வியாழன், 31 டிசம்பர், 2015

அலிஷாவின் சங்கடங்கள்


ஒருநாள், பெரியவர்களுக்கான அந்த மாலை வகுப்பில் அந்த மனோதத்துவ ஆசிரியர் உள்ளே நுழைந்ததுமே மாணவர்களிடம் 


"இன்று நாம் ஒரு விளையட்டு விளையாடுவோம்" என்றார்.


"என்ன விளையாட்டு?"
 


உங்களில் யாராவது ஒருவர் முன்னால்  வாருங்களேன்"  ஆசிரியர் அழைத்ததும் முன்னே வந்தார் அலிஷா.
 


ஆசிரியர் அலிஷாவிடம் அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான முப்பது பேர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதச் சொன்னார்.
 


அலிஷா அவர் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று முப்பது பேர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதினார்.
 


இப்போது ஆசிரியர் இந்த முப்பது பேர்களில் ரொம்ப முக்கியமில்லாத மூன்று பெர்களை அழிக்கச் சொன்னார்.
 


அலிஷா உடன் வேலை செய்பவர்கள் பெயர்களை அழித்தார்.
 


"இன்னும் ஒரு 5 பேர்களின் பெயர்களை அழியுங்கள்"
 


அலிஷா பக்கத்து வீட்டுக்காரர்கள் பெயர்களை அழித்தார்.
 


இது அப்படியே அவர்கள் உறவினர்கள் நான்கு பெயர்களின் பேர்கள் மட்டும் இருக்கும் வரை தொடர்ந்தது.  அம்மா, அப்பா, கணவர், மற்றும் அவர்களின் குழந்தை.

இப்போது வகுப்பறையே உறைந்து போய் கவனித்து கொண்டிருந்தது...
 


'இது விளையாட்டுமில்லை, அலிஷாவுக்கு மட்டுமானதுமில்லை.'
 


இப்போது ஆசிரியர் இன்னும் இரண்டு பெயர்களை அழிக்கச் சொன்னார்.
 


அலிஷா மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டு, தனது பெற்றோர்களின் பெயர்களை தயக்கத்துடன் மெல்ல அழித்தார்.
 


"தயவு செய்து இன்னும் ஒரு பெயரை நீக்குங்கள்"  ஆசிரியர்.
 


நடுங்கும் கைகள், கலங்கும் கண்களுடன் அலிஷா மிகவும் சங்கடமாக உணர்ந்தபடி மகனின் பெயரை அழித்து விட்டு, சத்தமிட்டு அழுதார்.
 


ஆசிரியர் அலிஷாவை இருக்கையில் அமரச் சொன்னார்.  கொஞ்ச நேரம் கழித்து "ஏன் உன் கணவரைத் தேர்ந்தெடுத்தாய்?  உன் பெற்றோர்கள்தான் உன்னை உயிராக்கி, உருவாக்கியவர்கள்.  உன் மகனோ குழந்தை, அதிலும் உன்னிலிருந்து தோன்றியவன்.  நீயோ இன்னொரு கணவனை சுலபமாகத் தேடிக் கொள்ளலாம்.  அப்படியிருக்க...?"
 


மொத்த வகுப்பறையும் அலிஷாவின் பதிலுக்காய்க் காத்திருந்தது.
 


"ஒருநாள் - எனக்கும் முன்னதாக - எனது பெற்றோர்கள் என்னை விட்டு மறைந்து விடுவார்கள்.  என் மகனும் அவன் வயதுக்கு வந்ததும் என்னை விட்டு விலகி விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.  கடைசி வரை என்னுடன் உண்மையாக அவர் வாழ்வைப் பகிர்ந்து கொள்பவர் என் கணவர் மட்டுமே.."
 


வகுப்பே எழுந்து நின்று கைதட்டியது.
 


இது எனக்கு வாட்ஸப்பில் வந்த செய்திப்பகிர்வு.  உங்கள் வாழ்க்கைத் துணையை மதியுங்கள் என்கிற மெஸேஜோடு!
 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?   உங்கள் வாழ்க்கையின் அதி முக்கிய நபர் யார்?


====================================================================

ஃபேஸ்புக்கில் அவ்வப்போது கிறுக்கும் "கவிதை"களிலிருந்து சில இங்கு...
 

