திங்கள், 31 மார்ச், 2014

திங்க கிழமை 140331:: உகாதி பச்சடி.

                  
உகாதி தினத்தன்று செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு தான் உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும்.  
  


  


இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம்: 
(இதை உண்பவர்கள்,)
மாங்காய், புளி - புளிப்பு : வீட்டில் உள்ளவர் எல்லோருக்கும் புளித்துப் போகும் அளவுக்கு நீண்ட ஆயுளுடனும், 
வேப்பம்பூ - கசப்பு - எமனுக்குக் கசப்பாகவும், 
வெல்லம் - இனிப்பு - ஊரில் உள்ளோர் எல்லோருக்கும் இனியவராகவும், 
தேங்காய் போன்று இளகிய, வெள்ளை மனம் கொண்டவராகவும், 
மிளகாய்த்தூள் - காரம் - எதிரிகளுக்குக் காரமானவராகவும் 
உப்பு - உவர்ப்பு - உழைப்பின் மேன்மையை உணர்ந்து நடப்பவராகவும் 
இருக்கவேண்டும் என்பதே. 
  


இந்த பச்சடியை மூன்று ஸ்பூன் சாப்பிடும்போது 
# வீட்டவருக்குப் புளிப்பாக,
# எமனுக்குக் கசப்பாக,
# ஊராருக்கு இனிப்பாக 
என்று சொல்லி வீட்டுப் பெரியவர் கொடுக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் கையில் வாங்கி குடிப்பார்கள். 


இப்போது அந்த உகாதி பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
                   

தேவையான பொருட்கள்: 
மாங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன் 
வெல்லம் - 1 கப் (தட்டியது) 
தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் 
புளிச் சாறு - 4 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 3 கப் 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி!!!
      

புதன், 26 மார்ச், 2014

அலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி)

  
இதன் முந்தைய பகுதி சுட்டி இது!

விஸ்வநாதம் என்னிடம் ஒரு நாள் கேட்டார்: 

தமிழில் 'நல்லார்க்கு' என்றால் என்ன அர்த்தம்? 

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன். 

'என்னுடைய அறை நண்பன் ஒரு பைத்தியக்காரன்' என்றார்.

ஏன்?

விஸ்வநாதம் கூறியது: 

நேற்று ரங்கநாதன் தெரு ஜவுளிக்கடை ஒன்றில், ஒரு போர்வை வாங்கினேன்.  
     
இரவு போர்த்திக் கொள்ள அதை பையிலிருந்து எடுத்தேன். அதைக் கண்ட நண்பன். "நல்லார்க்கு" என்றான். 'அப்படி என்றால் என்ன?' என்று கேட்டேன். அவனும் நீ சொன்ன அர்த்தம்தான் சொன்னான். ஆனால் மேற்கொண்டு, நாம் வாங்கிய பொருளை யாராவது பார்த்து, நல்லா இருக்கு என்று சொன்னால், அதை அவரிடம் கொடுத்து விட வேண்டும்' என்றான். 

'காசுக்கா?' என்று கேட்டேன். 'இல்லை - பைசா எல்லாம் கேட்கக்கூடாது; ஓசிக்குதான் கொடுக்கவேண்டும்' என்றான். 

எனக்கு இந்த லாஜிக் புரியவில்லை. டெஸ்ட் செய்து பார்ப்போம் என்று நினைத்து அவனிடம், 'உன்னுடைய பைலட் பேனா நன்றாக இருக்கிறது' என்று சொன்னேன். அவன் உடனே ' ஆமாம் சூப்பர் பேனா. என்னுடைய அலுவலக நண்பன் வாங்கினான். நான் ஆசைப் பட்டேன் என்று தெரிந்ததும் எனக்கு கிப்ட் பண்ணிவிட்டான்' என்றான். 

'நீ இந்த மாதம் ஏதாவது புதிதாக வாங்கினாயா?' என்று கேட்டேன். 

'ஒன்றும் வாங்கவில்லை' என்றான். 

மீண்டும் போர்வை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம், இந்தக் கலர், இந்த மெடீரியல் நன்றாக இருக்கிறது, எனக்குப் பிடித்திருக்கிறது என்றுதான் நான் வாங்கினேன். எந்தக் கடையில் வாங்கியது என்றும் சொல்கின்றேன், இதே போல அங்கே நிறையப் போர்வைகள் உள்ளன. நீ அங்கே போய் வாங்கிக் கொள்ளலாமே' என்றேன். 

அவன் கோபமாக, 'அது எனக்குத் தெரியாதா? இதை நீ எனக்குக் கொடுத்துவிட்டு, நாளைக்குப் போய் வேறு வாங்கிக் கொள்' என்றான். 

