தது.  அந்த நகர்தல் என்னிடமிருந்து மட்டும்தானா? அல்லது எல்லாருக்கும் விசாரிப்பு முடிந்து விட்டதா? அக்கம் பக்கம் பார்த்து எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.  

அதற்கப்புறம் நடந்ததைச் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்களா வேதனைப் படுவீர்களா, கவலையுறுவீர்களா எனக்குத் தெரியவில்லை. 

என்னை உட்கார வைத்து என்மீது புனித நீரை குடம் குடமாக, நீரும் இல்லாமல், குடமும் எடுக்காமல் ஊற்றினார்கள்.  அதன் பின் என்ன தெரியுமா? பஞ்சாமிர்தம் தலை மேல் எக்கச் சக்கமாக கொட்டப் பட்டு என் மீதெல்லாம் பிசு பிசு வென்று ஊறியவாறு வழிந்தது.  அதன் பின் நீர்.  தொடர்ந்து மஞ்சள் நீர், குங்கும கலவை, சந்தனம், தயிர் (புளித்த வாடை இல்லாத நல்ல தயிர் தான் என்றாலும் அது என் மேல் ஊறும் போது உண்டான உணர்ச்சி!!) ரொம்ப நேரம் பால். இப்படியாக எனக்கு அபிஷேகம். அதன் பிறகு ஒரு அழுக்குத் துண்டு கொண்டு என்னை துவட்டி புகையூட்டினார்கள்.  ஒரு ஜவந்திப் பூ மாலையை என் மேல் சார்த்தி பின்பு எனக்கு ஒரு அழுக்கு ஆடை உடுத்தினார்கள்.  

யார் சொன்னார்களோ, அந்தப் புது அதிர்வு மீண்டும் இங்கே! 

"ஒன்றுக்குப் பத்தாக தருவான் என்று சொல்லிச் சொல்லி செய்து கொண்டாடினாயே இப்போது திருப்தி ஆகியதா?" மீண்டும் கேட்கப் படாத, உணரப் பட்ட கேள்வி. 

"அறியாமல் செய்த பிழையைப் பெரியோர் பொறுப்பது கடனே" என்று உருவேற்றத் தொடங்கினேன்.  

"சரி சரி.  அலகிலா விளையாட்டுடையார் என்று சும்மா சும்மா சொன்னால் அதற்குண்டானதையும் அனுபவிக்கத் தானே வேண்டும்" என்ற ஃபீலிங் பதில் கிடைத்த மாதிரி இருந்தது.  

சரிதான். நாளை முதல் என்னைச் சுற்றி நின்று கொண்டு உன்னை மாதிரி உண்டா, உன் கண்ணென்ன காலென்ன மேனி எழிலென்ன வாக்கு சுத்தம் என்ன என்று தினம் (இங்கே அது எவ்வளவு நேரம்?) சொல்லிச் சொல்லி எனக்கு ஆயாசம் உண்டாக்குவார்களா என்று அரண்டு போகும்போதே என்னவோ செய்தது.  நான் சந்திக்க விரும்பும் பேர்வழிகள், அவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்களோ என்று சிறு அளவில் ஒரு கவலை தோன்றி மறைந்தது.  

அப்புறம் நான் இல்லாமல் போனேன்.  கவலைகள் கரைந்து போயின.  எனின் இதைச் சொல்பவர் யார்? யாருக்கு?    

புதன், 21 ஏப்ரல், 2010

கல்யாண சாப்பாடு போட வா...

சில பல வருடங்களுக்கு முன்னால் திருமணம் என்பது இப்போதைய திருமணங்களிலிருந்து மாறுபட்டது. கல்யாண விருந்துகளும். 

அந்தக் காலத்தில் கல்யாணங்கள் என்பது ஒரு வாரம், மூன்று நாள் என்றெல்லாம் நடக்கும். இப்போதும் மூன்று நாள் திருமணங்கள் நடப்பதுண்டு. முதல் நாள் ரிசெப்ஷன், இரண்டாம் நாள் திருமணம், மூன்றாம் நாள் கட்டு சாதம்.

முன்பெல்லாம் திருமணத்துக்கு முதல் நாள் ரிசெப்ஷன் வைக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. திருமணம் நடந்து சில நாட்கள் கழிந்த பின்னர், வேறு ஊரிலோ, வேறு சவுகரியங்களுக்காகவோ மற்றொரு நாளில் வைப்பது உண்டு. அவ்வளவுதான். தாலி கழுத்தில் ஏறுமுன் பையனும் பெண்ணும் சேர்ந்து நிற்பதா...மூச்...என்பார்கள். இப்போது அது சர்வ சகஜம். தொண்ணுறுகளில் சகோதரி திருமணம் நடந்தபோது கூட இந்த முதல் நாள் ரிசெப்ஷன் தயக்கத்துடனேயே ஒத்துக் கொள்ளப் பட்டது. வந்திருந்தவர்கள் யாராவது ஏதாவது இதைப் பற்றி கமெண்ட் செய்கிறார்களா என்றும் கவலையுடன் பார்க்கப் பட்டது.

