வியாழன், 30 ஏப்ரல், 2015

லிஃப்ட் : 'சில்லறை பொறுக்கினேன்' அனுபவம் தொடர்ச்சி.


"...அவர்களைப்  பார்த்து அன்று புன்னகைத்தவர்களில் மற்றவர்களுக்கு பிற்பகல் விளைந்ததா தெரியவில்லை.  ஒரு மாதத்துக்குப்பின் எனக்கு விளைந்தது!  அதை அப்புறம் சொல்கிறேன்!"   என்று சென்ற வாரம் முடித்திருந்தேன் அல்லவா....  அதன் தொடர்ச்சி!
 


நகரின் ஓரத்தில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.  அந்த மருத்துவமனையில் என் நண்பரின் மாமா சிகிச்சை பெற்று வந்தார்.  அவரைப் பார்க்க வந்திருந்த நண்பரைப் பார்க்க அங்கு சென்றேன்.

வரவேற்பறையில் கேட்டபோது B 2 க்குச் செல்லும்படி கூறினார்.

"எங்கிருக்கிறது?  எப்படிப் போக வேண்டும்?"

"செகண்ட் ஃப்ளோர்... லிஃப்டில் போங்க... ரைட்ல போய்த் திரும்பினீங்கன்னா லிஃப்ட்.."

சென்று திரும்பி, பொத்தானை அமுக்கிக் காத்திருந்து, கதவு திறந்ததும் உள்ளே சென்றேன்.  அவ்வளவு பெரிய லிஃப்ட் பார்ப்பது அதுதான் முதல் முறை.   ஒரு அறையைப் போல சற்றே பெரியதாயிருந்தது.

B2 வை   அமுக்கி விட்டுக் காத்திருந்தேன்.  கதவு மூடிக் கொண்டு மேலே போவதற்கு பதில் கீழே சென்றது.  


'என்னடா இது! பட்டன் தப்பா அமுக்கிட்டோமோ' என்று மறுபடி பார்த்தேன்.  அப்புறம்தான் தெரிந்தது அண்டர்கிரவுண்டில் கூட மக்கள் இருக்கிறார்கள், அங்கும் லிஃப்ட் செல்கிறது என்று.

பின்னர் மீண்டும் தரைத் தளத்துக்கு வந்தது.  அடுத்து B1 வந்து நின்றது.  இரண்டு மூன்று பேர்கள் ஏறினார்கள்.  அடுத்த தளத்தில் நான் இறங்க வேண்டும்.  அந்தத் தளமும் வந்து நின்றது.  கதவு திறக்கவில்லை.  அப்படியே கிளம்பி விட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.  'என்னடா இழவு இது...ஒன்றும் புரியவில்லையே..' என்று எண்ணிக் கொண்டு B3, B4 எல்லாம் செல்வதையும் ஏறி, இறங்குபவர்களையும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

மறுபடியும் B2 வந்தபோது நான் மட்டுமே லிஃப்டில்.  இறங்கத் தயாராய் நிற்கிறேன்.  கதவு திறக்கவில்லை.  லேசான பதட்டம் கலந்த கடுப்பு வந்தது.  மறுபடி தரைத் தளம், அண்டர்கிரவுண்ட், மறுபடி தரைத் தளம், B1.  பேசாமல் இறங்கி படி ஏறிக் கூட B2 வுக்குச் சென்றிருக்கலாம் என்று மறுபடியும் கதவு திறக்காமல் கிளம்பியதும் தோன்றியது.  



மறுபடி நான் மட்டும்தான் லிஃப்டில் (என்றுதான் நினைத்தேன்).  நான் மட்டும்தான் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருந்தேன்.

B3 சென்று நின்றதும் திடீரென என் பின்னாலிருந்து இரண்டு மூன்று பேர்கள் என்னைத் தாண்டிச் சென்று இறங்கினார்கள். "என்னடா இது?  மாயமாய் இருக்கிறது?  நாம் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் என்று திரும்பிப் பின்னால் பார்த்தேன்.

அப்போதுதான் பின்னாலும் ஒரு கதவு இருப்பதைப் பார்த்தேன்.

'அட! பார்றா... இதுதானா மர்மம்!'

அசடு வழிய மறுபடி மேலே லிஃப்ட் சென்ற இடமெல்லாம் சென்று விட்டு, கீழே வரும்போது பின் கதவுக்கருகில் நின்று, காத்திருந்தேன். 


இந்தமுறை B2 வை நான் தவற விடவில்லை!  இறங்கி விட்டேன்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

அலுவலக அனுபவங்கள் : தமிழ்ச் சண்டை.




அலுவலகங்களில் சில சமயம் நடக்கும் சண்டைகள் சுவாரஸ்யமாக இருக்கும்.  அதாவது ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொள்வது அல்ல.  

ஆனால் அதுவும் உண்டுதான்.  இப்போது நான் சொல்லப் போவது வேறு மாதிரி.

நீ பெரியவனா, நான் பெரியவனா?  நீ அறிவாளியா, நான் அறிவாளியா?  உன்னை விட எனக்குக் கொஞ்சம் கூடவே தெரியும் போன்ற ஈகோ சண்டைகள் நடக்கும்.  நட்புடனும் அடித்துக் கொள்வதுண்டு.  விரோதத்துடனும் அடித்துக் கொள்வதுண்டு.

இந்தச் சம்பவம் பொறாமையினால் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த ஒரு போராட்டம்!

'வரைவுக்குறிப்பு' என்பது 'நோட்ஃபைல்' என்பதன் தமிழ்.  இதை எழுதி மேலதிகாரிக்கு அனுப்பி அப்ரூவல் வாங்கினால் அப்புறம் 'வரைவு' வைத்து விடலாம். அதாவது டிராஃப்ட். 

நம் கதாநாயகன் அந்த அலுவலகத்தில் உதவியாளர்.  அதாவது அஸிஸ்டண்ட்.    (மேஜர் சுந்தரராஜன் நினைவுக்கு வருகிறாரா?  என்ன செய்ய?  கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறதே!)   ஒரு ஃபைலை டீல் செய்துகொண்டிருந்தபோது அதில் "பார்வையில் காணும் கடிதத்தைக் காண்க.  மேல் நடவடிக்கை வேண்டப்படுகிறது"  என்று குறிப்பு எழுதி அனுப்பினார்.

அதைப் படித்த அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர் அந்த ஃபைலை அப்படியே திருப்பி அனுப்பினார்.

" 'காண்க' என்பது
வினை எச்சம்.    ஒரு மேலதிகாரிக்கு எழுதும்போது உதவியாளர் இப்படி எழுதக் கூடாது.  தயவு செய்து காண்க' என்றே எழுத வேண்டும்"  என்று எழுதி அனுப்பினார்.


