வாழ்க்கை விந்தையானது. விசித்திரமானது. வாழ்வில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்தவுடன், பல நிகழ்வுகள் இயற்கையாக நிகழ்கின்றன. வாழ்க்கையே உங்களுக்கு உதவுகிறது. ஒரு நண்பனோ, உங்களுடைய உறவினரோ, உங்களுடைய பாட்டியோ, உங்களுடைய ஆசிரியரோ அல்லது யாரோ ஒருவர் உங்களுக்கு உதவுகிறார்.
ஆனால் உங்களுடைய தந்தை உங்களை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார் என்ற அச்சத்தினால் நீங்கள் விரும்புவதை செய்யவே அஞ்சினால் உங்கள் வாழ்வே அர்த்தமற்றதாகி விடும். நீங்களே காணாமற் போய் விடுவீர்கள். அச்சத்தினால் ஏதோ ஒரு வற்புறுத்தலுக்கு ஒருவர் கீழ்ப்படிந்தால் அவருக்கு வாழ்க்கை உதவுவதில்லை. இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன் என்று கூறி தெளிவுடன் நீங்கள் விரும்புவதைச் செய்தால் அற்புதமான, ஆச்சர்யமான நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நடப்பதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் விரும்புவதைச் செய்வதால் நீங்கள் பட்டினியில் வாடலாம். உங்கள் வாழ்வை நடத்துவதற்கே நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் மற்றவர்களைப் போல் வெறும் நகலாக இல்லாமல் ஒரு சிறந்த மனிதராகத் திகழ்வீர்கள். இவ்வாறு வாழ்வதே அற்புதமாகும். நம்மில் பலர் தனித்து நிற்பதற்கே அஞ்சுகிறோம்.ஆனால், அவ்வாறு தனித்து நின்றால் ஏதோ ஒன்று, யாரோ ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்பதை நீங்களே காண்பீர்கள்.
(This matter of culture - by J. Krishnamurthi)