- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
1) சென்னை,
மெரினா பீச்சில், இன்று (7/7/13) மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை
படித்துப் படித்துச் சொன்னாலும்... படிக்கும் பிள்ளைகளின் காதுகளில்
மட்டும் ஏறுவதே இல்லை என்பதற்கு உதாரணமாக... கல்லூரி மாணவர்கள் மூன்று பேர்
(நான்கு பேர் என்றும் சொல்கிறார்கள்), கடலில் இறங்கி தீவிரமாக குளித்துக்
கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தவர்கள், உற்சாக
மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
திடீரென்று
காப்பாத்துங்க காப்பத்துங்க என்கிற குரல் கேட்க, அதையும் குஷியில் தமாஷாக
கூச்சலிடுகின்றனர் என்றே புரிந்து கொண்டது கரையிலிருந்த கூட்டம். ஆனால்,
அங்கே சுக்கு காபி விற்றுக் கொண்டிருந்த சிறுவன் மட்டும் எதையோ உணர்ந்தவனாக
சட்டென்று தன் கையிலிருந்த காபி கேனை கரையில் வைத்துவிட்டு, சிங்கமென சீறி
தண்ணீருக்குள் பாய்ந்தான், அப்போதுதான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தது
கரையிலிருந்த கூட்டம்.
தண்ணீரில்
தத்தளித்தவர்கள் மூன்று பேருமே கிட்டத்தட்ட மயக்கமாகிவிட்ட நிலையில்,
ஒருவரை மட்டும் போராடி கரைக்கு இழுத்து வந்தான் அந்தச் சிறுவன்.
மீதமிருந்தவர்களை, கரையிலிருந்த படகைத் தள்ளிக் கொண்டு போய் அள்ளிப்
போட்டுக் கொண்டு வந்தனர் படகோட்டிகள் சிலர்.
சிறுவனால்
காப்பற்றவர் உடனடியாக சுயநினைவு பெற்றுவிட, மற்ற இருவரும் சுயநினைவற்ற
நிலையில், மூச்சுபேச்சற்ற நிலையில் போலீஸின் துணையோடு ஆம்புலன்ஸ்கள் மூலமாக
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவர்,
உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவர் உயிருக்குப் போராடிக்
கொண்டிருப்பதாகவும் தகவல். நான்காவதாக ஒருவர் தானே தப்பி கரையேறி வேகமாக
அங்கிருந்து சென்றவிட்டதாகவும் தகவல்.
தன் உயிரை துச்சமென
மதித்து, ஓர் உயிரைக் காப்பாற்றிய அந்த சுக்கு காபி சிறுவனின் பெயர்
எஸ்.சூர்யா. லைட்ஹவுஸ் பகுதியிலிருக்கும் மாநகராட்சி பள்ளியில் பத்தாம்
வகுப்பு படிக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இப்படி காபி விற்பது
வழக்கமாம். அவனுடைய துணிச்சலான செயலைக் கண்ட பலரும் அவனைப் பாராட்டித்
தள்ளினர். அவன் கொண்டு வந்திருந்த சுக்கு காபியும் மளமளவென விற்றுத்
தீர்ந்தது.
via மண்வாசனை [முக நூல்]
2) இவர்தான் நிஜ ஹீரோ...!
கையில் கோடிப் பணம் இருந்தாலும் கூட ஒரு பத்து பைசா இருந்தால் நல்லாருக்கே
என்று ஏங்குகிற மனங்கள் நிறைந்த காலம் இது. ஆனால் இப்படிப்பட்டவர்கள்
மத்தியில் ஒரு மகா வித்தியாசமான மனிதர் மைசூரில் வாழ்ந்து வருகிறார். அந்த
மனிதர் அப்படி என்ன செய்து விட்டார்?... தொடர்ந்து படியுங்கள்.
அவரது பெயர் சார்லஸ் வில்லியம்ஸ். வயது 89. இங்கிலாந்து வசம் நமது நாடு
அடிமைப்பட்டிருந்தபோது ராயல் ஏர்போர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்திய
விமானப்படையில் இடம் பெற்றிருந்தார். 2ம் உலகப் போரில் பங்கேற்றவர்.
விமானப்படையில் சேர்ந்த சார்லஸ், லாகூருக்கு ஆறு வார பயிற்சிக்கு
அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ஆக்ராவில் பணி கிடைத்தது. அடுத்த
சிலநாட்களிலேயே அவர் பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு
இங்கிலாந்துப் படை, ஜப்பானியப் படையுடன் 2ம் உலகப் போரில் மோதிக்
கொண்டிருந்தது.
