துரியனின் குரல் மெலிந்து மிகுந்த வேதனையுடன் வெளிப் பட்டது. பதினெட்டாம் நாள் போர் முடிந்தது. வீமனிடம் துரியன் தன் தொடை பிளந்து விழுந்து கிடக்கிறான். துரியோதனனின் வெற்றிப் பாதைகள் அனைத்தையும் மாயக் கண்ணனின் சூழ்ச்சிகள் தடுத்து நிறுத்திவிட்டன. யாவற்றையும் இழந்து
இதோ துரியன் வீழ்ந்து கிடக்கிறான். அவன் கண்கள்
அஸ்வத்தாமனை நோக்கி நிலைத்து நின்றது.
அஸ்வத்தாமன் சமந்தப் பஞ்சகத்தின் அருகில் அமர்ந்திருந்தான்.
தன் மடியில் தலை தாழ்ந்து தவித்த துரியோதனனின் கண்கள் அவனைக் கொன்று தின்றன. மஹாரதன் நான், என் தந்தைக்கு அடுத்து சேனையின் அதிபதியாக ஆகவேண்டியவன்.
துரியோதனன் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையே? என்ன நட்பிருந்து என்ன பயன் ?. துரோணரின் மாணாக்கர்களில் யாவருக்கும் சளைத்தவனல்ல இந்த
அஸ்வத்தாமன். ஆனால்.. துரியோதனா நீயும் என்னை வஞ்சித்தாயே ?
“உன்னை
என் சேனையின் அதிபனாக நியமிக்கிறேன் “
துரியோதனனின் வார்த்தைகள் உவப்பானதாகவோ அல்லது வெறுக்கவோ இல்லாமல் உள்வாங்கினான் அஸ்வத்தாமன். இல்லாத சேனைக்கு அதிபதி. உள்மனம் அஸ்வத்தாமனை கேலி செய்தது. பக்கத்தில் நின்றிருந்த கிருபரையும், கிருதவர்மனையும் நோக்க
கூசினான்.
“நான்
போரில் என் முழு
வலிமையுடன் ஈடுபட மாட்டேன் என்று உன்னிடம் சபதம் செய்திருக்கிறேனே துரியோதனா ”
” ஹஹ்…
வலி வலி வலி… இந்த வலியை உணர்கிறாயா அஸ்வத்தாமா ? ஒவ்வொரு நரம்பிலும் வலி. ஒவ்வொரு அசைவிலும், அதிர்விலும் வலி. பேச எத்தனிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலி இந்த வலிக்கு நீ என்ன மருந்திடப் போகிறாய் ? நீ என் உற்ற
நண்பனல்லவா? முழுதாய் போரில்
ஈடுபடவில்லை என்றாலும் என்னை விட்டு விலாகதவனல்லவா ?.
”
“ நான் பாண்டவருக்கு ஆதரவாய் செயல் படுவேன் என்று நினைத்து என்னை நீ சந்தேகித்த போது என்னுள் எழுந்த வலியினும் பெரியதா இந்த வலி துரியோதனா ? ”
துரியோதனன் முகத்தில் வலியின் வேதனை அதிகரித்தது. மௌனமானான்.
” உன் வலியை
கூட்டுவதற்காக சொல்லவில்லை துரியோதனா. உள்ளில் இருந்து என் இருதயத்தை பிய்த்தெடுத்தாற்போல அன்று அவநம்பிக்கையுடன் பேசிய போது உன்னிலும் அதிகமாய் துடித்தேன் துரியோதனா, நீயும் என்னை
வஞ்சித்தாயே என்று எத்தனை இரவுகள் கழிந்தன தெரியுமா ? இது நண்பனுக்கான வஞ்சனை அல்லவா ?
உன் கர்ணனுக்கு
எந்த வகையில் கீழானேன் நான்... சொல் துரியோதனா ?”