அந்தக்காலத் திருமணங்களில் ஒருவாரமோ மூன்று நாளோ திருமணம் நடக்கும் தெருவே அடைத்து பந்தல் போடப்பட்டு ஜே ஜே என்று இருக்கும். ஓரிரண்டு மாதங்களுக்கு முன்னாலிருந்தே திருமண ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டே இருக்கும். ஊரே அந்த வீட்டில் சாப்பிடும். 'ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்' என்பார்கள்...ஊர் என்ன ஊர், இப்போது போல வெற்றிடங்களை வளைத்துக் கட்டப் பட்ட கட்டிடங்கள் வராத காலத்தில் தொடர்பு எல்லைகள் துண்டிக்கப் பட்ட நிலையில் ஆறேழு தெருக்கள் கூடிய இடம்  ஊர்தான்...!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் யோசித்து அந்தந்த சமூகத்தில் புகழ் பெற்ற சிற்றுண்டிகள் முதல், சாப்பாடு வரை திட்டமிட்டு சமைக்கப் படும். வெளியிலிருந்து யாரும் வந்து சமைக்க மாட்டார்கள். அந்தந்த வீட்டுப் பெண்களே பெரிய அளவில் அடுப்புகள் (தனியாய் எடுக்கத் தேவை இல்லை...அந்த நாட்களில் இந்த மாதிரி கோட்டை அடுப்புகள் இல்லாத வீடுகளே இருக்காது..) வைத்து பெரிய அண்டாப் பாத்திரங்களில் சமைத்து கொண்டே இருப்பார்கள். செட்டி நாடு என்றாலே விசேஷம்தான்..பலவகை பணியாரங்கள், அப்பம் என்றும், ஆச்சாரமான வீடுகளில் பூண்டு வெங்காயம் கலந்த சமையல், கலக்காத சமையல் வித்யாசமாக, விதம் விதமாக...ஒவ்வொரு குடும்ப பாரம்பர்யத்துக்கும் தக்கவாறு...

விருந்து நீண்ட பந்தலின் கீழ் நீளமாக பாய் விரிக்கப் பட்டு வரிசையாக இலைகள் வைத்து பரிமாற, எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

இப்போது..

பல திருமணங்கள் ஒரு நாளிலும் (சில அரை நாளிலே கூட) சில திருமணங்கள் இரண்டு நாளிலும் முடிகின்றன. முதல் நாள் ரிசெப்ஷன் தொண்ணூற்றொன்பது சதவிகிதம்..

மெனு..?

ரிசெப்ஷன் அன்று அவியல், உருளைப் பொரியல், பச்சடி, ஸ்வீட், இதனுடன் இரண்டு சப்பாத்தி அல்லது பூரி, தொட்டுக் கொள்ள அதற்குக் குருமா அல்லது அதன் குடும்பத்தைச் சேர்ந்த பனீர் மசாலா..அப்புறம் ஒரு ஃப்ரைட் ரைஸ் அல்லது பிரிஞ்சி, கலந்த சாம்பார் சாதம், (பிசிபேளா பாத்) ரசம், பாயசம் கப்பில், தயிர் சாதம், (பஹாளா பாத்), ஐஸ் க்ரீம்.இடையே இரண்டு ஸ்வீட் வகை, வறுவல், லட்டு...ஆகக் கூடி ஃபிக்சட் மெனு.
காலை உணவில் காசினி அல்வா, மாலையில் மங்களூர் போண்டா...
மறுநாள் கல்யாணத்தில் சம்பிரதாயமான சாப்பாடு. கோஸ் பொரியல், உருளை வெங்காயப் பொரியல், தயிர் பச்சடி, அவியல், ஊறுகாய், அப்பளம்,
பருப்பு, சாம்பார் சாதம் (பெரும்பாலும் முருங்கைக்காய்) ரசம் சாதம், அப்புறம் பாயசம் (முன்பெல்லாம் இலையில் கொண்டு வந்து ஊற்றுவார்கள். இப்போது அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்டது எனவே கப்பில்..) அப்புறம் தயிர் சாதம். சில சமயம் ஹோட்டல் போல சாம்பாருக்கும் ரசத்துக்கும் நடுவில் காரக் குழம்போ, மோர்க் குழம்போ உண்டு.!
இரண்டு நாளும் காலை வேளைகளில் இட்லி வடையுடன் பொங்கல் அல்லது கேசரி, அல்லது சேட் தோசையுடன் ஸ்வீட், சில சமயம் வெண் பொங்கல், அக்கார அடிசில், (வேறு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?) மாலை நேர டிஃபனாக பெரும்பாலும் இடியாப்பம்..லெமன், தேங்காய் சேவை என்று..அல்லது பஜ்ஜி போண்டா...!