நம் கதாநாயகன் கொஞ்சம் விடாக்கண்டர்,  நிறைய ஏடாகூடம்.  இவர் பதிலுக்கு அந்த நோட்ஃபைலில் பதிலுக்கு

"அது
வினை எச்சம் அல்ல.  அது   வியங்கோள் வினை முற்று.
மேலும் நோட்ஃபைலில் சீனியர் ஜூனியர் பாகுபாடு எல்லாம் கிடையாது.  எந்தப் பிரச்னையைக் குறித்துப் பேசுகிறோம் என்பதே முக்கியம்"  என்று எழுதி அவருக்கே திருப்பி அனுப்பி விட்டார்.


அவர் மறுபடி "நான் சொன்னதே சரி" என்று எழுதி அனுப்ப,  நம் நண்பர் பதிலுக்கு தன் மகளின் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்திலிருந்து இரண்டு பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து இணைத்து 'ஆதாரத்துடன்' மறுபடி அவருக்கு அனுப்பி விட்டார்.

 
விஷயம் ஜே டிக்குப் போய்விட்டது.   அவரைப் பற்றித் தனிப்பதிவே எழுதலாம்.  அவ்வளவு விஷயம் அவரிடமும் உண்டு!

"ஏ ஓ, அஸிஸ்டண்ட்... கூப்பிடுறா ரெண்டு பேரையும்!"

அவர் எதிரில் நின்றார்கள் இரண்டு பேரும்.

"என்னங்கடா பொழுது போகல்லையா உங்களுக்கு?  பொழுது போகல்லையான்னு கேட்டேன்"

"இல்லை ஸார்.. நோட்ஃபைல் எழுதி அனுப்பினா இவரு..."
முடிக்க விடாமல் வெட்டினார் ஜே டி.

"குடுமி வச்சிருக்கீங்களா ரெண்டு பேரும்?  திரும்புங்க....  பார்க்கிறேன்!  தமிழ்ப் புலவர்களா நீங்க?  நான் என்ன தமிழ்ச் சங்கமாடா வச்சு நடத்திகிட்டிருக்கேன்?  ஆஃபீஸா, என்னன்னு நினைச்சீங்க...  தொலைச்சுடுவேன்.. செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு என்ன விளையாடிகிட்டு இருக்கீங்க?"

கொஞ்ச நேரம் அர்ச்சனை செய்து அனுப்பினார்.

ஸீட்டுக்குத் திரும்பினார்கள் இருவரும். 

அப்புறம் அந்த ஃபைல் மறுபடி தயாராகி ஏ ஓ கையெழுத்தைப் பெற்று ஜே டியை அடைந்தது!


 


 
(டிஸ்கி :  வினையெச்சம், வியங்கோள் முற்று எல்லாம் அவர்கள் அடித்துக் கொண்டது.  சண்டைதான் முக்கியம்.  இதில் எது சரி, எது தவறு என்று எனக்குத் தெரியாது!)

திங்கள், 27 ஏப்ரல், 2015

'திங்க'க் கிழமை :: மைசூர் போண்டா.

       
இதற்கு ஏன் மைசூர் போண்டா என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லைஉங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை என்றால்உ மா மி போண்டா என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்
  
தேவையான பொருட்கள்: 
வெள்ளை உளுந்து (Urad Gola) 500 g 
மிளகு (Black pepper) : இரண்டு கரண்டிகள். 
தண்ணீர் : ஒன்றரை லிட்டர். 
பச்சரிசி மாவு : 200 g.
நல்லெண்ணெய் அல்லது சன் டிராப் ஆயில் : அரை கிலோ.
பொடி உப்பு : தேவைக்கேற்ப. 
கறிவேப்பிலை : இரண்டு ஈர்க்குகள். 
பாத்திரம், வாணலி, அடுப்பு, காஸ், லைட்டர். etc 
       
 
 
நயமான வெள்ளை உளுந்து  அரைக் கிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.
          
சுத்தமான தண்ணீரில் அதைக் கழுவி, தண்ணீரை வடித்து, பிறகு முக்கால் லிட்டர் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விடுங்கள்.
              
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, மிக்சியில் இட்டு, நைசாக அரைத்துக்கொள்ளவும்.
               
உளுத்தம் பேஸ்ட் ரெடியா? ஓ கே .
              
சிறிய கரண்டியால் இரண்டு கரண்டி மிளகு எடுத்துக்கொண்டு, அதை மிக்சியில் போட்டு, விப்பர் செய்து மிளகை உடைத்துக் கொள்ளவும். (மிளகை அரைக்கக் கூடாது)
           
இதை உளுத்தம் பேஸ்டுடன் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
            
அப்புறம், இருநூறு கிராம் பச்சரிசி மாவு உளுந்து + மிளகு கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.
            
தேவைக்கேற்ப பொடி உப்பு சேத்து, எல்லாவற்றையும் கலக்கவும். போண்டா மாவு தயார்.
           
கறிவேப்பிலை இரண்டு ஈர்க்குகள் எடுத்து, இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றைக் கழுவி, கிள்ளி, மாவுக் கலவையில் போடவும். கலக்கி விடவும்.
               
அடுப்பில் வாணலியை வைத்து, வாணலியில் நல்லெண்ணெய் அல்லது சன் டிராப் ஆயில் விட்டு, அடுப்பை ஏற்றவும். எண்ணெய் காய்ந்ததும், மாவுக் கலவையை, எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொன்றாக எண்ணெயில் வேகவைக்க வேண்டும். உருண்டைகள் பொன்னிறம் ஆனதும், எண்ணெயிலிருந்து எடுத்து விடவும்.
                
மைசூர் போண்டா ரெடி.
                
செய்து பாருங்கள், சாப்பிட்டுப் பாருங்கள்.  
           

சனி, 25 ஏப்ரல், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) அரசை எதிர்பார்க்காத மேற்கு வங்க கிராமப் பெண்கள்.
 

 
2) இந்தப் பள்ளியைப் பாராட்டலாம்.  அவ்வூர் எவ்வூர்?  ஊட்டிதான்!
 
 

 
3)  பிரியங்கா செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்.  இன்றைய முக்கியப் பிரச்னையான குப்பையைச் சமாளிக்க இவர் கண்டு பிடித்திருக்கும் எலெக்ட்ரானிக் குப்பைத் தொட்டிக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.
 
 


4) நல்ல செய்திதான்.  ஆனால் வர வர தண்ணீர் கூட கிடைப்பது கஷ்டமாயிடும் போலேருக்கே...  சுஜாதா தனது விஞ்ஞானச் சிறுகதைகளில் தண்ணீரில் ஓடும் கார் பற்றி நகைச்சுவைக் கதை ஒன்று எழுதி இருப்பார்.  அது நினைவுக்கு வருகிறது.  நல்லபடியாக இந்த முயற்சி வெற்றி அடையட்டும்.



வியாழன், 23 ஏப்ரல், 2015

சில்லறை பொறுக்கினேன்!


சில நாட்களுக்கு முன்னால் இரவு பத்தரை மணிக்கு படி இறங்குகையில் கால் பிசகி, கீழே விழுந்து சில்லறை பொறுக்கியதில் எலும்பு முறிவோ என்று சந்தேகம் வர,   ஹாஸ்பிடல் செல்லலாம் என்று வற்புறுத்திய மனைவி, மகனை மறுத்து விட்டு வலியுடன் படுத்து விட்டேன். 
 