” நெஞ்சைப் பிளக்கும் வார்த்தைகள் அஸ்வத்தாமா. கண்ணனின் சூழ்ச்சியால் கீழ் வீழ்ந்த மோதிரத்தை அவன் கையில் வைத்து நீ வானம் நோக்கி ஏதோ பேசியது உன்மேல் எனக்கு சந்தேகத்தை ஊட்டியது உண்மை தான் அஸ்வத்தாமா… உணர்ந்தேன், பலமுறை
திரும்ப மன்னிப்புக் கோரினேன். நீ மனம் மாறவில்லையே.”
” உயிரற்ற ஜடம் போரில்
என்ன செய்திருக்க முடியும் துரியோதனா ? என்று நீ என்னை சந்தேகித்தாயோ
அன்றே இறந்தேன் நான். ”
” அஸ்வத்தாமா… போனவை போகட்டும். என் கால்களைப் பார்.. பிளவுண்டு கிடக்கும் தொடையில்
இருந்து வழியும் இரத்தத்தின் மீது மொய்க்கும் ஈக்களை பார். பல நாட்டரசர்கள் தன் தலைமேல் வைத்துக் கொண்டாடிக் கிடந்து, இன்று அசைவற்று கிடக்கும் காலை கடித்துக் கொண்டிருக்கும் எறும்புகளைப் பார். நாட்டின் சக்கரவர்த்தி என்ற மதிப்பின்றி பீமனால் எட்டி உதைக்கப் பட்டு அசிங்கப்பட்டுக் கிடக்கும் என் தலையைப் பார். எப்போது இறப்பேன் என்று மேலே வட்டமிடும் கழுகுகளைப் பார். இவற்றையும் மீறி என் உயிரை தக்க வைத்திருப்பதே நீயேனும் பாண்டவர்களை அழித்தேன் என்று சொல்லப் போகும் ஒரு வார்த்தைக்காக. செய்வாயா ? ”
” ஆனால்… ”
” போதும்
மேலும் எதுவும் பேச வேண்டாம். பாண்டவர் அழிவு தவிர்த்து நீ ஏதும் பேச தேவை இல்லை. ஒன்று நண்பனாய் இதை ஏற்று செயல் படு. அல்லது உன் அரசனின் ஆணை. நீ இந்த செயல் ஏற்று முடித்தே ஆகவேண்டும். உன்னால் மட்டுமே அது முடியும்”
இலக்கற்ற திசையில் நோக்கி அஸ்வத்தாமன்
கண்களில் உணர்ச்சிகள் மறைந்தன.
” ஆகட்டும் அரசே.. பாண்டவர்களை வேரறுத்து வருகிறேன் “
துரியனின் கண்ணில் அவனின் வலியையும் மீறி இன்னும் தெரியும் அவ நம்பிக்கை அஸ்வத்தாமனை
என்னமோ செய்தது.
” நம்பு
துரியோதனா.. என் உயிருக்கிணையான என் நெற்றியில்
இருக்கும் இந்த சிரோ மணி மேல் ஆணை “
அஸ்வத்தாமன் தன் நெற்றியில் பதிந்திருக்கும்
தன் உடன் பிறந்த சிரோ மணியின் மேல் கை வைத்து உறுதி அளித்தான்.
” அப்படியே ஆகட்டும் அஸ்வத்தாமா. நீ வரும்
வரைக்கும் என் உயிரை தேக்கி வைக்கிறேன். வெற்றியுடன் வா.
”
கிருதவர்மனும், கிருபரும் அஸ்வத்தாமனும் அவ்விடம் விட்டு நகர்ந்தார்கள்.
*******
கரும்பூதத்தின் ரோமம் போல் அடர்ந்திருந்த இருளில் மூவரும்
நடந்தனர். பாண்டவரின் பாசறைக்கு எதிர் இருந்த ஆலமரத்தின் அடியில் காக்கைக்கும் கோட்டானுக்கும் நடந்த
சண்டையை உற்று நோக்கியவாரே
அமர்ந்தனர்.
