திங்கள், 31 ஆகஸ்ட், 2009

லோயர் பாரம் !

ஆறு முதல் எட்டு வரை எங்கள் பள்ளி!
ஐந்தாம் வகுப்பு தேறியவுடன், பெரிய பள்ளி என்கிற National High School லில் கொண்டு சேர்க்கப் பட்டோம். ஐந்தாவது வரை தரையிலும், பெஞ்சிலும் குப்பை கொட்டிவிட்டு, பெரிய பள்ளியில் டெஸ்க் அட்டாச்ட் பென்ச் புதுமையான மாற்றம், எங்கள் செதுக்கும் திறமையை அங்கு எங்கும் காணலாம். பென்ச், டெஸ்க்டாப், ரப்பர், வகுப்பு வாசலில் இருக்கும் மரம் யாவற்றிலும் நீக்க முடியாதபடி நிலைத்திருக்கும். ஆறுமுகம்(பத்தர்) ஜோசஃப்ரயான், ஸ்ரீதர், புஷ்பவனம், தியாகராஜன், ப்ழ பழ பழ்லெ பழனியப்பன் போன்றவர்கள் அறிமுகம் அங்கு தொடங்கிய்து. பெரிய பண்டிட், வைத்தியனாத வாத்யார், லக்ஷ்மண வாத்யார், கடுமையாக அடிக்கும் ட்ராயிங்க் மாஸ்டர் வடிவேலு ஸார், லக்ஷ்மிஸ்டோர் வைத்யனாத வாத்யார் என்கிற புதிய ஆசிரியர்கள் மத்தியில் சற்றே மிரட்சியுடன் தொடக்கம். ஹைஸ்கூலில் பெரிய பண்டிட் மகன்தான் ப்ரேயர் பாட்டாகிய, "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" யை பாடுவான். அவன் லீவில் போனால்தான் வேறு யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியும். அஸிஸ்டண்ட் ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ரங்கன் சார் ப்ரேயரில் யாரேனும் பேசுகிறார்களா என தீவிரமாகக் கண்காணிப்பார். பேசுபவர்களுக்குப் பிரம்படி உண்டு.

எட்டாவதில் நான், சந்தானம், ஸ்ரீதர், புஷ்பாவனம், ஜோசப்ராயன், காராசேவ் மணி ஒரே க்ளாஸில் படித்தோம். ஸ்ரீதர் அவன் வீட்டு ரேடியோவில் விவித்பாரதி பாடல்களை கேட்டு எங்களுக்கு ஒலி பரப்புவான். இன்றய ஹாரி பாட்டெர் கதை போல் சோமசுந்தரம் எங்களுக்கு ஸ்கூலில் கதைகள் சொல்வான். கன்னித்தீவு மாதிரி முடிவே இல்லாத கதை. சப்த ஸ்வர ஜாலங்களுடன், நடிப்புடன் அவன் சொல்வதை வாய் மூடாமல் கேட்போம். இரண்டரை மணி சினிமா அவன் வாயில் நாள் கணக்கில் தொடரும். 'பறக்கும் தட்டு' என்ற கதையை முடிவேயில்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்!

பூசாரி(அவர் பெயரே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது) மாஸ்டர்(!) தான் in-charge. கோடையிடி ராமசாமியும், பூசாரியும் பி.டி மாஸ்டர்கள். முன்னவர் வாலிபால் சர்விஸ் போட்டால் கோடை இடிபோல் சௌண்ட் வருமாம். "கோடையிடி இடிக்க, பூசாரி உடுக்கடிக்க, சிங்காரவேலு நாட்டியமாட!" என்ற பாட்டுஅவர்கள் வரும்போது எங்கள் நடுவில் இசைக்கப்படும். சிங்காரவேலு மற்றொரு பி.டீ & என்.சீ.சீ மாஸ்டர். அந்த காலதிலேயே சிண்டிகேட் அமைத்து, பள்ளி ஏலத்தில் குறைந்த விலைக்கு பழைய ஸ்போர்ட்ஸ் பொருட்களை வாங்குவோம். நான் பாட்மிண்டன் விளையாடுவேன். ராக்கெட்டின் கெட் அடிக்கடி பிய்ந்துவிடும். ஃபுட்பால் மௌத் பன்னார் அறுந்துவிடும் எனவே சியால்காட் ஸ்போர்ட்ஸ் கடையை அடிக்கடி முற்றுகையிடுவோம்.

முதலில் ACC ல் சேர்ந்தோம். சிங்காரவேலு ஸார்தான் மாஸ்டெர். ஏ.சி.சி யில் சேர்ந்தால்தான் என்.சீ.சீயில் சேர்த்துக் கொளவார் என்பதனால் அதில் சேர்ந்தோம். நானும், சந்தானமும் எதிலும் சேர்ந்துதான் இருப்போம். எட்டாவதுவரை குமர கோவில் ஷெட்டில்தான் வகுப்புகள். ஏழாவ்தில் குடுமி வைத்யனாத அய்யர் க்ளாஸ். ஒவ்வொரு வகுப்பிலும் பின்புறம் உள்ள இடத்தில் தோட்ட வேலை செய்து பூ அல்லது கறிகாய் செடிகளைப் பயிரிடவேண்டும். ஆசையாக செடிகளை வளர்த்து, பின் வேறு க்ளாஸ் போவது கஷ்டமாகஇருக்கும். எட்டாவது லக்ஷ்மண வாத்யார் க்ளாஸ். நான், ஸ்ரீதர், புஷ்பவனம் ஒரே பெஞ்ச். எதனாலோ சண்டை வந்து நானும் ஸ்ரீதரும் பல வருடங்களுக்குப் பேசிக் கொள்ளவில்லை. அவன் அண்ணா சந்த்ரு, எனக்கு ரொம்ப க்ளோஸ். பேருக்குத்தான் ஹைஸ்கூல். ஆனால் 6வது, 7வது, 8வது வகுப்புக்கள் மாத்திரம் சுதந்திரமாக இங்குநடக்கும். பள்ளி ப்யூன் அவ்வப்போது சர்க்குலர்களைக் கொண்டு வந்து ஆசிரியர்கள் கையொப்பம் பெற்றுச செல்வார். மற்ற பெரிய வகுப்பு மாணவர்கள் தொடர்பு மிக குறைவு. எனக்கு சூப்பர் சீனியரான ஜயராமன் மூன்றாவது வீடு. எனவே, அவர்களுடன் ஸ்கூல் வரும்போது கூட வருவேன், போவேன். அவ்வளவுதான்!
With love and affection,
ரங்கன்.