அந்த நேரத்தில் சென்றால் 99.9 சதவிகித ஹாஸ்பிடல்களில் அந்நேரத்துக்கு புதிதாக வேலைக்குச் சேர்ந்து, மேற்படிப்புக்கு இரவு அங்கு உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவ டாக்டர்கள்தான் இருப்பார்கள்.  கை, காலை முன்னே பின்னே திருப்பிப் பார்த்து விட்டு, ஒரு ஊசி, ஒரு மருந்து கொடுத்து அனுப்பி விடுவார்கள் - "நாளை மாலை ஆர்த்தோ வருவார்... வந்து பாருங்கள்" என்ற அறிவுரையோடு. 

 
சில சமயம் அப்போதே ஒரு தண்ட எக்ஸ்ரே கூட எடுக்க வேண்டி இருக்கும்.  எதற்கு தண்ட எக்ஸ்ரே என்கிறேன் என்றால், மறுநாள் ஹாஸ்பிடல் சென்று,  டோக்கன் வாங்கி, தேவுடு காத்து ஆர்த்தோவைப் பார்த்தால். நாம் எடுத்திருக்கும் எக்ஸ்ரேயை செத்த எலியைத் தூக்குவதுபோல் இடது கைக் கட்டைவிரல், ஆள்காட்டி விரலால் தூக்கிப் பார்த்து விட்டு, மண்டையை இடம் வலமாக ஆட்டுவார்.
 
ஒரு பேப்பரை எடுத்துக் கிறுக்கி 'இந்த ஆங்கிளில் எடுக்கச் சொல்லி, எடுத்துட்டு வாங்க' என்று அனுப்புவார்.
 
அங்கு சென்று எடுத்து வந்தாலும் ஆர்த்தோவுக்கு அது திருப்தியைத் தராது.  ஒரு 'எம் ஆர் ஐ எடுத்துடலாமா?' என்பார்! 
 
இந்த அனுபவங்கள் இருந்ததால், இரவு அங்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு, ஒரு வலி நிவாரணியை ரானிட்டிடின் உடன் சேர்த்துப் போட்டுக் கொண்டு படுத்து விட்டேன்.  இரவு முழுக்க இடது முழங்கை, மணிக்கட்டு, உள்ளங்கை, மற்றும் இடந்து கால் பாதத்தை அசைக்க முடியாமல் வலி.
 
ஒரே ஒரு ஆறுதல்.  பயந்த அளவு கையும் காலும் புருபுரு என்று வீங்கவில்லை.  என் பாஸ் உறவுகளுக்கு எல்லாம் தொலைபேசி, நான் ஆஸ்பத்திரி வரமாட்டேன் என்கிறேன் என்பதையும், இரவெல்லாம் எப்படி அவஸ்தைப் பட்டேன் என்பதையும் புகார் சொல்ல,  மறுநாள் காலை 7 மணிக்கே எனக்கு சகல திசைகளிலிருந்தும் ஆஸ்பத்திரி கிளம்ப திட்டுடன் உத்தரவு வந்தது!
 
அந்நேரத்திலும் ஆர்த்தோவைப் பிடிக்க முடியாது என்ற என் முனகலை யாரும் லட்சியம் செய்யவில்லை.
 
வெட்டியாக ஒரு ஆஸ்பத்திரி சென்று ஆர்த்தோ மாலைதான் வருவார் என்று அறிந்து வீடு திரும்பியபோது என் கடுப்பு எல்லை மீறி இருந்தது.
 
ஆனாலும் இன்னொரு அருகாமை ஆஸ்பத்திரியில் ஆர்த்தோ 10.30க்கு வருவார் என்று தகவல் கிடைத்து, மறுபடி கிளம்பி அங்கு சென்றோம்.
 
எல்லோரும் 'எம் ஆர் ஐ எடுங்கள், டிஜிடல் எக்ஸ்ரே எடுங்கள்' என்றெல்லாம் முன்னரே அவரவர்கள் அனுபவங்களை வைத்து எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
 
ஆனால் என்னைப் பார்த்த ஆர்த்தோ டாக்டர் (அங்கு டிஜிடல் எக்ஸ்ரே இல்லாததாலும்) சாதா எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பார்த்து, எலும்பு முறிவு இல்லை என்று வயிற்றில் பால் வார்த்தார்.
 
"ரத்தக் கட்டு... க்ரிப் பாண்டேஜ் போடுங்க... இந்த மாத்திரைகளைச் சாப்பிடுங்க..  ஒரு வாரம் சென்று வந்து பாருங்கள்" என்றார்.
 
என் உறவுகளுக்கு திருப்தியே இல்லை.  "காலில் லிகமென்ட் டார் ஆகியிருக்கும்.  எம் ஆர் ஐ எடுத்தால்தான் தெரியும்..  வேறு டாக்டர் பாருங்கள்" என்றார்கள்.  "டிஜிடல் எக்ஸ்ரே கூட எடுக்கலையா?" என்று அங்கலாய்த்தார் இன்னொரு நண்பர்.
 
என்னைப் பார்த்த அறுபது வயது ஆர்த்தோ டாக்டரின் அனுபவத்தை நான் நம்பினேன்.  எக்ஸ்ரேயை அப்புறம் சென்று வாங்கக் கூட இல்லை.  மறுபடி சென்று பார்க்கவும் இல்லை!  பத்துப் பதினைந்து நாளில் கை சரியானது. கால் கொஞ்சம் லேசாக வலித்தாலும் கவலைப் படவில்லை!
 
சொல்ல வந்தது,  அங்கு காத்திருந்தபோது அங்கு நடந்த ஒரு சுவாரஸ்ய அனுபவம்.

 
நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேரே லிப்ட்.   நாங்கள் இருந்தது இரண்டாம் தளம்.  கீழே செல்ல எண்ணி, உள்ளே நுழைந்த ஒரு நடுத்தர வயதுத் தம்பதி புன்னகையுடன் நின்றிருக்க, கதவு மூடிக் கொண்டது.  சில நொடிகள் கழித்து கதவு திறக்க, வெளியே வந்த அதே தம்பதியர், மறுபடி பார்த்த எங்கள் முகங்களையே மீண்டும் கண்டதும் மறுபடி உள்ளே நுழைந்து கதவு மூடிக் கொண்டனர்.
 
மறுபடி கதவு திறந்தது.  மறுபடியும் அவர்களும், நாங்களும்!   G என்ற பொத்தானை அமுக்குங்கள் என்று என் அருகில் உட்கார்ந்திருந்த சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.  கதவு மூடியது.  திறந்தது.  அவர்கள் வெளியே வந்து லேசாக அசடு வழிய, பாவமாக படிக்கட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
 
எங்கள் அருகில் அமர்ந்திருந்தவர்களில் கூட வந்திருந்த ஒரு சிறுவன் அவர்களை அழைத்து, லிப்டில் நுழைத்து, தரைத் தளத்தில அவர்களை டிராப் செய்து திரும்பினான்.