''எங்களது பிரிவு நேரடியான போரில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் தரைப் போரில் ஈடுபட்டிருந்த எங்களது வீரர்களுக்குத் தேவையானதை
நாங்கள் செய்து வந்தோம். பல வாரங்கள் நாங்கள் சாப்பாடு, தண்ணீர்
கிடைக்காமல் அவதிப்பட நேரிட்டது. மிகவும் மோசமான போர் அது. பல வீரர்கள்
கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர். இருப்பினும் நாங்கள் தப்பினோம் என்று
பழைய நினைவுகளில் மூழ்கினார் சார்லஸ்.
சரி, சார்லஸின் பெரும் செயலைப் பற்றி பேசுவோமா...
ஓய்வுக்குப் பின்னர் தனது பென்ஷன் கணக்கைப் பார்த்தபோது அதில் ஏதோ
குழப்பம் இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். அதாவது தனது பென்ஷன் தொகை குறைவாக
இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். இதையடுத்து உள்ளூர் ராணுவ நல மற்றும் குறை
தீர்ப்பு வாரியத்தை அணுகி முறையிட்டார். ஆனால் அங்கு அவருக்கு பலன்
கிடைக்கவில்லை. யாரும் அவரது குறையைத் தீர்க்க அக்கறை காட்டவில்லை.
இதையடுத்து மைசூரில் உள்ள வீகேர் முன்னாள் ராணுவத்தினர் அறக்கட்டளையின்
தலைவர் சுப்ரமணியை அணுகினார் சார்லஸ். பின்னர் வீகேர் அறக்கட்டளையில்
கணக்குப் போட்டு பார்த்தபோது சார்லஸுக்கு பென்ஷன் தொகை குறைத்துக்
கொடுக்கப்படவில்லை, மாறாக கூடுதலாக கொடுக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.
அதாவது நிரந்தர மருத்துவப் படியாக சார்லஸுக்கு ரூ. 300 மாதந்தோறும்
கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அந்தப் படியைப் பெறும் தகுதி
அவருக்கு இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருத்துவப்
படியுடன் சேர்த்து மாதம் ரூ. 15,200 பென்ஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது.
தனக்கு கூடுதலாக பணம் போடப்பட்டு வருவதை அறிந்த சார்லஸ், உடனடியாக
கூடுதலாக தரப்பட்ட தொகையை 15 மாதங்களுக்கு சம தொகையாக கழித்துக் கொண்டு
விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுப்பிரமணி, மங்களூரில் உள்ள
ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், தற்போது சார்லஸுக்கு மருத்துவச்
செலவுகள் நிறைய உள்ளன.அவருக்கு கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச்
சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அது
இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும்
மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு
பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது என்றார்.
ஆனால் சார்லஸ் கூறுகையில், எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான்
ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று
அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப
எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் உறுதியாக.
சார்லஸ் நிராகரித்துள்ள தொகை சிறிதுதான், ஆனால் அவரது மனம் மிக மிகப் பெரியது... இப்போது நாட்டில் நடந்து வரும் ஊழல்களை விட! [முக நூல்]
3) அலைக்கழிக்காமல் நடவடிக்கை: புகார் கொடுக்க வந்தவரிடம் பரிவு காட்டிய எஸ்ஐக்கு பாராட்டு! ! ! !
பட்டினப்பாக்கம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன். இவரிடம் மந்தவெளியை
சேர்ந்த ஓய்வு பெற்ற ஆடிட்டர் சங்கரராமன் (60) தனது தபால் நிலைய பாஸ்
புத்தகம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்து அதற்கான சான்றிதழ் பெற
விண்ணப்பித்து இருந்தார். இந்த புகார் குற்றப்பிரிவு சம்பந்தமானது. ஆனால்
சட்டம் ஒழுங்கு பிரிவை சேர்ந்த எஸ்ஐ ஜானகிராமன் அவரை அலைக்கழிக்காமல்அவரது
செல்போன் நம்பரை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார். ஆடிட்டருக்கோ
சந்தேகம்.
ஆனால் அடுத்த 2 நாளில் அவருக்கு போன் வந்தது.