நாம் இப்படிதான் இருக்கிறோம்

உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு.
நாம்தான் அரசாங்கம். நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும் ஒழுக்கமும், சுத்தமும் என்பதை மறந்து விடுகிறோம். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக் கூடாது என்ற சின்ன விதியை மதிக்க முடிகிறதா நம்மால்? காவல்காரரை ஏமாற்ற ஹெல்மெட்டுக்குள் மைக், ப்ளூ டூத்!.
சாலை தோறும் குப்பை போடுகிறோம்.
காசு கொடுப்போருக்குதான் கோவில்களில் முன்னுரிமை. காசு கொடுத்து குறுக்கு வழியில் கும்பலைக் கடந்து சாமி கும்பிட்டால் சாமி அருள் கிடைக்குமா?
வருமான வரியை ஏய்க்க போலி மருத்துவ சான்றிதழ்கள்...
நம் அவசரத்துக்கு one way விதியை மீறுகிறோம் - மீறிப் பிடிக்கும் காவலர் கேட்குமுன் 50 ரூபாயை நீட்டுகிறோம்.
லஞ்சம் வாங்குவது தவறு என்கிறோம். நமக்கு வேலை ஆக வேண்டுமென்றால் நாமே கொடுக்கத் தயாராகிறோம்.
நாம் கை காட்டும்போது பஸ் நிற்காவிட்டால் கோபம் வருகிறது. நேரத்துக்கு வருவதில்லை என்று முணுமுணுக்கிறோம். நாம் ஏறி விட்டாலோ அடுத்தடுத்த நிறுத்தங்களில் பஸ் நின்றாலோ,கூட்டம் ஏறினாலோ எரிச்சலடைகிறோம்.
சினிமா நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் தேவ புருஷர்களாகக் கருதி தீக்குளிக்கும் அளவு போகிறோம்.
இலவசமாய் தருகிற எதையும் விடுவதில்லை. வேண்டாம் என்று மறுக்க மனம் வருவதுமில்லை!
சத்தமாய் பாட்டுப் போடுவதிலிருந்து, சத்தமில்லாமல் அடுத்தவர் வீட்டுத் தோட்டத்திலிருந்து லவட்டிகொள்வது வரை அடுத்தவர் உரிமையில் எவ்வளவு தலையிடுகிறோம்?
(என் மாமா அடிக்கடி சொல்வார் - உன் உரிமை என்று நீ உன் கையை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வீசலாம் - அது என் மூக்கில், முகத்தில் படாத வரை என்று!)
புகை பிடித்தல் நமக்கே கேடு. பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது. எத்தனை பேர் மதிக்கிறோம்? சாலைகளில் குடித்து விட்டுப் பண்ணும் அலம்பல்கள் கொஞ்சமா? (அது சரி, அரசாங்கமே கடையைத் திறந்து வைக்கும்போது என்ன செய்ய?!)
இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு உடனேயே உனக்குத் தண்ணீர் தர மாட்டேன், கரண்ட் தர மாட்டேன், உன் மொழியை விட என் மொழிதான் உயர்ந்தது என்றெல்லாம் அடித்துக் கொள்கிறோம்.
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ பாடல் பொய்யாகியதே...
கற்பு கற்பு என்று அலட்டிக் கொள்வதிலும் நம் வீட்டு ஜன்னல்கள் மட்டும் மூடியிருக்க விரும்புகிறோம்.
நம் வீட்டில் மின் தடை ஏற்பட்டால் உடனே பக்கத்துக்கு வீட்டைப் பார்க்கிறோம்....அங்கேயும் மின்சாரம் இல்லா விட்டால்தான் நமக்கு நிம்மதி...!
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இப்படியும் நடக்குமோ?

ஒரு அம்மா அவருடைய உடன் பிறவா சகோ வுடன் காரம்போர்டு ஆடிகிட்டு இருக்கார். அப்பப்போ ஹாலுக்குப் போயிட்டு வந்துகிட்டு இருக்காரு.
ஒரு ஆட்டம் ஆடுவதற்குள் - ஐந்தாறு தடவை போயி போன் பேசிட்டு வராரு ...
சகோ: யாரு - போன்ல?
அ : எல்லாம் நமக்கு கடமைப் பட்டவங்கதான் ..
சகோ: ஏன் அடிக்கடிக் கூப்பிட்டு தொந்தரவு பண்ணறாங்க?
அ: அவங்க தொந்தரவு பண்ணல - நாந்தான் கூப்பிட்டேன்.
சகோ : ஏன்? என்ன?
அ: எனக்கு காரம்போர்டு போர் அடிக்கும் போது - அல்லது இங்கே காயின் பாக்கெட் பண்ணவில்லை  என்றால்  - போன் செய்து - ஏதாவது ஒரு ஊர் செயலாளரின்  - பதவியைப் பறித்துவிடுவேன்.
சகோ: எந்த ஊரு ? 
அ: அட - அதைச் சொல்ல மறந்துட்டேனே -- ஏ, பி சி டி -- இருபத்தாறு எழுத்துல - ஏதாவது ஒன்னு சொல்லு.
சகோ: K
அ: ஓகே - கே பார் காஞ்சிபுரம் -- இப்பவே போயி - காஞ்சிபுரம் செயலரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி வருகிறேன். 
சகோ: பெயர் தெரியுமா? 
அ: அதெல்லாம் யாருக்கு வேணும்?
சகோ: இதுக்கு முன்னாடி நாலு தடவை என்ன போன் பண்ணினீங்க? 
அ: அது எல்லாம் எந்த ஊரு ன்னு மறந்து போச்சு. நாளக்கி பேப்பர் பாத்தாதான் தெரியும்.
சகோ: சரி அவங்க பதவிகளை  யாருக்குத் தரப் போறீங்க?
அ: அதை எல்லாம் உங்க சொந்தக் காரங்க பாத்துப் பாங்க ..

ஞாயிறு-7

 

சனி, 29 ஆகஸ்ட், 2009

அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே ... ஐம்பது கண்டாயே !

மல்ஹாசன் தன் ஐம்பதாவது ஆண்டை திரையுலகில் கொண்டாடுகிறார். இது ஒரு சாதனைதான். தமிழ்த் திரையுலகில் சிவாஜி கணேசனுக்குப் பிறகு நடிப்பில் கமல்தான் என்பார்கள்.
எந்த ஒரு மனிதனிடத்திலும் மிகப் பெரிய chef யார் என்று கேட்டால் நிச்சயமாய் அவரவர்கள் தங்கள் அம்மாதான் என்பார்கள். நாம் சந்திக்கும் முதல் சமையல் அம்மாவின் சமையல். First is the best always. அது போல நம்மை பாதித்த முதல் நடிகர், பாடகர், பாட்டு, படம்... Generally everything நம் ஆதர்சமாவது இயல்பு. எனவே அவரவர் விருப்பம் எல்லாவற்றிலும் மாறுபடும்.
Technology வசதி இல்லாத நாட்களிலேயே தன் நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர் சிவாஜி. அதையே Over acting என்று விமர்சனம் செய்பவரும் உண்டு. அது சரி; ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டுதானே...!
எனவே, technology வசதிகள் கூடிய இந்த நாளில் கமல் இன்னும் நன்றாகவே செய்கிறார் என்று சொல்லலாம். சிவாஜிக்கு நடிப்பு மட்டும் தெரியும். கமலுக்கு தெரியாத துறையே இல்லை.
இந்தப் பதிவின் நோக்கம் கமல்தான் Best மிச்சப் பேர் எல்லாம் Waste என்று சொல்வது அல்ல. ஏனெனில், ஒருவரை உயர்த்திச் சொல்லும்போது அதே துறையிலுள்ள அடுத்தவரை ஒப்பிட்டுப் பார்ப்பது உலக இயல்பாகி விட்டது.
அப்படி இல்லாமல் ஐம்பது ஆண்டுகள் கலையுலகில் பூர்த்தி செய்யும் ஒரு கலைஞனை, 'ஆல் தி பெஸ்ட்' என்று Wish செய்யும் பதிவு இது. அவர் படங்களில் (அவரவர் ரசனைக்கேற்ப) குப்பைகளும் உண்டு, மாணிக்கங்களும் உண்டு.
ராஜபார்வை, சலங்கை ஒலி, நாயகன் போன்றவை ரத்தினங்கள். குப்பை பற்றி நீங்களே கோடிட்டு - பூர்த்தி செய்து கொள்ளுங்கள்! அன்பே சிவம் படத்தில் அவர் இறுதியாக சிரிப்புடன் சொல்லும் "பொழைச்சுப் போங்க" ஒரு 'நச்". :: ஸ்ரீராம் ::
ஐம்பது ஆண்டுகள் - ஒரு துறையில் அயராமல் ஓ(ட்)டிக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான் - அதுவும் முன்னணியில். அதிலும் கமலின் தொப்பியில் எவ்வளவோ இறகுகள் -- !
மேலும் பல வண்ண மயமான இறகுகள் அவர் பெற "எங்கள்" வாழ்த்துக்கள்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

நான் எழுதுவது கடிதம் அல்ல! ...

