புதன், 31 மார்ச், 2010

கடவுள் ..

CERN பரிசோதனை முதல் படியில் வெற்றி என்று கேட்டதும் நாம் யாரைப் பற்றி நினைத்தோமோ அவரே வந்து விட்டார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்பார்களே அந்த மாதிரி இருந்தது அறிவு ஜீவியின் வருகை.

"ஒ, அதுவா ? ஒரு பெரிய வட்ட வடிவ டன்னலில் மூலக் கூறுகளின் ஆதாரத் துகள்களை வேகம், வேகம், இன்னும் வேகம், மிக வேகம் என்று ஒளியின் வேகத்துக்கு கொண்டு வந்து இரண்டையும் மோதச் செய்து முதன் முதலில் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்த அந்த கணத்தைத் திரும்பக் கொண்டு வரப் போகிறோம் என்கின்றனர் விஞ்ஞானிகள் " என்றதும் அங்கிதா "மாமா எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பிக்க, அம்மா "முதலில் எல்லோரும் போய்க் கை கழுவிக்கொண்டு வந்து வட்டமாக உட்காருங்கள். நான் சாதம் கலந்து வைத்திருக்கிறேன். உருட்டிக் கையில் போட்டுடறேன். அப்புறம் நீங்கள் கிரிக்கெட்டோ கடவுளோ எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள்.

சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அங்கிதா கண்டிநியூவிடி விட்டுப் போகாமல் தொடர்ந்தாள். மனதுக்குள் "பிக் பாங் ..பிக் பாங்...பிக் பாங்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. "ஒளி, துகள் வடிவத்துடன் அலை வடிவமும் ஆனது என்று நியூட்டன் பல முறை சொல்லி இருப்பதாக சுசீலா மாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அதை அடிப்படையாக வைத்து, நான் கூட ஒரு பரிசோதனை பண்ணிப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா மாமா" என்றாள். 

நீங்கள் அங்கிதாவைப் பார்த்திருக்கிறீர்களோ? தலையைக் கொஞ்சம் சாய்த்து " ப்ளீஸ் அத்தை !" என்றதும் ராஜம் அத்தை ஒரு வார்த்தை கூட மேற்கொண்டு பேசாமல் நகர்ந்து விடுவாள். ஜீவியும் அவ்வாறே "எஸ் மிஸ்! பண்ணிடுவோம்" என்றார். "அர்ஜுன், ஆனந்த் எல்லோரும் கொஞ்சம் வெளியில் போய் விளையாடிக் கொண்டிருங்கள்" என்று சொல்லி அவர்கள் இருவரையும் வெளியேற்றி விட்டுப் பின் ஹாலில் கிழக்கே ஒரு மேஜை, மேற்கே ஒரு மேஜை என்று இழுத்துப் போட்டு விட்டு, பச்சை லாசர் லைட் சிவப்பு லாசர் லைட் என்று மேஜைக்கொன்றாகக் கொண்டு வந்து டேப் போட்டு பொருத்தி வைத்து விட்டு பழைய விசிட்டிங் கார்டுகளை எல்லாம் கொண்டு வந்து மேஜையின் காலடியில் சொருகி என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளின் பின் சோதனைச் சாலை ரெடி.

அங்கிதா ஏதோ கம்பெனி சேல்ஸ் மானேஜர் பிரசெண்டேஷன் கொடுக்க வந்த மாதிரி வந்து நின்று கொண்டு "CERN பரிசோதனையில் என்ன பண்ணப் போறாங்க தெரியுமா ? அவங்க பண்ணப் போற மாதிரியே ஒளி வேகத்தில் எதிரும் புதிருமாக இரண்டு ஒளிக் கற்றைகளை மோதச் செய்தால் என்ன ஆகும் என்று பார்க்கப் போறோம் !" என்றாள். 

"எம்மா, இவ்வளவு குறைந்த வசதியில் அதெல்லாம் பண்ணலாம் என்றால், ஒரு காந்தத்தை மாற்றுவதற்கு ஏன் ஆறு மாதம் எடுத்துக் கொண்டார்கள் ? " என்று ராஜம் அத்தை கேட்டாள்.

நாங்களும் சேர்ந்து கொண்டோம். என்ன தான் நடந்தது? பொறுத்திருந்து தான் பாருங்களேன்.

(என்ன நடந்தது என்பதை, இந்தப் பதிவின் பதினாறாவது பின்னூட்டமாக பதிய இருக்கிறார் அறிவு ஜீவி.)

ஒருக்கால் திருட்டு பயமோ?

ஐ.பி.எல்லும் ஹர்ஷா போக்ளேயும்...

எப்போதோ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடாத போது வீரர்களை உருவாக்குகிறேன் என்று கபில் ஐ.சி.எல் என்று ஒன்று தொடங்கப் போக அது செல்லாது, அதில் விளையாடுபவர்கள் இந்திய அணியில் விளையாட முடியாது என்றெல்லாம் மிரட்டிய இந்திய கிரிக்கெட் போர்ட் பின்னர் தானே அந்தச் செயலைச் செய்வதாய்க் கூறி ஐ.பி.எல் தொடங்கியது. வீரர்களை ஆடு மாடு வாங்குவது போல ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, கண்ட மேனிக்கு காசு கொட்டி ஏலத்தில் எடுக்கத் தொடங்கியது. முதலில் எதிர்த்த சில வீரர்கள் கூட இதில் கொட்டிய பணத்தைக் கண்டு வாய் மூட, தத்தமது நாட்டு அணியிலிருந்து ஓய்வு அறிவித்து நிறைய வீரர்கள் இதில் சேர்ந்தார்கள்.

வீரர்கள் இதன் மூலம் ஏதாவது கற்றுக் கொண்டார்கள் என்றால் அது எப்படி சுருக்கு வழியில் பணம் சேர்க்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.

எந்த அணியாவது வெற்றி பெறுகிறது என்றால் அந்த வெற்றியின் பங்குக்கு இந்திய வீரர்களை விட வெளி நாட்டு வீரர்கள் பங்குதான் அதிகம் இருக்கிறது..!

ஷாருக் கான் தனது இன்கம் டேக்ஸ் கணக்குக்கு நஷ்டம் காட்டதான் கொல்கத்தா அணியை வாங்கியிருக்கிறாரோ என்று தோன்றும் அளவே இருக்கிறது அந்த அணியின் ஆட்டம்.

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு, ஆட்டத்தில் யுவராஜின் லொள்ளை சமாளிக்கவே நேரம் போதவில்லை. தனது அணி ஆடும் லட்சணத்தைப் பார்த்து ஷில்பா கண்ணீர் விடாத குறை. இதெல்லாமும் நடிப்புதானோ..?

இதில் இன்னும் இரண்டு டீம் வேறு அடுத்த வருடத்துக்கு புதிய அறிமுகம்..

நமது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவது போல ஆட்டக் காரர்கள் பந்தை அடித்தவுடன் திரையில் அதற்கான கமெண்ட் வருகிறது. Sweet, wow, என்றெல்லாம். சமீபத்தில் பார்த்த ஆட்டத்தில் யாரோ ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடித்த வுடன் திரையில் வந்த கமெண்ட் "Agriculture"....!

ரஞ்சி டிராஃபி போன்ற உள்ளூர் பந்தயங்களில் சச்சினும் கங்குலியும் திராவிடும் எதிரெதிர் ஆட்டங்களில் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். ஹெய்டன், ப்ரெட் லீ, ஷேன் பான்ட் என்று வெளி நாட்டு வீரர்களை வைத்துக் கொண்டு அதை எப்படி சென்னை டீம், பெங்களூர் டீம் என்றெல்லாம் சொல்ல முடியும்? சச்சினோ கங்குலியோ, அவுட் ஆவதை ஆவலுடன் எதிர்பார்க்கவும் முடியவில்லை.

