வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அலேக் அனுபவங்கள் 09 :: அசோக் லேலண்டில் நான் செய்துகொண்ட சில அறிமுகங்கள்.


                   
அசோக் லேலண்டில், பயிற்சி ஆண்டுகள் (அதுவரை) மூன்று ஆண்டுகள். எங்கள் (எங்கள் ப்ளாக் அல்ல) குழுவிற்கு இரண்டரையாண்டுகள் ஆக்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. அதற்குப் பின் ஒரே வருட பயிற்சிக் காலம் ஆகியது என்று ஞாபகம். 
           
எங்கள் பயிற்சி காலத்தை,  மூன்றாகப் பிரித்திருந்தார்கள். 
                   
முதல் ஆறுமாதம் இண்டக்ஷன் ட்ரைனிங் (Induction training) பிறகு ஒன்றரை வருடங்கள் இன்டென்சிவ் ட்ரைனிங். (Intensive Training) இறுதியாக சிறப்புப் பயிற்சி. (Specialisation) முதல் ஆறுமாதப் பயிற்சியில், பாக்டரியில் இருக்கின்ற எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ இருந்து, அங்கு நடப்பது என்ன, அமைப்பு என்ன நிர்வாக ஏணியமைப்பு என்ன எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்து கொண்டதை, ஒரு பருமனான வேலைக் குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் (Work Diary) பதியவேண்டும். பதிந்ததை அந்தந்த டிபார்ட்மெண்டு அதிகாரிகளிடம் காட்டி, கையெழுத்து பெறவேண்டும். பிறகு அதை பயிற்சி மையம் அதிகாரியின் பார்வைக்கு வைக்கவேண்டும். ஒரு பகுதிக்கு பயிற்சிக்கு அனுப்பினால், அந்தப் பகுதியின் பயிற்சிக் குறிப்பை, அடுத்த ஒருவாரத்துக்குள் எல்லா கையெழுத்துகளும் பெற்று, சுபம் பாடி முடித்திருக்கவேண்டும். இல்லையேல் அரியர்ஸ் கதை ஆகிவிடும். 
              
ஒருமுறை என்னையும் (மாட்டிய) மற்ற ஐந்தாறு பேர்களையும் பயிற்சி மைய தலைமையதிகாரி, கேட்பாஸ் போட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட்டார். 'போங்க, போய் மீதி இருக்கும் பகுதிகளுக்கான பயிற்சிக் குறிப்புகளை எழுதி முடித்து, நாளைக் காலை என்னிடம் கொண்டுவந்து காட்டுங்கள். அந்தந்த அதிகாரிகளின் கையெழுத்துகளை, நான் இந்த ஒருமுறை, ஆளனுப்பி வாங்கிக் கொடுக்கின்றேன். உங்கள் பெயர்களை 'பாட்ரிக்'கிடம் கொடுத்துச் செல்லுங்கள். இன்னும் ஒரு தடவை இந்தமாதிரி நிகழ்ந்தால், நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்'  என்றார். பிறகு அந்த நிலை ஏற்படாமல் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டேன்.
  
இந்த வேலைக் குறிப்பு நோட்டு, பயிற்சிக் காலம் முழுவதும் ஒரு பெரும் சுமையாக இருந்தது. இன்டென்சிவ் ட்ரைனிங் என்றால் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இரண்டு முதல் நான்கு அல்லது ஆறு வார காலம் பயிற்சி. இறுதியாக ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு வருட காலம் சிறப்புப் பயிற்சி என்று அனுப்பப்பட்டோம் என்றால், அநேகமாக அதுதான் நம்முடைய பெர்மனெண்ட் வேலைக்கான பகுதி என்று முடிவாகிவிடும். பயிற்சிக் கால அளவு, நாட்கள் கொஞ்சம் வித்தியாசப் படலாம். ஆனால் இண்டக்ஷன் / இன்டென்சிவ் / ஸ்பெஷலைசேஷன் என்னும் ஏணிப்படிகளைக் கடந்துதான் மேலே வரவேண்டும். 
         
நான் அசோக் லேலண்டில் (அப்ரெண்டிஸாக ) சேர்ந்த தேதி, 9-12-1971. வியாழக்கிழமை.   

  
அதே தேதியிட்டு வந்திருந்த குமுதம் இதழில், நான் எழுதியிருந்த ஒரு கடிதம் பிரசுரம் ஆகியிருந்தது.  ஏற்கெனவே சுயதம்பட்டம் தட்டுபவன், இதுவும் சேர்ந்துகொண்டவுடன், ஒரே குஷி. இண்டக்ஷன் ட்ரைனிங் செல்லுகின்ற பகுதிகளில், இருப்பவர்கள் யார் கையிலாவது, மதிய உணவு நேரத்தில், குமுதம் பத்திரிகையைக் கண்டேன் என்றால், உடனே அவரிடம் பேச்சு கொடுத்து, அந்தக் குமுதத்தில், எண்பத்தேழாம் பக்கத்தில், என்னுடைய கடிதம் வெளியாகியிருப்பதைக் கூறுவேன். அவர்கள் ஆர்வத்துடன் கடிதத்தையும் படித்து, என்னுடன் பேசி, நண்பராகிவிடுவார். அசோக் லேலண்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாகசீன் சர்க்குலேஷன் க்ளப் உண்டு. அந்த வாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் யார் கையில் அந்தக் குமுதம் காணப்பட்டதோ அவர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் தங்கள் நண்பர்களிடம் எனனை அறிமுகப் படுத்தி வைத்தார்கள். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட சுயதம்பட்டம், பல நண்பர்களை எனக்கு அசோக் லேலண்டில் பெற்றுத் தந்தது. 
              

புதன், 29 ஆகஸ்ட், 2012

கடவுள் காலம்


கடவுள் நம் எதிரில் வந்தால் என்ன செய்வோம்...

ஒரு பழைய ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது.


கடுமையான சிமென்ட் நெருக்கடிக் காலத்தில் வீடுகட்டிக் கொண்டிருந்த ஒருவன் உடனடியாக சிமென்ட் தேவை ஏற்பட்டு அலைந்து கொண்டிருந்தபோது எதிரே கடவுள் தோன்றினாராம். "என்ன வேண்டும் கேள் பக்தா...!" என்றாராம். யோசிக்காமல் "உடனடியாக ஐந்து மூட்டை சிமென்ட் வேண்டும் கடவுளே.." என்றானாம் அவன். 





நான் கூட அப்படிக் கேட்டிருக்கலாம். கனவா நினைவா என்று தெரியாத நிலையில்தான் அது நிகழ்ந்தது. அப்போது ஏதும் எனக்குக் கவலை - அப்போதையக் கவலை - எதுவும் இருந்ததாக ஞாபகமில்லை. வந்த உருவம் கடவுளா, காலனா, அதுவும் தெரியவில்லை. கேட்ட கேள்வியும் வந்த பதிலும்தான் 'காலனா' என்ற கேள்வியையே மனதில் உண்டாக்குகிறது. யோசித்துப் பார்த்தால் கேள்வியும் எனதில்லையோ என்றும் தோன்றுகிறது. கேட்க வைக்கப் பட்டேனோ என்னமோ....


பரீக்ஷிததுக்கு தன் நேரம் தெரிந்தது போல எனக்கும் தெரிந்து விட்டது.


'சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்'னு வசனமெழுதினார் சுஜாதா. எனெக்கென்னமோ பெரிய நரகமாயில்லை. ஏதோ எதிர்பார்த்த ஒன்று சட்டென முடிவுக்கு வந்தது போல மனதில் ஒரு வெறுமை. நிறைவு என்று அதைச் சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனால் அப்படியும் சொல்லலாம். என் சம்பந்தப் பட்ட எல்லாமும் நிறைவு பெறப்போகும் நாள் என்பதால் சொல்லலாம். புன்னகைக்கத் தோன்றியது. இந்நிலையில் புன்னகைத்தால் செயற்கையாகத் தோன்றும் என்றும் தோன்றியது. யாருக்கு செயற்கையாகத் தோன்றும்? இது எனக்கு மட்டும்தானே தெரியும்? எனக்கே என் புன்னகை செயற்கையாக இருக்க முடியுமா?


நானே எனக்குப் பகையானேன் போல, நானே எனக்கு செயற்கையாக இருக்க முடியுமா?  பல சமயங்களில் நமக்கு நியாயம் என்று நினைப்பது அடுத்தவருக்கு நியாயம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லையே... அப்போது நான் சரி என்ற எண்ணம் எனக்குள் நான் ஏற்படுத்திக் கொள்ளும்போது என்னை, என் மனசாட்சியை நான் ஏமாற்றி செயற்கையாகத்தான் இருந்திருப்பேன்....


செய்ய வேண்டிய கடமை என்று ஏதுமில்லை என்று நினைக்கிறேன். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து பேரனும் பார்த்தாயிற்று. மனைவி எப்போதோ விடைபெற்றுச் சென்று விட்டாள். அதற்காக எனக்கு நீங்கள் எழுபது, எண்பது என்றெல்லாம் வயது கணக்கு போடக் கூடாது. அறுபதைத் தொடப் போகிறேன். அவ்வளவுதான். இருபத்தொரு வயதில் திருமணம். சென்ற வருடம் பேரன் பார்த்து விட்டேன். மகள் திருமணத்தையும், பேரனையும் பார்க்க மனைவிக்குக் கொடுத்து வைக்கவில்லை. 




வாழ்வில் பெரிய வருத்தம் ஏதுமில்லை. அவ்வப்போது சமையல் எரிவாயு கிடைக்கவில்லை, செல்லுக்கு டவர் கிடைக்கவில்லை, நினைத்த நேரத்துக்கு பஸ் வரவில்லை போன்ற சாதாரண குறைகள்தான். அப்படியே யோசித்துப் பார்க்கும்போது பெரிய சந்தோஷம் என்றும் கூட ஏதும் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு என்று ஏதும் இல்லாததால் ஏமாற்றம் ஏதும் இல்லை.  'இது நடக்க வேண்டும் என்று இருக்கிறது என்பதால் இவையெல்லாம் நடக்கிறது' என்கிற எண்ணம் மனதில் பதிந்து விட்டதால் வருத்தங்களும் சந்தோஷங்களும் நிலைத்து நின்று பாதித்ததில்லை.

