சனி, 30 நவம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள் சென்ற வாரம்


1) அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ள  சென்னை பத்தாம் வகுப்பு மாணவி என்ன செய்தார் இப்படி பாஸிட்டிவ் மனிதராக மாற? படியுங்களேன்.
 

               
 
2) வழி தவறிய குழந்தைகள் கண்ணில் பட்டால் அல்ல, தினமும் பஸ், ரயில் நிலையங்களுக்குச் சென்று அப்படி  வரும் குழந்தைகளை உரியவரிடத்தில் ஒப்படைப்பதோடு, உரியவர் கிடைக்காத பட்சத்தில் அவர்களை இவரே படிக்கவும் வைக்கிறார்.  பால் சுந்தர்சிங் 
 
 

3) "கார் என்ன தண்ணியிலா ஓடுது?" ஓடினாலும் ஓடும்! அதற்கான மாதிரியைச் செய்து காட்டி பரிசு வாங்கியிருக்கும் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக்கும், ரேஹானும்




 
4) குழந்தையைக் காக்க கிணற்றில் குதித்த தலைமைக் காவலருக்குக் கிடைத்த பரிசுத் தொகையையும் ஊர் மக்களின் நன்மைக்காகச் செலவிடும் தலைமைக் காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன். [ஆனால் ஒரு காவலர் நீச்சல் தெரியாமல் இருக்கலாமா?]
 


 
5) புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வரும் இந்நாளில் மதுரை மாநகராட்சிப்பள்ளிப் பள்ளியில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை முருகேஸ்வரி செய்திருக்கும் முயற்சி முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய ஒன்று.
 


 
 
 
 
 
7) "ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது கட்டாயமாக இருந்தது"... குழந்தைத் தொழிலாளியாய் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியை ஆன ஏ.ராஜேஸ்வரி. 
 
 
 
8) இந்தக்கால இளைஞர்கள் சினிமாவுக்குப் போவார்கள், பீச்சுக்குப் போவார்கள், 'மாலு' க்குப் போவார்கள். வருங்காலம் நன்றாக இருக்க, பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவும் இந்தப் பாஸிட்டிவ் இளைஞர்கள் பற்றி மோகன் குமார் சொல்லியிருப்பதைப் படியுங்கள். சந்தோஷமான விஷயம்.


 
9) ஈர நெஞ்சத்தின் அடுத்த ஈரமான செயல்.



புதன், 27 நவம்பர், 2013

அலுவலக அனுபவங்கள் - ராசு



அந்த அலுவலகத்தில் ராம்சுந்தர் இடைநிலை அதிகாரி. நண்பர்களுக்குச் செல்லமாக ராசு!

அனாவசியக் கத்தல்கள், கடுகடுப்புகள் இல்லாத கலகலப்பான மனிதர். எதையும் ஒரு சிறு நகைச்சுவைப் பேச்சின் மூலம் எளிதாக்கி விடுவார்! பழகுவதற்கு இனியவர். 

மாதிரிக்கு...

"டாக்டர் என்னைத் தண்ணியடிக்கலாம்னு சொல்லிட்டார் விசு...தெரியுமா"

"என்ன ஸார்.. மாத்திச் சொல்றீங்க?"

"எனக்கு 'லோ பிபி' இருக்குன்னு உங்களுக்கு தெரியும்ல?"

"ஆமாம்..."

"நேத்து டாக்டர் கிட்டப் போனேன். 'டாக்டர் இதோ இம்மக்கூண்டு அடிச்சேன்..(கையை அளவு காட்டுகிறார்)... லைட்டா எகிறிடுச்சு...இப்போப் பாருங்க என்னோட பிபி நார்மல்னேன்"


"ம்ம்...."

"அதுக்கு என்னன்றீங்கன்னார் டாக்டர். இதோ இவ்வளவு அடிச்சா பிபி நார்மல் ஆயிடுது இல்லே... அப்புறம் என்ன இதானே மருந்துன்னேன். 'அது தப்பான பழக்கம் இல்ல'ன்னு கேட்டார் டாக்டர். உடம்பையே கெடுத்துடும்னார். நான்தான் ரொம்ப நாளா அடிக்கறேனே...ஒண்ணும் ஆகலையேன்னேன். இல்லைங்க...இது(வயிற்றைத் தொட்டுக் காட்டுகிறார்) இது (பக்கவாட்டில் தொட்டுக் காட்டுகிறார்) எல்லாம் கெட்டுப்போகும்'னார் டாக்டர். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமா போயிடும் எல்லா பார்ட்சும்னார்."

"ம்..."

"தினம் இவ்ளோதான் அடிப்பேன். இதோ பாருங்க பாட்டில்ல குறையவே குறையாதுன்னேன். சரின்னுட்டார்"

அவர் சரி என்று சொல்லும்வரை இவர் அவரை விட்டிருக்க மாட்டார். ஆளை விட்டால் போதும் என்று ஆகியிருக்கும் டாக்டருக்கு! அதுதான் ராம்சுந்தர்.

யாரோ ஒரு நண்பர் ஒரு வெளிநாட்டு விஸ்கி ஒன்றைக் கொடுத்து விட்டுப் போக, அவர் உடல்நிலை அறிந்த நட்பும் உறவும் அவரைக் கட்டுப் படுத்தினார்கள். 

"ஒருநாளைக்கு இவ்வளவுக்கு மேல குறையாது, பார்த்துக்குங்க" என்று பாட்டிலில் அளவு காண்பித்தார். ஒரு 1.5 லிட்டர் குளிர்பானம் வாங்கிக் கொண்டார். மூன்று நான்கு நாட்கள் நாள் கழித்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையவே இல்லையே என்று பார்த்து 'அலுத்து விட்டதா? நல்லாயில்லையா?' என்று கேட்டபோதுதான் உண்மை தெரிந்தது. அதில் இருந்தது வெறும் குளிர்பானம்தான். முதல் நாளே விஸ்கியை முடித்து விட்டார்! எடுக்க, எடுக்க அதில் இந்தக் குளிர்பானத்தை ஊற்றி வைத்திருந்திருக்கிறார்!


