நாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். 90 வயது. பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.
அப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை. பொழுது போக வேண்டுமே... மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.
என் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார். " வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா? சரசரன்னு புடைவைச் சத்தம். கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...!"
அதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம். திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவதில்லை.
பாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. "கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ?"
'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற... அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்.. இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு' என்று நினைத்துக் கொண்டே, "ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே.."
"நேத்து கூட நான் பாத்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.. வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும். யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்"
பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.
"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா.. ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன். பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது... கொட்டுது, அணையுது... குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்."
நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.
"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...?"
"பின்ன...? ஒனக்கும் பாக்கணுமா?"
அம்மா பேச்சை மாற்றினார். இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர். பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார். எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.
இப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும். இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர!
- பாஹே -
படங்கள் : இணையம்!