அவர்களைப்  பார்த்து அன்று புன்னகைத்தவர்களில் மற்றவர்களுக்கு பிற்பகல் விளைந்ததா தெரியவில்லை.  ஒரு மாதத்துக்குப்பின் எனக்கு விளைந்தது!  அதை அப்புறம் சொல்கிறேன்!

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

திரை - எஸ் எல் பைரப்பா



இவரது மூன்று நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான வம்சவிருக்ஷா உட்பட.



1931 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்.


35 பதிப்புகள் கண்ட புத்தகம்.  வெளியான பத்து மாதங்களுக்குள் 14 பதிப்புகளைக் கண்டது இந்தப் புத்தகம். வெளியான ஆண்டு 2007. கன்னடம் தவிர, தமிழ் ஹிந்தி மராத்தி, குஜராத்தி ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

அடுத்து என்ன எழுதப் போகிறார் என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்தாளர்.  எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எழுத்தாளர்.  'ஆவரணா' என்ற இந்த 'திரை'  எழுதியபின், பைரப்பா 'கவலு' (வெளியான 4 நாட்களுக்குள் 4 பதிப்புகள் கண்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்து விட்டதாம்) என்ற பெண்ணியத்தைத் தாக்கும் கதை ஒன்றையும்,  'யானா' என்கிற விண்வெளிப் பயணம் மற்றும் மனித ஒழுக்க நெறிகள் பற்றியும் சொல்லும் கதை ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.  மகாபாரதம் பற்றி 1979 ல் இவர் 'பருவா'  என்ற பெயரில் நாவல் எழுதியுள்ளார். (எந்தப் பதிப்பகம் என்றுதான் தெரியவில்லை. பாவண்ணன் மொழிபெயர்ப்பு என்று தெரிகிறது)

ஒரு க்ரைம் ஸ்டோரி என்ற அளவிலோ காதல் கதைகள் என்ற அளவிலோ இவர் படைப்புகளிருப்பதில்லை.  ஒவ்வொரு படைப்புக்கும்,  அதை எழுது முன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆராய்வது, குறிப்பெடுப்பது அப்புறம் அதைப் பற்றி எழுதுவது என்று கொள்கை வைத்திருக்கிறார் இந்த ஓய்வு பெற்ற மனோதத்துவப் பேராசிரியர்.  எனவே இவரது படைப்புகளை ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்குக்காக வாசித்துத் தாண்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.




நான் 'திரை' மட்டுமே படித்திருக்கிறேன். சத்தியத்தை மறைக்கும் வேலைக்கு ஆவரணமென்று பெயர்.  (அசத்தியத்தை வெளிக்கொணரும் செயலுக்கு விக்ஷேபம் என்று பெயராம்)  சரித்திரம் கலந்து எழுதப் பட்டிருக்கும் சமூக நாவல். அதுவும் தமிழில்.  எதுவும் அந்தப் படைப்புகள் எழுதப் பட்ட அசல் மொழியிலேயே படிப்பதே சிறந்தது என்ற கருத்தை இவரே இந்தப் புத்தகத்தில் மறைமுகமாகச் சொல்லவும் செய்கிறார். (அக்பர் சக்கரவர்த்தியின் சமகாலத்தில் அவரோடு இருந்தவர்களால் எழுதப்பட்ட மாஸிர்-இ-ஆலம்கிரி என்ற பார்சி மொழியில் எழுதப்பட்ட படைப்பைப் பற்றிச் சொல்லும்போது)


ஏனென்றால் திரு ஜெயா வெங்கட்ராமன் மொழிபெயர்த்துள்ள இந்நூலில் நிறைய இடங்களில் கதையை விவரித்துக் கொண்டு வரும்போது தன்னிலை, மூன்றாம் நிலை விளக்கக் குழப்பங்கள் இருக்கின்றன.

உள்ளுக்குள்ளேயே நாயகி எழுதும் ஒரு கதையைச் சொல்லி வருவது தனி உத்தியாக நடுவில் திடீர் திடீரென வருகிறது. அந்தக் கதை பெரும்பாலும் அந்தப் பெண்ணின் தந்தை படித்துச் சேர்த்து வைத்த ஆதாரங்கள், விவரங்கள் என்ன என்பதைச் சொல்லவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது பாதியிலேயே முடிவு தெரியாமல் நின்று விடுவது மூலத்திலும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். நோக்கம் முடிந்து விடுகிறது அல்லவா...

இது போன்ற படைப்புகளில் ஒரு படைப்பாளி தான் சொல்லவரும் கருத்தைச் சொல்ல ஒரு பாத்திரத்தைத் தன் படைப்பில் உருவாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் இந்த நாவலில் பைரப்பா சொல்ல வரும் கருத்தை லக்ஷ்மி என்கிற ரசியா பேகம் என்கிற லக்ஷ்மி பேசுகிறாள்.

"உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி, மாற்றித் தவறான சரித்திரத்தை எழுதி அதை மக்களிடையே வெகுஜன ஊடங்களின் வாயிலாக பிரசாரம் செய்து வருகின்றனர்.  உண்மையான சம்பவங்களைத் தொகுத்து தகுந்த வராற்று ஆதாரங்களுடன் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சி நூல்களை எல்லாம் திட்டமிட்டு ஒதுக்கித் தள்ளி விட்டு,  குறுகிய அரசியல், பதவி மற்றும் பொருளாதார ஆதாயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்படுபவைகளே பாடப் புத்தகங்களிலும், நூலகங்களிலும் இடம் பிடித்து வருகின்றன" என்கிறது முதல் முன்னுரை.

"இது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை. சரித்திரத்தைத் தப்பும் தவறுமாக எழுதுபவர்களைத்தான் சாடியுள்ளார்"  என்கிறது சதாவதானி ஆர். கணேஷின் முன்னுரை. 

தனது முன்னுரையில் ஆசிரியர், "சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை" என்கிறார். 

"சரித்திரத்தின் உண்மையில் கலையின் பாவம் கலந்து வந்திருந்தால் அந்த மட்டத்தில் இது ஒரு வெற்றிகரமான இலக்கியம் ஆகிறது"

"இந்த நாவலின் ஒவ்வொரு விவரத்தையும் அல்லது அதன் நடைக்கும் இருக்கும் ஆதாரங்களில் இலக்கியத்தின் திறனை இந்த நாவலில் அதைத் தாங்கும் வகையில் ஒரு பகுதியாக அமைத்திருக்கிறேன்.   நாவலின் கையாளும் உத்தியில் அந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு இந்த நாவலின் அமைப்புக்குள்ளேயே வடிவமைத்திருக்கிறேன் என்கிற உண்மையை எல்லா ஆக்கபூர்வமான எழுத்தாளர்களும், ஆழ்ந்த சிந்தனை உள்ள வாசகர்களும் உணர்ந்து கொள்ளலாம்.   எஞ்சியுள்ள ஆதாரங்களை இந்த நாவலின் உள்ளே இருக்கும் பாத்திரங்கள் மூலம் தேவையானவைகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இவை எல்லாவற்றிற்கும் ஒரு வடிவம் கொடுத்திருப்பது மட்டுமே எனது சொந்த முயற்சி"

"சரித்திரத்தின் உண்மைகளைப் பற்றி ஒரு எழுத்தாளர் எழுதப் புகும்பொழுது அதன் முழுப்பொறுப்பும் அவருடையதாகிறது"

"நமது முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் வளருவதில்லை. சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி. இது ஒவ்வொரு மதம், ஜாதி, குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்."