ஒருமுறை அலுவலகத்தில் ஒரு குடை கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. ஒரு வாரம் யாராவது கிளெயிம் செய்கிறார்களா என்று வைத்திருந்து பார்த்தபின் (பொதுமக்கள் வந்து செல்லும் அலுவலகம் அது) ஏலம் விடுவது என்று தீர்மானிக்கப் பட்டது! ஏலம் என்றால் அலுவலகத்துக்குள்தான்! 'சொந்த' செலவுகளுக்குத்தான்!

இதற்கு அனுமதிபெற ராம்சுந்தரிடம் சென்றார்கள். உடனே ஓகே சொல்லி விட்டார்.


ஏலம் ஆரம்பித்தது.10 ரூபாயிலிருந்து ஏலம் தொடங்கியது.  யார் என்ன கேட்டாலும் அதன்கூட ஒரு ரூபாய் ஏற்றி ராம்சுந்தர் கேட்டு கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். 35 ரூபாயில் ஏலம் நிற்க, திடீரென ராம்சுந்தர் "50 ரூபாய்" என்றார். அதற்கு மேல் ஏலம் யாரும் கேட்காததால் குடை அவரிடமே தரப்பட்டது.

அதைக் கையில் வாங்கிய ராம்சுந்தர்,"அடப்பாவி. என் குடைதாண்டா... நான்தான் மறந்து விட்டிருக்கிறேன். இப்போதான் ஞாபகம் வருது" என்றார். ஆனால் பணம் தராமல் இல்லை. அதையும் கொடுத்து விட்டார். அதுதான் ரா.சு! 
படங்கள் நன்றி இணையம்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

"...அது வயதாகி வந்தாலும் காதல்..."



'அப்பாவின் காசை மகன் செலவு செய்யுமளவு சுதந்திரம் மகன் காசை அப்பாவால் செலவு செய்ய முடியுமா'  என்ற ஒரு கேள்வியை சமீபத்தில் படித்தேன். 

உண்மைதான். அப்பா சட்டைப் பையில் கைவிட்டு 'அப்பா! 10 ரூபாய் எடுத்துக்கறேன்' என்று சொல்லும் சுவாதீனம், அப்பாக்களுக்கு மகன் பணத்தை எடுக்கும் உரிமையில் இருப்பதில்லைதான். மிகச் சில விதிவிலக்குகள் தவிர!

குழந்தைகளை வளர்க்கும் தந்தை அல்லது பெற்றோர் அந்த மகன் பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா படிக்க வைப்பதும், ஆளாக்குவதும்? எதிர்பார்ப்பு தவறாகுமா? பெற்றது உங்கள் சுகத்துக்காக, வளர்த்தது உங்கள் கடமை என்று பிள்ளைகள் போவதும் நியாயமா? இரு கருத்துகளும் உண்டு. கேட்டால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடா து என்பார்கள் சிலர். பாசம் என்பதெல்லாம் சும்மா என்பார்கள் சிலர்.

சமீபத்தில் இந்துவில் சொத்து பிரிப்பது எப்படி என்ற சட்ட ஆலோசனை சொல்லும் கட்டுரை வந்திருந்தது. சொத்து வாங்கும்போது இருக்கும் சூழ்நிலை பிற்காலத்தில் எப்படி இல்லாமல் போகிறது என்பதைச் சொல்லும் கட்டுரை. சொந்தச் சகோதரர்களாய் ஒரு வீட்டில் வளர்பவர்கள் திருமணத்துக்குப் பின் இருமனமாய் மாறும் விந்தையைச் சொல்லும் கட்டுரை. 

இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? 

நேற்று 'பக்பான்' என்ற ஹிந்திப் படம் தொலைக் காட்ச்சியில் பார்த்தேன். அரைமணி நேரப் படம் ஓடியிருக்கலாம். அதனால் நஷ்டமில்லை. இடை இடையே வரும் விளம்பரத் தொந்தரவுகள் இல்லாமல் பார்த்த படம்.
'பக்பான்' என்றால் தோட்டக்காரர் என்று பொருள் கொள்ளலாம். படத்தின்படி குடும்பமாகிய தோட்டத்தை உருவாக்கும் குடும்பத் தலைவர். 

 

வளர்ந்து ஆளான நான்கு மகன்களும் தந்தை தாயைப் பந்தாடும் கதை. ஏற்கெனவே நிறையப் பார்த்த கதைதான். தந்தையை ஒரு மகனும், தாயை ஒரு மகனும் வைத்துக் கொள்வதால் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழும் தம்பதியராய் அமிதாப், ஹேமாமாலினி. 

இன்றைய நவீன ஐ டி கலாச்சாரத்தில் ப்ராஜெக்ட்டுக்கு ரெடி செய்யும் மகனிடம் தான் உதவவா என்று கேட்கும் தந்தையிடம் சிரித்தவாறே மறுக்கும் மகன், அவர் காலத்தில் போட்டி இல்லை என்றும், இந்தக் காலத்தில் இருக்கும் போட்டி, வேகம் ஆகியவற்றைச் சொல்கிறான். அந்தக் காலத்திலும் தனது வேலையில் ஸ்ட்ரெஸ் இருந்தது என்னும் தந்தையிடம் மகன் சொல்வது ; "எப்படியோ வேலை செய்து, வீட்டைக் கட்டி, எங்களைப் படிக்க வைத்து நல்ல வேளையில் அமர்த்தியதன் காரணம் உங்கள் வருங்காலப் பாதுகாப்பை முன்னிட்டுதான்'' என்று சொல்லும்போது திகைத்து நின்று விடுகிறார் தந்தை. 



 இது மட்டுமல்ல, சாப்பாடு மேஜையில் குடும்பத் தலைவனாய் அமர்ந்த இடத்திலிருந்து மருமகள் தன்னை எழுப்பி விட்டு மகனை உட்காரவைப்பது முதல், உடைந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்ய (அதுவும் பேரன் உடைப்பதுதான்) மகனை அணுகும்போது (கொஞ்சம் நாடகத்தனமான காட்சி) மகன் அடுத்த மாதம் என்று தவணை வாங்குவது, காலை பேப்பர் வந்ததும் எடுத்துப் படிக்கும் அவரிடமிருந்து 'அவர்' பேப்பர்  கேட்கிறார், உங்களுக்கு என்ன அவசரம்? வீட்டில் சும்மாதானே இருக்கிறீர்கள்?' என்று மருமகள் அந்தப் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போவது,  இரவில் தூக்கம் வராமல் தனது அறையில் தனது கதையை பழைய டைப்ரைட்டரில் அடிக்கும் தந்தையை மருமகள் தூண்டலின் பேரில் மகன் வந்து 'இந்தக் குடும்பத்துக்காக காலையிலேயே எழுந்து, நீங்களெல்லாம் சாப்பிட சாப்பாடு செய்வது முதல் வேலை வேலை என்று மிகவும் கஷ்டப்படும் தன் மனைவிக்குத் தூக்கம் வராமல் செய்கிறீர்கள்' என்று சொல்வது வரை தந்தையின் வருத்தங்கள்... 