அதே நிலைதான் இப்போதும். மரணம் எப்போது என்று தெரிந்து விட்டாலும், எந்த வகையில் வரும் என்ற கேள்வி மட்டும் மனதில்.


நிதானமாகச் செயல்பட்டேன். இருக்கும் ஒரு வீட்டையும் இரண்டு மனைகளையும் யாருக்குச் சேர வேண்டும் என்று எப்படி எழுத வேண்டுமோ அபபடி எழுதி வைத்தேன். கிரெடிட் கார்டை சரண்டர் செய்தேன் புதிதான ஒன்றுக்கு அவசியமில்லையே..! வங்கிக் கணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
எவ்வளவு பணம் இருக்கிறதோ அதைப் பிரித்து பங்கு வைத்தேன். என்னிடம் போதுமான அளவு வைத்துக் கொண்டு மிச்சத்தைத்தான் பிரித்தேன். இருக்கும் வரை சாப்பிட வேண்டுமே... பீச் சென்று மணலில் அமர்ந்து மக்களையும், கடலையும் பார்க்க வேண்டும்...மிளகாய் பஜ்ஜி சாப்பிட வேண்டும். பாசந்தி சாப்பிட வேண்டும். வருத்தமும் சந்தோஷமும் இல்லையென்றுதான் சொன்னேன். ஆசை இல்லையென்று சொல்லவில்லையே...! ஆசை யாருக்குத்தான் இல்லை? ஆனால் என்னுடைய ஆசைகள் எல்லை மீறாதவை. என்னுடைய எல்லை எதுவென்று எனக்கும் என் கனவுகளுக்கும் தெரிந்திருந்தது. 

இதோ, இன்றோ நாளையோ... இன்று என்றுதான் நினைத்திருந்தேன். பேசிய நாளைக் கணக்கில் சேர்க்கா விட்டால் நாளை..! இதுவரை முடிவுக்கான எந்த அறிகுறியும் தெரியாததால் இந்த கணக்குக் குழப்பம். திடீரென ஒரு மாசிவ் அட்டாக் வருமோ...!


கையிலிருந்த புத்தகத்தை மூடி மேஜையின் ஓரமாக வைத்தேன். தலை பாரமாக, கண்கள் எரிச்சலில் சூடாக இருப்பது போலத் தோன்றியது.


அப்படியே மேஜையில் கைவைத்துத் தலையை கைகளுக்கும் புதைத்தபோது கைகள் காட்சிக்குப் பக்கத்தில் இருக்க, என் கைகளை நானே வெளியாள் போலப் பார்த்தேன். உணர்ச்சியற்று, உபயோகமற்று போகப்போகும் கைகள்...  மேஜையின் மேலே கைகளை அப்படியே நீள வாக்கில் கிடத்தினேன். 'இப்படித்தான் ஆடாமல் இருக்கும்...' கொஞ்ச நேரம் அசையாமல் இருந்து, எந்த அவயங்களையும் அசைக்காமல் மரணமாக வாழ்ந்து பார்த்தேன். மறுபடியும் புன்னகைக்கத் தோன்றியது. எல்லோரும் கடந்த காலங்களைத்தான் மறுபடி தன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து பார்ப்பார்கள். நான் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை வாழ்ந்து பார்க்கிறேன். நானே கடந்த காலமாக மாறப் போவதைத்தானே செய்து பார்க்கிறேன்?


மரணத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா? என்ன முரண்?


இப்போது எழுந்து அருகிலிருந்த கட்டிலில் கால்கள் நீட்டிப் படுத்துக் கொண்டேன். கைகளை வயிற்றின் நடுவில் க்ராஸ் அமைத்தேன். தலையை நிமிர்த்தி ஒரே சீராக வைத்து மூச்சை நிறுத்தி, இல்லை, இல்லை, அடக்கி கூரையை வெறித்தேன். கண்கள் மூடியிருக்க வேண்டுமோ...?


மூட முடியவில்லை. அறையின் மேற்கூரையில் விளக்கணைத்தால் நட்சத்திரங்கள் தெரியும் அழகிய ஆகாயம் தெரியும் வண்ணம் அந்த விசேஷ பெயின்ட் அடிக்கப் பட்டிருந்தது. கண்களை மூடாமல் அந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடியே, மேகக் கூட்டங்களின் நடுவே நட்சத்திரங்களை ஒதுக்கியபடி எல்லையில்லா காலப் பயணத்தில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் பயணம் செய்தேன். கற்பனையில் பயணத்தை எங்கு நிறுத்துவது என்று குழப்பம் ஏற்பட்டது. அதைப் பற்றி நிச்சயமான ஒன்றாக எதுவும் இதுவரைப் படித்ததில்லை! வானில் இரண்டு பங்களாக்கள் சொர்க்கம் ஒன்று நரகம் ஒன்று என்று இருப்பது போலக் கற்பனை செய்ய முடியவில்லை.




அப்படியே நிறுத்தினாலும் எந்த வீட்டில் இறங்குவது என்று முடிவு செய்வது யாராக இருக்கும்? பாவம் எது புண்ணியம் எதுவென்று ஒரு பொது நீதியாக நமக்குள் பேசிக் கொள்வதுதானே... சொர்க்கம் என்று நினைத்துக் கொண்டிருப்பதே நரகமாகி விட்டாலும் என்ன செய்வது?  வெளியில் ஓடித் தப்பிக்க முடியுமா? மாற்றலுக்குக் கேட்க முடியுமா? எனில், யாரிடம்?




வேண்டாம், இந்தக் கற்பனை. ஒதுக்கி விட்டு பயணத்தையே சுற்றிச் சுற்றித் தொடர்ந்தேன். சுற்றி வந்தால் அடுத்து ஜனிக்கக் காத்திருக்கும் ஒரு புதிய உயிருக்குள் புகுந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வந்தது.


கண்களைத் திறந்து வைத்திருந்திருக்கக் கூடாது. மூடியிருந்திருக்க வேண்டும்.  திறந்தே இருந்து,  வானம் கற்பனைக் காட்சிக்கு அகப்பட்டதால்தானே பயணக் கற்பனை?  கண்களை மூடிக் கொண்டிருந்திருந்தால் யோசனை ஏதுமின்றி பிணம் போலவே படுத்திருந்திருக்கலாம்.


சிக்கலான கற்பனையை சிக்கலான வார்த்தையமைப்புகளோடு கற்பனை செய்வதாகத் தோன்றியது. இதுவும் எனக்குத் தேவையா இல்லையா என்று முடிவெடுக்கத் தெரியாததால் கற்பனையை மனச் சேமிப்புக் கிடங்கில் அந்த அளவில் சேமித்து, கற்பனை நீக்கி எழுந்தேன்.


இத்தனை நாட்களுமே நாட்களும் நேரமும் மெல்லத்தான் நகர்ந்தன. வேகமாக ஓடியதாகக் கற்பனை செய்ய வேண்டுமானால் எனக்கு மரணபயம் இருக்க வேண்டும். மரண பயம் எப்போது வருகிறது? ஆசைகள் தீராத போதா, கடமைகள் தீராத போதா? ஆசைகள் சுயநலத்தோடும், கடமைகள் பாசங்களோடும் பிணைக்கப் பட்டவை. பாசங்களை அனுபவங்கள் அறுக்கின்றன. நீக்குகின்றன. நம்மால் இருந்த உபயோகம் தீர்ந்த போது நம்மை நாடி வருபவர்கள் யாருமில்லை. அயல் மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஆக்கூட்டம் போல உடன் அதே நிலையில் பயணிக்கும் மாக்களே நம் துணை. அதுவும் வழித்துணைதான்.


என்னால் எந்த பயனும் என் உறவுகளுக்கு இல்லை என்றறிந்து நான் ஒதுங்கித்தான் இருக்கிறேன். அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அவர்கள் மேல் குறையுமில்லை. அவர்களுக்கு என் மேல் மலையளவு குறையிருக்கலாம். என்னைப் போல அவர்களும் குறையற்று இருக்க வேண்டும் என்று கட்டாயமுமில்லை.


துணிகளை ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தானம் செய்தேன். பாத்திரங்களை ரக வாரியாக அடுக்கி மேலே வைத்தேன். சுய சமையல். தேவைக்கு மட்டும் அளவாக பாத்திரங்கள் கீழே வைத்தேன். புத்தகங்களைச் சீராக அடுக்கி வைத்தேன். வீடு குப்பைக் கூளம் இல்லாமலும், அடைசல் இல்லாமலும் சீராக வைத்தேன். 


 
எதைச் செய்தாலும் என் நேர்த்தியைப் பற்றிப் பேசுபவர்கள் இதையும் பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை அப்படிப் பேச வேண்டும் என்று கூட நினைத்துச் செய்தேனோ என்னமோ....  இருந்தாலும் தப்பில்லையே....!

ஏதோ ஊருக்குக் கிளம்புவது போல உணர்ந்தேன். ஊருக்குக் கிளம்பினால் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்! நான் யாரிடம் போய், என்னவென்று சொல்ல? நம்புவார்களா என்ன?  ஆனால் ஒன்று மரண வீட்டில் சொல்லாமல்தான் கிளம்ப வேண்டும் என்று சொல்வார்களே... "வூட்ல சொல்லிக்கினு வந்தியா..." ஏதோ சாலைப் போக்குவரத்தில் எப்போதோ கேட்ட ஏதோ ஒரு வாகன ஓட்டியின் குரல் காதில் ஒலித்தது. மறுபடியும் புன்னகை வந்தது. ரொம்பத்தான் புன்னகைக்கிறேனோ....!


கருடபுராணம் கண்ணில் பட்டது. 'படிக்க வேண்டிய காலம்' போட்டிருந்தது. ஏற்கெனவே படித்ததுதான். இப்போதே படித்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டே அடுத்து இருந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துப் புரட்டினேன். காலக் கணக்குப் பற்றிப் போட்டிருந்ததில் கண்கள் நின்றன.


இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம்.  அறுபது நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பக்ஷம். 2 பக்ஷங்கள் (வளர்பிறை, தேய்பிறை) ஒரு மாதம். 6 மாதங்கள் ஒரு அயநம். இரண்டு அயநங்கள் (உத்தராயணம், தட்சிணாயனம்) ஒரு ஆண்டு. இது மனிதர்களின் காலக் கணக்கு.


மனிதர்களின் ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.....


படித்துக் கொண்டே வந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கடைசி வரி மின்னலடித்தது. அன்று நடந்த உரையாடல் மறுபடி நினைவுக்கு வந்தது.




'என் கணக்குக் கேட்கிறாயா? உன் கணக்குக் கேட்கிறாயா?'

'என் காலமுடிவுக்கு உன் கணக்கைத்தான் கேட்கிறேன்...'


'பதினைந்து நாள்...'


படங்கள் உதவி : நன்றி இணையம்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 19/8/12 To 25/8/12

           
எங்கள் B+ செய்திகள்! 
    
-விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
    
-கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
            

-தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
              

-நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.  

சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!  
         
ஞாயிறு   


கே கே நகர் ஆற்காடு சாலையில் அனாதையாகக் கிடந்த இரண்டாயிரம் ரூபாய்ப் பணத்தை தனியார்க் கல்லூரி மாணவிகள் கிருத்திகா, ஜூலியன் ஷாலினி இருவரும் (எவ்வளவு பணம் என்று எண்ணிப் பார்க்காமல்) அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

----------------------------------

அசாம் கலவரத்தில் அம்மாநில மக்கள் ஊர் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று சொன்ன தமிழக அரசு அம்மக்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு காவல் துறையை முடுக்கி விட்டிருந்தது. போலீசார் கனிவாகப் பேசுகிறார்களா என்பதை ஒரு வேற்று மாநிலத்தவர் போல குரலை மாற்றிப் பேசி, சென்னை  டி ஜி பி  ராமானுஜம் சோதனை செய்து,  கனிவாகப் பேசிய சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு ரமணி இருவரையும் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசுப் பணமும் கொடுக்கப்பட்டது.   
-----------------------------------------

திங்கள்

மாட்டுக்குக் கொம்பு சீவும், வர்ணம் பூசுவோர் ஒருநாளைக்கு 2,500 To 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். என்ஜினீரிங் படித்து விட்டு சம்பாதிப்பதை விட இது அதிகம்தான் என்கிறது தினமலர்.
-----------------------------------           
                  

படிக்க வாய்ப்பில்லாதோருக்கு இரவில் சொல்லிக் கொடுக்கப்படும் பள்ளியில் படிக்கச் சென்ற சிறுமி தானே மேலும் சில சிறுமிகளை சேர்த்து சாதனை செய்துள்ளார். இடம் புளியந்தோப்பு சாஸ்திரி நகர். சிறுமி பெயர் லக்ஷ்மி.      
---------------------------------------

செவ்வாய்  

வெயிலில் ஒரு மூதாட்டி இறந்ததைக் கண்ணால் கண்ட, விருதுநகருக்கு அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்த வெற்றிலை வியாபாரி தலைமலை கடந்த இருபது ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மரக்கன்றுகளை வைத்து, வளர்த்து, பராமரித்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி குஜராத், தமிழக அரசுகள் விருது வழங்கியுள்ளன. வருமானத்தில் பாதியை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு செலவிடுகிறார். தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக, ஒரு தோட்டத்தை அமைத்துள்ளார்; அருகில் 120 மரக்கன்றுகளையும் பராமரித்து வருகிறார். மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறார். 93632 62808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   
-----------------------------------------

சென்னை எழிலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16 - ம் தேதி அதிகாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் உள்ளே நுழைந்து கோப்புகளை பாதுகாக்க முயல, எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கி உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உடன் இருந்த அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் கோட்ட தீயணைப்பு அதிகாரியான இவர், இன்று வரை தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் பிரியா ரவிச்சந்திரனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு ஜனாதிபதி விருது கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.          
---------------------------------------------

வியாழன் 



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவுவதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருக்கிறார் ராமு. பொதுவாக பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், நட்பு, உறவு என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டு தன்னைச் சுருக்கிக் கொண்டுவிடுபவர்களே அதிகம். இவரோ, வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபிறகுதான் சமூகப் பணிகளில் இளைஞரின் ஆர்வத்தோடும் வேகத்தோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். "தாய் இல்லம்' சமூக சேவை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் தாய் உள்ளத்தோடு சமூகப் பணிகளை ஆற்றிவரும் ராமு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, தச்சம்பட்டு என்ற சிறிய கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து, சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மு.வ., மற்றும் அன்பழகனாரிடமும் படித்து 1957-ல் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் தற்காலிக ஊழியராகச் சேர்ந்து, படிப்படியாக பதவி உயர்வு பெற்று, உதவி தலைமை மேலாளராகி 1994-ல் ஓய்வு பெற்றவர். 
               
இரண்டு கண்களும் தெரியாத, டாக்டர் வில்லியம் டேவிட் என்பவர் வண்டலூரில் நடத்திவந்த சமூக சேவை நிலையத்தில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு பல சேவைகளை அவருடன் சேர்ந்து செய்து, அவரின் மறைவுக்குப் பின், அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, சுமார் ஓர் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அந்த சமூக சேவை மையத்தில் அனாதை குழந்தைகள் பராமரிப்பு, 200 குழந்தைகள் படிக்கும் பள்ளி பராமரிப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி செய்தல், இலவச கணினிப் பயிற்சி போன்ற சேவைகளைச் செய்து, தன் தொடர்ச்சியாக "தாய் இல்லம்' சமூக சேவை அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தை சென்னை, அண்ணாநகரில் கடந்த 2005-ஆம் ஆண்டு பதிவுசெய்து, அதன் சேவை மையத்தை திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடத்தி வருகிறார்.   
----------------------------------------------
வெள்ளி    
 

மூத்தோர் சர்வதேச தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட திருத்தணியை சேர்ந்த 86 வயதான பி.நடேச ரெட்டி 4 தங்கப்பதக்கத்தை வென்று அசத்தி விட்டார்.. 85 முதல் 89 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற அவர் சங்கிலி குண்டு எறிதலில் 8.98 மீட்டர் தூரம் வீசி முதலிடமும், வட்டு எறிதலில் 19.50 மீட்டர் தூரம் எறிந்து முதலிடமும் பெற்றார். இதே போல் குண்டு எறிதல் (7.10 மீட்டர்), ஈட்டி எறிதலிலும் (15.90 மீட்டர்) அவரை யாராலும் முந்த முடியவில்லை. சாதனைகளுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வரும் நடேச ரெட்டி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 65 பதக்கங்களை குவித்துள்ளார். தமிழக அரசின் சிறந்த விளையாட்டு வீரர் விருதினையும் பெற்றிருக்கிறார்.   
                 
உடலில் தெம்பு இருக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறும் நடேச ரெட்டி தற்போது திருத்தணியில் உள்ள தளபதி கே.வினாயகம் மெட்ரிக் பள்ளியில் கைப்பந்து பயிற்சியாளராக உள்ளார்.  (முகப் புத்தகத்திலிருந்து)    
----------------------------------------------------

சனி

திருப்பூர் ஊத்துக்குளி ரோட் ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த 75 வயது வேம்பு-அரச மரம் வேரோடு பெயர்க்கப் பட்டு கண்டெயினரில் எடுத்துச் செல்லப் பட்டு நிப்-டீ கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. (தினமலர்)  
----------------------------------------------------

காற்றாலைகள் வேகத்தால் மின்வெட்டு கொஞ்சம் குறைக்கப் பட்டுள்ளதாம்.(தினமலர்)
----------------------------------------------------

இளைய கலைஞரின் இனிய முயற்சி...
          
இரண்டு நாட்கள் முன்பு நடந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஓயரிவில் பாடிய கவுதமின் பாடல் பகிர்வு. வாசகர்களுக்கு மூன்று கேள்விகளில்,  தான் சமீபத்தில் கண்கலங்கிய அனுபவமாக ஹாரி பாட்டர் குறிப்பிட்டிருக்கும் பாடலும் இதுவே! கேட்டு அழவும்!


                     

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 08


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 

இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...



1) நீங்கள் அழுது விட்டேன் என்று சொல்லக் கூடிய, அல்லது அழுகையே வந்தது என்று சொல்ல நேர்ந்த ஒரு சந்தர்ப்பம் ஒன்றைச் சொல்லுங்களேன்....
[உள் பெட்டியில் குழந்தையின் டைரிக் குறிப்பைப் பார்த்து அழுது விட்டேன் என்று சொல்லக் கூடாது!!  :)))...]

2) பிறரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் என்ன? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன?


3) ஐ.க்யூ அதிகம் இருப்பவர்களுக்கு பொதுவான குணங்கள் உண்டா?
(இது சுஜாதாவிடம் கேட்கப் பட்ட கேள்வி. அடுத்த பதிவு வெளியிடப் பட்டவுடன் சுஜாதா இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தருகிறேன் - அதுவரை யாரும் இந்தக் கேள்விக்குத் தங்கள் பதிலுடன் இதையும் சொல்லாவிட்டால்! )

புதன், 22 ஆகஸ்ட், 2012

உள் பெட்டியிலிருந்து - 8 2012

நன்றி சொல்லும் நேரம் 


உங்களைப் புண்படுத்தியவர்களுக்காகக் கண்ணீர் சிந்தாதீர்கள். அவரை விட சிறந்த நண்பனைத் தேடும் வாய்ப்பு தந்ததற்காக நன்றி சொல்லுங்கள்.

===========================

பழசுதானோ..
 

நின்றால் மரமாக நில்லுங்கள். விழுந்தால் விதையாக விழுங்கள்.

=============================
புரிகிறதா... 
 

மகன்...திருமணமாகும் வரை.
மகள் கடைசி வரை.