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 'சரி, நான் பைசா தருகின்றேன், நீ போய் வாங்கிக்கொள்' என்றேன். உடனே அந்த நண்பன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டான். நீ எல்லாம் ஆந்தராவிலிருந்து வந்தவன். எங்கள் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் உனக்குத் தெரியவில்லை. நீ ஒரு சரியான கஞ்சூஸ், கருமி' என்று திட்டிவிட்டு (நைட் ஷிப்ட்) வேலைக்குக் கிளம்பி சென்று விட்டான். 
   **** **** **** 
   
எனக்கும் சென்னை வந்த புதிதில் இந்த மாதிரி அனுபவங்கள் ஒன்றிரண்டு நடந்தன. எப்பொழுதும் யாராவது புதியதாக எதையாவது வாங்கி என்னிடம் காட்டினால், 'நல்லாயிருக்கு' என்று கூறுவேன். அப்படி எதேச்சையாகக் கூறிய ஓரிரண்டு சந்தர்ப்பங்களில், அதை அவர் எனக்குக் கொடுத்துவிட அதை வாங்கிக்கொள்ள மறுப்பது பெரும்பாடாக ஆன சந்தர்ப்பங்கள் உண்டு. பிறகு கொஞ்சம் மாற்றி, 'ஆஹா இது உங்களுக்கு மிகவும் சரியான உடை, நல்ல செலெக்ஷன் என்றெல்லாம் கூறி, 'நல்லா இருக்கு' என்று கூறுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கிய பொருட்களை யார் 'நல்லா இருக்கு' என்று கூறினாலும், பதிலுக்கு 'நன்றி' மட்டுமே கூறுவேன்! 
      
அன்று மாலை நண்பன் வந்த பிறகு என்ன நடந்தது என்று விஸ்வநாதமிடம் பிறகு விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துபோய் விட்டது! 

===========================

அப்ரண்டிஸ் ஆக இருந்தபொழுது, இதே விஸ்வநாதம், அவருடைய பள்ளிக்கூட நாட்களைப் பற்றி சுவையாக பல தகவல்கள் தெரிவித்தது உண்டு. அவருடைய சிறிய தங்கைகள் எப்படி மணலில் வீடு கட்டி விளையாடுவார்கள், பார்த்துக் கொண்டே இருந்த இவர் எப்படி ஓடிப் போய் அவர்கள் கட்டி விளையாடும் கோபுர வீடுகளைக் காலால் உதைத்து சிதைத்து, அவர்கள் கையில் சிக்காமல் ஓடிவிடுவார் என்பதை எல்லாம் ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சிறிய தங்கைகளின் பெயர் என்ன என்று சும்மா கேட்டு வைத்திருந்தேன். 

பிறகு பல வருடங்கள் எங்களுக்குள் அதிகத் தொடர்பு இல்லாமல் இருந்தது. 

நாங்கள் இருவரும் கிட்டத் தட்ட பத்து வருடங்கள் கம்பெனியில் குப்பை கொட்டிய பிறகு, ஒருநாள் மின்சார ரயிலில் கடற்கரை நிலையத்திலிருந்து அவர் கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கும் நான் குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் அடுத்த வாரம் லீவில் செல்லப் போவதாகத் தெரிவித்தார். 

'எதற்கு?' என்று கேட்டேன். 

'தங்கைக்குக் கல்யாணம்' என்றார். 

'நான் உடனே அவருடைய இரண்டு தங்கைகளின் பெயரையும் கூறி, இதில் யாருக்குக் கல்யாணம்?' என்று கேட்டேன். (இப்போவும் பெயர்கள் ஞாபகம் உள்ளன. இங்கே குறிப்பிடவில்லை) அவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். 

'ஹவ் டூ யு நோ தி நேம்ஸ் ஆஃப் மை சிஸ்டர்ஸ்?' என்று கேட்டார் ஆச்சரியமடைந்து! 

' யு ஒன்லி டோல்ட் மி தெயர் நேம்ஸ் - டென் இயர்ஸ் பேக்' என்றேன். 
                         
அவரால் நம்பவே முடியவில்லை. கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டியவர், ஸ்டேஷன் வந்த போது, அதை கவனியாமல், ஸ்டேஷனைத் தவற விட்டுவிட்டு, மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கிச் சென்றார்.    
                    

செவ்வாய், 25 மார்ச், 2014

வார் ரீல்!