மூப்பு :

வாடியதால்
வாசம் தொலைத்த
மலரொன்று
விழுந்து கிடக்கிறது
வற்றிய குளத்தில்

ஏற்கெனவே
விழுந்து கிடந்த
மஞ்சள் இலைகள்
காற்றில் நகர்ந்து
ஆதுரத்துடன்
அணைத்து மூடுகின்றன
மலரை


====================================================================

சென்னையில் பயமுறுத்திய மழை நிற்காதபோது!

தீபாவளிக்கு வந்து
திரும்பிப் போகாத
மாப்பிள்ளை போல,
 
எப்பவோ ஆரம்பித்து
இன்னும் நிற்காமல்
பெய்யும் மாமழையே
நாங்கள்
நிராயுதபாணி
ஆகிவிட்டோம் 

இந்தவருடம் போய்
அடுத்தவருடம் வா...
இப்படிக்கு சென்னை மக்கள்!


=================================================================


மா மழையைத் தொடர்ந்து..

மழையாமியின்
பொழிவில்
ஆறுகள்
வெள்ளங்களை
ப்ரவகிக்கச் செய்த
அந்த நள்ளிரவில்
மறைந்தது மதம்
பூத்தது
மாபெரும் மனிதம்.

====================================================================

யதார்த்தக் கவிதை  :

அழுது கொண்டிருந்த
அனைவரும்
ஆற்றங்கரைக்குப்போய்க்
குளித்து விட்டு
வந்த பிறகு

புன்னகைக்கத் தொடங்கினார்கள்...

அடுக்களையை
எட்டிப்பார்த்த
அக்கா சொன்னாள்..
"எளவு..
எலையப் போட்டா
சாப்பிட்டுக் கிளம்பிடலாம்..
டிரெயினுக்கு நேரமாகுது...
"


=====================================================================

மேய்ப்பன் :

 
பசுக்கள்
திரும்பி விட்டன
மேய்ச்சலிலிருந்து.
மேய்ப்பனைத்தான் காணோம்.
வெள்ளை மாடொன்றின்
கொம்பில்
மாட்டியிருக்கிறது
உடைந்த புல்லாங்குழலின் 
துண்டு ஒன்று...


===================================================

சிந்தனைச் சிதறல்கள்.... !!

-  சிலர் சொல்லும் கருத்தை ஏற்காததற்கு அந்தச் சிலரை நமக்குப் பிடிக்காததும் காரணமாக இருக்கலாம்!.


-  தவறாயிருந்தாலும் சிலர் கருத்தை மறுக்காததற்கு அந்தச் சிலரை நமக்கு ரொம்பப் பிடிப்பதால் கூட இருக்கலாம்.

==================================================================

நீண்ட நாள் தேடி,  பின்னர் கிடைத்த, பிடித்த M K T பாகவதர் பாடல்  :

உன்னையே அன்புடன் வாரியணைக்கும்
உன்னையே அன்புடன் வாரியணைக்கும்


அன்னையே பூமியில் நீ தேடவும் நின்றாய்
விதிவசமென்றேன் 


கண்ணையிந்தேன் காணவுமில்லேன் என்
கண்ணையிந்தேன் காணவுமில்லேன்


கண்மணி நீயே கண்ணுறங்காயே
கண்மணி நீயே கண்ணுறங்காயே 


வானமுதே தேனே வாழ் உலகில் மானே
வானமுதே தேனே வாழ் உலகில் மானே


வளர்கண் தாலேலோ வளர்கண் தாலேலோ

புன்னகை மாமுக கனி பிழி ரசமே கனி பிழி ரசமே

தாவியே சூழத் தங்க மஞ்ச மேல் உறங்க மஞ்ச மேல் உறங்க

தாவியே சூழத் தங்க மஞ்ச

விழிகள் குளிரக் காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே
தங்கமே ஏழையெமக் காவியும் நீயே ஆவியும் நீயே


செவ்வாய், 29 டிசம்பர், 2015

விகடனும் குமுதமும் - ஜீவி



மு(எ)ன்னுரை ::  நன்றி ஜீவி ஸார்.  என்  என் வேண்டுகோளுக்கு இணங்கி, நீங்கள் அனுப்பிய உங்கள் கதைகளில் ஒன்றை இங்கு உங்கள் அனுமதியோடு பிரசுரிக்கிறோம். 


எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய கதை. வாசகர்கள் இதைப் படித்துத் தங்கள் கருத்துகளை இங்கு விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  

உங்களின் கதை ஒன்றைப் பிரசுரிக்கும் வாய்ப்பு 'எங்களு'க்கு அமைந்தது தற்செயல்தான் என்றாலும்,  அடுத்தடுத்தும் நம் வலையுலக நண்பர்களின், பத்திரிகைகளில் பிரசுரமான, அவர்களின் படைப்புகளை, அவர்களிடம் கேட்டு (அவர்கள் மனமுவந்து கொடுத்தால்) வாங்கிப் பிரசுரிக்க எண்ணம்.

அடுத்த படைப்பை திருமதி ராமலக்ஷ்மி அவர்களிடமிருந்து கேட்க எண்ணம்.  இங்கு பொதுவில் சொல்லி விட்டேன்.   மெயில் மூலம் இனிதான் கேட்க வேண்டும்.


திரு ஜீவியின் வலைத்தளம் பூவனம்
 


இனி ஜீவி ஸார் படைப்பு உங்கள் பார்வைக்கு...



========================================================

காலத்தின் முத்திரை செழுமைக்காகக் காத்திருக்கும் கதை

======================================================
அது என்ன காலத்தின் செழுமைக்காகக் காத்திருத்தல்?

'தி  இந்து'  டிசம்பர் 24, 2015 பதிப்பில் ஒரு செய்தி:

தமிழகத் தலைநகரில் தற்போது 4 குடும்ப நல நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், வழக்கு எண்ணிக்கை தொடர்ந்து  அதிகரிப்பதாலும் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்கள் அமைப்பதற்காக ரூ.3.15 கோடியை  தமிழ்க அரசு ஒதுக்கியுள்ளது  

-- எவ்று செய்தி வந்துள்ளது.

இது தான்  காலத்தின் செழுமைக்காக காத்திருப்பது.  விவாகரத்து போன்ற மன வேற்றுமை செயல்பாடுகளைக்  குறைப்பது.





         விகடனும் குமுதமும்
            ஜீவி




வெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை.



கோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. சரியா நாலு மணிக்கு ராஜியிடமிருந்து எத்தனை மணிக்கு இவன் வீட்டுக்கு வந்து குழந்தையைக் கொண்டு வந்து விடுகிறாள் என்று போன் வந்து விடும். முதல் தடவையாக இன்று தான் போனில்லை.



மோகனுக்கு ஆயாசமாக இருந்தது.



நாலரை மணிவரை கூப்பிடக் காணோம். என்ன ஆயிற்று இவளுக்கு?.. அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாமே அவளுக்குப் போன் பண்ணிப் பார்க்கலாமா என்று அவன் நினைத்த பொழுது தான் தொலைபேசி கூப்பிட்டது.



ராஜிதான் லைனில் இருந்தாள். அவள் குரலில் ஏகப்பட்ட பதட்டம். "ரமேஷை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது" என்று முழுசாக மூணு வார்த்தைகள் சொல்வதற்குள் அவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.



மோகன் பதறிப் போய்விட்டான். "என்னாச்சு?.. எங்கேயிருந்து பேசறே?.." என்று தடுமாறினான்.



"ஆசுபத்திரிலேந்து தாங்க... குழந்தைக்கு திடீரென்று ஜூரம் அனலாக் கொதிக்க..."



"எந்த ஆசுபத்திரி?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு நெற்றி பூராவும் வியர்த்து விட்டது.



"புஷ்பம் ஆசுபத்திரிங்க...ஆறாவது வார்ட்... இன்னிக்கு ஸ்கூல் கூட போனான்.." அவள் சொல்லி முடிக்கக் கூட பொறுமையாக அவனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.



"இதோ வந்திட்டேன்.." என்று போனைத் துண்டித்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.



புஷ்பம் ஆசுபத்திரி வழக்கமான ஆசுபத்திரி களையுடன் இருந்தது.



லிப்ட்டிற்கு காத்திருக்கையில் 'ச்சை..' என்று வெறுத்து, ஒருவழியாக அது வந்து ஆறேழு பேர் அதில் திணிக்கப்பட்டு, ஆறாவது மாடிக்கு வருகையில் அவனுக்கு வியர்த்தது... வார்டுக்குள் நுழைகையிலேயே ராஜி எதிர்ப்பட்டாள். "என்ன செஞ்சு தொலைத்தே?" என்று சீறிவிழப் போனவன், முகம் நிறைந்த கலவரத்துடன் அவளைப் பார்த்ததும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.