=========================

பாடம்
 

தவறான மனிதர்கள்தான் சரியான பாடத்தை புரிய வைக்கிறார்கள்.

===========================

ஸோ பொசசிவ்...
 

அவன் அன்பு 
என்னைக் கொல்கிறது...
குறிப்பாக அது 
மற்றவர்கள் மேல் 
எனும்போது.

=========================
 

LKG பொண்ணு.: "டாய்...! எங்க அப்பாவுக்கு IG வரைக்கும் தெரியும்...என் கிட்ட வாலாட்டதே..."
 
UKG பையன் : "எங்கப்பாவுக்கு Z வரைக்கும் தெரியும்..... போடி..."

========================
 
 
இங்க்லீஷ் டீச்சர் : "ஒரு காம்பவுண்ட் செண்டன்ஸ் சொல்லு"
 
மாணவன் : "இங்கு சுவரில் நோட்டிஸ் ஒட்டக் கூடாது"
 
=======================

ஒரு குழந்தையின் டைரி...
 
 
ஜூலை 15 ; ஓவரியுடன் இணைந்தேன்.
ஜூலை 17  நான் இப்போது ஒரு திசு.
ஜூலை 30  அம்மா அப்பாவிடம் சொன்னால் சந்தோஷமாக "நீங்க அப்பாவாகப் போறீங்க" 
அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
ஆகஸ்ட் 30 : அம்மா சாப்பிடுவதுதான் எனக்கும் உணவு.
செப்டம்பர் 15 : என் இதயத் துடிப்பை என்னால் உணர முடிகிறது.
நவம்பர் 16 : இப்போது எனக்கு சின்னச் சின்னதாக கைகள், கால்கள், மற்றும் வயிறு.
டிசம்பர் 15 : இன்று எனக்கு அல்டிராஸ்கேன்.அய்யா நான் ஒரு பொண்ணு.
ஜனவரி 1 : நான் செத்துப் போனேன். அப்பாவும் அம்மாவுமே என்னைக் கொன்று விட்டார்கள். நான் பெண் குழந்தை என்பதால்... நான் என்ன தவறு செய்தேன்? தாயை, மனைவியை, சகோதரியை ஏன் பெண் நண்பியைக் கூட நேசிக்கும் மனிதன் ஏன் மகளைக் கொல்கிறான்.... சொல்லுங்கள்...
 
 

==================================

படங்கள் : நன்றி இணையம்.
 

சனி, 18 ஆகஸ்ட், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 12/8/12 To 18/8/12

எங்கள் B+ செய்திகள்! 
    
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்

தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்

நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.  

சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!   
 
ஞாயிறு   (12.8.2012)




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் முதியோர், ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை. இவரின் சேவைக்கு இவர் மனைவியும் (ஜோதிலட்சுமி) எதிர்ப்புச் சொல்லாமல் உறுதுணையாய் இருப்பது சிறப்பு. ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை வாழ்த்துகின்றனர். (முகப் புத்தகத்திலிருந்து)
***************
புதுடில்லி: மேற்குக் கடற்கரையில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் கூறியுள்ளது. இதன் மூலம் தங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
*********************
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் ஜோதி ரெட்டி பத்தாம் வகுப்பு வரை முடித்தவர். வறுமையைச் சமாளிக்க தினக்கூலி ஐந்து ரூபாய்க்கு வாழ்க்கையை ஓட்டத் தொடங்கியவர், எண்பத்தொன்பதாம் ஆண்டு மத்திய அரசின் நேரு யுவகேந்திரா திட்டத்தின் இரவுப் பள்ளிகளில் ஆசிரியையாக வேலை பார்க்கத் தொடங்கி, நின்று போன தனது கல்வியையும் தொடர்ந்து, பி ஏ முடித்து அரசு ஆசிரியையாகவும் ஆனவர், அமெரிக்காவில் வேலை பார்த்த சக பணியாளர், மற்றும் உறவினர் மூலம் அமெரிக்கா சென்று வீடியோ கடையில் பணியாற்றி, விசா தொடர்ந்து கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் நாடு திரும்பி, மறுபடி தினக் கூலியாகி மறுபடியும் விசாவுக்கு அலையாய் அலைந்திருக்கிறார். அதில் ஏற்பட்ட அனுபவத்தினால் ஏற்பட்ட திடீர் யோசனையால் விசா ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றையே தொடங்கி, (கீஸ் ஸாஃப்ட்வேர் சொல்யுஷன்ஸ்) அதிலிருந்தும் முன்னேறி மென்பொருள் மேம்பாடு, வேலை தேடித் தரும் நிறுவனம் என்று எல்லைகளை விரிவாக்கி... ஆக இன்று அவர் அமெரிக்காவின் கீஸ் ஸாஃப்ட்வேர் சொல்யுஷன்ஸ் நிறுவனத்தின் சி இ ஓ. (தினமணி ஞாயிறு மலர்)
*********************
ஏழுமலை. பார்வையற்ற மாற்றுத் திறனாளி. மிருதங்கம் கற்றவர். 2005 ல் அன்றைய முதல்வர் இவர் பெயரில் 2.5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்திருந்த உதவிப் பணத்தைப் பெற அலைந்தபோது வெல்ஃபேர் டிபார்ட்மென்ட்டில் இருந்த அதிகாரி 'குருடனுங்க ஃபைல் இருக்கா' என்று கேட்ட வார்த்தையில் கொதித்துப் போய், போராடத் தொடங்கியவர், இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவுவதற்கான   அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். ரெயில்களில் சிறு பொருட்கள் விற்பனை செய்யும் மாற்றுத் திறனாளிகளின் கஷ்டம் அறிந்துகொள்ள, இவரும் அதே போலச் சென்று விற்பனை செய்து மாற்றுத் திறனாளிகளிடம் அபராதம் என்ற பெயரில் வசூல் செய்யப்படும் நூற்றைம்பது ரூபாயை நிறுத்த வைத்திருக்கிறார்.  (தினமணி ஞாயிறு மலர்)  
**********************
திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் முத்துராமன் என்ற இளைஞர் சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிள் ரிக்ஷா ஒன்றைக் கண்டு பிடித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.சூரிய சக்தி, பேட்டரியால் இயங்கும் இதை மிதிவண்டியாகவும் பயன் படுத்தாலாம். மணிக்கு 45 கிலோமீட்டர் வரை இயங்கும் இதன் உற்பத்திச் செலவு 50,000 ரூபாயாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை இயக்கலாமாம். சென்னை நகர்ப்புறங்களில் மாற்றுத் திறநாளிகள், முதியோர், பள்ளிக் குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க ஐம்பது வாகனங்கள் இயக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. (தினமணி)
***********************
திங்கள் (13.8.2012)
            
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள், வேண்டுதல்கள் அனுப்ப இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது. முகவரிதான் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு செய்யப் படும் புகார்கள் சம்பந்தப் பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதன் அவ்வப்போதைய ஸ்டேடஸ் கூட தெரிந்து கொள்ளலாம். செல்ஃபோன் எஸ் எம் எஸ் மூலம் கூட இந்த வசதியைப் பெறலாம்
****************************  
பெரம்பூர் செம்பியத்தில் ஸ்ரீ ஜெயின் மருத்துவ நிவாரண சங்கம் டயாலிசிஸ் மையம் ஏற்படுத்தியுள்ளது. இங்கு மிகக் குறைந்த செலவில் - ரூபாய் முன்னூறு - டயாலிசிஸ் செய்யப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
***************************

செவ்வாய் (14.8.2012) 

(எங்கள் கண்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வாசகர்கள் யாருக்காவது கிடைத்திருந்தால் பகிரவும்!) 
------------------------

புதன் (15.8.2012) 

சுதந்திர தினம் என்பதைத் தவிர வேறு பாசிடிவ் செய்தி கண்ணில் படவில்லை! அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி சிறு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார்.

வியாழன் (16.8.2012) 


இந்த நாளில் இதைப் படித்தாலும் செய்தி பழசு. Zavere Poonawala என்கிற பார்சிய தொழிலதிபர், பூனாவில் வசிப்பவர். இவரின் கார் டிரைவர் கங்கா தத். இவர் முப்பது வருடங்களாக வைத்திருந்த limousine (ஆச்சார்யா ரஜ்னீஷ் வைத்திருந்ததாம்) காரின் டிரைவர். சமீபத்தில் இந்த டிரைவர் மரணமடைந்து விட்ட செய்தி வெளியூரில் இருந்த தொழிலதிபருக்குத் தெரிவிக்கப்பட, தான் வரும் வரை அவர் உடலை வைத்திருக்கும்படி வேண்டிக் கொண்டு விமானத்தில் வந்தவர் டிரைவரின் உடலை அவர் குடும்பத்தினரின் சம்மதம் பெற்று அதே காரில் மலரலங்காரம் செய்து  தானே ஓடிக் கொண்டு எரியூட்டுமிடம் கொண்டு சேர்த்தாராம். 'இரவு பகலாக தனக்காக உழைத்தவர், ஏழ்மையை எதிர்த்து வெற்றி கண்டு தன் (டிரைவரின்)குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்தவருக்கு தன்னால் செய்ய முடிந்த மரியாதை இது' என்றாராம் அந்தத் தொழிலதிபர்.  
                 
வெள்ளி (17.8.2012) 
         
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை ஜூன், ஜூலை மாதங்களில், போதிய அளவு பெய்யவில்லை. இதனால், நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில், இன்று அதிகபட்சமாக பெரியாறில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.  

சனி (18.8.2012) 

வெறும் 5 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை பயணிக்கக் கூடிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் சி.பிரடெரிக், கே.கோபிநாத், டி.மனோஜ் பிரபாகர், எஸ்.குரு மற்றும் கணேஷ் பிரியன் ஆகிய மாணவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.  சிறிது நேரம் சார்ஜ் செய்து கொண்டு ஸ்கூட்டரை கிளப்பினால் போதும். இரண்டு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி ஸ்கூட்டரை இயக்குகிறது.