மறுநாள் கட்டு சாதம் பற்றிக் கேட்கவே வேண்டாம்..அதே புளியோதரை , தயிர் சாதம்...கட்டு சாதத்தில் முருங்கைக்காய் போட்டு மிளகுக் குழம்புதான் லேட்டஸ்ட்...! 

எந்தச் சமூகத்து திருமணமானாலும் சரி, எந்த கான்ட்ராக்டரிடம் கொடுத்திருந்தாலும் சரி, எல்லாத் திருமண மெனுவும் இதே...இதே...என்னைப் போன்ற சாப்பாட்டு ராமன்கள் என்னதான் செய்வது? இப்படி கட்டுரை இட்டு புலம்புவதைத் தவிர...

யோசித்துப் பார்த்தால்...


ஒரே மாதிரி மெனுவில் விருந்துகளுக்கு நம் ரசனையும் காரணம், பாஸ்கர் வீட்டில் இதெல்லாம் செய்திருந்தார்கள் நாமும் செய்ய வேணும் என்றில்லாமல், நாமாக மெனு உருவாகிக் கொள்ளக்கூடாதா என்ன ?

முந்தைய நாளில் மூன்று நாட்கள் கல்யாணங்களுக்கு ஒரு தேவை இருந்தது. முஹூர்த்தத்துக்கு வருபவர் இப்பொழுது போல அன்றி வண்டிகளிலும் குதிரை மீதும் நடந்தும் வந்ததால், சரியான நேரத்துக்கு முன்னரேயே வந்து இருந்து நடத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்பொழுது மூன்று நாள் முன்னே வந்தால் மண்டபத்தில் வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பார் அல்லது வேறு ஏதோ விசேஷம் நடந்து கொண்டிருக்கும்! விருந்து சமைப்பது வீட்டுப் பெண்களின் வேலையாக எப்பொழுதும் இருந்ததில்லை பெரிய விசேஷங்களுக்கு ஆண்கள் சமையல் என்பது வெகு காலமாக இருந்து வரும் பழக்கம்.


ஆனால் விருந்தில் பரிமாற அப்பளம், ஊறுகாய் வகைகள் வீட்டிலேயே பண்ண வேண்டிய கட்டாயமும் இருந்தது - கலப்படங்களைத் தவிர்க்க.

முன்பெல்லாம் தரையில் அமர்ந்து சாப்பிட்ட காட்சியை இப்போதெல்லாம் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது. என் வாரிசுகளிடம் எங்கள் கல்யாணத்தில் தரையில் அமர்ந்துதான் சாப்பாடு பந்தி என்றால் நம்ப முடியாமல் இரண்டு பேரிடம் விசாரித்து ஆச்சர்யப் பட்டுப் போனார்கள்.


முன்பு உறவினரை சந்தோஷமாக அழைத்துப் பேசி மகிழ்ந்து கல்யாணம் கொண்டாடுவார்கள். இப்போது அதெல்லாம் போய் கௌரவப் பிரச்சினை யாக சாப்பாடு ஆகிவிட்டது. அதனால்தான், ஒரு இட்லி வடை பொங்கல் கேசரி என்பது போய், இட்லி, வடை, பொங்கல், பூரி, கேசரி, தோசை, ஒரு அசோகா அல்வா என்று டம்பாச்சாரி விஷயமாகி விட்டது. சாப்பிடாமல் தூக்கி எறிவது குறித்து யாரும் கவலையோ வெட்கமோ படுவது இல்லை. முன்போல ஏழை மக்கள் கல்யாண மண்டபத்துக்கு எதிரே எச்சிலையோ எறியப் பட்டதையோ சாப்பிடுவதும் இல்லை.

அந்தஸ்து காட்டும் விஷயமாக சாப்பாடு ஆகிவிட்டதால், ஒன்றுக்கு இரண்டாக காண்டிராக்டர் காசு வாங்குகிறார். மெத்தப் படித்த தனவான்களும் வீண் படாடோபத்துக்காக கணக்குப் பார்க்காமல் அள்ளி விடுகிறார்.


ரேட் மாறாமல் இருந்தால் மெனுவும் மாறுவதற்கு சாத்தியம் இல்லை தானே

சாப்பாடு கதை இப்படி. அதை ஒட்டி, ரிசப்ஷன் கச்சேரி, வரவேற்பு ஆடம்பரங்கள், தாம்பூல படாடோபம் இவை தனிக்கதை. 

என் நண்பர் கே.கோவிந்தசாமி சொல்வார்.."சொல்ல வந்த விஷயம் ரெண்டு வரி பெறுமா? இழு இழுன்னு இழுக்கறியே...அனாவஸ்ய வரிகளை 'கட்' செய்.." என்பார். இதை அது போல எடிட் செய்தால் எப்படி வரும்..? 