# இரட்டை இலை விவகாரம்:கோர்ட் முடிவு 
! மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதானே முக்கியம்! 

# கெஜ்ரிவால் காங்.,கின் கைப்பாவை: பா.ஜ., 
! பாவை! கெஜ்ரிவால் காஜல் அகர்வாலின் தங்கையா?  

# மோடிக்கு கெஜ்ரிவால் 'செக்' 
! என்ன அமவுண்ட்? 

# இந்திய பங்குசந்தைகளில் சரிவு 
! நேற்று ஒரு முழம் ஏறி, இன்று ஒரு சாண் இறங்கினால் தவறு இல்லை! 

# காங்கிரசை அகற்ற வேண்டும்-சந்திரபாபு 
! அகற்றியபிறகு அங்கே எதை வைக்கவேண்டும்? மலரா? சைக்கிளா? விளக்குமாறா? 

# ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.54 
! யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா நாணய மதிப்பு !

# பா.ஜ., ஏதோ திட்டமிடுகிறது-கெஜ்ரிவால் 
! ஏதோ ஒரு திட்டம் இருந்தால் சரி! 

# பா.ஜ.,வுக்கு புதிய செய்தி தொடர்பாளர் 
! புதிய செய்திகளை மட்டும் பகிர்வாரா? 
 
# அமெரிக்காவுக்கு பாக்., வலியுறுத்தல் 
! பாக்குக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் ஏதும் உண்டா? 

# ஒடிசாவில் சுரங்க பணிக்கு தடை 
! இரண்டு மாதங்கள் பொறுத்துக்குங்க. தேர்தலுக்குப் பிறகு தொடரும்! 

# ஹூஸ்டன் கால்வாய் மூடல் 
! ஏன்? முழு வாயையும் மூட வேண்டியதுதானே! 

# மாற்றம் தவிர்க்க முடியாதது:மோகன் பாகவத் 
! மாற்றம் வேண்டி தவி(ர்)க்கிறார்கள் மக்கள்! 
           

சனி, 22 மார்ச், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



 
 


 
3) பார்வை இழப்பு மற்றும் மண வாழ்வில் ஏமாற்றத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, பார்வையற்ற இசை ஆசிரியராக சாதித்து வரும், மஞ்சுளா
 
 


 
) கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்! "கடல்குதிர" வெங்கடேஷ்!
 
 


5) இதய மாற்று சிகிச்சையாளர்களுக்கு செயற்கை இதயம் ரெடி!





வியாழன், 20 மார்ச், 2014

அலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம்.

    
அசோக் லேலண்டில் நிறைய விஸ்வநாதன்கள் உண்டு. 
        
நான் இப்போ குறிப்பிடப்போவது என்னுடன் அப்ரண்டிஸ் ஆகச் சேர்ந்த ஜி விஸ்வநாதம் என்பவர் பற்றி. 
    
நண்பர் திருப்பதி காலேஜில் படித்தவர். 
   
அப்ரண்டிஸ் ஆகச் சேர்ந்த முதல் நாளே ட்ரைனிங் சென்டரில் காத்திருந்த கொஞ்ச நேரத்தில், பயிற்சி நிலைய வகுப்பில், சிகரெட் பற்றவைத்து, இழுத்து, பாட்ரிக்கைப் பதற வைத்தவர். 
             
சேர்ந்த புதிதில்  அவருக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. மாம்பலம் ரங்கநாதன் தெருவிற்குப் பக்கத்தில் சரவணா மேன்சன் என்ற இடத்தில், பாச்சிலர் குடியிருப்பு ஒன்றில் நண்பர்களோடு தங்கி இருந்தார். 
             
அறை நண்பர்கள் பல வேறுபட்ட அலுவலகங்களில் பணி புரிபவர்கள். விஸ்வநாதம்தான் எனக்கு ஏ எம் ஐ இ படிப்புக்கு எங்கே, எப்படி அப்ளை செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர். காலையில் அலுவலகம் வரும்பொழுது, அவர் ரயிலில் கோட்டை நிலையம் வந்து, அங்கிருந்து ஒரு ஐம்பத்தாறு சி (சிறப்புப்) பேருந்து (அசோக் லேலண்டுக்கு ஆறு ஐம்பத்தைந்துக்கு ஹை கோர்ட் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி வரும். பெரும்பாலும் அதில்தான் அவர் எண்ணூர் அ லே வரை வருவார். 
       