தற்போது சாதாரண எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரு முறை அதாவது 8 மணி நேரம் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிமீ வரை செல்ல முடியும். ஆனால், இந்த ஸ்கூட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்யும்போது ஒரு யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதற்கு 5 ரூபாய் மட்டுமே செலவாகும் என்கின்றனர் மாணவர்கள் (முகப் புத்தகத்திலிருந்து)

-சத்துணவு திட்டத்தில் வேலைபார்க்கும் பெண்மணியின் மகனான நடராஜ் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகத் தடகளப் பயிற்சி அளிக்கிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கலால் துறையில் விளையாட்டுக் கோச்சாக இருக்கிறாராம். இருக்கும் வசதிகளைக் கொண்டே இளவயதில் தேசிய அளவில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது தனக்கு ஆதரவளித்த, தன்னை தத்தெடுத்து ஆதரவு அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களை நினைவு கூரும் இவர் தன்னிடம் வரும் ஏழை மாணவர்களிடம் காசு எதுவும் எதிர்பார்க்காமலேயே பயிற்சி அளிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரேனும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும், வெல்லுவார்கள் என்கிறார் (முகப் புத்தகத்திலிருந்து)


சிவகங்கையில் (திருப்புவனத்தில்) விபத்தில் சிக்கி கைகால்கள் முறிந்து துடித்துக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பொது மக்கள் உதவாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்த வழியே பரமக்குடி விழாவுக்குச் சென்று கொண்டிருந்த வைகோ  அந்த வாலிபர்களை மோதிய அந்த வேனிலேயே ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு உதவிக்கு தனது தொண்டர்கள் இருவரையும் உடன் அனுப்பினார்.(தினமலர்)
                    

புதன், 15 ஆகஸ்ட், 2012

எப்படியும் முடிச்சுடலாம்!

                     
கணினியில் எழுதும் இடத்தைத் திறந்து 'டைப்ப' ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும்போதுதான் கதைக்குக் கரு இன்னும் யோசிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றியதும், கதை எழுதாமல் எதாவது கட்டுரையாக எழுதி விடலாம் என்ற முடிவுக்கு வந்து, எதைப் பற்றி எழுதுவது என்று அரை மணிநேரத்துக்கும் மேலாக யோசித்தும் அதற்கும் எந்த உருப்படியான பொருளும் அகப்படாததால் கவிதை முயற்சிக்கலாம் என்றும் தோன்றிய எண்ணத்தைச் செயல் படுத்த முடியாமைக்குக் காரணம் நான் எழுதியிருப்பது கவிதைதான் என்று நான் சொல்வேன்தான் என்றாலும் படிப்பவர்கள் அதை வசனமாகத்தான் பார்க்கிறார்கள் என்ற உண்மை மனதில் உடனே நினைவுக்கு வந்து விட்ட பொழுதினில் கவிதை எழுதும் எண்ணமும் உடனடியாக மனதை விட்டு அகல, 
 
                 
'சட்'டெனத் தோன்றிய அலுப்பில் எதையாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இப்போது என்ன வந்தது, இன்னும் கொஞ்சம் 'டைம்' கொடுத்துக் கூட பிறிதொரு நாளில் ஒரு கரு என்று கிடைத்தவுடன் எழுதலாம் என்ற எண்ணம் ஏன் வருகிறது என்றால் வலுக்கட்டாயமாக எதையாவது எழுதித்தான் ஆக வேண்டும்  என்று எழுதினால் எழுதப் படும் விஷயத்தில் இயற்கையான 'ஃப்ளோ' இல்லாது போய், ஒருவித சுவாரஸ்யமும் இல்லாமல் போய் விடும் என்பதால் நல்லதொரு கருப்பொருள் கிடைத்தவுடனேயே எழுதினால், மனம் நினைக்கும் வேகத்துக்கு கைகள் ஈடு கொடுக்க முடியாமல் எழுதியோ, டைப் செய்தோ ஒரு வரியையோ, வாக்கியத்தையோ முடிக்குமுன்னரே அடுத்து எழுத வேண்டியவை மனதில் வரி வரியாக அலைமோத, முதலில் நினைத்தவைகளை எழுத மறந்து போகும் அளவு விஷயம் கிடைப்பதோடு, படிப்பவர்களுக்கும் ஏதோ கொஞ்சம், கொஞ்சமாவதுதான்,  படிப்பதில் சுவாரஸ்யம் கிடைக்கும்  என்கிற உணர்வினால்தான் இத்தனை நாளும் எழுதுவதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்து, 
            
மிக நீண்ட இடைவெளி வந்து விட்டதோ என்ற நினைப்பில் படிக்க எடுத்து வைத்திருந்தவைகளைக் கூட எடுத்து ஓரமாக வைத்து விட்டு, மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து, முறைக்கும் மனைவியையும் லட்சியம் செய்யாது வேகமாக வந்து உட்கார்ந்து கணினித் திரையை முறைத்துக் கொண்டே கையில் குறித்து வைத்திருந்த குறிப்புகளோடு கதை எழுதும் ஆசையில் அல்லது அவஸ்தையில் என்று கூடச் சொல்லலாமோ என்னவோ ஆரம்பித்து விடலாம் என்று நினைத்தால் அந்த 'ஃப்ளோ' இன்னும் கைக்கும் மனதுக்கும் அகப்படாததன் காரணம் நம் மனதில்தான் சரக்கில்லையா அல்லது எழுதி வைத்த குறிப்புகளில் சாரம் இல்லையா, இன்னும் வேறு எதாவது காரணமா என்றும் ஒரு முடிவுக்கும்  வரமுடியாமல் எழுத ஆரம்பிக்கும்போது இதைப் படிப்பவர்கள் மனதில் என்ன தோன்றும், எத்தனை பேர் பொறுமையாக படிப்பார்கள் போன்ற கேள்விகளும் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்ற எண்ணமும் வந்து விடுவதால் எழுதும் விஷயத்தில் ஏதாவது சுவாரஸ்யம் காட்ட/கூட்ட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்து விடுகின்ற சூழ்நிலை இருக்கிறதே, 
               
இது எனக்கு மட்டுமல்ல எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்று நான் நினைத்துக் கொள்வது என்னையே ஏமாற்றிக் கொள்வதாகுமா இல்லை நிஜமும் அதுதானா என்று மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தால் எதை எழுதுவது என்று எப்போது முடிவு செய்து எப்போது எழுதி அதை ஒப்பேற்றுவது என்ற எண்ணங்களுக்கு நடுவிலேயே இப்படி எழுதிக் கொண்டு வந்தால் எழுதப்படும் விஷயம் இயற்கை இல்லாமல் செயற்கை ஆகி விடுவதாலும் கூட இதற்கு என்ன வகைப் படங்களை இணைக்க முடியும் என்ற  குழப்பமும், உடனேயே என் மனமே இதற்கு எதாவது படம் இணைக்கத்தான் வேண்டுமா, படம் இல்லாமலேயே பதிவிட்டால் என்ன என்ற கேள்வி எழுப்பும் தைரியத்தால் எழுதத் தொடங்கி எங்கேயாவது ஆரம்பித்து எங்கேயாவது முடித்து விடலாம் என்று அல்ப தைரியத்தில் தொடங்கி விட்ட இந்த வரிகளை ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி விடலாம் என்றும், 
                 
நிறுத்தி முற்றுப் புள்ளி வைத்து விட்டு உருப்படியாக ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது என்று சொல்வதற்குக் கூட தைரியம் வராததற்குக் காரணம் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை என்பதும், இதைப் படிக்கும் உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்பது எனக்குப் புரிகின்ற காரணத்தினால்தான் இதுவரை உருப்படியாய் எதுவும் எழுதாத நான் இந்த முறை மட்டும் அபபடி எப்படி எழுதி விடுவேன் என்ற எண்ணத்தோடேயே கணினியைத் திறந்து எழுதுமிடத்தை எடுத்து...  
                                                                                                   

                                                                                                                                        ( Go to Top) ....   
   
ஓய் பதிவாசிரியரே! இதைவிட, பிரதமரின் சுதந்திரதின உரை சுலபமாகப் புரியும் போல இருக்கே! 
           

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

லாரன்ஸ் ஆஃப் ஆப்ரிக்கா:: பழகும் வகையில் பழகிப் பார்த்தால்....

            

"பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே.." என்றொரு பழைய பாடல் உண்டு. தேவர் படமொன்றில் சுந்தர்ராஜன் நடிப்பில் 'தெய்வச்செயல்' என்கிற யானை பற்றிய படம்! இந்தப் பதிவும் யானை பற்றியதுதான். 

          
19-08-2012 கல்கி இதழில் வனக்காவலன் என்ற தலைப்பில் ரமணன் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கு பகிர்கிறோம்.
           
லாரன்ஸ் அந்தோணி. பிறந்த தேதி, செப்டம்பர் பதினேழு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது. (17-09-1950) ஆப்பிரிக்க வனவிலங்குகள் வாழ்க்கையை ஆராயும் வனவியல் ஆராய்ச்சியாளர். வனவிலங்குகளைப் பற்றி புத்தகங்கள் எழுதியிருப்பவர். 20 வருடங்களுக்கும் மேலே ஆராய்ச்சிப் பணி. தனியார் வசமுள்ள தென்  ஆப்பிரிக்கக் காட்டுப்பகுதிகளில் ஒன்றான துலதுலா(THULA THULA). இந்தத் துலா என்ற இடத்திலிருக்கும் காட்டுப் பூங்காவின் தலைமை வார்டனாகப் பணி. 
            
இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பால் பதறிப் போனார் லாரன்ஸ்.  "500 மைல் தொலைவில், ஒரு தனியார் காட்டுப் பகுதியில் ரவுடித்தனம் செய்யும் ஒரு காட்டு யானைக் கூட்டத்தைச் சுட்டுக் கொல்லப் போகிறார்கள்" என்பதுதான் அந்தச் செய்தி. "அவற்றை இடம் மாற்றுங்கள். நான் திருத்த முயற்சிக்கிறேன். சுட வேண்டாம்" என்று இவர் கேட்டுக் கொண்டதால் இருபது ரவுடி யானைகளை இவர் தலையில் கட்டினார்கள். அந்த யானைக் கூட்டத்தின் தலைவி சரியான ரவுடி ராணி. பாதுகாப்பிலிருந்து தப்பிப்பதில் எக்ஸ்பர்ட். தப்பித்து வெளியே வந்தால், மற்ற யானைகளைக் கெடுத்து விடும் என்பதால், அந்த யானைக் கூட்டம் வாழும் பகுதிக்கு மின்வேலியிட்டிருந்தார்கள். அதைத் தகர்த்தெறிந்து மின்சாரத்தைத் துண்டித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்த முரட்டுப் புத்திசாலித் தலைவி.  அந்த யானைக் கூட்டத்துடனே பதினெட்டு மாதம் வாழ்ந்து அவற்றுடன் பேசிப்பேசி ஆயுதங்களைக் கையாளாமல் புரிய வைத்து திருத்தி ஒரிஜினல் இருப்பிடத்தில் கொண்டு விட்டார் லாரன்ஸ். 
             
இந்த முயற்சியில் தமது போராட்டங்களுக்குப் பின் அந்தப் பெண் யானை தம்மைப் புரிந்து கொண்டு கட்டுப் பட்டது பற்றியும் பின் படிப்படியாக சாதுவாகிப் போனதைப் பற்றியும் லாரன்ஸ் எழுதிய "யானை சொல்லும் ரகசியங்கள்" (The Elephant Whisperer - my life with the herd in the African Wild ) என்ற புத்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெஸ்ட் செல்லர்.
              
இவர் கடந்த 2012 மார்ச் மாதம் இரண்டாம் தேதி, எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் இறந்து போனார். உலகறிந்த வனவியல் ஆராய்ச்சியாளரான லாரன்ஸ் மறைவுச் செய்தியைக் கேட்டு , அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ஒரு யானைக் கூட்டம். 600 மைல் தொலைவில் தாங்கள் வாழும் காட்டுப் பகுதியிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் தொடர்ந்து ஒரே வரிசையில் அணிவகுத்து நடந்து ( கூட்டமாக வந்தால் தாக்க வரும் யானைக் கூட்டம் எனக் கருதி தாங்கள் விரட்டப் பட்டு விடுவோம் என்பதால் கட்டளையின் கீழ் இயங்கும் யானை வரிசையைப் போல வந்திருக்கின்றன) 

 லாரன்சின் வீட்டுக்கு வந்தன. 600 மைல் தொலைவுக்கு அப்பால் நிகழ்ந்த லாரன்சின் மரணம் எப்படித் தெரிந்தது என்பதும், வழி தவறாமல், ஓய்வெடுக்காமல் சரியாக இவரது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதும் மிகப் பெரிய ஆச்சர்யம். காரணம் லாரன்ஸ் தற்போது வசித்த இடத்தை இந்த யானைகள் பார்த்ததில்லை. வந்த இடத்தில் லாரன்சின் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து, பின் தாமாகவே தங்கள் இருப்பிடத்துக்கு அணிவகுத்துத் திரும்பிய இந்த யானைக் கூட்டத்தை டிவி செய்தியாளர்கள் துரத்திச் சென்ற போது லாரன்சின் மகன், " நாட்டின் பெரிய தினசரிகள் அஞ்சலி வெளியிட்டதை விட பெரிய கவுரவமாக இந்த யானைக் கூட்டம் வந்ததைக் கருதுகிறோம். தயவு செய்து எங்கள் விருந்தினர் கோபப்படும்படி எதுவும் செய்யாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
          
விலங்குகளில் யானை மிக புத்திசாலி என்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப் பட்ட விஷயம். அவற்றுக்கு டெலிபதியும் உண்டோ என்பது இப்போது ஆராயப் பட வேண்டிய ஒரு விஷயம். 
             
நன்றி :  கல்கி 19-08-2012 இதழ்.
                

சனி, 11 ஆகஸ்ட், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 4/8 To 11/8

                
எங்கள் B+ செய்திகள்! 
    
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!
         
திங்கள்  
       
- வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை என்பது நிச்சயம் சென்னையைப் பொறுத்தவரை பாசிட்டிவ் நியூஸ்தான்!


- நிலவில் தண்ணீரில்லை என்று சொன்ன நீல் ஆர்ம்ஸ்டிராங் கருத்தைப் பொய்யாக்கி நிலவில் தண்ணீர் உள்ளது என்று சொன்னது தமிழன்தான், இந்தியன்தான் என்று பெருமைப் பட்டுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை.  

   
- இந்தியாவின் குடும்ப அமைப்பினாலும், சேமிக்கும் பழக்கத்தினாலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா தப்பியிருப்பதாக எஸ். குருமூர்த்தி பெருமிதம்.
  
செவ்வாய்   
        
- திங்கள்கிழமை செவ்வாயில் இறங்கிய அமெரிக்க விண்கலம் கியூரியாசிட்டி ரோவர் பற்றியும் அதன் தொழில் நுட்பத்தில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் பற்றிய செய்தி. 1969 இல் திங்களில் மனிதன் காலடி வைத்தான்! இன்று திங்கட்கிழமை அன்று செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை கை (முயற்சி) நுழைந்துள்ளது!

       
- திருவண்ணாமலை அருகே விழுப்புரம்-கோரக்பூர் ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியை, தண்டவாளத்தில் ஏற்பட்ட வித்தியாசமான சத்தத்தால் எச்சரிக்கை அடைந்த ஓட்டுனர் வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. சபாஷ் அலர்ட் ஓட்டுனர்!
    
- குடகில் பெருமழை ஆரம்பமாம். காவிரியில் தண்ணீர் வரும் சாத்தியம்! மேட்டூர் நிரம்பும் சாத்தியம். (இப்படி வந்தால்தான் உண்டு!)
             
புதன்
           
காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக இருந்த ஏழு பேர்கள் மீட்கப் பட்டனர்! 
           
வியாழன்

       
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முறையை மாற்றியமைக்க யோசனை கேட்டு அனைத்துத் துணைவேந்தர்களுக்கும் அரசு கடிதம். 
           
வெள்ளி  

         
ரயிலில் இருந்து தூக்கி வீச முயன்ற குழந்தையை தத்து எடுக்க நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆர்வம். (இதை செய்தித் தாள்களில் படிக்க முடியவில்லை என்றாலும் முகப் புத்தகப் பகிர்வில் பார்த்தது)
      

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஓட்டம்


நின்ற பிறகுதான் தெரிகிறது
ஓட்டத்தின் அருமை
             
ஓடிய காலங்களில்
நிற்பதுதான்
சுகம் என்று
எண்ணியதுண்டு.

நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்
என்னை யாரும்
லட்சியம் செய்வதில்லை

சீந்தப் படாமல்
நிற்பவர்கள் அனுபவிக்கும்
சித்திரவதை
தெரியுமா உங்களுக்கு?

என்னால் இப்போதும்
ஓட முடியும்
என்பதையே
மறந்து விட்டேன்.

ஓடிக் கொண்டிருந்த போது
நானும்
யாரையும் லட்சியம்
செய்ததில்லை

அனுபவிக்கும்போதுதானே

தெரிகிறது
அலட்சியத்தின் வேதனை...

ஏற்றிச் சென்றவர்களில்
எந்த
பேதமும் பார்த்ததில்லை

இரு திசைகளிலும்
தாண்டிச் செல்லும்
மின்வண்டிகளிடம்
அலட்சியம்
தெரிந்தாலும்
பயணிக்கும்
பயணிகள் பலரின்
பார்வையில்
பழகிய,
பயணம்
செய்த,
பரிவு தெரிகிறது.

நின்று போன

வண்டியை
நினைத்துப் பார்ப்பவர் யார்
            

 
ஓடி ஓடி
ஓய்ந்து போன
வண்டியை
புதிய வண்டிகளுக்குப்
புரிவதில்லைதான்!
       

           
நீங்களும் கூட

நின்ற பிறகு
ஒருநாள்
நினைத்துப் பார்க்கலாம்....!
                  

புதன், 8 ஆகஸ்ட், 2012

எட்டெட்டு பகுதி 26:: ஸ்வீட் எடு, கொண்டாடு!


           
ஓ ஏ யின் கடிதம் # 1: 
            
இதை நான் எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்னும் குழப்பத்தில் ஆரம்பிக்கின்றேன். என்னை, 'எது' இந்த சிறைச்சாலைக்குக் கொண்டு வந்தது என்று யோசித்துப் பார்க்கையில் .... 
            
பிங்கியின் மரணத்திற்கு நான் காரணம் என்று சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்துவிட்டதுதான் என் சிறைவாசத்தின் காரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் பிங்கி அருந்திய பானத்தில் விஷம் வந்தது எப்படி என்பது எனக்கும் புரியாத ஒரு புதிர். நான் அருந்தியிருக்கவேண்டிய கோக்க கோலாவை, பிங்கி அருந்தியது ஏன் என்பதும் மற்றொரு ஆச்சரியமான புதிர். 
            
என் அறையில் கண்டு எடுக்கப்பட்ட மாத்திரை என் மனைவி மாயாவின் கையிலிருந்து நழுவி விழுந்த மாத்திரை. என் மனைவி மாயா தற்கொலை செய்துகொள்ளவில்லை; பிங்கியால் கொலை செய்யப்பட்டாள். மாயாவை, பிங்கி ஏன் கொல்லவேண்டும்?  
              
மாயாவை, வல்லம் சென்றிருந்தபோது, முதன் முறையாக பார்த்த பொழுதே, அவள்தான் என் மனைவி என்று தீர்மானித்தேன். அவளுடைய சம்மதம் பெற்று அவளை இந்தூருக்கு அழைத்து வந்து, திருமணம் முறையாக செய்துகொண்டேன். மாயாவின் அப்பா, கோவிந்தராஜன் அவர்களை, நானும் மாயாவும் எவ்வளவோ அழைத்தும், அவர் எங்களுடன் வந்து இருக்க சம்மதிக்கவில்லை. மாயா என்னுடன் வந்த பொழுது அவருக்கு நான் அளித்த ஐந்து லட்ச ரூபாய் காசோலையைக் கூட தீண்டாத அதிசய மனிதர் அவர். 
                  