"முன்பெல்லாம் திருமண விருந்துகளில் வித்யாசம் இருந்தது. இப்போது கான்ட்ராக்ட் விட்டு ஒரே மாதிரி மெனுவில் திருமண விருந்துகள்.."

அவ்வளவுதான்..! இப்படி எழுதினால் ஒரு இடுகையை எப்படி நிரப்புவது.?!!

படங்களுக்காக 'நெட்'டை' துழாவியபோது இந்த இரண்டு இடங்கள் பார்க்கக் கிடைத்தன...மெனு விவரங்களுடன்.

ஒன்று... மௌலி'ஸ்

இரண்டு... வி.ஹெச் எஸ்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஜே கே 07 உண்மையின் இயல்பு


பொருள் கூறிப் புரிந்து கொள்ளும் போது உண்மைகள் காணப் படுவதில்லை.

உண்மை ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கொடுக்கும் மனம் குறுகியதும், அழிவைச் செய்யும் தன்மை கொண்டதுமாகும்.  உண்மையை நீங்கள் ஒரு மாதிரியாகவும் நான் வேறு மாதிரியாகவும் பொருள் சொல்லி விளக்கலாம்.  தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.  இதை ஒரு சாபக்கேடு என்றே சொல்லவேண்டும்.  உண்மையைக் குறித்து தத்தமது அபிப்பிராயங்களை நீங்களும் நானும் பரிமாறிக் கொள்ளும் போது உண்மையைக் குறித்த நடவடிக்கை ஏதும் எடுக்கப் படுவதில்லை.  என் அபிப்பிராயம், உங்கள் அபிப்பிராயம், நமது பார்வைக் கோணங்கள் இப்படியாக பலவும் நம்மால் காணப்படும் என்பது சரிதான். உண்மையின் தாக்கம், விளைவு, உங்களுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எனக்கு அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றதாகவும் இருப்பது இம்மாதிரி பலவும் வெளிவரும்.  ஆனால் உண்மை விளங்க வைக்கப் படக் கூடியது அல்ல.  உண்மையைப் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்ல முடியாது.  அது உண்மை; அவ்வளவுதான்.  இதைப் புரிந்து கொள்வது மனதுக்குக் கடினமாக இருக்கிறது.  நாம் எப்போதும் எதையும் விளக்கவே முற்படுகிறோம்.  வெவ்வேறான பொருள்களைச் சொல்ல முயல்கிறோம்.  இது நமது பழக்கவழக்க, கலாசார, நாகரிகங்களுக்கு, நம் அச்சங்களுக்கு, நம் நம்பிக்கைகளுக்கு, நம் விருப்பு வெறுப்புகளுக்கு, ஆசாபாசங்களுக்கு உட்பட்டது.  அப்படியில்லாமல், நீங்களும் நானும் உண்மையை அபிப்பிராயங்களும் கருத்துக்களும் நாம் கொடுக்கும் முக்கியத்துவங்களும் இல்லாமல் --  இருப்பதை இருக்கும்படி பார்க்க முடிந்தால் உண்மை அங்கு தனித்து இருக்கிறது. வேறு எதுவும் முக்கியமில்லை.  உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.    

திங்கள், 19 ஏப்ரல், 2010

சாதிக்க விரும்புபவர்கள்





எல்லாமே எய்ட்டி : ட்வெண்டி ரூலில் அமையும் என்று வாதிட்ட 'எங்கள் பிளாக்' ஆசிரியர் குழுவைக் கூட சுனந்தாவின் அறுபத்து மூன்று : முப்பத்து ஏழு விகிதம்தான் - படித்த மக்களிடையே எடுக்கப்படும் வாக்கெடுப்புகளுக்கு சரியாக வரும் என்ற வாதமும், முடிவும் அசர வைத்தது, 


புள்ளிவிவர ஆர்வலராகிய சுனந்தாவிற்கு இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. 'எங்கள்' கல்லூரியில் அவர் எதிர்பார்த்த சம்பளம், படிகள் இத்யாதிகளுடன், வேலையில் சேர அழைப்புக் கடிதம் வந்தவுடன், அவருக்கு வானத்தில் பறக்கின்ற உணர்வு ஏற்பட்டது.


முதல் நாள், முதல் வகுப்பிலேயே - தன்னுடைய புள்ளிவிவர நிபுணத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், மாணவர்களை அசத்த வேண்டும்  என்கிற ஆர்வம அவருக்கு ஏற்பட்டது. அதற்கு உதவியாக தான் சமீபத்தில் அலசி ஆராய்ந்த 'எங்கள் பிளாக்' எல்டாம்ஸ் ரோடு வாக்கெடுப்பு விவரங்களை, குறிப்பெடுத்துக் கொண்டார். மனத்திலும் பல்வேறு வகையில் - ஒவ்வொரு நாளும் எவ்வளவு வாக்குகள் பதிவாயின, 'ஆஹா' எவ்வளவு 'சீச்சீ' எவ்வளவு என்பது போன்ற விவரங்களை, தன்னுடைய குறிப்பேடு உதவியோடு அசை போட்டுக் கொண்டார். 