நான் சில சமயங்களில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ரயில் தாமதமானால் அல்லது ரயிலை பிடிக்க நேரம் இல்லை என்றால், கோட்டை ஸ்டேஷனுக்கு வந்து, இந்த சிறப்புப் பேருந்தை பிடித்து செல்லுவேன். அந்தப் பேருந்தில் வழக்கமான பயணிகள் என்று பத்துப் பதினைந்து தொழிலாளத் தோழர்கள் உண்டு. அவர்களில் சிலர் எல்லோரிடமும் மொத்தமாக பயணக் கட்டணம் வசூல் செய்து, கண்டக்டரிடம் கொடுத்து, மொத்தமாக ஐம்பது அறுபது டிக்கெட்டுகள் வாங்கி, காசு கொடுத்த ஒவ்வொருவரிடமும் டிக்கெட் கொடுப்பார்கள். பயணத்தை நடுவில் நிறுத்தி பயணச் சீட்டு கொடுக்கின்ற நேரத்தை மிச்சப்படுத்தி, சீக்கிரமாக சென்று காண்டீனில் காலைச் சிற்றுண்டி சாப்பிடவேண்டும் என்பதற்காக இந்த ஐடியா. 
    

அப்போ எல்லாம் நண்பர் விஸ்வநாதம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பல தடவைகள் அந்தப் பேருந்தில் பயணித்திருக்கின்றேன். முதல் தடவை அவருடன் பயணித்தபொழுது, அவர் என்னிடம், "போகாதே, எறக்கேறு அவ்வளவுதான் " என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் தொழிலாளர் ஒருவரைச் சுட்டிக்காட்டி, (ஆங்கிலத்தில்) 'அவர் அப்படித்தான் கூறுவார் - நீ வேணா பாரு'  என்றார். 

நான் இவர் சுட்டிக் காட்டியவரைப் பார்த்துக்கொண்டே வந்தேன். வண்டி ஐ ஓ பி ஸ்டாப்பிங் வந்ததும் நின்றது. வண்டி எண் ஐம்பத்தாறு சி என்று பார்த்த கூட்டம் ஆவலோடு முண்டியடித்து ஓடி வந்தது. அப்போ அந்தத் தொழிலாளத் தோழர், "அப்பா இது ஸ்பெஷல் பஸ். திருவொற்றியூர் போகாது" என்றார். பிறகு சுருக்கமாக, சத்தமாக, 'போகாது, போகாது' என்று மட்டும் கூறி வந்தார். 

விஸ்வநாதம், "யு ஸீ - ஐ டோல்ட் யு!" என்றார். ஓஹோ இதைத்தான் இவர் 'போகாதே' என்று புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கு' என்று தெரிந்துகொண்டேன்.  

பிறகு சில நிறுத்தங்களில் அசோக் லேலண்டு ஆட்கள் இந்த பஸ்ஸில் ஏற வரும்பொழுது, படிக்கட்டுகளில் நின்று கொண்டிருப்பவர்களிடம் 'இறங்கி ஏறு, இறங்கி ஏறு' என்று வேண்டுகோள் விடுப்பார்கள். படிக்கட்டுப் பயணிகள் இறங்கி நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் உள்ளே அடைந்துகொண்டவுடன், படிக்கட்டுப் பயணிகள் மீண்டும் தொத்திக்கொள்ள, பஸ் தன் பயணத்தை மீண்டும் தொடரும். இதுதான் அவர் சொன்ன எறக்கேறு என்று தெரிந்துகொண்டேன். 

அவர் அவருடைய ரூம் மேட் பற்றி ஒரு சுவையான சம்பவம் சொன்னார். 

அது என்ன என்று அடுத்த பதிவில் பார்ப்போம். 
      

திங்கள், 17 மார்ச், 2014

திங்க கிழமை. 140317 அதை ஏன் கேக்குறீங்க!

                   
ஞாயிற்றுக் கிழமை, அண்ணன் வீட்டில் விளைந்திருந்த மெகா சைஸ் வெற்றிலை ஒன்றை பாக்குடன், ரோஸ் சுண்ணாம்பு தடவி, சாப்பிட்டதில், நாக்கு மரத்துப் போய்விட்டது. 

கடந்த இருபத்துநான்கு மணி நேரங்களாக நாக்கு மரத்துப் போய் சுவையரும்புகள் சொல்லாமல் கொள்ளாமல் சுவைக் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டன. உப்பு, உறைப்பு, இனிப்பு, கசப்பு - எதுவும் உணரமுடியவில்லை. 

அதனால் திங்கறதைப் பற்றி ஒன்றும் எழுதத் தோன்றவில்லை! 

சுவையரும்புகளை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டுவர வாசகர்கள் வொர்க்கபில் ஐடியாக்கள் கொடுக்கவும்! 
                 

சனி, 15 மார்ச், 2014

கடந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள்



 


 
2) பொது இடங்களில் புகைபிடிப் பவர்களை பிடித்து, அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.ராஜா. 
 