என்னை விட, எங்களுக்குக் குழந்தை இல்லையே என்று அதிகம் ஏங்கியவள், என் மனைவி மாயாதான். அவள் குறையைத் தீர்க்க, எங்கிருந்தோ வந்து சேர்ந்த பிங்கியை தத்து எடுத்துக் கொள்வது என்று முடிவு எடுத்தோம். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு, இந்த யோசனை பிடிக்கவில்லை. சினிமா சம்பந்தப்பட்டவர்கள் யாரும் ஒல்லேவாலா குடும்பத்தில் நுழையக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார், அவர். 
               
அப்பாவின் மறைவுக்குப் பிறகு, பிங்கியை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது. மாயாவின் சம்மதத்துடன், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நம்பினேன். ஆனால், மாயாவுக்கு இதில் துளிக் கூட சம்மதம் இல்லை. 'இரண்டாம் தாரமாக வேறு யாரை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம் - ஆனால், மகளாக மனதில் நினைத்துவிட்ட ஒருத்தியை மணப்பது என்ற நினைப்பு விசித்திரமாக இருக்கின்றது; உங்களின் அந்த நினைப்பே எனக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்துகின்றது' என்று சொன்னாள் மாயா. 
                 
2006, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாயா, எங்களுக்கு ஒரு வார அவகாசம் கொடுத்துவிட்டு சென்றபோது, தீவிரமாக யோசித்து, நான் மாயா ஏற்றுக் கொள்ளுகின்ற வேறு ஒருத்தியை மணந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் பிங்கி இதற்கு சம்மதிக்கவில்லை. 'நான் ஆகஸ்ட் எட்டாம் தேதி, மாயா அக்காவிடம் பேசி, அவர் சம்மதத்தை வாங்கிவிடுகின்றேன்' என்று சொன்னாள். நாங்கள் இருவரும் மாயாவை ஆகஸ்ட் எட்டாம் தேதி சென்று பார்த்து, அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, பிங்கி மாயாவின் சம்மதத்தைப் பெற்றவுடன், இருவரும் மணந்துகொள்வது என்று முடிவெடுத்தோம். 
             
ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், அன்று மாயா எங்களைப் பார்க்க வந்துவிட்டாள். அப்பொழுது நடந்த நிகழ்வுகளை, சுருக்கமாகக் கூறினால்,  (விரிவாகப் படிக்க சுட்டி:  பகுதி 11  ) மாயா ஏதோ ஒரு மாத்திரையை எனக்குக் கொடுப்பதில் முனைப்பாக இருந்தாள். அந்த மாத்திரையை அவள், நான் பருகப் போகின்ற கோக்க கோலாவில் போட வரும்பொழுது, கால் தவறி கீழே விழுந்தாள். அவள் கையில் இருந்த மாத்திரை, எங்கோ சென்று விழுந்துவிட்டது. மாயா அதை விரைவாகத் தேடிய பொழுது அவளுக்குக் கிடைக்கவில்லை. வேறு ஒரு மாத்திரை கொண்டு வருவதற்காக, அவள், காலுசிங் அறையை நோக்கி ஓடினாள். சற்று நேரத்தில். பிங்கியும் காலுசிங் அறையை நோக்கி ஓடினாள். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் யாரும் திரும்ப வராததால், நான் அங்கு சென்றேன். மாயாவை, அவளுக்குப் பின்புறம் நின்றிருந்த பிங்கி, கழுத்தை பிடித்து இறுக்கிக் கொண்டிருந்ததை, பார்த்தேன். 
            
உடனே, பிங்கியின் பிடியிலிருந்து மாயாவை விடுவிக்க, அவர்கள் அருகில் சென்று, பிங்கியின் கைகளை விலக்கிவிட முயன்றேன். நான் அவள் கைகளை விலக்கிவிட முயற்சிக்கின்றேன் என்று தெரிந்தவுடன், பிங்கி இன்னும் பலமாக மாயாவின் கழுத்தை அழுத்தி, அவளைக் கொன்றுவிட்டாள். 
             
மாயாவின் கொலையை, பிங்கி மீது இருந்த இரக்கத்தால் மறைத்து, அதைத் தற்கொலையாக உலகுக்குக் காட்டினேன். ஆனாலும் அதன் பின் பிங்கியைப் பார்க்கும் பொழுதெல்லாம், 'மாயாவைக் கொன்றவள்' என்றுதான் தோன்றும். மாயாவின் உடலை வீட்டில் வந்து பார்த்தபோது, காலுசிங் அழுது புரண்டது என் மனதை விட்டு அகலவே இல்லை. 'மாயா மீது, ஒரு வேலைக்காரனுக்கு இருக்கின்ற அன்பு, பாசம் கூட எனக்கு இல்லாமல் போய்விட்டதோ' என்று அடிக்கடி தோன்றுகிறது. 
                  
பிங்கியிடம், என்னுடைய மும்பை ஹோட்டல் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால்தான் திருமணம் என்று சொன்னேன். ஆனால், மும்பை ஹோட்டல் திட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்துவந்தேன். பிங்கியோ அந்த ஹோட்டல் திட்டத்தில் முழு மூச்சாக முனைந்து, அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். இறந்து போவதற்கு முன்பாக அவள் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. "ஓ ஏ - நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். இந்த சந்தோஷத் தருணத்திலேயே என் உயிர் போய்விடாதா என்று கூட ஏங்குகின்றேன். சந்தோஷ சமாச்சாரத்தை, ஃபோனில் கேட்டவுடனேயே, 'ஸ்வீட் எடு, கொண்டாடு' என்று என் மனம் துள்ள ஆரம்பித்துவிட்டது. அதனால், அருகில் இருந்தது ஆரஞ்சு ஜூஸா அல்லது கோக்க கோலாவா என்று கூட நான் பார்க்கவில்லை. கோக்க கோலா என்ன, இனிமேல் நீங்க குடிக்கின்ற எல்லாமே என்னுடையதுதான். இல்லை, இல்லை, இனிமேல் நீங்க குடித்து வைத்த மீதிகளைத்தான் நான் குடிப்பேன். பொன்னுலகம் என்னை அழைக்கின்றது. இனிமேல் ஆயிரம் மாயாக்கள் வந்தாலும், இந்த சொத்துக்களை என்னிடமிருந்து பிரித்துவிட முடியாது...... ..... ஆ அம்மா - இது என்ன வலி? ......."   
*********************    
                
இறுதியாக, மாயா எனக்குக் கொடுக்க நினைத்த இந்த மாத்திரை எப்படி சிறையில், என் கைகளுக்கு வந்து சேர்ந்தது என்பது எனக்குத் தெரியாது, தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. இந்த மாத்திரையை இன்று நான் சாப்பிடப் போகும் கோக்க கோலா + ஆஸ்பிரின் பானத்துடன் சேர்த்து சாப்பிட்டு, என்னுடைய மாயா உலகத்திற்குப் போய்ச் சேருகின்றேன். 
வணக்கம் உலகமே. ... 
**********************************     
              
ஓ ஏ எழுதிவைத்த உயில்: (கடிதம் 2) 
என் சொத்து விவரங்கள் : 
------------------
------------------
இவை யாவும், முழுவதுமாக, என்னுடைய மாமனார், கோவிந்தராஜனிடம் ஒப்படைக்கின்றேன். அவருடைய காலத்திற்குப் பிறகு, காலுசிங் மற்றும் அவனுடைய சந்ததியினர் இந்த சொத்துக்களை அடையவேண்டும் என்று இந்த உயில் மூலம் தெரியப்படுத்துகின்றேன். கோவிந்தராஜன் அவர்கள், காலுசிங்கின் திருமணம் தொடங்கி, காலுசிங் வாரிசுகள் படிப்பு வரையிலும், எல்லா விஷயங்களையும் முன்னின்று நடத்தி, அவர்களை, இந்த ஹோட்டல் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கின்ற வகையில் தயார் செய்யவேண்டும், தயார் செய்வார் என்று உறுதியாக நம்புகின்றேன். 
              
இதை சுயமாக சிந்தித்து, சுய நினைவோடு, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் எழுதி கையொப்பம் இடுகின்றேன் என்று உறுதியளிக்கின்றேன். 
           
அன்புடன், 
ஓ ஏ. 
*********************************
முடிவுரை: 
1) மாயாவும் ஓ ஏ யும், ஆவியுலகில் மிகவும் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கே வி, எ சா மற்றும் கா சோ ஆகியோரின் கனவுகளில் வந்து அவர்கள் நன்றி தெரிவித்து சென்றார்களாம். 
            
2) பிங்கி - இறக்கும்பொழுது ஆசைப் பட்டபடி, அந்த சொத்துக்களை அடைய - காலுசிங்கின் வாரிசாகப் பிறப்பதற்குக் காத்திருக்கின்றாள்.  
*************************************   
              
கா சோ : "சாமி - அன்றைக்கு போஸ்ட் மார்ட்டம் டாக்டரைப் பார்க்கச் சென்றீர்களே, பிங்கி திருமணம் ஆகாதவர் என்று அவர் எப்படி போஸ்ட் மார்ட்டத்தில் கண்டுபிடித்தாராம்? 
       
எ சா: " ரொம்ப சிம்பிள் சோ. போலீஸ் அதிகாரி சொன்ன விவரம்தானாம். இறந்து போனவர் பெயர் விவரங்கள் கொடுக்கும் பொழுது - கணவர் / தகப்பனார் பெயர் : என்பதற்கு நேராக 'இல்லை / தெரியவில்லை, மணமாகாதவர்' என்று குறிப்பிட்டிருந்தாராம். :)))" 
***************************************   
               
பொறுமையாகப் படித்த வாசகர்கள் எல்லோருக்கும் என் நன்றி. கதையில் சந்தேகம் எதுவும் இருந்தால், அதைப் பின்னூட்டமாகப் பதியுங்கள். பதில் கூறக் கடமைப் பட்டுள்ளேன். (பதிவாசிரியர்) 
                               

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அலேக் அனுபவங்கள் 08:: இண்டர்வியூ

           
நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபொழுதும், அசோக் லேலண்டில் இஞ்சினீரிங் அப்ரெண்டிஸ் ஆகச் சேருவதற்கு முன் நடந்த நேர்காணலில், என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்கு நான் என்னென்ன பதில்கள் கூறினேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன. 
           