பாசறையின் தீப்பந்தம் கக்கிய வெளிச்சம் சற்றே இருளகற்றி இருந்தது. காகங்கள் முடிந்த மட்டில் கோட்டானுடன்
போரிட முயன்று தோற்றன. பல காகங்கள் இருளில் போரிட
முடியாம இறந்து போயின.
அஸ்வத்தாமன் மனம் சஞ்சலித்தது. மனது வேறெங்கோ பயணித்தது.
” அஸ்வத்தாமன் இறந்து விட்டான் ”
அஸ்வத்தாமன் காதில் யாரோ சொல்லும் குரல்
தொடர்ந்த சங்கொலி கேட்டது .
என்ன விந்தை இது ? என்னை யார் கொன்றது. இதோ இங்கே
உயிரோடிருக்கும் என்னைக் கொன்றதாக அறிவிக்கும் அறிவிலி யார்? ஏதோ தவறு
நடக்கிறது.
அஸ்வத்தாமனின் சிந்தை
போரில் இருந்து விலகியது. குரல்
வந்த திசை நோக்கினான். துரோணரின் கொடி
பட படத்திருக்கிறது.
” தேரோட்டி, தேரை என் தந்தையின் பக்கம் திருப்பு ” உத்தரவிட்டான்.
தேர் துரோணரை நெருங்கிக் கொண்டிருக்கையில் பெருத்த அவலச் சத்தம் தந்தையின் தேர் இருந்த பக்கத்தில் கேட்டது. அஸ்வத்தாமன் மனம்
பதறியது. தேரோட்டியை விரட்டினான். ஆங்காங்கே குவிந்திருந்த மனித, குதிரை, யானை உடல்களைத் தாண்டி தேர்
செல்வதே பெரும்பாடாய் இருந்தது. மனம் பெரும்
அவஸ்த்தைக்குள்ளானது. சட்டென்று தேரினின்று குதித்தான். பக்கத்தில் இருந்த
குதிரை வீரனைக் கீழே தள்ளி குதிரையைக் கைப்பற்றினான்.
வேகமாக தந்தையை நோக்கி விரைந்தான்.
அங்கே எல்லாம் முடிந்து போய்விட்டிருந்தது. தந்தையை ஏமாற்றிக் கொன்று விட்டார்கள். மனம் சொல்லொணாத் துயரில் தவித்தது. தருமனாச் சொன்னான் இதை ? தருமன் வாயிலிருந்தா அந்தப் பொய் எழுந்தது.
உலகத்திலேயே யாரும் ஏமாற்றினாலும் ஒப்புக் கொள்வேன். ஆனால் இம்மியளவும் தருமம் தவறாத
யுதிஷ்டிரன் இதைச் செய்தானா? அவ நம்பிக்கையில் கண்கள் தவித்தன . தன் தந்தையையை, அனைவருக்குமான குருவை, ஆச்சாரியப் பெருமகனை க் கொல்ல
இத்தகு ஈனச் செயல் செய்வார்களா ? திருட்டத்தூய்மன் வந்து
துரோணரின் தலை கொய்ய
எப்படி பாண்டவர்களும் கிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார்கள் ? அதை அர்ஜ்ஜுனன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தானா ?
” என்ன
யோசிக்கிறாய் அஸ்வத்தாமா ”
கிருதவர்மனின் குரல் மீண்டும் தன்னிலைக்குக் கொண்டுவந்ததது.
“மேலே
பார்த்தாயா கிருதவர்மா ? வலிமையற்ற கோட்டான்கள் இரண்டு அத்தனை காக்கைகளையும் அழித்ததை”
” ம்ம்
பார்த்தேன் ”
” துரோகத்தின் சிகரங்களானவர்களுக்கு நாம் இப்போது கோட்டான்களாகிறோம். ”
” இது அதர்மம் அஸ்வத்தாமா… நான் ஒப்பேன்.. ” கிருபர் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்து அலறினார்.
