நான் கேட்கத் தீர்மானித்த கச்சேரியையே நீங்களும் கேட்கத் தீர்மானித்தது சந்தோஷமாக உள்ளது. அந்த சந்தோஷத்தை நீடிக்கச் செய்ய - உங்களிடம் சில வேண்டுகோள்கள்.
அ ) கச்சேரி ஆரம்பிக்கு முன் வந்து, இருக்கையில் சப்தமில்லாமல் அமருங்கள். கச்சேரி ஆரம்பித்த பின் வந்து என்னைக் கால்களை மடக்கி அடக்கி ஒடுக்கி - உங்களுக்கு வழிவிடும் நேரத்தில் - கச்சேரியின் சில இனிமையான கணங்களை நானும், நீங்களும் இழக்கவேண்டியதாகிறது. இது கச்சேரியை அமைதியாக - ஒரு தியானம் போல அனுபவித்துக் கேட்கும் என் போன்ற ரசிகர்களை இடைஞ்சல்படுத்தும்.
ஆ ) கச்சேரி கேட்க ஆர்வம் இல்லாத சிறுகுழந்தைகளை தயவு கூர்ந்து வீட்டிலோ அல்லது அவர்களின் ஆர்வம் அதிகம் உள்ள ஓரிடத்திலோ விட்டுவிட்டு வாருங்கள்.
இ) உறவினர் புடை சூழ வருகிறீர்களா? - எல்லோரும் மௌனவிரதம் தியானம் எல்லாம் செய்யத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோடு வருபவர்களும், சபாவுக்கு வெளியே பேசக்கூடிய விஷயங்களை வெளியிலேயே பேசலாமே!
ஈ) உங்க மொபைல் ஃபோனை சைலண்ட் மோட்ல வையுங்க, அல்லது ஆப் செய்து வைத்துவிடல் உத்தமம்.
உ) பாடகர் என்ன ராகம் பாடுகிறார் என்பது உங்களைப் போலவே நானும் பாட்டைக் கேட்டு, இராகத்தைக் கேட்டு யூகிக்கவேண்டும்; அடுத்த சீட்டுக்காரர்களுடன் உரத்தக் குரலில் விவாதங்கள் வேண்டாம். பாடகர் ஒன்றும் எங்களைப்போல் சரியாக இராகம் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு பாயிண்டுகள் கொடுக்கப்போவதில்லை.;-)
ஊ) ஐயா / அம்மா, நீங்க பாட்டுத் தெரிந்தவர்கள்தான். அதற்காக - பாடகர் இராகம் இழுக்கும்பொழுதோ, பாடும்பொழுதோ, நீங்க இங்கே உடன் ஹம பண்ண வேண்டாமே!
வேண்டுமானால் சபா செகரட்டரியிடம் சொல்லி ஒரு பகல் நேரக் கச்சேரி ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். நானும் வேறு கச்சேரி எதுவும் வாகாக வாய்க்கவில்லை என்றால் உட்கார்ந்து அதைக் கேட்கத் தயார். ஆனால் காசு வாங்காமல், இந்த மாதிரி எல்லாம் 'உடன் பாடுதல்' அதுவும் அடுத்த இருக்கைக்காரர்களுக்கு கேட்கும் வால்யூமில் வேண்டாமே!
எ) கச்சேரி நடந்துகொண்டிருக்கும்பொழுது பர பரவென சிப்ஸ் பாக்கெட் திறப்பது - நற நற வென்று சப்தமாக சிப்ஸ் மெல்லுவது - ஐயோ - நினைத்தாலே உடம்பும் மனதும் சிலிர்க்கிறது - செய்யவே செய்யாதீங்க. டிஸ்டர்பன்ஸ் மட்டும் இல்லை, எனக்குக் கொடுக்காம நீங்க சாப்பிடறதுனால - உங்களுக்கு வயிற்று வலி வரும். (நீங்க கொடுத்து நான் சப்தமில்லாமல் சாப்பிட்டாலும் - எனக்கும் வயிற்று வலி வரும்.)
ஏ) நல்லி கடையில் வாங்கிய கச்சேரி கையேடு - என்னிடமும் உள்ளது. உங்க கிட்டயும் இருக்கா? வெரி குட். ஆனால், அதைப் பரபரவென்று சப்தம் எழும் வகையில் பிரித்து, பாட்டைக் கண்டுபிடித்தால் - உரக்கப் படித்தும், காணவில்லை என்றால் - என்னடா புத்தகம் போட்டிருக்காங்க என்று முணுமுணுப்பதும் வேண்டாம். என் புத்தகத்தை நான் சப்தமில்லாமல் பிரித்து ரெஃபர் பண்ணும்பொழுது நீங்க என் தோள்பட்டை வழியாக அதை எட்டிப் பார்த்து என் மீது உஷ்ணமான மூச்சுக் காற்று விடாதீர்கள்.
ஐ) பாடகரின் கச்சேரியை நீங்க பத்து வருடங்களுக்கு மேலாகக் கேட்பவராக இருக்கலாம். அதற்காக அவருடைய முந்தைய கச்சேரிகளையும், இன்றைய கச்சேரியையும் ஆய்வு செய்து - விமரிசனங்கள் செய்துகொண்டு இருக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? மௌனமாகக் கேளுங்கள்; பிடிக்கவில்லையா - வேறு கச்சேரி - (பிடித்ததாக ஒன்று) கேட்கச் செல்லுங்கள்.
ஒ) இரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பாடகர் அபூர்வமான சங்கதிகள் போடும்பொழுது (மட்டும்) ஆஹா / ஓஹோ / சபாஷ் கூறுவதில் தவறில்லை. ஒவ்வொரு ராகம் பாடிமுடித்தபிறகும், வயலின் வாசிப்பு, மிருதங்க ஆவர்த்தனம் முடிந்தபின்னும் - ஊக்கப்படுத்த கைதட்டுதலும் தவறு இல்லை. தனியாவர்த்தன நேரத்தில் எழுந்து போதல் எனக்கும் நாகராஜ் போன்ற என் ஆர்க்குட் நண்பர்களுக்கும் பிடிக்கவே பிடிக்காது.
ஓ) கச்சேரி நன்றாக இருந்தால், அப்படியே ஒன்றிப்போய், கண்ணயர்ந்துவிடுவது, சில சமயங்களில் எனக்கும் நேர்ந்தது உண்டு. நீங்க அப்படி கண்ணயர்ந்தால் - தயவு செய்து குறட்டைவிட்டு, என் அமைதியான தூக்கத்தைக் கெடுத்துவிடாதீர்கள்!
அவ்வ்வ்வவ்வ்வ்வ் --- வளவுதான்! இப்போதைக்கு (மீதி இருந்தால், நாளை துவங்கி உங்க நடவடிக்கைகளைப் பார்த்து, பிறகு எழுதுகின்றேன்)