இது நடந்தது 1950 களில்.
டிவி இல்லாத காலம். ரேடியோ கூட இருக்காது. பார்க்குக்குச் செல்ல வேண்டும், ரேடியோ கேட்கக்கூட.
அலுவலகம்
விட்டு தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தால் பொழுது போக வேண்டுமே... திருமணமானவர்களும்,
ஆகாதவர்களும் கலந்து தங்கியிருந்த மேன்ஷன் போன்ற ஒரு இடம். ஆனால் பெரிய அறைகள்.
பார்க், சினிமா, கடைத்தெரு, லைப்ரரி போகாத ஒரு மாலை நேரம். நண்பர்கள் குழுமிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாலு, கண்ணன், தேசிகன், வகாப், ஜான்சன், சந்துரு, முனியாண்டி என்று ஜமா சேர்ந்திருந்தது.
அப்போது அந்த ஊரில் புதுவகையான திருடர்கள் வந்திருந்தனர். ஊர் முழுவதும் அதைப் பற்றிப் பேச்சாக இருந்தது.
இரவு
அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழையும் திருடர்கள் தூங்கிக்
கொண்டிருப்போரின் தலை மாட்டில் இரும்பு உலக்கை, அல்லது மரக்கட்டையுடன்
சத்தமின்றி நிற்பார்களாம். ஒருவன் அந்த இடத்தைத் தேட்டை போடுவானாம். நடுவில் யாராவது தூக்கத்தில்
அசைவது போலவோ, எழுவது போலவோ தெரிந்தால் மண்டையில் ஒரு போடு போடுவார்களாம்.
கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறி விடுவார்களாம்.
இதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.
"இவர்களை நாம் பிடித்துக் கொடுத்தால் என்ன?" என்றான் வகாப். எப்போதுமே துணிச்சலான ஆசாமி.
"மண்டை தெறிச்சுடும் தெரியுமில்ல.... பிடிச்சுக் கொடுக்கறாராம்..." சந்துருவின் எகத்தாளம்.
இப்படியே
பேச்சு போய்க்கொண்டிருக்க, தனியாக அறையில் தங்கியிருப்பவர்களின் ரெகுலர்
சப்ஜெக்டான ஆவி சமாச்சாரத்தில் பேச்சு வந்து நின்றது.
பாலுவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கைக் கிடையாது. "எல்லாம் சுத்த ஹம்பக்!"
அவரவர்கள் ஆளுக்கு ஒரு அனுபவத்தைச் சொன்னார்கள்.
இந்நேரத்தில் நாகசாமி ஒரு போர்டுடன் அங்கு ஆஜரானான்.
"என்ன அது?"
"ஒய்ஜா போர்ட்"
"அப்படீன்னா?"
"ஆவிகளோட பேசலாம் தம்பிகளா... நீங்க பேசிகிட்டிருந்தது அங்க வரைக்கும் கேட்டது. அதான் இந்த போர்டை எடுத்து வந்தேன்"
"எப்படி நாகா? "
"உள்ள வாங்க... சொல்றேன்"
வராண்டாவை விட்டு எல்லோரும் உள்ளே சென்றனர்.
போர்டை மேஜை மேல் வைத்தான் நாகா.
"இது எல்லோருக்கும் கைவராது. நல்ல மீடியமா இருந்தால் அழகாக வரும்.."
"மீடியமா? அப்படின்னா?"
"சில பேர்கள் ஆவிக்கு ரொம்ப நெருங்கியவர்களா இருப்பாங்க"
"அட, ஏம்ப்பா பயமுறுத்தறே?"
"விடு.. ரொம்ப விளக்கம் எல்லாம் கேட்டால் பதில் சொல்ல நேரம் இல்லை!"
என்ன செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் சொன்னான்.
"ரூம்ல
நடுல இந்த போர்டை வை. லைட்டை அணைச்சுட்டு ஓரமா ஒரு மெழுகுவர்த்தி மட்டும்
ஏத்தி வை. யாரும் பேசக் கூடாது. எல்லோருக்கும் இதுல முழு நம்பிக்கை
வரணும்...."
"ஓ... ஆவி வரல்லைன்னா இங்க யாருக்கோ நம்பிக்கை இல்லைன்னு சொல்லிடலாம் இல்லையா?" சந்துரு மறுபடியும்!
"சும்மா இரு சந்துரு! இதை சாதாரணமா வீட்டுல வச்சு ட்ரை பண்ண .மாட்டாங்க தெரியுமா..? கெட்ட சக்தி வீட்டுக்குள்ள வந்துடும்னு.."
