ஜூன் 24 ..கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள். ஏன், மெல்லிசை மன்னருக்கும் இன்றுதான் பிறந்த நாள்... இருவருமே மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். ஒருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். மனதில் நின்ற பாடல்களைச் சொல்லும்போது இருவரையுமே நினைத்துக் கொள்ளுங்கள்...!
கண்ணதாசன்...மயங்க வைத்த, கலங்க வைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர். வனவாசம், மனவாசம், சேரமான் காதலி (சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது) அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற புத்தகங்கள்...
கறுப்புப் பணம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் எடுத்த தயாரிப்பாளர்...
கறுப்புப் பணம் படத்தில் கதா நாயகனாகவே, சூர்யகாந்தி, இரத்தத்திலகம், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில்...
செம்மொழி மாநாடு தொடங்கியிருக்கிறது...அவரைப் பற்றி யாராவது பேசுவார்களா?
காவியத் தாயின் இளைய மகன். "பாமர ஜாதியில் தனி மனிதன்.. படைப்பதனால் என் பேர் இறைவன்.." அவர் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு...!
"மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.."
அவர் மறைந்த பிறகு வந்த பாடல் ஒன்று..கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு.. என் காதல் கவிதைக்கு வரிகளைக் கொஞ்சம் தந்து விடு... என்ன ஏக்கம்..?
பக்தி வேண்டுமா? கிருஷ்ணகானம்...ஆயர்பாடி மாளிகையிலா, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களா...எது வேண்டும்? இல்லை கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணாவா, அல்லது கங்கையிலே ஒடமில்லையோ பாடலா, கண்ணன் வருவான் பாடலா அல்லது ராமன் என்பது பொன்னி நதி பாடலா...
நாத்திகம்....? உண்டு..."தெய்வம் என்றால் அது தெய்வம்... வெறும் சிலை என்றால் அது சிலைதான்...உண்டு என்றால் உண்டு..இல்லை என்றல் அது இல்லை..."
காதல்... கணக்கிலடங்காதது...எவ்வளவு ஒரு பதிவில் சொல்ல முடியும்..!
"(அவள்) காலையில் மலரும் தாமரைப்பூ.. அந்திக் கருக்கினில் மலரும் மல்லிகைப் பூ.. இரவில் மலரும் அல்லிப் பூ.. அவள் என்றும் மணக்கும் முல்லைப் பூ.."
ஒரு மே மாதத்தில் கெடு வைத்து முடிய வேண்டும் என்று சொல்லப் பட்ட பாடலுக்கு மே.மே என்று முடியும் வண்ணமே பாடல் எழுதினார் கவிஞர்...(இந்தப் பாடலின் இசைக்கு மெல்லிசை மன்னரை நினைத்துக் கொள்ளுங்கள்..)
"அன்பு நடமாடும் கலைக் கூடமே...ஆசை மழை மேகமே.. கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே..கன்னித் தமிழ் மன்றமே"
இது போல இன்னொரு பாடல் லா,லா என்று முடியும் படி...
"வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா... தேன் நிலா அல்ல என் தேவியின் நிலா... "
"கம்பனைக் கூப்பிடுங்கள்..சீதையைக் காண்பான்... கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்.."
முதல் காதல் தோற்றுப் போனதனால் சிறந்த கவிதைகள் படைத்தாராம்...எல்லோருக்கும் முடிகிறதா என்ன... காதலில் தோற்றுப் போவது இல்லை..கவிதை எழுதுவது...
"காலங்களில் அவள் வசந்தம்... கலைகளிலே அவள் ஓவியம்... மாதங்களில் அவள் மார்கழி...மலர்களிலே அவள் மல்லிகை... கண் போல் வளர்ப்பதில் அன்னை... அவள் கவிஞனாக்கினாள் என்னை..."
அவரது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் வாழ்வில் ஒரு பின்னணி உண்டு என்பார்கள்....எந்த அளவு உண்மையோ...நமக்கு நல்ல பல பாடல்கள் கிடைத்தன....
மனைவி பற்றி...
"ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்ததுண்டு... என் வேரென நீயிருந்தாய்.. அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..."
கணவன் பற்றி மனைவி...?
"சொல்லென்றும் மொழியென்றும் பொருள் என்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை (ஆ...ஹா...)...ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையின்றி வேறேதும் இல்லை....நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..."
காதல்...
"பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்.. பாடித் திரியும் காற்றையும் கேட்டேன்...அலையும் நெஞ்சை அவனிடம் சொன்னேன்..அழைத்து வந்தார் என்னிடம் உன்னை... இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே..."
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி... பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி...அதுதான் காதல் சன்னதி...
காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா.."
காதல் தோல்வி....
"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா..?"
காதல் தோல்விக்கு காதலியைக் கூடக் காரணமாக்க மனம் வராத காதலன்..
"மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க நேரமில்லை..இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி...ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க வைத்தான்..துவக்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...உனக்கெனவா நான் பிறந்தேன்..எனக்கெனவா நீ பிறந்தாய்... கணக்கினிலே தவறு செய்து கடவுள் செய்த குற்றமடி.."
பெற்ற பிள்ளை மறந்து விட்டால்...
"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை....
...நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா...தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா.."
தன் பிள்ளை தான் ஏழ்மை நிலையில் இருக்கும்போது பிறந்து விட்டால்...
"ஏன் பிறந்தாய் மகனே..ஏன் பிறந்தாயோ ... இல்லை ஒரு பிள்ளை என ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து என் பிறந்தாய் செல்வ மகனே.."
அல்லது ஆறுதலாக,
"பல்லக்கில் பட்டுக் கட்டி பரிசுகள் எடுத்து, பச்சைப் பவளம் முத்து மாணிக்கம் தொடுத்து, செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது.. அய்யா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது.. சொர்க்கத்தில் கட்டப் பட்ட தொட்டில்...ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இன்றி...மாளிகை மஞ்சம் கண்ட மன்னன் இன்று மாமர ஊஞ்சல் தந்தான் இங்கு.."
தத்துவம்...
"மனிதரில் நாய்கள் உண்டு... மனதினில் நரிகள் உண்டு..பார்வையில் புலிகள் உண்டு... பழக்கத்தில் பாம்பு உண்டு... நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே மானம் பண்பு நியாயம் கொண்ட மனிதனைக் காணவில்லை..."
"பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே... ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே...கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்.. அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்... உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.."
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.."
ஊக்கத்துக்கு...?
"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்... ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்..."
"பாதை எல்லாம் மாறி விடும் பயணம் முடிந்து விடும்.. மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் கலைந்து விடும்..."
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. வாசல் தோறும் வேதனை இருக்கும்..."
சற்று இல்லை நிறையவே நீளமாகி விட்டது ... என்ன செய்ய இவர் கவிதைகளையும், மெல்லிசை மன்னரின் இசையையும் கேட்டால் படித்தால்
"நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை..."