முந்தைய பதிவு சுட்டி <<
எக்மோரிலிருந்து புரசவாக்கத்திற்கு, ஒரு பஸ் பிடித்து, 'கங்காதீஸ்வரர் டாங்க்' நிறுத்தத்தில் இறங்கி, அண்ணன் வழி காட்ட, சுந்தரம் (பிள்ளைத்) தெருவில் இருக்கின்ற அண்ணன் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டில் மொத்தம் எட்டுக் குடித்தனங்கள் இருந்த ஞாபகம். நாங்கள் இருந்த முதல் மாடியில் ஐந்து குடித்தனங்கள் இருந்தன.
அண்ணி ஆசிரியை. புரசவாக்கம் முத்தையா செட்டியார் ப்ரிபரேட்டரி ஸ்கூலில் பணிபுரிந்து வந்தார். அங்கு படித்த எல்லோருக்கும் (கமல்ஹாசன், மஞ்சுளா, குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த சில ஆசிரியர்களின் குழந்தைகள் என்று பெரிய பட்டியலே சொல்லுவார் என்னுடைய அண்ணி! கொஞ்சம் ரீலும் விடுவார். நான் இவர்களில் யாரையாவது சந்தித்தால் அண்ணி சொன்னது சரிதானா என்று அவர்களிடம் கேட்கவேண்டும் !) கீதா டீச்சரை ஞாபகம் இருக்கின்றதா என்று கேட்டால், அவர்கள் என் அண்ணியைப் பற்றிக் கூறுவார்கள்!
அசோக் லேலண்டில் பெரிய பதவி வகித்துக் கொண்டிருந்த ஒருவர், (பெயர் தெரியும்; ஆனால் சொல்லமாட்டேன்!) நாகைக்கு லீவில் வந்திருந்தார். அவரை, என்னுடைய அப்பாவின் முதலாளிக்குத் தெரியும். அந்த முதலாளியின் சிபாரிசின் பெயரில், நாங்கள் (அப்பாவும் நானும்) அவரைச் சென்று பார்த்தோம். அவரிடம் அசோக் லேலண்டில் எனக்கு அப்ரெண்டிஸ் ஆக சேர) எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ள விவரத்தைக் கூறினோம். (ஹி ஹி கூறினோம் இல்லை - கூறினார், என் அப்பா. எனக்கு அப்பொழுதெல்லாம் அதிகம் பேச வராது! ) அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். அசோக் லேலண்டில் நாங்கள் என்ன உற்பத்தி செய்கிறோம் தெரியுமா? என்று கேட்டார். 'லாரி, பஸ்' என்றேன். "Commercial vehicles. Our product name is Comet. Prepare well for quiz type questions" என்றார். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்" என்றார்.
அந்தக் காலத்தில், நாகப்பட்டினம் (போன்ற பகுதிகளில்) பாலிடெக்னிக் படித்து, மூன்றாவது ராங்க் எடுத்த எனக்கும், முதல் ராங்க் எடுத்த பக்கிரிசாமி, இரண்டாம் ராங்க் எடுத்த கருணாநிதி போன்ற என் நண்பர்களுக்கும், competitive exams என்றால் என்ன என்றே தெரியாது. எங்களுக்குத் தெரிந்த கடினமான கணிதக் கேள்வி, காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்? என்பதுதான். (இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்). அந்தக் காலத்தில் கால்குலேட்டர்கள் கூடக் கிடையாது! .
அண்ணனிடம், competitive exam விவரங்கள் பற்றி நான் கூறியவுடன், அவருடைய அலுவலகத்தில் (Kilpauk Medical College Hospital Administration) சர்க்குலேஷன் லைப்ரரியில் இருந்து, Competition Success Review புத்தகத்தின் நடுவில், சிறிய அளவில் இருக்கும் பகுதியில் இருக்கின்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துப் படித்து பதில்கள் அளிக்கச் சொன்னார். அது மாதாந்திர பத்திரிக்கை என்று நினைக்கின்றேன். பழைய CSR பத்திரிக்கைகளின் நடுப் பகுதிகளையும், (சர்க்குலேஷன் முடிந்து புத்தகக் கடைக்கு எடைக்கு போட வைத்திருந்த) புத்தகங்களிலிருந்து கிழித்துக் கொடுத்தார். ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்குள் படித்து, தயார் செய்துகொண்டேன்.
