நாள் : ஆகஸ்ட் 16, 2010.
இடம் : ரங்கிரி :: டம்புள்ளா:: ஸ்ரீலங்கா
போட்டி: இந்தியா இலங்கை இடையே நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி.
வெற்றி பெற ஐந்து ரன்கள் தேவை. சாதாரண வெற்றிக்கு பதினாறு ஓவர் இருக்கிறது. கூடுதல் புள்ளி பெற ஆறு ஓவர்கள். ஒரு ஓட்டம் எடுத்து தொண்ணூற்று ஒன்பதை அடைந்த சேவாக் ஒரு ஓட்டம் எடுத்து நூறை எட்ட வேண்டும் என்று தோனி Defence விளையாடி மூன்று பந்துகளைக் கடந்த நிலை.
அடுத்த ஓவர் தொடக்கம். ரன்திவ் பந்து வீச சேவாக் ஒரு ரன்னைப் பெறும் முயற்சியில் ஆடத் தொடங்க, ஒரு சாதாரண பந்தை சங்ககாரா பிடிக்க முயலாமல் நான்குக்கு அனுப்ப, (அது intentional என்றும் சொல்ல முடியாதுதான்.. ஆனாலும் சங்கக்காரா வின் விக்கெட் கீப்பிங் தரமும், இந்த ஆட்டத்திலேயே அவர் விராத் கொஹ்லியின் கேட்ச் பிடித்ததும் நினைவுக்கு வருகிறதே) இப்போது தேவை வெற்றிக்கு ஒரு ரன். வெற்றிக்கு ஏராளமான பந்துகளும் இந்தியாவின் கையில் ஆறு விக்கெட்டுகளும் இருக்க வேறு மாதிரி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லாத நிலை. சேவாக்குக்குத் தேவை ஒரு ரன் இந்தியாவுக்குத் தேவை ஒரு ரன்.... நூறுக்கும் வெற்றிக்கும்.
அடுத்த பால் ரந்திவ் போடுகிறார். சேவாக் அடிக்கிறார். "சிக்ஸ்"...! கையை உயர்த்தி பேட்டைத் தூக்கி கொண்டாடுகிறார்...ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப் பட்டு ஒரு ரன் உதிரிக் கணக்கில் மட்டுமே சேர சேவாக் தொண்ணூற்று ஒன்பதிலேயே...
வெற்றிக்குத் தேவையான ரன் வந்த பிறகு பந்து போட முடியாது. முன்னாலேயே போட்ட பந்துதான். போடப் பட்ட பந்து செல்லாது என்றும் அறிவிக்க முடியாது. ஆட்டக் காரர் அதை ஆடுவதை தடுக்கவும் முடியாது. விளையாடினால் ஓட்டங்கள் கணக்கில் சேரத்தானே வேண்டும்... என்ன இழவு ரூல் இது..முதலில் நோ பால் அதனால் வெற்றி பெற்றாயிற்று..எனவே அதற்குப் பின் வந்த எண்ணிக்கை கணக்கில் வராது.. இந்த சூழ்நிலையில் நோ பாலை விட்டு விட வேண்டியதுதானே.. ஆறை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே...
சேவாக் மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகளில் இது திட்டமிட்டு நடந்தது என்று வலியுறுத்துகிறார். எந்த பந்து வீச்சாளரும் தனது பாலில் எதிரணி ஆட்டக் காரர் நூறு அடிப்பதை விரும்புவதில்லை என்று சொல்லி, 'ரந்திவ் நோ பாலே போடாதவர், இந்த ஆட்டத்தில் அதுவும் இயற்கைக்கு மாறாக காலை வெகு வெளியே வைத்து போட்டது யதேச்சையானது அல்ல, ஆனாலும் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே' என்று சொல்ல, குற்றச் சாட்டுக்கு கோபப் படாமல் சங்கக்காரா 'எனக்குத் தெரிந்து இல்லை,ரந்திவ் அபபடி இல்லை, வேறு யாராவது அப்படிச் சொல்லி இருக்கிறார்களா என்று விசாரிக்கிறேன்' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இரண்டு நாள் முன்பு மைதானத்தை தோனி குறை சொன்னதும் நினைவில் இருக்கும்.