” இது படையே
இல்லா இந்தப் படைத்தலைவனின் ஆணை.
நீங்கள் கட்டுப் பட்டே
ஆகவேண்டும் ” வெறுப்பும் கோபமும் அடக்கி வைக்கப் பட்ட அழுகையின் சீற்றமும் வெஞ்சினச் சிரிப்பின் தீயும் சேர்ந்த எள்ளல் அந்தக்
குரலில் வெளிப்பட்டது.
கிருதவர்மனின் கண்கள் அச்சத்தில் உறைந்தன.
அந்த இரவு பல கொடுஞ்செயலுக்கு சாட்சியாய் இருந்தது.
*********
” பாபம்
செய்கிறேன். நான் பாபம் செய்கிறேன் “
கிருபரின் வார்த்தை கதறலாக வெளிவந்தது. எதையும் கேட்கவும் உணரும் நிலையில் அஸ்வத்தாமன் இல்லை. வஞ்சம் மட்டுமே அவன் உள்ளத்தில் நிரம்பி இருந்தது. அஸ்வத்தாமன் அதர்மத்தின் உச்சத்தில் நின்று பேயாட்டம் ஆடினான். உறங்கிக் கொண்டிருந்த திருட்டத் துய்மனின் தலையைப் பிடித்திழுத்து ஓங்கி தரையில் அடித்தான்.
என் தந்தையை அதர்மமாய் கொன்றாயே என்று கோபத்தின் உச்சத்தில் அலறினான்.
“போரில்
யாரும் எதிர்க்க முடியாத நாராயணாஸ்த்திரத்தை எய்த போது மாயக் கண்ணனின் வஞ்சனையால் அல்லவா நீ உயிர் பிழைத்தாய் ?
தப்பிக்கவே இயலாத அக்னியாஸ்த்திரத்தையும் உன் மேல்
எய்தேன். அதையும் அந்த மாயனே பாழடித்தான். ஆனால் இன்று யார் வந்து
காப்பாற்றப் போகிறார்கள்… நயவஞ்சகனே திருட்டத்துய்மா, உன் குருவையே அதர்மமாய் கழுத்தறுத்துக் கொன்ற உனக்கு
உயிர் பிழைத்திருக்க என்ன
தகுதி இருக்கிறது ”
திருட்டத்துய்மன்
சுதாரிக்கும் முன்னமே வெறியுடன் அவன் உயிர்நிலையில் உதைத்து அவனைக் கொடூரமாய்க் கொன்றான்.
உயிர்த் தப்பி இருந்த பாண்டவர்களின் படைவீரர்கள் பலரை அங்கேயே வெட்டிக் கொன்றான். போரில் உயிர்
பிழைத்தவர்களில் அந்த படைக் கூடாரத்தில் இருந்த யாரையும் தப்பவிடவில்லை. அஸ்வத்தாமனின் வாளில் தப்பி வெளியேறிய ஏனையோர்களை கிருபரும் கிருதவர்மரும்
வாயிலில் வைத்துக் கொன்றார்கள்.
அஸ்வத்தாமனின் கண்கள் இருளில்
பாசறை முழுதும் ஊடுருவியது.
அதோ அந்த ஐவர்.. துரியோதனா என் சபதம் முடிந்தது. இதோ பாண்டவர்கள்… இதோ உறங்குகிறார்கள்.
இனி நிரந்தரமாக உறங்குவார்கள். உனக்கு துணையாக அவர்களை அங்கே நீ காணலாம். உனக்கு முன்னமே அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.
இதோ அனுப்புகிறேன்.
அஸ்வத்தாமன் படுத்திருந்த ஐந்து பேரின் தலைக் குடுமியையும் சேர்த்துப் பிடித்தான்.
