"தந்துடறேன் சார்...தராம எங்கே போகப் போறேன்...நான் ஏமாத்தறவன் இல்லை சார்...எனக்கும் புள்ளை குட்டிங்க இருக்கு...வாத்தியார் புள்ள சார் நானு ...உங்களைப் போய் ஏமாத்துவேனா..."
எதிரில் நின்ற திருவேங்கடத்தின் குரலில் பவ்யம் சற்று தூக்கலாகவே தெரிந்தது.
திரு வின் வார்த்தைகளைக் கேட்பவர்களுக்கு இவர் ஏமாற்றக் கூடியவரா என்று தோன்றும். அலுவலகத்தில் யார் அநியாயமாக நடந்தாலும் முதலில் தட்டிக் கேட்பது திரு தான். பேச்சுகள் ரொம்ப நியாயமாக இருக்கும்.
அதாவது மற்றவர்கள் பற்றி நியாயம் பேசும்போது.
அவசரத் தேவைகளுக்கு அவ்வப்போது நூறும் இருநூறும் கேட்கும்போது முதலில் தயக்கமாக இருந்தது. கொடுக்காமலும் இருக்க முடியாமல் தந்தார். உடனே உடனே சொன்ன தேதியில் கொடுத்து விட்டார் திரு. பிறகு அவ்வப் போது ஐம்பது, நூறு என்று வாங்கி திருப்பித் தருவது வழக்கமானது.
ஆனாலும் இந்த வகையில் பையனின் படிப்புச் செலவு பற்றி சொல்லி "அவசரமாக மூவாயிரம் குடு சார்" என்ற போது கொஞ்சம் யோசிக்க வேண்டி வந்தது.
அவர் யாருக்கு இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுத்ததில்லை.
அவர் பையன் வேறு அப்போது கூட வந்திருந்தான். அவன் பார்வையைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஏதோ புண்ணியம் செய்ய வாய்ப்பு பக்கத்தில் வந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பெரும் பாவமோ என்ற தர்ம சிந்தனைகள் வேறு வாட்ட,
"எப்போ கொடுப்பே.." என்றார்.
"அட, அடுத்த மாசம் ஜிபிஎஃப் சார்...எடுத்தவுடனே முதல்ல உனுக்குத்தான்,,,படிப்புக்கு வழிகாட்டற மவராசன்...லேட் பண்ணுவனா..."
கொடுத்தார்.
நூறு இருநூறு எல்லாம் வந்த வேகம்...இது வரவில்லை! இதுதான் 'சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போலும்' என்று இவர் நினைத்துக் கொண்டார்.
ஜி பி எஃப் பணத்தை திரு என்ன செய்தார் என்று தெரியாது. கேட்டால் மனம் பதறும் அளவு ஒரு காரணத்தைச் சொல்லி அதனால் அங்கு கொடுக்க வேண்டியதாகப் போய் விட்டது என்றார். ஒன்றும் சொல்ல முடியவில்லை. மீறிச் சொன்னால் மனிதாபிமானம் பற்றி லெக்சர் நடக்கும்.
"அப்ப எப்போ திருவேங்கடம்..எனக்கும் தேவையா இருக்கு.."
"அடுத்த மாசம் சொசைட்டி வருது சார்...கண்டிப்பா தந்துடறேன்...."
அடுத்த மாதங்கள் கடந்து வருடங்களும் கடந்து கொண்டுதான் இருந்தன.
ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். தெரிகிறது. இவர் திரு வுடன் பேசாமல் இருந்து பார்த்தார். அவரும் லட்சியம் செய்யவில்லை. நிம்மதியாக இருந்தார். இப்படியே இருந்தால் நம்மால்தான் பணத்தைத் திரும்ப வாங்க முடியாமல் போகும் என்று இவர்தான் திரும்பப் பேச வேண்டியதாக இருந்தது.
எவ்வளவு தரம் கேட்டாலும் சலிக்காமல் நீதி நேர்மை பற்றி லெக்சர் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்று திருவேங்கடம் சொல்வது அலுப்பூட்டும் வழக்கமானது.