 
 


 
4) பிரபாகரன் (ஆனாலும் படிப்பு வராதது வருத்தம்தான்)
 


 
5) உழைப்பால் உயர்ந்த வழக்குரைஞர் முருகன்.
 


 
 


7) பூமி வெப்பமடைவதை மரம் வளர்ப்பதன் மூலம் தவிர்க்கலாம் என்று கீழே கிடந்த துண்டு பேப்பரில் படித்த 65 வயது கருப்பையாவின் சாதனை.



 

8) மத்திய அரசின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்கான, தேசிய விருதும் (இக்னைட்), காப்புரிமையும்பெற்றுவிட்ட வத்திராயிருப்பு மாணவனின் கண்டுபிடிப்பு.

வெள்ளி, 14 மார்ச், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140314:: திமிங்கிலம்

               

 
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று தேடுகின்றாரோ திருவாளர் திமிங்கிலம்?
                 

வியாழன், 13 மார்ச், 2014

2. முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அரட்டை - 2

                
வீட்டிலிருக்கும் முதியவர்களை அன்புடனும், மதிப்புடனும் நடத்திய காலம் போய், இப்போது பொறுத்துக் கொள்ளவே மனமில்லா நிலைக்கு வந்து விட்டோம். முதுமை என்பது அவர்களின் இரண்டாவது குழந்தைப்பருவம் என்பதை மறந்து விடுகிறோம். அப்பாவின் சட்டைப்பையிலிருந்து உரிமையாக பணத்தை எடுத்து செலவு செய்தோமே... அதே உரிமை அப்புறம் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ நம்மிடம் இருக்கிறதா? அந்தக் காலத்தில் வீட்டுக்கு மூத்தவர்களிடம்தான் பணப்பெட்டியின் சாவி இருக்கும்.
    
இப்போது ஏன் சேர்ந்து வாழ முடிவதில்லை? அந்தக் காலத்தில் வேலை வாய்ப்புகள் கம்மி. சொந்த நிலங்கள் வைத்திருந்தவர்கள் விவசாயம் செய்து கொண்டோ, தோட்டம் துரவு என்று இருந்தவர்களோ நகர்ப்புறத்தின் கவர்ச்சிகள் இல்லாமல், பணத்தின் தேவைகள் இல்லாமல் ஒன்றாக இருக்க முடிந்தது. முடிந்தவரை சொந்தங்களிலேயும் திருமணம் செய்த காலம் அது.

அப்புறம் சொந்தத்தில் திருமணம் செய்வது தப்பு என்றார்கள். நாமிருவர், நமக்கிருவர் என்றார்கள். அதற்கும் பிறகு நாமே இருவர், நமக்கெதற்கு இருவர்? ஒருவர் போதுமே என்றார்கள்.
         
விவசாயம் பார்த்தவர்கள் மழை பொய்த்ததாலோ வேறு காரணங்களுக்காகவோ நிலம் விற்று நகரத்துக்கு நகர்ந்தார்கள்.
               
படித்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் வேலை கிடைக்கும்போது, எல்லோரும் ஒரே இடத்தில் வாழ்தல் சாத்தியமற்றுப் போனது. வெளியூர் என்பது வெளிநாடாகிப் போனபோது இடைவெளி இன்னும் அதிகரித்தது.
    

பணம் பார்க்கும் நோக்கில் சேர்ந்திருக்கும் சந்தோஷங்களையோ, உறவுகளின் மதிப்பையோ மிஸ் செய்கிறோமோ...

வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும், அங்கேயே செட்டிலாகி விட்ட தோழி ஒருவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.  பேசிக் கொண்டிருந்தபோது அவர் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார் என்ற செய்தியைச் சொன்னார். அவர் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தும் அவரால் இந்தியா வர முடியவில்லை என்பதையும் சொன்னார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். இவர் இப்படி மேலே வர, அவர் தந்தை அந்நாளில் பட்டினியுடன் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தது. இந்தச் செய்தியைச் சொன்னபோது அவரிடம் பெரிய வருத்தம் ஒன்றையும் என்னால் பார்க்க முடியவில்லை.

அந்தக் காலத்தில் பள்ளிகளே குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. பள்ளி நேரமும் 9.30க்கு மேல்தான். 4 மணிக்கும், 3.30 க்கும் விட்டு விடுவார்கள். ஸ்ட்ரெஸ் கிடையாது. மாலை பள்ளி விட்டு வீடு வந்ததும் புத்தகப்பையை ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு தெரு நண்பர்களுடன் விளையாடப் போய்விட முடிந்தது. தொலைகாட்சி கிடையாது. கணினி கிடையாது. முக்கியமாக தொலைபேசி/அலைபேசி கிடையாது! தெருவில், பரந்த மைதானங்களில் ஓடியாடி விளையாட முடிந்தது. கபடி என்ன, கால் பந்து என்ன, கிரிக்கெட் என்ன, ஓடிப்பிடித்து என்ன, கண்ணாமூச்சி என்ன, கோலி விளையாட்டு என்ன, கிட்டிப்புள் என்ன.....
            