ரமேஷ் கட்டிலில் ஜூர அனத்தலில் கிடந்தான். " இங்கே பார்! அப்பாடா..ரமேஷ்!.." என்ற அவனின் கூப்பிடலுக்கு லேசாகக் கண்ணைத் திறந்துப் பார்த்து உடனே மூடிக்கொண்டான்.



"இப்போத்தான் டாக்டர் வந்து ஊசி போட்டு விட்டுப் போனார்.... தூங்கி எழுந்திருந்தா ஜூரம் தணியும் என்று சொல்லியிருக்கார்.." என்று சொன்னவளை விரோதத்துடன் பார்த்தான்.



"வழக்கம் போல ஸ்கூலுக்குப் போனான்.. அவன் வந்ததும், உங்ககிட்டே கொண்டு வந்து விடலாம் என்று நானும் ரெடியாத்தான் இருந்தேன்.. வரும் பொழுதே தலைய வலிக்கறது அம்மான்னான். நெத்திலே கைவைச்சுப் பார்த்தா லேசா சுட்டது..மாத்திரை கொடுத்தேன்,கேக்கலே.. கொஞ்ச நேரத்லே ஜூரம் தகிக்க ஆரம்பிச்சிடுத்து...அதான், இங்கே அட்மிட் பண்ணிட்டு, உங்களுக்கு போன் செஞ்சேன்.." என்று மூச்சு வாங்க ஒப்பித்த அவளைப் பார்க்கையில் அவனுக்கு லேசாகப் பரிதாபமாக இருந்தது.



"டாக்டர் என்ன சொன்னார்?"



"ஊசி போட்டிருக்கார்..மாத்திரையும் கொடுத்திருக்காங்க.. சாதாரண ஒவ்வாமை தான், சரியாப் போயிடும்னு சொன்னார்.." என்று சொல்லிவிட்டு, புடவைத் தலைப்பால் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமப் பொட்டு அழிந்து விடாமல் ஜாக்கிரதையாக வேர்வை துடைத்துக் கொண்டாள் ராஜி. கழுத்தில் இரட்டைவட சங்கிலியுடன் தாலிச்சரடு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.



அவன் வந்ததும் தான் அவளிடம் இருந்த பதட்டம் தணிந்து லேசான நிம்மதி ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதி.



கொஞ்ச தூரத்தில் ஸ்டெத்ஸ் மாலையுடன் நாலைந்து பேர் விவாதித்தபடி வருவது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. அதில் சிவப்புக்கலர் சட்டை போட்ட ஒருவரைச் சுட்டி, "அந்த டாக்டர் தாங்க நம்ம ரமேஷைப் பார்த்தது.." என்றாள் ராஜி.



அதற்குள் டாக்டரே இவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டார். அவளைப் பார்த்து, "பிளட் ரிசல்ட்டும் பார்த்திட்டேன்...பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை..." என்றவர், கட்டிலில் கிடந்த ரமேஷின் நாடி பிடித்துப் பார்த்து விட்டு தலை நிமிர்ந்தார். இப்பொழுதுதான் மோகனைப் பார்த்தார் போலும்.



அதற்குள் மோகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். "நான் தான் ரமேஷ் ஃபாதர், டாக்டர்.. "



"அப்படியா...குட்..ஒண்ணுமில்லை, கொஞ்ச நேரத்திலே, ஜூரம் விட்டுறும்.. தென் ஹி வில் பி நார்மல்.. .கே.. கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் .." என்ற டாக்டர்மோகனைப் பார்த்து, " இன்னும் ரெண்டு வேளைக்கு மாத்திரையை மட்டும் கண்டினியூ பண்ணச்சொல்லியிருக்கேன்..நான் நாளைக்குப் பாக்கறேன், அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்...



அவர் கிளம்பும் பொழுது ராஜியைப் பார்த்து, "நல்லவேளை..உடனே கூட்டி வந்து அட்மிட் செய்தீர்கள்.." என்று அவள் செய்ததைப் பாராட்டுகிற மாதிரி சொன்னது, அவனுக்கு ஏதோ தான் குற்றமிழைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.



நினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ நாடகம் போலிருக்கிறது. யாரோ முதலிலேயே சீன் சீனாக அழகாக எழுதி, காட்சியமைப்புகள் எல்லாம் தீர்மானித்து விட்டு, இந்த இந்த பாத்திரங்களில் நடிக்க நீங்களெல்லாம்தான் லாயக்கு என்று நடித்துக் கொடுக்கக் கூப்பிட்ட மாதிரி இருக்கு.. நடிப்பதில் ஒன்றுதலும், செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்கிற பக்குவமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக் கென்று ஸ்பெஷலாக காட்சியமைப்புகளில் மாற்றம் இருக்கும் போலிருக்கிறது. மற்றபடி வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடையாகத்தான் அவனுக்குப் பட்டது.



இன்னகாரணம் என்று சுட்டிக் காட்ட எதுவும் இல்லை. தொட்டதெற்கெல்லாம் அது எதெனால் என்று தெரியவில்லை, இருவருக்கும் பிடிக்காமல் போயிற்று.    கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்தக் கதைதான். அவனுக்கு விகடன் என்றால் இவளுக்கு குமுதம் என்கிற மாதிரி சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் மாறுபட்ட கருத்து.



ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் தங்கள் சுயத்தைக் கட்டி அழுதால் இப்படித்தான் நேரும் போலிருக்கு. இருவரிடத்திலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுத்தல் இல்லாதபொழுது அது வெடித்துச் சிதறியது. கடைசியில் பிரிந்து விடுவது என்று தீர்மானித்து கோர்ட் வரை போனார்கள். அவர்களும் ஆனவரை சேர்த்துவைக்கப் பார்த்தார்கள். முடியாது போனபோது, 'ஆறுமாசம் தனித்தனியாக வாழ்ந்து காட்டுங்கள்; அப்புறம் தான் எந்த நடவடிக்கையையும் பற்றித் தீர்மானிக்க முடியும்' என்றார்கள். ராஜி அவள் பிறந்த வீட்டிற்குப் போனாள். பெற்றவர்கள் சொன்ன எந்த புத்திமதியையும் ஏற்றுக் கொள்ள இருவருக்குமே சங்கடமாக இருந்தது.



இவர்கள் இருவரும் குவிமையமாக ஒன்று சேர்ந்த ஒரே விஷயம், பெற்றெடுத்த குழந்தையிடம் பாசம் காட்டியது தான். அவனுக்கும் பத்து வயசு முடியப்போகிறது.. நான்காம் வகுப்பு படிக்கிறான். ரமேஷின் பள்ளிக்கூட நேரமும், இவர்கள் அலுவலக நேரமும் போக மற்ற நேரமெல்லாம் அவனிடம் கொஞ்சிக் குலாவுவதில் இருவருமே குறைவைத்ததில்லை; தனித்தனியான கொஞ்சல் போக, சில நேரங்களில் குழந்தையை நடுவில் வைத்து ஆளுக்கொரு பக்கமாக அணைத்துக் கொள்ளும் சந்தர்பங்களும் வரும். இருவர் முகங்களும் குழந்தையை நடுவில் வைத்து மிக நெருக்கத்தில் இருக்கும் அப்படிப்பட்ட நேரங்களில், இரண்டு பேருக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு, எதற்காக இப்படி ஒருத்தருக்கொரு த்தர் மாறுபட்டு சண்டை போட்டுக் கொள்கிறோம் என்று இருவருக்குமே புரியாது. இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் முரண்பட்டு அதுவே ஒரு பெரும் குதறலாக முடிந்துபோகும்.



அதுவும் கோர்ட் சொன்ன வழிகாட்டல் தான்; ஒவ்வொருவாரமும் ஒருவரிடம் என்று, மாற்றி மாற்றி குழந்தை இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுக்குள் யாரிடம் குழந்தை இருக்கிறதோ, அவர் இன்னொருவரிடம் குழந்தையை தன் பொறுப்பில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டு இதுவரை காப்பாற்றிவிட்டார்கள். எந்தத் தடவையும் இல்லாதபடி இந்தத் தடவைதான் குழந்தை ரமேஷூக்கு உடல்நிலை சரியில்லாது போய் அவனை ஆசுபத்திரியில் சேர்க்கும் படி ஆகிவிட்டது.



"ஏங்க...குழந்தை உங்களைக் கூப்பிடறாங்க.." என்று ராஜியின் குரல் கேட்டு, மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்த்திருந்தவன், சிந்தனை கலைந்து 'பெட்'டுக்கு ஓடி வந்தான்.