இந்த நிலையில் திரும்ப ஒரு நாள் எதிரில் தலைகுனிந்து திருவேங்கடம்...
'மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன்' என்றார்.
"அபார்ஷன் பண்ணிப் புடலாம் என்று ஆஸ்பத்திரி போனோம் சார்...நாள் தாண்டிப் போச்சாம்..இனிமே செஞ்சா உயிருக்கே ஆபத்தாம்..."
"சரி..."
"என்ன சார் கதை கேக்குற...எனக்கு உன்ன விட்டா யாரு..."
"என்ன சொல்றே...அதனால் நான் என்ன செய்யணும்..."
"முதல்ல ஆஸ்பத்திரி வாங்க சார்...அடுத்த தெருலதான் இருக்கு.."
"......................"
"ராஜுவும் குமரப்பன் சாரும் வர்றாங்களாம்...நீங்களும் வாங்க..."
'அவர்கள் வந்து விட்டு சும்மா சென்று விடுவார்கள். அவர்கள் பிரச்னை அதோடு தீர்ந்து விடும். என் கதை அபபடி இல்லையே..." என்று எண்ணியவர் சென்று பார்த்தார்.
திரு மனைவியைப் பார்த்தவர் இரக்கப் பட்டுத்தான் போனார். அதற்குத்தான் திரு இவரை ஆஸ்பத்திரி இழுத்திருக்கிறார் என்று தெரிந்தபோதும் கண் முன்னே காணும் தேவையைப் புறம் தள்ள முடியவில்லை.
"உங்க ரிலேஷன் யாருமே உதவ மாட்டாங்களா திரு?"
"எங்கே சார்..உங்களுக்குத் தெரியாததா..."
இவருக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் ஏதோ திரு குடும்பத்தைப் பற்றி சர்வமும் தெரிந்தவர் போல அவர் பேசியதை மறுக்க முடியவில்லை.
"எவ்வளவு தேவைப் படும்" தயக்கம், பயம்...
"நிறைய வேணும் சார்...நீங்க ஒரு அஞ்சாயிரம் கொடுங்க போதும்...மிச்சத்த வெளில அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..."
'இதையும் வெளிலயே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே' மனதில் நினைத்தவர் "அவ்வளவு இருக்காது இரண்டாயிரம் தர்றேன்.." என்றார்.
"அப்படிச் சொல்லாதீங்க சார்...அடுத்த மாசம் தந்துடறேன்...நம்ப மாட்டீங்க..நான் அபபடி நடந்துகிட்டேன் இல்லை...நிச்சயம் பாதியாவது தந்துடறேன்..."
நாலாயிரம் தந்தார்.
திருவின் குணம் தெரியும். அவர் மனைவியின் உயிரைக் காப்பாற்ற நம்மால் ஆனதைதானே கொடுக்கிறோம்..முழுதுமா கொடுக்கிறோம்...அதில் ஒரு சிறு தொகைதானே..திரு தருவார் என்று நம்பிக்கை இல்லை. எப்போ வருமோ...
கொடுக்காமலும் இருக்க முடியவில்லை.
இதோ...நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன...
பணத்தைத் திருப்பிக் கேட்கும் போதெல்லாம் திரு சொல்லும் பதில்தான் முதல் வரி...!
ஆனால் அதற்குப் பின் திருவும் இவரிடம் பணம் ஏதும் கேட்பதில்லை. எனவே அந்தத் தொல்லை இல்லை.
இப்போதும் அலுவலகத்தில் அவ்வப்போது அங்கங்கே திருவின் "நீதி, நேர்மை, நியாயம்" குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இவர் அந்தப் பக்கம் போனால் குரல் நின்று விடும். திரு மெல்ல அங்கிருந்து நகர்ந்து விடுவார்.
அடக்க முடியாத திரு தன்னைக் கண்டு விலகுவது கண்டு மனதுக்குள் ஒரு சிறு பெருமை...
யாருடைய வெற்றி ..யாருடைய தோல்வி இது?