"ஏய் தம்பி.. அப்போ என் ரூம்ல வச்சு மட்டும் செய்யலாமா? நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது?"
"ஏய்.. பல பேர் இருக்கற ரூம்ல அப்படி நடக்காதுப்பா..."
என்ன நியாயமோ!
எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த நாகா, பாலுவைத் தேர்ந்தெடுத்தான். விபூதிப் பட்டையும், சாந்தமான முகமும் பாலுவுக்கு.
"ம்ம்.. இதை இங்க வைக்கிறேன். இதுல விரலை வச்சுக்கோ.."
கேரம்போர்ட் காயின் போலவும், தாயக் கட்டை போலவும் இருந்த ஒன்றை போர்டில் வைத்தான். சந்திராவை எதிரில் அமரவைத்தான்.
"நான் எதுக்குடா இங்கே?" சந்திரா நடுங்கினான்.
"ஒன்றும் ஆகாது.. உட்கார். பாலு! மனதை ஒருமுகப் படுத்திக்கோ.. எல்லோருமே மனதை ஒருமுகப் படுத்துங்கப்பா..."
என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே எல்லோரும் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தனர்.
கொஞ்ச
நேரம் அமானுஷ்யமாகக் கழிந்தபின், சந்திராவிடம் நாகா "உங்கள் தாத்தாவை
மனசார நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் இருங்க சந்திரா... மனசார அவரை இங்கே
கூப்பிடுங்க... அவரை நீங்க நம்பறேன்னு உணர்த்துங்க..."
"என்னடா திடீர் மரியாதை!" சந்திரா.
"ஷ்... கொஞ்ச நேரம் மரியாதை இல்லாமப் பேசாம எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தே பேசுங்க.. ." - நாகா.
ரொம்ப பில்டப் கொடுக்கிறானோ என்று தோன்றினாலும் சொன்னதைச் செய்தார்கள்.
"இப்போ ஏதாவது கேள்வி கேளுங்க சந்திரா... வந்திருக்கறது யாருன்னு கேளுங்க"
கேள்விகள்
கேட்கப்பட, கேட்கப்பட அந்த காயின் நகர வேண்டும். ஆனால் நகரவில்லை. கொஞ்ச நேர முயற்சிகளுக்குப் பின், நாகா
சட்டென்று வெளியில் சென்று, கொஞ்ச நேரத்தில் சிவநேசனுடன் வந்தான். சிவநேசன் விபூதி குங்குமத்துடனும், வெறித்த
பார்வையுடனும் எப்போதுமே கொஞ்சம் மனநிலை பாதித்தவன் போல இருப்பான்.
"இவர் நல்ல மீடியம். பாலு! நீங்க நகருங்க... சிவா! அப்படியே டேக் ஓவர் பண்ணிக்குங்க"
இப்போது அந்தக் காயின் நகர்ந்து 'பதில்' சொல்லத் தொடங்கியது!
சந்திராவின்
தாத்தா பிரதோஷம் என்று 'சபைக்கு'ப் போயிருப்பதாகச் சொல்லி, அவரை அறிந்தவர்
என்று வேறு ஒரு ஆவி வந்திருப்பதாய்த் தகவல் சொன்னது.
சிவநேசன் காயினை நகர்த்த, நகர்த்த அவற்றை அருகிலிருந்து நாகா ஒரு பேப்பரில் என்ன பதில் வருகிறது என்று எழுதிக் கொண்டே வந்தான்.
நடுவில் நாகா திணறுவதைப் பார்த்த வகாப் "சிவா.. கொஞ்சம் மெல்ல நகர்த்துங்க... எழுத முடியலை" என்றான்.
நாகா, "ஹலோ... அவரா நகர்த்த்தறார்? அவர் கையில இல்லை கண்ட்ரோல்! நான் பார்த்துக்கறேன் விடுங்க" என்றான்.
கேள்விகளுக்கு பதில் பொருத்தமாகச் சில வந்தாலும், நிறைய சம்பந்தமில்லாமல் இருந்தன.
"எனக்கு இந்த வருடம் டிரான்ஸ்பர் வருமா?' - பாலு.
"ஆமாம்.. வரும்"
"எங்கே?"
"கும்பகோணம்!" - சிவநேசன் அறிந்திருந்த ஒரே பெரிய ஊர் கும்பகோணம் என்பது இரண்டு மூன்று பேர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது!
இப்படியே சில கேள்விகள் கடந்ததும் ஜான்சன், வகாப், சந்துரு ஆகியோர் எக்குதப்பாய்க் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்.
"வந்திருக்கறது ஆவின்னு எப்படி நம்பறது?" சந்துரு.