இரண்டு டீம் விளையாடினால் கில்லியின் ஆட்டத்தை ரசிக்கும் அதே நேரம் பந்து போடும் ஷேன் வார்னேயின் ஆட்டத்தையும் ரசிக்க முடிகிறது. பஃபே உணவு போல எல்லாவற்றையும் தனித் தனியாக ரசிக்க முடிகிறதே தவிர, ஒரு முழுமை கிடைப்பதில்லை. ஆனால் நம் மக்கள் அங்கு கூடி ஆதரவு கொடுக்கத் தவறுவது இல்லை.

சாதாரணமாகவே நம் டீவிக் காரர்கள் விளம்பரம் காட்டும் வேகத்தை சொல்ல முடியாது. கடைசி பந்து போட்டு அது நான்கானதா, ஆறு ஆனதா அவுட் ஆனதா என்று பார்க்கும் முன்னரே விளம்பரம் வந்து விடும். இதில் விளம்பரம் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. ஒரு பந்துக்கும் அடுத்த பந்துக்கும் இடையிலேயே மைதானத்தின் பெரிய திரையிலேயே சிறு சிறு விளம்பரங்கள்..அந்த டைம் அவுட் இந்த டைம் அவுட், என்று காசு பார்க்க ஆயிரம் வழிகள். விளம்பர யுகம். டிவி சேனல்கள் முதல் விளையாட்டுகள் வரை. புத்தியுள்ளவன் பிழைக்கிறான்.

நாட்டுப் பற்றோ ஆட்டப் பற்றோ, அரசியல் பற்றோ பாகிஸ்தான் ஆட்டக் காரர்களை காணோம் எதிலும். நடுவில் தீம் மியூசிக் போல ஒன்று போடுகிறார்கள்...உடனே மக்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். யார் எப்படி சொல்லித் தந்ததோ? எப்போது ஆரம்பித்ததோ..?

ஆட்ட அரங்குக்குள் செல் கொண்டு போகக் கூடாது, தண்ணீர் பாட்டில் கொண்டு போகக் கூடாது..என்று ஆயிரம் கண்டிஷன்கள்...ஆனாலும் மக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. இதோடு இரண்டு ஐ.பி.எல் தொடர்கள் முடிந்து விட்டது என்று ஞாபகம். இந்திய அணி இதனால் என்ன புதியதாய் சாதித்தது என்று ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அரை குறை ஆடை அணிந்த கவர்ச்சிப் பெண்கள் (சியர் லீடர்ஸ் என்பதற்கு தமிழில் என்ன கூறுவது? உற்சாகத் தலைவிகள்?) எப்போதும் மேடை மேல் ஆடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். நான்கோ ஆறோ அடிக்கப் பட்டதுமோ அல்லது யாராவது அவுட் ஆனதுமோ அவசர அவசரமாக பெண்கள் மேடை மேல் ஏறுகிறார்கள் தங்கள் ஆடும்(?) திறமையைக் காட்ட.. அந்த நடனத்தை வடிவமைக்க பெரிய திறமை ஏதும் தேவை இருக்காது என்று நம்புகிறேன்.

ஐ.பி.எல்லை கவனிக்கும் அவசியம் ஏன் வந்தது என்பது தனி சுவாரஸ்யம். பரிச்சயமான குரல் ஒன்று காதில் விழுந்தது. நிமிர்ந்து திரையைப் பார்த்தால் கண்ணில் பட்ட உருவம் பார்த்த மாதிரியும் இருந்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
                                                                      

...ஏதோ வித்யாசம்...ஹர்ஷா போக்ளே...அட! ஆமாம் முன்னால் முடியுடன் இருந்தார்..காலப் போக்கில் முடி கொட்டிப் போய் வழுக்கையுடன் இருக்கிறார் என்றால் இயற்கை...! இங்கு தலைகீழ். (கீழே காணப்படும் தலை அப்போ இருந்தது.)
                                                          
முன்பு அவரைப் பார்த்தபோது முன் வழுக்கையுடன் காட்சி அளித்த அவர் இப்போது நெற்றியில் புரளும் முடியுடன் காட்சி அளித்தது கண்டு ஆச்சர்யப் பட்டுப் பார்த்ததால் எழுந்த சிந்தனைதான் இது..!


சரி, மணி எட்டு ஆயிடுச்சு. இன்னைக்கு யாருக்கும் யாருக்கும் மாட்சு? டீ வி யை ஆன் பண்ணு !  

செவ்வாய், 30 மார்ச், 2010

ஜே கே 04 - கற்றலும், கற்பித்தலும்.

(நான் கூறுவதை மக்களுக்கு எடுத்துச் செல்லலாம்.  அதை நீங்களோ யாருமோ விளக்க முற்பட வேண்டாம் என்பது ஜேகே சொன்னது.  அந்தப் பின்னணியில் நாம் கூடுமான வரையில் அவர் சொன்ன சிலவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்து தர முயல்வோம். புரிந்து கொள்ள சிரமம் என்று எண்ணப்படும் பகுதிகளை கொஞ்சம் வேறு மாதிரி சொல்ல முயற்சிப்போம். அதை தெளிவாக இது நான் உங்களுக்குச் சொல்வது என்று அறியப்படும் வகையில் குறிப்போம்.)

“(பள்ளி, கல்லூரிகளில்) கற்பிப்பவர் சற்றே பெருமிதத்துடன் தம் பணியைச் செய்கிறார். அதே சமயம் தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள என்ன செய்யலாம் என்ற முனைப்பும் அவரிடம் இருக்கிறது.  பள்ளி/கல்லூரி முடிந்து வெளிச் செல்லும் மாணவர்களுக்கு என்ன ஆகிறது என்று யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஆசிரியர் சில உத்திகளை, சில உண்மைகளைத் தருகிறார்.  புத்திசாலித்தனம் மிக்க மாணவர்கள் அதைக் கிரகித்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியர்களுக்கு நிரந்தரமான உத்தியோகம்வருவாய் இருக்கிறது.  குடும்பம், சௌகரியங்கள் எல்லாம் இருக்கின்றன. வெளிச்செல்லும் மாணவர்கள் வாழ்க்கையின் சவால்களை, பாதுகாப்பற்ற தன்மையை சமாளித்தாக வேண்டும்.  சிலர் புகழ், பொருள் சம்பாதித்துக் கொண்டு உயர் நிலைக்கு வருகிறார்கள்.  மற்றவர் யாவரும் போராடி, மணவாழ்வு வாழ்ந்து மக்களைப் பெற்று இறுதியில் மடிந்து போகிறார்கள்.  அரசு கெட்டிக்காரர்களை நிர்வாகத்துக்கும், வல்லுனர்களை செயல்பாட்டுக்கும் விரும்புகிறது.  அது போக இருக்கவே இருக்கிறது ராணுவம், கோயில் அமைப்புகள், வாணிபம்.  உலகெங்கிலும் எங்கு பார்த்தாலும் இதுதான் நிலவரம்."

“ ஒரு தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்ளவும், ஒரு வேலையை சம்பாதித்துக் கொள்ளவும் தான் நாம் நம் மூளையை விவரங்களாலும், அறிவினாலும் நிரப்பிக் கொள்கிறோம் இல்லையா?  இந்த உலகில் ஒரு தொழில் நுணுக்கம் கற்றவர் வாழ்க்கையை கொஞ்சம் சௌகரியமாக வாழ முடியும் என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால் வாழ்க்கையில் சவால்களை தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் அவ்வாறான நுட்பம் ஏதும் அறியாதவரை விட நன்றாக சமாளிக்க முடியுமா?  ஜீவனோபாயமான தொழில் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான். நுணுக்கமான, கண்ணுக்குப் புலப்படாத, மர்மம் நிறைந்த இன்னும் எவ்வளவோ வாழ்க்கையில் இருக்கிறது. வாழ்க்கையின் ஒரு அம்சத்துக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பேணி வளர்த்துக் கொண்டு, மற்ற ஒன்றை மறுப்பதோ, உதாசீனப் படுத்துவதோ ஏறுமாறான கோணல் வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.  நாளுக்கு நாள் குழப்பமும், மோதல்களும், துயரமும் அதிகரித்துக் கொண்டே போவதைத்தான் பார்க்கிறோம்.  விதி விலக்காக வெகு சிலர் மனிதனால் ஆக்கப் படாத படைப்பாற்றல் மிக்கவர்களாக, ஆனந்தம் மிக்கவர்களாக, மனம் படைக்கும் மாயங்களை சார்ந்திராதவர்களாக வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறார்கள்."