தன் வாளால் அவர்களின் தலையை கரகரவென அறுத்தான். அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
பாசறை தீப்பற்றி எரிந்தது.
” துரியோதனா… துரியோதனா… விழித்துக் கொள். ”
அஸ்வத்தாமன் கூக்குரலிட்டுக் கொண்டே ஓடிவந்தான்.
” உன் சித்தம் நிறைவேறியது.
இதோ பாண்டவர்களின் தலை. பார்… பார்.. உன் ஆசை தீரப் பார். இனி நிம்மதியாக உன் உயிரை விடலாம். உன் எதிரிகள் உனக்கு முன் அழிந்தார்கள்.
நீ வெற்றி பெற்றாய் நீ வெற்றி பெற்றாய். ”
துரியோதனன் மிகவும் சிரமப்பட்டு கண் விழித்தான்.
விடியலுக்கு இன்னும் சில நாழிகை மிச்சமிருந்தது.
இருள் அகலும் வேளை இன்னும் வரவில்லை. முகங்கள் தெளிவில்லை.
” எங்கே
அஸ்வத்தாமா… இங்கே கொண்டுவா, நீ எங்கிருக்கிறாய் என்றே தெரியவில்லை ”
” இதோ துரியோதனா… இதோ பாண்டவர்களின் தலைகள்.. பார் உன்னை இக்கதிக்கு ஆளாக்கிய பாண்டவர்கள் இவ்வுலகில் இல்லை… பார்
பார்… ஆசைத் தீர பார் ”
” எனக்கு
பீமனின் தலையை மட்டும் காட்டு… கொண்டு வந்து என் கையில் கொடு ”
அஸ்வத்தாமன் ஒரு தலையைக் கொண்டு போய் துரியோதனன் கையில் திணித்தான்.
” கிருபரே அந்த தீப்பந்தத்தை அருகே கொண்டுவாரும். ” அஸ்வத்தாமன் பரபரத்தான். தன் கைகளால் அந்த தலையை நொறுக்க நினைத்த துரியோதனன் தீப்பந்த வெளிச்சத்தில் அந்த தலையை நன்றாக உற்று நோக்கினான்.
” பாதகா. இவர்கள் இளம் பாண்டவர்கள். பாஞ்சாலியின் மக்கள். குருவம்சத்தை காக்க
கடைசியாக இருந்த சிறார்களை அழித்தாய். எனக்கும் அழியாப் பழி ஏற்படுத்திக் கொடுத்தாய். போ ..என் முன்னே
நிற்காதே..”
துரியோதனன் கதறினான். அவன்
உயிர் மெல்ல பிரிந்தது. அஸ்வத்தாமன் விக்கித்து நின்றான்.
*******
அஸ்வத்தாமன்
தனியனாய் அந்த காட்டில் ஏதோ ஒரு மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்திருந்தான். மதம் கொண்ட
யானை ஒன்று ஆங்காங்கே காட்டை அழித்துக் கொண்டிருந்தது. துதிக்கைத் தூக்கி அலறியது. இலக்கற்று ஓடியது. அதன்
காலடியில் சிக்குண்ட சிறு தாவரங்கள் எதிர்ப்புக்கு வழியின்றி அழிந்து போனது. அஸ்வத்தாமன் அந்த யானையை பார்த்துக் கொண்டே இருந்தான்.
மனம் ஒரு யானை. பழகாத யானை. யானை
சாதுவாக இருக்கும் நேரத்தில் அதைப் போன்ற ஒரு புண்ணிய ஜீவன் இல்லை. அதுவே மதம்
பிடித்து எதிர்க்கையில் அதைப் போல ஒரு அழிவு சக்தி ஏதும் இல்லை.
