உலகக் கோப்பையா கிண்ணமா - ஏதோ ஒன்றை வென்றாகி விட்டது. (கிண்ணம் என்றால் சின்னதாக ஷேவிங் கப் போல இருக்குமோ... ) வென்ற த்ரில் மகிழ்ச்சி எல்லாம் இன்னும் தீராத நிலையில் சில சிந்தனைகள்...
எண்பத்தி மூன்றில் வென்ற ப்ருடென்ஷியல் கப்புக்கும் இன்றைய உலகக் கோப்பைக்கும் என்ன வித்தியாசம்?
அன்று வென்ற இந்திய அணிக்கும் இன்றைய அணிக்கும் என்ன வித்தியாசம்?
அன்று இவ்வளவு விளம்பரமும் பணமும் இல்லை. அன்றைய அணித்தலைவர் கபிலுக்கு இவ்வளவு பில்ட் அப் இல்லை.
அன்றைய ஆட்டங்கள் பல இந்தியர்களால் தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் போனது. பல பரபரப்பான கணங்கள் பார்க்க முடியாமல் போனது வருத்தம். இன்று எல்லாமே ஓவர் டோஸ். ஆனாலும் த்ரில்லுக்குக் குறைவில்லை. இன்றைய இளைய தலைமுறையைப் பார்க்கும்போது இன்னும் வேகமாக, உற்சாகமாக, விவரம் தெரிந்தவர்களாகக் காணப் படுகிறார்கள்.
சென்ற வாரம் வரை, இந்திய அணியைப் பற்றி, அணியில் இருந்த ஒவ்வொருவரைப் பற்றி அவர்தம் குடும்பத்தாரின் பேட்டி என்று திகட்ட திகட்ட பார்த்தாயிற்று. தோற்ற ஸ்ரீலங்கா அணி ஊர் சென்ற விவரம், அங்கு எப்படிப் பட்ட வரவேற்பு என்றெல்லாம் தகவலே இல்லை. நமக்கு டெண்டுல்கர் போல அவர்களுக்கு முரளிதரன். இறுதி ஆட்டம் முடிந்து ஊர் திரும்பிய அவருக்கு அவர்கள் என்ன மரியாதை செய்தார்கள் தெரியாது. நம்ப ஊர்ல தோற்று விட்டு வருபவர்களின் கொடும்பாவி கட்டி அவமானப் படுத்துவார்கள். சென்ற முறை வாசிம் அக்ரமின் பாக். அணி ஊர் திரும்ப முடியாமல் துபாய் லண்டன் என்று கலைந்து சென்றது நினைவுக்கு வருகிறது!
சங்கக்காராவிடம் இரண்டு கேள்விகள்...நியூ சிலாந்தை அரையிறுதியில் வென்றதும் சங்கக்காரா சிங்களத்தில் என்ன சொன்னார்? (ரொம்ப முக்கியம்...!) 'நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்' என்று குழப்பி இரண்டாவது முறை டாஸ் போட வைத்தது பேட்டிங் தெரிவு செய்யத்தானே...!
இறுதிப் போட்டியில் வென்ற இந்திய அணியின் சாதனைகள் : முதல் முறை அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்தது...சதம் அடித்தவர் இருக்கும் அணிதான் வெல்லும் என்ற கோட்பாட்டை உடைத்தது, சொந்த மண்ணில் வென்றது ஆகியன. மேலும் தொண்ணூற்று ஆறில் கோல்கத்தாவில் காம்ப்ளியின் கண்ணீருக்கிடையிலும், இரண்டாயிரத்து ஏழில் லீக் போட்டியிலும் தோற்கடித்த ஸ்ரீலங்காவை வென்றது சந்தோஷம்!
இறுதிப் போட்டியில் சுண்டி விடப் பட்ட காய்ன் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று? காம்பிர் உடைத்த பேட் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று? (எல்லாவற்றையும்தான் காசாக்கி விடுவார்களே...!)
இந்தியா லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வியையும் கஷ்டப்பட்டு ஒரு 'டை'யையும் சந்தித்த போதும் காலிறுதியிலும் அரையிறுதியிலும் வலுவான அணிகளை சந்தித்து வென்றது குறிப்பிடத் தக்கது. இறுதி ஆட்டம் சமமான அணி. எந்த அணியுடன் ஆடினாலும் அவர்களுக்கு இணையாக ஆடுவது இந்திய அணியின் சிறப்பு! ஆனால் என்னதான் சந்தோஷம் இருந்தாலும் இப்படியா விமானச் செலவு இலவசம், வரிச் சலுகைகள், வீடு இலவசம் என்று அள்ளி விடுவார்கள்....அபபடி ஏழ்மையில் வாடுபவர்களா இந்திய அணியினர்...!