அந்த வீட்டில் பேரன் மட்டும் தாத்தா பக்கம். "இந்த வீட்டுக்கு மறுபடி வராதே தாத்தா" என்கிறான்.

நேரம் கெட்ட நேரத்தில் கவர்ச்சியான உடையணிந்து வெளியில் செல்லும் பேத்தியைப் பார்த்துக் கவலைப்படும் தாய் அதுபற்றித் தன் மகனிடம் சொல்ல முற்படும்போது அந்த மகன் தாங்கள் தங்கள் தந்தையால் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட கொடுமை போல தனது மகளுக்குச் செய்ய விருப்பமில்லை என்று சொல்வதோடு 6 மாதம் விருந்தினராய் வந்திருக்கிறாய்... அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்' என்கிறான். அப்புறம் சினிமாத் தனமான ஒரு காட்சியில் அந்தப் பேத்தி மனம் திருந்துகிறாள்.

6 மாதங்கள் கழித்து தம்பதியர் வீடு மாறும் கட்டத்தில் அவர்கள் திருமணநாள் வர, அதைக் கொண்டாட நினைக்கும் நாயகன் மனைவியை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே அழைத்துச் சென்று சுற்றுகிறான். ஒரு குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் இருவருக்கும் தாங்கள் பிரிந்து வெவ்வேறு மகன்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டிய கடமை அழுத்துகிறது. நாயகன் இனி நாம் அப்படிச் செல்ல வேண்டாம் என்கிறான். 

                     

அப்புறம் 'வாழ்க்கை' பாண்டியன் மாதிரி, 'படிக்காத மேதை' ரங்கன் மாதிரி ஒரு வளர்ப்புமகன். சல்மான்கான். உணர்ச்சிகரமான நடிப்பு என்று ஹஸ்கி வாய்சிலேயே பேசிக் கொல்கிறார்.  அவர் வந்து இவரது சொந்த மகன்கள் காட்டாத பாசத்தையும், மரியாதையையும் இருவருக்கும் காட்டுகிறார்.  

தன் காதல் மனைவி பற்றியும் தன் வாழ்க்கை பற்றியும்  'பக்பன்' என்ற பெயரில் நாயகன் டைப் செய்யும் பக்கங்கள் நண்பர்கள் மூலம் புத்தகமாக, பல பதிப்புகள் கண்டு இவர்களை அந்தப் புத்தகம் கோடீஸ்வரனாக்குவதும், பரிசு மேடையில் நாயகனின் உணர்ச்சிகரமான உரையுடனும் நிறைவு பெறுகிறது படம்.

மன்னிப்புக் கேட்கும் மகன்களிடம் தாய், 'ஒரு தாயாக என் ரத்தங்களான உங்களை நான் மன்னிப்பேன். ஆனால் என் கணவரின் கண்ணீருக்குக் காரணமான உங்களை அவரின் மனைவியாக மன்னிக்க மாட்டேன்' என்று பேசிச் செல்கிறார். 

இப்படி ஒரு படம் பார்த்ததனால்தான் மேலே எழுதியிருப்பவை...! 



வயதானபின்னும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்த அன்பு படத்தின் ப்ளஸ் பாயிண்ட். திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்றுதான் இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் இப்படி ஒரு கண்டிஷனைப் போடுகிறார்களா என்று (நானறிந்தவரையில்) தெரியவில்லை! இதற்குத்தான் 80 களிலேயே விசு லக்ஷ்மியை வைத்து 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் ஒரு தீர்வைச் சொல்லி விட்டார் போலும்! எப்படியாயினும் வயதான காலத்தில் கடமையைக் காரணம் காட்டி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கக் கூடாது என்பது என் கட்சி.  அந்த வகையில் படம் நன்றாக இருந்தது!

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஞாயிறு 229:: நினைவிருக்கின்றதா?

             
                      
இது சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். யார், என்ன, எங்கே விவரங்கள் பதியுங்கள் பார்க்கலாம். 
                 

சனி, 23 நவம்பர், 2013

சென்ற வார....


1) பாராட்டப் பட வேண்டிய ஹரிராம் சந்தர். கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தண்டவாளத்தின் விரிசலை ரயிலின் டிரைவர் அறியக் கூடிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்.
 


 
 


இந்தச் செய்திக்கு கல்கியில் படித்த இந்தச் செய்தியும் வலு சேர்க்கிறது.
 


 
3) மதுரை மாணவி விடுமுறை நாட்களை தனக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றிய ஆர்த்தியின் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்கும் வர வேண்டும்.
 


 
4) ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
 

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல என்று சாதித்துக் காட்டும் ஸ்ரீவித்யா.
 
 
 


 
6) இப்போதெல்லாம் தங்கள் 'கடமை'யை ஒழுங்காகச் செய்தாலே பாராட்டுதான். ஆனால், அதற்கும் மனமும், துணிவும் இருக்க வேண்டுமே... அப்படி ஒரு மனிதர், அதிகாரி கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியாளர் சந்திரசேகர் சாகமுரி.
 
 



7) சினிமாவில் மட்டும்தான் ஒரு பாடல் காட்சியிலேயே அற்புதங்கள் நடக்குமா?  நிஜத்திலும் நடக்கும். ஒரு பொண்ணு நினைச்சா...





செவ்வாய், 19 நவம்பர், 2013

சைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே!


'சைக்கிள் வண்டி மேலே' (சென்ற நூற்றாண்டில் வெளியான) முந்தைய பதிவின் சுட்டி இது ! 
     
இது இறுதிப் பகுதி. 
   
என்னுடைய பெரிய அக்காவுக்கு, நான்கு குழந்தைகள். ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன். 