செய்தி : விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தக் கோரி, சோனியா - மன்மோஹனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எங்கள் : அட பரவாயில்லையே - நல்லெண்ணெய், பருப்பு எல்லாம் விலை ஏறி - ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு வேகமான செயல் பாடா? பலே பலே! அதுவும் கடிதமா -- -- --
ஸூ ப் ப் பர்!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

முதன் முதலாய் .......

நான் லஞ்சம் கொடுத்த அனுபவம். நான் ஜூனியர் டெக்னிகல் ஸ்கூலில் சேர்ந்து படித்த காலம். அப்பொழுது, இருந்த காங்கிரஸ் அரசாங்கம் - படிக்கும் பையன்களில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களுக்கு - உதவித் தொகை அறிவித்தது. அப்பாவின் வற்புறுத்தலால், நானும் அப்ளை செய்தேன். கிடைத்தும் விட்டது. (அதற்குப் பிறகு காங்கிரசும் போய் விட்டது - அப்புறம் ஆட்சியில் பங்கே கிடைக்க வில்லை) உதவித்தொகை - மாதம் ரூபாய் இருபது - முதல் இரண்டு வருடங்களுக்கு, மாதம் முப்பது ரூபாய் - மூன்றாம் வருடத்திற்கு.இந்தத் தொகை - நான் டவுன் பஸ்ஸில் வீட்டிலிருந்து பள்ளி சென்று திரும்புவதற்கே பாதி செலவாகி விட்டது என்றாலும், உதவி, உதவி தானே!

அந்தத் தொழில் நுட்பப் பள்ளி, ஒரு பாலி டெக்னிக்குடன் இணைந்து இருந்தது. அந்த பாலியில் ஒரு கிளார்க். பெயர் எஸ் சில் ஆரம்பித்து என்னில் முடிந்தது என்று ஞாபகம். முகம் மட்டும் நன்றாக ஞாபகம் உள்ளது. அவருடைய டெக்னிக்கே தனி. அரசாங்கத்திலிருந்து stipend amount வந்து விட்டது என்றால் - அறிவிப்புப் பலகையில், ஓர் அறிவிப்பு, டைப் அடித்து - குத்தி வைப்பார்கள். - அது இரண்டே வரி - ஏதேனும் ஒரு மூலையில் - ஒட்டப் பட்டு - காலை பத்து மணி முதல் - மாலை மூன்று மணி வரை மட்டும் இருக்கும் - மதிய உணவு வேளையில் மட்டுமே கண்களுக்குப் புலப்படும் - பிறகு மாயமாகி விடும். என் கூடப் படித்த யம காதகப் பையன்கள் - அந்த அறிவிப்பு டைப் ஆகும் பொழுதே மோப்பம் பிடித்து, ஸ்டைபெண்ட வாங்கும் மாணவர்களுக்கு அந்த அறிவிப்பை சொல்லி - அதன் மூலம் நாலணா - எட்டணா சம்பாதித்து விடுவார்கள்.

சனி ஞாயிறுகளில் - பாலி ஆபீஸ் இருக்காது. மாதம் ஒரு முறையும் - அந்த உ.தொகை வராது. சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட தாமதமாக வரும். அரசாங்க தாமதமா - அல்லது அலுவலகத் தாமதமா என்று கூட எங்களுக்குத் தெரியாது. அறிவிப்பு வந்தவுடன் போனால் - வாங்கி விடலாம்; அது ஏதேனும் பண்டிகை விடுமுறை அல்லது வெள்ளிக் கிழமை என்றால் - மாணவர்கள் உஷாராக இல்லை என்றால் - கஷ்டம்தான்.
அந்த ஸ் ......ன் முதல் முறையாக - நான் ஸ்டைபெண்ட வாங்கப் போன போது - மூக்குக் கண்ணாடியின் மேல் பக்கம் வழியே என்னைப் பார்த்தார். அப்பொழுது அந்த மாதிரிப் பார்வைகளை பார்த்து பயம் கொள்ள ஆரம்பித்தவன்தான் - நேற்றைய பஞ்சாட்சரம் வரை - யார் என்னை அப்படிப் பார்த்தாலும் பயந்து போய் விடுவேன்! ஸ் ...ன் - பெயர் ஊர் வகுப்பு, வயது, குலம், கோத்திரம் எல்லாம் விசாரித்து விட்டு, சுற்றிலும் இருக்கும் சக எழுத்தர்களை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே, 'நாளக்கி - லன்ச் டைம் முடியற சமயம் வா' என்றார்.

மறு நாள் மதியம் ஒன்று இருபத்தைந்துக்கு டான் என்று அவர் மேஜை அருகே சென்று நின்றேன். அவர் அவருடைய எவர்சில்வர் டிபன் பாக்சை - கழுவி, துடைத்து எடுத்து வைத்துவிட்டு, நேற்றைய கேள்விகளை - திரும்பவும் கேட்டவாறே - ஒரு பைல் எடுத்து, நிதானமாக பிரித்து, குனிந்து ஒரு லிஸ்ட் - மௌனமாகப் படித்தார். நான் மெளனமாக நின்று கொண்டு அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அங்கு என்னையும் அவரையும் தவிர யாரும் இல்லை. "அப்பா என்னவா இருக்கார்?" என்று யாரோ கேட்டது போல் இருந்தது. அவரைப் பார்த்தால் - அவர் இன்னமும் குனிந்த பார்வையும் - குமிழ் புன்சிரிப்புமாக தேடிக் கொண்டிருந்தார். அசரீரிக்கு பதில் சொல்லுவதா வேண்டாமா - என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அதே கேள்வி -- ஆஹா இந்த ஸ் ..... ன் தான் இப்படி வாயைத் திறக்காமல் - ஓர ஜூப்பு சூசி - உதட்டைப் பிரிக்காமல் பேசுகிறாரா !

நான் - சற்றே தயக்கத்துடன் - ரிடயர்ட் - என்றேன். எங்கே வேலை பார்த்தார் -- அசரீரி. மூன்று வருடம் முன்பு ISRM - அதற்கு முன்னே பல இடங்கள் என்றேன். இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? இங்கே தான் - பக்கத்திலே ஒரு தோட்டத்திலே - மண்ணு கொத்திகிட்டு இருக்காரு என்றேன். கூலி வேலையா ? என்று கேட்டது அசரீரி. இல்லை - சொந்த தோட்டம் - அதுலதான் என்றேன். என்ன போட்டிருக்கிறார் தோட்டத்துல ? கொத்தவரை, அவரை, சக்கரவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காய் - வெண்டைக்காய் என்று அடுக்கிக் கொண்டே போனேன். சரி சரி - இந்தா - முதல் ஸ்டைபெண்ட - ஆறு மாசத்துக்கான நூற்று இருபது ரூபாய் - ஆறு இடங்களில் கையெழுத்துப் போடு. அப்பாவிடம் போய் நான் சொன்னதை எல்லாம் சொல்லு.

நான் அப்பாவிடம் பணத்தைக் கொடுக்கும் பொழுது - அவர் "நடந்தது என்ன - (குற்றம்) " என்கிற பாணியில் துருவித்துருவி கேட்க - நான் எல்லாவற்றையும் விலா வாரியாக - பேசி, நடித்துக் காட்டினேன். அவர், ஸ் ...... ன் ' கேட்டது என்ன - லஞ்சம் ' என்று தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டார்.