உங்களுக்கு சான்றிதழ் ரெடியாகி விட்டது, வந்து பெற்றுக் கொள்ளுங்கள்
என்றார் எஸ் ஐ ஜானகிராமன். சங்கரராமனுக்கு ஆச்சரியம். சான்றிதழை பெற்றுக்
கொண்டு எஸ் ஐ ஜானகிராமனிடம் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு பாராட்டு கடிதம் எழுதி இ,மெயில்
அனுப்பினார். அதில், எஸ் ஐ ஜானகிராமனின் அன்பான உபசரிப்பும், துரித
நடவடிக்கையும் என்னை கவர்ந்தது. அவர் வைத்திருக்கும் முறுக்கு மீசை, பயமுறுத்துவதற்கு பதில் நம்மை பார்த்து புன்முறு வல் பூத்ததுபோல் இருந்தது.
இதுபோன்ற போலீஸ்காரரை என் 40 ஆண்டு கால பணியில் நான் பார்த்ததும்
இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதை
படித்த கமிஷனர் ஜார்ஜ் எஸ் ஐ ஜானகிராமனை அழைத்து பாராட்டினார். ஆடிட்டரின்
கடிதத்தை 500 பிரதிகள் எடுத்து சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ்
நிலையங்களுக்கும் அனுப்பினார். எஸ் ஐ ஜானகிராமனை முன் மாதிரியாக கொண்டு, அனைத்து போலீஸ்காரர்களும் செயல்படுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
4) இந்த உன்னத மனிதரை உலகம் அறிய பகிருங்கள், நண்பர்களே...
If u appreciate him, Share it my dear frnds..
உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய200க்கும் மேற்பட்ட நபர்களை காப்பற்றிய 76 வயது அப்துல் நசீர்.....
பத்ரிநாத் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட
200க்கும் மேற்பட்ட நபர்களை 76 வயதான அப்துல் நசீர் என்ற சகோதரர் காப்பற்றி
உள்ளார். இவர் அந்த கடும் வெள்ளத்திலும் தன் உயிரை பற்றியும், தனது
உடல்நிலை பற்றியும் கவலை கொள்ளமல் 7-8 மணிநேரம் நீந்தி அனைவரையும்
காப்பாற்றி உள்ளார்.. இதற்கு இவரது குடும்பத்தாரும் உதவியுள்ளது
குறிப்பிடத்தக்கது...
5) படிப்பிற்கு பணம் தடையில்லை!
வீடுகளுக்கு, நியூஸ் பேப்பர் போட்ட
பணத்தில் படித்தே, எம்.பி.ஏ., வரை முன்னேறிய, மாணவன் சிவகுமார் : நான்,
பெங்களூரில், பனாஸ்வாடி பகுதியில், ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அப்பா,
டிரக் டிரைவர்; அம்மா பூ கட்டி விற்கிறார். பெற்றோர் சம்பாதிக்கும் பணம்,
கடனுக்கு வட்டி கட்டவே சரியாக இருந்ததால், தொடர்ந்து படிக்க வைக்க முடியாத
நிலை. அதனால், 5ம் வகுப்பிலேயே வீடுகளுக்கு பேப்பர் போட்டு, அந்த பணத்தில்
படிக்க ஆரம்பித்தேன்.இருந்தும், 9ம் வகுப்பிற்கான கட்டணத்தை கட்ட
முடியாமல், பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
நான் வாங்கும் சம்பளம்
வீட்டு செலவுகளுக்கே பற்றாததால், பேப்பர் போடும் வாடிக்கையாளரான, கிருஷ்ண
வேத வைசா என்பவரிடம், என் ஏழ்மையை விளக்கி, அந்த ஆண்டிற்கான பள்ளிக் கட்டணத்திற்கு உதவ வேண்டினேன். ஆனால், என் கடின உழைப்பு, படிப்பின் மீதான
ஆர்வத்தை பார்த்து, ஐ.ஐ.டி., வரை படிக்க உதவினார். தற்போது, பெங்களூரு,
ஐ.ஐ.டி.,யில் கணினி அறிவியல் இறுதியாண்டு படிக்கிறேன். இந்தியாவின் கடினமான
தேர்வுகளில் ஒன்றான, "கேட்' தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று,
கோல்கட்டாவில் உள்ள, ஐ.ஐ.எம். இல் நிதி தொடர்பாக, எம்.பி.ஏ., படிக்க
போகிறேன்.