“ நீங்களும் நானும், காலத்தின் பிடியில் சிக்குறாது, அடிப்படையில் களிப்புடன், ஆற்றல் மிகுந்தவர்களாக இருக்கும் திறன் கொண்டவர்கள் தான்.  படைப்பாற்றல் மிகுந்த ஆனந்தக் களிப்பென்பது வெகு சிலருக்காக மட்டும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒன்றல்ல.  பின் அதை ஏன் பெரும்பாலானவர்கள் அறிவதில்லை? சூழ்நிலைகளையும் விபத்துக்களையும் மீறி ஆற்றல் மிக்க ‘ஒன்றுடன்’ இசைந்திருப்பது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் கைவரப் பட்டதாகத் தெரிகிறது?  ஏன் மற்றவர்கள் சூழ் நிலைக்கும் விபத்துக்கும் ஆளாகி அழிகிறார்கள்?  அறிவுச் சேமிப்புக்கு அப்பால், சிலர் மட்டும்தான் யாராலும், எதனாலும் அளிக்கப் பட முடியாத ‘அந்த ஒன்றுக்காக’ கதவைத் திறந்து வைக்கிறார்கள்.  மற்ற பலரும் அதிகாரவர்க்கத்தினாலும், தேடி அலையும் தொழில் நுட்பங்களினாலும் அடிபட்டு மிதி பட்டு அவஸ்தைப் படுகிறார்கள்.  ஏன் இப்படி?  மனம் எதையோ தேடி அலைந்து பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று திண்டாடுகிறது.  இன்னும் பெரியதும் ஆழமானதுமான மற்ற பலவற்றை அது கண்டுகொள்வதில்லை.  காரணம் மனம் எப்போதும் முன்பே பரிசீலிக்கப் பட்டு நல்லதென கண்டறியப் பட்ட எதனாலும் பாதுகாப்பை உணர்கிறது.  அதனால்தான் எப்போதும் கல்வி, கற்றுக்கொள்தல், தொழில் நுட்பம் என்று மேலும் மேலும் முனைந்து தேடிப்பெறுவதில் ஆர்வம் மிகக் கொள்வதுடன், அதைத் தாண்டிச் செல்லாதிருப்பதற்கு நொண்டிச் சாக்குகளைத் தேடிக் கொள்கிறது."

”கல்வி எனும் மாசு படிவதற்கு முன்னால், பல குழந்தைகள் ‘அந்த அறிந்திராத ஒன்றுடன் ‘ தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பல வழிகளிலும் அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.  ஆனால் விரைவிலேயே, சுற்றுச் சூழ் நிலை அவர்களை வெகுவாக ஆட்கொள்கிறது.  அவர்கள் தம் ஒளியை இழக்கிறார்கள்.  எந்த நூலிலும் எந்தப் பள்ளியிலும் காண முடியாத ஒரு அழகை அவர்கள் இழக்கிறார்கள்.  ஏன் இப்படி?  வாழ்க்கையின் சவால்கள் அவர்கள் சக்திக்கு மீறியதாக இருக்கின்றன என்று சொல்லாதீர்கள்.  உண்மை நிலையை அவர்கள் எதிர் கொண்டாக வேண்டித்தான் இருக்கிறது என்று சொல்லாதீர்கள்.  அவர்கள் பூர்வ ஜன்ம கர்மம் அல்லது முந்தையோர் வினை என்று சொல்லாதீர்கள்.  இதெல்லாம் சுத்த அபத்தம்.  படைப்பாற்றல் மிக்க மகிழ்வு என்பது எல்லாருக்கும் பொது.  அது கடைச் சரக்காக விற்கப் படுவதல்ல. அதற்கு மார்க்கெட் மதிப்பு ஏதும் இல்லை.  மிக அதிக விலை தருபவருக்கு விற்பனை செய்யக் கூடிய சரக்கு இல்லை அது.  ஆனாலும் அது எல்லாரும் பெறக் கூடியதே."

”படைப்பாற்றல் மிக்க மகிழ்வு என்பது அடையக் கூடியதா?  அதாவது மனம் ஆனந்தத்தில் ஊற்றுக் கண்ணை அடைய இயலுமா?  வாழ்க்கையின் நெருக்கடிகளையும் அறிவுத் திணிப்புகளையும் மீறி திறந்த மனத்தை உடைய பாங்கு இருக்க முடியுமா?  கற்பிப்பவர் இந்த உண்மைகளைக் கற்கிறவராக மாறினால் இது சாத்தியம் தான்.  கற்பிப்பவர் தானே இந்த படைப்பாற்றல் மிக்க ஆனந்தத்தில் திளைப்பவராக இருப்பின் அது சாத்தியம்.  எனவே நமது பிரச்சினை குழந்தை அல்ல. அதற்குக் கற்றுக் கொடுப்பவரும், அதனுடைய பெற்றோரும்தான்.  இந்த ஆனந்தத்தின் உயர் நிலையை நாம் அறிந்திராத வரையில், கல்வியும் கற்பித்தலும் ஒரு நச்சு வளையமாகவே இருக்கும்.  ஆனந்தத்தின் ஊற்றுக் கண்ணை தொடர்பு கொண்டிருத்தல் என்பது சமயத்தின் உச்ச கட்டமாக இருக்கும்.  ஆனால் அதை அறிய, நீங்கள் உங்கள் தொழிலுக்கு எவ்வளவு கவனத்தைச் செலவிடுகிறீர்களோ அதே அளவு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.  ஆசிரியரின் பணி என்பது சாதாரண சம்பாத்திய சாமர்த்தியம் அல்ல.  அழகையும் ஆனந்தத்தையும் அறிவித்தலாகும்.  அதை சாதனையாக / வெற்றியாக கணக்கிட முடியாது." 


”நிதரிசனத்தின் ஒளியும் அது விளைவிக்கும் ஆனந்தமும் மனம் தன்முனைப்புப் பெறும் போது அழிந்து போகின்றன.  தன்னைப் பற்றி அறிதல் விவேகத்தின் தொடக்கமாகும்.  தன்னைப் பற்றிய அறிதல் இல்லாதபோது கற்றல் என்பது அறியாமைக்கும், கலகத்துக்கும், துயருக்கும் வழிசெய்கிறது.” 

திங்கள், 29 மார்ச், 2010

அட - இப்போ ப்ளே பண்ணுதே!

அறிவு ஜீவியின் தலை தெரிந்ததுமே எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். 


"மாமா எங்க எல்லோருக்கும் லீவு விட்டாச்சு.  .... ஆனா ஒரு கேம் கூட ஓடாம இந்த பிளே ஸ்டேஷன்ல பாருங்க ....இவன்தான் என்னவோ பண்ணிட்டான் .... எல்லா டிஸ்கையும் அம்மா எடுத்துப் பரண்லே வச்சிருந்தா ... " இப்படிப் பல முனையிலிருந்து பல தகவல்கள் வந்து ஜீவியின் மடியில் - சாரி - காதில் விழுந்ததும், சுறு சுறுப்பானார்.