இதெல்லாம் ஆசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருப்பவை.

கதை என்று எடுத்துக் கொண்டால், கலைத்துறையில் இருக்கும், காதல் மணம், கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதியர்.  கணவன் முஸ்லிம்.  மனைவி இந்துவாக இருந்து, கணவனின் வற்புறுத்தலுக்காக முஸ்லிமாக மாறியவள்.  ஆழ்ந்த இந்து நம்பிக்கைகளை உடைய பெண்ணின் தந்தை மகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்.  மகள் கணவன் வீட்டாரின் வற்புறுத்தலில் முஸ்லிம் சம்பிரதாயங்களைப் பின்பற்றத் தொடங்கி, (முஸ்லீம்களின் பழக்கவழக்கங்கள் ஆங்காங்கே சிறு சிறு விவரங்களாய் சொல்லப்படுகின்றன)  காலப்போக்கில் இந்துத் தெய்வங்களை அல்லது நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை இழக்கும் நிலையில் அவள் தந்தை ஊரில் சில நாட்களுக்கு முன்னால் காலமாகி விட்ட செய்தி வருகிறது.
பற்பல வருடங்களுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பும் அவள், தந்தை தன்னை மறக்கவில்லை, தன் செயல் காரணமாக வருந்தியவர், பின்னர் முஸ்லீம் மதம், மன்னர்கள் பற்றி எல்லாம் ஒரு மிக விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தெரிந்து, அதைப் படிப்பதில் ஆர்வமாகி, படித்து, பிரமித்துப் போகிறாள்.

இப்போது அவள்,  முதலில் சில நிர்பந்தங்கள், தந்தை மேலுள்ள பாசம் காரணமாகவும், பின்னர் சொந்த விருப்பத்தின் பேரிலும் இந்துவாகவே வாழத் தொடங்குகிறாள்.  இந்தக் காலங்களில் கணவனை முற்றிலும் மறந்து, அவ்வப்போது சென்று பார்த்தாலும், திரும்ப சொந்த ஊர், தந்தை வீடு வந்து அங்கேயே வாசிக்கிறாள்.   இங்கு தன் ஊரிலேயே இருக்கும் இவளின் கணவன் இவளின் வீடு திரும்பாமையாலும், அவனின் தாய் தந்தையர், ஊர்ப் பெரியவர்கள் வற்புறுத்தலாலும் வேறு திருமணம் செய்கிறான்.

இவர்களுக்குத் திருமணம் செய்துவைத்த, இவர்கள் ஊர்க்காரரான 'சாஸ்த்ரி' என்பவர் ஒரு  அறிவுஜீவியாக அடையாளம் காணப்படுபவர்.  ("அவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவருக்குப் பணம் எங்கிருந்தோ வருகிறது") அந்தப் போலி கௌரவத்தாலேயே தன்னுடைய சொந்தத் தந்தை இறந்ததற்கான சம்பிரதாயங்களை, ஒரு மூத்த மகனாக செய்ய முடியாமல் போகிறது.  அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவர். அவரின் மனைவி மதம் மாறாமல் கிறித்துவ மதத்திலேயே இருப்பவர். மனசாட்சிக்குப் பயந்து யாருக்கும் தெரியாமல் தந்தையின் 'காரியங்'களை காசியில் ரகசியமாகச் செய்கிறார். 

அவர் கூட்டும் ஒரு சமூக நல்லிணக்க மாநாடு - அதில் போலி மதச் சார்பின்மை பேசும் அறிவுஜீவிகள் -  மறுத்து, உண்மையை ஆதாரங்களுடன் பேசும் இந்தப் பெண்ணை (கதாநாயகி) அடுத்த கூட்டத்தில் புறக்கணித்து அவர்கள் எழுத நினைத்த சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார்கள்.

வெகுண்ட இந்தப் பெண், இத்தனை வருடங்களில் தன் அப்பா சேமித்து வைத்திருந்த ஆதாரங்களை (கேசவபெருமாள் கோவிலை நிர்மூலமாக்கி மதுராவை இஸ்லாமாபாத் ஆக்கியது, புனித க்ஷேத்திரமான பிரயாகையை இலாஹாபாத் ஆக்கியது, காசி விஸ்வநாதர் ஆலயத்தை அழித்து 'ஞானவாபி மசூதி' ஆக்கியது போன்ற நிறைய விவரங்கள்) வைத்து ஒரு நூல் வெளியிட....

இப்படிப் போகும் நாவலில் ஆசிரியர் தன்னுடைய நூலுக்கான ஆதாரங்களை எந்தெந்த நூல்களைப் படித்து எடுத்தார் என்பதை இந்தப் பெண், லக்ஷ்மியாக இருந்து பேகம் ரசியா குரைஷியாக மாறி, மறுபடியும்  லக்ஷ்மியாக மாறும் பெண் மூலமே 15 பக்கங்களுக்கு அடுக்குகிறார்.
புத்தகத்தில் அவரின் சில கருத்துகள் :

மதம் மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிறந்த மதத்தை விட்டாலும் அது போகாது. 

தத்துவத்தின் எந்த மட்டத்தில் இருக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் கடவுளையும் சிருஷ்டிக்கிறோம்.

தனது முன்னோர்கள் என்று கருதுபவர்களை சரி, தப்பு என்று பேதப்படுத்தித் தனது வாழ்க்கையின் பாதையை நிச்சயம் செய்துகொள்ள, சரித்திரத்தின் படிப்பு உதவ வேண்டும்.




திரை
கன்னட மூலம் : எஸ் எல் பைரப்பா
தமிழில் : ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம்
300 ரூபாய்.


திங்கள், 20 ஏப்ரல், 2015

'திங்க'க்கிழமை : சுண்டை வத்தல்



எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ( !!! ) காய்க்கும் சுண்டைக்காயைப் பறித்துப் பறித்து,  சாம்பாரும், அரைத்து விட்டோ, விடாமலோ, காரக்குழம்பும் செய்து செய்து அலுத்துப் போய், பாசிப்பருப்புக் கூட்டு செய்து,  அது பிடிக்காமல்...
 
 

 
நண்பர்களுக்கெல்லாம் அவ்வப்போது கொடுத்தும்,  காய்த்துக் கொண்டே இருந்த சுண்டைக்காயை இந்தமுறை வத்தல் போடுவது என்று தீர்மானித்தேன்.  பாஸுக்கு அதில் விருப்பமில்லை.  "சரியா வராது... அது வேற சுண்டக்காய்... மதுரச் சுண்டக்காய்.."
 