மறுநாள் நான் பள்ளிக் கூடம் போகையில், T-Square உடன் சேர்த்து, ஒரு மஞ்சப் பையையும் - தூக்க முடியாமல் தூக்கிச் சென்றேன். அதற்கு உள்ளே காய் கறிகள். இதை - அவரிடம் கொடுத்து விடு - என்பதுதான் எனக்கு இடப்பட்ட கட்டளை.
பகல் மணி ஒன்று இருபத்தைந்துக்கு - அவரிடம் சென்றேன். வாயெல்லாம் பல்லாக - என்னை வரவேற்று - அந்த மஞ்சப் பையை - மேசைக்கடியில் வைக்கச் சொன்னார். பிறகு நான் அந்த பையைப் பார்க்கவே இல்லை!
ஆனால் - ஸ்டைபெண்ட - வருகின்ற நாளுக்கு முதல் நாளிலேயே - ஆபீஸ் பியூன் ஆறுமுகம் என்னிடம் வந்து "கிளார்க் அய்யா - நாளக்கி வந்து பணம் வாங்கிக்கச் சொன்னார்" என்று சொல்லி விடுவார். என்னிடமிருந்து நாலணா லஞ்சம் பெற்று எங்க வீட்டுப் பிள்ளை - தரை டிக்கெட் வாங்கிப் பார்த்து மகிழ்ந்தவர்கள் - என்னுடைய கொத்தவரங்காய் - அவரைக்காய் - லஞ்சத்தினால் - மேலும் சம்பாதிக்க இயலாமல் போய் விட்டது!
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - லஞ்சத்தை லஞ்சத்தால் தான் ஒழிக்க வேண்டும் போலிருக்கிறது!
Jai Hind.

சனி, 22 ஆகஸ்ட், 2009

பரிசாக என்ன?

ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவோ நிகழ்ச்சிகள். நூற்றுக்கணக்கான உறவினர்களும் நண்பர்களும்  கூடுகின்றனர். " ஆசீர்வாதம் தர்றவா எல்லாம் தரலாம் " என்று கூவி அழைக்கிறார் புரோகிதர். இதற்குத் தயாராக வந்தவர்கள் அனைவரும் சின்னப் பொட்டலம், பெரிய பாக்கேஜ் என்று எடுத்துக் கொண்டு கிளம்புகிறோம். நடு நடுவே அழைப்பு வந்த கவர்களும், வாழை தோரணம் அச்சிட்ட மெல்லிசு கவர்களும் டி லக்ஸ் கிப்ட் என்வலப்களும் உள்ளே கரன்சி நோட்டுகளை அடக்கியவாறு இப்படியாக பலப் பல.
 
பரிசை தேர்வு செய்வது ஒரு கலை. நல்ல ஒரு பரிசைப் பார்த்தபின்பு "அட, நாம் கூட இந்த மாதிரி ஏதாவது வாங்கி இருக்கலாமே " என்று தோன்றும்.  ஆனால் வாங்கும் போது இப்படியான புத்திசாலித் தனம் நம்மிடையே அதாவது என்னிடம் இல்லவே இல்லை.
 
எல்லாரையும் போலவே நானும் பலப் பல முறை கண்ணாடி பழரச செட், எலேக்ட்ரோனிக் கடிகாரம், சுவாமி படம், இப்படியாக வாங்கிக் கொடுத்து பத்தோடு பதினொன்று அல்ல ஐம்பதோடு ஐம்பத் தொன்றாக விளங்கி இருக்கிறேன்.  எனது வீட்டு விசேஷங்களுக்கு மிக அபூர்வமான விஷயங்களை பரிசளித்தவர்களது வல்லமை கண்டு வியந்திருக்கிறேன்.
 
எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்க்கும் போது அன்பளிப்பாக பெறுபவர் விரும்பியபடி செலவழிக்க ஒரு தொகை தருவதே மேலோ என்று தோன்றுகிறது.
 
இதை மேலும் கவர்ச்சிகரமாகச் செய்ய ஒரு யோசனை.  வெறும் கவரில் நம் பெயர் குறிப்பிடாமல் விரும்பிய தொகையைப் போட்டுத் தரலாமே. இதனால் எல்லாருக்கும் நிம்மதி அல்லவா? இது பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

நல்லவனா, கெட்டவனா?

வான் வெளியில் அற்புதங்கள் அளவிலடங்காதவை. லட்சக் கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள். சூரியன் கூட ஒரு நட்சத்திரம்தான். நம் பூமியின் அளவில் ஆயிரக் கணக்கான அளவில் உள் வாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு சூரியன் பெரிய நட்சத்திரம். இந்த அகண்ட அண்டத்தில் நம் பால்வீதி போலவே கணக்கிலடங்கா பால்வீதிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சொல்ல வரும் விஷயம் அது அல்ல. சூரியன் சுற்றி வர ஒரு வருடம், சந்திரன் சுற்றி வர ஒரு மாதமும் ஆகிறது. சரி சனி சுற்றி வர ஆகும் காலம் என்ன தெரியுமா? முப்பது வருடங்கள்.
அவர் அவ்வளவு மெதுவாக சுற்றி வர காரணம் என்ன? அவருக்கு ஒரு கால் கிடையாதாம். ஏன்? அது ஒரு சுவாரஸ்யமான கதை.
நவக்ரகங்களை வென்ற இராவணன் தன மகன் இந்த்ரஜித் பிறக்கும் சமயம் அவன் யாராலும் வெல்லப் படக் கூடாது என்றும் தோல்வியே ஏற்படக் கூடாது என்றும், இன்னும் சரியாக சொல்வதானால் மரணத்தை வெல்ல வேண்டும் என்று எல்லா கிரகங்களையும் பிடித்து பதினோராம் வீட்டில் அடைத்து விட்டானாம்!
செய்வதறியாமல் திகைத்த தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த்ரஜித் பிறக்கும் சமயத்தில் சனி தன் இடது காலை நைசாக நாசத்தைக் கொடுக்கக் கூடிய பன்னிரண்டாம் வீட்டில் வைத்து விட்டானாம். பின்னர் ஜாதகம் கணித்த இராவணன் அதை அறிந்து சனியின் இடது காலை எடுக்க உத்தரவிட்டானாம்.
அதனால்தான் அவர் நொண்டி நொண்டி சுற்றி வர முப்பது வருடங்கள் ஆகின்றதாம்.
மெதுவாக சனியை வரும் படி செய்த இராவணன் நல்லவனா, கெட்டவனா?