மதுரை சென்றிருந்த போது, பேச்சு வாக்கில் அவர்களிடம், 'எனக்கு கேரியரில் உட்கார்ந்துதான் சைக்கிள் ஓட்டத் தெரியும்; சைக்கிளில் ஏற, இறங்கத் தெரியாது, சீட்டில் உட்கார்ந்தும் சைக்கிள் விட்டதில்லை' என்று 
கூறினேன்.  
  
அவ்வளவுதான் - அவர்கள் இருவருக்கும் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. "மாமா - நீங்க இப்படி சொல்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா? அவனவன் ஹெர்குலிஸ் கணக்கா ஹீரோ சைக்கிள் ஓட்டறான். நீங்க கேரியரில் உட்கார்ந்து ..... ஹூம். நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்க. கிளம்புங்க ரேஸ் கோர்ஸ் பக்கம். பத்து ரூபாய் கொடுங்க. ஒரு அவர் சைக்கிள் இப்பவே எடுத்து வந்துவிடுகிறோம். இன்றைக்கு நைட்டு தூங்கப் போகும்பொழுது நீங்க * எஸ் எல் ஆர் சி கே யாகத் தான் தூங்கப் போவீர்கள்" என்றனர்.  

ஆமாம், ஆமாம் உடனேயே கேட்டேன், 'எஸ் எல் ஆர் சி கே - என்றால் என்ன?' 'எஸ் எல் ஆர் சைக்கிள் கிங்' என்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஸ்டியாகப் புன்னகை புரிந்துகொண்டனர். (*எஸ் எல் ஆர் சி கே என்றால் வேறு ஏதாவது சைடு மீனிங் இருக்கா?) 

நான் பர்சைத் திறந்து, பத்து ரூபாயை எடுத்து சின்னவனிடம் கொடுத்து, "டேய் - பார்த்து ஒரு சின்ன சைக்கிளா, கேரியர் இருக்கற சைக்கிளா எடுத்து வாடா" என்றேன். "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி, சிட்டாகப் பறந்தான் அவன். 

நான் சைக்கிள் கனவுகளில், (சக்கரம் இல்லாத வெள்ளை இறக்கைகள் ஸ்லோ மோஷனில் ஆடுகின்ற சைக்கிள்கள்) மிதந்தவாறு, பெரியவனுடன்  ரேஸ் கோர்ஸ் பக்கம் சென்றேன். 
    
சின்னவன், பத்தே நிமிடங்களில் அய்யனார் கோவில் குதிரை உயரம் கொண்ட, கேரியர் இல்லாத தொத்தல் சைக்கிள் ஒன்றின் மீது ஆரோகணித்து வந்தான். அந்த சைக்கிளைப் பார்த்த உடனேயே எனக்கு 'சைக்கிள் ஓட்டுவேன்' என்று இருந்த  கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் 'புஸ்' ஆனது. 
   
"என்னடா இது? கேரியர் எங்கேடா?"

"மாமா அவர் சைக்கிளில் எல்லாம் எந்த மானமுள்ள மடையனும் கேரியர் விட்டு வைக்கமாட்டான்."

"ஏன்?" 

"அதுவா, கேரியர் இருந்தா பசங்க சிட்டுங்களை ஏத்திகிட்டு குஷாலா ரவுண்டு அடிப்பானுங்க என்று அந்த மா. மடையர்களுக்குத் தெரியும்." 

எனக்குக் குழப்பம் வந்துவிட்டது. மானமுள்ள மடையன் என்றால் யாரு? அந்த மானமுள்ள மடையர்கள் ஏன் சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர்? நான் குழம்பித் தெளிவதற்குள், சின்னவன், "இருங்க மாமா - சைக்கிள் நல்ல கண்டிஷன்ல இருக்குதா, ஆக்சிலேரேட்டர், பிரேக், க்ளட்ச் எல்லாம் ஒழுங்கா இருக்குதான்னு ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வருகின்றேன்" என்று சொல்லி, என் பதிலுக்குக் காத்திராமல், சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டான். 

அப்போ பின்னாடி யாரோ ஒருவர், சைக்கிளில் வந்தவாறு, "புலி .... புலி' என்று கத்த, திக்பிரமை பிடித்து, ஓடத் தயாரானேன். அவருடைய சைக்கிளில் கேரியர் இருந்தது. அதில் சிட்டுக்குருவிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்று ஆவலோடு பார்த்தேன். ஒரு புளிமூட்டைதான் இருந்தது. 
      
சின்னவன் பத்து நிமிடங்கள் கழித்து பிரசன்னமானான். இப்போ பெரியவனின் டர்ன். 'நாங்க  ரெண்டு பேரும் சேர்ந்துதானே உங்களுக்கு சைக்கிள் கற்றுத் தரப் போகிறோம். சைக்கிள் என்ன கண்டிஷன்ல இருக்கு என்று நானும் நல்லாத் தெரிஞ்சிகிட்டாதான் உங்களுக்குக் கற்றுத் தர சௌகர்யமா இருக்கும்.' 

பெரியவன் ரவுண்டு அடிக்கும் பொழுது சின்னவன் என்னிடம், ஒரு கேள்வி கேட்டான். 

"மாமா உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?" 

"நாலு."

"போன மாதம் உங்க தம்பி வந்திருந்தார். அவரிடம், 'உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா?"

"அப்படியா? - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." 
    
சைக்கிளும் பெரியவனும் வந்து சேர்ந்தார்கள். சின்னவன், சைக்கிளைக் கைப்பற்றி, என்னிடம், "மாமா, சைக்கிளுக்குப் பின்னாடி வந்து நில்லுங்க."
               
"ஏன்? நீ அடுத்த ரவுண்டு விடும்பொழுது, நான் அதைப் பிடித்துக் கொண்டே ஓடி வரவேண்டுமா?"

"சீச்சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சைக்கிளை எப்படி சாய்த்து வைத்துக் கொண்டு, இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்து, வலது காலை சைக்கிளுக்கு அந்தப் பக்கத்தில் எடுத்துப் போடுகின்றேன் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல நீங்களும் ஓட்டணும்."