மலங்க மலங்க விழித்த ரமேஷைப் பார்த்து ஆடிப்போய்விட்டான் மோகன். "ரமேஷ்..இங்கே பார்!..அப்பா வந்திருக்கேன், பார்.." என்று தடுமாறியவனின் சட்டை நுனியைப் பிடித்துக் கொண்டான் குழந்தை.



ஜூரம் தணியாததின் வேகம் கண்ணிலும், அணத்தலிலும் வெளிப்பட்டது. "அப்பா..." குரல் ஈனஸ்வரத்தில் குழந்தையிடமிருந்து வெளிப்பட தலைகுனிந்து, "நான் இங்கேதாண்டா இருக்கேன்.." என்று வாத்ஸல்யத்துடன் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.



அரைகுறைக் குழறலுடன். "அப்பா..நீ எங்கேயும் போயிடாதேப்பா.." என்று கைநீட்டி மோகனின் முகம் தொட்டான் ரமேஷ்.



மோகனின் கண்கள் கலங்கி விட்டன.."எங்கேயும் போகமாட்டேன்...இங்கேயே இருக்கேன், பார்!" என்று அவன் ரமேஷை அணைத்துக் கொண்டபொழுது தணலாகச் சுடும் உடம்பின் வெப்பம் அவனையே சுட்டது. 'ஆண்டவனே!... குழந்தையைக் காப்பாற்று....அப்படியே இந்தக் குழந்தையின் ஜூரத் தகிப்பை எனக்கு மாற்றிவிடு...எந்தத் தப்பும் செய்யாத இந்த சின்னஞ்சிறு உயிரைக் காப்பாத்துப்பா' என்று மனசார வேண்டிக் கொண்டான் மோகன்.



அவன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்து விட்டாள் ராஜி. "அதான் டாக்டர் சொன்னாரே..ரமேஷுக்கு சரியாப் போயிடுங்க...நீங்க கலங்கினா, எனக்கு யாருங்க ஆறுதல் சொல்லுவா...ப்ளீஸ்.."



கொஞ்ச நேரத்தில், ரமேஷூக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு தூக்கம் வந்ததோ தெரியவில்லை....சீராக சுவாசம் இழையோட, லேசாக உதடு திறந்து தூங்கும் குழந்தை கையைத் தொட்டவாறு அருகேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து விட்டான் மோகன். படுக்கைக்கு அருகில் சுவரில் சாய்ந்தவாறு ராஜி.



பொ பொலவென்று பொழுது விடிந்திருந்தது.



லேசான முதுகுத் தொடலில் திடுக்கிட்டு விழித்தான் மோகன். ராஜிதான். அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்தபடி தன்னையறியாமல் தூங்கிப் போயிருக்கிறான்.



"தூக்க மருந்து கொடுத்திருக்காங்க போலிருக்கு; ராத்திரி முழுக்க ரமேஷ் நல்லாத் தூங்கினாங்க... இப்போ ஜூரம் நல்லா இறங்கியிருக்குங்க.." என்று முகம் மலரச் சொன்னாள்.



நெற்றியில் கைவைத்துப் பார்க்கையில் மோகனுக்கும் திருப்தியாயிருந்தது.



"நீங்களும் இல்லையா?..நான் ரொம்பவும் பயந்து போய்ட்டேங்க..இனிமே என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க.." என்றவளின் கண்கள் கலங்கி அவனை நெகிழச்செய்தது.



"சீ..அசடு மாதிரி அழாதே!..என்னை விட நீ தான் தைர்யசாலின்னு நான் நெனைச்சிண்டு இருக்கேன்.. நீயே கலங்கினா, எனக்கு யார் இருக்கா, சொல்லு!" என்று மோகன் அவள் கைபற்றினான்.



"எல்லாம் என் தப்பு தாங்க.. நான் சொல்றது ரைட்டாத்தான் இருக்கும்ங்கற மனோபாவம்..சின்ன வயசிலேந்து, இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கறது தெரியாமலேயே வளர்ந்திட்டேங்க...எங்க அம்மா,அப்பா சொல்றதைக் கேட்டிருந்தாக்கூட இந்தளவுக்கு ஆகியிருக்காது.." என்று குமைந்தவளை ஆசுவாசப்படுத்தினான் அவன்.



"இல்லே, ராஜி.. நீ எவ்வளவோ நல்லவள்; வெகுளி...எனக்கும் இத்தனை முரட்டுத்தனம் கூடாது."