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

அந்த நாள் ஞாபகம் .. நெஞ்சிலே

ஒரு விஜயதசமி நன்னாளில் சாமினாத வாத்யார் என் கையைப் பிடித்து ஹரிஹிஓம் என்று மணலில் எழுத வைத்து 6 1/4அணா கொடுத்து சேர்ந்த பள்ளிக்கூடம் என் வீட்டிலிருந்து மூன்றாவது கட்டிடத்தில் இருந்தது. அதனால் முதல் நாள் பள்ளி செல்லும்போது அழவேண்டும் எனக்கூட தோன்றவில்லை . மனோரமா டீச்சர் என் க்ளாஸ் டீச்சர். டீச்சர் என்றால் பெண்பால். வாத்யார் ஆண்பால் ... அது அப்படித்தான் ! மனோரமா மேடம் மிக பொறுமையான அன்பான டீச்செர். இரண்டாவது வகுப்பில் லில்லி புஷ்பம் .கௌதமன் சொன்னாற்போல் சற்றே கடுமையாக பேசுவார், நடத்துவார். எப்பொழுதும் மொட மொட புடவை , சின்ன குடையை ஆட்டி ஆட்டி பஸ் ஸ்டாண்டு அருகாமையிலுள்ள வீட்டிலிருந்து மனோரமா ,லில்லிபுஷ்பம் இருவரும் சேர்ந்து வருவதும் போவதும் அழகாக இருக்கும். சந்தானம் என் வகுப்புதான். அவன் பாக்கெட்டில் ஸ்கூல் வரும்போது சர்க்கரையும் அரிசியும் அல்லது குழம்புத்தான் (கறிகாய்) கட்டாயம் இருக்கும்!!
மூன்றாவது வகுப்பு சிங்காரம் பிள்ளை வாத்யார் மிக நன்றாகப் பாடுவார். நாலாவதில் மாரிமுத்து வாத்யார்.நாடக வசனம் எழுதுவது,பேச,நடிக்கச சொல்லி கொடுப்பது அவர் ஸ்பெஷாலிடி.5வதில் கோவிந்தராஜ் ஸார்.மனக்கணக்கு டக் என்று பதில் சொல்லாவிட்டால் மூக்குபொடி போட்ட கையோடு மூக்கை திருகுவார்.அதற்கு பயந்தே அவர் கேள்விக்கு வேகமாக,சரியாக, உடனடியாக பதில் சொல்லி விடுவோம்.
நான் பள்ளியில் சேர்ந்தபோது நடேச ஐயர் ஹெட்மாஸ்டர். அவருக்கு அடுத்து சுப்ரமணிய ஐயர். காரணப் பெயராக செவிட்டு வாத்யார் என்று அழைக்கப்பட்டார்.அவர் முகத்தில் காது கேளாததால் வரும் சந்தேகமும் கோபமும் கல்ந்த பார்வை ( என்னை வச்சு காம்டி கீமடி ப்ன்னிடலியே ?! ) அதனால் அவர் க்ளாஸ் பக்கமே போகமாட்டோம். சில காலம் அவர் ஸ்கவுட் மாஸ்டராயிருந்தார். தேர்முட்டி ஸ்கூலில் இருந்து ராஜாராம் ஸார் வந்தார். அவர் ஸ்கவுட்ஸ் மாஸ்டரானார்.அவர் வந்த பின்தான மடிப்பு கலையாமல் உடுத்தினால் எவ்வளவு மிடுக்காக இருக்கும் என்பது புரிந்தது.அந்த காலகட்டத்தில் அவர் மாடர்னாக இருந்தது எங்களை பெரிதும் கவர்ந்தது.
அந்த பள்ளியில் 5வது வரைதான் வகுப்புகள். எனவே 6வதுக்கு வேறு பள்ளிக்குப் போக வேண்டும். நாகையில் இரண்டு ஹைஸ்கூல்தான். ஒன்று நேஷனல் ஹைஸ்கூல் மற்றொன்று CSI ஸ்கூல். அனேகமாக நேஷனல் ஸ்கூல் பள்ளிகளில் படித்தவர்கள் நேஷனல் ஹைஸ்கூலுக்குத்தான் செல்வர். என்னுடன் படித்த சந்தானம்,ராமன்,முத்துரத்தினம்,சிவராமன்,சிவசங்கரன்,தண்டபாணி, மணிவண்ணன், G.R.குமார், சந்துரு எல்லோரும் பெரிய பள்ளிக்கூடம் சென்றோம்..தேர்முட்டி ஸ்கூல்,மெத்தை பள்ளிக்கூடம்,வெளிப்பாளயம் ஸ்கூல் என இதர பள்ளி மாணவர்களும் எங்களுடன் சேர்ந்தனர். (தொடரும்)

with love and affection,
rangan

சென்னை மாநகர மேம்பாலங்கள்

சென்னை மாநகர மேம்பாலங்கள் போக்கு வரத்து நெரிசலை உண்மையில் குறைத்திருக்கின்றனவா?
இல்லை, அவை கட்டப்பட்டுவரும்போது இருந்த நெரிசல் மட்டும் இப்பொழுது இல்லாததால் "ஆஹா கத்திப்பாரா சந்திப்பை எவ்வளவு சுலபமாகக் கடந்து விட்டோம்!" என்று பெருமை பட்டுக்கொண்டே அலுவலகத்துக்கு வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் பிரயாணப் படுவதும் அன்றி "இந்த IT காரர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு காரில் பயணித்து சாலைகளை அடைத்துக் கொள்வதுடன் விபத்துகளில் கொல்வதும் கொல்லப்படுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.  லண்டன் மாநகரம் போல் இங்கும் நகருக்குள் பேருந்துகளில் பயணம் செய்வதை ஊக்குவிக்க ஆவன செய்ய வேண்டும்" என்று எண்ணுகிறீர்களா?
 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சுகாதார விளக்கம்

நண்பர் கேஜீக்கு,
உங்கள் கருத்து (comment) படித்தேன். நன்றி.
சிறு வயதில் முத்து என்ற சலவை தொழிலாளி துணிகளை வெளுத்து மடிப்புடன் கொண்டு வருவார். மொட மொடப்புடன், இஸ்திரி வாசனையுடன் அதை போட்டுக்கோள்ள என் பாட்டி விடமாட்டார். காரணம்அவை வெள்ளாவியில் யார் யார் வீட்டுத் துணிகளுடன் துவைக்கப்பட்டதோ, அதனால் அவை விழுப்பு என்று சொல்லி, கொம்பால் எடுத்து, தண்ணீர் கங்காளத்துள் முக்கி பிழிந்து உலர்த்தி விடுவார். மறுபடியும் இஸ்திரியாவது ஒண்ணாவது.அப்படியே சுருக்கங்களுடன் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஹேர்கட்டிங் போனாலும் எல்லா ட்ரஸ்சையும் அவிழ்த்துப் போட்டுக் குளித்த பின்னேதான் வீட்டுக்குள் நுழைய முடியும். சுகாதாரமற்றவை விழுப்பு என்ற பெயரில் தவிர்க்கப்பட்டது. நாகரீகம் என்ற பெயரில் நாம் எதையும் தவிர்ப்பதில்லை. நோயும் நம்மை தவிர்ப்பதில்லை!
rangan

எந்தை தந்தை ..

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத்திரு விழாவில்
அந்தியம் போதில் அரியுருவாகி
அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்
தாண் டென்று பாடுதுமே.

People, who know the meaning of this - please write.

ANSWER FOR THE 5 MARK QUESTION

ஹிப்னாடிசம் என்பது பெரிய ஜித்தர்கள் செய்யும் வேலை. ஒரு காலத்தில் மாபெரும் குற்றமாகக் கருதப் பட்ட இந்தக் கலை மருத்துவத்திலும் Crime department டிலும் மிக உதவிகரமான ஒரு கருவி.
ஹிப்னாடிசம் செய்பவருக்கு நல்ல காத்திரமான குரலும், பேச்சில் ஒரு வசீகர நடையும் இருக்க வேண்டும்.பின்னணியில் rythmic ஆக ஒரு Music கும் இருக்க வேண்டும். Constant ஆக ஒரு பந்து விளையாடும் ஓசையோ, தொடர்ந்த ஒரே மாதிரியான பறவைகள் சத்தமோ, இருந்தால் effective ஆக இருக்கும். (சுஜாதாவின் விபரீதக் கோட்பாடு படித்ததில்லை?)
மிகவும் எச்சரிக்கையாக செய்ய வேண்டிய இந்தவேலை சற்றுக் கடினமானது. அடுத்தவர் மனதை ஆளும் இந்த சமயத்தில் ஒரு சிறு தவறும் அடுத்தவர் மனதில், மனதின் எண்ணங்களில் விளையாடி விடும்.(உடல், பொருள், ஆனந்தி படித்ததில்லை?)
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. தவறான காரணங்களுக்கு பயன் படுத்தாமல் மருத்துவ காரணங்களுக்கும் குற்றங்களைக் கண்டு பிடிக்கவும் உபயோகப் பட்டால் நல்லதுதான்.மற்றபடி பலமான மனசு பலவீனமான மனசு எல்லாம் தெரியாதுங்க....

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

புங்கையும் புன்னையும் ..

புங்கை மரமும், புன்னை மரமும் ஒன்றேயா அல்லது வெவ்வேறா?
விஷயம் அறிந்தவர்கள் comment பதியுங்கள்!