அஸ்வத்தாமனுள்ளும் ஒரு யானை சாதுவாய் உறங்கிக் கிடந்தது. இதுநாள் வரை அடக்கி வைக்கப் பட்ட ஆத்திரம் வெளிப் படத் தோதுவான சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம்
அந்த மிருகம் மதம் கொண்டு
விழித்தெழுந்தது. அந்தச்
சீற்றத்தில் பல உயிர்கள் நிலை
தெரியாமல் அழிக்கப் பட்டது.
தன் செய்கையை மனம்
நியாயப் படுத்தியது.
பாண்டவர்கள் இன்னும் அழியாமல் இருப்பது கண்டு மேலும் ஆத்திரம் வலுப்பட்டது.
தூரத்தில் சலசலப்பு கேட்டது. யானை இன்னுமா அங்கேயே இருக்கிறது என்று எட்டிப் பார்த்தான். யானை ஒரு பாறையின் ஓரத்தில் மற்றும் ஒரு பாறை
போல் நின்று கொண்டிருந்ததது. அதன் காது
விரைப்பாய் உயர்ந்து எதையோ உற்றுக் கேட்டது. இல்லை, இது யானையின் சலசலப்பு இல்லை. மனிதர்கள் வருவது போல் அல்லவா இருக்கிறது.
கிளையில் இருந்து சற்று
எழுந்து நின்று பார்த்தான்.
இதோ என் பிரிய எதிரிகள் வந்துவிட்டார்கள். அழித்துவிடுகிறேன் உங்களை… யார் அது உடன்
இருப்பது ? ஓ கபடக் கள்ளன் கிருஷ்ணனா ? இன்று அனைவரும் ஒழிந்தார்கள். அஸ்வத்தாமன் வில்லைத் தேடினான். துரியன் இறந்த அந்த வருத்தத்தில்
தன் வில்லையும் மறந்து வந்ததை அப்போது தான் உணர்ந்தான்.
மரத்தில் இருந்து குதித்தான்.
அருகில் இருந்த தர்பைப் புல்லைக் கிள்ளினான்.
” நில்
நில்… அஸ்வத்தாமா பாபத்திற்கு மேல் பாபம் செய்கிறாய் … நில் நில் ”
கிருஷ்ணன் அருகில் வந்துவிட்டான். அஸ்வத்தாமன் செய்கையை யூகித்து வெகு
வேகமாய் அவனை நோக்கி ஓடினான். அதற்குள் அஸ்வத்தாமன் மந்திரத்தின் சக்தியினால்
கையிருந்த புல் பிரம்மாஸ்த்திரமாக மாறி இருந்தது.
கிருஷ்ணன் அஸ்வத்தாமன் கையைப் பிடித்தான்.
” நிறுத்து அஸ்வத்தாமா ”
“வா கண்ணா, வா. வஞ்சகனே, தருமம் தவறி எல்லாம் செய்தாய். ஆனால் தருமம் காப்பதாய் சொல்லிக் கொண்டு திரிகிறாய்.
வஞ்சகத்தின் வேதனையை நீ அறிவாயா கிருஷ்ணா ? உயிர் நண்பன் உடன் இருந்தும் அவனைக் காக்கும் வழியற்று நடைப்பிணமாய் அவனுடன் திரிந்து அவன் உயிர்விட தன் மடியில் தாங்கி கண்களின் வழியே அவன் சொன்ன சேதியை உணர்வாயா நீ கண்ணா?
என்னை பாவம் செய்தவன் என்றாயே.. பாபத்தின் ஊற்றுக் கண்ணே நீதானே.. இன்றோடு நீயும், சாத்யகியும் உன் உயிர்
பாண்டவர்களும், அத்தனைப்பேரும்
அழிந்தார்கள் ”
பிரம்மாஸ்த்திரம்
பிரளயத்தை உருவாக்க காத்திருந்தது. அஸ்வத்தாமன் தொடர்ந்தான்.