நின்றேன். பார்த்தேன். 'ப்பூ  ... இவ்வளவுதானா. ... tan alpha = y/x கணக்கு எல்லாம் போட்டு, சைக்கிளைக் கைப்பற்றி, வலது கையால் வலது கை (ஹாண்டிலைப்) பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து .... இல்லை இல்லை இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்..... அதற்குள் காரியம் மிஞ்சிப் போய்விட்டது. சைக்கிள் என் பக்கம் சாய, நான் இடது பக்கம் விழுந்து, 'சைக்கிள் வண்டி (என்) மேலே' விழ, இடது முழங்காலில் இரண்டு இன்ச்சுக்கு சிராய்ப்பு.   
               
சின்னவன், பெரியவனிடம் "அண்ணா - மாமாவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயி, நம்ம மெடிக்கல் கப் போர்டிலிருந்து 'முழங்காலோ மை சின்' எடுத்து இவருக்குப் போட்டு விடு" என்று சொல்லி, மேலும் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றான். அப்பவே அவனுக்கு மெடிசின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. அக்கா தவிர மொத்தக் குடும்பமே மருத்துவப் பல்கலைக் கழகக் கண்மணிகள்! 
   
மருந்து போட்டுக் கொண்டு, தத்தித் தடவி மீண்டும் வீதிக்கு வந்தேன். இப்போ பெரியவனின் டர்ன். "மாமா - சென்ற முறை நீங்க சைக்கிளை சரியா சாய்க்கலை. இப்போ பாருங்க - நான் எவ்வளவு சாய்க்கிறேன் என்று ....." நன்றாகச் சாய்த்து, பெடல் மிதித்து ..... ஏறி ஓட்டிக் காட்டினான். 
            
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான், அந்த வேதாள சைக்கிளை அளவுக்கு மீறிச் சாய்த்து ஒரு உந்து உந்திவிட்டு,  மேலே என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், சைக்கிள் வலது பக்கமாக வேரற்ற மரம்போல விழ, இப்போ 'சைக்கிள் வண்டி மேலே' நான் விழுந்தேன், எழுந்தேன். வலது முழங்கையில் ஒன்றரை அங்குல சிராய்ப்பு! 
              
வீட்டுக்கு நானே போய் 'முழங்கையோ மைசின்' தேடி எடுத்து, முழங்கையில் அப்பிக் கொண்டேன். 
              
தெருவுக்கு நான் திரும்பி வந்த போது, இடது முழங்கால், வலது முழங்கை இரண்டும் 'விண் ..... விண் ...' சிச்சுவேஷனில் இருந்தன.   "இனி என்னால் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியாது. நீங்க ரெண்டு பேரும் மீதி இருக்கின்ற நேரத்தை ஆளுக்குப் பாதி நேரம் சைக்கிளை ஓட்டிவிட்டு, வீடு வந்து சேருங்கள்" என்று பெருந்தன்மையுடன் கூறி, வெற்றிகரமாக வாபஸ் ஆனேன். 
   
(* எஸ் எல் ஆர் சி கே என்றால் ஒருவேளை single leg or crooked கை என்று ஏதாவது இருக்குமோ?)       
                 

திங்கள், 18 நவம்பர், 2013

மருத்துவ அராஜகங்கள்


 
சமீபத்தில் தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை இது. எல்லோரும்  இதைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை நீங்கள் முன்னரே செய்தித்தாளிலும் மற்ற ஊடகங்களிலும் இதைப் படித்திருக்கக்  கூடும். அப்படியும் படிக்காததவர்களுக்காக இந்தப் பதிவு.


இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா.

இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள்.

சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.


ஓர் இளம் ஆராய்ச்சியாளராக உங்கள் கனவு, உங்கள் மனைவியின் கனவு, உங்கள் மனைவியின் மரணம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்… இவை எல்லாமும் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.

நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், 1985 வரை சந்தித்திருக்கவில்லை. அப்போது அனுராதா தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு முடித்திருந்தாள். அவள் தன் சகோதரனின் திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தாள். நானோ, கொல்கத்தாவில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். பொது நண்பர் ஒருவரால் நாங்கள் சந்தித்தோம். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி; நாங்கள் எங்களுக்காகப் பிறந்தவர்கள் என்றே நினைத்தோம். 1987-ல் நாங்கள் திருமணம்செய்துகொண்டோம்.

அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் இளம் தம்பதியர் பலரைப் போலவே நாங்கள் படித்துக்கொண்டே எங்கள் துறையில் நன்கு காலுன்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 1998-ல் நாங்கள் இருவரும் எங்கள் துறையில் மேல்படிப்பை முடித்தோம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த ஆய்வும் உயர் பயிற்சியும் எனது துறை. நியூயார்க்கில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘குழந்தைகள் உளவியல்’ துறையில் முதுகலைப் பயிற்சியை அப்போதுதான் முடித்திருந்தாள் அனு.

நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அதுவே தருணம். எனவே, பரபரப்பான நியூயார்க் நகரத்தை விட்டுப் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம். ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. ஆராய்ச்சி மையத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனு தனது துறையில் முழுமூச்சுடன் இறங்குவதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறு இடைவெளி விடலாம் என்று நினைத்தாள். குழந்தையோடு, புது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் கொல்கத்தா சென்று தன் குடும்பத்தினரின் ஆசியைப் பெற்றுவரலாம் என்று விரும்பினாள். எங்கள் அமெரிக்கக் கனவை நிறைவுசெய்யும் விதத்தில் எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஆனால் விதி நினைத்ததோ வேறு.

உங்கள் மனைவிக்கு என்ன நடந்தது?

எங்கள் கொல்கத்தா பயணத்தின்போது அனுவுக்கு ‘மருந்து ஒவ்வாமை’ ஏற்பட்டது. எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் அரிப்பும் தோலில் சினப்பும் ஏற்படும். அவளுடைய தோலில் ஏற்பட்ட சினப்புகள் மேலும் மோசமாகவே, நகரத்திலேயே ‘நம்பர் ஒன்’ மருத்துவரான சுகுமார் முகர்ஜியிடம் செல்லலாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அவரைப் பார்த்தோம். ‘டெபோமெட்ரோல்’ என்ற ஸ்டெராய்டு மருந்தை உடனேயே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார் முகர்ஜி. பொதுவாக, ஆஸ்துமா, மூட்டுவாதம் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து இது. 
 