பொதுவாகப் பையன்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் பொருள்களைப் பாது காப்பதில் இல்லை என்பதால் அங்கிதாவை அழைத்து மேல் விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.  பின்னர் ஒரு டிஸ்க் கேட்டு வாங்கிக் கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் ஒரு தடவை, போட்டுக் கொண்டு இரண்டு தடவை, லைட் போட்டுக் கொண்டு ஒரு தடவை, ஜன்னலோரம் போய் தகட்டைச் சாய்த்து என்று பார்த்துக் கொண்டிருக்க அவர் பின்னேயே ஹாம்லின் நகரத்து குழலூதுபவர் பின் போன குழந்தைகள் மாதிரி, ஜீவி பின்னாலேயே  அலை அலையாக அலைந்து கொண்டிருந்தனர். 

ஜீவி தன் விஷுவல் பரிசோதனை முடிந்ததும், தட்டை முகர்ந்து பார்த்தார்,   பின் (குழந்தைகள் யாரும் பாராத போது) கொஞ்சம் தொட்டு நாக்கு நுனியிலும் வைத்துப் பார்த்தார். பிறகு ஒரு முறை வீட்டுக்குள் சுற்றி வந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமானது.  

"அர்ஜுன் சொன்ன மாதிரி கண்ணாடி துடைக்கும் துணியை வைத்துத் துடைத்தால் போதும் என்றதும், கோரசாகக் குழந்தைகள் அனைவரும் "பின் ஏன் கேம் வரல்லை?" என்றனர்.

"நீங்கள் துடைத்த போது தகட்டைத்தான் துடைத்தீர்கள் ஆனால் உள்ளே இருக்கும் லென்ஸ் மேல் முதலில் படிந்த எண்ணெயைத் துடைக்கவே இல்லை.  இப்போ நம்ப அதையும் துடைச்சுப் பார்ப்போம் "என்றார்.

துடைத்ததும் ஒரு கேம் லோடும் ஆனது.  அங்கிதா "அப்பவே நான் நெனச்சேன் இந்த ஆனந்த் போட்ட ஆயில் தான் இப்படிப் பண்ணியிருக்கும் என்று " என்று ஆரம்பித்ததும் "இன்னொரு தடவை அப்படி சொன்னேன்னா ... " என்று கிட்டே வந்த ஆனந்தை ஜீவி அப்படியே இழுத்துக் கொண்டார்.  

இதுக்கெல்லாம் ஒரு வழியில் கொசு தான் காரணம் என்ற ஜீவி, பிறகு குழந்தைகளுக்கு [ஏன் பெரியவர்களுக்கும் தான் ] விளக்கிச் சொன்னார் :

"நாம்ப பிளக்ல போடற திரவக் கொசு விரட்டியில் இருக்கும் பரஃபின் ஆயில் ஆவியாகி கொசுவை விரட்டுகிறது பின் இரவில் சற்றுக் குளிர்ந்ததும் திரவத் திவலை ஆகி விடுகிறது.   அதனால் தான் நாம் ரொம்ப நாள் உபயோகிக்காத சி டி, டி வி டி  எல்லாவற்றிலும் இப்படித் திவலைகள் காணப் படுகிறது.  துடைத்த பின் உபயோகிப்பது நல்லது. "  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராஜம் அத்தை, "அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே ?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

(ராஜம் அத்தை கேட்டதற்கு, 'ஆமாம்' அல்லது 'இல்லை' அல்லது 'தெரியவில்லை' என்று நினைப்பவர்கள் - பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள். குழந்தைகள் பார்க்காதபோது அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.)

ஞாயிறு, 28 மார்ச், 2010

(நேற்று) தகடு ... தகடு ...!

பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாய் கோடை விடுமுறை அறிவித்ததிலிருந்து வீட்டில் சிறுவர்களின் கூட்டம் அதிகம் - ஓசையும் அதிகம்.



வெகு நாட்களாக அம்மா (பரீட்சை படிப்புகள் காரணமாக) ஒளித்து வைத்திருந்த பிளே ஸ்டேஷன் குறுந்தகடுகள், சுங்கத் துறை ஆய்வை சுலபமாக சமாளித்து வெளியே வருகின்ற அரசியல்வாதிகள் போல, மிக சாமர்த்தியமான முறையில் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், என்ன ஒரு சோகம், முன்பு நன்றாக ஓடிக் கொண்டிருந்த கேம் டி வி டி கூட லோடு ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தது.

"டேய் அந்த அழுக்குத் துணியை எல்லாம் வைத்துத் துடைக்காதேடா. இன்னும் கொஞ்சம் கோடு விழுந்துடும். ஏற்கெனவே காட்சிகள் எல்லாம் ஒரு மாதிரி, 'பனி படர்ந்த மலையின் மேலே' என்று பாடுகிறாற்போல் தெரிகிறது" என்ற அங்கிதாவின் குரல் ஓயும் முன்னேயே, 'அப்பாவின் மூக்குக் கண்ணாடி கூட்டிலிருந்து அந்த சதுரமான மஞ்சத் துணியைக் கொண்டு வரவா? ' என்று அர்ஜுன்.

"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு? - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன?" மீண்டும் அங்கிதா.

"நான் எதுவும் செய்யலே ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடி எடுத்துண்டு வந்தால், சொல்ல மாட்டே நீ!" - ஆனந்த்.

"அக்கா நீ வேணா பாரு. நாம்ப இன்னும் எடுத்துப் போடாத டிஸ்க்லே கூட உருண்டை உருண்டையாய் எண்ணெய் மாதிரி.." மீண்டும் ஆனந்த்.

'இதோ, இதோ இதிலே கூட' என்று கூக்குரல்களுக்குப் பின் சற்று நேர அமைதி.

"நாளை ஜீவி மாமா வந்த உடனே கேட்டுரணும்" அங்கிதாவின் குரலுக்கு நிறைய ஆமோதிப்புகள்.

[அறிவு] ஜீவி வரும் வரை உங்களுக்கு இது மாதிரி அனுபவம் ஏற்பட்டிருந்தால் அதையும், எப்படி சமாளித்தீர்கள் என்பதையும் சொலலுங்கள், பின்னூட்டமாக!

ஞாயிறு - 37


சனி, 27 மார்ச், 2010

செய்தியும், சேட்டையும்..

செய்தி: இறுதி துணை பட்ஜெட் தாக்கல்.
சேட்டை: ஐயோ தாக்கல்? காயம் பலமாகப் பட்டுடுச்சா?  


செ: அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய 'கூட்டு'? 
சே: மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு 'அவியல்' கூட்டணி ? 
மக்கள் 'குழம்பு'(கிறார்கள்!)


செ: காலாவதி மருந்து :இதுவரை 10 பேர் கைது.
சே: கொஞ்ச கால அவதி. பின் விலை கொடுத்து அமைதி! 


செ: மெட்ரிக்., ஆங்கில வினாக்கள் எளிமையே.
சே: ஆமாம். விடைகள்தான் கடினம்.


செ: கர்நாடக போலீசார் சேலத்தில் முகாம்.
சே: மாடர்ன் போலீசார் எந்த ஊரில் முகாம்?


செ: கனடா உதவி எதிர்பார்ப்பு : கமல்நாத்.
சே: காணடா - உதவுபவரின் கமல முகம்.

செ: எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்.
சே: எல்லாரையும் தடுக்கிவிடும் வாழைப்பழத்தோல்!

செ: பிரபல ரவுடி சுட்டுக் கொலை.
சே: ரவுடி சுட்டுக் கொலையுண்டது யார்?  

செ: போலீஸ் தேடிய மீனாட்சிசுந்தரம் சரண்.
சே: அப்படியானால் தேடியது சரண் சரிதானா?  

செ: மாமியார் உதைப்பது பற்றி பரபரப்பு தீர்ப்பு. 
சே: மாமியார் நம்மையும் உதைக்கக் கூடும் என்று பரபரப்பு?