“வஞ்சம், வஞ்சம்… இது தவிர்த்து எனக்கு என்ன பரிசளித்திருக்கிறாய் கிருஷ்ணா ? என் கண்ணைப் பார். வஞ்சகத்தை உள்வாங்கி, உள்வாங்கி ஒளியிழந்து போயிருக்கிறது. கர்ணனைக் கொன்றாய், பிதாமகரைக் கொன்றாய் இன்னும் பல மகாரதர்களைக் கொன்றாய். இவை அனைத்தையும் நீ வீரத்தால் சாதித்தாயா கிருஷ்ணா ”
அஸ்வத்தாமனின் கண்கள் பிரம்மாஸ்த்திரத்தைக் காட்டிலும் தீக்கொண்டு ஜொலித்தது.
கண்ணன் விபரீதம் உருவாவதை உணர்ந்தான்.
” அர்ஜ்ஜுனா தயாராகு”
கண்ணன் அர்ஜ்ஜுனனுக்கு ஆணையிட்டான்.
பிரம்மாஸ்த்திரத்தை தடுக்க பிரம்மாஸ்த்திரம் மட்டுமே பயன் படுத்த முடியும். அதை அறிந்தவர்கள் தற்போது இரண்டு பேர் தான். ஒருவன் கையில் ஏற்கனவே தயாராக இருக்கிறது. அர்ஜ்ஜுனன் வேகமாய் தயாரானான்.
” அஸ்வத்தாமா சொல்வதைக் கேள். இது பிரம்மாஸ்த்திரம். இதை உன் நியமத்தின் படி எய்ய இயலாது. அது மாபெரும் அழிவை எற்படுத்தும். ”
” இன்னும் யார் மிஞ்சி இருக்கிறார்கள்
அழிவதற்கு கண்ணா ? என் தந்தையை, ஆச்சாரியப் பெருமகனை, துடிக்கத் துடிக்க கழுத்தறுத்துக் கொன்றானே உன் நண்பன் அப்போது எங்கே போனது உன் நியாயம்? ”
” அஸ்வத்தாமா, உன் கையில் இருப்பது பிரம்மாஸ்த்திரம். விளையாட்டுப் பொருள்
அல்ல. அதை பிரம்மாஸ்த்திரம் அறிந்தவன் மேல் மட்டுமே எய்ய வேண்டும். ”
” இனி எதுவும் என்னை தடுத்து நிறுத்த முடியாது கண்ணா. என் அரசனை, என் உயிர் நண்பனை, என் சக மாணாக்கனை எனக்கு விரோதியாக்கியதும் இல்லாமல், அவனை அநீதியாய் கொன்றீர்களே…
உங்களை மன்னித்து விட இயலுமா ? அழிந்து போங்கள். முடிந்தால் உன் வஞ்சகத்தால் நீ மறுபடியும் காப்பாற்று”
பாண்டவர்களை நோக்கி அப பாண்டவம் என்ற பெயர் கொண்டு, பாண்டவ குலத்தை முற்றிலும் அழிக்க பிரம்மாஸ்த்திரம் சீறிப் பாய்ந்தது.
*******
” அஸ்வத்தாமா, எத்தனைச் சொல்லியும் பிரம்மாஸ்த்திரம் விடுத்தாய். அர்ஜ்ஜுனன் எதிர்
பிரம்மாஸ்த்திரம் விடுத்து தடுத்தான். அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க திரும்ப எடுத்தான். ஆனால்
தான் விடுத்த அஸ்திரத்தை மீட்டெடுக்க
முடியாத நீயெல்லாம்
வீரனா ? பாவத்தின் மீது பாவமாய், அதை பாண்டவக் குலத்தின் கடைசி
வாரிசாய் கருவில் இருக்கும் உத்திரையின் குழந்தைக்கு திருப்பி விட்டாய். பாதகா, உன் தந்தையைக் கொன்றது உன் நினைவு அல்ல. அவர் செய்த பாவம். அதர்மத்தின் பின் நின்று அபிமன்யூவைக் கொன்றீர்களே ? எந்த வகையில் அதற்கு நியாயம் கற்பிப்பாய் ?