சனி, 15 ஆகஸ்ட், 2009

இன்னும் கொஞ்சம் ஆவி

இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள எப்போது முயல்கிறோம்? சாவைப் பற்றி பயமோ அல்லது அதற்குப் பின் என்ன நடக்கும் என்ற ஆர்வமோ வரும் போதுதான் நமக்கு இந்த சந்தேகங்கள் வருகின்றன. சாகும்போது என்ன நடக்கிறது, நாம் வேறு ஒரு உலகம் செல்கிறோமா, அங்கு எப்படி இருக்கும், பயமானதா அல்லது கவலை இல்லாத சுகமானதா என்ற கேள்விகள் மனதை அரிப்பதாலேயே இந்த வகை ஆர்வங்கள் வருகின்றன.
இறந்தவர்களுடன் பேச ஓஜோ போர்ட் ஒரு வகை என்றால் இன்னொருவரை medium ஆக வைத்து இறந்தவர்களுடன் பேசுவது இன்னொரு முறை. மூன்றாவது முறையும் உண்டு. நாமே அந்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ளுதல். பூனைக் கண் உள்ளவர்களுடன் ஆவிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் என்பது போல வேறு சில தகுதிகளும் உள்ள சிலர் medium ஆக இருந்து நம் சார்பில் நம் உறவினர்களுடன் ஒரு agent போல பேசி பதில் தருவார்கள். இவை சில சமயம் எழுத்து மூலத்தில் எழுதியும் தருவார்கள்.
நாம் அந்த நிலைக்கு உயர்த்திக் கொள்ளுதல் என்பது சற்று சிக்கலான விஷயம். நாம் பேசுவது என்பது ஒரு சக்தியாக எடுத்துக் கொண்டு சத்த அலைகள் பயணம் செய்வதாக வைத்துக் கொண்டால் நம் எண்ணங்களும் ஒரு அலையாக மாறி காற்றில் பயணிக்கின்றன. நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது உள்ள அதிர்வலை வரிசை வேறு.... கனவுலகில் இருக்கும்போது உள்ள அதிர்வலை வரிசை வேறு.... இந்த அதிர்வலை வரிசைகள் நீத்தார்கள் அதிர்வலை வரிசையுடன் ஒத்துப் போகும் போது நாம் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும் என்பது சித்தாந்தம்.
நாம் தொடர்பு கிடைக்கும்வரை email அனுப்புவது போல அவர்களிடம் மனதிற்குள் இடைவிடாமல் கேள்விகள் கேட்டு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டுமாம்.
medium ஆக இருப்பாவர்கள் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்வது என்பது சிரமம். இறந்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக இருந்தால் தொடர்பு கிடைப்பது எளிது. அப்போது அந்த medium களிடம் இறந்தவர்களது மேனரிசங்கள் ஒட்டிக் கொண்டு அவர்களது செய்கையிலே வந்துள்ள நபர் தன் இறந்த உறவினரை அடையாளம் கண்டு கொள்வாராம்.
இதெல்லாம் நடப்பது மற்றும் சொல்லக் கேள்விதான்....எந்த அளவு நிஜம்? யாருக்குத் தெரியும்?

நாடி பிடித்துப் பார்த்த போது.


உலகத்தில் எந்த மூலையிலிருந்து எந்த அனாமதேய மனிதரும் நாடி ஜோசியம் பார்க்கப் போகலாம்.  அவரது நாடி பெரும்பாலும் கிடைக்கிறது.

இது எப்படி சாத்தியம்? உலக ஜனத் தொகை முன்னூறு கோடி என்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் நாடி எழுதப் பட்டு அது ஒரு சிறு வீட்டினுள் சேமிக்கப் பட்டிருக்க முடியுமா?

உங்கள் நாடி இங்கே இல்லை மூன்றாம் வீட்டில் போய்ப் பாருங்கள் என்று சொல்லப் படுவதாகவும் தெரிகிறது.  ஆனாலும் அவ்வளவு பேருக்கும் எழுதி வைக்கப் பட்டிருந்தால் அகஸ்தியர் இது தவிர வேறு ஏதும் செய்திருக்கவே முடியாது என்று அல்லவா தோன்றுகிறது? அகஸ்தியர் வேறு என்ன செய்தார் என்று குறுக்குக் கேள்வி கேட்கவேண்டாம்.  அவர் சிவன் கல்யாணம் பார்க்க கைலாசம் போனதும், காவிரியை கமண்டலத்தில் கொண்டுவந்ததும் நாம் அறிந்ததே.

மாஜிக் வித்தை போல இதுவும் ஒரு கண்கட்டு வித்தை தான் போலும்.


yraman

ஆவியோடு பேச ஒரு தொலை பேசி.


பிளாஞ்செட் பலகை என்று ஒன்று.  எ, பி, சி, டி எழுத்துக்களும், ஒன்று முதல் ஒன்பது வரை இலக்கங்களும் பூஜ்யமும், ஆம், இல்லை என்று இரண்டு ஆப்ஷன் களும் கொண்டது, கண்ணாடி போல் வழு வழுப்பான பலகையில் இந்த எழுத்துக்கள் பிறவும் ஓட்டப் பட்டிருக்கும். எளிதில் சறுக்கிச் செல்லக் கூடிய ஒரு வஸ்து அதன் நடுவில். இதை நான்கைந்து பேர் கை விரல்களால் லேசாக தொட்டுக் கொண்டிருப்பர்.

அறையில் ஒருவர் "1991 இல காலமான என் தந்தையார் சுப்ரமணிய ஐயர் குமாரர் கோபாலய்யர் அவர்களை அழைக்கிறேன்" என்று தெளிவாகக் கூறுவார்

கொஞ்ச நேரம் கனமான மௌனம். நிசப்தம். திடீரென்று எல்லாரும் (?) லேசாகப் பிடித்திருக்கிற பொருள் நகரத் தொடங்குகிறது.

" நீங்கள் வந்திருப்பது உண்மையானால் உங்கள் பிறந்த வருஷத்தைச் சொல்லுங்கள்"  என்று முன்பே கூப்பிட்டவர் கேட்கிறார்.

மீண்டும் நிசப்தம். சஸ்பென்ஸ். மெதுவாக பொருள் நகர்ந்து 1, 9, 0, 8 க்குச் சென்று வருகிறது!

மிகச் சரியான விடை என்று அப்துல் சமத் கூவ வில்லை.  ஆனாலும் சரியான விடை தான்.

இனி வரிசையாக கேள்விகள் கேட்கப் பட பதில்கள் இந்த முறையில் வருகின்றன.

இதுதான் அடித்தளம்.  இதன் மேல் கட்டப் படும் மாளிகைகளின் சிக்கல்கள் நுணுக்கங்கள் ஏராளம்.  அவற்றை இனி வரும் உள்ளீடுகளில் பார்க்கலாமா?

Yraman

ஆவியைப் பார்க்க ஒரு சாவி. ஆவியை சந்திக்க ஒரு பாவி.


ஆவி உலக தொடர்பு இறந்தவருடன் பேசுவது பற்றி எழுத கொஞ்சம் தயக்கத்துடன் தொடங்குகின்றேன்.  இறந்த பெரியவர்களின் சாபம் கிடைக்கக் கூடும் என்ற பயம் காரணம் அல்ல. இங்கே கேள்விப் படுவதில் எதை நம்புவது எதை விடுவது என்று தெரியாமையும் ஒரு காரணம்.

என் உறவினர் ஒருவர் தாம் இது பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ததாகக் கூறினார். சிக்கல் என்ன வென்றால் அவர் கற்பனை சக்தி மிக்கவர். சுவை படப் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் பொய் மெய் என்றெல்லாம் பார்க்க மாட்டார். (இந்த குணம் நம் அனைவரிடமும் ஓரளவு உண்டு) அவர் கூறிய சம்பவங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

அவரது சகோதரி பூனைக் கண் கொண்டவர். இந்த மாதிரி நபர்களிடம் ஆவிகள் நெருங்கிப் பழகும் என்று ஒரு நம்பிக்கை உலவுகிறது. இந்த சகோதரி அறையின் உள்ளே தனியாக இருந்து கொண்டு கதவை வெறுமே சார்த்திவிட்டு அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.  வெளிப் பக்கம் பலர் ஒன்று கூடி தள்ளினாலும் கதவைத் திறக்க இயலவில்லை. காரணம் ஆவிகள் அவருடன் சேர்ந்து கதவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தது தான்.

இதை நீங்கள் நம்ப முடிகிறதா? எனக்கும் நம்பிக்கை வரவில்லை. எனினும் அந்த சகோதரி கூட அதை உறுதி செய்த பொது நம்பாமலிருக்கவும் முடியவில்லை.