உடன் விளைவை ஏற்படுத்தாமல் உடலில் மெல்ல மெல்ல ஊடுருவி நீண்ட காலத்துக்குப் பலனளிக்கும் வகையிலானது. அனுராதாவுக்கு வந்திருந்தது நீண்ட காலப் பிரச்சினை அல்ல; திடீரென்று ஏற்பட்டது; உடனடித் தீர்வு தேவைப்படுவது. முகர்ஜி அதைக் கொடுத்தார். அதுவும், தினமும் 80 மி.கி. அளவில் இரு முறை செலுத்த வேண்டும் என்றார். அந்த மருந்தின் உற்பத்தியாளர்களே 1-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 40-120 என்ற அளவைத் தாண்டாமல் அந்த மருந்து செலுத்தப்பட வேண்டும் என்றுதான் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதாவது, இயல்பாகக் கொடுக்க வேண்டிய அளவைவிட 15-50 மடங்கு அதிகமாக அனுவுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளரான நீங்கள் இதுகுறித்து எதுவும் முகர்ஜியிடம் கேட்கவில்லையா?

அது எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்? நாங்கள் முகர்ஜியிடம் கேட்டோம். அனுவைப் போன்ற பலருக்கும் இந்த மருந்தை இதே அளவில் கொடுத்திருப்பதாகவும் அந்த மருந்து எப்போதும் மாயாஜாலத்தையே நிகழ்த்துவதாகவும் சொல்லி எங்கள் கேள்விகளைப் புறம்தள்ளினார். தவிர, அன்றைக்கு முகர்ஜி போன்ற ஒருவருக்குச் சவால்விடும் துணிவு எங்கள் யாருக்கும் இல்லை. ஆனால், மாயாஜாலம் ஏதும் நிகழவில்லை. மாறாக, அனுவின் உடல்நிலை மிக சீக்கிரம் மோசமான நிலைக்குப் போனது. அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான டெபொமெட்ரோல் மருந்தை, அதுவும் அசாதாரணமான அளவில் மருத்துவர் முகர்ஜி பரிந்துரைத்ததுதான் அனுவின் மரணத்துக்கு முதன்மையான காரணம். உச்ச நீதிமன்றமும் இதைத்தான் சொல்லியிருக்கிறது.

இந்தியாவில் சட்டப் போராட்டம் மிக நீண்டது. அது உங்கள் வாழ்க்கைக் கனவையேகூட மாற்றும் என்பதையும் அறிந்திருப்பீர்கள். எந்தக் கணத்தில் சட்டப் போராட்டத்தில் இறங்க முடிவெடுத்தீர்கள்?

அனு இறந்தது குணப்படுத்த முடியாத நோயினாலோ ஆட்கொல்லி நோயினாலோ அல்ல. இன்றுவரை ‘அணுக முடியாதவர்’களாக இருக்கும் மருத்துவர்களின் பொறுப்பற்ற மருத்துவ உதாசீனம்தான் அவளுடைய இறப்புக்குக் காரணம். அவளுடைய பூத உடல் மரணமடைந்த உடனேயும் சரி; இப்போதும் சரி; அவளுடைய நம்ப முடியாத மரணத்துக்கு மாபெரும் நோக்கம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். என் அனு 1998-ல் இறந்தாள். அதற்கு 15 ஆண்டுகள் கழித்தும்கூட இந்தியாவின் மருத்துவமனைகளிலும் மருத்துவ நிலையங்களிலும் ஆயிரக் கணக்கான அனுக்கள் கடுமையான மருத்துவ உதாசீனத்தால் தொடர்ந்து இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவர் முகர்ஜி போன்ற மருத்துவர்களின் அறியாமையும் அகம்பாவமும் கலந்த கலவைதான் அவர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. தன் தாய்நாட்டில் எண்ணற்ற உயிர்கள் என்றாவது ஒருநாள் காப்பற்றப்பட வேண்டும் என்றுதான் அனு தன் உயிரை தியாகம் செய்தாள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம், இறந்துபோன என் மனைவிக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டம் மட்டும் அல்ல; மருத்துவ உதாசீனத்தின் காரணமாகவும் பொறுப்பே இல்லாத மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் காரணமாகவும் அனுவைப் போன்றே மோசமான விதத்தில் இறந்துபோன எண்ணற்ற அப்பாவி உயிர்களுக்காகவுமானது.

நீங்கள் எதிர்கொண்ட சவால்களைச் சொல்ல முடியுமா?

இந்த 15 ஆண்டுகளில் பிழைப்புக்குத் தேவைப்படும் அனைத்தையும் உதறித்தள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும், தொழில் ரீதியாகவும் பெரும் சீரழிவுக்கு உள்ளானேன். மருத்துவ ஆலோசகராகவும் பேராசிரியராகவும் (அமெரிக்கத் தரத்துக்கு) ஒரளவு நல்ல ஊதியம் கிடைத்து வந்தாலும் மாபெரும் சட்டப் போராட்டத்துக்கும் இந்தியப் பயணங்களுக்கும் ஈடுகொடுக்க வேண்டி நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் தாக்கல்செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்குச் சற்று முன்னர்தான் என் வீட்டையும் இழுத்துப் பூட்டினேன். எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த என்னுடைய ஆய்வும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால், என் வாழ்க்கையைவிட முக்கியமானதல்லவா இந்தப் போராட்டம்?

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நோயாளிகளுக்கான உரிமைகள் இந்தியாவில் எந்த வகையில் நசுக்கப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

நோயாளிகளின் உரிமைகள் இந்தியாவில் ஏட்டளவில்தான் இருக்கின்றன. பேராசை கொண்டதும் நெறிகள் அற்றதுமான மருத்துவமனைகள் கோடிக் கணக்கான அப்பாவி நோயாளிகளை வஞ்சிப்பதுதான் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் யதார்த்தம். மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாகவும் அணுகவே முடியாதவர்களாகவும் சாதாரண மக்கள் இந்தியாவில் கருதுகிறார்கள். 1980-கள் வரையிலும் இந்தப் பிம்பம் சரியாகத்தான் இருந்தது. என் தந்தையும் ஒரு மருத்துவரே. 1978-ல் அவர் சாகும் வரை அந்தப் பிம்பத்துக்கு ஏற்ற நேர்மையோடுதான் அவர் இருந்தார். 1990-க்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. மேலும் மேலும் செல்வத்தைக் குவிப்பது என்பதுதான் இந்திய மருத்துவர்களின் லட்சியமாக ஆகிவிட்டது. 
 