அப்ரெண்டிஸ் எழுத்துத் தேர்வுக்கு, இந்த கேள்விகள் எல்லாம் பெரிதும் உதவின. அதே வகைக் கேள்விகள் அந்த Written exam கேள்வித் தாளில் நிறைய வந்திருந்தன. அந்த நாட்களில் Quiz type கேள்விகள் என்றால் என்ன என்றே தெரியாதிருந்த எனக்கு Competition Success Review என்ற புத்தகத்தையும், அதன் நடுப் பகுதியையும், கேள்விகளையும், அறிமுகம் செய்து, அண்ணன் காட்டிய வழி, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
============================== =====
அசோக் லேலண்டின் அசெம்பிளி பிரிவில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி பிரிவில், ஜான் என்று வயதான நண்பர்.
ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி என்பது பார்ப்பதற்கு சுலபமாகத் தோன்றும். ஆனால், கை சக்கரத்தை (steering wheel) சுற்றும் பொழுது, தரை சக்கரத்தை (Road wheel) இயக்குகின்ற Cam & Roller மெக்கானிசம் சரியாக செட் செய்வது மிகவும் கடினமான வேலை. அந்த வேலைக்கு யாராலும் 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்று செய்முறை எழுதமுடியாது. ஸ்டீரிங் வீலில் இவ்வளவு டார்க் கொடுத்தால், அது இயங்கவேண்டும் (இணைப்புகள் இல்லாத பொழுது, இணைப்புகள் இணைத்த பிறகு, வண்டி முழு லோட் செய்த பிறகு என்று பல கட்டங்கள் உண்டு.) என்று சொல்ல முடியுமே தவிர, அதை எப்படி வரவழைப்பது என்பது யாராலும் சொல்லமுடியாது. அவைகளை சரியாக வரவழைக்க ஜான் ஒருவரால் மட்டுமே முடியும். அதற்கு Shims adjustment என்று பெயர். ஜான் அவர்களின் தாரக மந்திரம், 'கண் குன்சு, கை ஃபீலிங்' என்பது. மனிதர் ஸ்டீரிங் அட்ஜஸ்ட் செய்ய வந்தால், இப்படி ஒரு தட்டு, அப்படி ஒரு தட்டு, இங்கேயிருந்து இரண்டு ஷிம் எடுத்து அந்தப் பக்கம், மீண்டும் சில தட்டுகள், சுத்தியல் கொண்டு ஸ்டீரிங் ஷாப்டில் கொஞ்சம் அடி, ராக்கர் ஷாப்டில் கொஞ்சம் தட்டுவார். ஸ்டீரிங் செட் ஆகிவிடும்.
ஜான் ரொம்ப வருடங்கள் முன்பே ரிட்டையர் ஆகிவிட்டார். தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு சிஷ்யரை நன்றாகத் தயார் செய்திருந்தார். அவரும் என்னுடைய நண்பர். விரைவில் நாங்கள் இந்த வகை ஸ்டிரிங் பெட்டிகளுக்கும் ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது.
ஜான் ரொம்ப வருடங்கள் முன்பே ரிட்டையர் ஆகிவிட்டார். தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு சிஷ்யரை நன்றாகத் தயார் செய்திருந்தார். அவரும் என்னுடைய நண்பர். விரைவில் நாங்கள் இந்த வகை ஸ்டிரிங் பெட்டிகளுக்கும் ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது.
ஜான் மாதிரி ஆட்கள், அ லே வில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு யூனிட்டிலும், உண்டு. அவர்கள்தான் அசோக் லேலண்டின் இராஜ அச்சுகள் (King pins) என்று சொல்லலாம்.
============================== =====
கொசுறு:
நேற்று எங்களுக்காக Xylo வாடகை கார் (Taxi for sure) ஓட்டிய பால் என்னும் ஓட்டுனர் என்னிடம் கேட்டார், "சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீங்களா? நான் எர்ணாவூர் பாரதி நகர்தான் சார். அந்நியன் ஷூட்டிங் எடுத்தாங்களே, அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில்தான் வீடு. உங்களுக்கு இருதயராஜ் தெரியுமா? என்னுடைய சித்தப்பா சார் அவரு."
நான் சொன்னேன் "எனக்கு அசோக் லேலண்டில் இரண்டு இருதயராஜ் தெரியும். ஒருவர் எலெக்ட்ரிகல் பிரிவு. இன்னொருவர் பைலட் ப்ரொடக்ஷன் பிரிவு கிளார்க். நீங்கள் சொல்வது யாரு". பால் உடனே "அவர் அசோசியேஷன் செக்ரட்டரி சார்!" என்றார். .
எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத் தெரியும்!