"உன்னை ஓங்கி ஒரு அறை விட்டா நம்புவியா?" என்றது போர்ட்.
"சரி.." என்ற சந்துரு கன்னங்களை மூட, சிவநேசனின் கைகளுக்கு எட்டாமல் நகர்ந்தான்.
சட்டென நாகா திரும்பி சந்துருவை அறைந்தான்! கையோடு "ஸாரி ப்ரதர்.. நான் ஏன் அடிச்சேன்?" என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான்!
கடுப்பான சந்துரு, "டேய்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமாடறாங்கடா..." என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
இரண்டு நிமிடத்தில் சந்துருவின் குரல் கேட்டது. "டேய்.. கதவை ஏண்டா தாழ்ப்பாள் போட்டீங்க.. திறங்கடா"
"கதவைத் திறக்காதே" நாகா அலறினான்.
"ஏன் நாகா?"
"நான் சொல்லலை... போர்ட் சொல்லுது"
"அடப் போடா..." கதவருகே நகர்ந்தான் ஜான்சன்.
"உங்களால இப்போ கதவைத் திறக்கவும் முடியாது... சந்துருவும் இப்போ உள்ளே வரவும் முடியாது"
"ஏன்?" வகாப், ஜான்சன், பாலு, தேசிகன் குரலுடன் பாத்ரூமுக்குள்ளிருந்து சந்துருவின் குரலும் சேர்ந்து கொண்டது.
"லைட்டைப் போடுறா..."
"லைட் எரியவில்லைடா..." ஸ்விட்சைத் தட்டிய பாலு அலறினான்.
"ச்சீ... கத்தாதே.. கரண்ட் இல்லை அஞ்சு நிமிஷமா... நாம மணிக்கணக்கா இதுல உட்கார்ந்திருந்ததுல இதைக் கவனிக்கல"
மணியைப் பார்த்தால் சுத்தமாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது தெரிந்தது.
"இன்னும்
பத்து நிமிஷத்துக்கு அவனால் உள்ளே வர முடியாது. அதுதான் நீங்கள் கேட்ட
நிரூபணம்!" சிவநேசன் கையை விட்டு காயின் தெறித்து விழுந்தது.
"அய்யய்யோ... நாம விடை கொடுக்காமலே ஆவி போய்விட்டது. சொல்லிக்காமலேயே போய்விட்டது" அலறினான் சிவநேசன்.
"போகட்டும். நல்லதாப் போச்சு"
"அப்படிப் போகக் கூடாதுடா... அப்புறம் அது இங்க அடிக்கடி வர ஆரம்பிச்சுடும். அதைக் கோவப்படுத்திட்டீங்க" என்றான் நாகா.
"போடா... சந்துருவை இப்போ வெளியே வரவைக்கிறேன் பார்க்கறியா?"
கேட்டதோடு இல்லாமல் கதவைத் திறக்கவும் செய்தனர். கதவை உள்பக்கமாகத் தள்ளினர். உள்ளேயிருந்த
சந்துருவும் கதவை இழுக்க, வகாப் கதவைத் தள்ளினான். முடியவில்லை.
ஜான்சனும் சேர்ந்து தள்ளினான். ஊ...ஹூம்! மற்றவர்களும் இப்போது சேர்ந்து
தள்ளினர்.
திறக்கவே இல்லை.
நிமிடங்கள் கரைய கொஞ்சம் கொஞ்சமாக பீதி ஏறியது அவர்கள் முகத்தில்.
"சந்துரு... சந்துரு..." திடீர் சந்தேகம் ப்ளஸ் பயத்துடன் ஒருவன் குரல் கொடுத்தான்.
"ச்சே... இங்கதாண்டா இருக்கேன். கதவத் திறங்கடா.. தாழ்ப்பாளை எடுத்துட்டுத் திறங்கடா!" சந்துரு கூவினான்.
தாழ்ப்பாள் போடவே இல்லையே.. எங்கே திறக்க?
பத்து நிமிடம் கழிந்ததும் கதவு சட்டென விடுபட்டுத் திறந்தது.
"என்னடா இது? எப்படிடா?"
"சில
விஷயங்களை நம்பணும். சரி விடு.. இதுக்கு மேல இது பற்றியெல்லாம் பேச
வேண்டாம்.. படுத்துக்கலாம்" என்றபடி போர்டை எடுத்துக் கொண்டு நாகா
சிவநேசனுடன் வெளியேறினான்.
எல்லோரும் படுக்கச் சென்றனர், இந்தக் கதை இங்கு முடியவில்லை என்பதை அறியாமல்!
( தொடரும் )
படங்கள் : இணையம்.