இதற்கு தேவையான கட்டணத்தை, வங்கி மூலம் கடன் பெற்று படிக்க
விரும்புகிறேன். ஏனெனில், வீடுகளுக்கு பேப்பர் போடும் பணியை இன்றும்
தொடர்கிறேன். பேப்பர் போடும் பையனாக இருந்த நான், பேப்பர் வினியோகிக்கும்
நுணுக்கங்களை கற்று, தினமும், 500 பிரதிகளை விற்கும் ஏஜன்சி உரிமையாளராக
வளர்ந்துள்ளேன். இதற்குக் காரணம், சோம்பேறித்தனம் இல்லாமல், காலை, 6:00
மணிக்கு முன்னரே, வாடிக்கையாளரின் வீடுகளில் பேப்பர் போட்டு விடுவேன்.
ஒருவர் என் கல்விக்கு உதவியதால் தான், இன்று என்னால் படித்து சாதிக்க
முடிந்தது. அதற்கு பிரதி பலனாக, ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, அதன் மூலம்
வறுமையால் கல்வி கற்க முடியாத குழந்தைகளுக்கு, கல்வி கற்க உதவ வேண்டும்
என்பதே, என் ஆசையாக உள்ளது.
6) பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம்!
விதவையாக இருந்தும், ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த, 50 பெண்களில் ஒருவரான, ரேணுகா: நான், மும்பையில் வசிக்கும், தமிழ் பெண். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். குடும்பமா, வேலையா என்ற கேள்வி, ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்களுக்கு பல சூழ்நிலைகளில் சிக்கலும், குழப்பமும் நிறைந்ததாக இருக்கும். என் வாழ்க்கையில், இரண்டையும் சரியான விதத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது.
ஏனெனில், என் குழந்தைகள் பிறந்த சில காலத்திலேயே, திடீர் விபத்தில், கணவர் இறந்து விட்டார்.குடும்ப செலவிற்காக, வேலை செய்ய வேண்டும். ஒரு அம்மாவாக, பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். இவ்விரண்டையும் சரியாக சமாளிக்க, என் இளம் வயதிலேயே பல தியாகங்கள் செய்து, பல மணி நேரம் கண்விழித்து, வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
"அப்பா உயிரோடு இருந்திருந்தால், எல்லாம் கிடைத்திருக்குமே' என, பிள்ளைகள் ஏங்க கூடாது என்ற எண்ணத்தில், சோர்வே இல்லாமல் தொடர்ந்து உழைத்து, பிசினசில் வளர்ச்சி அடைந்தேன். இன்ஜினியரிங் படித்திருந்தாலும், தனியார் வங்கியில் வேலை செய்தேன். என் திறமை மற்றும் உழைப்புக்கு அங்கீகாரமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வெஞ்சர் என்ற, புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்து, மேலாண் இயக்குனராக்கினர்.
பின், "மல்டிபிள் ஆல்டர்னேட் அசட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பித்தேன். இங்கு, நிதி நிறுவனங்களில் பணத்தை வாங்கி, லாப நோக்கில் நல்ல தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து, உரிய காலத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி தரும் சவாலான வேலையில், பல கோடிகளை நிர்வகித்து, சாதித்து காட்டினேன்.இந்தியாவின், சூப்பர் மார்க்கெட் முதல், விமான நிறுவனங்கள் வரை என, பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதால், ஆசிய அளவில் சாதனை படைத்த பெண்ணாக, "போர்ப்ஸ்' பத்திரிகை பாராட்டியது. நான் பூஜ்ஜியத்தில் துவங்கினாலும், கடினமாக உழைத்து, வாழ்க்கையின் பல மேடு பள்ளங்களை தாண்டி, ராஜ்ஜியம் வரை உயர்ந்து, ஒரு பெண்ணாக சாதித்தேன்.
7) மல்லிகை மகள் மாத இதழில் வந்த இந்த செய்தி என்னை பிரமிக்க வைத்ததுடன் மனதையும் மிகவும் பாதித்தது.
கேரளாவைச் சேர்ந்தவர் சுனிதா. 15 வயதில் குடிசைவாழ் குழந்தைகளுக்கு டியூஷன்
எடுப்பதிலும் அங்குள்ள பெண்களுக்கு எழுத்தறிவு தருவதுமாக தன் இளம்
பிராயத்தை மகிழ்வோடு கழித்தவர்.