சுனந்தா கல்லூரி வகுப்பினுள் நுழைந்தார். வருகைப் பதிவேட்டை நோட்டமிட்டார். என்ன ஆச்சரியம்! அந்த வகுப்பில் மொத்தம் நாற்பத்து இரண்டு பேர். (எங்கள் பிளாக் வாக்காளர்களில் பாதி எண்ணிக்கை). அதில் இருபத்தொன்பது ஆண்கள், பதின்மூன்று பெண்கள்.  எல்லோருமே அன்று கட் அடிக்காமல் வந்திருந்தனர். புதியதாக வரும் சுனந்தா எப்படி இருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கே எல்லா மாணவர்களும் வந்திருந்தார்கள் போலிருகிறது. 


சுனந்தா ஒரு துண்டுச் சீட்டை எடுத்து அதில் எழுதினார் - வாக்கெடுப்பு முடிவு = 63:37 (one side 27 +/- 1 , other side 15 +/- 1). அறிமுக உரையாடல்கள் முடிந்தவுடன், அவர் மாணவர்களைப் பார்த்துக் கூறினார். "நீங்க எல்லோரும் எய்ட்டி : ட்வென்டி விகித கணக்கு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் ஒரு புதிய தியரி கண்டு பிடித்துள்ளேன் அது, படித்த மக்களிடையே, எய்ட்டி :ட்வென்டி விகிதம் எடுபடாது, வேறு ஒரு விகிதம் எடுபடும். நான் அதை இங்கே நிரூபிக்கப் போகிறேன். இதோ இந்தத் துண்டுச் சீட்டில், நான் நடத்தப் போகிற வாக்கெடுப்பின் முடிவை முன் கூட்டியே எழுதி வைத்துவிட்டேன்."


"ஒரு சிறிய, எளிய கேள்விதான். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்க எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்புவீர்கள். இல்லையா? அப்படி சாதிக்க விரும்புபவர்கள் எத்தனை பேர்?"


இருபத்தெட்டுப் பேர்கள் கையை உயர்த்தினார்கள். வகுப்பில் இருந்த எல்லா (13) மாணவிகளும் + பதினைந்து பையன்களும் சேர்ந்து இருபத்தெட்டு. 


தன கணக்கு சரியாக இருந்தது என்றாலும் சுனந்தா, மீதி இருந்த பதினான்கு மாணவ மணிகளையும்  பார்த்து, "நீங்க சாதிக்க விரும்பலையா? ஏன்?" என்று கேட்டார். ஒரு மாணவனைத் தவிர மீதி பதின்மூன்று மாணவர்களும் எழுந்து, ஒரே குரலில் - 'இங்கே இருக்கற பொண்ணுங்க எல்லோரும் சாதிக்க விரும்புவதால் நாங்க சாதிக்க விரும்பவில்லை.' என்றனர்.


இதென்னடா விசித்திரமாக உள்ளதே என்று நினைத்த சுனந்தா, மீதி இருக்கின்ற ஒற்றை மாணவனை நோக்கி, "அப்போ நீ?" என்று கேட்டார்.


அந்த மாணவன் எழுந்திருந்து, அமைதியாகச் சொன்னான், " நான்தான் சாதிக்."  

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஞாயிறு 40

இந்த விடுமுறை நாளில் சும்மா படம் பார்த்து கமெண்ட் அடிச்சிட்டுப்  போய்விட முடியாது. உங்களுக்கு ஓர் எளிய படைப்பாற்றல் பயிற்சி. 

படைப்பாற்றல் பற்றிய புத்தகம் ஒன்றை சென்ற மாதம் படித்தேன். அதில், படைப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒரு நாளில் 'இரண்டே நிமிடங்கள்' செலவழித்தால் போதும் என்று எழுதி இருந்தார் அந்த நூலாசிரியர். 

ஒரு சிறிய வெள்ளைத் தாள், பென்சில் அல்லது பேனா (கலர் கிரேயான்ஸ் - இருந்தால் அதையும்) எடுத்துக்குங்க. 