செ: திருவாரூரில் போட்டி தேரோட்டம்.
சே: ---- ---  ---- ---- (இ இ வா வா வி: இந்த இடம் வாசகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது)

செ: பா.ம.க., தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை.
சே: ----------------(இ இ வா வா வி: இந்த இடமும் வாசகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது)  

வெள்ளி, 26 மார்ச், 2010

ஒரு பூச்சியின் மனசு......

பாஸ்கரன், பாஸ்கரன் தம்பி, மற்றும் மாதவன் எல்லோரும் கொஞ்சம் பொறுமையா இருங்கப்பூ!
ஒரு பூச்சியின் மனசு  இன்னொரு பூச்சிக்குத்தான் தெரியும்.
நான் அருகிலே சென்று, யார் என்று விசாரித்து வந்து சொல்லறேன்!

வி(சு)க்கல் புராணம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடித்தாலே விக்கல் எடுக்கும் விசுவுக்கு.  தண்ணீர் நாங்களும் பாட்டிலில் தான் வாங்குகிறோம் என்றாலும் நீங்கள் நினைப்பது போல அரை, கால் எல்லாம் இல்லை.  பெரீய்ய பெரீய்ய பாட்டில்களில் - அவற்றைத் தூக்கி அந்த பப்ளரில் கவிழ்ப்பது எங்க ரங்குவின் தினசரி உடற்பயிற்சிகளில் நம்பர் ஒன்று.

இன்று சட்டினி கொஞ்சம் காரம்.  விசு வழக்கம் போல விக்க, பக்கத்தில் இருந்த ராஜம் அத்தை, "மேலே பார் விசு" என்று சொன்னதும் விசு தன் இரண்டு கைகளாலும் தட்டைப் பொத்திக் கொண்டு மேலே பார்த்தான். [பின் என்ன, எத்தனை முறை அனுபவப் பட்டிருக்கிறான்!  மேலே பார்த்து விட்டு தட்டைப் பார்த்தால் கொஞ்சம் குறைந்திருக்கிற மாதிரிதான் எப்பொழுதுமே தோன்றும் - எதற்கு சந்தேகத்துக்கு இடம் என்று இப்பொழுதெல்லாம் அவன் தட்டைப் பொத்திக் கொண்டுதான் பார்வையை இங்கே அங்கே திருப்புகிறான்] மேலே பார்த்த விசு, தட்டையும் இழுத்துக் கொண்டு மெதுவாக பக்கவாட்டில் நகர ஆரம்பித்தான்.  விக்கல்? அது அவன் மேலே பார்த்த மாத்திரத்தில் எங்கோ போயிருந்தது.

ராஜம் அத்தைக்குப் பெருமை பிடிபடவில்லை. வீட்டில் இருக்கின்ற எல்லோருக்கும் கேட்கும் வகையில், "எங்க பாட்டி சொல்லிக் கொடுத்த கை (தலை?) வைத்தியம் இது. இப்போ பாருங்க - விசுவோட விக்கல் போயே போச்சு! "நல்லா கேட்டுக்கோடா, கொழந்தே.  இன்னமே விக்கல் வந்தா மேலே பார்த்தா போறும்"  என்றதும்,  விசு, "நீ மொதல்லே மேலே பாரு" என்றான்.  அத்தை மேலே பார்த்து விட்டுத் தானும் வேகமாக நகர ஆரம்பித்தாள்.  காரணத்தை நீங்களும் பாருங்களேன். 

அட! 

மேலே பாக்காதீங்க! 

இங்கே 

கீ 

ழே 



இப்போது சொல்லுங்கள்.  விசுவின் விக்கல் நின்றதற்குக் காரணம் மேலே பார்த்ததா, அல்லது மேலே கண்ட காட்(பூச்)சியின் தாக்கமா? 

வியாழன், 25 மார்ச், 2010

பூமிக்கு ஒரு மணி.


பூமி மணி என்றால் என்ன?

பூமி என்றால் பூமி தான்.  பூமிநாதனையோ, பூமிநேசனையோ, பூமிகாவையோ  குறிப்பதல்ல.

மணி எப்படிக் கட்டுவது என்று  மலையாதீர்.  மணி என்றால் அறுபது நிமிடம். நம் சந்ததியர் நன்றாக இருக்க ஒரு வருடத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரத்துக்கு முடிந்த வரை மின்சார  உபயோகத்தை நிறுத்தி வையுங்கள் என்பது தான் EARTH HOUR என்று பிரசித்தப் படுத்தப் பட்டிருக்கும் ஒரு செயல்பாடு.

என்ன செய்ய வேண்டும்?

மிக முக்கியமான [அதாவது, வெளிச்சம் இல்லாவிட்டால் விபத்துகள் நேரலாம் எனக் கூடிய ] இடங்கள் தவிர மீதி எல்லா மின் விளக்குகளையும் அனைத்து விட்டீர்களானால், நீங்கள் "பூமிக்கு ஒரு மணி" யில் அங்கத்தினர் ஆகி விட்டீர்கள்.  இந்த நேரத்தில் வேறு மின் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பதும் ஒரு ஈடுபாடுள்ள செயல்.

எப்பொழுது? 

வரும் சனிக்கிழமை (27-03-2010) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை வரை.

என்ன பயன்? 

இந்த நேர அவகாசத்தில் நம் மின் உபயோகம் எவ்வளவு குறைகிறது வெளிச்சத்துக்கு மட்டும் தேசீய மின் தொகுப்பிலிருந்து எவ்வளவு மின்சாரம் தேவைப் படுகிறது? இதற்கு பதிலாக வேறு வகையில் மின் சக்தி அளிக்கும் வழிமுறைகளை ஆராயவும் இது பயன் படலாம்.

உற்பத்தியான மின்சாரம் எப்படி இருந்தாலும் வீண்தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களுக்கு வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம்.  ஆனால், இப்பொழுது அப்படி அல்ல.  எரி பொருள் கட்டாயம் மிச்சம் ஆகும்.  கல்யாண மண்டபங்களில் வைக்கப் படும் அவசர கால ஜெனரேட்டர்களின் செயல் பாட்டுடன் ஒரு நல்ல பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பிடாதீர்கள். 

உங்கள் வீட்டில் எங்கெல்லாம் பழைய டங்க்ஸ்டன் உருண்டை விளக்குகளை CFL  அல்லது குழல் விளக்குகளாக மாற்ற முடியுமோ அங்கெல்லாம் மாற்றி விடுங்கள் 

பூமிக்கு ஒரு மணி என்ன, ஒரு ஆண்டில் சுமார் எட்டாயிரம் மணி நேரத்தில் எவ்வளவு நேரம் மின் சிக்கனம் கடைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு கடைப் பிடித்து ஆற்காட்டாரின் கவலை சுமையையும் கொஞ்சம் குறையுங்களேன். 
(Earth hour குறித்து உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.) 

நேற்று ராத்திரி? வள்.. வள்!




இரவு இரண்டு மணிக்கு மேல் நிறைய நாய்கள் வீட்டு வாசலில் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்து கொண்டேன். சற்று உற்றுக் கவனித்ததில், பஜனை கூடங்களில் கேட்கும் நாமாவளி போல முதலில் ஒரு ஒற்றைக் குரல், பின் ஒரு கோரஸ் என்று படு சுவாரசியமாக இருந்தாலும், தெருவில் நின்று கொண்டிருந்த அனைத்து நாய்களும் ஒரே திசையில் பார்த்துக் குறைப்பது கண்டு, காரணம் கண்டறியக் கீழே வந்தேன். எல்லா முகங்களும் வீட்டுக் காரின் எஞ்சின் பகுதியை நோக்கியே இருந்ததனால் டார்ச் ஸ்க்ரூ டிரைவர் இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு சற்று அருகே சென்றேன். 