இப்போது...? விளையாட இடமும் இல்லை, நேரமும் இல்லை! எல்லா விளையாட்டுகளும்  கணினியிலும், அலைபேசியிலுமே முடிந்து விடுகிறது! ஆரோக்கியக்கேடு!
             
காலை பள்ளிக்குக் கிளம்பும் வரையிலும் கூட ஹோம்வொர்க் செய்யும் பிள்ளைகள் பள்ளிக்கு ஓடுவதும், பள்ளி விட்டு வந்ததும் மாலை வேறு டியூஷன்களுக்கோ, சிறப்புத் தகுதிக்கான படிப்பு வகுப்புகளுக்கோ துரத்தப்படும் மாணவர்கள். நாட்டிய வகுப்பு, பாட்டு வகுப்பு என்று துரத்தப்படும் மாணவிகள்.
             
ஆயுள் காப்பீட்டைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். இளமை முழுவதும் சேர்க்கும் பணத்தை சேர்த்து வைக்க வேண்டி ஆயுள் காப்பீட்டில் இட்டு, அப்படிச் சேர்த்த பணத்தை இளமை தொலைந்தவுடன் வரும் நோய்களுக்காகச் செலவழிக்கிறோம் என்று!
              
அதுபோல, இளமையை வீணாக்கி, சந்தோஷத்தை மறந்து ஓடி ஓடிப் படித்து, முதல் வகுப்பு, டிஸ்டிங்ஷன் என்று அலைந்து வேலையில் சேர்ந்து பணம் சேர்த்து வீடு, சொத்து வாங்கி, திருமணம் செய்து பிள்ளை பெற்று அவர்களைப் படிக்க வைக்க ஓடி ஓடி சம்பாதித்து, அவர்களையும் மிஷின்களாக்கி, பணம் சம்பாதிக்க வெளிநாடு அனுப்பி விட்டு, வயதான காலத்தில் தனிமையில் இங்கு காலம் கழித்துக் கொண்டு...எதைப் பெறுகிறோம், எதை இழக்கிறோம்?
             

முன்பு ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் ஒன்று வரும். ஓய்வாக அமர்ந்து கவலையின்றி குளிர்பானம் குடிக்கும் ஒருவனிடம், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் நண்பன் ஒருவன் ஓடி ஓடி சம்பாதிப்பதின் அவசியத்தைச் சொல்வான். 'ஓடி?' என்று இவன் கேட்க, 'ஓடி ஓடி சம்பாதிக்கணும்' என்பான் அவன். 'சம்பாதித்து?' என்பான் அவன். 'நிறைய சம்பாதித்தபின் ஓய்வாக அமர்ந்து குளிர்பானம் அருந்த வேண்டும்' என்பான் அவன். 'அதைத்தான் நான் இப்போதே செய்கிறேன்' என்பான் இவன்.
         
போதுமென்ற மனம் இருப்பவனே பெரிய பணக்காரன்.
                

முதல் முதியோர் இல்லம் எப்போது வந்தது? வீட்டில் இருக்கும் இளையவர்கள் பேசும் பேச்சில், நடத்தையில் மனம் புண்பட்டு  இருப்பதைவிட,முதியோர் இல்லங்களில் இருப்பதும் தவறில்லை. அதை முதியோர் இல்லம் என்று பார்க்காமல் முதியவர்களின் தனிக்குடித்தனமாகப் பார்க்க வேண்டியதுதான். (சம்சாரம் அது மின்சாரம் லக்ஷ்மி வசனம் நினைவுக்கு வருகிறதா?) ஏனென்றால், வீட்டின் மூத்த உறுப்பினர்களாகிய இவர்களும் தங்கள் அனுபவத்தை வைத்து சில சமயம் எதிர்பார்ப்பில்லாமல் வாழவும், ரொம்பக் கேள்விகள் கேட்டும், எல்லா விஷயத்திலும் தலையிடுவதைத் தவிர்க்கவும் வேண்டும் என்று இளைய தலைமுறை எதிர்பார்க்கிறது.
       