நேரம் : இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். (நூற்று இருபது வினாடிகள்)
வெள்ளைத் தாளில், இங்கே காணப்படும் வழிமுறையைப் பின்பற்றி, படம் வரையுங்கள். 
START :
ஸ்டெப் ஒன்று:

ஸ்டெப் இரண்டு:

ஸ்டெப் மூன்று :

ஸ்டெப் நான்கு : (கலர் பென்சில் / பென் / கிரேயான் இருப்பவர்கள் மட்டும்)

ஸ்டெப் மூன்று / ஸ்டெப் நான்கு முடித்தவர்கள், அதை வரைந்தவரின் பெயரை, படத்தின் மீது (" Art by : ....................." ) எழுதுங்கள். 
CAMERA :
பிறகு, அந்தப் படத்தை டிஜிட்டல் காமிராவால் கிளிக்குங்கள். ( Or scan and save the image in digital format.)
ACTION :
அந்தப் படத்தை, அப்படியே, engalblog@gmail.com  என்ற எங்கள் முகவரிக்கு அனுப்புங்கள். (JPG format preferred)

ஒருவர் அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும், எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 

எல்லா படங்களும் - எங்கள் பிளாகின் சைடு பாரில் ஒரு நாளுக்கொன்றாக வெளியிடப்படும். 
குறிப்பு: இது போட்டி அல்ல. படைப்பாற்றல் பயிற்சி.
வாசகர்களுக்கு / வாசகர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்தப் படைப்பாற்றல் பயிற்சி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றோம். 

அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் வருகின்ற படங்கள் அனைத்தும் பிரசுரத்திற்கு  எடுத்துக் கொள்ளப்படும். 

சனி, 17 ஏப்ரல், 2010

ச சு கே மோ?

எல்லோரும் சிரிக்கறாங்க.

எங்களுக்கு ஞாபகம் வருகின்ற பாடல்கள்:

உன்னைப் பார்த்து ....இந்த உலகம் சிரிக்கிறது 

நாற்பது வயதில் நாய் குணம் ....

ஐம்பதிலும் ஆசை வரும் ...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது, சின்ன மனுஷன், பெரிய மனுஷன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது.

பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே 

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், இவர் சிரித்துக்கொண்டே 'அள்ளு'கின்றார் !!

ஐ பி எல் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு அள்ளுவதில் கண்ணு வையடா தாண்டவக்கோனே !

(வாசகர்களுக்கு வழக்கம் போல ஒரு கேள்வி. இந்த நான்கு சிரிப்பில் எது முதலாவது இடத்தைப் பெறுகிறது?) 

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

எங்கள் கணினி அறிவு யாருக்கு வரும்?

அந்த வாரத்தில் தன பெயருக்கு வந்திருந்த கடிதங்களை ஆவலுடன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார், அமிர்தகடேசன். வேலை கேட்டு வந்திருந்த கடிதங்கள், நலம் விசாரித்து வந்திருந்த உறவினர் கடிதங்கள், 'உடனே இதை நகல் எடுத்து ஒன்பது பேருக்கு அனுப்பாவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திப்பீர்கள்' என்று ஒரு பயமுறுத்தல் கடிதம். அன்புள்ள மாமா அவர்களுக்கு என்று ஆரம்பித்து ...... நீங்க நிச்சயம் உதவி புரிவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் .... என்று முடிந்த ஓரிரு கடிதங்கள்.

எல்லாவற்றையும் பார்த்துப் படித்துக் கொண்டே வந்தவர், ஒரு பிங்க் கலர் கடிதத்தைப் படித்ததும், பெருத்த சத்தத்துடன் சிரித்தார்.

"ஐயா இது 'எங்கள்' வங்கியின் கணினி தங்கள் சமூகத்திற்கு அனுப்புகின்ற நினைவுறுத்தல் கடிதம். தாங்களின் ஐந்து வருட கணக்குகளை ஆய்வு செய்ததில், தங்களிடமிருந்து எங்களுக்கு ௦ பூஜ்யம்  ருபாய்  ௦பூஜ்யம்  பைசா பாக்கி இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்தத் தொகையை நீங்கள் இந்தக் கடிதம் கண்ட ஒரு மாதத்திற்குள் செலுத்தவும். இல்லையேல் எங்கள் வங்கி தாங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்."

அதைக் கிழித்துப் போட்டுவிட்டு, பிறகு அதைப் பற்றி மறந்தே போனார், அமிர்து. அடுத்த வாரம், மீண்டும் அதே கடிதம், தேதி மாற்றத்துடன். அதை கிழித்துப் போடும் முன் யோசனை செய்து அதை பத்திரமாக எடுத்து வைத்தார்.

அடுத்த வாரம் மீண்டும் அதே கடிதம். இந்த டார்ச்சரில் இருந்து மீள - அமிர்து ஒரு யுக்தி மேற்கொண்டார். தன காசோலைப் புத்தகத்தை எடுத்தார். அதில் பூஜ்யம் ரூபாய் பூஜ்யம் பைசாவிற்கு ஒரு காசோலை எழுதி அதை 'எங்கள்' வங்கிக்கு குரியர் மூலமாக அனுப்பிவைத்தார். 

மறுவாரம் - மீண்டும் ஒரு பிங்க் கலர் கடிதம். ரசீது வந்திருக்கிறதோ என்று ஆவலுடன் பிரித்துப் படித்தார், அமிர்து.