"நீங்க ஆயிரம் சொல்லுங்க, எனக்கு மனசு கேக்கலே..நமக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க... அப்பா-அம்மா இருக்காங்கதான்! இருந்தாலும் நாமே அப்பா அம்மா ஆகிட்ட பின்னாடி கொஞ்ச கூட விவஸ்தையில்லாம, நம்ம குழந்தைக்கெதிராவே சண்டை போட்டிருக்கோமே?.. நம்மை விட்டா அதுக்குத்தான் வேறே என்ன நாதி இருக்கு?..ராத்திரி பூரா நெனைக்க நெனைக்க எனக்கு மனசே ஆறலிங்க.." என்று கேவியவளை, தோள் தொட்டுச் சமாதானப்படுத்தினான் மோகன்.



"சரி..சரி..உனக்கு நான்; எனக்கு நீ; நமக்கு நம்ம குழந்தை ரமேஷ்!. சரிதானா?.. முக்கோணம் போல அமைஞ்சாச்சு...அதைக் காப்பாத்திக்கறது நம்ம சாமர்த்தியம்.. இத்தனை காலம், யதார்த்த உலகம் புரியாம வானத்லே பறந்தோம்..இப்போ தான் பூமிலே கால் பாவித்து..." என்று ஏதோ தத்துவம் போல் சொல்பவனை, புரிந்து கொள்ள முயற்சிப்பது போல நிமிர்ந்து பார்த்தாள் ராஜி.



காலை டெஸ்ட்டுகளுக்காக தூரத்தில் நர்ஸ் வருவது தெரிந்தது.



"நீ வேணா பல் விளக்கிட்டு வா..நான் போய் காப்பி வாங்கிட்டு வந்திடறேன்" என்றான் மோகன்.



"இல்லே..மாமா ராத்திரி போன் பண்ணினார். வர்றதா சொல்லியிருக்கார்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மோகனின் பெற்றோர் அந்த வார்ட் கோடியில் வருவது தெரிந்தது. கூடவே ராஜியின் அப்பாவும் அம்மாவும். மோகனின் அம்மா கைக்கூடையில் காபி பிளாஸ்க் இருப்பது பக்கத்தில் வந்ததும் தெரிந்தது.





"ரமேஷூக்கு இப்போ எப்படிம்மா, இருக்கு..தேவலையா?" என்றவருக்கு, "இப்போ பரவாயில்லையப்பா. டாக்டர் வந்து பார்த்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடுவார் என்று நினைக்கிறேன்" என்றாள்.



"எங்களுக்கு ரொம்ப கவலையா போயிடுதுப்பா.." என்ற ராஜியின் அப்பாவிற்கு, "நானும் ரொம்ப பயந்திட்டேன், மாமா..இப்போ எங்க கண்களும் திறந்திடுச்சி.." என்று அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான் மோகன்.



கொண்டு வந்த கைக்கூடையில் இருந்த காபி பிளாஸ்க்கை டேபிளின் மேல் வைத்த மோகனின் அம்மா, கைப்பர்ஸ் திறந்து ஒரு பொட்டலம் பிரித்து அதிலிருந்த வீபூதியை வேண்டிக்கொண்டே ரமேஷின் நெற்றியில் இட்டார்.



மாம்பலம் வீடு.



சோபாவின் ஆளுக்கொரு பக்கமாக மோகனும், ராஜியும் இருக்க நடுவில் ரமேஷ்.



"என்னப்பா உன் கையிலே குமுதம்! அம்மா புஸ்தகம்னா அது?" என்று அப்பாவைத் துளைத்தெடுத்த ரமேஷூக்கு, "இது கூட வெறைட்டியா நன்னாத்தாண்டா இருக்கு," என்றவனை மலங்க மலங்கப் பார்த்தான் ரமேஷ்.



"விகடன் மட்டும் என்னவாம்?..அட்டகாசமான்னா இருக்கு.." என்று அப்பாவைப் பார்த்து குறும்புடன் சொன்ன அம்மாவைப் பார்க்கையில் அதிசயமாக இருந்தது அவனுக்கு.



மோகனின் பக்கத்தில் இன்னும் நெருங்கி, ரகசியமாக அவன் கைதொட்டு தன் கைக்குள் வைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராஜிக்கு இந்த சொர்க்கமே தன் கைக்குள் இருப்பது மாதிரியான உணர்வேற்பட்டது.



'ரமேஷூக்கு அடுத்து இதோ இன்னொரு குழந்தை' என்று நினைத்துக் கொண்டான் மோகன்.