ஆட்டக் காரர்கள் என்னமோ செய்து விட்டுப் போகட்டும். முன்பெல்லாம் ஆடும் போது இந்த மாதிரி சூழ்நிலை வந்தால் ஏழு ரன்கள் கணக்கில் சேர்க்கப் பட்டு இருக்கும். பேட்ஸ்மேன் கணக்கில் ஆறு சேர்ந்திருக்கும்! இந்த ரூல்,எப்போது திருத்தப் பட்டது, அது ஏன் ஆட்டக் காரர்களுக்கே தெரியவில்லை? சேவாக் கையை உயர்த்தி கொண்டாடுகிறார், சங்கக்காரா பரிசளிப்பு நிகழ்ச்சியில்,"ஓ..அப்படியா...அந்த ரூல் எனக்குத் தெரியாது...' என்கிறார். என்ன ரூலோ...யார் போட்டதோ...எப்படி இவ்வளவு நுணுக்கமாக யோசித்து பிரச்னை செய்கிறார்களோ...?!!
கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் சதத்தின் மிக அருகில் இருக்கும்போது நம்மூரு தினேஷ் கார்த்திக் ஆறு அடித்து அவருக்கு அந்த வாய்ப்பை மறுத்தது நினைவுக்கு வருகிறது.
கட்டாக்கில் கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் 99 இல் இருக்கும்போது இதே அணி ஒரு வைட் போட்டதையும் சேவாக் நினைவு கூர்ந்திருக்கிறார்..
இதை எல்லாம் பார்க்கும்போது இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
ஆட்டத்தின் இறுதிக் கட்டம். பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஆட்டம்...வெற்றிக்கு ஓரிரு ரன்களே தேவை. பாகிஸ்தான் பேட்டிங். கடைசி விக்கெட். வால்ஷ் பௌலர். அவர் ஓடிவந்து பாலை போடுமுன்னரே பாகிஸ்தான் ஆட்டக்காரர் அப்துல் காதிர் ஓடத் தொடங்குவதைக் கவனித்து கொண்டிருந்த வால்ஷ், பால் போடுவதைக் கடைசி வினாடியில் நிறுத்தி வெளியே ஓடி விட்ட அப்துல் காதிரை பார்த்து எச்சரிக்கிறார். ஆனால் ரன் அவுட் செய்யவில்லை. அசட்டுச் சிரிப்புடன் காதிர் திரும்ப வந்து நின்று கொள்கிறார். வால்ஷுக்கு ஜென்டில்மேன் ஆஃப் கிரிக்கெட் என்று பெயர் கிடைத்தது... ஜியா உல் ஹக் கூட அவரைப் பாராட்டியதாய் ஞாபகம். இந்தப் பட்டத்தால் என்ன பிரயோஜனம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
கபில் தேவ் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இதே போல சீனியர் கிரிஸ்டனை எச்சரித்தார். அவர் மறுபடி மறுபடி அதே போலச் செய்ய அவரை அடுத்த முறை அவுட் ஆக்கி விட்டார் கபில்.
அப்படியெல்லாம் ஆட்டங்களைப் பார்த்து விட்டு இப்படி ஆட்டம் பார்த்தால்... அதுக்குதான் நான் இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்கிறீர்களா சாய்... நானும் மதிப்பதில்லைதான்...ஆனால் அவ்வப்போது இம்மாதிரி ஜெம் இன்னிங்க்ஸ்களை ரசிப்பதுண்டு.
ஏற்கெனவே தோனியின் முன்னேற்பாடான மைதானம் பற்றிய டயலாக் கேட்டு ஆட்டத்தின் போக்கை வேறு மாதிரி கற்பனை செய்திருந்தேன்...!
என்னவோ போங்க....!
(தலைப்புக்கும் கட்டுரைக்கும் உள்ள சம்பந்தத்தை யாரேனும் பின்னூட்டத்தில் எழுதவும்)