யுவராஜ் பந்துவீச்சிலும் சோபித்தது சிறப்பு. இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை அவரையும் சுரேஷ் ரெய்னாவையும் நிச்சயமாய் நன்றாக ஆடுவார்கள் என்று நம்ப முடிந்தது. யுவராஜ் ஒரு ஸ்பெஷல் மனிதருக்காக ஆடுகிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்தது ரசிக்க வைத்தது. தோனி நிச்சயமில்லாத ஆட்டக் காரராக இருந்து கடைசி ஆட்டத்தில் சோபித்தது சிறப்பு. யூசுஃப் பதானுக்கு பதிலாக ரெய்னாவை எடுத்தது நல்ல யுக்தியாக மாறியது. யூசுஃப் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருந்தார். காம்பீர் முதலிரண்டு ஆட்டத்தில் பதட்டத்தில் இருந்தாலும் இறுதி ஆட்டத்தில் அவர் இல்லையென்றால் வெற்றி இல்லை என்ற நிலை! ஸ்ரீசாந்த் எதற்கு அணியில் இருந்தார் என்பதும் புதிர். வேஸ்ட்!
யுவராஜும் தோனியும் இரண்டு இடங்களில் 'நான்' வென்று கொடுத்தேன் என்ற அர்த்தம் தொனிக்கப் பேசியதை வெற்றிக் களிப்பில் மறந்து விடலாம்! உண்மையில் யாருடைய தனி முயற்சியிலும் இந்திய அணி வெல்லவில்லை. அணியின் மொத்த முயற்சியுமே வெற்றிக்குக் காரணம். பாகிஸ்தானுடனான ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் யுவியின் தொடர்ந்த வெற்றி, டெண்டுல்கரின் ஆட்டம், ரெய்னாவின் பதட்டமில்லாத ஆட்டம், காம்பிரின் கம்பீர ஆட்டம்...
டெர்மினேட்டர் பெரிதாகச் சாதிக்கவில்லை! டெண்டுல்கர் வயதை மறந்து எல்லைக் கோட்டுக்கருகில் விழுந்து, டைவ் அடித்து ஃபீல்டிங் செய்தது, அவர் அடித்த சில சிக்சர்கள், அழகான ஸ்டிரெயிட் டிரைவ் ஆகியவை மறக்க முடியாதவை.
தோற்ற ஸ்ரீலங்கா அணியினர் உணர்ச்சி காட்டாமல் இருக்க வென்ற இந்திய அணியில் பலர் (மகிழ்சிக்)கண்ணீர் சிந்தியது ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. யுவராஜ்தான் அழுகையைத் தொடங்கி வைத்த மகானுபவர்! பின்னர் ஹர்பஜன், ஜாகீர், சச்சின், சேவாக், தோனி என்று ஜோதியில் இணைந்தனர்.
மொத்தத்தில் ஜாகீரின் பந்துவீச்சு மகிழ்ச்சியளித்தாலும் இறுதி ஆட்டத்தில் முதல் ஐந்து ஓவர்களில் ஆறு ரன்கள் மட்டும் கொடுத்தவர் கடைசி ஸ்பெல்லில் ரன்களை வாரி வழங்கினார். அதையும், மற்றும் தோனியே சொன்ன மாதிரி அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்ததையும், தோனி முன்னதாக பேட்டிங் செய்ய இறங்கியதையும் ஜெயித்து விட்ட காரணத்தால் மறந்து விடலாம். தோற்றிருந்தால் நிச்சயம் கேள்வி எல்லோரும் கேட்டிருபபார்கள்தான்.
நடுவில் ரொம்ப நாட்களாக விளையாடாமல் இருந்த அணி, பலவீனமான அணி என்றெல்லாம் பேசப் பட்ட பாகிஸ்தான் அணி அபபடி பலவீனமான அணியாக இல்லை. அஃபிரிடி பூம் பூம் என்று பேட்டிங் செய்யா விட்டாலும் பந்து வீச்சும், அணித் தலைமையும் சிறப்பாகவே இருந்தன. பழைய யூனுஸ் கானையும், அப்துல் ரஜாக்கையும் காண முடியவில்லை. பாக் அணியுடன் விளையாடிய போது பழைய பகைமை** இல்லாமல் நட்புடன் ஆடியது ரசிக்க முடிந்தது. நல்ல வேளை ஸ்ரீசாந்தை அந்த ஆட்டத்தில் எடுக்கவில்லை.
இங்கிலாந்து அணி, நியூ சிலாந்து அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணி ஆகியவை இதுவரை கோப்பை வென்றதில்லை. நியூ சிலாந்து அணி ஃபீல்டிங் தவிர மற்ற அம்சங்களில் பலவீனமான அணியாக இருந்தது. இங்கிலாந்து அணி ஒன் மேன் ஷோ போல ஸ்ட்ராஸ் ஆடினால் உண்டு இல்லா விட்டால் ஜோனாதன் ட்ராட்......வாய்ப்பு கம்மி. தென் ஆப்பிரிக்கா இன்னும் முயற்சித்திருக்கலாம். க்ரூப் பிரிக்கும் போதும் இந்த முறை இங்கிலாந்தையும் தென் ஆப்பிரிக்காவையும் வெவ்வேறு க்ரூப்பில் போட்டிருக்கலாமோ என்னமோ...