ஆவிகளிடம் பேச பல வழிகள் இருப்பதாகத் தெரிகிறது. இது விஷயத்தில் உங்கள் அனுபவம் ஏதும் உண்டா? உள்ளீடுகள் வரவேற்கப் படுகின்றன.
yraman

நாடியில் நாடியது, நாடாதது.

ராமன் என்பவர் நாடி பார்க்கப் போகிறார். நாடி ஜோசியர் ஒரு கூடை நிறைய சுவடி கொண்டு வந்து ஒவ்வொன்றாக பார்த்தவாறு கேள்வி கேட்கிறார்.

உங்கள் பெயர் ராமன். உங்கள் அப்பாவுக்கு சிவன் பெயர்.
"சரி"
உங்களுடன் கூடப்பிறந்தவர்கள் அஞ்சு பேர்.
"இல்லை"
அப்படியானால் இது உங்கள் நாடியல்ல. வேறு ஒரு சுவடியை எடுக்கிறார் ஜோசியர்.
உங்க அம்மா பேரு லட்சுமி தேவி சம்மந்தமானது.
"இல்லை"

அப்படியானால் இது உங்கள் நாடி இல்லை.

இப்படியாக கேள்வி மேல்கேள்வி கேட்டு பதில்களை வந்தவருக்குத தெரியாமலேயே ஜோசியர் கண்டுபிடித்து விடுவார். பின் என்ன. எல்லாவற்றையும் பொருத்தி ஒரு பழைய தமிழ்ப்பாட்டு எழுத வேண்டியதுதான்.

உங்கள் நாடியை நாளை எடுத்து வைக்கிறேன் வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார் ஜோசியர். நாளைக்குள் புதுப் பாட்டு தயார்.

இப்படி நடக்கிறது என்று ஒரு சிலர் கருதுகிறார்கள். இதன் காரணமாகத்தான் இறந்த காலம் சரியாக இருப்பதாகவும் எதிர் கால ஜோசியம் பலிப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். லாட்ஜில் தங்கி இருப்பவரிடம் தகவல்களை அவரறியாமல் கேட்டறிந்து நாடி ஜோசியருக்குச் சொல்வது உண்டு என்றும் சொல்கிறார்கள்.

ஆதரவாக எண்பது சதமும் எதிர்த்து இருபதும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
உண்மை எங்கோ ஒளிந்திருக்கிறது.
Y.raman

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

இது ஏமாற்றுதல் ஆகுமா?

இது ஏமாற்றுதல் ஆகுமா என்று தெரிய வில்லை. ஆனால் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதாவது வம்படிக்கும் ஒரு நபரை தேசிகன் பழி வாங்கிய கதை.

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் பாண்டியன் தியேட்டருக்குப் பின்புறம் இயங்கி வந்த நேரம். பெருமாள் கோவிலிலிருந்து கீரைக் கொல்லைத் தெரு வழியே போய் ரயில்வே கேட்டைத் தாண்டிப் போக வேண்டும்.

தேசிகன் சிவில் எஞ்சினீரிங் படித்து வந்தார். ஒவ்வொரு நாள் சர்வே செய்யும் கருவிகளை வைத்துக் கொண்டு தெருவை வரைபடமாக்கிக் கொண்டிருப்பார் நம் நண்பர். அங்கு ஒத்தைக் கடை என்று சொல்லப் படுகிற வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்தவர் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் மாணவர்களுக்கு அவர் மீது ஒரு வகையான aversion=(கு என்ன தமிழ் வார்த்தை?)

ஒரு நாள் தேசிகன் தன் புத்தகங்களுடன் ஒரு பெரிய நூல் உருண்டையை எடுத்து செல்வதைக் கண்ட கடைக்காரர், "என்ன தம்பி, நூல் என்ன காத்தாடி விடுவதற்கா?" என்று கேட்க, " இல்லை, டேப் கொண்டு வர மறந்து விட்டேன். இங்கிருந்து அடுத்த சந்து முனை வரை அளந்து எழுத வேண்டும் என்றதும் கடைக்காரர் உதவ முன் வரவும், அது தான் சாக்கு என்று தேசிகன் நூல் முனையை அவரிடம் கொடுத்து விட்டு சந்து திரும்பி, அங்கிருந்த ஒரு மின் கம்பத்தில் கட்டி விட்டு மாயமாகி, பின் 4-5 மாதங்களுக்கு அந்தத் தெரு வழியே போவதையே நிறுத்தி இருந்தார்!
கடைக்காரரைத் தெரிந்தவர் யாராவ்து கேட்டு சொல்லுங்களேன் அவர் மீள எவ்வளவு நேரம் ஆயிற்று என்று.

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து
அறுபத்திரண்டு ஆண்டு ஆன பின்னே  ...
தூக்குவதற்கு எளிதான பிளாஸ்டிக் குடங்கள் ---
ஆனால், சுத்தமான தண்ணீர்தான் இல்லை!
நாட்டிலே கட்சிகள் அதிகமா அல்லது
இங்கு காணப் படும் பிளவுகள் அதிகமா?
பட்டிமன்றம் நடத்த பாரோர் வாரீர்!

Cheats and their Feats.

                வாஸ்து எனும் வஸ்து.

இது பற்றி நேரடியாக ஏதும் சொல்ல எனக்குத் தகுதியில்லை என்றாலும், இப்போது வாஸ்து ஆலோசனை (இடிக்காமல் மாற்றாமல் பரிகாரம் மாதிரியாக விளம்பரப் படுத்தப் படுவது) பெயர் மாற்றம், ரசிகர்கள் மோதிரம், கவசம் எண் கணித சாஸ்திரம் இப்படியாக பணம் பிடுங்கும் சமாச்சாரங்கள் ரொம்ப அதிகமாகிக் கொண்டே வருகின்றன. ஆதி நாட்களில் வேஷ்டி போர்த்திய துண்டு அணிந்த ஒரு தேவர் (பெயர் நினைவு இல்லை) பல ரகங்களில், பல விலைகளில் கவசங்களை விளம்பரம் செய்வார்.  நம்பிக்கை இல்லாதவர்கள் வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கையும் அதில் இருக்கும்.

அதற்கும் முன்பு துப்பாக்கி, லைசென்ஸ் தேவையில்லை என்று கேப் துப்பாக்கியை விற்றவர்களும், பெண்களை மயக்க மாயமோதிரம் பத்து ரூபாய்க்கு விற்றவர்களும் விளம்பரம் செய்வதை ஆனந்த விகடனில் கூட வருவதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய குடுமி வைத்த நண்பர் ஒருவர் கன்னியரின் கவர்ச்சிப் படங்கள் என்று ஐம்பது ரூபாய் அனுப்பி கண்ணுக்குத் தெரியாத செயற்கை ஆப டோன் படங்களைப் பெற்று கொதிப்படைந்தார்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: இந்தப் பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏமாறத் தயாராக ஒருவன் புதிதாகப் பிறக்கிறான் என்பது தான் அது. எய்ட்ஸ் வியாதியை கூட்டு மருந்து தந்து குணப் படுத்துகிறேன் என்று வைத்தியர்கள் ஆரவாரம் செய்கிறார்களே அது ஒரு உதாரணம்.  ராமர் பிள்ளை பெட்ரோல் தயார் செய்தது (அது என்ன வாயிற்று?) மற்றொன்று.

பித்தளையை தங்கம் ஆக்கித் தருகிறேன் என்றும், புதையல் எடுக்க உதவி செய்கிறேன் என்றும் நகையை பளபளப்பாகுகிறேன் என்றும், சங்கிலி தொடர் முறையில் உங்களை கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்றும் எவ்வளவு புத்திசாலித் தனமான முயற்சிகள்! இதில் விழுந்து ஏமாறும் லட்சக் கணக்கான மக்கள்!  சீட்டுப் போட்டு வீடு வாங்கவும் நகை செய்யவும் முயன்று கோட்டை விட்டவர்கள் எத்தனை!