 

 
மதுரைச் சுண்டைக்காய்ப் போட்டுச் செய்யும் வத்தல் வேறு மாதிரி.  மோரில் ஊறிக்கொண்டிருக்கும் சுண்டைக்காயை அப்படியே எண்ணெயில் வதக்கி எடுத்து மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்வோம்!
 



 
வேறு சில நண்பர்களும் அப்படியே சொன்னாலும்,  விடாமல் சுண்டைக்காயைப் பறித்து, லேசாகக் கீறி,  உப்புப் போட்டு ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை தயிர் விட்டு குலுக்கி மூடி வைத்து விட்டு, அவ்வப்போது குலுக்கி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து வெயிலில் காய வைக்கத் தொடங்கி, நன்றாகக் காய வைத்து எடுத்து வைத்திருந்தோம்.
 
 

 
அதைப் போட்டு வத்தக்குழம்பு வைக்கச் சொல்லியும் அந்த நிகழ்ச்சியை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்த பாஸ், அதை இன்று செய்தார்.
 
 


வத்தக்குழம்பு செய்யத் தெரியும்தானே?


என்ன வாசனை, என்ன ருசி!  அருமை போங்க!






 
படங்கள் :  "சொந்தப் படங்கள்ங்கோ..."

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சனி, 18 ஏப்ரல், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) "இந்த ஆயுளில் முழுப் பலனையும் அடைந்து விட்டதாக உணர்கிறேன்."   விருதுநகர் மாவட்டம், கீழ்உப்பிலிக்குண்டில் நுாலகத்தை நிறுவிய, முன்னாள் கைதி முருகன்
 


2) தாயம்மாளின் உயர்ந்த சேவை.
 


3) மின்சாரம் தேவை இல்லை, எரிபொருள் தேவையில்லை.  விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் மங்கள்சிங்கின் கண்டுபிடிப்பு.  (நம்ம பிரச்னை தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லையா?  ஆனால் அந்த அளவு தண்ணீர் வேண்டுமே!!!)
 



4) ஆயுஷின் லட்சியங்கள் நிறைவேறட்டும்.
 


5) அக்கை பத்மஷாலியின் போராட்ட வாழ்க்கையும், வெற்றியும்.
 


6) சூர்யகுமார்.


 

புதன், 15 ஏப்ரல், 2015

காக்கையும் நானும்



ஒரு வாரமாகக் கண்ணில் படாமல் இருந்த காக்கை இன்று மறுபடியும் வந்து விட்டது. அதைப் பார்த்ததும்தான் 'கொஞ்ச நாட்களாய்க் காணோமோ?' என்று எண்ணம் வந்தது.  நான் அதைத் தேடுகிறேனோ என்று சோதித்திருக்குமோ!



மதியங்களில் மூன்று மணி சுமாருக்கு அந்தக் காக்கை வாசல் பால்கனிச் சுவரில் அமர்ந்து என்னைக் கூப்பிடும்.  அதே காக்கையாகத்தான் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட நேரத்துக்கு வருகிறது.  ஒரே மாதிரி செயல்பாடுகள்.  எனவே அந்த அனுமானம்.



நான் கவனிக்கவில்லை என்றால் சற்றே நகர்ந்து வாசல் துணி காயப்போடும் கொடியில் அமர்ந்து குனிந்து உள்ளே நான் எங்கே கண்ணில் படுகிறேன் என்று தேடும்.  குரல் கொடுக்கும்.  அப்படியும் திரும்பிப் பார்க்கவில்லை என்றால் வாசல் கதவின் மீது வந்து அமர்ந்து குரல் கொடுக்கும்.  இன்னும்  வீட்டுக்குள்தான் வரவில்லை.

நான் உள்ளே பாஸுக்கு ஒரு குரல் கொடுப்பேன்.  உடனே உள்ளே திரும்பிப் பார்க்கும்.  காத்திருக்கும்.  அல்லது நானே எழுந்துபோய் உள்ளே டப்பாவைத் திறந்து ஏதாவது பிஸ்கட்டோ, ரஸ்க்கோ எடுத்துப் போடுவேன்.  சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும்.


கொஞ்சநாட்களாக காக்கைகள் சற்றே நட்பாகி விட்டன.  காக்கைகளை அடையாளம் காண முடியவில்லை.  சற்று மண்டை பெருத்த, கரிய காக்கை ஒன்றை மட்டும் தனியாகத் தெரியும்.  அதன் அசைவுகள் கொஞ்சம் பயமுறுத்துமே தவிர, அதுவும் முன்போல் எதுவும் செய்வதில்லை!  அது என்றால் அது இல்லை!   காக்கைகளின் பொதுவான குணம்!  கூடு கட்டியிருந்திருக்கலாம்.

முன்பெல்லாம் நான் மொட்டைமாடி பக்கம் போகமுடியாது.  இங்கும் அங்கும் தாழப் பறக்கத் தொடங்கும் காக்கைகள், பின்னர் மண்டையில் லொட்டென்று ஒன்று போட்டுப் பறக்கும்.  உட்கார்ந்து புத்தகம் படிக்க முடியாமல் தலைக்குமேல் போர் விமானங்களாய் சர் சர்ரெனத் தாண்டிப் பறக்கும்.  


இப்போதெல்லாம் மொட்டை மாடியில் புத்தகம் படிக்க அமர்ந்த உடனே காலுக்கு அருகில் துணிச்சலாக அமர்ந்து, குனிந்து ஓரப்பார்வையாய் என் கண்களைப் பார்த்து "கா...கா" என்று குரல் கொடுக்கிறது.  இதற்காகவே நான் மேரி பிஸ்கட், முறுக்கு, சீடை போன்றவற்றை வாங்கி வைத்து, மேலே எடுத்துச் செல்கிறேன்.


சுவரின்மேல் என் பக்கத்திலேயே வைத்தாலும், என் கை நீளும்போது பறந்து விடாமல், சற்றே தள்ளி மட்டும் அமர்ந்துக் காத்திருந்து, வைத்த உணவுப் பொருளைக் கொத்தி எடுத்துச் செல்லும். அது இவற்றைச் சாப்பிடும் முறை பற்றியும் நான் கவனித்தவற்றைச் சொல்ல வேண்டும்.


மேரி பிஸ்கட் சாப்பிடக் கஷ்டமிருக்காது என்று பெயர்.  கொஞ்சம் அப்படியே சாப்பிட்டாலும், கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு தத்தித் தத்தி நடந்துபோய் பறவைகளுக்கென்று மாடியில் வைத்திருக்கும் அகல பேசின் தண்ணீரில் போடும்.  சில நொடிகள் காத்திருந்து அவற்றைக் கொத்திச் சாப்பிடும்.   

பிஸ்கெட்டோ, முறுக்கோ, அவற்றை அவை தங்கள் கால்களில் இடுக்கிக் கொண்டு அலகால் மிகச் சிறிய துண்டுகளாக உடைத்துச் சாப்பிடும்.  நொடிக்கொருமுறை நாலு புறமும், என்னையும் பார்த்துக் கொள்ளும்!