ஒரு குட்டி நாயின் முனகல் குரல் கேட்க, உடனே கேட்டுக்கு வெளியிலிருந்து மீண்டும் ஒரு கோரஸ்.  சற்று நேரத்தில் கார் அருகேயிருந்து வந்து கொண்டிருந்த ஓசை அடங்கிப் போனதும் கூட்டம் கலைந்தது. ஆனால் என் குழப்பம் தீரவில்லை.  குட்டி நாய் காருக்கடியில் உயிருடன் இருக்கிறதா இல்லையா - நாம் இப்பொழுது என்ன செய்யலாம், ப்ளூ க்ராஸ் காரர்கள் எந்த நிலைமையிலும் இருக்கும் பிராணிகளுக்கு உதவுவார்களா என்றெல்லாம் விஷயம் தெரிந்தவர்களை, காலையில் கூப்பிட்டு யோசனை கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்ப சென்றுத் தூங்கி விட்டேன்.

காலையில் காப்பி சாப்பிட்ட பின் தான் இரவு நடந்த நாய்கள்  ரகளை நினைவுக்கு வர, ஓடிப் போய்ப் பார்த்தேன்.  ஒன்றும் காணப்படவில்லை. எதற்கும் நன்றாகப் பார்த்து விடலாம்; அத்தனை நாய்கள் ஒரே நேரத்தில் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று காரைத் திறந்தவன், சிரித்தேன் சிரித்தேன், சிரித்துக் கொண்டே மேலே வந்தேன்.  "ஏங்க?  காலையிலிருந்து பவர் இல்லை, மிக்சி போடமுடியவில்லை, என்று புலம்பிக் கொண்டே இருக்கிறேன், உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா ?" என்ற குரல் கேட்டது [வழக்கம் போல்]

"நேற்று நாய்களெல்லாம் அவ்வளவு சப்தம் போட்டது ஏன் என்று தெரிந்து விட்டது. அதனால் தான் அப்படி சிரித்தேன்.." என்றதும் "ஆமாம் ரொம்ப முக்கியம்..... சரி சரி சொல்லுங்கள் அதையும் தான் கேட்போமே - கரண்ட் வரும் வரை உங்கள் ஜோக்கை விட்டா எங்களுக்கு வேறென்ன வழி? " என்றாள். 

"பீச்சுக்குப் போய் விட்டு வரும் போது அர்ஜுன் அவனுடைய நாய் பொம்மையைக் காரிலேயே வைத்து விட்டு வந்து விட்டான் போலிருக்கு. சுவிட்சையும் ஆன் பண்ணியே வச்சுட்டு வந்துட்டான்.  பெரிய சப்தம் எது கேட்டாலும் குரல் கொடுக்கும் வகையில் ஒரு சர்க்யூட் அதில் இருக்கிறது.  பின் என்ன? எதோ ஒரு தெரு நாய் குரலுக்கு இது பதில் சொல்ல இதற்கு அது பதில் சொல்ல ஒரு போட்டி ஆரம்பித்து அதில் பல வல்லுனர்கள் கலந்து கொள்ள - மாநாடு சீரும் சிறப்புமாக நடை பெற்றிருக்கிறது" என்றேன்.

"பின் நீங்கள் இறங்கிப் போனதும், எப்படி எல்லாம் அமைதி ஆனது?".   'ஆஹா, சுற்றி வந்து கடைசியில் நம்முடைய உரத்த குரலுக்கு சுட்டி வந்து இறங்குகிறது பார்த்தாயா?'  என்றெண்ணி பதில் சொல்லாமல், கீழே இறங்கிப் போய், நாய் பொம்மையை எடுத்து வந்து அதன் முன் கையைத் தட்டியதும் விளங்கியது, அமைதி மர்மம்!  நாய் ஒரு முறை தீனமாகக் குரைத்து விட்டு அமைதியானது.  பின் என்ன செய்தாலும் நோ ரியாக்ஷன்.  பாட்டரியில் உயிர் இல்லை!    

புதன், 24 மார்ச், 2010

சாப்பாட்டு ராமாயணம்!*


*(ராம நவமி ஸ்பெஷல் அல்ல.)

** (டயட்டில் இருப்போரும், பத்தியம் இருப்போரும், உடல் இளைக்க உறுதிமொழி எடுத்து உறுதியாகப் பின்பற்றுபவர்களும், இதைப் படிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்)

*** சொல்லிட்டோம், அப்புறம் உங்க இஷ்டம்.

டயட்டீஷியன்கள் கோலோச்சும் காலம் இது.  எதை எவ்வளவுயார்எப்போதுஎப்படி சாப்பிடலாம் என்று எங்கு பார்த்தாலும் தோன்றி அறிவுரைகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவ்வப்போது நல்வாழ்வுக்கு நான்கு வழிகள் என்று உணவுபயிற்சிஉள்ளம்உறவாடல்பட்டியலிட்டு வாழ்வாங்கு வாழ நமக்கு நல்லுரை நல்குவோர் ஏராளம்.


எவ்வளவு சாப்பிட்டாலும் ஸிஸ்டம் தாங்கிக் கொள்வது ஒரு வரம் போலும்.  அதில் பாதி வரம் அடியேனும் வாங்கி வந்தவன் என நான் திடமாக நம்புவதால் இதை மிகுந்த அதாரிட்டியோடு சொல்கிறேன்.  எனக்குப் பிடித்த சமாச்சாரங்கள் என்று பட்டியலிட்டால், பஜ்ஜி, மசால்வடை, வாழைத்தண்டு சலாட், வெள்ளரிப் பிஞ்சு, ஓமப்பொடி என்று அனுமார் வால் போல நீண்டுகொண்டே போகும். இதில் எதுவானாலும் சராசரியைப் போல் நானூறு அல்லது ஐநூறு சதவிகிதம் உட்கொண்டு ஏப்பம் விடாதிருக்க என்னால் முடியும்.  அன்னத்தை மலை போல் குவித்து சாம்பாரை குளம்போல் கட்டி என்று சொல்லப் படுகிற கடோத்கஜ / குண்டோதர குணாதிசயங்கள் எனக்கு இருக்கிறதா என்பதை என் அருகிலிருந்து கண்காணிக்கும் தணிக்கைச் செல்வங்கள் தான் சொல்ல வேண்டும்.  ஏனென்றால் நான் சோறு குழம்பு அவ்வளவு சாப்பிடுவதில்லை என்று எனக்குள்ளே ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அதிகம் சாப்பிடுவது மனக் கஷ்டங்கள் இருக்கும்போது ஒரு வகையான வெளிப்பாடாக, ரிலாக்ஸேஷன் வழிமுறையாக சொல்லப் படுகிறது.  மனக் கஷ்டம் இருக்கும் போது சாப்பிடலாம். பணக் கஷ்டம் இருக்கும்போது வண்டி வண்டியாக ‘ கொட்டிக் கொண்டால் ‘ கட்டுபடியாகாது!  குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்று சொல்வது, குன்று போல இருக்கும் உடம்பு இளைக்கும் என்று சொல்வதாக எடுத்துக் கொண்டு வளைந்து கட்டிக் கொண்டு வயிறை நிரப்புகிறோம் நம்மில் பலர்.  இப்படி கின்னஸ் ரெகார்ட் மாதிரி தின்னஸ் ரெகார்டு ஏற்படுத்தும் சாதனையாளர்கள் பெரும்பாலும் 50, 55 வயதுக்கு மேல்தான் இருப்பர் என்பது என் ஆராய்ச்சி முடிவு!  இடையில் யாரோ ஒருவர் பெருத்த இடை கொண்ட தீனிப் பண்டாரமாக இளவயதிலேயே இருக்கலாம்.  அதெல்லாம் விதி விலக்குகள்.  அவர்களை விட்டு விலக்குங்கள்.