ஹிப்போகிரட்டின் உறுதிமொழி என்பது மருத்துவச் சமூகத்துக்குள் ஒரு கேலிப் பொருளாக ஆகிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொழிக்க ஆரம்பித்தன. பணக்காரர்கள் நினைத்தால் தங்கள் பிள்ளைகளைப் பணம் கொடுத்து மருத்துவர்கள் ஆக்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. விளைவாக, எல்லோரும் வியாபாரமாகவே மருத்துவத்தைப் பார்க்கிறார்கள். கூடவே, இந்திய மருத்துவக் கழகம், செல்வாக்கான பிற மருத்துவ லாபிகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவையெல்லாம் சேர்ந்து நோயாளிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே எந்த விதத்திலும் பரவாமல் தடுக்கத் தங்களால் என்னென்னவெல்லாம் முடியுமோ அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.

நோயாளிகளின் உரிமைகளை நம்முடைய விதிகள் எந்த அளவுக்கு மதிக்கின்றன?

இந்தியாவில் உள்ள நோயாளிகளின் உரிமைகளில் முக்கியமானவற்றுள் பெரும்பாலானவை ‘மருத்துவ நிறுவனச் சட்ட’த்தின் அடிப்படையில் மட்டும் கொண்டுவரப்பட்டவை அல்ல; இந்திய மருத்துவ ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ போன்றவற்றின் அடிப்படையிலும் கொண்டுவரப்பட்டவையும் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, அரசும் சரி ஆணையமும் சரி, இந்த உரிமைகள் திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதில் அக்கறை காட்டவில்லை; அது மட்டுமல்லாமல், இந்த மருத்துவச் சட்டங்களை மீறும் மருத்துவர்கள்/மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், ரசீதுகள் அவர் கேட்டதிலிருந்து 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ பிரிவு 1.3.2 தெளிவாகச் சொல்கிறது. இந்தியாவிலுள்ள எத்தனை நோயாளிகளுக்கு இந்த உரிமைகுறித்து தெரியும்? இந்த உரிமையைப் பற்றி அறிந்திருக்கும் ஒரு சில நோயாளிகளுக்கும்கூட அவர்கள் கேட்கும் ஆவணங்களை அகம்பாவம் பிடித்த மருத்துவர்கள் பலர் கொடுப்பதில்லை என்பதுதானே உண்மை? மருத்துவ உதாசீனத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழைத் தவிர வேறெந்த ஆவணங்களையும் மருத்துவமனைகள் தருவதில்லை. அப்படித் தந்தால்தானே மருத்துவ உதாசீனத்தை உறுதிப்படுத்த முடியும்?

இந்திய மருத்துவர்கள் ‘நோயாளிகளின் உரிமைகள்’ தொடர்பான சட்டதிட்டங்கள் குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை. இந்த உரிமைகள் மீறப்பட்டால் அதற்காக மருத்துவக் கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று மருத்துவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். பிற சேவைத் துறைகளைப் போலவே மருத்துவப் பராமரிப்பு அமைப்பும் அதன் அடிவரை அழுகிப்போயிருக்கிறது. இன்றைய இந்தியாவில், ‘நோயாளிகளின் உரிமைகள்’ என்பது நாடெங்கிலும் உள்ள ஏழை நோயாளிகளைப் பொறுத்தவரை கொடூரமான நகைச்சுவையே தவிர வேறொன்றுமில்லை.

நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்த இந்த 15 ஆண்டு காலம் ஒருவகையில் இந்திய அரசியல் சூழலிலும் முக்கியமானது. தாராளமயமாக்கல் மருத்துவத் துறையிலும் இரண்டறக் கலந்த காலகட்டம் இது. மருத்துவம் தனியார்வசம் சென்றுகொண்டிருக்கும் சூழலில், மீண்டும் பொது மருத்துவச் சேவையைக் கொண்டுவர என்னென்ன மாற்றங்கள் இங்கு நடக்க வேண்டும்?

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் மருத்துவப் பராமரிப்பு ஒவ்வொரு பிரஜைக்குமான சலுகை அல்ல; உரிமை.

உண்மையில் மருத்துவமனைகளோடு தொடர்புடைய மருத்துவர்கள்தான், பாவப்பட்ட நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் விளையாட்டில் சூத்திரதாரிகள். பரிசோதனை நிலையங்களிலிருந்து கிடைக்கும் தொகைக்காகத்தான் வெவ்வெறு பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்றே. இந்த வேட்டையில் அரசியல் கட்சிகளுக்கும் பங்கு கிடைப்பதால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைக் கண்டுகொள்வதில்லை. கொள்ளை லாபம், கட்சி நிதி எல்லாம் தனியார் மருத்துவமனைகளால் கொள்ளையடிக்கப்படும் சாதாரணக் குடிமக்களின் சட்டைப்பையிலிருந்துதான் வருகின்றன.

மருத்துவத் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக அதில் தனியார்த் துறையை அனுமதிப்பதில் தவறில்லைதான். ஆனால், அது சாதாரண மக்களிடம் கொள்ளையடிக்காமல் நியாயமான விதத்தில் செயல்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசு கடுமையான சட்டதிட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மருத்துவத் துறையைச் சீர்படுத்த வேண்டுமென்றால் மருத்துவப் பராமரிப்பு ஒழுங்கமைப்புகளில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். முக்கியமாக, தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும்.

மருத்துவப் படிப்பு கோடிகளைச் செலவழிக்கும் படிப்பாகிவிட்ட சூழலில், மருத்துவமும் கோடிகளைச் சம்பாதிக்கும் தொழிலாக மாறுவது இயல்புதானே? அப்படி என்றால், ஆரம்பத்திலிருந்தே - அதாவது மருத்துவக் கல்வியிலிருந்தே - அமைப்பில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் அல்லவா? இதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?

இந்தியாவில் தற்போது இருக்கும் மருத்துவக் கல்விமுறை மாபெரும் தோல்வியடைந்திருக்கிறது. பணக்காரக் குடும்பங்களிலிருந்து தகுதியே இல்லாத மருத்துவர்கள் உருவாவதற்குக் கச்சிதமான வழிமுறைதான் தற்போதைய மருத்துவக் கல்வி முறை. மருத்துவக் கல்வியின் தரம் 1990களில் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சி, 1990-களில் கேத்தன் தேசாயும் அவருடைய கூட்டமும் ஆணையத்தை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோதிலிருந்து துவங்கியது. அரசு தலையிட்டு ஆணையத்தின் கருப்பு ஆடுகளைக் களைந்தால்தான் மாற்றங்கள் ஏற்படும்.