மாமியாருக்கு மருமகளைப் பிடிக்கவில்லை. மருமகளுக்கு (அதனாலேயே)  மாமியாரைப் பிடிக்கவில்லை. பின்னால் மாமியாராகப் போகும் இந்த மருமகள் தானாவது நல்ல மாமியாராக இருக்கலாம் என்று நினைக்கிறார்களா? அதுவும் பெரும்பாலும் நடப்பதில்லை! ஆனால் மூத்தோர் தங்கள் விஷயத்தில் தலையிடுவதைத்தான் இளையவர்களும் விரும்பவில்லையே... கீதா சாம்பசிவம் மேடம் கேட்டிருக்கும் பத்து கேள்விகள் நினைவுக்கு வருகின்றன!
         
எனக்கு முந்தைய தலைமுறையில் 14 சகோதர, சகோதரிகள். எங்கள் தலைமுறையில் 4 அல்லது 5. இப்போதெல்லாம் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்பதே கூட அரிதாகி வருகிறது. சிக்கனம். பாதுகாப்பு. முன்பு அத்தனை குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்க முடிந்தது. இப்போது இரண்டு பெற்றவன் கூட படிப்புக்கும், திருமணம் செய்து வைப்பதற்கும் முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறான். போட்டி. மற்ற உறவினர்களின் பிள்ளைகளைவிட, தன் பிள்ளைகள் இன்னும் உயர்ந்தவர்கள் என்று காட்டும் போட்டி!  
                              

புதன், 12 மார்ச், 2014

முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அரட்டை - 1

                         
கொஞ்சநாள் முன்பு கல்கியில் ஒரு முதியோர் இல்லம் விளம்பரம் கண்ணில் பட்டது.  6 பெரிய நகரங்களில் இருப்பதாக விளம்பரம். தனி காம்பவுண்ட் மைய சமையலகம், ஆரோக்கிய பராமரிப்புச் சேவைகள், விளையாட்டு வளாகம், வீடு தூய்மையாக்கம், நூலகம், போக்குவரத்துச் சேவைகள் பராமரிப்பு, சொத்து மேலாண்மைச் சேவைகள், மின்சாரப் பராமரிப்புச் சேவைகள், 24 X 7 பாதுகாப்பு, இன்னும் என்ன வேண்டும்?

 

படிக்கும்போது பேசாமல் அங்கு பணம் கட்டிவிட்டு சென்று தங்கி விடலாம் என்று ஆசை வருகிறது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அல்லது முதியவரைக் கத்தியால் குத்தி நகை பறிப்பு என்றெல்லாம் செய்தி வருகிறது.
பலருக்கு அவரவர்கள் அருகாமை வீடுகளில் இருப்போர் யார் என்றே தெரிவதில்லை.  அதற்கு இந்த முறை தேவலாம். பேசாமல் தங்களுக்கான அறையில் புத்தகம் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டோ, போரடிக்கும்போது கோவிலுக்கோ, நூலகமோ, நடைப்பயிற்சியோ சென்று வரலாம்.

முன்னர் எனக்கொரு கனவு இருந்தது. சுஜாதா தனது 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் சொன்னது போல படிப்படியாக அப்புறம் அது காணாமல் போனது. பல வருடங்களுக்கு முன்னால் வந்த கனவு.

 

சென்னையில் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் கொஞ்சம் பெரியதாக ஒரு இடம் வாங்கிவிட வேண்டியது. கொஞ்சம் பெரிய அளவில் நிறைய அறைகள் கட்டிவிட வேண்டியது. கிட்டத்தட்ட தனித் தனி போர்ஷன் போல. ஒவ்வொன்றிலும் அவரவர்களுக்கான பிரைவசிகள் பாதிக்கப் படாமல் குடும்பம் குடும்பமாக நம் உறவினர்களே. . ஒவ்வொரு வீட்டிலும் தனித் தனி சமையல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.  தனி டிவி உண்டு. தனி படுக்கை அறைகளும் உண்டு. அல்லது ஒத்துக் கொண்டால் ஆள் வைத்தோ, சுழற்சி முறையிலோ அல்லது கூட்டு முயற்சியிலோ மையமாக ஒரே சமையல். 

நடுவில் பெரிய ஹா...ஆ......ஆ...ல்.  அங்கு(ம்) ஒரு டிவி.  அங்கு எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் கூடும் வசதி. வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் தங்க வசதியான அறைகள்.


காம்பவுண்டுக்குள் மற்றும் மொட்டை மாடியில் தேவையான காய்கறிகள், கீரைகள், பழங்கள் பயிர் செய்து கொள்ளலாம். அல்லது இன்னும் கொஞ்சம் வசதி இருந்தால் அருகிலேயே, அல்லது கொஞ்ச தூரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டு, அங்கும் நெல் உட்பட, வாழை, தென்னை, காய்கறிகள் பயிர் செய்யலாம்.