"ஐயா தாங்கள் அனுப்பிய செக் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக - ஐந்து பைசாவிற்குக் கீழே உள்ள எந்தத் தொகையையும் செக் மூலமாக ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே தங்கள் கணக்கில் பாக்கி உள்ள தொகை ஆகிய பூஜ்யம் ரூபாய் பூஜ்யம் பைசாவை உடனே எங்கள் வங்கியில் நேரே வந்து கவுண்டரில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். இல்லையேல் தங்கள் மீது நடவடிக் ......"

எனவே வாசகர்களே - யாராவது ஒருவர், 'கம்பியூட்டரைக் கண்டுபிடித்தவன் யாரடா?' என்றோ அல்லது 'எங்கள்' வங்கிக்கு எந்த பஸ் போகும்?' என்றோ பற்களை நற நறத்துக்கொண்டே வந்து உங்களைக் கேட்டால், பதில் ஏதும் சொல்லாமல், அங்கிருந்து ஓடிவிடுங்கள்.     

சின்னஞ்சிறு கதை

உள்ளே போகும்போதே ஒரு கோயிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.  தம்புராவின் ஒலி சுஸ்வரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது. மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட சங்கீதப் புத்தகங்கள். சி. டி க்கள்.  சுவரில் மும்மூர்த்தியின் பிரபலமான ஓவியம்.  பாட்டு வாத்தியார் மனைவி புன்னகையுடன் வரவேற்றார். "அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று இனிமையாக சொல்லிவிட்டு உள்ளே போனார்.  அறையை ஒரு தடவை சுற்றி வந்தேன்.  மனம் ஆனந்தத்தால் விம்மியது. கண்ணீர் வந்துவிடும்போல் இருந்தது.  மாமி கையில் காப்பி டம்ளர் டபராவுடன் வந்து வினயமாக மேஜையில் வைத்து விட்டு " எடுத்துக்குங்கோ" என்று மீண்டும் மதுரக் குரலில் சொன்னார்.  மீண்டும் மும்மூர்த்தி படத்தைப் பார்த்துக் கொண்டு நின்றவாறு சொன்னேன். " இந்த வீட்டில் இருக்க அதிருஷ்டம் செய்திருக்கணும்.  சாக்ஷாத் சரஸ்வதி வாசம் செய்கிறாள் இங்கே ". இதை அவர் முகம் பார்த்து நேராகச் சொல்ல என்னை என்ன தடுக்கிறது? 

மாமி பதிலே சொல்ல வில்லை.

" நீங்க அவ கிட்டே பேசறதானா மூஞ்சியைப் பாத்து பேசணும்.  அவளுக்கு சுத்தமா காது ரெண்டும் கேக்காது "  என்று சொன்னவாறு பாட்டு வாத்தியார் பிரசன்னமானார்.  

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஐ. பி எல் அனுபவங்கள்..

சாய்ராம் கோபாலன் ஒரு முட்டிக் கால் வலி மருந்து சிபாரிசு பண்ணியிருந்தார்.  


அதை சாப்பிட வேண்டுமென்றால் முட்டி வலி இருக்க வேண்டும். அது எனக்கு இல்லையே என்ற போது டென்னிஸ் ஆடுங்கள் வரும் என்று சொல்லியிருந்தார். எனவே டென்னிஸ் ஆட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.




பையன் ஆர்வமாக ஓடிவந்தான்.

"என்னடா...என்ன ஆச்சு.." 

"கிடைச்சிடுசிப்பா...கிடைச்சிடுச்சி.."
நெட்டிலும் நேரிலும் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் ஐ.பி.எல் டிக்கெட்டுக்கு அலைந்த பையன் கடைசியில் எப்படியோ வெற்றி பெற்றான். டிக்கெட் கிடைக்காது என்று நம்பி...நிம்மதியாய் இருந்தவன் நம்பிக்கையில் மண் விழுந்தது. அட, இப்படி எல்லாம் செய்கிறார்களே என்று அங்கலாய்த்த ஐ. பி. எல்லை பையன் வற்புறுத்தல் காரணமாக நேரில் போய்ப் பார்க்க வேண்டி வந்தது. (நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட புலவன் புலிகேசி லீவில் இருக்கிறார்...)

சென்னை மற்றும் கோல்கட்டா இடையே நடந்த லீக் மேட்ச்...இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்றாலும் முன்னரே போய் விடுதல் நலம் என்று தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் ஃபோன் செய்து வற்புறுத்தியதால் மாலை நான்கு மணிக்கே கிளம்பி மைதானத்தை அடைந்தால் மனிதக் கடல்...! நீந்தி வரிசையில் நின்று ஒரு வழியாய் உள்ளே சென்று மே...லே...மேல் வரிசைக்கு சென்று அமர்ந்தோம்.