உங்கள் சட்டப் போராட்டத்தின் வெற்றி உங்களுக்குத் திருப்தியைத் தருகிறதா?

மருத்துவ உதாசீனம் தொடர்பான வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு நிறைய நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ‘கடவுளர்களான’ மருத்துவர்களால் அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் எச்சரிக்கையாக நிச்சயம் இது இருக்கும். அந்த வகையில், தீர்ப்பு எனக்குப் பரம திருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்பு, சிகிச்சைகள் மேலும் விலை உயர வழிவகுக்கும் என்று மருத்துவ அமைப்புகள் கருத்துத் தெரிவிக்கின்றன. அதாவது மருத்துவ உதாசீன வழக்குத் தொடரப்பட்டு, அதன் விளைவாக செலுத்த வேண்டியிருக்கும் இழப்பீட்டுத் தொகையும் நோயாளிகளின் தலையிலேயே கட்டப்படும் என்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்திய மருத்துவக் கழகமும்கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறது. மருத்துவர்களை எந்தச் சட்டமும் தண்டிக்கவில்லை என்பதால் மருத்துவக் கட்டணம் இதுவரை குறைவாக இருந்ததா என்ன? நோயாளிகளின் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மருத்துவர்கள் நிறைய பரிசோதனைகளை இதுவரை பரிந்துரைத்தார்கள் என்று சொன்னால் ஒரு குழந்தைகூட நம்பாது. கமிஷனுக்காகத்தான் அந்தப் பரிசோதனைகளெல்லாம் என்று எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே, தனியார் மருத்துவமனைகளால் விதிக்கப்படும் கட்டணங்கள் மிகமிக அதிகமானவை, அரசின் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படாதவை. 
 
இனிமேல் மக்கள் விழிப்பாக இருப்பார்கள், நீதிமன்றமும் மருத்துவத் துறையின்மீது ஒரு கண் வைக்கும். மருத்துவர்களின் உதாசீனத்தால் அவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்கின் காரணமாக மருத்துவப் பராமரிப்புச் செலவு எகிறும் என்றால் அமெரிக்காவின் நிலைதான் உலகிலேயே மோசமானதாக இருக்கும், ஏனெனில் தவறான சிகிச்சை காரணமாக நோயாளிகள் இறந்தால் அங்கேதான் மருத்துவர்கள் ஏராளமாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த பயம் அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதே. ஏனென்றால் ‘அணுகப்பட முடியாதவர்கள்’ என்ற நிலையை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அந்த நினைப்பின் மேல் விழுந்த அடிதான் அனுராதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் காரணமாக, ஏழை எளிய மக்களுடைய உயிரின் மதிப்பு நிச்சயமாக உயரத்தான் போகிறது.

உங்கள் அமைப்பைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பீப்பிள் ஃபார் பெட்டர் ட்ரீட்மென்ட்’ என்ற மக்கள் நல அமைப்பை 2001ல் நான் தொடங்கினேன். மக்களுக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதும், இந்தியாவில் மருத்துவ உதாசீனங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதும்தான் அந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள். கடந்த 12 ஆண்டுகளாக, மருத்துவத் துறையின் உதாசீனங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி ஆலோசனைகளுக்காக இந்த அமைப்பை அணுகியிருக்கிறார்கள். 
 
எங்கள் இணையதளத்தில் ( www.pbtindia.com ) நோயாளிகளின் உரிமைகள் குறித்த முக்கியமான தகவல்களும் தவறிழைத்த மருத்துவர்களுக்கு எதிராக எப்படிப் புகார் கொடுப்பது என்பது குறித்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளம் மூலமாக நேரடியாகவும் என்னைத் தொடர்புகொள்ள முடியும். உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து எங்கள் அமைப்பு போராடியிருக்கிறது/போராடிவருகிறது. மருத்துவப் பராமரிப்பு ஒழுங்குமுறை அமைப்பிலும் நாங்கள் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2000-2001-ல் நாங்கள் தாக்கல் செய்த பொதுநல மனு முக்கியமானது. மருத்துவக் குழுக்கள் தொடர்பான சட்டம் 1956-ல் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் குழு என்ற ஒன்றே இல்லை என்ற உண்மையை முதல்முறையாக எங்கள் மனு வெளிக்கொண்டுவந்தது. 
 
நீதிமன்றம் இதை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வழக்கால், மருத்துவ ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ 8.7 மற்றும் 8.8 ஆகிய பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் ஆறு மாதங்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் (8.7) என்பதும் மருத்துவ உதாசீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாநில மருத்துவக் குழுவின் முடிவுக்கு எதிராக ஆணையத்திடம் முறையிடலாம் (8.8) என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.

உங்கள் போராட்டத்தின் தார்மிகப் பலம் எது? உங்கள் அறவழிப் போராட்டத்தின் முன்னோடி யார்?

எனது தந்தைதான் எனக்கு எப்போதும் முன்னோடி. அதே போல் இந்தப் போராட்டத்தில் பெரும் தார்மிக சக்தியாக இருந்து என் மனைவி என்னை முன்செலுத்தியிருக்கிறாள். அவளது மரணம் உடல் ரீதியான மரணம்தான். கடந்த 15 ஆண்டுகளாக எனது வழிகாட்டும் தேவதையாக அவள் என்னுடன் இருக்கிறாள்.

கல்வியறிவற்றோர் கோடிக்கணக்கானோர் இருக்கும் ஒரு நாட்டில் அரசும் சட்டமும் முழுக்க மருத்துவர்களைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பில் தனி மனிதர்கள் போராடி மாற்றங்களை முன்னெடுப்பது சாத்தியம்தானா?

சாத்தியம்தான். பொதுமக்களின் விழிப்புணர்வும் அமைதிவழி போராட்டங்களும்தான் எல்லா சமூகக் கொடுமைகளுக்கும் எதிரான மகத்தான ஆயுதங்கள். மருத்துவ உதாசீனம் என்ற சமூகக் கொடுமைக்கும் இவைதான் ஆயுதங்கள்.

 
People for Better Treatment
தமிழ் இந்து நவம்பர் 5