துரோணரின் மனசாட்சியே அவரைக் கொன்றது. நீ சிரஞ்சீவி என்பது அவருக்குத் தெரியாதா ? பின் ஏன் தன் வில்லைத் தேர்த் தட்டில் எறிந்தார்” கண்ணனின் குரல்
அஸ்வத்தாமனை வதைத்தது.
அஸ்வத்தாமன் தலை குனிந்து நின்றான். உண்மை தான். அஸ்வத்தாமன் அழிவென்பது
இல்லாத சிரஞ்சீவி. அப்படியானால் ? துரோணர் தன்னை வேண்டுமென்றே கொல்ல ஒப்புதல் அளித்தாரா ? தற்கொலையினின்று தப்பிக்கத்தான் திருட்டத்துய்மன் தன்னைக் கொல்ல அனுமதித்தாரா ?
” பாஞ்சாலி, இதோ இருக்கிறான் உன் மக்களைக் கொன்ற படுபாதகன். இவனை என்ன செய்ய வேண்டும் சொல். உன் முடிவே இறுதியானது”
” கண்ணா, இவன் எங்கள் குருவின் புதல்வன். இவன் செய்த மாபாதங்களுக்கு
மரணத்தை பரிசாக்க வேண்டும். ஆனால் அது உடனடி அழிவு. சிரஞ்சீவியான இவன் ஒவ்வொரு நாளும் தான்
செய்த தவறுகளுக்கு வருந்தியே கடக்க வேண்டும். இவன் தலையில் இருக்கும் சிரோ மணியைப் பறித்துவிடுங்கள். அதுவே அவன்
மரணத்திற்கு சமமானது. ”
பாஞ்சாலியின் வார்த்தையில் அஸ்வத்தாமன் மனம் கூசியது. சிரோ மணி இழந்து மட்டுமின்றி, ஒரு பெண்ணிடம் உயிர் பிச்சை வாங்குவது காட்டிலும் கேவலம் உண்டா என்று அரற்றியது.
” ஆகட்டும் பாஞ்சாலி, கூடவே இத்தனை பாதகங்களைச் செய்த இவன் சிரஞ்சீவியாய் ஜீவிக்கும் பொழுது தோறும் பேயனாக, நோயுற்றவனாக அலையட்டும். ”
கண்ணன் அஸ்வத்தாமன் நெற்றி சிரோ மணியை பாஞ்சாலியிடம் ஒப்படைத்தான். அஸ்வத்தாமன் மீண்டும் தனித்து விடப்பட்டான்.
மதம் கொண்ட யானை
தன் மதத்தின் வீரியம் குறைந்து நின்றது. சுற்றிலும் பார்த்தது. தன் உடல் முழுதும் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் தன் வெறிச் செயலால் ஆனது என்பதை அது உணரமுடியவில்லை.
யானை வெகு களைப்பாய் தள்ளாடி நடந்தது காட்டினுள் சென்று மறைந்தது. அஸ்வத்தாமன் உலகமெங்கும் காலடித் தடங்களைப் பதிக்க
ஆரம்பித்தான். வேதனை
சிரஞ்சீவியானது. எங்கேனும் வஞ்சிக்கப் பட்ட ஒருவனின் குரல் வேதனையோடு ஒலிக்கும் போதெல்லாம், அஸ்வத்தாமன் அந்தக்
குரலொடு கலந்தான். நோயுற்று அழும் ஒவ்வொருவர் குரலுடனும் அஸ்வத்தாமன் குரல் சேர்ந்தது. எங்கேனும் இப்படியான வெஞ்சினமும், ஆற்றாமையும், வலியும் சேர்ந்த குரலை
கேட்க நேரிட்டால், உற்று நோக்குங்கள். அங்கே அஸ்வத்தாமன் இருக்கக் கூடும்..