உள்ளே ஃபோன் எடுத்துச் செல்லக் கூடாது,தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லக் கூடாது என்று சொன்னார்களே என்று பார்த்தால், அதெல்லாம் ஒன்றுமில்லை, இரண்டுமே எடுத்துச் செல்லலாம் என்று விட்டு விட்டார்கள். உணவு, பெரிய வாத்தியங்களுக்குதான் அனுமதி இல்லை.

ஆனால் செல் உள்ளே எடுக்கவில்லை. யாருக்கும் பேசவும் முடியவில்லை. அழைப்பும் வரவில்லை. ("ஸ்க்ராம்ப்ளர் போட்டிருப்பாங்க அங்கிள்... நான் கூட இப்படிதான் ஏமாந்தேன்...கீழ படிக் கட்டுக்குக் கீழ போய்ப் பேசுங்க..எடுக்கும்" என்றான் பின்னாலிருந்து ஒரு எட்டு வயதுப் பொடியன்!)

எனக்கு தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!

மேலேயிருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டரில் விளையாடும் பொம்மைகள் போல விளையாட்டு வீரர்கள்...டிவியில் பார்ப்பது போல பெரிதாய்த் தெரியாததில் வருத்தம்தான்..! ஆனால் பையன் என்னமோ இது ஹசி, அது கங்குலி என்றெல்லாம் கை காட்டிக் கொண்டிருந்தான். ரசிகர்களுக்குப் பரிசு கொடுக்கும் கேட்ச்கள், மற்றும் மைக் வைத்துப் பேசுபவர்கள் எல்லாம் கண்ணில் படவில்லை.

மைதானத் துளிகள்...

மைதானத்துக்கு வெளியே எல்லா டீம் சட்டைகளும் நூற்று எண்பது ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். மேலும் தலைத் தொப்பி, ஊதுகுழல் ஆகியவையும்...

முன்னாலேயே போய் விட்டதால் சாப்பிட ஏதாவது வாங்கிதான் ஆக வேண்டும்...ஆவின் பால் கோவா கப் போல இருக்கும் கப்பில் வெஜ். பிரியாணி எண்பது ரூபாய். சுவைதான். ஆனால் காணாது.மற்ற ஐட்டங்கள் பர்கர், சிப்ஸ் என்று எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாய்!

ஜூஸ் கப் போலக் கப்புகளில் ஐந்து ரூபாய் கொடுத்தால் தண்ணீர் நிரப்பித் தருகிறார்கள்.

ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்சை தூக்கிக் கொண்டு (ஆள் வைத்துதான்..!) ஒவ்வொரு இடமாக நகர்ந்து நகர்ந்து சென்று சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஓவர் இடைவெளியிலும் குத்துப் பாடல்கள்...ஆட்டங்கள்...

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கும்போதும் ஏராள பறவைகள் மேலே பறந்த வண்ணமிருந்தன.

ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் எல்லா இடங்களையும் இணைத்து பஸ்கள் விட்டிருந்தது சிறப்பு.

வயதான தம்பதிகள் முதல் குழந்தைகள் வரை ஆட்டத்தை மிக ரசித்தார்கள். அட, நம்ம தாத்தா கலைஞர் கூட பேரனுடன் அமர்ந்து பார்த்தாராம்..எங்களுக்குத் தெரியாது மறு நாள் டிவி பார்த்துதான் இதையும், அம்பையர் இரண்டு மூன்று அவுட்கள் தவறாகத் தந்தார் எண்பது போன்ற விவரங்களும் தெரிந்தன.

அது சரி, ஆட்டம் என்கிறீர்களா? அது யாருக்குத் தெரியும்? யார் பார்த்தார்கள்..பையனைத்தான் கேட்க வேண்டும்.

முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிதானாம் சிவாஜியை பத்து முறை பார்த்தாராம். கமல் நடித்த நாயகன் பிடிக்குமாம்.

லெக் ஸ்பின் போடும்போது அதில் ஆஃப் ஸ்பின் கலந்தால் அதுதான் 'தூஸ்ரா' என்றார்.

பிடித்த கேப்டன் அர்ஜுனா ரணதுங்காதானாம். நாற்பது வயதாகியும் சிறப்பாக விளையாடும் ஜெயசூர்யாவுக்கு பாராட்டு மாலை சூட்டினார்.

ஹெய்டனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் என்று பெயர் வைத்துள்ளார்களாம். ஹெய்டனுக்கு இவர்கள் தமிழ் சொல்லிக் கொடுப்பார்களாம். ஐ.பி.எல், எதிரிகளாகப் பார்க்கும் வெளிநாட்டு வீரர்களையும் நண்பர்களாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றார்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது செல் ஒலித்தது. எடுத்தல் புதிய குரல்.."சார்! நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேசறேன்...நேத்து ஐ.பி.எல் மேட்ச் நடுவுல திரையில உங்களை டைரக்டர் பார்த்தாராம்..அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."

பையனை முறைத்தேன். அவனால்தானே இந்த புதிய வம்பெல்லாம்...!