திரும்பிப் பார்க்கும்போது 2013 போல 2014 அவ்வளவு மோசமான வருடம் இல்லை என்று மனதில் தோன்றுகிறது. உறவில் சில பயணிகள் அவர்கள் நிறுத்தம் வந்து விட்டது என்று இறங்கிக் கொண்டார்கள். பொது வாழ்வில் சில பிரபலங்களும். நம் பயணம் தொடர்கிறது.
கஷ்டங்களைக் கண்ணுக்கருகில் வைத்துப் பார்க்காமல் தூரத்தில் வைத்து சிறு கல்லாய்த் தூக்கி எறிவோம்.
நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இனிய ஆங்கில நல புத்தாண்டு வாழ்த்துகள்.
============================================================
சமீபத்தில் மறைந்த இரு 'பால' பிரபலங்கள் பாலசந்தரும், விகடன் எம்டி பாலசுப்ரமணியமும். இரு ஆளுமைகள்.
தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைத்த முக்கிய இயக்குனர்களில் கேபியும் ஒருவர். என்ன சாதித்தார் இவர் என்று கேட்பவர்களும் உண்டு, சாதனை இவை என்று சிலவற்றைப் பட்டியலிடுவோரும் உண்டு.
ஆர்வமாகப் பார்த்தாலும் ஒரு நிறைவைத் தராத முடிவைக் கொண்டவையாய் இருக்கும் இவர் படங்கள். அரங்கேற்றம் தொடங்கி புன்னகை, அபூர்வ ராகங்கள், அவர்கள், சிந்து பைரவி, என்று இவரின் நாயகிகள் நல்ல முடிவு கிடைக்காமலேயே நிறுத்தப் பட்டார்கள். ஆனாலும் அரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, சிந்துபைரவி சிந்து, மன்மதலீலை குமாஸ்தா, இருகோடுகள் சௌகார் ஜானகி, என்று மனதில் நிற்கும் கேரக்டர்கள் இவர் படைப்பில் உண்டு.
அவரது இறுதிச் சடங்கில் கூடிய கூட்டம் ஆச்சர்யமளித்தாலும் அங்கு குவிந்த கூட்டம் பெரும்பாலும் அஞ்சலி செலுத்த வந்த நடிக, நடிகையரைப் பார்க்கக் குவிந்த கூட்டமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. செல்ஃபி எடுப்பதும், சிரித்தபடி போட்டோ, கேமிராவுக்கு போஸ் கொடுத்த ரசிகர்களும், துணை நடிகர்களின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்த ஜனங்களும்...
விகடன் பாலசுப்ரமணியம் பற்றி அதிகம் அறிந்துகொள்ள உதவியது அவரின் படம் தாங்கிய 31/12 2014 விகடன். பறவைக்காதலர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (சிரித்து வாழ வேண்டும்) என்றெல்லாம் அறிந்திருந்தாலும் அவரின் பார்வை, விலங்குகள் மீதான காதல், ஆராய்ச்சி, வேளாண்மை மீது அவருக்கிருந்த ஆர்வம், சமையலில் அவருக்கிருந்த திறமை, பத்திரிகைத் தொழிலில் இருந்த நேர்மை,
இவரது பாஸிட்டிவ் குணங்களில் புயல் பாதித்த, சுனாமி பாதித்த இடங்களுக்கு விகடன் சார்பில் பொது மக்களுடன் கைகோர்த்து இவர் செய்த உதவிகள், மதுரைக்கு அருகே ஏனாதி கிராமத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர் செய்துவந்த சேவைகள், எம் ஜி ஆர் அரசின்போது பத்திரிக்கை சுதந்தரத்துக்கு பங்கம் வந்தபோது இவர் காட்டிய துணிச்சல்... இவையெல்லாம் அடங்கும்.
இருவரைப் பற்றியுமே பிரபலங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர் தங்களிடம் தனிப்பட்ட முறையில் எவ்வளவு நெருக்கமாக, பிரியமாக இருந்தார் என்று சொன்னார்கள்.
ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவர்கள் காட்டிய அன்பும், நெருக்கமும்தான் அவர்களின் வெற்றிகள் போலும்.
===========================================================
இந்தமுறை இசைவிழாவில் ஒரு கச்சேரிக்குக் கூட நேரில் செல்லவில்லை. அபிஷேக் ரகுராம், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்பிரமணியம், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், ரித்விக் ராஜா சிக்கில் குருசரண் என்று இவர்கள் கச்சேரியாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....
===============================================================
போக்குவரத்துத்
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும்
திடீர்ப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றனவாம்.
அதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று "அவர்களுக்குக் கையூட்டு போன்ற
பிற சம்பாத்தியங்கள் இல்லை. எனவே ஊதிய உயர்வு வழங்க வேண்டும்'
கோரிக்கை
நியாயமானதாக இருக்கலாம். திடீரென சென்னை உள்ளிட்டப் பெரு நகரங்களில்
முக்கியப் போக்குவரத்துப் பயன்படு வாகனமான பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது
பொதுமக்களைப் பெருமளவு பாதித்தது. தங்களை இப்படிப் படுத்தும் ஊழியர்களைப்
பொதுமக்கள் இனி வரும் நாட்களில் பொறுமையின்றி பிடித்து உதைக்கும்
நிலைக்குப் போகலாம்! சில இடங்களில் வாக்குவாதம் அந்த அளவு மிக பலமாக
இருந்தது. 'ஆதரவு தாருங்கள்' என்று பொதுமக்களிடம் துண்டுச்சீட்டு
விநியோகித்துக் கொண்டிருந்தனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.
வேலை
நிறுத்தத்தை மீறி ஒரு குழுவினர் பேருந்துகளை எடுக்க முயன்றபோது சக
போக்குவரத்துத் தொழிலாளர்களே தங்கள் பேருந்துகளைக் கல் வீசித் தாக்கி
உடைத்தது கொடுமையிலும் கொடுமை.
போராட்டம் வாபஸ் என்று செய்தி வந்துள்ளது.
ம்ம்ம்.....
====================================================
====================================================
பெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலையாம்..... அடச்சே....
========================================
========================================
தற்கொலைப்படையில்
சேர்த்து குண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வெடிக்கச்செய்யும் வேலைக்கு,
தனது 12 வயதுப் பெண்ணை விலைக்கு விற்றாராம் ஒரு தந்தை. இங்கல்ல
வெளிநாட்டில்.
===============================================
===============================================
ஆகஸ்டில்
ஓடத் தொடங்கும், நவம்பரில் ஓடத் தொடங்கும், ஜனவரியில் ஓடத் தொடங்கும்,
ஏப்ரலில் ஓடத் தொடங்கும் என்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்டுக்
கொண்டிருக்கிறது சென்னை மெட்ரோ ரயில்!
==============================================
==============================================
புதுவை
அரவிந்தர் ஆஸ்ரமத்துப் பெண்கள் சிலர் கடலில் குதித்துத் தற்கொலைச்
செய்தியைத் தொடர்ந்து, நித்யானந்தரின் பிடதி ஆஸ்ரமத்தில் சங்கீதா என்ற பெண்
மர்ம மரணமாம். இந்த 24 வயதுப் பெண், துறவிப் பயிற்சிப் பெற அங்கு
சென்றிருந்தவராம்.
============================================
============================================
டெண்டுல்கர்
கண்ணீர் மல்க கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைப் பார்த்தோம்.
இலங்கையில் மகிலா ஜெயவர்தனே கூட மனைவி, தாய் எல்லோரையும் மைதானத்துக்கு
அழைத்துவந்து ஓய்வு பெற்றார். இப்போது என்னடாவென்றால் தோனி திடீரென அறிவித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
வித்தியாசமான மனிதர்தான்!