                                                              

வீட்டில் பெரிய அளவில் பிரமிட் அமைப்பில் ஒரு பெரிய தியான ஹால்.

எல்லோரும் எப்போதும் பார்த்துக் கொண்டே, பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று இல்லை. தேவைப்படும்போது கூடிக் கொள்ளலாம். தனித்தனியாக, ஆனால்  சேர்ந்து இருக்கலாம். பெரிய அபார்ட்மெண்ட்களில் வசிக்கிறோம். ஒரு அவசர நேரத்தில் உடம்பு சரியில்லை என்றால் கூட 'யார் உதவிக்கு வருவார்கள், நமக்கு யாரைத் தெரியும்' என்ற நிலை இருக்காது என்றெல்லாம் எண்ணம் ஓடும்.

சில இடங்களில் நண்பர்கள் ஒரு குழுக்களாகச் சேர்ந்து இடம் வாங்குகிறார்கள். ஆனால் அப்புறம் அவரவர்கள் விற்று விட, எத்தனை பேர் சேர்ந்து ஒரு இடத்தில் வசிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. அப்படியே இருந்தாலும் பக்கத்துப் பக்கத்து வீடுகள்தானே... நான் சொல்வது ஒரு கட்டிடத்துக்குள்... ஒரு காம்பவுண்டுக்குள்.
இந்தக் கனவு நடைமுறையில் சாத்தியம் என்பது மிகக் கஷ்டம்தான். அதனால்தானே கனவு என்றே சொல்கிறேன்! எனக்கிருந்த இதே கனவு எனக்கு முன்னரே இதே போல என் மாமாவுக்கும் இருந்தது என்பது அப்புறம் பேசியபோது தெரிந்தது.

    

இது அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தைப் போலத்தான். அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தில் சகோதரர்கள் குடும்பம் அவரவர்கள் மகன்கள், மருமகள்களோடு, பேரன், பேத்திகளோடு சேர்ந்து வாழ்ந்த காட்சிதான். இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. காணாமல் போய்விட்டது.

இப்போதும் இருக்கலாம் எங்கேனும் இதுபோன்ற கூட்டுக் குடும்பங்கள்.  அப்படி இருந்தால், வாழ்க அவர்கள்................

- தொடரும்  -
                   

திங்கள், 10 மார்ச், 2014

திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி


மாங்காய் சீசன் வரப்போகின்றது.
   
முற்றிய, பெரிய மாங்காய் ஒன்றை, தோல் சீவி எடுத்துகொண்டு, பொடிப் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 
   
சீவிய மாங்காய் துண்டுகள் எந்த அளவு இருக்கின்றதோ அதைப்போல ஒன்றரை மடங்கு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரை டீஸ்பூன் உப்புப் போட்டு, எல்லாவற்றையும் வாணலியில் இட்டு, வேக வைக்கவும். 
          
பாதி கட்டை விரல் சைஸுக்கு இஞ்சி வெட்டி எடுத்துக் கொண்டு, (எச்சரிக்கை: இஞ்சியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கட்டைவிரலை அல்ல!) தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக (சீரகச் சம்பா அரிசி அளவுக்கு) வெட்டி மாங்காய் கலவையில் இடவும். (என்ன சத்தம் அங்கே? - குலவை இடவும் என்று படித்துவிட்டீர்களா!!) 
           
குங்குமப்பூ ஐந்தோ ஆறோ, மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, இவற்றையும் போட்டு, மாங்காய் கலவையை நன்கு வேக விடவும். 
        
மாங்காய் நன்கு வெந்ததும், மத்து அல்லது கரண்டியால் நன்றாக மசித்துவிட்டு, நூறு கிராம் வெல்லம் எடுத்துக்கொண்டு, அதை நன்றாகப் பொடித்து மாங்காய்க் கலவையுடன் போட்டுக் கிளறி, வேக விடவும். 
            
பச்சடி நல்ல பக்குவத்திற்கு வந்தவுடன், ஒரு கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் எடுத்துக்கொண்டு, அடுப்பில் வைத்து, அதில் கால் டீஸ்பூன் கடுகு போட்டு  கடுகு வெடித்தவுடன் கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து தாளித்து, பச்சடியில் இட்டுக் கிளறவும். 
               
இரண்டு ஏலக்காய்களை தோல் நீக்கி, ஏல அரிசிகளை பொடி செய்து போடவும்.
               
மாங்காய் பச்சடியை, அடிபிடியாமல் கவனமாக அடிக்கடிக் கிளறிவிட்டு, கெட்டியானதும் இறக்கிவிடவும். 
               
மாங்காய் வெல்லப் பச்சடி ரெடி.