அயர்லந்து அணியின் சாதனைகள் ஆச்சர்யம். கெவின் ஓ ப்ரைன் பிரமிக்க வைத்தார். சேவாகின் விக்கெட் எடுத்ததும் ஜான்ஸ்டன் ஆடிய நடனம் அழகு...ரசிக்க வைத்தது. மற்றபடி நெதர்லாந்து, கென்யா போன்ற அணிகள் ஏன் விளையாடின என்று புரியவில்லை. அடுத்த முறை அணிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
எண்பத்தி மூன்றில் மேற்கிந்தியத் தீவுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றிய பிறகு அதே மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் அப்புறம் ஆடிய ஆட்டங்களில் வாங்கிய அடி நினைவுக்கு வருகிறது. இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பலாம். வலுவான அணிதான் இப்போதைய இந்திய அணி. பிரவீன் குமார் இல்லாத குறையும் நன்றாகவே தெரிந்தது. வலுவான பேட்டிங் அணி என்று சொல்லப்பட்டாலும் ஒருவர் ஆட்டம் இழந்ததும் எல்லோரும் வேகமாக பெவிலியன் திரும்புவதும் நடந்தது. பேட்டிங் பவர் ப்ளே ஒரு முறை கூட சிறப்பாகக் கையாளப் படவில்லை. பேட்டிங் சொன்ன அளவு கூட - காகித அளவில் கூட -பந்து வீச்சு இல்லையென்றாலும் எப்படியோ ஒப்பேற்றி ஜெயித்தாயிற்று!
டெண்டுல்கர் ஓய்வு அறிவிப்பாரா...உலகக் கோப்பை தொடங்குமுன் தோனி மாய்ந்து மாய்ந்து அதற்கு சிபாரிசு செய்தது போல தோன்றியது. அடுத்த உலகக் கோப்பைக்கு உத்தேச இந்திய அணி என்னவாக இருக்கும்?
காம்பிர், சேவாக், விராத் கொஹ்லி, ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன், போன்றோர் நிச்சயம் அணியில் இருக்கக் கூடும்.
அடுத்த ஒரு மாதத்துக்கு சேனல்களுக்குப் பேச விஷயம் கிடைத்து விட்டது. இன்றே பரபரப்பான தகவல்கள் வரத் தொடங்கியும் விட்டன...தோனி மொட்டை அடித்து விட்டாராம்....யாரை என்று கேட்காதீர்கள். அப்புறம் இருக்கவே இருக்கு அடுத்த திருவிழா...ஐ பி எல் திருவிழா...
உண்மைத் தோற்றத்தைப் பற்றி கவலைப் படாமல் மேக் அப் இல்லாமல் ரஜினி மனைவி மகளுடன் கூட்டத்தில் ஒருவராக இருந்து கை தட்டி சந்தோஷப் படுத்தியது, சந்தோஷப் பட்டது, அதே போல ஷாரூக் கான், ஆமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் என்றெல்லாம் கூட்டத்தில் இருந்தும் மக்கள் அவர்களை லட்சியம் செய்யாமல் ஆட்டத்தில் கவனமாக இருந்தது, குறிப்பிடத்தக்க விஷயங்கள்.
டெண்டுல்கரை தூக்கிக் கொண்டு மைதானம் சுற்றியது போலவே கோச் கேரி கிர்ஸ்டனையும் தூக்கி சுற்றி மரியாதை செய்தார்கள்.
அரை இறுதியில் உட்கார்ந்து ரசித்த சோனியா இறுதிப் போட்டியில் வென்ற பிறகு ரோடில் வந்து மக்களின் ஊடே வண்டியில் அமர்ந்தபடி கை கொடுத்து மகிழ்ச்சியில் பங்கு கொண்டதை சில சேனல்களில் காட்டினார்கள். இறுதி ஆட்டத்தில் ராகுல் காந்தி டீ ஷர்ட்டில் மக்களிடையே அமர்ந்திருந்தார்.
முடிக்கும் முன்பு இரண்டு லேட்டஸ்ட் விஷயங்கள் கொடுக்கப் பட்ட கோப்பை உண்மையான கோப்பை அல்ல என்ற செய்தி. கோடி கோடியாக அள்ளி எல்லா ஆட்டக் காரர்களுக்கும் வழங்க முடிந்த நிர்வாகத்தால் இருபத்திரண்டு லட்சம் தந்து கஸ்டம்ஸ் கிளியர் செய்வது கஷ்டமானதா...!
**பகைமை இல்லாத பாகிஸ்தான் அணி என்று சொன்னது கண் பட்டு விட்டது...அஃபிரிடி திடீரென ஏதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.
தேர்தல் வெறுப்புகளை கொஞ்ச காலம் மறந்திருக்க முடிந்தது.