சின்னக் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்றால் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று யாராவது ஒருவர் தட்டில் ஆகாரத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் பின்னாலேயே ஓடோடி கெஞ்சிக் கூத்தாடி, ஆட்டம் காட்டி, ஊட்டி விட வேண்டியதாக இருக்கிறது.  ஆகாரத்தை கலர் கலராக தயார் செய்யுங்கள் அப்போது குழந்தைகள் ஆசை ஆசையாகச் சாப்பிடுவார்கள் என்று ஒரு நிபுணர் சொன்னதை பரிட்சை செய்து பார்த்த போது பலித்ததாகத் தெரியவில்லை.  இள வயதிலிருந்தே சப்பென்று  உப்பு காரம் புளிப்பு அதிகம் இல்லாமல் கொடுத்துப் பழக்குங்கள் என்று பல நிபுணர்கள் சொல்கிறார்கள். சினிமா போஸ்டர் ஒட்டும் பசையில் அளவாக உப்பு போட்டு, ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தக்காளி, பச்சை மிளகாயால் அலஙகரித்துக் கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான் போலும்.  இந்த அலங்கரித்தல் ரொம்ப முக்கியம் என்று மெனு ராஜாக்களும் இளவரசர்களும் சொல்கிறார்கள்.  எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு அதன் தலையில் பனை ஓலையை அழகாக நறுக்கி வைத்து கொடுத்தால் அதற்கு மதிப்பு வேறேதான்!

உணவு நிபுணர்கள் ஒருபக்கம் எண்ணையைக் குறை.  ஆலிவ் ஆயில் (இது ஏதோ தையல் மெஷினுக்குப் போடதான் லாயக்கு என்று எனக்குத் தோன்றும்) பயன் படுத்து.  ரிஃபைண்டு ஆயில் வேண்டாம். செக்கு எண்ணை நல்லது. கிழங்கைக் குறை ( நல்ல வேளை, கிழங்களைக் குறை என்று சொல்லவில்லை) என்று சொன்னால், இன்னொரு பக்கம் வேறு ஒரு விற்பன்னர் ‘ பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.  எண்ணையைக் கொதிக்க விட்டு மேலே ஊற்றுங்கள் ( பண்டத்தின் மேலேதான் சார், சாப்பிடுபவர் மேலே அல்ல), வெண்ணையையும் சர்க்கரையை யும் நன்கு குழைத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள் (ஒரு சேரக் குழைத்த அப்புறம் தனியே வைப்பதெப்படி?) என்று ருசிகரமாக சொல்லிக் கொண்டே போகிறார். நிபுணர் சொன்னபடி செய்து விருந்தாளிக்குக் கொடுங்கள் (வருவிருந்து போக்கி செல்விருந்தை அனுப்ப இதைவிட நல்ல வழி இருக்குமா என்ன) மசாலா ராணி சொன்னபடிக்குச் செய்து சூடாக சாப்பிடுங்கள் என்பது தான் உபயோகமான டிப் ஆக இருக்கும்.

ஸ்டார்ட்டர் ஆக சூப், ஆக்ஸிலரேட்டராக புலவ், ரோட்டி (ரொட்டி என்று சொன்னால் உங்களுக்கு சொஃபிஸ்டிகேஷன் பத்தாது என்று பொருள், ஸ்டாப்பராக ஐஸ் க்ரீம்,  பின்பு பாலை வனமாக, அதுதான், டெஸர்ட்டாக, பழங்கள், குலாப் ஜாமூன் என்று வக்கணையாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட வேண்டுமானால் ஐந்து நட்சத்திர தரிசனம் செய்தாக வேண்டும்(த்ரிஷா, அசின், சூர்யா, சிம்பு போல மினுக்கும் நட்சத்திரங்கள் அல்ல - ஜிம், கார் பார்க், ஸ்விம்மிங் பூல், பிலியர்ட் போலொ, பிங் பாங் எல்லா வசதிகளும் கொண்ட நட்சத்திர ஓட்டல்)  அவ்வப்போது எழுந்து போய் அளவாக பிளேட்டில் ரொப்பிக் கொண்டு ஸ்டைலாக சாப்பிடுவது ஒரு கலை.  என்ன தான் முக்கி முக்கி சாப்பிட்டாலும், ஐநூறு, எழுநூற்றைம்பது என்று விலை வைத்து விற்கும் சாப்பாட்டை காசுக்கு நியாயம் செய்யும் வகையில் சாப்பிட வேண்டும் என்றால் அங்கேதான் நிற்கிறான் இந்த சாப்பாட்டு ராமன்.  ஒரே ஒரு கஷ்டம்.  மட்டன் போல சமைக்கப் பட்ட டர்னிப்,  காலி பிளவர் போல சமைக்கப் பட்ட கோழிக் கறி என்று ஆள் மாறாட்டம் பெரிய ஆபத்து.  சாக உணவும் சாக அடித்துச் சமைத்த உணவும் சக ஜீவனம் நடத்துவதால் சகோதர சகோதரியர்க்கு சங்கடம், சரமாரியாக சஞ்சலம் தரும்.

நெறி பிடித்தொழுகி  நித்தம் நாவினை அடக்கி
கறி குறைத்து கால் நடந்து  காலம் கழித்தென்ன
நரி யனைய  முகர்ந்து நாவினில் நீரூற
வெறி பிடித்து வெங்காய பஜ்ஜி மேய்ந்திடில். 

ஸ்ரீராம் ஜெயராம் ...

இன்று ஸ்ரீ ராம நவமி.  நம் கஷ்டங்கள் குறைய இரு முறை 'ராம, ராம' என்று சொன்னாலே போதும் என்று ஹனுமான் சொன்னதாகச் சொல்வார்கள்.  இங்கிருக்கும் ஹனுமார் சிலை எங்கு அமைந்துள்ளது என்பது நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும் - அதனால் நாங்கள் சொல்லவில்லை  தெரிந்தவர்கள் பின்னூட்டமாய் சொல்லுங்களேன்.

ஸ்ரீ ராம நவமி அன்று எங்கள் ஊர் பெருமாள் கோவிலில் பானகம், நீர் மோர், வடை பருப்பு எல்லாம் தருவார்கள்.  இதற்கு ஒரு பின்னணி இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.  கோடையில் உண்டாகும் சில நோய்களைக் கட்டுப் படுத்த இம்மாதிரி உணவுகள் பயன்படும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ராம நவமியுடன் நிறுத்தி விடாமல் குழந்தைகளும் பெரியவர்களும், தொடர்ந்து  பானகம் மற்றும் நீர் மோர் அருந்துவது  கோடையின் கொடுமையிலிருந்து தப்ப உதவும்.

(தலைப்பையும் படத்தையும் பார்த்து, ஆசிரியர் குழுவில் ஏதோ உள்குத்து இருக்கு என்று நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம்) 

திங்கள், 22 மார்ச், 2010

ஜே கே 03

கேட்பது குறித்து ஜேகே என்ன சொல்கிறார் என்பது சுவாரசியமானது.
உங்களிடம் ஒருவர் எதையோ சொல்கிறார்.  அதை நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள்?  உங்கள் கவனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தவாறிருக்க சொற்களைக் காதில் வாங்கிக் கொள்கிறீர்களா?  அல்லது, 'நான் இதை ஒப்புக் கொள்கிறேன்', 'நான் இதை ஏற்க முடியாது', 'ஆமாம், புனிதப் புத்தகங்களில் கூட இதேதான் சொல்லப் பட்டிருக்கிறது', "இன்னொருவர் கூட இதையேதான் சொல்லியிருக்கிறார்' என்பது மாதிரியான எண்ணங்கள் அலைமோதுகின்றனவா? இப்படி மனம் எதையோ ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது உண்மையான கேட்டல் அங்கு நிகழ்வதில்லை.