முறுக்கு சீடைகளையும் தண்ணீரில் போட்டுச் சாப்பிடுவதுண்டு.  அதைவிட விநோதமாக இன்னொன்று செய்யும்.  முறுக்கு, சீடைகள் போன்றவற்றை மட்டும் கவ்விக் கொண்டு உயரமான இடத்துக்கோ, உயரமான கிளைக்கோ சென்று அமர்ந்து கொண்டு, இந்தப் பக்கம் ஒருமுறை, அந்தப்பக்கம் ஒருமுறை சாலையைக் கடக்கப் போகும் பாதசாரி போலப் பார்த்துக் கொண்டு, அங்கிருந்து அவற்றை 'பொத்' தென்று கீழே போடும்.  அவை துண்டு துண்டாய் உடைந்தவுடன் பொறுக்கிக் கொண்டு பறக்கும், சாப்பிடும்.  உடையாவிட்டால் மீண்டும் அதே முயற்சி!  இந்த  சுவாரஸ்யமான லிங்க்கைப் பாருங்கள்.

இதைவிட விநோதமாக இன்னொன்றும் செய்யும்.  இரண்டு துண்டு சாப்பிட்டால், மூன்றாவது நான்காவது துண்டுகளை கவ்விக்கொண்டு அங்கிருக்கும் இலைக் குப்பையில் கொண்டு போய்ச் சொருகி வைத்து,  அருகிலிருக்கும் இன்னும் கொஞ்சம் காய்ந்த இலைகளை எடுத்து அதன்மேல் போட்டு மூடும்.  சற்றே நடந்து சென்று சிறு குச்சிகளையும் கொண்டு வந்து போட்டு மூடும்.  சேமிப்பு!  அப்புறம் அதுதான் அவற்றை எடுத்துக் கொள்ளுமா, வேறு காக்கைகள் எடுத்துக் கொள்ளுமா?  
தெரியாது!


இந்தப் பிளாஸ்டிக் தொட்டியின் இந்த இடுக்கில் நுழைக்க முயற்சி செய்து விட்டு,
                                                                                          


அது பிஸ்கட் துண்டை "ஒளித்து" வைத்திருக்கும் இடம்!  சமயங்களில் கூடவே இன்னொரு காக்காய் வந்து உடனே உடனே அவற்றை எடுத்துச் சாப்பிட்டும் விடும்!
 

சில காக்கைகள் கூடவே வந்து சாப்பிடுவதை அனுமதிக்கும்.  சில காக்கைகளைத் துரத்தி விடும்.  தவிட்டுக் குருவி போன்ற சில குருவிகள் வரும்.  அவற்றையும் காக்காய் அண்டவிடாது,  அதே போல, மரங்களிலிருந்து மின்னல் வேகத்தில் வாலை உசத்திக்கொண்டு இறங்கி ஓடிவரும் அணில்களையும் அண்ட விடாது!

அதற்காக அவற்றுக்கு ஒற்றுமை உணர்வு இல்லையா, என்று யோசித்தால், இல்லை, அதற்கும் வேறு சில சம்பவங்கள் இருக்கின்றன.

கீழே நாய்க்கு ஏதாவது போட்டாலோ, அல்லது நாய்கள் ஏதாவது உணவுகளைக் கண்டு விட்டாலோ அவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, காக்கைகள் சற்றுத் தள்ளி அமர்ந்து குரல் கொடுக்கும்.  நாய் நிமிர்ந்து இவற்றைப் பார்க்கும்போது தலையைச் சாய்த்து இவைகளும் அவற்றைப் பார்த்து மறுபடி குரல் கொடுக்கும்.


நாய்கள் தொடர்ந்து சாப்பிடும்.  இவை உடனே பறக்கத் தொடங்கி, நாய்களைத் தாண்டும்போது கீழே இறங்கிப் பறந்து நாய்களின் முதுகைத் தொட்டுத் தாண்டிச் செல்லும்.  நாய்கள் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை, எதிர்ப்பும் காட்டுவதில்லை.  மறுபடியும் காக்கைகள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் மறுபடியும் முதுகைத் தொட்டுச் செல்லும்.  சிலமுறை இப்படி நடக்கும்.

இப்போது ஒரு ஆச்சர்யகரமான நிகழ்வு நடக்கும்!

சாப்பிட்டுக் கொண்டிருந்த நாய், முழுவதும் சாப்பிடாமல் கால் வாசிக்கும் குறைவாய்க் கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டு நகர்ந்து சென்று விடும்.  காக்கைகள் உடனே வந்து சாப்பிடத் தொடங்கும்.

இதே போன்று காக்கைகளும் பகிர்ந்துண்டுச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.   சுவரில் வைக்கப்பட்டிருக்கும் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு மூன்று காக்கைகள்.  ஒரு அணில் மரத்திலிருந்து குதித்து மெல்ல, மெல்ல சாப்பாட்டின் அருகில் வரும்.  காக்கைக் கூட்டத்தில் ஒன்று அவற்றைத் திரும்பிப் பார்த்து, தத்தித் தத்திச் சென்று அவற்றை விரட்டும்.  அணில் ஓடி விடாது.  சற்று நகர்ந்து பின்சென்றாலும், மறுபடியும் அருகில் வரும்.  என்ன பாஷையோ, என்ன சொல்கின்றனவோ அவற்றுக்குள்!

இது போல இரண்டு மூன்றுமுறை நடந்தாலும், காக்கைகள் திடீரென சற்று நகர்ந்து அமர்ந்து வழி விடும்.  கொஞ்ச நேரம் அணில்கள் சாப்பிடும்.  அப்புறம் காக்கைகள், மறுபடி கொஞ்சநேரம் அணில்கள்...
ஆச்சர்யப்படுத்திய நிகழ்வு அது.  கையில் கேமிராவோடு டிஸ்கவரி சேனல் நிருபர் போலக் காத்திருந்தால் இவற்றை எல்லாம் வீடியோவோ, அட்லீஸ்ட் புகைப்படமாவது எடுத்துப் போட்டிருக்கலாம்.  நான் என் வேலையைக் கவனித்துக் கொண்டே இவற்றைக் கவனித்ததில் அதெல்லாம் முடியவில்லைதான்.

ஆனால் வீடியோ எடுத்த விஷயம் ஒன்றும் உண்டு.  எங்கள் தெருநாய் குட்டி போட்டிருந்தது.  அதுதான், முதுகில் காக்கைத் தொடல் வாங்கி, சமிக்ஞை பெறுமே, அந்த நாய்!  கொஞ்சம்  வளர்ந்த குட்டிகளுடன் தாய் நாய் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.  இந்தக் காக்கைகள் கோஷ்டியில் இரண்டு மூன்று குறும்புக் காக்கைகள் இருக்கின்றன.  அவை பறந்து வந்து இவைகளின் அருகில் சற்று தூரத்தில் அமரும்.  நாயக் குட்டிகள் மும்முரமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவைகளின் பின்னால் செல்லும் இந்தக் காக்கைகள் அதன் வாலைக் கொத்தி சட்டென்று இழுத்து விட்டு நகர்ந்து ஓடித் தொலைவில் அமர்ந்து அவை என்ன செய்கின்றன என்று பார்க்கும்.