இண்டர்வியூ செய்தவர்கள் மூன்று பேர். அவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துள்ளேன். ஆனாலும், அவர்களை, வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றேன். அவர்களைத் தெரிந்தவர்கள், பலர் இருக்கின்றார்கள் என்பதால். அவர்களின் புனைபெயர்கள், நந்தா, சென், சாரி என்று வைத்துக் கொள்கிறேன். நந்தா - பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளர். சென் - இஞ்சினீரிங் பிரிவின் அதிகாரி, சாரி -  இயந்திரப் பிரிவின் அதிகாரி. (இந்தத் தகவல்கள், இன்டர்வியூவின் பொழுது எனக்குத் தெரியாது, அப்ரெண்டிஸ் ஆக சேர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன்.) 
======================  
            
நந்தா: "வாப்பா, உட்கார். உன் பெயர் என்ன?"
நான்: "நன்றி சார். (உட்கார்ந்துகொண்டு) என் பெயர் கே ஜி கௌதமன்."
நந்தா: "உன் பெயரில் உள்ள கே எதைக் குறிக்கின்றது? கான்பூரிலிருந்து வருகின்றாயா? "
நான்: "இல்லை சார்! என் பெயரில் உள்ள கே, என்னுடைய சொந்த ஊராகிய கல்யாணமகாதேவியைக் குறிக்கின்றது. "
நந்தா: "ஜி?"
நான்: "என் அப்பா பெயராகிய, கோபாலனைக் குறிக்கின்றது." 
நந்தா: "அப்புறம்?"
நான்: "மீதியுள்ள கௌதமன் என் சொந்தப் பெயர்! "
சாரி: "உங்கள் சர்டிபிகேட்டுகளை இப்படிக் கொடுங்கள். " 
கொடுத்தேன். 
என்னுடைய ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டுகளை நந்தா பார்வையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், 
       
சென் : "டிப்ளமோ பாஸ் செய்ததிலிருந்து இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தாய்?"
நான்: "சும்மாதான் இருந்தேன் சார்!"
சென்: "ஆர் கே டிப்பார்ட்மெண்ட் வேலையா?"
நான்: "அப்படி என்றால்?"
சென்: "ரைஸ் கில்லிங் டிப்பார்ட்மெண்ட் வேலையா ...!!!" 
          
வாய் விட்டுச் சிரித்தேன். என் சிரிப்பில் மற்றவர்களும் கலந்துகொண்டார்கள். (காம்பெடிஷன் சக்சஸ் ரிவ்யூ புத்தகத்தில், அன்றைய தேதி வரை ஐ ஏ எஸ் இண்டர்வியூக்கள் பற்றி, பல கட்டுரைகள் படித்திருந்தேன். நேர் காணலில் அவர்கள் சொல்லாமல் நாம் உட்காரக் கூடாது என்பதில் ஆரம்பித்து, தொட்டால் சுணங்கியாக இருக்கக் கூடாது, இண்டர்வியூ செய்பவருடன் விவாதம் / வீண்வாதம் செய்யக் கூடாது, தெரியாதவற்றை, தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று பல உபயோககரமான தகவல்கள் அந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து வைத்திருந்தேன்.)   
            
சாரி, சென் இருவரும்: "அட! எழுபத்தொரு சதவிகித மார்க்குகளா! சரி, நீ இந்த மார்க்குகளுக்குத் தகுதி உடையவன்தானா என்று சோதித்துப் பார்த்துவிடுகின்றோம்!" 
நான்: சிரித்தபடி, "ஷ்யூர் சார்!"
சாரி: "நாங்கள் உன்னை, எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்கலாம்?"
நான்: "மெக்கானிக்கல் இஞ்சினீரிங் ..."
சாரி, சென் இருவரும்: "அது மிக மிக பெரிய ஏரியா - வேறு ஏதாவது அதிலிருந்து சிறிய பகுதி - உன்னுடைய ஸ்பெஷல் ஏரியா ஏதாவது கூறு?"
நான்: "என்னை நீங்கள், என்னுடைய தேர்வு (எலெக்டிவ் ) சப்ஜெக்ட் ஆகிய மெஷின்ஷாப் டெக்னாலஜியில் கேள்விகள் கேட்கலாம்!" 
     
சாரி: "ஓ அப்படியா? What is the formula for Tool life?"
Me: "V * T whole power n = C (constant)."
Chari: "What is V, what is T?" 
Me: " V is the cutting speed, T is the tool life, n and C are constants found by experiments depending upon the tool material, work piece and feed rate."
Chari: "Very good. Can you draw the sketch of centre-less grinder?" 
Me: "Internal or external sir?"
Chari: "Again, very good!. Draw external centre-less grinder."
Me: "I can draw only a schematic diagram - a rough sketch"
Chari: "That is enough for us." என்று சொல்லி, ஒரு பென்சிலையும், நோட்டுப் புத்தகத்தையும் என் கைகளில் கொடுத்தார். 
நான் கீழ்க் கண்டது போல ஒரு படம் வரைந்தேன். 
சாரி: "எல்லாம் சரி, ஆனால், வொர்க் சப்போர்ட் சரியில்லை. வொர்க் பீஸ் முனையில் வி ஷேப் இருக்கவேண்டும்."
நான்: "ஆம். நீங்கள் சொல்வதுதான் சரி."
சாரி: "அதனால் என்ன - பரவாயில்லை!" 
என்னுடைய எழுத்துத் தேர்வு மார்க்குகள், அவர்களிடமிருந்த ஒரு கோப்பில் இருந்தன. அதை மூவரும் பார்த்துவிட்டு, திருப்தியாக தலையை ஆட்டிக் கொண்டனர். 
                
நந்தா: "என்ன விளையாட்டு தெரியும்?" 
நான்: " நான் .... என்று ஆரம்பிப்பதற்குள், அவரே மீண்டும், "பம்பரம் விடுவியா? பட்டம் விடுவாயா" கில்லி?" என்றார். எல்லோரும் சிரித்தார்கள். 
நான் ஒருவாறு சிரித்துச் சமாளித்து, "நான் சதுரங்கம் ஆடுவேன்" என்றேன். சாரி மீண்டும் 'வெரி குட்' என்றார்!  
சென்: " செஸ் போர்டுல மொத்தம் எவ்வளவு கட்டங்கள்?" 
நான்: "அறுபத்துநான்கு" 
சாரி: "வாட் ஈஸ் கிராண்ட் ஸ்லாம்?" 
               
அதுவரையில் அந்த சொற்றொடரை நான் கேள்விப் பட்டதே இல்லை. அது செஸ் சம்பந்தப்பட்டதா அல்லது வேறு விளையாட்டுகள் சம்பந்தப் பட்டதா என்று கூடத் தெரியாது. (பிறகு என்னுடைய அப்பா, சீட்டாட்டத்தில் பிரிட்ஜ் ஆட்டத்திலும் கிராண்ட் ஸ்லாம் உண்டு, டென்னிஸ் விளையாட்டிலும் உண்டு என்று கூறினார்.) 
மீண்டும் சமாளித்து, "எனக்கு செஸ் விளையாட்டில் பெரிய வார்த்தைகள் எதுவும் தெரியாது, விளையாடத் தெரியும், விளையாடுவது உண்டு - அவ்வளவுதான்" என்றேன். 
                 
சென் அதற்குள், "பொது அறிவு இருக்கின்றதா என்பதையும் சோதிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார்களப்பா ..." என்று சொல்லியபடி, " வேர் ஈஸ் அவர் ப்ரைம் மினிஸ்டர் நவ்?" என்று கேட்டார்.    
அதற்குள் நந்தா குறுக்கிட்டு, "இருங்க முதலில் நம் பிரதமமந்திரி யார் என்று அவரைக் கேளுங்கள். அது தெரிகின்றதா என்று பார்ப்போம்" என்றார்.   
நான்: "நம்முடைய பிரதமர், திருமதி இந்திராகாந்தி அவர்கள்."
நந்தா: "ஏன்? நேரு இல்லையா? அவருக்கு என்ன ஆச்சு?" 
நான்: "திரு ஜவகர்லால் நேரு ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு மே மாதம் இருபத்தேழாம் தேதி புதன்கிழமை - காலமானார். அவருக்குப் பிறகு, திரு லால்பஹதூர் சாஸ்திரி  அவர்கள் பிரதமரானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டிலிருந்து, இன்றுவரை திருமதி இந்திராகாந்தி அவர்கள் நம் பிரதமராக இருக்கின்றார்." 
சென்: "அது சரி, அவர் இப்போ எங்கே இருக்கின்றார்?"
நான்: "அவர் புது டெல்லியில்தான் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்."
சென்: "நீ அப்படி நினைக்கவில்லை என்றால், எங்கே இருப்பார்?"
நான்: "அப்பொழுதும் புதுடில்லியில்தான் இருப்பார்!"   
                
சென்: "நல்லா குழப்புறேப்பா நீ ... சரி இன்றைய ஹிந்து பேப்பரில் என்ன தலைப்புச் செய்தி?"  
நான்: "Thousands of people die in Orissa due to floods" 
சென் (யோசனை செய்து பார்த்துவிட்டு,) 'கரெக்ட்' என்றார். 
எல்லோரும்: "எங்களை ஏதாவது கேட்க விரும்புகின்றாயா?" 
நான்: "ஒன்றும் இல்லை சார்."
நந்தா : அப்போ நீ செல்லலாம் - உன் சர்டிபிகேட்டுகளை எடுத்துச் செல்."
நான் : நன்றி சார்.