கேட்பது என்றால் காதுகளைப் பயன்படுத்தி சொற்களை உள்வாங்கிக் கொள்வது மட்டும் அன்று.  உங்கள் முழு ஆளுமையுடனும் நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் எல்லாப் புலன்களும் மனமும் அதில் பங்கு பெற வேண்டும்.  அப்போது தெளிவு பிறக்கும்.  பேசுபவர், கேட்பவர் இடையே ஒரு நிஜமான பங்குபெறுதல் நடக்க வேண்டும்.  அவ்ரும் நீங்களுமாகச் சேர்ந்து பேசப் படும் விஷயத்துக்குள்ளாகச் சென்று உண்மைகளைக் காண வேண்டும்.  இம்மாதிரியான செயல் உங்கள் அபிப்பிராயங்கள் உங்கள் கேட்டலைத் தடை செய்யும் போது நிகழ்வதற்கில்லை. சொல்பவர், கேட்பவர் என்ற பாகுபாடு அற்றுப் போய் எல்லாம் ஒன்றிய ஒரு முழுமை அந்த சம்பாஷணையில் இருப்பின் கேட்டல் சாத்தியமாகும்.

சம்பாஷணைகள் நடைபெறும் போது ஜேகே வழக்கமாகக் கூறுவது: “பேசுபவருக்குத் தெரியும் - அவர் உங்களுக்குச் சொல்கிறார் என்ற பாணியில் நாம் இங்கே இல்லை.  ஒரு நண்பர் உங்களுடன், உங்கள் கைகளைப் பற்றிக் கொண்டு உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறார். இருவரும் கை கோத்துக் கொண்டு ஒரு புதுப் பிரதேசத்தில் நடக்கிறோம். அங்கே முழு விழிப்புணர்வுடன் பார்த்து அறிகிறோம். இது போன்ற சூழ் நிலைதான் உண்மையான சம்பாஷணைகளில் காணப் பட வேண்டும். ஆமோதித்துக் கொண்டோ, ஆட்சேபித்துக் கொண்டோ மறுத்துக் கொண்டோ இருக்கும் நபர் உண்மையில் எதையும் கேட்பதில்லை.”

 (மேலே கொடுக்கப் பட்டிருப்பது நேரடியான மொழிபெயர்ப்பு அல்ல)

இதைப் படித்த பின் நம் கேட்டல் எவ்வாறிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.  தான் கூறுவதை சரியாகக் கேட்கும் ஒரு பத்து நபர்கள் கிடைப்பார்களேயானால், சமுதாயம் பலமான மாற்றம் அடையும் என்று அவர் ஒரு சந்தர்ப்பத்தில் 1928.29 வாக்கில் சொல்லி இருப்பது நினைவு கூரத்தக்கது.

ஞாயிறு, 21 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம்..

தண்ணீர் தினம்.





தண்ணீர் என்றதும், தமிழ் நாடு, குறிப்பாக சென்னை மக்களிடையே புகழ் பெற்ற 'தண்ணி' அல்ல நம் நினைவுக்கு வர வேண்டியது.அது வேறு. அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்றும் அல்ல..அதற்கு என்று தனி நாளும் இவர்கள் வைத்துக் கொள்வதில்லை!

பெரிய நீர் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி - இப்போதெல்லாம் எங்கே அந்த மாதிரி பார்க்க முடிகிறது? காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ? அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நம்மூர் அரசியல்வாதிகள் அதையும் கூறு போட்டு விற்க முற்சிப்பது தனிக் கதை.

மக்களோ, மாக்களோ... தண்ணீர், அதிலும் சுத்தமான குடி நீர் இன்றி வாழ்வது கடினம்.

உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு.





உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு - ஐ எஸ் ஓ தர சான்றிதழ்கள் கூட இருக்கின்றன - தொழிற்சாலைகளுக்கு.








சுத்த நீரின் விகிதம் கிட்டத் தட்ட பாதி ஒரே ஏரியில்! இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம்! ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவில் இருக்கும் பைக்கால் எரியைத்தான் பார்க்கிறீர்கள். இன்னொரு படம் கனடாவில் இருக்கும் ஒரு ஏரி. புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகள், அமேசான், மிஸ்ஸெளரி, மிச்சி சிப்பி, கங்கை, பிரம்ம புத்ரா என்று நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன பெயர்களை எல்லாம் விட்டு விட்டோம் என்றால், பூமியின் தெற்கு பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது என்பது புரியும்.

நீரின்றி அமையாது உலகினில் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு ... என்றார் வள்ளுவப் பெருமான். 2000 வருடங்களுக்கு முன்பே, அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் அவ்வளவாக இல்லாத போது மக்களின் வாழ்க்கை ஆற்றங்கரைகளிலேயே கழிந்தது. மக்கள் தொகை அதிகம் ஆகி மற்ற இடங்களிலும் வேளாண்மை செழிக்க நீர் நிலைகள் கட்டப் பட்டு, நீரைத் தேக்கி தேவைப் படும்போது உபயோகிக்கத் தொடங்கினார்கள்..

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன், உலோக உற்பத்தி, இரசாயன உற்பத்தி இவற்றுக்கு நீரின் தேவை அதிகம் இருப்பதன் கூட, நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.

இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும்.

நமக்குத் தேவை : தண்ணீர் சிக்கனம், அசுத்தப் படுத்தாதிருத்தல், புதிய மற்றும் எல்லோராலும் பயன் படுத்தக் கூடிய சுத்திகரிப்பு & பாதுகாப்பு முறைகள்.







நம்மைப் போன்று வீடுகளில் / அலுவலகங்களில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க சொட்டிக் கொண்டேயிருக்கும் குழாயை சரிப் படுத்துதல் முதல், குழாயை தொடர்ச்சியாக திறந்து வைத்துக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.





வாஷிங் மெஷினில் குறைந்த அளவு (minimum level) தண்ணீர் setting. குளிப்பதற்கு அதிக பட்சம் பதினைந்து லிட்டர் தண்ணீர் போதும்.


சொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.
மழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான முறையை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முறை அது கட்டாயச் சட்டமாக்கப் பட்ட பொது ஏதோ அரசாங்கத்தை ஏமாற்றுவது போல நினைத்து மக்கள் அதை செய்யாமலேயும், அரை குறையாகச் செய்தும் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது.சரியாகப் பின்பற்றினால் பெரிய அளவு நன்மை பயக்கும் திட்டம் அது.


தண்ணீர்த் தேவை குறைந்த சமையல் முறைகள் - உதாரணமாக மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்கர் உபயோகிக்கும் பொழுது
பாத்திரங்களில் கரி படிவதில்லை - அதனால் அதிகம் உபயோகப் படுத்தப் படும் TSP என்னும் ட்ரை சோடியம் பாஸ்பேட் உபயோகம் குறைகிறது.

அல்லது பாட்டி மாதிரி கரிப் பாத்திரம் என்று தனியே ஒன்றிருந்தால் அதன் கருப்பு நிறம் காரணமாக சூடு சீக்கிரம் பரவும்.

நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு எல்லைக்குள் கடைபிடிக்கக் கூடிய முறைகளில் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அது பற்றி 'எங்களுக்கு' எழுதுங்களேன். தண்ணீர் தினம் என்ன, மாதம், வருடம் எல்லாமே கொண்டாடுவோமே!

(தண்ணீர் மாசுபடுதலை தடுக்கவும், சிக்கனமாக தண்ணீரைப் பயன் படுத்தவும் இன்னும் நிறைய ஐடியா கொடுப்பவர்கள், இங்கே பின்னூட்டத்தில் அவைகளைப் பதியலாம். நல்ல ஐடியாக்களுக்கு, எல்லோருக்கும் பயன்படக் கூடிய ஐடியா கொடுப்பவர்களுக்கு வழக்கம்போல பாயிண்டுகள் உண்டு)