ஆனாலும் நாளையும் கூட கரன்சி இரட்டிப்பு மாதிரியான மோசடியில் மேலும் ஆயிரம் பேர் விழத் தயாராக இருக்கிறார்கள்.  மேரா பாரத் மகான்!
YRaman

புதன், 12 ஆகஸ்ட், 2009

தத்துவம் என்ன சொல்லுவாய்?

சில விஷயங்கள் எவ்வளவுதான் படித்தாலும் பிடிபடுவதில்லை!

ஆந்த்ரொக்ஸ் நோய் ஒரு காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. மாடுகள் ஆயிரக்கணக்கில் அதன் தாக்கத்தால் பலியாவதாக பரவலாக பேசப்பட்டு, பின் அதைபற்றிய பேச்சையே காணோம். பின் இங்கிலாந்தில் ஃபுட்மௌத் டிஸீஸால் கால் நடைகள் பாதிக்கபட்டு அதன் இறைச்சியை உண்பவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற செய்தி அந்த நாட்டு பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது. இந்த வரிசையில் கோழிக்காய்ச்சல் நோய் வந்து அவ்வப்போது ஆயிரக்கணக்கான கோழிகள் கொலையுண்டு பெரிய பள்ளங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டன. டிங்கு ஜுரம்,சிக்கன் குனியா போன்ற நோய்களும் பரவி மக்களை நோயினாலும்,மருத்துவ செலவினாலும் வாட்டி வதைத்தது.

இந்த வரிசையில் இப்பொழுது H1N1 வந்திருக்கிறது.இந்த நோயின் தாக்கத்தில இருந்து காத்துக் கொள்வது எப்படி என்பதைவிட அதன் பாதிப்புகளைப் பற்றி மீடியாக்கள் விலாவாரியாக விவாதித்து தங்கள் வருவாயை அதிகரிப்பதிலும் மக்களை அச்சுறுத்துவதிலும் மிகுந்த கவனமாயிருப்பதாக நான் அபிப்ராயப்படுகிறேன். அரசும் தன் பங்கிற்க்கு இந்த நோயை,விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, முறையற்ற அரசு செயல்பாடு இவைகளால் மக்களுக்கு உண்டாகும் அதிருப்தியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் கேடயமாகவோ அல்லது திசை திருப்பும் உத்தியாகவோ பயன்படுத்துகிற்து.

ஏதேனும் நோய் மேலை நாடுகளில் உண்டானால், அது நம்மிடம் பரவும் முன் இங்கு முன் எசசரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஒருசமயம் குஜராத்தில் சூரத்தில் ப்ளேக் நோய் பரவியபோது மேல் நாடுகள் இந்தியாவிலிருந்து மக்கள் வருவதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுது நோயின் தோற்றம் அமேரிக்காவில் என்று தெரிந்தும் அங்கு மக்களை அனுப்பவும் அல்லது அங்கிருந்து வருபவரைத் தடுக்கவோ எந்த செயல்பாட்டையும் திறம்பட செய்யவில்லை. ராஜபாட்டையாக மேல் நாடுகளின் குப்பை கழிவுகளுக்கும், நோய் பரவலுக்கும் இந்தியாவைப் புகலிடமாக வைத்துள்ளோம். நாம் எப்பொழுதுமே அடிமை மனப்பான்மையிலேயே இருக்கிறோம். கப்பல் கப்பலாக குப்பைக் கழிவுகளை, நோய் கழிவுகளை இறக்குமதி செய்கிறோம். கண்ணை விற்று சித்திரம் வாங்குவதென்பது இதுதானோ?

நோயின் திறம், தோற்றம், பாதிப்பு, இவற்றில் நம் அணுகு முறை காலம் கால்மாக தற்காப்பு முறையில்தான் இருக்கிறது.மக்கள் சுகாதாரத்தின் நன்மையை உணராதவர்களாகவே இருக்கின்றனர். நோய் வந்தபின் அதை குணமாக்குவதற்கு ஆகும் செலவை விட அதை வருவதற்கு இடம் இல்லாமல் செய்வதற்கு.ஆகும் செலவும் முயற்சியும் குறைவாகவே இருக்கும் அல்லவா? கடைத்தெருக்கள், பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லூரி என எந்த இடத்திலும் சேரும் குப்பை கழிவுகளை அகற்ற நாமோ, அரசோ முனைப்புடன் எப்பொழுதும் செயல்படுவதில்லை. கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்கிறோம். அதையும் ஆர்வமின்றி செய்கிறோம். இதையும் மீறி நம் நாட்டின் ஜனத்தொகை வளருவது உலக அதிசயந்தான் !!!
அன்புடன்
ரங்கன்.

வாஸ்து (ஏ)மாற்றம்!

 வாஸ்து நிபுணர் (என்று சொல்லிக் கொள்பவர்) ஒருவர் என்னோடு சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் - நான் பயணம் செய்யும் அலுவலகப்  பேருந்தில் என்னிடம் பேசிக்கொண்டு வந்தார்.
நி: உங்க வீட்டை வந்து நான் நேற்று பார்த்தேனே - உடனேயே உங்கள் கஷ்டத்துக்கு எல்லாம் என்ன காரணம்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
நான்: எனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே!
நி: அது சரி - நீங்கள் அப்படி நினைக்கலாம்; உங்களுக்கு வரவேண்டிய பிரமோஷன் இன்னும் வராமல் இருக்குமே?
நான் : இல்லை - ஆக்சுவலா, எனக்கு இந்த வருட ஆரம்பத்திலேயே - பிரமோஷன் தருகிறேன் என்றார்கள் - நாந்தான் - வேண்டாம், டிபார்ட்மென்டில் இருக்கும் சீனியர்களுக்கு முதலில் கொடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
நி: உங்க பசங்க எல்லாம் ஸ்கூல்ல நிறைய பிரச்னைகள் வந்திருக்குமே!
நான் : இல்லையே! குழந்தைகள் எப்பொழுதும் போல் முதல் ரேங்க் வாங்கிகிட்டு இருக்காங்க!
நி : ஆனா - ரொம்பக் கஷ்டப் படுவாங்களே?
நான் : ஆமாம்!
நி: ஹாங், அதைத்தான் சொன்னேன்!  உங்க குழந்தைங்க கஷ்டப் படாம இருக்கணும்னா .....
நான் : சார் நான் சொன்னது - என் குழந்தைங்களோட கஷ்டத்தை இல்லை; அவங்களோட படிக்கிற மற்ற குழந்தைகள் - இவங்களோட போட்டி போட - படற கஷ்டத்தைதான்!
நி: நான் என்ன சொல்றேன்னா - நீங்க உங்க வீட்டின் அமைப்பைக் கொஞ்சம் மாத்தி கட்டினா .... 
நான் : அதுக்கு நான் ஏற்கெனவே ஒரு என்ஜினீயர் கிட்ட சொல்லி இருக்கேன் - அவர் கொடுத்த கொடேஷன் சரியா என்று தெரிஞ்சிக்கத்தான் உங்களை நேத்திக்கு வீட்டுக்குக் கூப்பிட்டேன்!
நி: அப்படியா? அவர் என்ன கேட்டார், என்னென்ன மாற்றம் செய்யனும்னார்?
நான் : 5 மாற்றங்கள் சொன்னார்; 10 லட்சம் கேட்டார்.
நி : சார் - அதுல 3  மாற்றங்கள் போதும்; 3 லட்சம் போதும்.
நான் : ஆஹா - இன்னொரு எஞ்சினியர் - அதே தான் சொன்னார்; அவர் ஆனா இரண்டரை லட்சம் தான் கேட்டார்.
நி : சார் நான் கூட உங்களுக்காக அதே இரண்டரை ...
நான் : அடடா - நான் என் நண்பர் வீரராகவனிடம் ஏற்கெனவே இன்று காலை இரண்டு லட்சத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்துட்டேனே!