குட்டிகள் திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கும்போது கு.கா மீண்டும் அருகில் வந்து மீண்டும் வம்பிழுத்துச் செல்லும்.  அப்புறம் குட்டிகள் காக்கைகள் தத்தித் தத்தி அருகில் வரும்போதே லேசாகத் திரும்பி அவற்றைப் பார்க்கும், சிறு அழுகையுடன் துரத்தும்.  வாலைச் சுருட்டி கால்களுக்குள் மறைத்துக் கொள்ளும்!  அவற்றையும் கொத்தி வெளியில் இழுத்து விட்டுப் பறக்கும் காக்கைகள்.

ஓய்வான நேரங்களில் கீழே அமர்ந்திருக்கும் காக்கைகளைத் துரத்தும்.  அவை ஒரேயடியாகப் பறந்து விடாமல் இடம் மாற்றி மாற்றி அமர்ந்து விளையாட்டுக் காட்டும், விளையாடும்!


இரண்டு நாட்களுக்குமுன் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.  மூன்று மணிக் காக்கை சற்றுத் தொலைவில் வந்து அமர்ந்து என்னைப் பார்த்துக் குரல் கொடுத்தது.  மனிதர்களிடம் பேசுவது போல வழக்கம் போல அதனிடம் பேசினேன்.  "இப்போது ஒன்றுமில்லை" என்றேன்.  அப்புறம் அருகில் வந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.  நான் குடித்து விட்டு வைத்திருந்த காபிக் கோப்பையின் விளிம்பைக் கவ்வ முயற்சித்தது.  

"ஏய்...  அதெல்லாம் எடுக்காதே" என்று டம்ளரை எடுத்து உள்ளே ஓரமாக வைத்தேன்.  மறுபடியும் அது குரல் கொடுத்து அருகில் வர, நானும் சும்மா பதிலுக்குப் பேசிக் கொண்டிருந்தேன்.

விடாமல் தொந்தரவு செய்யவும், வேறு ஏதுமில்லாததால் உள்ளேயிருந்து கார்ன்ஃப்ளேக்ஸ் எடுத்துப் போட்டேன்.  அதைக் கொத்திப் பார்த்த காக்கை, கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டுப் பறந்து போய் விட்டது.

கொஞ்ச நேரம் போயிருக்கும்.  வாயில் ஒரு வடகத் துண்டுடன் என் அருகில் வந்து அமர்ந்தது.  சற்றே பெரிய வடகம்.   யார் வீட்டில் போட்டிருந்தார்களோ!  அதைக் கொண்டு வந்து என் அருகில் அமர்ந்தது.  "ஏய்... எடுத்துக் கொண்டு மாடிக்குப் போ... அங்குதான் தண்ணீர் இருக்கும். அதில் போட்டுச் சாப்பிடு" என்றேன்.

ஏதோ புரிந்த மாதிரி மேல் ஷட்ஜத்திலும், கீழ் ஷட்ஜத்திலும் குரல் கொடுத்தது.  என்ன பேசுகிறதோ என்று யோசித்துக் கொண்டு படிப்பதைத் தொடர்ந்தேன்.  வடகத்தை கவ்விக் கொண்டு இன்னும் என் அருகில் வந்த அந்த நண்பன் அதை என் கையருகே போட்டு விட்டு, குனிந்து என் கண்களைப் பார்த்து "கா" என்றது!

உடைத்துத் தரச் சொல்கிறதோ என்று யோசித்து இடது கையால் அதை இரண்டு மூன்று துண்டுகளாய் உடைத்து விட்டேன்.  மறுபடி அருகில் வந்த நண்பன் இரண்டு துண்டுகளை அலகால் என் பக்கம் தள்ளி விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டான்.  என்ன சொல்ல வருகிறார் நண்பர்?  எனக்கும் ஒரு பங்கு தருகிறாரா?  பேசாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  

கொஞ்ச நேரம் பார்த்த காக்கை, அப்புறம் என் அருகிலேயே கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்து அந்த வடகத்தை சிறு சிறு மைக்ரோ துண்டுகளாக்கி, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டுப் பறந்தது!

என்ன சொல்ல வந்ததோ!  இன்னும் என்னென்ன நடக்குமோ!


திங்கள், 13 ஏப்ரல், 2015

'திங்க'க்கிழமை : அம்மிணிக் கொழுக்கட்டை


பிள்ளையார் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி நோன்பு சமயங்களில் செய்யப்படுவது கொழுக்கட்டை.
 
    
           Image result for கொழுக்கட்டை images                          Image result for கொழுக்கட்டை images
 
செய்வது சற்றே கடினமான ஒன்றுதான்.   அரிசி மாவுப் பதம் ஒழுங்காய் வரவேண்டும்.  இல்லாவிட்டால் கிண்ணம் ஒழுங்காய் வராது.  உடைந்து உடைந்து போகும்.  ஆவியில் வைத்து எடுக்கும்போதும் விரிசல் விழும்.  தேங்காய், வெல்லம் ஏலக்காய் சேர்த்து இனிப்புப் பூரணம் வைத்துத் தித்திப்புக் கொழுக்கட்டையும்,  உளுந்து ஊறவைத்து அரைத்து, உதிர்த்து, காரம், பெருங்காயம் சேர்த்து பூரணம் சேர்த்து காரக் கொழுக்கட்டையும் செய்வோம்.  எனக்கு மிகவும் பிடித்த பண்டம் இந்த இரண்டும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.   சொல்லப் போனால் அ.கொ கூட எல்லோருக்கும் தெரிந்திருக்கும்!    
 

           Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images                       Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images
 
இது போலக் கொழுக்கட்டை செய்யும்போது பூரணம் தீர்ந்து மாவு மீந்து விடும்.  அப்போது செய்வதுதான் அம்மினிக் கொழுக்கட்டை.   சில சமயங்களில் இதற்கு டிமாண்ட் அதிகமாகி விடும்!
 
மீந்து போன (கிளறி வைத்த) கொழுக்கட்டை மாவில் தோசை மிளகாய்ப்பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்குப் பிசைந்து வித விதமான வடிவங்களில், ஆனால் சிறிய அளவுகளில் (சரியாக வேக வேண்டுமே) செய்து வேக வைத்து எடுத்து விடுவோம்.
 
                                                                   
                                                                  Image result for கொழுக்கட்டை images

இதில் பச்சை மிளகாய் அரைத்து விட்டு, கொத்து மல்லி அரைத்து விட்டு, லேசாக எலுமிச்சைச் சாறு பிழிந்து கூட (கூழ் வடகம் வாசனை, ருசி வரும்) வடிவங்கள் செய்து ஆவியில் வேகவைத்துச் சாப்பிடலாம்.






படங்கள்   :   இணையம்.