அவரின் இந்த செயல் பிடிக்காமல் அந்தக் குடிசைவாழ் ஆண்கள் சிலரால் பாலியல்
வன்முறைக்கு ஆளாகியவர். அதோடு நில்லாமல் அவர்களின் கடுமையான
தாக்குதலுக்கும் இரையானதால் இப்போது கூட அவருக்கு வலது காது
கேட்பதில்லை. இடது கையை வளைக்க முடியாது. இப்படி பாதிப்புக்கு ஆளான பெண்கள்
பொதுவாய் மனதளவில் சித்திரவதைப்பட்டு நரக வேதனையடைவார்கள். இவர் மனதிலும்
கோபம் பொங்கியெழுந்தது. ஆனால் மற்றவர்களைப்போல அல்ல. ‘ நான் ஏன் ஓடி ஒளிய
வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? துனிச்சலாக வெளியே வந்தேன். தவறு
செய்தவர்கள் தான் ஓடி ஒளிந்தார்கள்!’ என்கிறார் இவர்.
இந்த சம்பவத்திற்குப்பின் மேலும் இவர் சோஷியாலஜி, சைக்காலஜி
படிப்புகளைத்தொடர்ந்து முடித்து டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரின்
பெற்றோர்கள் ஹைதராபாத் நகரில் கால் ஊன்றியிருந்ததனால் அங்கேயிருந்து அவரின்
புரட்சி ஆரம்பித்தது! ‘ அணையாத நெருப்பு’ என்ற அர்த்தம் கொண்ட ‘
பிராஜ்வாலா’ என்ற அமைப்பை பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புனர்
வாழ்விற்காக நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 8000 சிறுமிகளை
மீட்டிருக்கிறார். 17 பள்ளிகளை இந்தப் பெண்களுக்காக இவர் நடத்தி வருகிறார்.
இவரின் கணவர் இவருக்கு உதவியாக கரம் கோர்த்திருக்கிறார்.
அவர் வேதனையுடன் சொல்வது.. ..
“உலகிலேயே மிக அதிகமாகக் கடத்தப்படுவது பொன்னோ, போதைப்பொருளோ அல்ல.
பெண்கள்தான் அதிகம் கடத்தப்படுகின்றார்கள். வயிற்றிலிருக்கும் பிள்ளையை ‘
பிறந்ததும் விற்று விடுகிறேன்’ என்று உத்தரவாதம் சொல்லி அட்வான்ஸ்
வாங்கிக்கொள்ளும் அளவு வறுமையிலிருக்கும் பெண்கள் இந்த தேசத்தில்
வாழ்கிறார்கள். இரண்டு மூன்று வயதிலேயே பெண்கள் கடத்தப்படுகிறார்கள்.
பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைகளை நானே
மீட்டிருக்கிறேன்.
இந்தத் தொழில் செய்யும் உலகம் எவ்வளவு பரந்து பட்டது
என்று தெரிந்தால் திகைத்துப்போவீர்கள். பெண்கள், தரகர்கள், குண்டர்கள்,
போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று இந்த நெட்நொர்க் மிகவும்
பெரியது! கண்ணுக்கு முன்னே ஏதாவது அநியாயம் ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால்
மெளனமாக பார்த்துக்கொண்டிருக்காதீர்க்ள்
. மெளனமாக இருப்பவர்கள் அதை
ஆதரிப்பவர்கள் என்று தான் அர்த்தம். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு
ஏதாவது செய்யுங்கள்!”
8)
ஏர்போர்ட்டில் கடந்த 18 வருடமாக வாகன ஓட்டியாக
இருப்பவர் ஏர்போர்ட் பாலு.. தனது ஏழ்மையிலும், நேர்மையின் மூலமாக
ஏர்போர்ட்டில் பிரபலமானவர்.
இதற்கு முத்தாய்ப்பாக நேற்று விமானநிலையத்தில் தவறவிட்ட பாஸ்போர்ட், விசா மற்றும் Rs.20000 மதிப்பிலான மொபைல் ஆகியவற்றை காவல் துறையில் பொறுப்புடன் ஒப்படைத்த நேர்மையின் சிகரம் இவர்.
ஏர்போர்ட் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் பணி மிகவும் பாராட்டதக்கது...
ஏர்போர்ட் பாலுவும், அவரது நண்பர் சகாதேவனும் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய நல்ல மனிதர்களாக உள்ளார்கள்.